கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
மன அழுத்தத்தை குறைக்க கொடுக்கப்படும் புரோசாக் (Prozac) போன்ற மருந்துப் பொருட்கள் நீர் நிலைகளை மாசுபடுத்துவதால் மீன்களின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு நடத்தை பாதிக்கப்படுகிறது; இது அவற்றின் வாழ்வை கேள்விக்குறியாக்குகிறது என்று புதிய ஆய்வு கூறுகிறது.
உலகளவிலான மருந்துப் பொருள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்பொருட்களின் எச்சங்கள் ஆறுகள், ஓடைகள் போன்ற நீர் நிலைகளில் கலந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. கழிவு நீர் பாதைகள் வழியாக நன்னீருடன் கலக்கும் இவை சூழல் மண்டலங்களையும் உயிரினங்களையும் பாதிக்கிறது. செரட்டோனினின் அளவை அதிகரித்து மனிதர்களின் மன அழுத்தத்தை குறைக்கஒ பயன்படும் குறைவான அடர்த்தி உடைய ஃப்யூயெக்செட்டின் (Fluoxetine) மற்றும் பொரோசாக் போன்ற மருந்துகள் மீன்களின் உடல்நிலையைப் பாதிக்கிறது.
இது ஆண் மீன்களின் விந்தணு வலிமையைக் குறைக்கிறது என்று விலங்குகளின் சூழலியல் (Animal Ecology) என்ற இதழில் வெளிவந்துள்ள இது பற்றிய ஆய்வுக்கட்டுரை கூறுகிறது. இந்த ஆய்வுகள் போசிலியா ரெட்டிகுலாட்டா என்ற அறிவியல் பெயருடைய ரைன் போ அல்லது மில்லியன் மீன் என்று அழைக்கப்படும் கப்பி (Guppy) மீன்களில் நடத்தப்பட்டது.
இவை வெப்ப மண்டலப் பகுதிகளில் பரவலாக வாழும் ஒரு மீனினம். இவை ஆஸ்திரேலியாவில் ஆக்ரமிப்பு மீனினமாகக் கருதப்படுகிறது. “இந்த மீனினத்தின் பல தலைமுறைகளை இது போன்ற மருந்துப்பொருள் மாசுகள் பாதிக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வேதிப்பொருட்கள் நீர் நிலைகளில் கலக்கிறது. ப்யூயெக்செட்டின் மருந்து பரவலாக எல்லா இடங்களிலும் மாசாக கலந்துள்ளது என்பதால் இம்மருந்து ஆய்விற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இத்தகைய மருந்துகளின் அளவு குறைவான அடர்த்தியில் இருந்தாலும் அது மாசடைந்த நீரில் இவ்வகை மீன்களின் வாழும் திறமைக்கு எச்சரிக்கை விடுக்கிறது” என்று ஆய்வுக்கட்டுரையின் துணை ஆசிரியரும் ஆஸ்டிரேலியா விக்டோரியா மெல்பெர்ன் மோனாஷ் (Monash)பொது ஆராய்ச்சிகளுக்கான பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானியுமான டாக்டர் யூப்பாமா எச் (Dr Upama Aich) கூறுகிறார்.
3,600 கப்பி மீன்களில் இந்த ஆய்வு நடந்தது. இந்த மீன்கள் சரளைக்கற்கள் மற்றும் நீர் வாழ் தாவரங்கள் உள்ள தொட்டிகளில் வைத்து ஆராயப்பட்டன. ஐந்தாண்டுகள் நடந்த இந்த ஆய்வுகளின்போது ஆய்வாளர்கள் ஒரு லிட்டர் நீரில் சுழியம், குறைந்த அளவு, 31.5 நானோகிராம்கள் மற்றும் உயர்ந்த அளவாக 316 மில்லிகிராம் என்ற வெவ்வேறு அடர்வுள்ள ப்யூயெக்செட்டின் மருந்தைக் கலந்து ஆராய்ந்தனர். இந்த அளவுகள் இயற்கையான சூழ்நிலையில் காணப்படுபவை.
இதன் பிறகு பல தலைமுறைகளில் மருந்துப் பொருளின் தாக்கத்தால் ஆண் மீன்களின் நடத்தை, உடல் நிலை, பெறப்பட்ட பண்புகள் போன்றவற்றில் ஏற்பட்ட பாதிப்புகள் ஆராயப்பட்டன. மருந்தின் குறைந்த அளவு மீனின் உடல் நிலையை வெகுவாகப் பாதிக்கிறது. இணை சேரும் போது மற்ற ஆண் மீன்களுடன் சண்டையிடும் ஆற்றல், இணைசேரும் திறன் போன்றவற்றை இந்த மாசு பாதிக்கிறது. நாளடைவில் இது மீனின் நிலை நிற்புக்கே ஆபத்தை ஏற்படுத்துகிறது.
இம்மாசு விந்தணுக்களின் வேகத்தைக் குறைக்கிறது. பெண் மீனை கருவுற வைக்க உதவும் செதில் போன்ற கானபோடியம் (gonopodium) என்ற உறுப்பின் நீளத்தை அதிகரிக்கிறது. மருந்துப்பொருள் மாசு மீனின் செயல்பாட்டில் இயல்பாக நிகழும் வேறுபாடுகளைக் குறைக்கிறது. மீனை ஆபத்தான முறையில் நடந்து கொள்ளச் செய்கிறது. இது சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப வாழும் அவற்றின் ஆற்றலைப் பாதிக்கிறது.
“பொதுவாக மருந்துகள் குறைவான அளவில் இருக்கும்போதே வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. இதனால் குறைவான அளவு மருந்துகள் கலந்திருந்தாலும் அவை தீவிரமாக வேலை செய்கின்றன” என்று விக்டோரியா சூழல் பாதுகாப்பு முகமையின் (EPA) சூழலியல் சார் ஆபத்துகள் மற்றும் அதிகரிக்கும் மாசுப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி ