I

     பார்ப்பனரல்லாதோரிடையே ஒரு புரட்சி ஏற்பட்டது என்பது தெள்ளத்தெளிவு. மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களாக இருந்து அதனைச் சாப்பிடாதவர்களாக மாறியது உண்மையிலேயே ஒரு புரட்சி என்பதில் ஐயமில்லை. ஆனால் பார்ப்பனரல்லாதோர் ஒரு புரட்சியைத்தான் செய்தார்கள்: பார்ப்பனர்களோ இரண்டு புரட்சியைச் செய்தார்கள். அவர்கள் பசு இறைச்சி சாப்பிடுவதைக் கைவிட்டது ஒரு புரட்சி; அதே சமயம், காய்கறி உணவு உண்பவர்களாக மாறியது மற்றொரு புரட்சி.

     ambedkar lawஇது ஒரு புரட்சியே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஏனென்றால் முந்தைய இயல்களில் நாம் சுட்டிக்காட்டியிருப்பது போல், பார்ப்பனர்கள் மிகப்பெருமளவில் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களாக இருந்துவந்த ஒரு காலம் இருந்தது. அச்சமயம் பார்ப்பனரல்லாதோரும் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களாகத்தான் இருந்து வந்தார்கள். ஆனால் நாள்தோறும் அதனைச் சாப்பிடக்கூடிய நிலையில் அவர்கள் இல்லை. பசு விலை அதிகமுள்ள பிராணி; உணவுக்காக அதனை அடிக்கடி கொல்லும் நிலையில் பார்ப்பனரல்லாதோரும் இல்லை; இது அவர்களது சக்திக்குப் பெரிதும் அப்பாற்பட்டதாக இருந்தது. சமயக் கடமையின் பொருட்டோ அல்லது ஏதேனும் ஒரு தெய்வத்தைச் சாந்தப்படுத்தும் பொருட்டோதான் விசேட சமயங்களில் அவர்கள் பசுக்களைப் பலியிட முடிந்தது. ஆனால் பார்ப்பனர்கள் விஷயம் அப்படியல்ல. ஆனால் அவன் புரோகிதனாக இருந்தான். சமயச் சடங்குகள் அளவுக்கு மீறி நடைபெற்று வந்த காலம் அது. இதனால் பசு பலியிடப்படாத நாளோ அது சம்பந்தப்பட்ட சடங்குகளைச் செய்வதற்கு யாரேனும் பார்ப்பனரல்லாதவனால் ஒரு பார்ப்பனன் அழைக்கபடாத நாளோ இல்லை எனலாம். இதனால் பார்ப்பனனுக்கு ஒவ்வொரு நாளும் மாட்டிறைச்சி விருந்து நாள்தான். இதன் காரணமாக அந்நாட்களில் பார்ப்பனர்கள் மிக அதிகமாக மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களாக இருந்துவந்தனர். பார்ப்பனர்கள் நடத்திய யாகங்கள் யக்ஞங்கள் என்பவை மதத்தின் பெயரால் வாயில்லாப் பிராணிகளைப் படுகொலை செய்யும் கொடிய பழிபாவச் செயல்களாகவே இருந்தன; மாட்டிறைச்சி மீது தங்களுக்குள்ள தணியாத ஆசையை மூடிமறைக்க அவர்கள் செய்த சமயச் சடங்குகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு யாகத்தில் மிருகங்களை ஈவு இரக்கமின்றிக் கொல்லும் படாடோபமான சமயச்சடங்குகளைப் பற்றி ஆத்ரேய பார்ப்பனத்திலிருந்து ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.

     விலங்குகளைப் பலியிடுவதற்கு முன்னர் சில சமயச்சடங்குகள் நடத்தப்படுகின்றன; நீண்டநேரம் ஏதேதோ மந்திரங்கள் ஓதப்படுகின்றன. இவற்றை எல்லாம் இங்கு விரிவாக விவரிப்பதற்கு இடமில்லை. உயிர்ப்பலி கொடுப்பதன் பிரதான அம்சங்களை இங்கு கூறினால் போதுமானது. யூபம் எனும் வேள்வித் தம்பத்தை நடுவதுடன் சடங்கு ஆரம்பமாகிறது. எந்த ஒரு விலங்கையும் பலியிடுவதற்கு முன்னர் அது இந்த வேள்வித் தூணில் கட்டப்படுகிறது. ஆத்ரேய பார்ப்பனம் இந்தக் கம்பத்தின் அவசியத்தைப் பற்றி விவரித்துவிட்டு, அதன் தாத்பரியம் என்ன என்பதை பின்வருமாறு எடுத்துரைக்கிறது:

“இந்த யூபம் ஓர் ஆயுதம். அதன் முனை எட்டுக் கூரிய விளிம்புகளைக் கொண்டதாக இருக்கவேண்டும். ஏனென்றால் ஓர் ஆயுதம் (அல்லது இரும்பு குறுந்தடி) எட்டு கூரிய விளிம்புகளைக் கொண்டிருக்கும். இதைக் கொண்டு தாக்கினால் பகைவன் இறந்துவிடுவான். வேள்வி செய்பவன் யாரை ஒழித்துக் கட்டவேண்டுமோ அவனைத் தீர்த்துகட்ட இந்த ஆயுதம் பயன்படுகிறது. ஒரு பகைவனை அழிப்பதற்குத் தயாராக இந்த யூபம் ஓர் ஆயுதமாக நடப்பட்டிருக்கிறது. எனவே, பலியிடுபவனது பகைவன் எவனாவது அந்தச் சடங்குகளுக்கு வந்திருந்தால் இத்தகைய யூபத்தை பார்க்கும்போதும் அவனுக்குத் தீங்குதான் நேரிடும்.”

     வேள்வி செய்பவன் அந்த வேள்வியின் மூலம் எத்தகைய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள விரும்புகிறானோ, அவற்றைப் பொறுத்துயூபத்தைத் தயாரிப்பதற்கான மரமும் தேர்ந்தெடுக்கப்படும். இது குறித்து ஆத்ரேய பார்ப்பனம் கூறுவதாவது:

“சுவர்க்கலோகம் செல்ல விரும்புபவன் தனது யூபத்தை கருங்காலி மரத்தைக் கொண்டு தயாரிக்கவேண்டும். ஏனென்றால் கருங்காலி மரத்தாலான யூபத்தைக் கொண்டுதான் தேவர்கள் விண்ணுலகத்தை வெற்றிகொண்டனர். இதே போன்று, வேள்வி செய்வோரும் கருங்காலி மரத்தைக் கொண்டு செய்யப்பட்ட யூபத்தால் உம்பருலகத்தை வெற்றி கொள்கின்றனர்.

“அறுசுவை உண்டிகளை உண்டு நன்கு கொழுக்க விரும்புபவன் தனது யூபத்தை வில்வ மரத்தால் செய்துகொள்ள வேண்டும். ஏனென்றால் வில்வமரம் ஆண்டுதோறும் பூத்துக் காய்த்து பழங்களைத் தருகிறது; இது செழுமையின் சின்னம்; ஆணிவேர் முதல் உச்சிக் கிளைகள் வரை வருடந்தோறும் இம்மரம் வளர்ந்துகொண்டே செல்கிறது; எனவே இது வளமையின் அறிகுறியாகும். இதை அறிந்தவன் தனது யூபத்தை வில்வ மரத்தால் செய்து, தனது குழந்தைகளையும் கால்நடைகளையும் கொழுக்க வைக்கிறான்.

“வில்வ மரத்தால் செய்யப்பட்ட யூபத்தை பொறுத்தவரையில் மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். வில்வ மரத்தை ‘ஒளிமிக்க’ மரம் என்று கூறுகிறார்கள். இத்தகைய அறிவொளி படைத்தவன் தன்னுடைய மக்களிடையே ‘ஒளிமிக்கவனாக’ மிகவும் சிறப்பு வாய்ந்தவனாகத் திகழ்கிறான்.

“அழகையும் தெய்வீக ஞானத்தையும் பெறவிரும்புபவன் தனது யூபத்தை பலா மரத்தைக் கொண்டு செய்துகொள்ள வேண்டும். பலாமரம் வனப்பும் புனிதமும் மிக்க மரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தகைய ஞானம் படைத்தவன் தனது யூபத்தை பலா மரத்தால் உருவாக்கிக்கொண்டு, எழில்மிக்கவனாகிறான், தெய்வீக ஞானத்தை எய்துகிறான்.

“பலா மரத்தால் செய்யப்பட்ட யூபத்தைப்பற்றிக் கூறும்போது, மற்றொரு விஷயத்தையும் குறிப்பிடவேண்டும். அதாவது பலா மரத்தை அனைத்து மரங்களின் கருப்பை எனலாம். எனவேதான் எந்த ஒரு மரத்தின் இலையையும் பலா அம்சம் எனக் குறிப்பிடுகின்றனர். இந்த உண்மையை அறிந்தவன் எல்லா மரங்களிலிருந்தும் என்ன விரும்புகிறானோ அவற்றைப் பெறுகிறான்.” (ஆத்ரேய பார்ப்பனம் II பக். 72-74)

     இதனைத் தொடர்ந்து வேள்வித் தம்பத்துக்கு அபிஷேகம் செய்யும் பணி நடைபெறுகிறது. (ஆத்ரேய பார்ப்பனம் (மார்ட்டின் ஹாக்) II பக். 84-86)

“அத்துவரியு (யாகப்புரோகிதன்) யாகம் செய்பவனிடம் பின்வருமாறு கூறுகிறான்: “இப்போது வேள்வித்தூணுக்கு (யூபம்) நாம் அபிஷேகம் செய்கிறோம்; இதற்கான மந்திரத்தை ஜெபிப்பாயாக.” இதன்பேரில், யாகம் செய்பவன் பின்வருமாறு மந்திரம் ஓதுகிறார். “அம்ஜந்தி த்வம் அத்துவரே” (3.8.1) அதாவது “ஓ விருட்சமே! யாகப்புரோகிதர்கள் தெய்வீகத்தேன் (வெண்ணெய்) கொண்டு உனக்கு அபிஷேகம் செய்கிறார்கள். நீ இங்கே நின்று கொண்டிருந்தாலும் சரி, உன் அன்னையின் (பூமியின்) மடியில் படுத்திருந்தாலும் சரி எங்களுக்கு செல்வவளத்தை வழங்குவாயாக.” “தெய்வீகத்தேன்” என்பது இங்கு உருகிய வெண்ணெய்யையே குறிக்கிறது. இதைக் கொண்டுதான் யூபத்துக்கு புரோகிதர்கள் அபிஷேகம் செய்கிறார்கள். (இந்த சுலோகத்தின் பாதியாக) “எங்களுக்கு வழங்குவாயாக” என்பது “நீ நின்றிருந்தாலும் படுத்திருந்தாலும் எங்களுக்கு இன்னலம் அருள்வாயாக” என்பதைக் குறிக்கிறது.

(யாகம் செய்பவர் மீண்டும் மந்திரம் ஜெபிக்கிறார்:)

“ஜதோ ஜயதே கதினத்வே”. (3.8.5) அதாவது “பிறந்த பிறகு, தனது வாழ்கையின் முக்கியமான கட்டத்தில், நிலையற்ற மனிதர்களின் வேள்விக்கு சேவை செய்யும் பொருட்டு அவன் வளர்ந்துவருகிறான்; விவேகமிக்கவர்கள் அவனை (யூபம்) திறமையுடன் அலங்கரிப்பதில் முனைந்து ஈடுபட்டிருக்கின்றனர். ஆண்டவனின் ஆற்றல்மிக்க தூதுவனான அவன் உரத்துக் குரல் எழுப்புகிறான் (தெய்வங்களுக்கு கேட்கும் பொருட்டு.)” அவன் (யூபம்) ஜடா அதாவது பிறந்தவன் என்று அழைக்கப்படுகிறான்; ஏனென்றால் (இந்த சுலோகத்தின் கால் பகுதியைப் பாராயணம் செய்ததால்) பிறந்தவன் அவன். வர்த்தமானன் என்னும் சொல்லுக்கு வளர்ந்துவருபவன் என்று பொருள்; இவ்வாறு அவனை (யூபத்தை) வளரச் செய்கிறார்கள். புனந்தி என்றால் தூய்மைப்படுத்துதல், அலங்கரித்தல் என்று பொருள். இந்தவகையில் அவனைச் சுத்தப்படுத்துகிறார்கள். “அவன் ஆற்றல்மிக்க தூதுவன் என்ற சொற்கள்” தான் இருப்பதை அவன் (யூபம்) தெய்வங்களுக்குப் பறைசாற்றுகிறான் என்பதைக் குறிக்கின்றன.

     யாகம் செய்பவன் யாகத் தூணைப் புனிதப்படுத்தும் பணியை “யுவ சுவாச பரிவித” (3.8.4) என்னும் சுலோகத்தைக் கூறி முடிக்கிறான். இதன் பொருள்: “இழைக்கச்சை அணிந்த இளைஞன் வந்துவிட்டான்; என்றும் வளரும் (எல்லா மரங்களை விடவும்) அவன் நேர்த்தியாக இருக்கிறான். விவேகமிக்க புரோகிதர்கள் அவனை ஏற்றிப்போற்றிப் புகழ்கின்றனர்.” இழைக்கச்சை அணிந்த இளைஞன் உயிர்மூச்சு (ஆன்மா), உடலின் பல்வேறு உறுப்புகளால் அது மூடப்பட்டிருக்கிறது. “அவன் நேர்த்தியாக இருக்கிறான் என்னும் வாசகம் அவன் (யூபம்) இந்த மரத்தின் மூலம் மேன்மேலும் மேன்மைமிக்கவனாக, வனப்புமிக்கவனாக, ஒப்புவமையற்றவனாக ஆகிவிடுகிறான் என்ற பொருளையே இங்கு குறிக்கிறது.”

     அடுத்தபடியாக, பலியிடப்பட இருக்கும் விலங்கைச் சுற்றிலும் நெருப்பு எடுத்துச்செல்லப்படும் சடங்கு நடைபெறுகிறது. இது சம்பந்தமாக ஆத்ரேய பார்ப்பனம் பின்வருமாறு கூறுகிறது: (ஆத்ரேய பார்ப்பனம் (மார்ட்டின் ஹாக்) II பக். 84-86)

“விலங்கைச் சுற்றிலும் நெருப்பு எடுத்துச் செல்லப்படும் போது, ‘உங்கள் மந்திரங்களை ஓதுங்கள்” என்று யாகம் நடத்துபவனிடம் புரோகிதன் கூறுகிறான். இதன்பேரில், யாகம் செய்பவன் அக்னியை முன்னிலைப்படுத்தி காயத்ரி சீர்தளையில் பின்வரும் மூன்று சுலோகங்களைக் கூறுகிறான். 1.அக்னி ஹோதா ந அத்வரே (4.15. 1-3) அதாவது வேள்விகளின் தெய்வமான அக்னி ஒரு புரவியைப்போன்று சுற்றிலும் கொண்டு செல்லப்படுகிறான். 2. ஒரு தேர்ப்பாகன் போல் அக்னி பலிப்பிராணியை மும்முறை கடந்து செல்கிறான். 3. உணவு வகைகளின் தலைவனும், சகலவற்றையும் பார்ப்பவனுமான அக்னி படையல் பொருள்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, யாகம் செய்பவனுக்கு செல்வ வளங்களை வாரி வழங்குகிறான்.

“பலிப் பிராணியைச் சுற்றிலும் நெருப்பு எடுத்துச் செல்லப்படும்போது, யாகம் செய்பவனுக்கு அக்னி அவனது சொந்த தேவதையின் மூலம் வளமிக்க வாழ்வு அளிக்கிறான். ‘புரவியைப் போன்று அவன் கொண்டு செல்லப்படுகிறான்’ என்பதற்கு அவர்கள் அவனை ஒரு குதிரையாக நினைத்து சுற்றிலும் கொண்டு செல்கின்றனர் என்று பொருள். ஒரு தேர்ப்பாகன் போல் அக்னி பலிப் பிராணியை மும்முறை கடந்து செல்லுகிறான் என்பதற்கு அவன் பலிப்பிராணியைச் சுற்றிலும் விரைந்து செல்கிறான் என்று அர்த்தம். அவன் வாஜபதி என அழைக்கப்படுகிறான்; ஏனென்றால் பல்வேறு உணவு வகைகளுக்கு அவன் அதிபதியாக இருக்கிறான்.

“அத்துவர்யு கூறுகிறான்: யாகம் செய்பவரே! தெய்வங்களுக்கு மேலும் படையல்களை நிவேதனம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்.

“யாகம் நடத்துபவன் கூறுகிறான்: (பலிப்பிராணியை வெட்டுபவர்களிடம்) தேவதைகளே, நீவிர் உங்கள் பணியைத் தொடங்கலாம், மானுடர்களே நீங்கள் உங்கள் பணியை ஆரம்பிக்கலாம் அதாவது பலிப்பிராணியை வெட்டும்படி தேவைகளையும் மனிதர்களையும் அவன் கேட்டுக்கொள்கிறான்.

அப்படியானால் விலங்குகளை வெட்டுவதற்கான கருவிகளை இங்கு கொண்டுவாருங்கள்.

விலங்குதான் படையல், யாருக்காக அது பலியிடப்படுகிறதோ அவன்தான் அந்தப்படையலுக்கு உரியவன். இவ்வாறு யாகம் செய்பவன் தனது சொந்தப்படையல் மூலம் பலிப்பொருளை ஏற்பவனை பலனடையச் செய்கிறான். எனவே, இந்த அடிப்படையில் பார்க்கும்போது, விலங்கு எந்த தேவதைக்குப் பலியாக தரப்படுகிறதோ அந்த தேவதைதான் அப்படையலுக்கு உரிய தேவதை. விலங்கு ஒரே ஒரு தேவதைக்கு மட்டும் பலியிடப்படுமாயின் புரோகிதன் மேதபதயே என கூறவேண்டும். அதாவது “படையலுக்கு அதிபதி” (ஒருமையில்) என்று இதற்குப் பொருள்; இரண்டு தேவதைகள் இருக்குமாயின் ‘படையலின் இரு அதிபதிகள்’ என்று இருமையில் கூறவேண்டும்; பல தேவதைகள் இருக்குமாயின் ‘படையலின் அதிபதிகள்’ என்று பன்மையில் கூறவேண்டும். இதுதான் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறை.

நீவிர் அவனுக்கு நெருப்பைக் கொண்டு வாருங்கள்! பலியிடப்படுவதற்கு விலங்கு கொண்டு செல்லப்படும்போது, தான் சாகப்போவதை அது தெரிந்துகொண்டது. அது தெய்வங்களிடம் செல்லுவதற்கு விரும்பாதபோது தெய்வங்கள் அதனிடம் பின்வருமாறு கூறின: “வா, உன்னை சுவர்க்கலோகத்துக்கு அழைத்துச் செல்கிறோம்.’ (ஆத்ரேய பார்ப்பனம் (மார்ட்டின் ஹாக்) II பக். 86) விலங்கு இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டுப் பின்கண்டபடி கூறிற்று: “உங்களில் ஒருவர் எனக்கு முன்னால் செல்லவேண்டும்.” தெய்வங்களும் இதற்கு இணங்கின. அக்னி முன்னால் சென்றது; பலிப் பிராணி அதனைப் பின்தொடர்ந்து சென்றது. இவ்வாறு விலங்குக்கு முன்னால் நெருப்பு (அக்னி) எடுத்துச் செல்லப்பட்டது.

புனிதப் புல்லை முன்னால் விரித்துப்போடுங்கள்! அந்த விலங்கு புல்பூண்டைக் கொண்டுதான் உயிர் வாழ்கிறது. யாகம் நடத்துபவன் அந்த விலங்குக்கு வயிறார தீனி போடுகிறான்.

     விலங்கைச் சுற்றிலும் நெருப்பு கொண்டு செல்லும் சடங்கு முடிந்ததும் பலியிடுவதற்காக விலங்கை அர்ச்சகர்களிடம் ஒப்படைக்கும் நேரம் வருகிறது. பலியிடுவதற்கு விலங்கை யார் அர்ப்பணிப்பது? இது சம்பந்தமாக ஆத்ரேய பார்ப்பனம் கூறுவதாவது:   

“தாய், தந்தை, சகோதரன், சகோதரி, நண்பன், தோழர்கள் ஆகியோர் இந்த விலங்கைப் பலியிடுவதற்கு அளிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டதும் அவர்கள் விலங்குகளைப் பிடிக்கிறார்கள். அதன் உறவினர்கள் (பெற்றோர்கள் போன்றோர்) அனைவராலும் அது கைவிடப்படுவதை இது குறிக்கிறது.” (ஆத்ரேய பார்ப்பனம் (மார்ட்டின் ஹாக்) II பக். 86)

இதனைப் படிக்கும்போது, பலியிடுவதற்கு விலங்கை ஒப்படைப்பதில் ஏறத்தாழ எல்லோருமே ஏன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று வியப்படையலாம். இதற்கான காரணம் வெளிப்படையானது. யாகத்தை முன்னின்று நடத்திக் கொடுப்பதில் மொத்தம் பதினேழு பார்ப்பனப் புரோகிதர்கள் பங்குகொள்ள உரிமை பெற்றிருக்கிறார்கள். விலங்கின் செத்த உடல்முழுவதும் தங்களுக்குக் கிடைக்கவேண்டும் என்று அவர்கள் விரும்புவது இயல்பே. (கொல்லப்பட்ட விலங்கின் உடல் முழுவதையுமே பார்ப்பனர்கள் எடுத்துக் கொள்கின்றனர். யாகம் செய்பவருக்கும் அவருடைய மனைவிக்கும் தலா ஒரு கால் மட்டுமே தரப்படுகிறது.) உடல் முழுவதும் அவர்களுக்கு கிடைத்தாலொழிய பதினேழு புரோகிதர்களுக்கும் போதிய அளவு பங்கு கிடைப்பது சாத்தியமல்ல. இதில் பங்குகோரக்கூடிய இதரர்கள் எல்லோரும் விலக்கப்பட்டாலொழிய பார்ப்பனர்கள் அந்த விலங்கின் உடல்மீது சட்டப்படி உரிமை கொண்டாடமுடியாது. இதனால்தான் யாகம் செய்பவரின் தோழர்கூட அந்த விலங்கைப் படையல் அளிப்பதில் பங்கு கொள்ளும்படி செய்யப்படுகிறார்.

அடுத்து விலங்கை கொல்லும் கூட்டம் வருகிறது. அதனை எவ்விதம், எந்த முறையில் கொல்லவேண்டும் என்பதை ஆத்ரேய பார்ப்பனம் மிக விரிவாகக் கூறுகிறது. அதன் கட்டளைகள் வருமாறு:

“அதன் கால்களை வடக்கு நோக்கித் திருப்பி வையுங்கள்! அதன் கண்ணை கதிரவனுக்கும், அதன் மூச்சை காற்றுக்கும், அதன் உயிரை வளிமண்டலத்துக்கும், அதன் செவிப்புலனை திசைகளுக்கும், அதன் உடலை மண்ணுக்கும் அர்ப்பணியுங்கள். யாகம் நடத்துபவன் இவ்விதம் அதனை இந்த உலகங்களுடன் பிணைக்கிறான்.

