(இந்தியத் தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் 1943 செப்டம்பர் 8 முதல் 17ஆம் தேதி வரை டில்லியில் நடைபெற்ற அகில இந்தியத் தொழிற்சங்க பயிற்சி முகாமின் இறுதிக் கூட்டத்தொடரில் நிகழ்த்தப்பட்ட உரை)

(இந்திய தொழிலாளர் சம்மேளனம் பிரசுரித்த உரை, 30, பெய்ஸ் பஜார், டில்லி, பிரதி வழங்கி உதவியவர் பம்பாயைச் சேர்ந்த திரு.ஆர்.டி.ஷிண்டே)

            ambedkar in bombayஇன்று மாலை உங்களிடையே வந்து உரையாற்றுமாறு எனக்கு அன்பான அழைப்பு விடுத்தமைக்காக உங்கள் செயலாளருக்கு என் பாராட்டுக்கள். இந்த அழைப்பை ஏற்க முதலில் நான் தயங்கினேன். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவதாக அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் நான் கூறக் கூடியவை மிகவும் குறைவு. இரண்டாவதாக நீங்கள் பெரிதும் ஆர்வம் கொண்டுள்ள தொழிற்சங்க இயக்கத்தைப் பற்றி நான் கூறக்கூடியதும் மிகச் சொற்பமே. “இல்லை, என்னால் வர இயலாது” என்று நான் கூறுவதை உங்கள் செயலாளர் ஒப்புக்கொள்ள மாட்டார் என்பதாலேயே இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன். மேலும், இந்தியத் தொழிலாளர்களின் ஸ்தாபன அமைப்புப் பிரச்சினை எப்போதுமே என் சிந்தனையில் தலையாய இடம் பெற்று வந்திருக்கிறது, எனவே இது குறித்து என் கருத்துகளை வெளியிடுவதற்கு இது ஓர் அருமையான வாய்ப்பு என்று நான் உணர்ந்தேன். தவிரவும், தொழிற்சங்க இயக்கத்தில் பிரதானமாக ஆர்வம் கொண்டிருப்போரையும் என் கருத்துகள் ஈர்க்கும் என்றும் கருதினேன்.

            மனித சமுதாயத்தின் அரசாங்கம் சில மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அடைந்துள்ளது. கொடுங்கோல் மன்னர்களின் எதேச்சதிகார வடிவத்தை மனித சமுதாயத்தின் அரசாங்கம் எய்தியிருந்த காலம் ஒன்று இருந்தது. இரத்தக் களறியான நீண்ட நெடும் போராட்டத்திற்குப் பிறகு, இந்த சாபக்கேடான அமைப்பு தூக்கியெறியப்பட்டு, நாடாளுமன்ற ஜனநாயகம் எனப்படும் ஒரு புதிய அரசமைப்பு அதன் இடத்தில் அமர்ந்தது. அரசாங்கக் கட்டமைப்பில் இதுதான் முடிந்த முடிவு என்று கூடக் கருதப்பட்டது. ஒவ்வொரு மனித ஜீவனுக்கும் சுதந்திரத்தையும், சொத்துரிமையையும், இன்பவாழ்வையும் நல்கும் பொற்காலத்தை இது கொண்டுவரும் என்றும் நம்பப்பட்டது. இத்தகைய நம்பிக்கைகளுக்கு போதிய ஆதார அடிப்படைகள் இருந்து வரவே செய்தன. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மக்களின் குரலை எதிரோலிக்க சட்டமன்றம் இருக்கிறது; அந்த சட்டமன்றத்திற்குக் கீழ்ப்பட்டதாக, அதன் ஆணைக்கு உட்பட்டதாக ஆட்சித்துறை இருக்கிறது. சட்டமன்றத்திற்கும் ஆட்சித்துறைக்கும் மேலே அவை இரண்டையும் கண்காணிக்கவும், நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் அவற்றை வைத்திருக்கவும் நீதித்துறை இருக்கிறது.

