கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
மனித ஆரோக்கியம் மற்றும் சூழலைக் காக்க உலக நாடுகள் முதல்முறையாக பிளாஸ்டிக் உற்பத்தியை வரும் பதினைந்து ஆண்டுகளில் 40% குறைக்கும் தீர்மானத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன. கனடா ஒட்டாவா நகரில் ஏப்ரல் 23 முதல் 30, 2024 வரை நடந்த மாநாட்டில் ஐநா பன்னாட்டு அரசுகளுக்கு இடையில் பிளாஸ்டிக் மாசு குறைப்பிற்கான கமிட்டியைச் சேர்ந்த பிரதிநிதிகள், உற்றுநோக்கர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பிளாஸ்டிக் உற்பத்தியின்போது பெருமளவில் உமிழப்படும் கார்பனைக் குறைக்கும் இலட்சியத்தில் முன்னேற்றத்துடன் இது பற்றிய இந்த நான்காவது மாநாடு முடிந்தது.
இம்மாநாட்டில் ஒன்றுபட்ட கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை என்றாலும் உடன்படிக்கைக்கான ஒப்புதல் மொழியுடன் நிறைவடைந்துள்ளது. வரும் கூட்டங்களில் உடன்படிக்கையாக மாறவிருக்கும் ஆவணம் பற்றி விவாதிக்கப்பட்டது. பெரும்பாலான பிளாஸ்டிக்குகளும் புதை படிவ எரிபொருட்களில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் உற்பத்தி நாடுகள், நிறுவனங்கள், வாயு ஏற்றுமதியாளர்கள் குறைப்பை கடுமையாக எதிர்த்தபோதிலும் அதற்கான இலக்கு இறுதி ஆவணத்தில் சேர்க்கப்பட்டது.
உடன்படிக்கை மொழியுடன் ஒரு மாநாடு
ஒட்டாவா கூட்டம் முடிவடைந்தாலும் உடன்படிக்கை பற்றி இந்த ஆண்டு கடைசியில் தென்கொரியாவில் நடைபெறவிருக்கும் இறுதிச் சுற்று கூட்டத்திற்கு முன்பு , இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஆவணத்தை செயல்படுத்தும் பணிகளில் கமிட்டியினர் தொடர்ந்து செயல்படுவர். தென்கொரியா கூட்டத்தில் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த தேவையான நிதி மற்றும் பிளாஸ்டிக்குகளில் உள்ள வேதிப்பொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறித்த கணிப்பு, அவற்றின் வடிவமைப்பு பற்றி விவாதிக்கப்படும்.ருவாண்டா (Rwanda) மற்றும் பெரு ஆகிய நாடுகளின் உலகளவிலான குறைப்பிற்கான இலக்குடன் கூடிய பரிந்துரை இந்த கூட்டத்தில் ஏற்கப்பட்டது. இது பிளாஸ்டிக் கட்டுப்பாட்டில் ஒரு விடிவெள்ளி என்று கருதப்படுகிறது. இதன் மூலம் பிளாஸ்டிக் தயாரிப்பில் 2025ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு முதன்மை பாலிமர்களின் உற்பத்தியை வரும் பதினைந்து ஆண்டில் நாற்பது சதவிகிதம் குறைக்க முடியும். “யானையை அறைக்குள் வைத்திருப்பது (Elephant in the room) போல இது வரை ஆட்சியாளர்கள் பிளாஸ்டிக் உற்பத்தி குறைப்பு பற்றி பேசவில்லை” என்று ருவாண்டா பிரதிநிதி கூறினார்.
பிளாஸ்டிக் கூட்டமைப்பு (Plastic Co allition) இயக்கத்தைச் சேர்ந்த பல விஞ்ஞானிகள் இவற்றால் உண்டாகும் மாசு பற்றிய தங்கள் ஆய்வறிக்கைகளை பிரதிநிதிகளிடம் சமர்ப்பித்தனர். “கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் உடன்படிக்கையை உருவாக்கும் செயல்முறையில் பொதுவான ஒரு கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தனர். இந்த கூட்டங்களின் முடிவுகள் மனித குலத்தின் எதிர்காலம், பூமியின் வருங்கால நல வாழ்வை தீர்மானிக்கக் கூடியது” என்று ஈக்குவெடோர் பிரதிநிதி வால்ட்டர் ஷல்ட் (Walter Schuldt) கூறினார்.
பிளாஸ்டிக் கட்டுப்பாடு பற்றிய உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் டிசம்பர் 2022ல் ஆரம்பித்தன. மார்ச்சில் உருகுவேயில் ருவாண்டா மற்றும் பெரு நாடுகளின் பரிந்துரைகளுடன் தொடங்கின. மே 2023 பாரிஸ் பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் காணவில்லை. நவம்பரில் நைரோபியில் நடந்த கூட்டம் உடன்படிக்கைக்கான விதிமுறைகள் பற்றி விவாதித்தது. “தீவிர இரண்டாண்டு விவாதங்களைத் தொடர்ந்து உடன்படிக்கைக்கான ஒரு இறுதி ஆவணம் இப்போது உருவாகியுள்ளது” என்று சர்வதேச மாசு நீக்கத்திற்கான ஒருங்கிணைப்பாளர் பியேர்ன் பீலர் (Björn Beeler) கூறுகிறார்.
பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் மாசால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி லூசியானா, டெக்சாஸ் மாகாணங்களில் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அருகில் வாழும் பிளாஸ்டிக்கில் இருந்து விடுபடுவோம் (Breakfree from Plastic) என்ற இயக்கத்தின் மக்கள் சமூக பிரதிநிதிகள் அமெரிக்க அரசை உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி தபால் அட்டைகளைக் கொடுத்தனர். தாங்கள் அனுபவிக்கும் காற்று, நீர் மாசு பற்றி நேரில் வந்து பார்க்க பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தனர்.
