ஒவ்வொரு ஆண்டும் மனிதர்கள் 50 பில்லியன் டன் மண்ணையும், கற்களையும் பூமியில் இருந்து சுரண்டுகின்றனர் என்று சமீபத்திய ஐநா ஆய்வு கூறுகிறது. நீரிற்கு அடுத்தபடியாக உலகில் அதிகம் சுரண்டப்படும் பொருள் மண்ணே.

மதிப்பில்லாத மண்

ஆனால் நீர் போல அரசுகள் மற்றும் தொழிற்துறை இதை முக்கிய மூலவளமாகக் கருதுவதில்லை. இந்தப் போக்கு விரைவில் மாற வேண்டும். கூடுதல் கண்காணிப்பு, விநியோகச்சங்கிலி, எடுக்கப்படும் மண் மூலம் இழக்கப்படும் தாவர விலங்கினங்களுக்கு சமமான இழப்பீடு, சமத்துவமற்ற மண் சுரண்டலிற்கு எதிரான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐ நா அறிக்கை வலியுறுத்துகிறது.

கட்டுமானம் முதல் தகவல் தொடர்பு வரை

தொழிற்துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் கட்டுமானம் முதல் தகவல் தொடர்புத்துறை உட்பட பல்வேறு துறைகளின் முன்னேற்றத்திற்கு ஆதாரமாக இருப்பது மண்ணே. இந்நிலையில் மண் குறித்த அடிப்படைப் புரிதலும், அதன் மதிப்பும் உணரப்பட வேண்டும் என்று ஐ நா ஆய்வுக் குழு வலியுறுத்துகிறது.sand theftமனித குலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் மண்ணை நம்பியே இருக்கும்போது அது அனைத்து வகையிலும் முக்கியத்துவம் பெற்ற பொருளாக மதிக்கப்பட வேண்டும் என்று ஐநா சூழல் திட்டத்தின் உலக வள தகவல் தரவு மைய (Global Resource Information Database) இயக்குனரும், ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆசிரியருமான பாஸ்கல் பெடுஸி (Pascal Peduzzi) கூறுகிறார்.

மற்ற வளங்கள் போலவே மண்ணும் கட்டுப்பாடு இல்லாமல் சுரண்டப்பட்டால் அது மறைந்து போகும். இந்தப் போக்கைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று ஆய்வுக்குழு கூறுகிறது.

மண்ணை மதிக்கத் தெரியாத மனிதன்

மற்ற தாதுப்பொருட்கள் போலவே மண்ணும் கருதப்பட வேண்டும். பூமியில் தாதுக்கள், நீர், எண்ணெய் மற்றும் வாயு போன்றவற்றிற்குக் கொடுக்கப்படும் அதே மதிப்பும், முக்கியத்துவமும் மண்ணிற்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று நியூ கேஸில் (Newcastle) பல்கலைக்கழக ஆய்வாளர் மற்றும் ஆய்வுக்கட்டுரையின் மற்றொரு ஆசிரியர் கிறிஸ் ஹாக்னி (Chris Hackney) கூறுகிறார்.

கருந்துளை

ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கினால் மண் வணிகம் குறித்த தகவல்கள் பெரும் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. மண் வியாபாரம் தொடர்பான தரவுகளைச் சுற்றிலும் ஒரு கருந்துளை (blackhole) நிலவுகிறது. இது தொடர்பான உலக மதிப்பிடல் தகவல் வலையமைப்பின் (Global Aggregates information network) புள்ளிவிவரங்களின்படி மண்ணை ஆதாரமாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தயாரிப்பு கடந்த ஆண்டு 4.9% உயர்ந்துள்ளது.

2020ல் 42.2 பில்லியன் டன் என்ற அளவில் இருந்து இது 2021ல் 44.3 பில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது. உலகளவில் சுரண்டப்படும் மண் குறித்த துல்லியமான விவரங்கள் கிடைக்கவில்லை. அதைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் அளவைப் பற்றி மட்டுமே விவரங்கள் கிடைக்கின்றன என்று ஐ நா கூறுகிறது.

