கடந்த பத்தாண்டுகளில் 1700க்கும் மேற்பட்ட சூழல் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். சராசரியாக ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கு ஒரு போராளி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று புதிய ஆய்வு கூறுகிறது. வாடகைக் கொலையாளிகள், குற்றக்குழுக்கள் மற்றும் சொந்த அரசுகளால் 2012 முதல் 2021 வரை 1733 நிலப் பாதுகாவலர்கள், சூழல் செயல்பாட்டாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொலையாளி நாடு

குளோபல் விட்னஸ் (Global Witness) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்த கொலைகள் பிரேசில், கொலம்பியா, பிலிப்பைன்ஸ், மெக்சிகோ மற்றும் ஹாண்டுரஸ் நாடுகளில் மற்ற உலக நாடுகளை விட அதிகமாக நடந்துள்ளது. 2012 முதல் இந்த தன்னார்வ அமைப்பு சூழலிற்காக உயிர் கொடுத்தவர்களின் பட்டியலை வெளியிடுகிறது.climate activistsசட் வாடி கொலை

2012ல் இந்த அமைப்பின் தலைமை செயல் அலுவலர் மைக் டேவிஸுடன் கம்போடியாவில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தபோது போராளி சட் வாடி (Chut Wutty) கொல்லப்பட்டார். அதில் இருந்து இந்த அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகின்றது.

செயலற்ற உலகம் - செயல்வேகம் பெற்ற கொலைகள்

2020ல் கொரோனா தொற்றினால் உலகம் செயலற்று முடங்கிக் கிடந்தபோதும் சூழலிற்காக பாடுபடுபவர்களின் கொலைகள் உலகம் முழுவதும் தொடர்ந்தன. அந்த ஆண்டில் மட்டும் சாதனையளவாக 227 பேர் கொல்லப்பட்டனர்.

அதிகார அமைப்புகளுடன் முரண்பட்டு சூழல் காக்க கேள்வி கேட்பவர்கள் உலகம் முழுவதும் கொல்லப்படுகின்றனர். உலக மக்கட்சமுதாயம் இந்த நிலையை மாற்ற விழித்துக் கொள்ள வேண்டும் என்று மைக் டேவிஸ் கூறுகிறார். இந்த கொலைகளால் குறைந்த வருமானம் உடைய சமூகங்கள், பழங்குடியினர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் உலக மக்கட்தொகையில் 5% மட்டுமே. கொல்லப்பட்ட பிரிவுகளில் இவர்கள் 39%.

காரணங்கள்

சுரங்கத் தொழில், பெருமளவில் மரம் வெட்டும் தொழில் மற்றும் விவசாய விரிவாக்கத்தில் ஈடுபடும் பெரிய நிறுவனங்கள் இத்தகைய குற்றங்களை அதிகம் செய்கின்றன. இதற்கான காரணங்கள் பற்றி உலகம் நன்கறிந்ததே. இயற்கையைப் பாதுகாக்க போராடும் சூழல் மண்டலங்களில் இந்த உயிரிழப்புகள் அதிகம் நடைபெறுவதால் இவை வேறு காரணங்கள் சொல்லி மூடி மறைக்கப்படுகின்றன.

மறைந்த சாட் வாடி, இத்தகைய கொலைகள் பற்றிய உண்மையான விவரங்கள் உலகிற்கு தெரியப்படுத்தப்பட வேண்டும், இவற்றைத் தடுக்க வழி காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

புள்ளிவிவரங்கள்

2021ல் காங்கோ மக்கள் குடியரசில் விரங்கா (Virunga) தேசியப் பூங்கா காவலர்களில் எட்டு பேர் உட்பட 200 பேர் கொல்லப்பட்டனர். சுரங்கத் தொழிலும், எண்ணெய் எடுக்கும் வேலையும் அதிகமாக நடப்பதால் சமீப ஆண்டுகளில் இத்தகைய அநீதிகள் இங்கு அதிகமாகி வருகின்றன. கென்யாவில் சூழலியளாளர் ஜோஆனா ஸ்டச்பரி (Joannah Stutchbury) 2021ல் அவருடைய வீட்டிற்கு முன்னால் வைத்துக் கொல்லப்பட்டார்.