நாடாளுமன்ற ஜனநாயகம் ஒரு மக்கள் அரசாங்கத்துக்குரிய எல்லா அம்சங்களையும் பெற்றுள்ளது; அதாவது மக்களால் மக்களைக் கொண்டு மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கம் என்ற தகைமையை அது கொண்டிருக்கிறது. இவ்வாறு இருக்கும்போது, அது அகிலம் எங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒரு நூற்றாண்டு முடிவதற்குள்ளாகவே அதனை எதிர்த்துக் குரல் எழுப்பப்பட்டு வருவது ஓரளவு வியப்பளிக்கக்கூடிய விஷயமாக இருந்து வருகிறது. இத்தாலி, ஜெர்மனி, ரஷ்யா, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அதற்கு எதிராகக் கலகக் கொடி தூக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிராக அதிருப்தி தலை தூக்காத நாடுகள் வெகு சிலதான் என்றுகூடக் கூறலாம். நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிராக இவ்விதம் அதிருப்தியும் மனக்குறையும் தோன்றியிருப்பது ஏன்? இது பரிசீலனைக்குரிய ஒரு கேள்வியாகும். இந்தப் பிரச்சினையைப் பரிசீலிக்க வேண்டிய அவசர அவசியம் வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவில்தான் அதிகம் உணரப்படுகிறது. இது ஏன்? ஏனென்றால் நாடாளுமன்ற ஜனநாயகத்தை எய்துவதற்கு இந்தியா முயற்சி செய்துவருகிறது. “நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்; வெளிக்குத் தோன்றுவது போல் அது அப்படி ஒன்றும் மிகச் சிறந்த சரக்கல்ல” என்று இந்தியர்களிடம் கூறுவதற்குப் போதிய துணிச்சல் கொண்ட யாரேனும் ஒருவர் பெரிதும் தேவைப்படுகிறார்.

            நாடாளுமன்ற ஜனநாயகம் ஏன் தோல்வியடைந்தது? சர்வாதிகாரிகள் நாட்டில் அது தோல்வியடைந்ததற்கு மிகவும் மெதுவாக இயங்கக் கூடியதாக அது இருந்து வந்ததே காரணம். எத்தகைய விரைவான, துரிதமான நடவடிக்கை எடுப்பதையும் அது தாமதப்படுத்துகிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஆட்சித்துறைக்கு சட்டமன்றம் முட்டுக்கட்டைப் போடக்கூடும்; ஆட்சித் துறை விரும்பும் சட்டங்களை நிறைவேற்ற அது மறுக்கக்கூடும். அப்படியே சட்டமன்றம் அட்சித்துறையின் பாதையில் குறுக்கிடாவிட்டாலும் நீதித்துறை குறுக்கிட்டு அதன் சட்டங்களை செல்லாதவை என்று அறிவிக்கக்கூடும். இதேசமயம், சர்வாதிகாரம் சுதந்திரமாக செயல்பட நாடாளுமன்ற ஜனநாயகம் அனுமதிப்பதில்லை. சர்வாதிகாரிகள் ஆளுகின்ற இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி போன்ற நாடுகளில் இதனால்தான் நாடாளுமன்ற ஜனநாயகம் மதிப்பிழந்த ஒரு கோட்பாடாகக் கருதப்படுகிறது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தை சர்வாதிகாரிகள் மட்டுமே எதிர்த்தால் அது அப்படி ஒன்றும் கவலைப்படக் கூடிய விஷயமல்ல. ஏனென்றால் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரான அவர்களது சாட்சியம் உண்மையில் ஒரு சாட்சியமே அன்று. உண்மையைக் கூறினால் நாடாளுமன்ற ஜனநாயகம் சர்வாதிகாரத்துக்கு ஒரு வலுவான தடையரணாக இருக்கக்கூடுமாதலால் அது வரவேற்கப்படவே செய்யும். எனினும் சர்வாதிகாரத்தை எதிர்க்கும் மக்கள் வாழும் நாடுகளில் கூட துரதிர்ஷ்டவசமாக நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிராக மிகுந்த அதிருப்தி நிலவுகிறது. நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்து பெரிதும் வருந்தத்தக்க விஷயமாகும் இது. அதிலும் நாடாளுமன்ற ஜனநாயகம் எவ்வகையிலும் ஸ்தம்பித்துப் போய் நிற்காத நிலையில் இது மிகவும் இரங்கத்தக்க ஒன்றாகும். அது மூன்று திசைகளில் முன்னேறியிருக்கிறது. சமத்துவ அரசியல் உரிமைகள் என்னும் கருத்தை விரிவுப்படுத்தி அது முன்னேறியிருக்கிறது. வயது வந்தோர் வாக்குரிமையைப் பெற்றிராத நாடாளுமன்ற ஜனநாயகத்தை தன்னகத்தே கொண்ட நாடுகள் மிகச் சிலவே இருக்கின்றன. சமூக, பொருளாதார சமத்துவ வாய்ப்புக் கோட்பாட்டை அது அங்கீகரித்திருக்கிறது. மூன்றாவதாக, சமூக விரோத நோக்கம் கொண்ட கூட்டுரிமைக் கழகங்கள் அரசை முடமாக்கி செயலற்றதாக்க முடியாது என்பதை அது ஏற்றிருக்கிறது.