முழுத்தோலையும் (வெட்டாமல்) உரித்தெடுக்கவும். கொப்பூழை அறுத்தெடுப்பதற்கு முன்னர் குடலுடன் இரைப்பையை அப்படியே வெளியே எடுக்கவும். அதன் வாயை இறுகமூடி அதன் மூச்சை நிறுத்தவும். இவ்வாறு, அவன் (யாகம் செய்பவன்) அதன் மூச்சை இதர பிராணிகளுக்கு அளிக்கிறான்.

அதன் உடலின் முன்பகுதியை கழுகுபோலவும், அதன் முன்கால்களை (இரண்டும் ஒன்றுபோல்) இரண்டு கைக்கோடாரிகளைப் போலவும், அதன் பின் கால்களை (இரண்டும் ஒன்றுபோல்) ஈட்டி போன்ற இரண்டு உலோகக் கம்பிகள் போலவும் அதன் தோள்பட்டைகளை (இரண்டும் ஒன்றுபோல்) இரண்டு காஷ்யப்பாக்கள் போலவும் ஆக்கவும், அதன் இடுப்பு எலும்பு முறிக்கப்படலாகாது; அதன் இரு தொடைகளையும் (இரண்டும் ஒன்றுபோல்) இரண்டு கேடயங்கள் போலவும்; அதன் முழங்கால் சில்லுகளை (இரண்டும் ஒன்றுபோல்) இரண்டு அவரி இலைகளைப் போன்றும் செய்யவும்; அதன் இருபத்தியாறு விலா எலும்புகளையும் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக எடுக்கவும்; அதன் ஒவ்வொரு உறுப்பையும் முழுமையாகப் பாதுகாக்கவும். இவ்வாறு அவன் அதன் எல்லா உறுப்புகளையும் பயன்படுத்திக் கொள்கிறான்.”

     விலங்கை நிவேதன முறையில் பலியிடும் பணி பூர்த்தியடைவதற்கு இரண்டு சடங்குகள் பாக்கி உள்ளன. ஒன்று கசாப்புக் கடைக்காரனின் பணியைச் செய்த பார்ப்பனப் புரோகிதர்களை அவர்களது பாபங்களிலிருந்து விடுவிப்பது. தத்துவார்த்த ரீதியில் கூறுவதானால் கொலைசெய்த குற்றத்தை செய்தவர்கள் அவர்கள்; ஏனென்றால் யாகம் நடத்துபவருக்குப் பதிலாள்கள்தான் இந்தப் புரோகிதர்கள். கொலை செய்த பழிபாவங்களிலிருந்து அவர்களை விடுவிக்க என்று ஆத்ரேய பார்ப்பனம் பணிக்கிறது: (ஆத்ரேய பார்ப்பனம் (மார்ட்டின் ஹாக்) II பக். 86-90)

“ஓ கொலையாளிகளே! (குடலுடன் சேர்த்து முழு இரைப்பையையும் எடுக்கும்போது) உங்கள் குழந்தைகளுக்கும் உங்கள் சந்ததிகளுக்கும் மத்தியில் குடல்களைத் துண்டிக்காதீர்கள். இவ்வாறு கூறியவாறு அவன் இக்குடல்களை தெய்வீகக் கொலையாளிகளுக்கும் மனிதக் கொலையாளிகளுக்கும் அளிக்கிறான்.

பிறகு யாகம் செய்பவன் பின்வருமாறு மும்முறை கூறவேண்டும்: ஓ அத்துவர்யு (நீவிரும் மற்றவர்களும்) (விலங்கை) விலங்கை கொல்லுங்கள், நன்றாக கொல்லுங்கள்; ஓ, அத்துவர்யு, அதனைக் கொல்லுங்கள்.

விலங்கு கொல்லப்பட்ட பின்பு (அவன் பின்வருமாறு மும்முறை கூறவேண்டும்) கொலையின் பழிபாவங்கள் (எங்களிடமிருந்து) தூர விலகிச் செல்லட்டும். ஏனெனில் (விலங்கின்) மூச்சை நிறுத்தியவர்கள் தெய்வங்களின் அத்துவர்யுதான், எனவே, அதன் மூச்சை அடக்கியவரிடமிருந்தும், அதனை படுகொலை செய்தவரிடமிருந்தும் பாவம் தொலைதூரத்துக்கு விலகிச் செல்லட்டும்.

யாகம் நடத்துபவன் பின்னர் முணுமுணுக்கிறான் (ஜெபம் செய்கிறான்); “ஓ கொலையாளிகளே! நீங்கள் செய்யும் நல்லவை எல்லாம் நம்மிடம் தங்கட்டும்! நீங்கள் செய்யும் தீமைகள் எல்லாம் வேறு எங்காவது செல்லட்டும்!” யாகம் செய்பவன் இவ்வாறு கூறிவிட்டு விலங்கைக் கொல்வதற்கு உத்தரவிடுகிறான்; தெய்வங்களிடையே யாகம் செய்பவனாக அக்னி இருந்தபோது இந்தச் சொற்களைக் கூறித்தான் (விலங்கை) கொல்லும்படி ஆணை பிறப்பித்தான்.

விலங்கை மூச்சுவிட முடியாதபடி செய்தவர்களையும், அதனைக் கொன்றவர்களையும், ஓர் உறுப்பை மிக விரைவாகவும் இன்னொரு உறுப்பை மிகத்தாமதமாகவும் துண்டித்தும், ஒரு துண்டை மிகப்பெரியதாகவும் இன்னொரு துண்டை மிகச்சிறியதாகவும் நறுக்கியும் விதிமுறைகளை மீறியவர்களையும் சூழக்கூடிய பழிபாவங்களை யாகம் செய்பவன் இச்சொற்களின் மூலம் (மேலே கூறிய ஜெபத்தின் மூலம்) அகற்றுகிறான். யாகம் செய்பவன் இதன் வாயிலாக (எல்லாக் குற்றப் பழிகளிலிருந்தும் விடுபட்டு) நீண்ட ஆயுளைப்பெறுகிறான்; அவன் நீண்ட ஆயுளைப்பெறுவதற்கு (இது துணைபுரிகிறது.) இத்தகைய அறிவாற்றல் படைத்தவன் தீர்க்காயுசைப் பெறுகிறான்.”

     இறந்துபோன விலங்கின் பாகங்களை என்ன செய்வது என்பதை அடுத்தபடியாக ஆத்ரேய பார்ப்பனம் விவரிக்கிறது. இது சம்பந்தமாக அது கூறுவதாவது: (ஆத்ரேய பார்ப்பனம் (மார்ட்டின் ஹாக்) II பக். 87)

“அதன் குடலிலிருந்து வெளிப்படும் சாணம் முதலியவற்றை பூமியில் ஒரு குழி தோண்டி அதில் புதைத்துவிடவேண்டும். சாணத்தில் காய்கறி உணவு அடங்கியுள்ளது; எனவே, புல் பூண்டுகளுக்கு உரிய இடம் மண்தான். எனவே, யாகம் செய்பவன் சாணம் முதலியவற்றை அவற்றிற்குரிய இடத்தில் சேர்ப்பிக்கிறான். தீய ஆவிகளுக்கு விலங்கின் இரத்தத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். ஏனென்றால் ஒருசமயம் ஹவிர் யக்ஞங்களில் (பௌர்ணமி, அமாவாசை படையல்கள்) தீய ஆவிகளுக்குரிய பங்கை அளிக்காமல் தெய்வங்கள் அவற்றிற்கு உமியையும் சிறிதளவு தானியத்தை மட்டும் அளித்தன; இதேபோல், மாபெரும் யாகங்களிலும் (சோமயாகம், மிருகங்களை உயிர்ப்பலியிடுதல் போன்றவை) தீய ஆவிகள் புறக்கணிக்கப்பட்டு, அவற்றுக்கு இரத்தம் மட்டுமே அளிக்கப்பட்டது. எனவே, இந்தக் காரணத்தினால், யாகம் செய்பவன் பின்வருமாறு கூறுகிறான்: தீய ஆவிகளுக்கு இரத்தத்தை அர்பணிக்கிறேன். அவன் தீய ஆவிகளுக்கு இந்தப் பங்கை அளிப்பதன்மூலம் படையற்பொருளில் அவற்றுக்கு வேறு எந்தப் பங்கையும் அளிப்பதைத் தவிர்க்கிறான். சிலர் பின்வருமாறு கூறுகிறார்கள்: யாகத்திற்குத் தீய ஆவிகளை (அவை ராட்சதர்களாக இருந்தாலும் சரி, அசுரர்களாக இருந்தாலும் சரி) அழைக்கக்கூடாது; ஏனென்றால் யாகங்கள் தீய ஆவிகள் இல்லாமல் தான் நடத்தப்படவேண்டும். (அவற்றால் யாகங்களுக்கு பங்கம் ஏற்படக்கூடாது.) ஆனால் வேறு சிலர் இவ்வாறு கூறுகிறார்கள்: யாகங்களுக்கு தீய ஆவிகளையும் அழைக்கவேண்டும்; ஏனென்றால் தீய ஆவிகளுக்குரிய பங்கை அளிக்காதவன் அவற்றால் தண்டிக்கப்படுவான்; அவன் இந்த தண்டனையை அனுபவிக்காவிட்டாலும் அவன் மகன் அனுபவிப்பான்; இதிலிருந்து அவன் தப்பினாலும் அவனுடைய பேரன் தண்டனை அனுபவிப்பான்; இவ்வாறு அவன் மீதுள்ள கோபத்தை கெட்ட ஆவிகள் அவனுடைய புதல்வன் மீதோ அல்லது பேரன் மீதோ காட்டும்.”

“யாகம் நடத்துபவன் ஒருக்கால் அப்படியே கெட்டஆவிகளை அழைத்தாலும் மிகவும் தாழ்ந்த குரலிலேயே அழைக்கவேண்டும். ஏனென்றால் தாழ்ந்த குரலும் தீய ஆவிகளும் மறைவடக்கமானவை. எனவே, இவ்வாறிருக்கும்போது ஒருவன் பலத்த குரலில் பேசினால், அவன் கெட்ட ஆவிகளின் குரலில் பேசுபவன் ஆகிறான்; இதனால் ராட்சத ஒலியை (பயங்கரமான, அச்சமூட்டுகிற) எழுப்புகிறான். செருக்கும் இறுமாப்பும் கொண்டவனும், குடிபோதையில் உள்ளவனும்தான் இவ்வாறு ராட்சதக் குரலில் பேசுவான். இதை உணர்ந்தவன் அகந்தை கொண்டவனாக மாறமாட்டான்; அவனுடைய வழித்தோன்றல்களும் அத்தகைய இழிநிலையை அடைய மாட்டார்கள்;   

     பின்னர் இறுதியாக, இறந்த பிராணியின் உடல்பாகங்களை தெய்வங்களுக்கும் நிவேதிக்கும் கடைசிச் சடங்கு நடைபெறுகிறது. இதனை மனோதம் எனக் கூறுவர். இதுபற்றி ஆத்ரேய பார்ப்பனம் கூறுவதாவது: (ஆத்ரேய பார்ப்பனம் (மார்ட்டின் ஹாக்) II பக். 93)

“அத்துவர்யு (யாகம் நடத்துபவனிடம்) பின்வருமாறு கூறுகிறான்: பலியிடப்பட்ட விலங்கின் பாகங்களை மனோதத்துக்குப் பகிர்ந்தளிக்கும் முறைக்குரிய சுலோகங்களை ஓதுக. பின்னர் அவன் பின்வரும் பாசுரத்தைப் பாடுகிறான். ஓ அக்னி, நீ தான் முதல் மனோதன் (6.1) (மனோதம் என்பது நிவேதனப் பொருள் யாருக்கு அளிக்கப்படுகிறதோ அந்தத் தெய்வத்தைக் குறிக்கிறது.)

