ishinomaki japanபத்தாண்டுகளுக்கு முன்னர் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி பேரலை போன்ற இயற்கை பேரிடரால் கிழக்குக் கடற்கரையை ஒட்டியப் பகுதிகளை புரட்டிப் போட்டது.

அதோடு மட்டுமல்லாமல் புகுஷிமா அணு உலைகளில் ஏற்பட்ட விபத்து நவீன வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய Industrial disaster - ஆக கருதப்படுகின்றது. ஜப்பானிய மக்கள் இந்த நிகழ்வுகளை 3/12 என்று அதனை நினைவூட்டும் விதமாக அழைக்கின்றனர்.

இப்போது அந்தப் பகுதியின் நிலை என்ன? இந்த கோரச் சம்பவத்தில் இருந்து உலகம் கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன? மக்கள் அங்கு மீண்டும் குடியேற முடியுமா? என பல்வேறு கேள்விகள் இருக்கின்றன.

சுருக்கமாக அந்த வரலாற்று நிகழ்வுகளைப் பார்ப்போம்,

அணு உலை விபத்து:

2011ஆம் ஆண்டு மார்ச் 11, அதிகாலை 2:46 மணியளவில், ஜப்பானின் Sendai என்ற நகரின் மத்தியில் நிலநடுக்கம் (9.0 magnitude) ஏற்ப்பட்டது. நகரின் பல கட்டிடங்கள் வீடுகள் அதிர்ந்து பாதிப்புக்குள்ளாகின. நிலநடுக்கத்தின் தாக்கம் அந்நாட்டின் வடகிழக்கு கடற்கரையில் அதிகாலை 3:42 மணி அளவில் சுனாமி ஏற்ப்பட்டது.

சுமார் 62 அடி உயரத்தில் கடல் அலைகள் உயர்ந்து வீசியது. சுனாமியின் தாக்குதல் 240 மைல்கள் அளவில் கடற்கரையையும் நிலப்பரப்பையும் சேதப்படுத்தியது. இதில் இருபதாயிரம் மனித உயிர்கள் பலியாகியுள்ளன, சில ஆயிரம் மக்கள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

மனித உயிர்கள் மட்டுமல்லாமல் பிற உயிரினங்களும் பலியாகின. ஏறத்தாழ 42,000 மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு குடிபெயர்ந்து இருக்கிறார்கள். பத்தாண்டுகள் ஆகியும் அம்மக்களை மீண்டும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்ப அரசு மறுத்திருக்கிறது. ஜப்பானிய வரலாற்றில் இதுபோன்ற மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதற்கு முன்னர் பதிவாதியது இல்லை என்றே தரவுகள் தெரிவிக்கின்றன.

சுனாமி பேரலையின் தாக்குதலுக்கு புகுஷிமா - டாய்ச்சி அணுவுலையும் (Fukushima Daiichi nuclear power station) சேதமடைந்தது. அணு உலை அமைந்திருக்கும் இடம் புகுஷிமா மாவட்டத்தில் உள்ள Tomoka - Naraha எனும் இரண்டு நகரங்களின் மத்தியில் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது.

சுனாமி ஏற்பட்ட அடுத்தடுத்த நேரத்தில் (அதிகாலை 3:30) அணு உலையின் உள்ளே (Power failure) மின்சாரம் தடைபட்டது. மின்சாரம் தடைப்பட்டால் அணு உலையின் ஜெனரேட்டர்கள் ஓடத் தொடங்கி அவசரகால மின்சாரத்தை கட்டுப்பாடு அறைக்கும் குளிரூட்டும் சாதனங்களுக்கும் செல்லும்.

கடல் நீர் உள்ளே புகுந்ததால் அலகு 1,2 இவ்விரண்டிலும் மின்கலங்கள் மொத்தமாக செயல் இழந்து விட்டது. இதனால், குளிரூட்டும் கருவிகள் செயல் இழந்தது. அணு உலையின் யுரேனியம் சுவர்களில் ஏற்படும் வெப்பம் சுழற்சி முறையில் வெளியேற்றம் நடைபெறவில்லை.