இவ்வாறெல்லாம் இருந்தும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ள நாடுகளில் கூட நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிராக கடும் எதிர்ப்பு உருவாகி இருக்கிறது. ஆனால் இத்தகைய நாடுகளில் நிலவும் அதிருப்திக்கான காரணங்கள் எதேச்சதிகார நாடுகளில் நிலவும் அதிருப்திக்கான காரணங்களிலிருந்து வேறுபட்டவையாக இருக்கக்கூடும் என்பது தெளிவு. இது குறித்து இங்கு விவரிக்க நேரம் இல்லை. எனினும் ஒன்றை மட்டும் பொதுப்படையான முறையில் கூறலாம்; அதாவது சுதந்திரத்துக்கும் சொத்துரிமைக்கும், சுபிட்ச வாழ்வுக்குமான உரிமையை பெருந்திரளான மக்களுக்கு உத்தரவாதம் செய்ய அது தவறிவிட்டதே இந்த அதிருப்திக்கு முக்கிய காரணம் என்று கூறலாம். இது உண்மையாயின், இந்தத் தோல்விக்கான காரணங்களைத் தெரிந்து கொள்வது முக்கியமாகும். இந்தத் தோல்விக்கான காரணங்களைத் தெரிந்து கொள்வது முக்கியமாகும். இந்தத் தோல்விக்கு தவறான சித்தாந்தமோ, அல்லது தவறான அமைப்பு முறையோ அல்லது இவை இரண்டுமோ காரணமாக இருக்கக்கூடும். இவை இரண்டுமே காரணமாக இருக்கும் என்பதுதான் எனது கருத்து.

நாடாளுமன்ற ஜனநாயகத்தைச் சிதைத்து சீர்குலைத்து விட்ட தவறான சித்தாந்தத்துக்கு இங்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைக் கூறினால் போதும் என்று நினைக்கிறேன். முதலாவதாக, ஒப்பந்த சுதந்திரம் என்னும் கருத்து நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாழ்படுத்திவிட்டது என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை. இந்தக் கருத்து சட்டத்தின் ஒப்புதலைப் பெற்றதோடு, சுதந்திரத்தின் பெயரால் அது நிலைநாட்டப்படவும் செய்தது. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை நாடாளுமன்ற ஜனநாயகம் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை; அதுமட்டுமல்ல, ஒப்பந்த சுதந்திரத்தின் விளைவாக ஏற்படக்கூடிய ஏற்றத்தாழ்வைப் பரிசீலிப்பதிலும் அது கவனம் செலுத்தவில்லை. ஒப்பந்த சுதந்திரம் வலுமிக்கவர்கள் வலுவற்றவர்களை ஏமாற்றுவதற்கும் வஞ்சிப்பதற்கும் வாய்ப்பளிப்பது பற்றியும் அது கவலைப்படவில்லை. இதன் விளைவு என்ன? சுதந்திரத்தின் பாதுகாவலனாக இருக்க வேண்டிய நாடாளுமன்ற ஜனநாயகம் ஏழை எளிய மக்களுக்கு, அடிமட்டத்தில் அமிழ்ந்து கிடக்கும் மக்களுக்கு, சொத்துரிமை பறிக்கப்பட்ட வர்க்கத்துக்கு மேன்மேலும் பொருளாதார தீங்குகளை, சீர்கேடுகளை, துன்ப துயரங்களை இழைத்து வந்தது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை சின்னாபின்னப்படுத்திய இரண்டாவது தவறான சித்தாந்தம் சமூக, பொருளாதார சுதந்திரம் இல்லாத இடத்தில் அரசியல் ஜனநாயகம் வெற்றிபெற முடியாது என்பதை நாடாளுமன்ற ஜனநாயகம் உணரத் தவறியதாகும். இந்தக் கூற்றை சிலர் ஏற்க மறுக்கக்கூடும். இத்தகைய சந்தேக பிராணிகளிடம் ஓர் எதிர்கேள்வி கேட்க விரும்பிகிறேன். இத்தாலி, ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளில் நாடாளுமன்ற ஜனநாயகம் ஏன் அவ்வளவு எளிதாக வீழ்ச்சியடைந்தது? அதேசமயம் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் அது ஏன் அத்தனை எளிதாகத் தகர்த்துவிடவில்லை?