     விலங்கின் இறைச்சியைப் பகிர்ந்தளிக்கும் பிரச்சினை இன்னும் எஞ்சியிருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு ஆத்ரேய பார்ப்பனம் பின்வரும் தீர்வை அளிக்கிறது. (ஆத்ரேய பார்ப்பனம் (மார்ட்டின் ஹாக்) II பக். 441-442)

“பலியிடப்பட்ட விலங்கின் பல்வேறு பாகங்களை (புரோகிதர்களுக்கு) பகிர்ந்தளிக்கும் விஷயத்துக்கு இப்போது வருவோம். அது குறித்து இப்போது கூறுவோம். நாக்குடன் இரண்டு தாடை எலும்புகளும் பிரஸ்தோதாருக்கு அளிக்கப்பட வேண்டும்; கழுகு வடிவத்திலுள்ள உடலின் முன்பகுதி உத்கதாருக்கு; அண்ணத்துடன் குரல்வளை பிரதிஹர்த்தாருக்கு; வலது இடுப்பின் கீழ்ப்பகுதி ஹோதாருக்கு; இடது பகுதி பிரமாவுக்கு; வலதுதொடை மைத்ரா வருணனுக்கு; இடது தொடை பார்ப்பனச் சம்சிக்கு; தோள்பட்டையுடன் கூடிய வலதுபுறம் அத்துவர்யுவுக்கு; இடதுபுறம் உடன்மந்திரங்கள் ஓதுபவர்களுக்கு; இடதுப்புறத் தோள்பட்டை பிரதிபாஷத்தாருக்கு; வலதுப்புற தோள்பட்டையின் கீழ்ப்பகுதி போதாருக்கு; வலது தொடையின் மேற்பகுதி அச்சவாகனுக்கு; இடதுதொடை அக்னிதாரனுக்கு; வலதுபுறத் தோள்பட்டையின் மேற்பகுதி ஆத்ரேயனுக்கு; இடதுப்புற தோள்பட்டை சதஸ்யனுக்கு; முதுகெலும்பும் சிறுநீர்ப்பையும் கிரகபதிக்கு (யாகம் செய்பவனுக்கு); வலது கால்கள் விருந்தளிக்கும் கிரகபதிக்கு; இடது கால்கள் விருந்தளிக்கும் கிரகபதியின் மனைவிக்கு; மேல் உதடு இருவருக்கும் பொதுவானது (கிரகபதிக்கும் அவனது மனைவிக்கும்), கிரகபதி இதனைப் பகிர்ந்தளிக்க வேண்டும். விலங்கின் வாலை மனைவிகளுக்கு அவர்கள் அளிக்கிறார்கள்; ஆனால் அவர்கள் அதனைப் பார்ப்பனனுக்கு தந்துவிடவேண்டும்; கழுத்து இறைச்சியும் (மணிகானனம்), மூன்று குருத்தெலும்புகளும் (கீக்கசம்) கிரவஸ்துத்துக்கு; இதர மூன்று குருத்தெலும்புகளும் முதுகு இறைச்சியில் (வய்கர்ட்டம்) பாதியும் உன்னேட்டருக்கு; கழுத்து இறைச்சியின் மற்றொரு பாதியும் தொங்கு சதையும் (குலோமம்) விலங்கைக் கொன்றவனுக்கு, அவன் பார்ப்பனனாக இல்லாவிட்டால் அதை அவன் ஒரு பார்ப்பனனுக்கு தந்துவிட வேண்டும். தலையும் தோலும் சுப்பிரமணியனுக்குச் சொந்தம். இவர்தான் ஸ்வசூத்யத்தைப் பற்றிப் பேசியவர். சோமயாகத்தில் பலியிடப்பட்ட விலங்கில் படையல் உணவுக்குரிய பகுதி எல்லா அர்ச்சகர்களுக்கும் சொந்தமானது; யாகம் நடத்துபவர் விரும்பினால் அவருக்கு அதில் பங்கு உண்டு.

பலியிடப்பட்ட பிராணியின் இந்தப் பாகங்கள் அனைத்தும் சேர்ந்து மொத்தம் முப்பத்தாறாகிறது. இவை ஒவ்வொன்றும் யாகத்தின்போது ஓதப்பட்ட சுலோகத்தின் ஓரடியைப் பிரதிபலிக்கிறது. பிரிஹதி சீரில் முப்பத்தாறு அசைகள் அடங்கியுள்ளன; தேவலோகங்கள் பிரிஹதி தன்மை உடையவை. இவ்வாறு விலங்கை முப்பத்தாறு பகுதிகளாகப் பிரித்து, இவ்வுலகிலும் உம்பருலகிலும் இன்பம் பெறுகின்றனர்; இவ்வுலகிலும் அவ்வுலகிலும் தங்கள் நிலையை உறுதி செய்து கொண்டு அங்கு செல்லுகின்றனர்.

பலியிடப்படும் பிராணியை மேலே கண்டவாறு பங்கிடுவது வானுலகுக்கு வழிகாட்டியாக அமைகிறது. ஆனால் இவ்வாறில்லாமல் வேறுவிதமாகப் பங்கிடுபவர்கள் இறைச்சி மீது தங்களுக்குள்ள அளவு மீறிய இச்சையைத் திருப்தி செய்து கொள்வதற்கு மட்டுமே ஒரு விலங்கை கொல்லும் போக்கிரிகள், கயவர்கள் போன்றவர்களாகிறார்கள். பலியிடப்பட்ட விலங்கைப் பங்கிட்டுக் கொள்ளும் முறையை கண்டுபிடித்தவர் ஸ்ருதரின் புதல்வரான ரிஷி தேவபாகன்தான். அவர் இவ்வுலகிலிருந்து விடைபெற்றுச் செல்லும்போது இந்த இரகசியத்தை எவரிடமும் நம்பிக்கை வைத்துக் கூறிவிட்டுச் செல்லவில்லை. எனினும் ஒரு தெய்வீக சக்தி இந்த இரகசியத்தை பாப்ருவின் புதல்வரான கிரிஜனுக்கு வெளியிட்டது. அது முதல் இந்தப் பங்கீட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது.”

ஆத்ரேய பார்ப்பனம் கூறுவதிலிருந்து இரண்டு விஷயங்கள் அணுவளவும் ஐயத்துக்கிடமின்றி நிருபணமாகி உள்ளன. முதலாவதாக, பலியிடப்பட்ட விலங்கின் இறைச்சி முழுவதையும் பார்ப்பனர்களே ஏகபோகமாக உடைமையாக்கிக் கொண்டனர். ஏதோ பெயரளவுக்கு சிறு துண்டைத்தவிர, மற்றபடி யாகம் செய்பவர் கூட இதில் பங்குகொள்ள அவர்கள் அனுமதிக்கவில்லை. இரண்டாவதாக, விலங்கை படுகொலை செய்யும் பணியை பார்ப்பனர்களே ஏற்றனர். ஒரு வேள்வியில் கொல்லப்பட்ட விலங்கின் இறைச்சியை நியாயமாக பார்ப்பனர்கள் சாப்பிடக்கூடாது; இது வரையறுக்கப்பட்ட நியதியாகும். மனிதன் தன்னையே தெய்வங்களுக்குப் பலியிட்டுக் கொள்ளவேண்டும் என்பதே ஓர் யக்ஞத்திற்கு அடிப்படையாக உள்ள கோட்பாடாகும். இந்தக் கடமை பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கே அவன் விலங்கைப் பலியிடுகிறான். இவ்வகையில் பார்க்கும்போது, ஒரு விலங்கு மனிதனுக்குப் பதிலாக மட்டுமே இருப்பதால், அதன் இறைச்சியை உண்பது என்பது மனித மாமிசத்தைச் சாப்பிடுவது என்றுதான் பொருளாகும். யாகத்தில் பலியிடப்படும் விலங்கின் இறைச்சியை முற்றிலும் ஏகபோகமாக அனுபவித்து வந்த பார்ப்பனர்களின் நலன்களுக்கு இந்தக் கோட்பாடு மிகவும் பாதகமாக இருந்தது. எனவே, பலியிடப்பட்ட விலங்கின் இறைச்சி பார்ப்பனர்களுக்குக் கிட்டாமல் போகும் அபாயம் இந்தக் கோட்பாட்டில் இருப்பதைக் கண்ணுற்ற ஆத்ரேய பார்ப்பனம் இந்தக் கோட்பாட்டிற்கு அறவே எதிர்மறையான முறையில் அர்த்தம் காணுவதில் இறங்குகிறது. அது பின்வருமாறு கூறுகிறது: (ஆத்ரேய பார்ப்பனம் (மார்ட்டின் ஹாக்) II )

“யாகம் நடத்துபவன் அதன்மூலம் தன்னையே எல்லாத் தெய்வங்களுக்கும் பலியாகக் கொடுக்க முன் வருகிறான். அக்னி எல்லாத் தெய்வங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறான். அவ்வாறே சோமனும் சகல தெய்வங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறான். யாகம் நடத்துபவன் அக்னிக்கும் சோமனுக்கும் விலங்கை பலியிடும்போது, அந்த விலங்கு அவனைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால், அனைத்துத் தெய்வங்களுக்கும் தன்னைப் பலியிடுவதிலிருந்து அவன் தன்னை விடுவித்துக் கொள்கிறான்.

சிலர் இவ்வாறு கூறுகிறார்கள்: “அக்னிக்கும் – சோமனுக்கும் படையல் செய்த விலங்கின் இறைச்சியைச் சாப்பிடாதீர்கள். அவ்வாறு அந்த விலங்கின் இறைச்சி சாப்பிடுபவர்கள் மனித மாமிசத்தையே சாப்பிடுபவர்கள் ஆகிறார்கள்; ஏனென்றால் யாகம் நடத்துபவன் அந்த விலங்கின் உதவி கொண்டு, தன்னை பலியிட்டுக் கொள்வதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறான்.” ஆனால் இந்தக் கருத்து ஏற்புடையதல்ல.

     இவற்றை எல்லாம் கொண்டு பார்க்கும்போது, பார்ப்பனர்கள் மாட்டிறைச்சியைச் சாப்பிட்டது மட்டுமல்ல, யாகங்களில் விலங்குகளைக் கொல்பவர்களாகவும் இருந்து வந்தனர் என்பதற்கு இதற்குமேல் சான்றுகள் ஏதும் தேவையில்லை என்றே தோன்றுகிறது.

     இவ்வாறிருக்கும்போது பார்ப்பனர்கள் ஏன் களம் மாறினார்கள்? ஏன் திசை மாறினார்கள்? அவர்களிடையே ஏற்பட்ட மாற்றத்தை இரண்டு கட்டங்களாகப் பார்ப்போம். முதலாவதாக, மாட்டிறைச்சி சாப்பிடுவதை அவர்கள் ஏன் கைவிட்டார்கள்?

II

     பசுவதையை அசோகர் சட்டரீதியாகத் தடைசெய்யவில்லை என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டோம். அப்படியே ஒருக்கால் அந்த பௌத்த சக்கரவர்த்தி ஒரு தடைச்சட்டத்தை பிறப்பித்திருந்தால்கூட அந்தச் சட்டம் தங்களையும் கட்டுப்படுத்தும் என்பதை பார்ப்பனர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொண்டிருக்க முடியாது.