நியூசிலாந்தில் இருந்து வந்த ஆதிவாசி குழுவினர் இப்பிரச்சனையால் நுண் பிளாஸ்டிக்குகள் உணவு விநியோகத்திலும் கலந்து விட்டது என்று கூறினர். “இது குறித்து பேச எங்களுக்கு உரிமையுண்டு. நாங்கள் பங்கேற்பாளர்கள் இல்லை. பிரச்சனைக்கு காரணமாக இருப்பவர்களை விட இது பற்றி பேசவும், முடிவெடுக்கவும் எங்களுக்கு முழு உரிமை தரப்பட வேண்டும். நியூசிலாந்தின் வடக்கு கடலோரத்தில் கடலடி மண்ணில், மீன்களில் ஏராளமான நுண் பிளாஸ்டிக்குகள் உள்ளன” என்று அந்நாட்டின் ஆதிவாசி சமூகப் பிரதிநிதி ஜூரசா லீ (Juressa Lee) கூறினார்.
வருங்காலத் தலைமுறையை காக்க
”உருவாகவிருக்கும் உடன்படிக்கை ஆதிவாசி சமூகங்களின் வருங்காலத் தலைமுறைகளை பாதுகாக்க வேண்டும். உலக மக்களின் மனசாட்சின் பிரதிநிதியாகவே நாங்கள் வந்திருக்கிறோம்” என்று அலாஸ்கா ஆர்க்டிக் ஆதிவாசி மக்கள் பிரதிநிதி வி வாக்கியி (Vi Waghiyi) கூறினார்.
விநியோகம் மற்றும் தேவை ஆகியவற்றின் பலன்கள் இந்த தீர்மானத்தின்படி மதிப்பிடப்படும். ஒட்டுமொத்தமாக முதண்மை பாலிமர்களின் உற்பத்தி நீடித்த நிலையான வளர்ச்சிக்கு உதவும் வகையில் வருங்காலத்தில் பிளாஸ்டிக்குகள் உற்பத்தி செய்யப்படுவது பற்றி ஆராயப்படும். மேலும் இந்த தீர்மானத்தின்படி பாலிமர்களின் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்த புள்ளிவிவரங்கள் வெளியிடுவது கட்டாயமாக்கப்படும்.
இலக்குடன் கூடிய இந்த கட்டுப்பாடு நடைமுறைக்கு வரும்போது புவி வெப்ப உயர்வை பந்நாட்டு சட்ட அங்கீகாரத்துடன் 1.5 டிகிரி செல்சியர்ஸிற்குள் கட்டுப்படுத்துவது பற்றிய 2015 பாரிஸ் காலநிலை உச்சி மாநாட்டின் தீர்மானம் போல இந்த உடன்படிக்கை மாறும். பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் நுகர்விற்கு இடையில் உள்ள இடைவெளியை நிரப்புவதன் மூலம் பிளாஸ்டிக்கின் வட்டப் பொறுளாதாரத்தை (circular economy) பாதுகாப்பான அளவிற்கு மாற்ற முடியும் என்று ருவாண்டா மற்றும் பெரு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வட்டப் பொருளாதாரம் என்பது உற்பத்தி, விநியோகம், நுகர்வு ஆகியவற்றில் மறுசுழற்சி, மறு பயன்பாட்டை முக்கிய அம்சமாகக் கொண்டது. 1950ல் உலக பிளாஸ்டிக்குகளின் உற்பத்தி 2 மில்லியன் டன்கள். இது 2017ல் 348 மில்லியன் டன்களாக உயர்ந்தது. 2040ல் பிளாஸ்டிக் தொழிற்துறையின் உற்பத்தித் திறனை இரு மடங்காகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 11 மில்லியன் டன்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் சென்று சேர்கின்றன. 2040ல் இந்த அளவு மூன்று மடங்காக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகியவை சூழல் சீர்கேட்டுக்கு முக்கிய காரணம். 2050ல் 21-31% கார்பன் உமிழ்வுக்கு இவற்றின் உற்பத்தி காரணமாக இருக்கும் என்று யு எஸ் லாரன்ஸ் பெர்க்லி (Lawrence Berkeley) ஆய்வுக்கூட விஞ்ஞானிகளின் ஆய்வு கூறுகிறது.
நிலக்கரியும் பிளாஸ்டிக்குகளும்
அமெரிக்காவில் 2030ல் நிலக்கரி பயன்பாட்டை விட பிளாஸ்டிக் உற்பத்தியே அந்நாட்டின் சூழல் சீரழிவுக்கு முதன்மைக் காரணமாக இருக்கும் என்று பிளாஸ்டிக்குகளுக்கும் அப்பால் (Beyond Plastics) என்ற சூழல் அமைப்பு 2021ல் நடத்திய ஆய்வு கூறுகிறது. 2022 நைரோபி கூட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பது பற்றி உலக நாடுகள் ஒப்புக்கொண்டன. இதற்கான உடன்படிக்கை இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தையில் உருவாகும் என்று நம்பப்படுகிறது.
175 நாடுகள் பங்கேற்ற ஒட்டாவா மாநாடு பிளாஸ்டிக் பாலிமர்களின் உற்பத்தி, விநியோகம், நுகர்வு நிலையில் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நிறைவு பெற்றுள்ளது. “40% குறைப்பு என்பது நல்லதொரு இலக்கு இல்லை. என்றாலும் உலக பிளாஸ்டிக் உற்பத்தியைக் குறைப்பதில் இது ஒரு முக்கிய முதல் நடவடிக்கை. இப்பொருட்களின் உற்பத்தியை சுருக்கி குறைத்து கட்டுப்படுத்தவில்லை என்றால் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாது” என்று உலக பிளாஸ்டிக் திட்ட பசுமை இயக்கத்தின் அமெரிக்க பிரிவைச் சேர்ந்த கிரஹாம் ஃபோர்ப்ஸ் (Graham Forbes) கூறுகிறார்.
பூமியையும் மனித குலத்தையும் பாதுகாக்க விரைவில் பிளாஸ்டிக் கட்டுப்பாட்டிற்கான ஒரு உடன்படிக்கை விரைவில் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் உலகம் காத்திருக்கிறது.
மேற்கோள்கள்: https://www.theguardian.com/environment/2024/apr/29/countries-reduce-plastic-production?
&
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- தமிழகன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
நீலமலை எனப்படும் நீலகிரி உலகின் மிக முதன்மையான இயற்கை உயிர்ச் சூழல் மண்டலங்களில் ஒன்றாகும். 1986 இல் இந்தியாவில் 14 இடங்களை உயிர்ச் சூழல் பாதுகாப்பு மண்டலமாக ஐக்கிய நாடுகள் அவையின் யுனெஸ்கோ அறிவித்தது. இதில் நீலகிரியும் ஒன்றாகும். சுமார் 5520சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள இப்பகுதி தமிழ்நாடு கர்நாடகம் மற்றும் கேரளாவை உள்ளடக்கியவையாகும்.
