தீண்டாமை குறித்த இனமரபுக்கோட்பாடு மனித உடலமைப்பு விஞ்ஞானத்தின் முடிவுகளுக்கு முரண்பட்டதாக இருப்பது மட்டுமன்றி, இந்தியாவின் இனங்கள் பற்றி நமக்குத் தெரிய வந்துள்ள விவரங்கள் இக்கோட்பாட்டை மறுதலிப்பவையாகவும் உள்ளன. இந்திய மக்கள் ஒரு காலத்தில் குலமரபை அடிப்படையாகக் கொண்டிருந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தக் குலமரபுக் குழுக்கள் சாதிகளாக மாறியபோதிலும் குலமரபு அமைப்பு முழுமை கெடாது இன்னமும் அப்படியே இருந்து வந்தது. ஒவ்வொரு குலமும் பல உட்பிரிவுகளாகப் பிரிந்தது. ஒவ்வொரு உட்பிரிவும் பல குடும்பக் கிளைகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு குடும்பக் கிளையும் உயிர்ப்பிராணி அல்லது சடப்பொருள் எதையேனும் குலமரபுச் சின்னமாகப் பெற்றிருந்தது. ஒரு பொதுவான குலமரபுச் சின்னத்தைக் கொண்டிருந்த குடும்பக் கிளைகள் யாவும் ஒரு குறிப்பிட்ட கோத்திரத்தை அல்லது குலத்தைச் சேர்ந்தவை என அழைக்கப்பட்டன. ஒரே கோத்திரத்தைச் சேர்ந்த குடும்பங்கள் தங்களுக்குள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. தங்கள் குருதி நாளங்களில் ஒரே இரத்தம் பாயும் ஒரே மூதாதையினரின் வழித் தோன்றல்கள் என்று கருதப்படுவதால்தான் இந்தத் தடை விதிக்கப்பட்டது. ஓர் இனத்தை நிர்ணயிப்பதற்கு உடலமைப்பு ஒரு சிறந்த சோதனையாக இருப்பது போன்று பல்வேறு சாதியினருக்கும் வகுப்பினருக்குமுள்ள குலமரபுச் சின்னங்களை வைத்தும் அவர்களது இனமரபை நிர்ணயிக்க முடியும்.
ஆனால் குலமரபுச் சின்னங்களையும் பல்வேறு வகுப்பினரிடையே அவை எவ்வாறு விநியோகிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் பற்றிய ஆய்வை சமூகவியலாளர்கள் அறவே புறக்கணித்திருப்பது துரதிருஷ்டவசமானதாகும். அகமண விதியின் அடிப்படையில் அமைந்த உப – சாதிய இந்து சமூக அமைப்பின் உண்மையான அடிப்படைக்கூறு என்றும், இந்து சமுதாயக் கட்டுமானத்தின் அடித்தளம் என்றும் குடிமதிப்பு ஆணையர்கள் தற்போது பரப்பி வரும் கருத்தே இந்தப் புறக்கணிப்புக்குப் பிரதான காரணமாகும். இதைவிட ஒரு பெரிய தவறு வேறு எதுவும் இருக்க முடியாது. இந்து சமுதாயத்தின் அடிப்படைக்கூறு உப-சாதி அல்ல. மாறாக புறமணவிதியின் அடிப்படையில் அமைந்த குடும்பமே இந்து சமுதாயத்தின் அடிப்படைக் கூறாகும். இந்தப் பொருளில் பார்க்கும்போது இந்துக் குடும்பம் அடிப்படையில் ஒரு குலமரபு அமைப்பே அன்றி உப – சாதியைப் போன்று ஒரு சமூக அமைப்பல்ல. திருமண விஷயத்தில் இந்துக்குடும்பம் குலம், கோத்திரத்தையே பிரதானமாகக் கணக்கிலெடுத்துக் கொள்கிறது. சாதியையும் உப-சாதியையும் இரண்டாம்பட்சமாகவே கருத்திற்கொள்கிறது. குலமும் கோத்திரமும் பூர்வீக சமுதாயத்தின் குலமரபுச் சின்னங்களுக்கு இணையானவை. இந்து சமுதாயம் அதன் ஒழுங்கமைப்பில் இன்னமும் குலமரபை ஆதாரமாகக் கொண்டிருப்பதையும், குலம் மற்றும் கோத்திரம் அடிப்படையில் அகமணத் தடை விதிகளைக் கடைப்பிடிக்கும் குடும்பத்தை அதன் அடித்தளமாகக் கொண்டிருப்பதையும் இது காட்டுகிறது.
இதில் அடிப்படையானது குடும்பமே தவிர உப-சாதியல்ல என்னும் உண்மையை ஒப்புக்கொள்வது முக்கியமானது என்பது தெளிவு. இந்து குடும்பங்களிடையே வழக்கிலிருக்கும் குலம் மற்றும் கோத்திரத்தின் பெயர்களை ஆராய்வதற்கு இது வழிவகுக்கும். இத்தகைய ஆராய்ச்சி இந்திய மக்களின் இன இயைபை நிர்ணயிப்பதற்கு மிகுந்த உதவியாக இருக்கும். ஒரே குலமும் கோத்திரமும் பல்வேறு சாதிகளிடையேயும் வகுப்புகளிடையேயும் இருப்பது தெரியவருமாயின் அந்த சாதிகள் சமூகரீதியில் வேறுபட்டவையாக இருந்தாலும் இன ரீதியில் ஒன்றேதான் என்று கூறுவது சாத்தியமாகக் கூடும். இத்தகைய இரண்டு ஆராய்ச்சிகள் ஒன்று மகாராஷ்டிரத்தில் திரு.ரைஸ்லியாலும் (இந்தியக் குடி மதிப்புப் புள்ளி விவரத் தொகுதி, இனப்பரப்பு விளக்கவியல் பின் இணைப்பு.) மற்றொன்று பஞ்சாப்பில் திரு.ரோஸாலும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. தீண்டப்படாதவர்கள் இனரீதியில் ஆரியர்களிடமிருந்தும் அல்லது திராவிடர்களிடமிருந்தும் வேறுபட்டவர்கள் என்ற கோட்பாட்டை இந்த ஆராய்ச்சிகள் அழுத்தம் திருத்தமாக மறுதலிக்கின்றன.
மகாராஷ்டிரத்தில் பெரும்பான்மையான மக்கட் தொகையினர் மராட்டியர்கள். மகர்கள் என்பவர்கள் மகாராஷ்டிரத்தின் தீண்டப்படாத மக்கள். இவ்விரு மக்களுமே ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மனிதஇன ஆராய்ச்சி புலப்படுத்துகிறது. மகர்களிடையே காணப்படாத ஒரு குலத்தை மராட்டியர்களிடையே காணுவதும், அதேபோன்று மராட்டியர்களிடையே காணப்படாத ஒரு குலத்தை மகர்களிடையே காணுவதும் மிக அரிது என்னும் அளவுக்கு இந்த ஒற்றுமை மிகவும் மேலோங்கி இருக்கிறது. இவ்வாறே பஞ்சாப்பில் பிரதானமாக இருப்பவர்கள் ஜாட்டுகள். அங்கு மஜபி சீக்கியர்கள் தீண்டப்படாதவர்களாக இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் சாதி அடிப்படையில் சாமர்களைச் சேர்ந்தவர்கள். இவ்விரு மக்களின் குலங்களும் ஒன்றே என்பதை மனித இன ஆராய்ச்சி காட்டுகிறது. இவ்வாறிருக்கும்போது தீண்டப்படாதவர்கள் வேறுபட்டதொரு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று எவ்வாறு வாதிடமுடியும்? நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று குலமரபுச்சின்னம், குலம், கோத்திரம் ஆகியவற்றுக்கு ஏதேனும் முக்கியத்துவம் இருக்குமானால் ஒரே மாதிரியான குலமரபுச் சின்னத்தைப் பெற்றிருப்பவர்கள் குருதி உறவு கொண்டவர்களாகத்தான் இருக்க வேண்டும். அவர்கள் குருதி உறவு கொண்ட உறவினர்களாக இருந்தால் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியாது.
எனவே, தீண்டாமையின் மரபுமூலம் குறித்த இனக்கோட்பாடு கைவிடப்பட வேண்டும் என்பது தெளிவு.
(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14, இயல் 7)