     மாட்டிறைச்சி சாப்பிடுவதை மனு தடை செய்தாரா? அவ்வாறு தடைசெய்திருந்தால் அது பார்ப்பனர்களைக் கட்டுப்படுத்தியிருக்கும்; அப்போது அவர்கள் களம் மாறியதற்குப் போதிய விளக்கம் தருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். மனுஸ்மிருதியை ஆராயும்போது பின்கண்ட சுலோகங்கள் அதில் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.

“V.46. உயிர் ஜீவன்களுக்குத் துன்பமும் துயரமும் மரணமும் விளைவிக்காதவன், அதற்கு மாறாக அந்த ஜீவராசிகள் அனைத்துக்கும் நல்லதே நாடுபவன் முடிவற்று பேரின்பத்தைப் பெறுகிறான்.

V.47. எந்த உயிரினத்துக்கும் எத்தகைய தீங்கும் விளைவிக்காதவன் தான் நினைப்பதை, தான் மேற்கொள்ளும் காரியத்தை, தன் மனதில் தீர்மானிப்பதை எவ்வித முயற்சியுமின்றி எய்தப் பெறுவான்.

V.48. உயிர்ப் பிராணிகளுக்கு ஊறுசெய்யாமல் ஒருபோதும் இறைச்சியைப் பெறமுடியாது; புலனறிவுள்ள உயிருக்குத் தீங்கு விளைவிப்பது பேரின்பவீடு பெறுவதற்கு இடையூறானதாகும்; எனவே, இறைச்சியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தொதுக்க வேண்டும்.

V.49. இறைச்சி எவ்விதம் அருவருக்கத்தக்க முறையில் பெறப்படுகிறது என்பதையும், அதனைப் பெறுவதற்கு உயிர்ப் பிராணிகள் எவ்விதம் இரக்கமற்ற முறையில் மிகக் குரூரமாகக் கொல்லப்படுகின்றன என்பதையும் நன்கு சிந்தித்துப் பார்த்து, இறைச்சி உண்பதை அறவே விலக்கி ஒதுக்க வேண்டும்.”

     பார்ப்பனர்கள் புலால் உண்பதைக் கைவிட்டு ஏன் சைவ உணவாளர்களாக மாறினார்கள் என்பதற்கு இந்த சுலோகங்களில் அடங்கியுள்ள தடைகள்தான் காரணம் என்று கொள்ளமுடியுமா? ஆனால் அவ்வாறு இந்த சுலோகங்களை சட்ட வலிமையுள்ள தடைகளாகக் கருதுவது சாத்தியமல்ல. எனவே, பார்ப்பனர்கள் சைவ உணவாளர்களாக மாறியபிறகு அந்தச் செயல்பாட்டைச் சிலாகிக்கும் பாராட்டுரைகளாகவோ அல்லது இடைச்செருகலாகவோதான் இந்த சுலோகங்கள் இருக்க வேண்டும் என்பது தெளிவு. அதிலும் பின்னால் குறிப்பிட்ட கருத்துதான் சரியானதாக இருக்க வேண்டும் என்பது மனுஸ்மிருதியின் அதே அத்தியாயத்தில் வரும் பின்கண்ட சுலோகங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்:

V.28. படைப்புகளின் அதிபதியான பிரஜாபதி உயிர்களுக்கு ஆதாரமாக இந்த உலகம் முழுவதையும் படைத்தார்; அசைவன, அசையாதன அனைத்தும் இந்த உயிர்களுக்கு உணவே ஆகும்.  

V.29. இதில் தவிர்க்க முடியாதது எதுவெனில், கோரைப் பற்கள் உடையவை கோரைப் பற்களில்லாதவற்றுக்கு இரையாவதும், கரங்களற்றவை கரங்களைக் கொண்டவற்றுக்கு இரையாவதும், கோழை தைரியசாலிக்கு இரையாவதும்தான்.

V.30. பிரத்தியேகமாக உணவுக்காகவே படைக்கப்பட்டதை உண்பது பாவமாகாது; ஏனென்றால் உண்பவர்களையும் உண்ணப்படுபவற்றையும் கடவுளே படைத்திருக்கிறார்.

V.56. மாமிசம் உண்பது பாபமில்லை; மதுவருந்துவதும் குற்றமில்லை; பாலுணர்ச்சி கொண்டு உடலுறவு கொள்வதிலும் தவறில்லை; இவையெல்லாம் உயிர்ப்பிராணிகளின் இயல்பாகும். எனினும் இவற்றைத் தவிர்ப்பது பெரும் நன்மை பயக்கும்.

V.27. நீர் தெளித்து மந்திரம் ஓதி, புலால் உண்ணலாம். விதிமுறைப்படி சமயச்சடங்கில் ஒருவர் ஈடுபட்டிருக்கும் போது, பார்ப்பனர்கள் விரும்பினாலும், ஒருவர் உயிர் ஆபத்தில் இருக்கும்போதும் மாமிசம் உண்பதில் தவறில்லை.

V.31. தெய்வங்கள் வகுத்துத்தந்த விதியின்படி, யாகத்திற்காக இறைச்சி சாப்பிடுவது ஏற்புடையதே; ஆனால் மற்ற சமயங்களிலும் விடாது மாமிசத்தை உண்பது ராட்சதச் செயலாகும்.

V.32. தெய்வங்களுக்கோ மூதாதையர்களின் ஆவிகளுக்கோ மரியாதை செய்யும்போது, வாங்கியோ, விலங்கை தானே கொன்றோ அல்லது மற்றவர்களிடமிருந்து பரிசாகப் பெற்றோ மாமிசம் உண்பது தவறில்லை.

V.42. வேதத்தின் உண்மையான பொருளை அறிந்த இருமுறை பிறந்தவன் இந்த நோக்கங்களுக்காக ஒரு பிராணியைக் கொன்றால் அவனும் அந்தப் பிராணியும் நற்கதி அடைவார்கள்.

V.39. சுயம்புவே (தானாகத் தோன்றியவர்) யாகங்களுக்காக விலங்குகளை படைத்தார்; இந்த உலகம் முழுவதன் நலனுக்காகவே யாகங்கள் தோற்றுவிக்கப்பட்டன; எனவே, யாகத்திற்காக விலங்குகளைக் கொல்வது அந்த சொல்லின் வழக்கமான பொருளில் கொல்வதாகாது.

V.40. மூலிகைகள், மரங்கள், கால்நடைகள் மற்றும் ஏனைய விலங்குகள் யாகங்களுக்காக அழிக்கப்பட்டால் அவை மீண்டும் பிறக்கும்போது உயர்ந்த நிலையை அடைகின்றன.

     மனு இத்துடன் நில்லாமல், மேலும் ஒருபடி மேலே சென்று, புலால் உண்பதைக் கட்டாயப்படுத்துகிறார். இது சம்பந்தமான பின்கண்ட சுலோகத்தைப் பாருங்கள்:

V.35. ஒரு புனிதச் சடங்கில் உரியமுறையில் ஈடுபட்டிருப்பவன் அதாவது அதை முன்னின்று நடத்துபவன் அல்லது அந்தச் சடங்கில் விருந்துண்பவன் இறைச்சி உண்ண மறுத்தால், இறந்தபின் 21 பிறவிகளில் ஒரு பிராணியாக இருந்து வருவான்.

இவை யாவற்றிலுமிருந்தும், புலால் உண்பதை மனு தடை செய்யவில்லை என்பது தெளிவு. அதுமட்டுமல்ல, பசுவதையை மனுஸ்மிருதி தடை செய்யவில்லை என்பதையும் மனுஸ்மிருதியிலிருந்தே மெய்பிக்க முடியும். முதலாவதாக, பசுவைப் பற்றி மனுஸ்மிருதியில் இடம்பெற்றுள்ள குறிப்புகளை ஸ்நதகாவுக்கு மனு வகுத்துத் தந்துள்ள விதிகளின் பட்டியலில் மட்டுமே காணமுடியும். அந்த விதிகள் வருமாறு:

  • பசு முகர்ந்த உணவை ஸ்நதகா உண்ணக்கூடாது. (மனுநூல் 209)
  • கன்றுக்குட்டி கட்டப்பட்டிருக்கும் கயிற்றை ஸ்நதகா தாண்டிச் செல்லக்கூடாது. (மனுநூல் 38)
  • பசு கொட்டிலில் ஸ்நதகா சிறுநீர் கழிக்கக் கூடாது. (மனுநூல் 45)
  • பசுவுக்கு எதிரே ஸ்நதகா மலஜலம் கழிக்கக் கூடாது. (மனுநூல் 48)
  • ஸ்நதகா ஒரு பசுக்கொட்டிலில் நுழையும்போது வலதுகையை மூடாமல் செல்லக் கூடாது. (மனுநூல் 58)
  • பசு தனது கன்றுக்குப் பால் கொடுத்துக்கொண்டிருக்கும் போது ஸ்நதகா குறுக்கிடக்கூடாது. இதுபற்றி மற்றவர்களுக்குச் சொல்லவும் கூடாது. (மனுநூல் 59)
  • பசுவின் முதுகின்மீது ஸ்நதகா சவாரி செய்யக் கூடாது. (மனுநூல் 70)
  • பசுவை ஸ்நதகா அவமதிப்பலாகாது. (மனுநூல் 162)
  • தூய்மையற்ற ஸ்நதகா பசுவைத் தன் கையால் தொடக்கூடாது. (மனுநூல் 142)

பசுவை ஒரு புனிதமான பிராணியாக மனு கருதவில்லை என்பதை இந்தக் குறிப்புகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம். மாறாக, பசுவை அவர் தூய்மையற்ற விலங்காகவே கருதினார்; அதைத் தொட்டால் தீட்டு ஏற்பட்டு விடும் என்று அபிப்பிராயம் கொண்டிருந்தார்.

     மாட்டிறைச்சி உண்பதை மனு தடைசெய்யவில்லை, என்பதைக் காட்டும் பல சுலோகங்கள் மனுதர்மத்தில் இருப்பதைக் காணலாம். அத்தியாயம் III.3 ஐ இது சம்பந்தமாகக் குறிப்பிடலாம். அது கூறுவதாவது:

“அவன் (ஸ்நதகா) தனது கடமைகளைக் கண்டிப்பான முறையில் வழுவாது, பிறழாது செய்வதில் புகழ்பெற்றவன். வேதத்தைத் தன்னுடைய தந்தையிடமிருந்து மரபுரிமையாகப் பெற்றவன். மலர்மாலை அணிந்து மஞ்சத்தில் அமர்ந்து பசுவைத் தானமாகப் பெறும் உயர்தகுதி படைத்தவன்.”

     ஒரு ஸ்நதகாவுக்குப் பசுவைத் தானமாகத் தருமாறு மனு ஏன் பரிந்துரைக்கவேண்டும் என்ற கேள்வி இங்கு எழுகிறது. அவன் மதுபர்கம் செய்வதைச் சாத்தியமாக்குவதற்கே இவ்வாறு பசு தானமாக அளிக்கப்படுகிறது என்பது தெளிவு. அப்படியாயின், பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி உண்பதை மனு அறிந்திருந்தார் என்பதும், அதை அவர் ஆட்சேபிக்கவில்லை என்பதும் உறுதியாகிறது.

     எந்த விலங்குகளின் இறைச்சியை உண்ணலாம், எந்த விலங்குகளின் இறைச்சியை உண்ணக்கூடாது என்பதை மனு ஓர் இடத்தில் விவாதிப்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும். அவர் கூறுகிறார்:

“முள்ளம்பன்றி, முள்ளெலி, உடும்பு, காண்டாமிருகம், ஆமை, முயல் போன்றவற்றின் இறைச்சியை உண்ணலாம். இதே போன்று, ஒட்டகங்கள் தவிர வீட்டில் வளர்க்கப்படுகிற ஒரு தாடையில் மட்டும் பற்களை உடைய விலங்குகளின் இறைச்சியையும் உண்ணலாம்: இதற்கு தடை ஏதும் இல்லை.