பிரேசிலில் நடப்பதென்ன?

கொலம்பியாவின் சூழல் செயல்பாட்டாளர் ஏஞ்சல் மைரோ காட்டஜினா (Angel Miro Cartagena) சூழல் காக்கும் பணியில் 2021ல் கொல்லப்பட்டார். 2022 ஜூனில் செய்தியாளர் டாம் பிலிப்ஸ் (Dom Phillips) மர்மமான முறையில் கொல்லப்பட்டார். புகழ்பெற்ற கார்டியன் மற்றும் அஃப்சர்வர் இதழ்களுக்காக சூழல் அநீதிகள் குறித்து மிகத் தீவிரமாக எழுதி வந்தவர் இவர்.

இவருடன் சேர்ந்து, பழங்குடியினர் குறித்த ஆய்வாளர் புருனோ பெராரா (Bruno Pereira) பிரேசில் அமேசான் காடுகளில் ஜவாரி (Javari) பள்ளத்தாக்கில் கடத்திச் சென்று கொல்லப்பட்டார். பிலிப்ஸ் “அமேசானைக் காப்பாற்றுவது எப்படி?” என்ற தலைப்பில் நீடித்த நிலையான வளர்ச்சி பற்றி ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருந்தார். புருனோ நேர்முகங்கள் காணுவதில் அவருக்கு உதவியாக இருந்தார்.

சில வெற்றிகள்

தென்னாப்பிரிக்கா கிழக்கு கேப் பகுதியில் திமிங்கலங்கள் இனப்பெருக்கம் செய்யும் பகுதியை அழித்து ஷெல் நிறுவனம் எண்ணெய் சுரங்கம் நிறுவுவதை அப்பகுதி பழங்குடியினர் செப்டம்பர் 2022ல் நீதிமன்ற வழக்கு மூலம் தடுத்து நிறுத்தினர். இந்தோனேஷியா சாங்ஹி (Sanghie) தீவுப்பகுதியில் 2022 மே மாதத்தில் மக்கள் ஒன்றுகூடி கனடாவைச் சேர்ந்த நிறுவனம் அவர்களின் வாழிடத்தில் தங்கச் சுரங்கம் தோண்டும் முயற்சியை நீதிமன்றத் தீர்ப்பு மூலம் தடுத்தனர்.

பணக்கார பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக நடந்த போராட்டங்களில் கிடைத்த இத்தகைய வெற்றிகளே ஆய்வறிக்கையை தயாரிக்க தன்னைத் தூண்டியது என்று இதன் ஆசிரியர் அலி ஹைன்ஸ் (Ali Hines) கூறுகிறார்.

கடந்த பத்தாண்டுகளில் மட்டும் பிரேசிலில் 342, கொலம்பியாவில் 322, மெக்சிகோவில் 154, ஹாண்டுரஸில் 170, பிலிப்பைன்ஸில் 217 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சமூக அநீதி, ஊழல் போன்றவை இதற்கு முக்கிய காரணங்கள். ஊழல் அதிகாரிகள், பணம் வாங்கிக் கொண்டு அநீதியை தீர்ப்பாக மாற்றிச் சொல்லும் நீதிபதிகள் போன்றோர் அதிகமாக இருப்பதால், தப்பித் தவறி விசாரணை நடந்தாலும் அது நீதியின் வழியில் செல்வதில்லை என்றும், சூழல் செயல்பாட்டாளர்களுக்கு உரிய அடிப்படை பாதுகாப்பை உலக அரசுகள் வழங்க வேண்டும் என்றும் அறிக்கை வலியுறுத்துகிறது. அநீதி செய்யும் நிறுவனங்கள் சட்டரீதியாக பதில் சொல்ல வேண்டிய நிலை உருவாக்கப்பட வேண்டும்.

மேற்கோள்:https://www.theguardian.com/environment/2022/sep/29/global-witness-report-1700-activists-murdered-past-decade-aoe

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It