நீலகிரி கடல் மட்டத்திலிருந்து 900 முதல் 2636 மீட்டர் உயரத்தில் உள்ளது. நீலகிரியின் பரப்பளவு 2545 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011 ஆம் ஆண்டு கணக்குப்படி மக்கள் தொகை 7,35,394 ஆகும். தற்போது இந்த எண்ணிக்கை 10 முதல் 15 இலட்சம் வரை இருக்கலாம். ஆண்களின் எண்ணிக்கை 49.6 சதவீதம் ஆகவும் பெண்களின் எண்ணிக்கை 50.4 ஆகவும் உள்ளது.
நீலகிரியின் வரலாறு
நீலகிரி 1336 முதல் 1565 வரை விஜய நகரப் பேரரசின் கட்டுப்பாட்டிலும் 1565இல் மைசூர் அரசிடமும் இருந்தது. 1760 முதல் 1799 திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலி ஆட்சியில் இருந்தது. நீலகிரியில் கோத்தர், குரும்பர், பனியர், இருளர், தோடர், தொதவர் முதலிய பழங்குடி இன மக்கள் வசிக்கின்றனர். நீலகிரியில் 02.10.1995 அன்று பழங்குடியினர் அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது.ஆங்கிலேயர் ஆதிக்கம்
நீலகிரி 1799இல் கிழக்கிந்தியக் கம்பெனியின் கீழும் 1818 இல் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழும் வந்தது. அப்போதையக் கோயம்புத்தூர் ஆட்சியர் ஜான் சல்லிவன் 31.07.1819இல் கோத்தகிரியைக் கண்டறிந்தார். 1882இல் நீலகிரி மாவட்டம் ஆனது. 01.02.1882இல் ரிச்சர்ட் வெல்லஸ்கி நீலகிரியில் ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
தேயிலைத் தோட்டம்
கேமிலியா சினெஸ்கி எனப்படும் தேயிலை, சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட விதைகள் மூலம் 1835 இல் அறிமுகம் செய்யப்பட்டது. 1860 முதல் வணிகப் பயிர் ஆனது.
அரசுத் தேயிலைத் தோட்டக் கழகம் (TANTEA)
இந்தியாவின் தேயிலை உற்பத்தியில் 30 சதவீதம் நீலகிரியில் உற்பத்தி ஆகிறது. பெரும்பாலும் சிறு தனியார் தோட்டங்களே இருந்தன. இந்நிலையில் தமிழ் நாடு அரசு வனத்துறையின் கீழ் அரசுத் தேயிலைத் தோட்டக் கழகம் - TANTEA 1968 இல் அப்போதைய முதல்வர் கலைஞரால் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களுக்கு வேலை கொடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. சுமார் 4053.758 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. சுமார் 5000 தொழிலாளர் வேலை செய்தனர். தற்போது இதன் பரப்பளவு வெகுவாக குறைக்கப்பட்டதன் விளைவாக தொழிலாளர் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.
நீலகிரியின் இயற்கை வளங்கள்
நீலகிரி மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட உயிர்ச் சூழல் பாதுகாப்பு மண்டலமாகும். அடர்ந்த வனங்களும் அழகிய நீர் வீழ்ச்சிகளும் ஆறுகளும் பல அரிய வகை மூலிகைகளும் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் இடமாக நீலகிரி திகழ்கிறது.
குந்தா, சிகர்ஹல்லா, பைக்கரா, மாயாறு ஆகிய ஆறுகள் ஓடுகின்றன. குல்லக்கம்பி, ஹலஷனா, கேத்தரின், காக்பர்னின், பைக்கரா, கல்ஹட்டி, லாஸ்பால் ஆகிய நீர்வீழ்ச்சிகள் பாய்கின்றன.
நீலகிரியில்....
பூக்கும் தாவரங்கள் 3300 வகைகள்
பாலூட்டிகள் 100 வகைகள்
பறவையினங்கள் 350 வகைகள்
வண்ணத்துப்பூச்சிகள் 300 வகைகள்
நீர் நில உயிரினங்கள் 80 வகைகள்
மீன்கள் 39 வகைகள்
ஊர்வன 60 வகைகள்
தேசியப் பூங்காக்கள் 4
புலிகள் காப்பகங்கள் 4
யானை வாழிடங்கள் 3 உள்ளன.
நீலகிரி சோலைக்காடுகள்
நீலகிரியில் 1500 மீட்டர் உயரத்தில் சோலைக்காடுகள் அமைந்துள்ளன. இவை பெருமளவில் நீரை சேமித்து வைக்கின்றன. இந்த சோலைக்காடுகளில் இருந்து பவானி ஆறு உருவாகிறது. 1849 இல் 8600 ஹெக்டேர் சோலைக்காடுகளும் 29,875 ஹெக்டேர் புல்வெளிகளும் இருந்தன.தற்போது இவற்றின் பரப்பளவு வெகுவாகக் குறைந்து விட்டது.
நீலகிரி வரையாடுகள்
நீலகிரி வரையாடுகள் மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பாகும். 4000 அடி உயரத்திற்கு மேல் உள்ள மலைப்பகுதிகளில் மட்டுமே இவை வாழும். அக்டோபர் 7 ஆம் நாள் நீலகிரி வரையாடுகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. மலைப் பாதுகாவலன் என்று போற்றப்படும் இவை நீர்ப் பிடிப்புப் பகுதிகளை மேம்படுத்துவதிலும் சோலைக் காடுகளை பாதுகாப்பதிலும் முதன்மைப் பங்கு வகிக்கின்றன. நீலகிரி வரையாடுகள் தமிழ் நாட்டின் மாநில விலங்காகும்.
நிலைகுலையும் நீலகிரி
இயற்கையின் அற்புதமான நீலகிரியில் உள்ள இயற்கை வளங்கள் மிக வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு சுற்றுலா மிக முதன்மையான காரணமாக உள்ளது. 2022 இல் ஒரு நாளில் 10,000 சுற்றுலா வாகனங்கள் நீலகிரிக்குள் சென்றன. இது 2024 இல் நாளொன்றுக்கு 20,000 வாகனங்களாக அதிகரித்துள்ளது. ஒர் ஆண்டில் சுமார் 35 முதல் 50 லட்சம் பேர் நீலகிரிக்கு சுற்றுலா வருகின்றனர். உதகை நகரம் 90 ஆயிரம் பேர் வருவதற்கான பரப்பளவு மற்றும் அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்டுள்ளது. பல லட்சம் பேர் வருகையினால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. நீலகிரியில் சுமார் 1.5 லட்சம் டன் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்துள்ளன. ஏராளமான விடுதிகள் மலைச் சரிவுகளில் கட்டப்பட்டு வருவதால் அதிகளவு நிலச்சரிவு ஏற்படுகிறது.
அந்நியத் தாவரங்கள்
நீலகிரியில் தைலமரம் எனப்படும் யூகலிப்டஸ் மரங்கள் 1840 இலும் பைன் மரங்கள் 1886 இலும் சைப்ரஸ் மரங்கள் 1891 இலும் ஆங்கிலேயர்களால் நடப்பட்டது. ஓரினத் தாவரமான தேயிலைமயும் பெருமளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்த அந்நியத் தாவரங்களின் வளர்ச்சி காரணமாக சோலைக்காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டு விட்டன. சோலைக்காடுகள் அதிக அளவில் கார்பன் டை ஆக்சைடை உள்ளே எடுக்கும் ஆற்றல் வாய்ந்தவை என்பதால் இதன் அழிவு நீலகிரியின் சுற்றுச்சூழலை வெகுவாகப் பாதித்துள்ளது.
காட்டு விலங்குகளுக்கு உணவாக பயன்படும் சோலைக்காடுகளும் காளான்களும் அளிக்கப்பட்டதால் அவை உணவு கிடைக்காமல் ஊர்களுக்குள் புகுந்து விடுகின்றன.
உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட நகரங்களின் கழிவுகள் நீர் நிலைகளில் கொட்டப்படுகின்றன. அருவங்காடு துப்பாக்கிக் குண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து நைட்ரோ செல்லுலோஸ் மற்றும் நைட்ரோ கிளிசரின் கழிவுகள் சிறிய நீரோடையில் விடப்படுகின்றன. இவை சுமார் 5 கிலோமீட்டர் நீளம் ஆற்றில் பரவிக் கிடக்கிறது. நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் கிலோ லிட்டர் நீரோடையில் விடப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நீலகிரியைப் பாதுகாப்போம்..!
நீலகிரிக்கும் கொடைக்கானலுக்கும் அளவற்ற சுற்றுலா வாகனங்கள் செல்வதால் ஏற்பட்டுள்ளக் கடும் போக்குவரத்து நெருக்கடி மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் சதீஷ் குமார் மற்றும் பரத் சக்ரவர்த்தி ஆகியோர் நீலகிரிக்கும் கொடைக்கானலுக்கும் செல்லும் வெளியூர் வாகனங்களுக்கு இ.பாஸ் முறையை நடைமுறைப்படுத்துமாறு ஆணையிட்டுள்ளனர். இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.
தமிழ்நாட்டில் 59 சதவீதம் காடுகளைக் கொண்ட ஒரே மலை மாவட்டம் மட்டுமின்றி இயற்கை உயிர்ச் சூழலின் இருப்பிடமான நீலகிரியை அழிவிலிருந்து பாதுகாப்பது மிகவும் அவசரமும் அவசியமும் ஆகும்.
எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
#. சுற்றுலா வாகனங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்
#. சாலைகளை அதிக அளவில் விரிவுபடுத்தக் கூடாது.
#. கட்டுமானங்களை முறைப்படுத்த வேண்டும்
#. பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய வேண்டும்
#. அந்நியத் தாவரங்களை அகற்ற வேண்டும்.
#. தொழிற்சாலைகளை அனுமதிக்கக் கூடாது
#. மக்கள் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்
#. அருவங்காடு துப்பாக்கிக் குண்டுகள் தொழிற்சாலைக் கழிவு நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும்.
#. சோலைக்காடுகளை வளர்க்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்
#. புதிய நீர்மின் திட்டங்கள் மற்றும் அணைகளை அமைக்கக் கூடாது
#. வரையாடுகளைப் பாதுகாக்க வேண்டும்.
#. காடுகள் அழிக்கப்படுவது முற்றிலும் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அனைத்து வகையிலும் நீலகிரியின் இயற்கைச் சூழலைப் பாதுகாக்கும் முயற்சியில் அரசும் பொது மக்களும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
- தமிழகன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
அச்சுறுத்தும் காலநிலை மாற்றம் விரைவில் ஏராளமான மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வெப்பப் பேரிடரை உருவாக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து வரும் நிலையில் ஆட்சியாளர்கள் இதை சமாளிக்க உடனடியாக செயல்பட, வெப்பத்தாக்குதல் முன்னெச்சரிக்கைகள் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கம் (The International Federation of Red Cross and Red Crescent Societies (IFRC) யு.எஸ். பன்னாட்டு வளர்ச்சி உதவி முகமைடன் (the United States Agency for International Development (USAid) இணைந்து இது பற்றிய உலகின் முதல் உச்சிமாநாட்டை அண்மையில் நடத்தியது.
இந்த நிகழ்நிலை மாநாட்டில் இதுவரை செயல்படுத்தப்பட்டுள்ள வெப்பத்தை குறைக்க மரம் நடுதல், உட்புற வெப்பநிலையை குறைக்க பிரதிபலிப்பு மேற்கூரைகளை அமைத்தல் போன்ற திட்டங்கள் விவாதிக்கப்பட்டன. 2023ல் உச்சபட்ச வெப்ப உயர்வுக்குப் பிறகு உலக மக்கட்தொகையில் பாதி பேர் அதாவது 3.8 பில்லியன் மக்கள் ஆண்டில் ஒரு நாளேனும் உயிரும் உடலும் நொறுங்கும் அளவுக்கு நிலவிய கொதிக்கும் வெப்பநிலையை அனுபவித்தனர். ஹரிக்கேன், சுனாமி, நிலநடுக்கம் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது நிசப்த கொலையாளி என்று வர்ணிக்கப்படும் இந்தப் பேரிடர் உரிய முக்கியத்துவத்தைப் பெறவில்லை.