வெளியில் இருந்த Heat exchanger வேலை செய்யும் சூழல் இல்லாததால் Reactors pressure vessel (RPV) களில் அதிகப்படியான நீராவி உருவாகியது இது மேலும் அதிகப்படியான அழுத்தத்தை reactors உள்ளே ஏற்ப்படுத்தியது.

விளைவு அணு உலையின் ஒட்டுமொத்த ஓட்டமும் நின்றுவிட்டது, மிகப் பெரிய விபத்து. (a catastrophic failure) ஆனால், மூன்றாவது அலகில் 30 மணி நேரங்களுக்கு மின்கலங்கள் கட்டுப்பாடு அறைக்கு மின்சாரத்தை கொடுத்திருக்கிறது.

அன்றைய இரவு 7:03 மணி அளவில் அணு உலையில் அவசரகால பிரகடனம் செய்யப்பட்டது. 7:30 மணிக்கு fuel rod வெடித்ததில் வெப்பநிலை 2800°C க்கு உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து சுற்றுவட்டப் பகுதியில் உள்ள மக்களை வெளியேற அறிவிப்பு வெளியிட்டார்கள். உடனடியாக 20 கிலோமீட்டர் பரப்பளவில் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

மார்ச் 12 ஆம் தேதி, நிலநடுக்கம், சுனாமி ஏற்பட அடுத்தநாள் மதியம் 3:30 மணிக்கு அணு உலையின் ஒன்றாவது அலகில் உள்ள reactors containment -ல் ஹைட்ரஜன் வெடித்து சிதறியது. வெடித்து சிதறிய ஹைட்ரஜன் காற்றுடன் கலந்து எரியத் தொடங்கியது.

உலையின் உள்ளே வெப்பநிலை உயர்ந்தது. ஒன்றாவது அலகின் Corium, fuel and control rods முற்றிலுமாக சேதமடைந்தது. இந்த தாக்கம் மே மாதம் வரையில் இதனுள் 1.8 MW அளவில் வெப்பம் உள்ளே இருந்தது. அணு உலை அலகு 2 மற்றும் 3 அதன் உற்பத்தி தடைபட்டு உலைகள் செயலிழந்தது.

இது சமீபத்திய வரலாற்றில் நிகழ்ந்த மிக மோசமான ஒரு அணு உலை விபத்து என்று கூறினார்கள். அதில் மற்ற இரண்டு அலகுகள் 4,5 உடனடியாக நிறுத்தப்பட்டது.

ஜப்பானில் மின்சார சேவைகள் வழங்கும் Tokyo Electric Power Corporation (TEPCO) என்ற அமைப்பு தான் ஜப்பானில் அணு உலைகளை கண்காணித்து வருகிறது. அணு உலை விபத்து தொடர்பான சுயாதீன விசாரணையில், அந்த விபத்துகள் நிலநடுக்கம்/சுனாமியால் ஏற்பட்டது அல்ல அங்கு பணியாற்றிய ஊழியர்கள் தவறாக முறையில் இயக்கியதே காரணம் (as human made error) என்றது. அதன் விளைவு பாதுகாப்பு வழிமுறைகளை சரியாக கையாளவில்லை என்றது.

பாதிப்படைந்த அணு உலையின் உள்ளே 900 டன் சிதைவடைந்த யுரேனியம் இன்னமும் உள்ளே தான் இருக்கிறது. இதன் கழிவுகள் அகற்ற மேலும் முப்பது முதல் நாற்பது ஆண்டுகள் வரை ஆகலாம் என்று கூறுகிறார்கள் நிபுணர்கள். அணு உலையை சுற்றியுள்ள இடிபாடுகளை அகற்றுவதற்கு ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 4000 ஊழியர்கள் என்றளவில் பணி அமர்த்தி அகற்றினார்கள்.