     ஒரு தாடையில் மட்டும் பற்கள் கொண்ட எல்லா வீட்டு வளர்ப்புப் பிராணிகளின் இறைச்சியைச் சாப்பிடலாம் என்று பொதுவான அனுமதியை இந்த சுலோகத்தின் மூலம் மனு வழங்குகிறார். இந்தப் பொதுவான விதிக்கு மனு ஒரே ஒரு விதிவிலக்கை மட்டும் அளிக்கிறார். அதுதான் ஒட்டகம். ஒரு தாடையில் மட்டும் பற்களை உடைய வீட்டுவளர்ப்புப் பிராணிகள் பட்டியலில் ஒட்டகம் மட்டுமின்றி பசுவும் இடம்பெறுவது அனைவருக்கும் தெரியும். ஆனால் அப்படியிருந்தும் மனு பசுவுக்கு விதிவிலக்கு அளிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எவரும் பசுவின் இறைச்சியை உண்பதில் மனுவுக்கு எத்தகைய ஆட்சேபமும் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

     பசுவதையை மனு ஒரு குற்றமாகக் கருதவில்லை. பாவங்களை மனு இரண்டாகப் பிரிக்கிறார். (i) மாபாவங்கள், (ii) சிறுபாவங்கள். மாபாவங்கள் பட்டியலில் மனு பின்கண்டவற்றைச் சேர்க்கிறார்:

“XI.55. பார்ப்பனர்களைக் கொல்வது, சுராபானம் எனப்படும் மதுவருந்துவது, பார்ப்பனனுக்குச் சொந்தமான பொன்னைத் திருடுவது, குரு பத்தினியுடன் உடலுறவு கொள்வது, இத்தகைய குற்றவாளிகளுடன் உறவாடுவது.”

சிறுபாவங்கள் வரிசையில் மனு பின்கண்டவற்றைச் சேர்க்கிறார்.

“XI.60. பசு வதை, தகுதியில்லாததற்கு யாகம் செய்வது, கூடா ஒழுக்கம், பிறரைப் பகைத்துக் கொள்வது, அன்றாடம் வேதம் ஓதுவதை நிறுத்துவது, ஆசிரியர், தாய், தந்தை அல்லது மகனைப் பழிப்பது, வீட்டுப் புனித நெருப்பைப் புறக்கணிப்பது.

     பசுவைக் கொல்வது சிறிய பாவமே என்று மனு கருதுவது இதிலிருந்து தெளிவாகிறது. போதிய காரணமின்றிப் பசுவைக் கொல்வதுதான் வெறுக்கத்தக்கது. மற்றபடி பசுவதை கொடியதோ அல்லது விலக்கமுடியாததோ அல்ல. யாக்ஞவல்கியரின் கருத்தும் இதுதான். (யாக். III 227 மற்றும் III 234)

     இவை யாவும் எதைக் காட்டுகின்றன? தலைமுறை தலைமுறையாக, வழிவழியாக பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி உண்டு வந்திருக்கின்றனர் என்பதையே இவை புலப்படுத்துகின்றன. அப்படியானால், அவர்கள் ஏன் மாட்டிறைச்சி உண்பதை கைவிட்டனர்? உச்சக்கட்ட நடவடிக்கையாக மாமிசத்தை அறவே ஒதுக்கிவிட்டு மாங்கனிக்கு மாறுவானேன்? இரண்டு புரட்சிகளின் சங்கமம் என இதனைக் கூறலாம். பார்ப்பனர்களது தெய்வீக சட்டவல்லுநரான மனுவின் உபதேசங்களால் இந்தப் புரட்சிகர மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை அவரது ஆணைகளைப் புறக்கணித்தே இந்தப் புரட்சி நடைபெற்றிருக்கிறது. இத்தகைய ஒரு நடவடிக்கையைப் பார்ப்பனர்கள் ஏன் மேற்கொண்டார்கள்? தத்துவத்தின் தூண்டுதல் இதற்குக் காரணமா? அல்லது இது வெறும் ஒரு தந்திரோபாயமா?

     இதற்கு இரண்டு விளக்கங்கள் கூறப்படுகின்றன. ஒரு விளக்கம் பசுவைத் தெய்வீக சக்தியாகப் போற்றுவது அத்வைத சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது. யாவற்றுக்கும் மேலான, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒருசக்தி பிரபஞ்சம் முழுவதும் படர்ந்து பரவியிருக்கிறது. அவ்வகையில் எல்லா மனித ஜீவன்களும், விலங்குகளும் புனிதமானவை என்கிறது இந்த அத்வைத சித்தாந்தம். இவ்விளக்கம் திருப்திகரமானதல்ல என்பது வெள்ளிடைமலை. முதலாவதாக, உண்மைகளுடன் இது பொருந்தவில்லை. அனைத்து உயிர்களும் ஒன்றே என்று பிரகடனம் செய்யும் வேதாந்த சூத்திரம் கூட (II.1.28) யாக நோக்கங்களுக்காகப் பிராணிகள் பலியிடப்படுவதைத் தடுக்கவில்லை. இரண்டாவதாக, அத்வைத இலட்சியத்தை அடைய வேண்டும் என்ற ஆர்வமே இந்த மாற்றத்துக்குக் காரணம் என்றால், பசுவுடன் மட்டும் அது ஏன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்குத் தகுந்த முகாந்திரம் இல்லை. இதர விலங்குகளைப் பற்றியும் அது கூறியிருக்க வேண்டும்.

     இரண்டாவது விளக்கம் முதல் விளக்கத்தை விடவும் சாமர்த்தியமானதாக இருக்கிறது; (கானே, தர்ம சாஸ்திரம் II, பகுதி II பக். 776) ஆன்மா ஓர் உடலிலிருந்து இன்னோர் உடலுக்கு மாறுகிறது என்னும் சித்தாந்தம் மேன்மேலும் செல்வாக்கு பெற்றுவந்ததன் காரணமாகவே பார்ப்பனர்களின் வாழ்க்கையில் இந்த மாற்றம் ஏற்பட்டது என்கிறது இந்த விளக்கம். ஆனால் இந்த விளக்கமும் எதார்த்த நிலைமைகளுக்குப் பொருந்துவதாக இல்லை. ஆன்மா கூடுவிட்டுக் கூடுபாய்கிறது என்ற சித்தாந்தத்தை ஆதரிக்கும் (VI-2) பிருகதாரணியக உபநிடதம்கூட தனக்கு அறிவாற்றல்மிக்க ஒரு மகன் பிறக்கவேண்டும் என்று ஒருவன் விரும்பினால் பொலிமாடு அல்லது எருதின் அல்லது வேறு ஏதேனும் இறைச்சியை சாதத்துடனும் நெய்யுடனும் கலந்து படையல் வைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. உபநிடதங்கள் முன்வைக்கும் இந்தச் சித்தாந்தம் மனுஸ்மிருதி காலம்வரை ஏறத்தாழ 400 வருடங்கள் பார்ப்பனர்களிடம் எவ்விதம் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தாதிருந்தது என்பது புரியாத புதிராக இருக்கிறது. இந்த விளக்கம் விளக்கமே இல்லை என்பது கண்கூடு. மூன்றாவதாக, ஆத்மா உடல்விட்டு உடல் மாறுகிறது என்ற சித்தாந்தம் காரணமாகவே பார்ப்பனர்கள் காய்கறி உண்பவர்களாக மாறினார்கள் என்றால், அந்த சித்தாந்தம் பார்ப்பனரல்லாதவர்களையும் மரக்கறி உண்பவர்களாக ஏன் மாற்றவில்லை?

     ஒரு தந்திரோபாயமாகவே பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி உண்பதை விடுத்து, பசுவை வழிபடத் தொடங்கினார்கள் என்று என் மனத்திற்குப்படுகிறது. பார்ப்பனர்கள் ஏன் திடீரென்று பசுவை வணங்க ஆரம்பித்தார்கள் என்ற புதிருக்கான விடையை புத்த மதத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் இடையே நடைபெற்ற போராட்டத்தில் காணலாம்; புத்தமதத்தின் மீது தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டும் ஒரு சாதனமாகவே பார்ப்பனியம் பசு வழிபாட்டை மேற்கொண்டது எனலாம்; பௌத்தத்துக்கும் பார்ப்பனியத்துக்கும் இடையே நடைபெற்ற போராட்டம் இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகும். இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல், இந்து சமயத்தின் சில முக்கிய அம்சங்களை விளக்குவது சாத்தியமில்லை. துரதிருஷ்டவசமாக இந்திய வரலாற்று மாணவர்கள் இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை அறவே உணரத் தவறி விட்டனர். இந்தியாவில் பார்ப்பனியம் இருந்து வந்தது அவர்களுக்குத் தெரியும். ஆனால் தத்தமது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு பார்ப்பனியமும் பௌத்தமும் நடத்திவந்த போராட்டத்தையும், சுமார் 400 வருடக் காலம் நீடித்த இந்தப் போராட்டம் இந்தியாவின் சமயத்திலும், சமுதாயத்திலும், அரசியலிலும் அழிக்க முடியாத சில முத்திரைகளைப் பதித்ததையும் இவர்கள் முற்றாகக் காணத் தவறிவிட்டார்கள் என்றே கூறவேண்டும்.

     இந்த போராட்டத்தின் முழு வரலாற்றையும் விவரிப்பதற்கு இது ஏற்ற இடமல்ல. இருப்பினும் சில முக்கியமான அம்சங்களை மட்டும் இங்கு குறிப்பிடுவது உகந்ததாக இருக்கும். புத்த மதம் ஒரு காலத்தில் இந்திய மக்களில் பெரும்பாலோரது மதமாக இருந்து வந்தது. பல நூற்றாண்டுக்காலம் அது பரந்த மக்கள் பகுதியினரது சமயமாகத் தொடர்ந்து நீடித்துவந்தது. வேறு எந்த சமயமும் இதற்கு முன்னர் செய்யாதவகையில் அது பார்ப்பனியத்தை எல்லாப் பக்கங்களிலும் தாக்கிவந்தது. பார்ப்பனியம் அச்சமயம் தேய்ந்துவந்தது, அவ்வாறு இறங்குமுகத்தில் இல்லையென்றாலும் தன்னைத் தற்காத்துக் கொள்ளவேண்டிய நிலையில் இருந்தது. புத்தமதம் வெகுவேகமாக பரவி வந்ததன் விளைவாக பார்ப்பனர்கள் அரசவையிலும் மக்களிடையிலும் தங்கள் அதிகாரத்தையும் செல்வாக்கையும் இழந்துவந்தனர்.