கற்பனைக் கதையும் கண்ணெதிரில் நடப்பதும்
இதில் அரசாங்கங்கள், உள்ளூர் நிர்வாகங்கள், மனிதாபிமான குழுக்கள், நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் உயர் வெப்பத்தை சமாளிக்க உதவும் வழிகள் பற்றி பேசப்பட்டது. புயல்களுக்குப் பெயரிடுவது போல வெப்ப அலை வீச்சுகளை பிரபலப்படுத்த அவற்றிற்கும் பெயரிடும் முறையை கொண்டு வருவது பற்றி விவாதிக்கப்பட்டது.“மில்லியன்கணக்கான இந்திய மக்களைக் கொன்ற வெப்பத்தாக்குதல் பற்றிய காட்சியுடன் தொடங்கும் கிம் ஸ்டான்லி ராபின்சனின் (Kim Stanley Robinson) வருங்கால அமைச்சரகம் (Ministry for the Future) என்ற அறிவியல் புனை நாவலில் கற்பனையாக கூறியுள்ளது. இதுபோல உண்மையில் இன்னும் பேரழிவு எதுவும் நடக்கவில்லை” என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இயக்குனர் ஜெனரல் ஜாகன் சாப்பகயின் (Jagan Chapagain) கூறுகிறார்.
மற்ற பேரிடர்களை விட வெளிப்படையாக கண்களால் பார்க்க முடியாத வெப்பத்தாக்குதல் மனித வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் திருடிச் செல்கிறது. இந்தப் பேரிடரால் மனித குலத்தின் கூட்ட மரணம் விரைவில் நிகழும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். பல உலக நாடுகளில் வெப்பம் மக்களின் துயரங்களுக்கு ஒரு முக்கிய காரணமாகிறது. அமெரிக்காவில் மற்ற பேரிடர்களால் ஏற்படும் உயிரிழப்புகளை விட இதனால் ஏற்படும் மரணங்கள் அதிகமாக உள்ளன.
ஆனால் இது திடீரென்று, மற்ற இடர்களைவிட மெதுவாக நிகழ்வதால் நம் புறக் கண்களால் இதன் தாக்கத்தை சுலபமாகப் பார்த்து உணர முடிவதில்லை. இதனால் இதன் தாக்கம் பற்றிய செய்திகள் மிகக் குறைவாகவே வெளிவருகின்றன. புயல்கள் போன்றவற்றால் ஏற்படும் இழப்புகள் போல் இல்லாமல் இதனால் ஏற்படும் இழப்புகளைக் கண்டறிய பல மாதங்கள் அல்லது பல ஆண்டுகள் ஆகிறது. நாற்பதாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட செஞ்சிலுவை சங்கத்தின் ரேடார் வரலாற்றில் இப்பேரிடர் செய்திகள் இப்போது அதிகமாக வருகின்றன.
வெப்ப அலையை சமாளிக்க 2018ல் முதல்முறையாக வட கொரியா, 2021ல் வியட்நாம், 2022ல் கிஜிக்ஸ்தான், தஜிக்கிஸ்தான், 2023ல் கிரீஸ், பங்களாதேஷ் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் நிதியுதவி கோரி அவசர அழைப்பு விடுத்தன. இந்த காலகட்டத்தில் வெப்ப அலைக்கான நிதியுதவியின் அளவு நான்கு மடங்கு உயர்ந்தது. புயல், நிலநடுக்கம் போன்ற பேரிடர்களுக்கு வழங்கப்படும் நிதியுடன் ஒப்பிடும்போது இந்த உதவி மிகக் குறைவே.
உயர் வெப்பத்தை சமாளிக்கும் உலகின் முன் மாதிரி நகரம்
இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் 2 டிகிரி வெப்பநிலை உயரும்போது ஏற்படும் உயிரிழப்புகள் நான்கு மடங்கு அதிகரிக்கும் என்று லேன்சட் (Lancet) என்ற பிரபல மருத்துவ ஆய்வு இதழ் கணித்துள்ளது. சீனாவில் ஆண்டிற்கு 20000 முதல் 80,000 வரை வெப்ப அலைகள் உருவாகும் என்று மற்றொரு புள்ளிவிவரம் கூறுகிறது. வெப்ப அலை பற்றிய தரவுகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. பல்வேறு வழிகளில் வெவ்வேறான தர நிர்ணய முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை துண்டுதுண்டான தரவு செய்திகளாக சேகரிக்கப்படுகின்றன. இதை மேம்படுத்துவதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கம்.
வெப்ப அலைவீச்சுகளால் 2023ல் பிரான்சில் 5,000, ஜெர்மனியில் 3,000, இங்கிலாந்தில் 2,295 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த நாடுகளில் மக்கட்தொகை குறைவு. மிகச் சிறந்த சுகாதாரத் துறை செயல்பாடுகள் இங்கு உள்ளன. இதே காலகட்டத்தில் இந்தியாவில் 179, பாகிஸ்தானில் 22, மலேசியா மற்றும் தாய்லாந்தில் இரண்டு பேர் மரணமடைந்துள்ளனர். குழப்பமும் குளறுபடிகளும் நிறைந்த அணுகுமுறையால் முரண்பாடான விவரங்கள் வெளியிடப்படுவதே இதற்குக் காரணம்.
உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குகள்படி 1998-2017 காலத்தில் 166,000 உயிரிழப்புகள் சம்பவித்துள்ளது. வெப்ப தாக்குதலால் உலக மக்கத்தொகையில் 10% மட்டுமே உள்ள, ஆசியாவை ஒப்பிடும்போது குறைவான வெப்பநிலையுடைய ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்தவர்களே மரணமடைந்தவர்களில் பாதி பேர். மிக பலவீனமான, எளிதில் பாதிக்கப்படக்கூடிய முதியோர், நோயாளிகள், திறந்தவெளியில் வேலை செய்யும் மக்கள் காற்றோட்ட வசதியில்லாத இடங்களில் வாழ்கின்றனர். இவர்கள் ஏழை நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
சியாரோ லியோன் நாட்டில் உள்ள ஃப்ரீ டவுன் நகரம் வெப்ப அலையை சமாளிப்பதில் உலகிற்கு முன் மாதிரியாக உள்ளது. இம்மாநாட்டில் பேசிய அந்நகரின் மேயர் இவானா-கிசாயேர் (Yvonne Aki-Sawyerr) வெப்ப அலை மேலாளரை (heat officer) நியமித்துள்ளார்.