மண் சுரண்டினால் சூழல் அழியும்

வரையறை இல்லாமல் தொடரும் மண் சுரண்டலால் உயிர்ப்பன்மயத் தன்மைக்கு இழப்பு ஏற்படுகிறது. புயல்களின்போது இயற்கை அரணாக இருக்கும் மண் குன்றுகள், மேடுகள் அழிவதால் வெள்ளப்பெருக்கு அபாயம் அதிகரிக்கிறது. இது மீனவர் சமுதாயத்தைப் பாதிக்கிறது. எரிபொருள் தகராறுகளுக்கும் வழிவகுக்கிறது. காலநிலைச் சீரழிவிற்கும் முக்கிய காரணமாகிறது. கான்க்ரீட் உற்பத்தி, உலகில் அதிகளவில் கார்பன் உமிழும் தொழிலாக மாறியுள்ளது.

தாவர விலங்கினங்களின் அழிவு

மண் மற்றும் சரளைக்கற்கள் சுரண்டலினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவப்புப் பட்டியல் தாவர விலங்கினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த உயிரினங்களின் எண்ணிக்கை 24,000 இனங்களுக்கும் கூடுதல். என்றாலும் இன்னமும் மண்ணிற்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.

மண் என்னும் மகத்தான இயற்கைச் செல்வம் ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கும், சட்டரீதியிலான கட்டமைப்புகளுக்கும் இடையில் உள்ள விரிசல்களுக்கும் பிளவுகளுக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறது என்று மண் ஆய்வாளர், மண் சொல்லும் கதைகள் (Sand stories) என்ற அமைப்பின் ஆசிரியர் மற்றும் ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவரான கரன் பெரேரா (Kiran Pereira) கூறுகிறார்.

மாற்றுவழிகள்

மண் சுரண்டலைத் தடுக்க மாற்று வழிகள் உள்ளன என்று அறிக்கை கூறுகிறது. கட்டுமானப் பொருட்கள், மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்த விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். 2050ம் ஆண்டிற்கு முன் உலக மக்கட்தொகை 10 பில்லியனைத் தாண்டும். அப்போது உலக மக்களில் 70% பேர் நகரங்களிலேயே வாழ்வர் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மண் மீதான மனிதனின் மோகம் வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்தியாவில்

தர நிர்ணயமும் விதிமுறைகளும் ஒழுங்காகப் பின்பற்றப்படாத இந்தியா போன்ற நாடுகளில் மண்ணிற்கு கிராக்கி அதிகம் உள்ளது. இந்தியாவில் மட்டும் 2020 முதல் மண் சுரண்டல் தொடர்பான வன்முறைகள் மற்றும் விபத்துகளில் அரசு ஊழியர்கள் உட்பட நானூறுக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.

கடுமையான சட்டதிட்டங்கள் நடைமுறையில் இருக்கும் வியட்நாம் மெக்காங் (Mekong) டெல்ட்டாவில் கொரோனா கொள்ளைநோய் காலத்தில் சட்டவிரோத மண் சுரண்டல் அதிகரித்துள்ளது.

மண் எடுத்தல் தொடர்பான சர்வதேச விதிமுறைகள் உருவாக்கப்பட்டால் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அரசுகளால் எளிதில் செயல்படமுடியும் என்று கிறிஸ் ஹாக்னி கூறுகிறார்.

மண் சுரண்டினால் மனிதன் அழிவான்

மிதமிஞ்சிய நிலத்தடி நீரை எடுப்பதால் டெல்லி, பாக்தாத் உட்பட உலகில் பல நகரங்களும் மண்ணிற்கடியில் புதைந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மண் சுரண்டலை இதேபோல் தொடர்ந்தால் நாளை ஆறு, குளம், ஏரி போன்ற இயற்கை நீர்நிலை அமைப்புகளே இல்லாமல் போய்விடும். மண் என்னும் மகத்தான வளத்தின் மதிப்பை உடனடியாக மனிதன் உணராவிட்டால் அவனை அழிக்கும் மாபெரும் பேரிடராக விரைவில் அது மாறும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It