     புத்த மதத்திடம் தாங்கள் அடைந்த தோல்வியால் அவர்கள் உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்தனர்; பொருமிக் கொண்டிருந்தனர்; தாங்கள் இழந்த அதிகாரத்தையும் செல்வாக்கையும் மீட்க முடிந்த எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தனர். புத்தமதம் பரந்தமக்கள் பகுதியினரைப் பெரிதும் கவர்ந்திருந்தது; அவர்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது; அவர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தது. இத்தகைய நிலைமையில், பௌத்தர்களின் வழிமுறைகளைக் கைக்கொண்டும், பௌத்த சித்தாந்தத்தை அதன் தீவிர வடிவத்தில் பின்பற்றியும் பௌத்தர்களை எதிர்த்து போராடுவதைத் தவிர பார்ப்பனர்களுக்கு வேறு வழி ஏதும் இல்லாதிருந்தது. புத்தரின் மறைவுக்குப் பிறகு, அவரைப் பின்பற்றியவர்கள் அவரது சிலைகளை வைப்பதிலும் தூபிகளை அமைப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டனர். பார்ப்பனர்களும் அவர்களை பின்பற்றினர். அவர்கள் தங்கள் பங்குக்குப் பல கோவில்களைக் கட்டினர்; அவற்றில் சிவன், விஷ்ணு, ராமர், கிருஷ்ணர் போன்றோரின் சிலைகளைப் பிரதிஷ்டை செய்தனர். புத்தரின் உருவ வழிபட்டால் ஈர்க்கப்பட்ட பெருந்திரளான மக்களைத் தங்கள் பக்கம் இழுப்பதற்கே இவ்வளவும் செய்தனர். இவ்வாறுதான் பார்ப்பனியத்தில் இதற்கு முன்னர் இடம்பெற்றிராத கோவில்களும், விக்கிரகங்களும் இந்து மதத்தில் பிரவேசிக்கலாயின. யாக யக்ஞங்களையும், விலங்குகளை குறிப்பாக பசுவை பலியிடுவதையும் கொண்ட பார்ப்பனிய சமயக் கோட்பாடுகளை பௌத்தர்கள் நிராகரித்தனர். பசுவதையை பௌத்தர்கள் கண்டித்ததானது மக்களைப் பெரிதும் கவர்ந்தது; அதிலும் குறிப்பாக அவர்கள் விவசாயிகளாக இருந்ததும், பசு மிக பயனுள்ள பிராணியாக இருந்ததும் இதற்கு முக்கியமான காரணம். அந்நாட்களில் பார்ப்பனர்கள் வீட்டிற்கு யாரேனும் விருந்தாளி வந்தால், அவரைக் கௌரவிப்பதற்கு பசுவைக் கொன்று அவருக்கு விருந்தளிக்க வேண்டியிருந்தது; இதனால் அந்த விருந்தாளி “கோக்னா” என்று அழைக்கப்பட்டு வெறுக்கப்பட்டான். இதுபோன்றே பசுவதையை செய்பவர்கள் என்று பார்ப்பனர்கள் அனைவரும் அச்சமயம் வெறுக்கப்பட்டு வந்தனர். இத்தகைய இக்கட்டான நிலைமையில், ஒரு வழிபடும் முறையாக யக்ஞத்தை நிறுத்துவதையும், பசுவதைக்கு முற்றுப்புள்ளி வைப்பதையும் தவிர பௌத்தர்களுக்கு எதிராக தங்கள் நிலைமையை மேம்படுத்திக்கொள்ள பார்ப்பனர்களுக்கு வேறு வழியில்லை.

     மாட்டிறைச்சி உண்பதை பார்ப்பனர்கள் நிறுத்தியதன் நோக்கம் பௌத்த பிட்சுக்களிடமிருந்து மேலாதிக்கத்தைக் கைப்பற்றுவதே என்பது பார்ப்பனர்கள் மரக்கறி உணவுக்கு மாறியதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. பார்ப்பனர்கள் மரக்கறி உணவாளர்களாக மாறவில்லை என்றால், தங்களுடைய எதிராளிகளிடமிருந்து அதாவது புத்த மதத்திடமிருந்து தாங்கள் இழந்த செல்வாக்கை மீட்க முடியாது என்பதே இக்கேள்விக்கு அளிக்கக்கூடிய சரியான பதிலாக இருக்க முடியும். புத்தமதத்துடன் ஒப்பிடும்போது, பார்ப்பனியம் பொதுமக்களின் நன்மதிப்பை இழக்க காரணமாக இருந்த ஓர் அம்சத்தை இங்கு நினைவுகூறுவது அவசியம்: பிராணிகளைப் பலியிடும் நடைமுறையே அந்த அம்சம்; இது பார்ப்பனியத்தின் அடிப்படை சாராம்சமாக இருந்தது; அதே சமயம் புத்த மதம் இதைக் கடுமையாக எதிர்த்தது. எனவே விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட பெருவாரியான மக்களிடையே புத்தமதம் மதிப்பும் மரியாதையும் பெற்றிருந்தும், பசுக்கள், எருதுகள் உட்பட பிராணிகளைக் கொன்று குவிக்கும் பார்ப்பனியத்திடம் அவர்கள் அருவருப்பு கொண்டிருந்ததும் முற்றிலும் இயல்பே. இத்தகைய நிலைமையில் பார்ப்பனர்கள் தாங்கள் இழந்த செல்வாக்கை எவ்வாறு மீட்க முடியும்? இறைச்சி உண்பதைக் கைவிடுவதன் மூலமும், மரக்கறி உண்பவர்களாக மாறுவதன் மூலமும்தான் இதைச்சாதிக்க முடியும் – இதைத்தான் அவர்கள் செய்தார்கள். பார்ப்பனர்கள் சைவ உணவாளர்களாக மாறியதன் நோக்கமே இதுதான் என்பதை பல்வேறு வழிகளில் மெய்ப்பிக்க முடியும்.

     விலங்குகளைப் பலியிடுவது மோசமான செயல் என்பதை பார்ப்பனர்கள் உள்ளபடியே உணர்ந்து செயல்பட்டார்கள் என்பது உண்மையானால் அவர்கள் செய்திருக்க வேண்டியதெல்லாம் யாகங்களில் விலங்குகளைப் பலியிடுவதை நிறுத்துவதுதான். அவர்கள் சைவ உணவாளர்களாக மாற வேண்டிய அவசியமே இல்லை. அவ்வாறிருக்கும்போது அவர்கள் மரக்கறி உணவை மேற்கொண்டதற்கு ஒரு முக்கிய உள்நோக்கம் இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவு. இரண்டாவதாக, அவர்கள் காய்கறி உண்பவர்களாக மாறவேண்டிய தேவையே இல்லை. ஏனென்றால் பௌத்த பிட்சுகள் சைவ உணவு உண்பவர்களல்லர். இவ்வாறு கூறுவது பலரை வியப்படைய வைக்கலாம்; அகிம்சைக்கும் புத்த மதத்திற்கும் இடையே உள்ள தொடர்பு பிரிக்க முடியாதது, அடிப்படையானது, இன்றியமையாதது என்று மக்களிடையே நிலவும் ஆழமான நம்பிக்கையே இதற்குக் காரணம். பௌத்த பிட்சுகள் புலால் உணவைத் தொடுவதில்லை, அதனை அவர்கள் தவிர்த்து வந்தார்கள் என்று பொதுவாக கருதப்பட்டுவந்தது. இது தவறாகும். பௌத்த பிட்சுகள் மூன்று வகையான இறைச்சியை உண்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்; இவை தூய்மையானது என்று கருதப்பட்டது. பின்னாளில் இது ஐந்து வகைகளாக விஸ்தரிக்கப்பட்டது. சீன யாத்ரிகரான யுவான் சுவாங் இதை அறிந்திருந்தார். சுத்தமான மாமிசத்தை சான் – சிங் என அவர் குறிப்பிட்டார். பிட்சுக்களிடையே இந்தப் பழக்கம் எவ்வாறு தோன்றிற்று என்பதை திரு.தாமஸ் வால்டேர்ஸ் விவரித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: (யுவான் சுவாங், (1904) தொகுதி I பக். 55.)

“புத்தர் உயிரோடிருந்த காலத்தில் வைசாலியில் சிகா எனப் பெயர்கொண்ட செல்வந்தரான ஒரு தளபதி இருந்தார்; அவர் புத்த மதத்துக்கு மாறியவர். அவர் தாராள சிந்தனையோடு பிட்சுகளுக்கு பலவகைகளிலும் உதவி வந்தார்; அடிக்கடி அவர்களுக்கு சிறந்த மாமிச உணவை வழங்கி வந்தார். இவ்வாறு பிட்சுக்கள் தங்களுக்கு விசேடமாக அளிக்கப்படும் உணவை உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருக்கும் தகவல் வெளிநாடுகளுக்குப் பரவியது; புத்த பிட்சுகளின் இந்தப் பழக்கம் தீர்த்திகரர்களைக் கோபமடைய வைத்தது. உணவு விஷயத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்கும் பிட்சுக்களுக்கு இது தெரியவந்ததும் தங்கள் நிலைமையை எடுத்துரைத்தனர். இதன்பேரில் பிட்சுக்களின் கூட்டம் கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் தலைவர் சில விதிமுறைகளை வகுத்துக் கூறினார். எந்த ஒரு விலங்கும் கொல்லப்படுவதைத் தாங்கள் நேரில் பார்த்தாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட விலங்கு அவர்களது உணவுக்காகக் கொல்லப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டாலோ அத்தகைய விலங்கின் இறைச்சியை அவர்கள் உண்ணக் கூடாது என்று அவர் தடை விதித்தார். ஆனால் விலங்குகள் கொல்லப்படுவதை பிட்சுகள் நேரில் பார்க்கவில்லையோ, எந்த விலங்குகள் தங்களின் பொருட்டு கொல்லப்பட்டதாக அவர்கள் கேள்விப்படவில்லையோ, எந்த விலங்கு தங்களுக்காக கொல்லப்பட்டதாக ஐயுறவில்லையோ அத்தகைய மாமிசம் தூய்மையானது, அதாவது (சட்டரீதியானது) என்று அறிவித்து அந்த உணவை அவர்கள் உண்ண அனுமதித்தார்.

பாலியிலும் ஸ்ஸூஃபென் வினயத்திலும் ஒரு நிகழ்ச்சி விவரிக்கப்பட்டிருக்கிறது: ஒரு நாள் புத்தருக்கும் சில பிட்சுகளுக்கும் சிகா காலை விருந்தளித்தார் இந்த விருந்தின்போது ஒரு பெரிய எருது கொல்லப்பட்டு அதன் இறைச்சி சமைக்கப்பட்டு உணவாகப் பரிமாறப்பட்டது. இதற்காக நிர்கிரந்தங்கள் பிட்சுக்களைக் கண்டித்தன; இதன் பிறகுதான் புத்தர் ஒரு புதிய விதியை வகுத்துத் தந்தார்; இதன்படி மூன்று நிலைமைகளில் மீனும் மாமிசமும் ‘தூயதாக’ அறிவிக்கப்பட்டன. பிட்சுக்களுக்கு இப்போது அனுமதிக்கப்பட்ட புலால் உணவு ‘மூன்று தூய உணவுகள்’ அல்லது ‘மூன்று வகையான தூய புலால் உணவுகள்’ என்று அழைக்கப்பட்டன. இவை ‘காணாதது’, ‘கேள்விப்படாதது’, ‘ஐயப்படாதது’ என்று இரத்தினச் சுருக்கமாக வருணிக்கப்பட்டன. அல்லது சில சமயங்களில் சீன மொழிபெயர்ப்பின்படி ‘நேரில் பார்க்காதது’, ‘அறிந்திராதது’, ‘ஐயத்துக்கு அப்பாற்பட்டது’ எனப் பொருள் கொள்ளப்பட்டன. பின்னர் மேலும் இரண்டு வகையான புலால் உணவுகள் புத்தப் பிட்சுகளுக்கு ‘சட்டப்பூர்வமானவையாக’ அறிவிக்கப்பட்டன; இயற்கையாக மரணமடைந்த விலங்குகளின் இறைச்சியும் பிற உயிரினங்களைக் கொன்று தின்னும் பறவைகளாலோ அல்லது மிகக் குரூரமான விலங்குகளாலோ கொல்லப்படும் பிராணிகளின் இறைச்சியும் இவ்வகைப்பட்டவையாகும். இவ்வாறு, ஐந்து வகையான புலால் உணவுகளை உட்கொள்ள பௌத்த பிட்சுகள் அனுமதிக்கப்பட்டனர். பிறகு, ‘காணாதது’, ‘கேள்விப்படாதது’, ‘ஐயப்படாதது’ ஆகிய புலால் உணவுகள் ஒரு பிரிவாகவும் அத்துடன் ‘இயற்கையாக இறந்ததையும்’, ‘பறவைகள் கொன்றதையும் சேர்த்து சான்-சிங் என்றாயிற்று.”