இந்த நகரத்தில் அதிக பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய இடங்களை அடையாளம் காணுதல், வெப்ப அலை தாக்குதல் பற்றிய முன்னெச்சரிக்கை செய்திகளை வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் அனுப்புதல், திறந்தவெளி சந்தைகளில் நிழற்பரப்புகள் அமைத்தல், 2030ம் ஆண்டிற்குள் மரம் நடும் இயக்கத்தின் மூலம் குளிர்ச்சி தரும் 24 பெருவழிச் சாலைகளை உருவாக்குதல் போன்ற முன் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நகரின் 45% மக்கள் வாழும் குடிசைப் பகுதிகளில் கட்டிடங்கள் மீது சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடி படலங்கள் பொருத்தப்பட்ட மெல்லிய இரும்பு மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது கட்டிடங்களின் கீழ்ப்பகுதியில் வெப்பநிலையை 6% குறைக்க உதவியுள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
மேற்கூரை அமைக்கும் பணிகள் எளிமையானதில்லை. கடுமையான புயல்களின்போது சந்தைகளில் இருக்கும் நிழற்பரப்புகள் தூக்கி எறியப்படுகின்றன. இதனால் இவை நீண்ட காலம் தாக்குப் பிடிக்கும் பொருட்களால் கட்டப்பட வேண்டியுள்ளது. இதற்கான நிதியைக் கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது. என்றாலும் வெப்பத்தில் இருந்து பாதுகாக்கப்படுவது மக்களிடையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற திட்டங்கள் முன்பு செயல்படுத்தப்படவில்லை. புதிய தொழில்நுட்பங்களை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று இவானா-கிசாயேர் கூறுகிறார்.
வெப்பநிலையை சமாளிக்க குளிர்சாதன பேருந்துகள்
வெப்ப அலைக்குத் தயாராக இருக்க உதவும் செயல்களை செஞ்சிலுவை சங்கம் மேற்கொண்டு வருகிறது. ஹனாய் வியட்நாமில் மே 2023ல் ஏற்பட்ட ஒரு வெப்பத் தாக்குதலுக்கு முன்பு தன்னார்வலர்கள், தெரு வியாபாரிகள், இரு சக்கர வாகனங்களில் செல்வோர், வெளிப்புற வேலை செய்பவர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் குளிர்சாதன வசதியுடைய, குளிர்ச்சி தரும் நகரும் பேருந்துகளை நிறுத்தினர். குளிர்ந்த நீர் விநியோகம், அமர நிழல் தரும் இடங்கள் ஏற்படுத்தப்பட்டன.
வெப்பநிலை அடிக்கடி 45 டிகிரிக்கும் கூடுதலாக நிலவும், ஈரப்பதம் அதிகம் உள்ள நேபாளத்தில் உயரம் குறைவான தென்பகுதிகளில் தன்னார்வலர்கள் முன்னெச்சரிக்கை செயல்முறையை மேம்படுத்த, உள்ளூர் நிர்வாகத்தினர் குளிருந்த தங்குமிடங்களை அமைக்க, உயர்வெப்பநிலை சம்பவங்களின்போது மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வலியுறுத்திவருகின்றனர். 2023ல் உயர் வெப்பம் காரணமாக டெராய் (Terai) பகுதியில் பள்ளிகள் பல நாட்கள் மூடப்பட்டன.
“இளைஞர்களிடையில் இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என்று அந்நாட்டின் செஞ்சிலுவை சங்க பேரிடர் பிரிவு இயக்குனர் சாகர் ரெஸ்தா (Sagar Shrestha) கூறுகிறார். கூட்டத்தில் அரசுகள் இந்த பேரிடரை சமாளிப்பது பற்றிய வழிமுறைகளை சமூகங்கள், நகரங்கள், நிறுவனங்களுக்கு வழங்க உதவும் அதிதீவிர வெப்பநிலைக்கான செயல் மையத்தை ஏற்படுத்த ஒப்புக் கொண்டுள்ளன.
வெப்ப அலை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் உலகளவில் இரண்டு மாதங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜூன் 2 அன்று உலக வெப்ப அலை விழிப்புணர்வு நாள் கொண்டாடப்படும். மற்ற பேரிடர்கள் போல வருங்காலத்தில் செஞ்சிலுவை சங்கம் இந்த பேரிடர்ஐ குறைக்க உதவும் கருவிகள், திட்டமிடுதல்கள், உடனடி மீட்புப் பணிகள், வழிகாட்டுமுறைகளை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. மற்ற பேரிடர்கள் போல இதற்கு ஒரு நிலைப்படுத்தப்பட்ட வழிமுறை இல்லை. மனித குலம் இன்னும் இதற்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை.
உலகின் வெப்ப அலைத் தாக்குதல்கள் பற்றிய இந்த முதல் மாநாட்டின் மூலம் அறிவியல் புனைவாக எழுதப்பட்ட நாவலில் கூறப்பட்டுள்ளவை கற்பனையாகவே இருக்க இப்போதே மனித குலம் செயலில் இறங்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.