என் அபிப்பிராயத்தில் இதற்கு ஒரே ஒரு பதில்தான் உள்ளது: முன்னர் குறிப்பிட்ட நாடுகளைவிட பின்னர் குறிப்பிட்ட நாடுகளில் பொருளாதார ஜனநாயகமும் சமூக ஜனநாயகமும் அதிக அளவில் இருந்ததே இதற்குக் காரணம். சமூக ஜனநாயகமும் பொருளாதார ஜனநாயகமும் அரசியல் ஜனநாயகத்தின் நரம்பும் நாளமும் ஆகும்; இந்த நரம்பும் நாளமும் உறுதியாக இருந்தால்தான் உடல் வலுமிக்கதாக, ஆரோக்கியமானதாக இருக்கும். ஜனநாயகம் என்பது சமத்துவத்துக்கு மற்றொரு பெயர். நாடாளுமன்ற ஜனநாயகம் சுதந்திர தாகத்தை, விழைவை கிளர்த்தி விட்டு விட்டது என்பதில் ஐயமில்லை. ஆனால் சமத்துவத்துக்கு ஆதரவாக அது ஒருபோதும் தலையசைத்தது கூட இல்லை. சமத்துவத்தின் முக்கியத்துவத்தை அது உணரத் தவறிவிட்டது. அதுமட்டுமல்ல, சுதந்திரத்துக்கும் சமத்துவத்துக்கும் இடையே ஒரு சமநிலையைத் தோற்றுவிப்பதற்குக் கூட அது, எத்தகைய முயற்சியையும் எடுத்துக் கொள்ளவில்லை. இதன் விளைவாக சுதந்திரம் சமத்துவத்தை விழுங்கி ஏப்பம் விட்டு விட்டது; அது மட்டுமன்று, இன்னும் எத்தனை எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள் தோன்றவும் வழிவகுத்து விட்டது.

            நாடாளுமன்ற ஜனநாயகம் தோல்வியடைந்ததற்கு தவறான கோட்பாடுகள் ஒரு காரணம் என்ற என் கருத்தை இதுவரை எடுத்துரைத்தேன். ஆனால் அதேசமயம் ஜனநாயகம் தோல்வியடைந்ததற்கு தவறான கோட்பாட்டை விடவும் மோசமான அமைப்பு முறை ஒரு காரணம் என்பதிலும் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. எல்லா அரசியல் சமுதாயங்களும் இரண்டு வர்க்கங்களாகப் பிரிந்துள்ளன: ஆளும் வர்க்கம் ஆளப்படும் வர்க்கம் என்பவையே அவை. இது ஒரு தீமையாகும். இந்தத் தீமை இத்துடன் நின்றிருந்தால் பரவாயில்லை. ஆனால் இதிலுள்ள மிகவும் துரதிர்ஷ்டவசமான அம்சம் என்னவென்றால், இந்தப் பிரிவினை ஒரே மாதிரியானதாகவும், படிநிலையில் அமைந்திருப்பதுமாகும்; இதனால் ஆளுபவர்கள் எப்போதும் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஆளப்படுபவர்கள் ஒருபோதும் ஆளும் வர்க்கமாக மாற முடியாதவர்களாகவும் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக மக்கள் தங்களைத் தாங்களே ஆள்வதில்லை; அவர்கள் ஓர் அரசாங்கத்தை அமைத்து அது தங்களை ஆள்வதற்கு விட்டுவிடுகின்றனர்; இது தங்கள் அரசாங்கம் இல்லை என்பதையும் மறந்துவிடுகின்றனர். இத்தகைய நிலைமையில், நாடாளுமன்ற ஜனநாயகம் மக்களது அரசாங்கமாகவோ அல்லது மக்களால் நடத்தப்படும் அரசாங்கமாகவோ ஒருபோதும் இருப்பதில்லை; இதன் காரணமாக அது மக்களுக்கான அரசாங்கமாகவும் எக்காலத்திலும் இருப்பதில்லை.

நாடாளுமன்ற ஜனநாயகம் ஒரு மக்கள் அரசாங்கத்துக்குரிய அம்சங்களைக் கொண்டிருந்தபோதிலும், உண்மையில் அது வழிவழியான ஓர் ஆளப்படும் வர்க்கத்தை வாழையடி வாழையான ஓர் ஆளும் வர்க்கம் ஆளுகின்ற ஓர் அரசாங்கமாகவே எப்போதும் இருந்து வருகிறது. அரசியல் வாழ்க்கை இவ்விதம் நேர்மைக்கேடாக, ஒழுக்கக்கேடாக நெறிபிறழ்வாக உருவாக்கப்பட்டிருப்பதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம் இவ்வாறு படுதோல்வியடைந்திருப்பதற்குக் காரணமாகும். மேலும் இதன் காரணமாகவே, சுதந்திரம், சொத்துரிமை, சுபிட்ச வாழ்வு ஆகியவற்றை சாமானிய மனிதனுக்கு உத்தரவாதம் செய்வதாக தான் அளித்திருந்த வாக்குறுதியை நாடாளுமன்ற ஜனநாயகத்தால் நிறைவேற்ற முடியவில்லை.