அதற்கென கதிர்வீச்சு தாக்காத உடைகள் கால்களில் மூன்று அடுக்காக துணிகள் என்று முழுமையான பாதுகாப்பு முறைமைகள் கையாளப்பட்டது. சிதைவடைந்த யுரேனியம் அங்குள்ள கான்கிரீட் சுவர்கள் மீதும் கலந்திருப்பதால் அவற்றை அகற்றுவது மிகவும் கடினமானச் சவாலாக இருக்கிறது.

இதனை அகற்றுவதற்கு மனிதர்களை உள்ளே அனுப்புவது சிக்கலான காரியமாக இருப்பதால் அங்கே ரோபோக்கள் உதவியுடன் யுரேனியம் கலந்த தண்ணீரை அகற்ற இயந்திரங்களை உள்ளே அனுப்பினார்கள். எனினும் அணு உலையின் கதிர்வீச்சு தண்ணீர் இன்னும் வெளியே எடுக்க முடியவில்லை என்பதே உண்மை.

அணு உலையின் அருகிலுள்ள இடங்களில் எங்கெல்லாம் நிலத்தடி நீரில் கதிர்வீச்சு கலந்திருக்கிறதோ அதை சுமார் 1000 மிகப்பெரிய கன்டெய்னரில் டேங்குகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள். Advance liquid processing system என்ற முறையில் சுத்திகரிப்பு நடைபெற்றது. இதன் மொத்த கொள்ளளவு 1.34 மில்லியன் டன்கள் ஆகும். இது முழுமையாக நிரப்புவதற்கு 2022 வரை ஆகலாம் என்றால் எவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இதனை சுத்திகரிப்பு (Water Treatment) செய்திருக்கிறார்கள்.

சேதமடைந்தத தரை கீழ் தளத்தின் கதிர்வீச்சு தண்ணீர் கழிவுநீர் சுவர்கள் உடைப்பினால் அருகில் உள்ள கடல்நீரில் கலந்திருக்கிறது. அந்த கழிவுநீர் சுவர்களை இப்போது மூடியிருக்கிறார்கள். அதுவும் ஆயிரக்கணக்கான மண் மூட்டைகளை வைத்து அடைந்திருக்கிறார்கள். இருந்தபோதிலும் அணு உலையின் கதிர்வீச்சு கசிவு சிறிய அளவில் தொடர்ந்து கடலில் சென்று கொண்டு தான் இருக்கிறது என்றது TEPCO.

அணு உலையில் இருந்து சேகரிக்கப்பட்ட கதிர்வீச்சு தண்ணீரை சுத்திகரிப்பு செய்த பின்னர் அதனை பசுபிக் கடலில் கலக்க திட்டம் வைத்திருக்கிறது ஜப்பானிய அரசு. அதில் குறைந்த அளவான டிரிடியம் மட்டுமே இருக்கும் அது உயிரினங்களுக்கு பாதிப்புகள் ஏற்படாது என்றது அரசு. இருந்தாலும் உள்ளூர் மக்களிடமும் மீனவர்களிடம் இதுகுறித்த அச்சம் நீங்கவில்லை.

ஜப்பானில் மின்உற்பத்தி பெறுவது பெரும்பாலும் அணு உலைகளை சார்ந்தே உள்ளது. இங்கு நிலக்கரி, இயற்கை எரிவாயவு, கச்சா எண்ணெய் போன்றவைகள் அதிகம் இல்லாததால் இவைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். 1960 காலங்களிலேயே அணு உலை மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற தொடங்கியது. ஜப்பான் முளுவதும் மொத்தம் 54 அணு உலைகள் இயங்கி வந்தது. இதிலிருந்து 30% மின்சாரத்தை பூர்த்தி செய்கிறார்கள்.

புகுஷிமா அணு உலைகளும் 1971-75 -ல் கட்டி முடிக்கப்பட்டது. இது அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் GE - boiling water reactors (BWR) என்ற பழைய (year 1960 - design) வகையைச் சார்ந்தது. முறையே ஜப்பானின் Toshiba, Hitachi இரண்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் நிறுவப்பட்டது ஆகும். அணு உலை அலகு 1 -ன் உற்பத்தி திறன் 460MW. அணு உலை அலகு 2-5 வரை உற்பத்தி திறன் 1100MW ஆகும்.

புவி வெப்பமயமாதல் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டபோது, கரியமில வாயு வெளியேறுவதை (CO2 emissions) தடுக்க வேண்டும் என்ற கொள்கை முடிவுகள் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்டது. மின்சார உற்பத்திக்கு பெரிதும் பயன்பாட்டில் இருக்கும் நிலக்கரியை பயன்படுத்தி இயங்கும் அனல் மின் நிலையங்களை படிப்படியாக குறைத்து மாற்று எரிசக்திக்கு மாறுவது என்ற திட்டங்கள் வகுக்கப்படும் போது அதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை முன்னிறுத்துவது அதோடு net zero emissions என்று வகைப்படுத்தப்படும் அணுஉலைகளுக்கு மாறுவது என்பதும் அதிகம் பேசப்பட்டது.

அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். இதற்கு நம் முன்னே இருக்கும் சாட்சியங்கள் செர்னோபில் நகரில் நடந்த அணு உலை விபத்து, ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துகள் உதாரணமாக இருக்கின்றன.

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை கொண்டிருக்கும் ஜப்பான் நாடே அணு உலை விபத்துக்கள் நிகழ்ந்தால் எப்படி கையாள்வது என்பதில் திணறிக் கொண்டிருக்கும் போது. வளர்ந்து வரும் நாடுகளில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட்டால் இயற்கை / தொழிற்சாலை பேரிடர் மேலாண்மையை எப்படி கையாளப் போகிறோம் என்பது விவாதிக்கப்பட வேண்டிய பொருள்.

புகுஷிமா அணுஉலை விபத்திற்கு பிறகு ஜப்பான் அரசாங்கம் ஏற்கனவே இயங்கிவரும் அணுஉலைகளை படிப்படியாக குறைத்து மாற்று எரிசக்திக்கு மாறப் போகிறோம் அதாவது சூரிய ஆற்றல், காற்றாலை, போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் என்கிற கொள்கை முடிவுக்கு வந்திருக்கிறது.

இதேபோல் ஒரு கொள்கை முடிவை ஐரோப்பிய நாடுகளும் மிகத் தீவிரமாக கையாண்டு வருகின்றனர் குறிப்பாக ஜெர்மனி அரசாங்கம் 2022 ஆண்டுக்குள் மொத்தமுள்ள 17 உலைகளில் 8 உலைகளை நிரந்தரமாக மூடப்போகிறது. மீதமுள்ள உலைகளை 2030 க்குள் மூடிவிட திட்டங்கள் வைத்திருக்கிறார்கள்.

சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகள் புதிதாக அணு உலைகள் கட்டுவதில்லை என்று முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இன்னும் இது போன்ற கொள்கை முடிவுகளை பல நாடுகள் எடுத்து வருகிறார்கள்.

எதிர்காலத்தில் அணு உலை விபத்துகள் ஏற்படாமல் இருக்க அதற்கான கொள்கை முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

கடந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் புகுஷிமா பகுதிகளிலும் நடைபெறுவதாக இருந்தது. ஒலிம்பிக் தீபத்தை அணு உலை விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து டோக்கியோ வரை எடுத்துச் செல்லப்படும் என்ற திட்டம் வைத்திருந்தார்கள். கொரோனா பாதிப்பினால் ஒலிம்பிக் போட்டிகள் நிறுத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரை the world- வானொலி நிகழ்ச்சியில் வந்த செய்திகளின் தொகுப்பிலிருந்து எழுதப்பட்டது.

Reference:

1. World nuclear association

 https://www.pri.org/stories/2021-03-11/it-s-been-10-years-fukushima-what-s-it-rebuild-city-doesn-t-exist

- பாண்டி

Pin It