** ** **
மேற்கோள்கள்
&
https://www.ifrc.org/article/heatwaves-ifrc-global-heat-summit-tackle-invisible-killer
&
&
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
காற்றுமாசு Type2 வகை சர்க்கரை நோயை ஏற்படுத்துகிறது என்று இந்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. டெல்லி மற்றும் சென்னை நகரங்களில் குடியிருக்கும் 12,000 பேரிடம் ஏழாண்டு காலம் நடந்த ஆய்வில் இருந்து பி எம் 2.5 (PM 2.5-parts per million) அளவுள்ள துகள்களுக்கும் உயர் இரத்த சர்க்கரை அளவிற்கும் அதன் மூலம் Type2 சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நுண் துகள்கள் கலந்துள்ள மாசுக் காற்றை சுவாசிப்பதால் ஏற்படுகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் முதல் ஆய்வு
ஒரு முடியிழையின் முப்பதில் ஒரு பங்கு மெல்லிய அளவுடைய இந்த நுண் துகள்கள் இரத்த ஓட்டத்துடன் கலந்து பல சுவாசக் கோளாறு நோய்களையும், இதய நோய்களையும் ஏற்படுத்துகிறது. இந்தியாவில் 2010ல் தொடங்கி நடைபெறும் இந்த ஆய்வுகள் நாட்பட்ட நோய்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி ஆராய்கிறது. உலக சுகாதார நிறுவனம் உலகளவில் காற்றின் தரம் மிக மோசமாக இருக்கும் இந்தியாவில் சுற்றுப்புறத்தில் உள்ள பிஎம் 2.5 துகள்களுக்கும் Type2 சர்க்கரை நோய்க்கும் இடையில் இருக்கும் தொடர்பு பற்றி நடத்தும் முதல் ஆய்வு இது.டெல்லியில் பிஎம் 2.5 அளவு துகள்களின் சராசரி அளவு 80- 100 ம்யூ/எம்3. சென்னையில் இதன் அளவு 30-40 ம்யூ/எம்3. உலக சுகாதார நிறுவனம் வரையறை செய்துள்ள அளவு 5 ம்யூ/எம்3 மட்டுமே. இந்தியாவின் காற்றின் தேசிய தர அளவு 40 ம்யூ/எம்3. ம்யூ என்பது காற்றுமாசின் அளவைக் குறிக்க உதவும் ஓர் அலகு. இந்தியர்கள் ஏற்கனவே சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், தொற்றாத நோய்களால் அவதிப்படுகின்றனர். மக்கத்தொகையில் 11% அல்லது 101 மில்லியன் பேர் சர்க்கரை நோயுடன் வாழ்கின்றனர்.
சுமார் 136 மில்லியன் பேர் சர்க்கரை நோய் வரும் வாய்ப்புள்ளவர்கள் என்று பிரபல மருத்துவ இதழ் லேன்சட் (Lancet) வெளியிட்ட ஆய்வறிக்கை கூறுகிறது.
2019ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இது 6.2 சதவிகிதமாகவும் 2016ல் யு கேயில் இது 8.6 சதவிகிதமாகவும் இருந்தது. இந்தியாவில் முன்பு கணிக்கப்பட்டிருந்ததைவிட இப்போது சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம். இவர்களில் பெரும்பாலோரும் கிராமப் பகுதிகளை விட நகரங்களிலேயே அதிகமாக வாழ்கின்றனர் என்று லேன்சட் ஆய்வுகள் கூறுகின்றன.
பி.எம்.ஜே (BMJ) என்ற சர்வதேச மருத்துவ ஆய்வு அமைப்பால் டெல்லி மற்றும் சென்னையில் வாழும் 12,000 ஆண், பெண்களிடம் 2010 முதல் 2017 வரை குறிப்பிட்ட இடைவெளிகளில் சர்க்கரை அளவுகள் பரிசோதிக்கப்பட்டு இந்த ஆய்வுகள் நடந்தன. பி எம் ஜே என்ற மருத்துவ ஆய்விதழில் விவரங்கள் அடங்கிய அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. ஆய்வு நடந்த காலத்தில் ஆய்வில் பங்கேற்ற ஒவ்வொருவரின் வாழிடத்தில் அப்போது நிலவிய காற்றின் தரம் செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன் அளவிடப்பட்டது.
காற்று மாசு அதிகரித்தால் நோயும் அதிகரிக்கும்
பி எம்2.5 துகள்கள் கலந்துள்ள காற்று உள்ள இடங்களில் ஒரு மாதம் வாழ்ந்தவர்களிடம் இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாக காணப்பட்டது. இவர்கள் ஓராண்டு அல்லது அதற்கும் மேல் நுண் துகள் மாசினால் பாதிக்கப்படும் போது சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. ஒவ்வொரு 10 ம்யூ/எம்3 அளவு நுண் துகள்களால் ஏற்படும் பாதிப்பு அதிகமாகும் போது ஆண்டு சராசரி பிஎம்2.5 அளவில் உள்ள நிலையில் இரு நகரங்களிலும் சர்க்கரை நோய் வருவதற்கான ஆபத்து 22% அதிகரிக்கிறது.
“இந்தியர்களின் நோய்க் குறியியலின்படி (pathophysiology) குறைவான உடற்பருமன் அளவு (BMI) இருந்தாலும் உயர்ந்த அளவு கொழுப்பு எடுத்துக் கொள்ளப்படுவதால் மேற்குலக மக்களை விட சர்க்கரை நோய் இந்தியாவில் அதிகமாக உள்ளது” என்று ஆய்வுக்குழுவின் முன்னணி ஆய்வாளர் மற்றும் டெல்லி நாட்பட்ட நோய்க்கட்டுப்பாட்டு மையத்தின் நிபுணர் சித்தார்த்த மேண்டல் (Siddhartha Mandal) கூறுகிறார்.
40% மக்களிடம் சர்க்கரை நோய் கண்டுபிடிக்கப்படாமலேயே போகிறது என்று மற்றொரு உலகளவிலான ஆய்வு கூறுகிறது. “கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் ஏற்பட்ட வாழ்க்கை முறை மாற்றங்களால் சூழல் மாசிற்கு ஒரு காரணமாக மட்டும் இருந்த காற்று மாசு இப்போது சர்க்கரை நோய் உயர்விற்கும் முக்கியக் காரணியாக மாறியுள்ளது.
கிராமப்பகுதி மக்களை விட நகர்வாழ் இந்தியர்களிடையில் உடற்பருமன், உணவு மற்றும் உடற்பயிற்சிக் குறைவு போன்றவற்றால் சர்க்கரை நோய் அதிகமாக இருந்தது என்று இது வரை கருதப்பட்டது. ஆனால் இந்த ஆய்வு முடிவுகள் காற்று மாசும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்பதை நிரூபித்துள்ளது” என்று ஆய்வுக்குழு ஆசிரியர்களில் ஒருவரும் சென்னை சர்க்கரை நோய் ஆய்வு அறக்கட்டளையின் தலைவருமான டாக்டர் வி மோகன் (Dr V Mohan) கூறுகிறார்.