            இதற்கு யார் பொறுப்பு? இக்கேள்வி இயல்பாகவே இங்கு எழுகிறது. வறுமையிலும் வெறுமையிலும் வாடும் வர்க்கங்களுக்கு, ஓயாது ஒழியாது உழைக்கும் வர்க்கங்களுக்கு, அடக்கி ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கு நலம் செய்ய, நன்மை புரிய நாடாளுமன்ற ஜனநாயகம் தவறிவிட்டது என்றால் அதற்கு இந்த வர்க்கங்களே பிரதானமாக பொறுப்பாகும். முதலாவதாக, மனிதர்களின் வாழ்க்கையை உருவாக்குவதில் பொருளாதார அம்சத்துக்குள்ள முக்கிய பங்கை இந்த வர்க்கத்தினர் மிகப்பெருமளவுக்கு அலட்சியப்படுத்தி விட்டனர். ‘பொருளாதார மனிதனின் முடிவு’ என்ற தலைப்பில் யாரோ ஒருவர் அண்மையில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். பொருளாதார மனிதன் ஒருபோதும் பிறப்பதில்லை என்ற ஒரே காரணத்திற்காக பொருளாதார மனிதனின் முடிவு பற்றி உண்மையில் நாம் எதுவும் பேச முடியாது. மனிதன் ரொட்டியைக் கொண்டு மட்டுமே வாழ்வதில்லை என்று மார்க்சுக்கு பொதுவாக அளிக்கப்படும் மறுப்புரையில் துரதிர்ஷ்டவசமாக உண்மை பொதிந்துள்ளது என்றே கூற வேண்டும். பன்றிகளைப் போன்று மனிதர்களைக் கொழுக்க வைப்பதே நாகரிகத்தின் குறிக்கோள் அல்ல என்று கார்லைல் கூறியிருப்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் இந்த கட்டத்திலிருந்து நாம் வெகு தொலைவில் இருக்கிறோம். உழைக்கும் வர்க்கத்தினர் பன்றிகளைப் போல் தின்று கொழுத்திருக்கவில்லை; மாறாக அவர்கள் கவ்வும் குடலை இறுகப் பிடித்துக் கொண்டு பசிபட்டினியால் வாடிக்கொண்டிருக்கின்றனர். எனவே, முதலில் ரொட்டி மற்றவை எல்லாம் பின்னர்தான் என்று அவர்கள் கூறுவதில் நியாயம் இல்லாமலில்லை.

            வரலாற்றைப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் விளக்கும் சித்தாந்தத்தை மார்க்ஸ் முன்வைத்தார். இதன் தகைமை குறித்து காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றுவருகிறது. மார்க்ஸ் இதனை ஒரு சித்தாந்தமாக அன்றி தொழிலாளர்களுக்கு ஓர் அறிவுரையாகக் கூறினார் என்றே எனக்குத் தோன்றுகிறது; உடைமை வர்க்கத்தினரைப் போன்றே உழைக்கும் வர்க்கத்தினரும் பொருளாதார நலன்களுக்குத் தலையாய முக்கியத்துவம் அளிப்பார்களேயானால், வாழ்வின் பொருளாதார அம்சங்களை இப்போதுவிடப் பெரிதும் பிரதிபலிப்பதாக வரலாறு அமைந்திருக்கும் என்று அவர் கருத்துத் தெரிவித்தார். வரலாற்றைப் பொருளாதார நோக்கில் காணும் இந்த சித்தாந்தம் முழு அளவுக்கு எதார்த்தமாகவில்லை என்றால், கூட்டு சமுதாய வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் பொருளாதார அம்சங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க உழைக்கும் வர்க்கம் தவறியதே அதற்குக் காரணமாகும். மனித வர்க்க அரசாங்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள உழைக்கும் வர்க்கங்கள் தவறிவிட்டன. உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தற்கால சமூக, அரசாங்க ஒழுங்கமைப்பு குறித்த அடிப்படையான செயல்முறை ஆவணங்களை அவசியம் பரிச்சயம் செய்து கொள்ள வேண்டும். ரூசோவின் சமூக ஒப்பந்தம், மார்க்சின் கம்யூனிஸ்டு அறிக்கை, தொழிலாளர்களின் நிலை குறித்த போப்பாண்டவர் பதின்மூன்றாம் லியோவின் சுற்றுக் கடிதம், சுதந்திரம் பற்றிய ஜான் ஸ்டூவர்ட் மில்லின் நூல் ஆகிய நான்கையும் இவ்வகையில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். ஆனால் உழைக்கும் வர்க்கங்கள் இந்த ஆவணங்களின் பால் உரிய கவனம் செலுத்தத் தவறிவிட்டன. இதற்கு மாறாக, பண்டைய மன்னர்களையும் ராணிகளையும் பற்றிய புனை சுருட்டான கட்டுக் கதைகளைப் படிப்பதில் தொழிலாளர்கள் இன்பம் காணுகின்றனர்; இந்தக் கெட்டப் பழக்கத்திற்கு அடிமைகளாகி விட்டனர்.