     இதிலிருந்து, பௌத்த பிட்சுகளே புலால் உண்டனர் என்பது தெள்ளத்தெளிவாகிறது. அப்படியிருக்கும்போது பார்ப்பனர்கள் புலால் உணவைக் கைவிடக் காரணமே இல்லை. பின்னர் ஏன் பார்ப்பனர்கள் இறைச்சி உண்பதை விடுத்து, மரக்கறி உணவாளர்களானார்கள்? பௌத்த பிட்சுக்களைப் போன்றவர்களே தாங்களும் என்பதை பொதுமக்கள் பார்வையில் தங்களைக் காட்டிக் கொள்ள அவர்கள் விரும்பாததே இதற்குக் காரணம்.

     யாக யக்ஞங்கள் முறையைக் கைவிடுவதும், பசுவைப் பலியிடுவதை நிறுத்துவதும் ஓரளவு பலனை மட்டுமே தரமுடியும். அதிகபட்சம் பார்ப்பனர்களை பௌத்தர்களுக்கு இணையான இடத்தைப் பெறுவதற்குத்தான் வழிவகுத்திருக்கும். புலால் உணவு உண்பதில் பௌத்த பிட்சுக்களின் விதிமுறைகளை அவர்கள் பின்பற்றியிருந்தாலும் இதேநிலைதான் ஏற்பட்டிருக்கும். பௌத்தர்கள் மீது தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்ட வேண்டுமென்று பார்ப்பனர்கள் கொண்டிருந்த பேரார்வத்தை நிறைவேற்ற அது உதவ முடியாது. யாக யக்ஞங் களுக்காகப் பசுக்கள் பலியிடப்படுவதை எதிர்ப்பதன் மூலம் பெருவாரியான மக்களின் மனத்தில் மிகுந்த நம்பிக்கையையும் மரியாதையும் பெற்றிருந்த பௌத்தர்களை அந்த உன்னத இடத்திலிருந்து கீழே இறங்கவேண்டும் என்று பார்ப்பனர்கள் விரும்பினர். தங்களது இந்தக் குறிக்கோளை எய்துவதற்குப் பார்ப்பனர்கள் மற்றவர்களது கண்களில் மண்ணைத் தூவும் சாகசச் செயல்களில் ஈடுபடவேண்டியிருந்தது. தீவிரவாதத்தை தீவிரவாதத்தால், முள்ளை முள்ளால் எடுக்கும் நடவடிக்கையே இது. இடதுசாரிகளைச் சமாளிப்பதற்கு எல்லா வலதுசாரிகளும் வழக்கமாகக் கைக்கொள்ளும் தந்திரமே இது. பௌத்தர்களை முறியடிப்பதற்கு அவர்களைவிடவும் ஒருபடி மேலேசென்று மரக்கறி உணவாளர்களாக மாறுவதுதான் பார்ப்பனர்களுக்கு ஒரே வழியாக இருந்தது.

     பௌத்தத்தை ஒழித்துக்கட்டும் பொருட்டு பார்ப்பனர்கள் பசுவை வழிபட ஆரம்பித்தார்கள், இறைச்சி உண்பதைக் கைவிட்டு சைவ உணவாளர்களாக மாறினார்கள் என்ற கருத்தை உறுதிப்படுத்தும் மற்றோர் அம்சமும் இருக்கிறது. அதுதான் பசுவதை ஒரு பெரும் பாவமாகக் கருதப்பட்ட காலமாகும். பசுவைக் கொல்வதை அசோகர் ஒரு குற்றமாக ஆக்கவில்லை என்பதை ஏற்கெனவே பார்த்தோம். பசுவதையைத் தடைசெய்ய அசோகர் முன்வருவார் என்று பலர் எதிர்பார்த்தனர். அசோகர் அவ்வாறு செய்யாதது கண்டு பேராசிரியர் வின்சென்ட் வியப்படைகிறார். அனால் உண்மையில் இதில் வியப்படைவதற்கு எதுவுமில்லை.

     விலங்குகள் கொல்லப்படுவதை, வதை செய்யப்படுவதை பௌத்தம் பொதுவாக எதிர்த்துவந்தது. பசுவிடம் மட்டும் அது தனிப்பரிவு எதையும் காட்டவில்லை. எனவே பசுவைக் காப்பதற்கு ஒரு பிரத்தியேகச் சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் அசோகருக்கு ஏற்படவில்லை. இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவெனில், யாகத்துக்காக பசுக்கள் கொல்லப்படுவதை ஆதரிக்கும், அங்கீகரிக்கும் இந்துமதத்தின் தீவிர ஆதரவாளர்களான குப்த மன்னர்கள் பசுவதையை ஒரு மகாபாதகமாக, ஒரு மாபெரும் பாவமாக, ஒரு பெரும் குற்றமாகப் பிரகடனம் செய்ததே ஆகும். இது குறித்து திரு.பண்டகர் கூறுவதாவது: (பண்டைய இந்தியக் கலாசாரத்தின் சில அம்சம்கள், (1940) பக்கங்கள் 78-79.)

“ஒரு பசுவைக் கொல்வது ஒரு பார்ப்பனனைக் கொலை செய்வதற்கு இணையான ஒரு கொடிய குற்றமாக, பெரும் பாவமாக கி.பி.ஐந்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கருதப்பட்டுவந்தது என்பதைக் காட்டும் சர்ச்சைக்கிடமற்ற கல்வெட்டுச் சான்றுகள் இருக்கின்றன. இவ்வகையில் கி.பி.465 ஆம் ஆண்டு செதுக்கப்பட்ட ஒரு செப்புத் தகட்டை முக்கியமாகக் குறிப்பிடலாம். அது குப்த வம்சத்தைச் சேர்ந்த ஸ்கந்தகுப்தனின் ஆட்சிக்காலத்தைக் குறிக்கிறது. அந்தச் செப்புத் தகட்டில் பின்கண்ட ஆணை பொறிக்கப்பட்டிருக்கிறது: ‘இந்த ஆணையை மீறும் எவரும் ஒரு பசுவை, ஆன்மீக குருவை அல்லது ஒரு பார்ப்பனனைக் கொன்ற குற்றத்திற்கு ஆளாவர். இதற்கும் முந்தைய ஓர் ஆவணம் கோ-ஹத்யாவை (அதாவது பசுவதை) பிரமஹத்யாவுக்கு (அதாவது பார்ப்பனனது கொலையை) இணையானதாக்குகிறது; இந்தப் பட்டயம் நாம் மேலே குறிப்பிட்ட ஸ்கந்தகுப்தனது பாட்டனரான இரண்டாம் சந்திரகுப்தனது காலத்தைச் சேர்ந்ததாகும். இதில் காணப்படும் குப்த ஆண்டு 93 என்பது கி.பி.412 ஆம் ஆண்டைக் குறிக்கிறது. மத்திய இந்தியாவில் சாஞ்சியிலுள்ள புகழ்பெற்ற பௌத்த தூபியைச் சுற்றியிருக்கும் அழியடைப்புகளில் இந்த ஆவணம் செதுக்கப்பட்டிருக்கிறது. சந்திரகுப்தர் தனது அதிகாரி ஒருவர் அளித்த மான்யத்தைப் பற்றிக் கூறும் இந்தக் கல்வெட்டு பின்வருமாறு கூறுகிறது: “இந்த ஏற்பாட்டை மீறும் எவரும் ஒரு பசுவை அல்லது ஒரு பார்ப்பனனைக் கொன்ற குற்றத்துக்கும் ஐந்து ஆனந்தர்யாக்களை இழைத்த குற்றத்துக்கும் ஆளாவர்.” இங்கு இவ்வாறு கூறுவதன் நோக்கம் மானியத்தைப் பெறுபவர் அவரது இனத்தில் மிகப் பெரும்பாவங்கள் எனக் கருதப்படும் குற்றங்களைச் செய்தால் அவர் பார்ப்பனராக இருந்தாலும் சரி, பௌத்தராக இருந்தாலும் சரி தண்டனைக்கு உள்ளாவர் என்று எச்சரிப்பதேயாகும். இங்கு அனந்தர்யாக்கள் என்பது பௌத்த மதக்கோட்பாட்டின்படி ஐந்து மகாபாதகங்களைக் குறிக்கும்.

அவை வருமாறு: தாயைக் கொல்வது, தந்தையைக் கொல்வது, அர்ஹத்தைக் கொல்வது, ஒரு பௌத்தரின் இரத்தத்தைச் சிந்துவது, புரோகிதர்களிடையே பிளவை ஏற்படுத்துவது. இந்த மகாபாதகங்களில் பார்ப்பனனைப் பொறுத்தவரையில் இரண்டுதான் பொருந்தும்: ஒன்று பசுவதை செய்வது, மற்றொன்று ஒரு பார்ப்பனனைக் கொல்வது. பின்னால் குறிப்பிடப்பட்டது ஒரு மகாபாதகம் என்பது தெளிவு; ஏனென்றால் எல்லா ஸ்மிருதிகளிலும் இவ்வாறுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது; ஆனால் முன்னர் குறிப்பிட்டதோ ஆபஸ்தம்பர், மனு, யக்ஞவல்கியர் போன்றோரால் ஓர் உப பாதகமாகவே கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கு பசுக்கொலை பிரமகத்தி தோஷத்துடன் பிணைக்கப்பட்டிருப்பதும், இவை இரண்டும் பௌத்தர்களின் அனந்தர்யாக்களுக்கு இணையாக ஒப்பிடப்பட்டிருப்பதும் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அது மகாபாதங்களின் நிலைக்கு உயர்த்தப்பட்டதையே காட்டுகின்றன. இவ்வாறு, பசுவதை குறைந்தபட்சம் ஒரு நூற்றாண்டுக்கு முன்னமேயே அதாவது நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு மகாபாதகமாகக் கருதப்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.”

     இங்கு நியாயமாகவே ஒரு கேள்வி எழுகிறது: பசு வதைக்கு எதிராக அதாவது மனுதர்மத்திற்கு எதிராக ஓர் இந்து மன்னன் சட்டம் இயற்ற ஏன் முன்வரவேண்டும்? பௌத்த பிட்சுகளின் மேலாதிக்கத்துக்கு முடிவுகட்டும் பொருட்டு பார்ப்பனர்கள் தங்களது வேதமதத்தின் ஒரு கட்டளையை மீற வேண்டியதாயிற்று, அல்லது தவிர்க்க வேண்டியதாயிற்று என்பதே இக்கேள்விக்குப் பதிலாக இருக்கமுடியும். இந்தப் பகுப்பாய்வு சரியென்றால், புத்த மதத்துக்கும் பார்ப்பனியத்துக்கும் இடையே நடைபெற்ற போராட்டத்தின் விளைவே பசு வழிபாடு என்ற முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது. பார்ப்பனர்கள் தாங்கள் இழந்துவிட்ட அந்தஸ்தை மீண்டும் பெறுவதற்கு மேற்கொண்ட ஒரு வழிதான் இது என்று கூறலாம்.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14, இயல் 13)