காற்று மாசும் இரத்த அழுத்தமும்
டெல்லியில் இந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடம் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் ஆண்டு சராசரி காற்று மாசின் அளவு 90 ம்யூ/எம்3 ஆக இருக்கும்போது இரத்த அழுத்த உயர்வு மற்றும் அதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பாதுகாப்பான அளவை விட அதிகமாக பி எம் 2.5 துகள்கள் காணப்படும் இந்திய நகரங்களில் மக்களுக்கு அதிகமாக சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
இது ஆத்தராச்குலரோசிஸ் (atherosclerosis) என்ற நிலையை ஏற்படுத்துகிறது. பெருந்தமனி தடிப்பு என்றும் இது அறியப்படுகிறது. ஆத்தராச்குலரோசிஸ் என்பது தமனிகளின் உட்புறச்சுவரில் கொலஸ்ட்ரால், கொழுப்புப் பொருட்கள் படிந்து அவற்றின் உட்புறம் தடிமனாகி வீக்கம் உருவாவதைக் குறிக்கிறது. இது ஒரு நீண்டகால அழற்சி நோய். இதனால் மாரடைப்பு மற்றும் இதயத்தின் இயக்கம் பாதிக்கப்படுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
“பி எம் 2.5 துகள்களில் சல்பைடுகள், நைட்ரைடுகள், கன உலோகங்கள் மற்றும் இரத்தத் திசுக்களை பாதித்து இதயத் தமனிகளை இறுக்கமடையச் செய்யும் கறுப்பு கார்பன் போன்றவை அடங்கியுள்ளன. இவை கொழுப்பு செல்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதய தசைகளை நேரடியாகப் பாதிக்கிறது” என்று நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர், ஆய்வறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவர் மற்றும் இதய சிகிச்சை வல்லுனர் டாக்டர் துரைராஜ் பிரபாகரன் (Dr Dorairaj Prabhakaran) கூறுகிறார்.
நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டைப் பாதிக்கும் காரணியாக உள்ள பி எம்2.5 துகள்கள் உடலில் இன்சுலின் சுரப்பு மற்றும் அதன் செயல்பாட்டைப் பாதிக்கிறது. இந்திய நகரப் பகுதிகளில் ஹைப்போ தைராய்டு நோய் குறைபாடு (hypothyroidism), கருப்பையில் நீர்க்கட்டிகள் தோன்றும் குறைபாடு (polycystic ovarian syndrome (PCOS) மற்றும் கர்ப்பகால நீரிழிவு (gestational diabetes) போன்ற குறைபாடுகள் அதிகரிக்கின்றன. காற்று மாசு உடலில் எல்லா ஹார்மோன்களையும் சுரக்கும் நாளமில்லா சுரப்பிகளைப் பாதிக்கிறது.
காற்று மாசு உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் மற்றும் வைட்டமின் டி நிலையில் செலுத்தும் தாக்கம், அதனால் தனிநபர் வாழ்க்கைச் சுழற்சியில் பிறந்தபோது இருந்த எடை, கருவுற்றிருக்கும் பெண்களின் ஆரோக்கியம், வயது வந்தவர்களில் இன்சுலினுக்கு எதிர்ப்பாற்றல், பார்க்கின்சன் மற்றும் ஆல்சைமர்ஸ் (Alzheimer’s) உள்ளிட்டவற்றால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி நிபுணர்கள் இப்போது ஆராய்ந்து வருகின்றனர்.
இது எச்சரிக்கை அளிப்பதாக இருந்தாலும் காற்று மாசைக் குறைத்து, அதன் மூலம் சர்க்கரை நோய் பாதிப்பையும் வாழ்க்கை மாற்றங்களால் ஏற்படும் மற்ற நோய்களையும் குறைக்க இந்த ஆய்வுகள் உதவும். 2016ல் காற்றுமாசு உயர்விற்கு எதிராக உருவான மக்கள் எதிர்ப்பால் மத்திய மற்றும் டெல்லி அரசுகள் பழைய டீசல் வாகனங்களுக்குத் தடை விதித்தது, கட்டுமானங்களைக் கட்டுப்படுத்தியது, சாலைகளை மேம்படுத்தியது, புறவழிச் சாலைகளை அமைத்தது, வேளாண் கழிவுகளை எரிக்கத் தடை விதித்தது போன்ற கொள்கை முடிவுகளால் 2016-2021 காலத்தில் பிஎம்2.5 மாசின் அளவு 22% குறைந்தது.
காற்று மாசு முற்றிலும் குறையவில்லை என்றாலும் இது வரவேற்கத்தக்கது. இது போன்ற உள்ளூர் அளவிலான நடவடிக்கைகள் நாடு முழுவதும் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதினாறு மில்லியன் டாலர் இழப்பு
- கப்பல்கள் உடைக்கப்படும்போது...
- மாண்ட்ரீல் மாநாடு முடிந்து ஓராண்டிற்குப் பிறகு...?
- காலநிலை மாநாடு - வெற்றியா தோல்வியா? துபாயில் நடந்ததென்ன?
- உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் புவி வெப்ப உயர்வு
- மழைக் காடுகளைக் காக்க ஓர் உச்சி மாநாடு
- பிளாஸ்டிக் கட்டுப்பாட்டில் ஒரு புதிய நம்பிக்கை
- புவி வெப்ப உயர்வைக் குறைக்க உதவும் மண்
- சூழலுக்காக உயிர் கொடுத்தோர்
- சூடாகும் நகரங்கள்
- எர்த்ஷாட் விருது இந்தியாவிற்கும்
- மரம்
- சூழலியல் மேம்பாட்டில் திமுக அரசு
- மண்வளம் குறைந்தால் மனிதன் அழிவான்
- 2021 ஐந்தாவது வெட்பமான ஆண்டு
- திரைசீலை விழுந்த காலநிலை உச்சி மாநாடு
- புவி வெப்ப உயர்வு: அடைபடும் சாளரங்கள்
- Fukushima அணு உலை விபத்து - பத்தாண்டுகள் கடந்து அங்கு நிலவும் சூழல் என்ன?
- மரண பள்ளத்தாக்கில் பதியப்பட்ட பூமியின் அதிகபட்ச வெப்பமும், கலிபோர்னியாவின் காட்டுத் தீ காலமும்
- கடல் பகுதிகளை அச்சுறுத்தும் கச்சா எண்ணெய் - சுற்றுச்சூழல் பாதிப்பில் மொரிஷியஸ் தீவுகள்