            மற்றொரு மாபெரும் குற்றத்தையும் அவர்கள் தங்களுக்குத் தாங்களே இழைத்துக் கொண்டுள்ளனர். அரசாங்கத்தைக் கைப்பற்றும் ஆர்வ விருப்பம் எதையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை. தங்களது நலன்களைப் பாதுகாத்துக்கொள்ளும் ஒரு வழிமுறையாக அரசாங்கத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம் என்பதையும் கூட அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அரசாங்கம் குறித்து அவர்கள் எத்தகைய அக்கறையையும் கொண்டிருக்கவில்லை. மனித குலத்துக்கு நேர்ந்த எல்லா அவலங்களிலும் இதுதான் மிகப் பெரிதும், மிகமிக வருந்தத்தக்கதுமாகும். அவர்கள் எத்தகையதொரு அமைப்பை வரித்துக் கொண்டிருந்தாலும் அது தொழிற்சங்க வடிவத்தையே எய்திற்று. இதை வைத்து நான் தொழிற்சங்கங்களை எதிர்ப்பவன் என்று எண்ணிவிட வேண்டாம். அவை மிகவும் பயனுள்ள நோக்கத்தை நிறைவேற்றுகின்றன என்பதில் ஐயமில்லை. ஆனால் தொழிலாளர்களுக்கு நேர்ந்துள்ள எல்லாக் கேடுகளுக்கும் தொழிற்சங்கங்கள் சர்வரோக நிவாரணி, சஞ்சீவி மருந்து என்று நினைப்பது தவறாகும். தொழிற்சங்கங்கள் என்னதான் சக்தி மிக்கவையாக இருந்தாலும் முதலாளித்துவத்தை நேர்மையான வழியில் இட்டுச் செல்லும்படி முதலாளிகளை நிர்ப்ந்திக்கும் ஆற்றல், வலிமை அவற்றுக்கு இல்லை. அவை நம்பி இருக்கும்படியான ஒரு தொழிலாளர் அரசாங்கம் அவற்றுக்குப் பின்னால் இருந்தால் தொழிற்சங்கங்கள் இன்னமும் மிகவும் சக்தி படைத்தவையாக இருக்க முடியும். அரசாங்கத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே தொழிலாளர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும் அரசாங்கத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை தொழிற்சங்க இயக்கம் தனது நோக்கமாகக் கொண்டிருந்தாலொழிய தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு அதிக நன்மை ஏதும் செய்துவிட முடியாது; தொழிற் சங்கத் தலைவர்கள் தங்களுக்குள் ஓயாது சண்டை போட்டுக்கொண்டு சிண்டு பிடித்துக்கொள்ளும் ஒரு களமாகவே அவை இருந்துவரும்.

            உழைக்கும் வர்க்கங்களைப் பீடித்திருக்கும் மூன்றாவது பிணி தேசிய கோஷத்துக்கு மிக எளிதாக மயங்கிவிடுவதாகும். தொழிலாளர் வர்க்கத்தினர் எல்லா வகைகளிலும் வறியவர்களாக இருக்கின்றனர்; தங்களுடைய மிகக் குறைந்தபட்சத் தேவைகளையே நிறைவேற்றிக் கொள்ள இயலாதவர்களாக இருக்கின்றனர். அப்படியிருக்கும்போது தேசியம் என்று கூறப்படும் லட்சியத்துக்காக தங்களிடமிருக்கும் சகலவற்றையும் பல சந்தர்ப்பங்களில் தியாகம் செய்து விடுகின்றனர். தாங்கள் இவ்வளவு தியாகம் செய்யும் அந்த தேசியம் வெற்றி பெற்றுவிடும்போது அது தங்களுக்கு சமூக சுதந்திரத்தையும் பொருளாதாரச் சுதந்திரத்தையும் உத்தரவாதம் செய்யுமா என்று அறிய அவர்கள் ஒருபோதும் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. அதுமட்டுமல்ல, தேசியம் வெற்றிவாகை சூடி அதிலிருந்து உதயமாகும் ஒரு சுதந்திர அரசு, இவர்களது எண்ணற்ற தியாகங்களால் கருவாகி உருவான அரசு இவர்களது எசமானர்களின் ஆதிக்கத்துக்கு உள்ளாகி இவர்களுக்கே பகையானதாக மாறிவிடுவதைப் பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கிறோம். தொழிலாளர்கள் தங்களை இலக்காக்கிக் கொள்ளும் மிக மிகக் கொடிய சுரண்டல் வகையைச் சேர்ந்ததாகும் இது.

            எனவே, ஒரு நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின்கீழ் உழைக்கும் வர்க்கங்கள் வாழ நேரிடுமாயின் அதனை தங்கள் நலன்களுக்குச் சேவை செய்யக்கூடியதாக மாற்றுவதற்கான வழிமுறைகளை அந்த வர்க்கங்கள் வகுத்துக்கொள்ள வேண்டும். இந்தக் குறிக்கோளை எய்த வேண்டுமானால் இரண்டு காரியங்களை அது செய்ய வேண்டும் என்பது என் கருத்து. முதலாவதாக தொழிற்சங்கங்களை அமைப்பதை மட்டுமே இந்தியாவில் தொழிலாளர்களின் இறுதி லட்சியமாக, குறிக்கோளாகக் கொள்வதைக் கைவிட வேண்டும். அரசாங்கம் தொழிலாளர் கைகளுக்கு வருவதை தனது இலட்சியமாக அது பிரகடனப்படுத்த வேண்டும். இதன் பொருட்டு ஒரு தொழிலாளர் கட்சியை அரசியல் கட்சியாக உருவாக்க வேண்டும். இத்தகையதொரு கட்சி தொழிற் சங்கங்களையும் தனது அமைப்புக்குள் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இத்தகைய கட்சி தொழிற்சங்க இயக்கத்தின் குறுகிய, இடுங்கிய கண்ணோட்டத்திலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும். ஏனென்றால் பொதுவாக தொழிற்சங்கங்கள் இறுதி நலன்களை விட உடனடி நலன்களையும், தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த தொழிற்சங்கத் தலைவர்களுக்குள்ள உரிமையையும் வலியுறுத்துபவையாகவுமே இருக்கும். மேலும் தொழிலாளர்களின் இந்தக்கட்சி இந்து மகாசபை அல்லது காங்கிரஸ் போன்ற வகுப்பு வாத அல்லது முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் விலகி இருக்க வேண்டும்.

காங்கிரசோ அல்லது இந்து மகா சபையோ இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடி வருவதாக உரிமை கொண்டாடிவரும் கட்சிகள் என்பதற்காக அவற்றில் சேர வேண்டிய அவசியமோ அல்லது அக்கட்சிகளின் பரிவாரத்தினராக இருக்க வேண்டிய கட்டாயமோ தொழிலாளர்களுக்கு இல்லை. மாறாக, தொழிலாளர்களே தங்களது சொந்த அணிகளைக் கொண்ட ஒரு தனியான அரசியல் அமைப்பாக உருவாகி இந்த இரு நோக்கங்களுக்காகவும் பாடுபட முடியும். காங்கிரஸ் மற்றும் இந்து மகாசபையின் உடும்புப் பிடிகளிலிருந்து விடுபடுவதன் மூலம் அது இந்தியாவின் விடுதலைக்காக சிறந்த முறையில் போராட முடியும். அதேசமயம் தேசியத்தின் பேரால் தான் ஏமாற்றப்படுவதிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். இதை எல்லாம் விட முக்கியமாக இந்திய அரசியலில் நடைபெற்றுவரும் திருகுஜாலங்களுக்கு அது முற்றுப் புள்ளி வைக்க முடியும். இந்திய அரசியலில் இன்று எத்தகைய காட்சியைக் காண்கிறோம்? காங்கிரஸ்தான் ஒரு புரட்சிகர கட்சி என்று கூரை மீது ஏறி நின்று கூவி வருகிறது. அதனைப் பின்பற்றுபவர்கள் பெரும் எண்ணிக்கையில் இருப்பதற்கு இதுவே காரணம். ஆனால் அதேசமயம் காங்கிரஸ் அரசியல் ஏமாற்றத்தைத் தவிர வேறு எதையும் கொண்டுவரவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. காங்கிரஸ் அரசியல் பகுத்தறிவுக்கு ஒவ்வாது இருப்பதே இதற்குக் காரணம். அக்கட்சிக்கு சரியான போட்டி இல்லாததாலேயே அது தறிகெட்டுத் தாண்டவமாடுகிறது.

இந்நிலைமையில் இந்தியாவில் ஒரு தொழிற்கட்சி உதயமாகுமானால், கடந்த இருபதாண்டுகளாக இந்திய அரசியலில் கொட்டமடித்துவரும் அராஜக நிலைக்கு அது முடிவுகட்டும் இந்தியாவிலுள்ள தொழிலாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டாவது விஷயம் அறிவாற்றல் இல்லையேல் அதிகாரம் இல்லை என்பதாகும். இந்தியாவில் ஒரு தொழிற்கட்சி அமைக்கப்படுமானால், ஆட்சி பீடத்தில் தன்னை அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை அது வாக்காளர்களிடம் முன் வைக்குமானால், தொழிலாளர்கள் ஆட்சி செய்யத் தகுதியானவர்கள்தானா என்ற ஒரு கேள்வி எழும் என்பது நிச்சயம். மற்ற வர்க்கங்களைவிட தொழிலாளர்கள் மோசமாக ஒன்றும் ஆட்சி செய்யமாட்டார்கள் அல்லது உள்நாட்டு விவகாரங்களிலோ, அயல்நாட்டு விவகாரங்களிலோ அப்படி ஒன்றும் ஓட்டாண்டிகளாக நடந்து கொள்ள மாட்டார்கள் என்று நொண்டிச் சமாதானம் கூறுவது இக்கேள்விக்கு சரியான, முறையான, நேரிய பதிலாக இருக்க முடியாது. மாறாக, தொழிலாளர்கள் சிறப்பாக, திறம்பட ஆட்சி செய்ய முடியும் என்பதைத் திட்டவட்டமாக மெய்ப்பித்தாக வேண்டும். அதேசமயம் இதர வர்க்கங்களின் அரசாங்க பாணியைவிட தொழிலாளர்களின் அரசாங்க பாணி மிகவும் கடினமானது என்பதையும் மறந்துவிடக்கூடாது.

தொழிலாளர்களின் அரசாங்கம் வரைமுறையற்ற, கட்டுப்பாடற்ற அரசாங்கமாக இருக்க முடியாது. அது முக்கியமாக ஒரு கட்டுப்பாட்டு முறையில் அமைந்த அரசாங்கமாகவே இருக்கும். ஒரு சிறந்த கட்டுப்பாட்டு முறையை உருவாக்குவதற்கு அதிகளவு அறிவாற்றலும் பயிற்சியும் தேவை. இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள் படிப்பின் முக்கியத்துவத்தை உணரத் தவறிவிட்டது துரதிர்ஷ்டவசமானதாகும். இந்தியாவிலுள்ள தொழிற்சங்கத் தலைவர்கள் செய்திருப்பதெல்லாம் தொழிலதிபர்கள்மீது எவ்விதம் வன்மையோடு உக்கிரத்தோடு வசைபாட முடியும் என்பதைக் கற்றுக் கொண்டிருப்பதுதான். திட்டுவது, மேலும் மேலும் திட்டுவதுதான் ஒரு தொழிற்சங்கத் தலைவனது முழு முதல் கடமையாகி விட்டது.

            ஆகவே, இந்தியத் தொழிலாளர்கள் சம்மேளனம் இந்தக் குறைபாட்டை உணர்ந்து கொண்டிருப்பதையும், தொழிலாளர் வர்க்கங்களுக்காக இந்தப் பயிற்சி முகாம்களைத் தொடங்க முன்வந்திருப்பதையும் அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் ஆட்சி புரிவதற்கு தொழிலாளர்களைத் தகுதியுடையவர்களாக ஆக்க இந்தப் பயிற்சி முகாம்கள் சிறந்த சாதனங்களாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. ஒரு தொழிற்கட்சியைத் தொடங்க வேண்டிய அவசியத்தை சம்மேளனம் மறந்துவிடாது என்றும் நம்புகிறேன். இது செய்யப்படுமானால், ஆளும் வர்க்கத்தின் அந்தஸ்துக்குத் தங்களை உயர்த்தியமைக்காக தொழிலாளர் வர்க்கங்கள் சம்மேளனத்துக்குப் பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கும்.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It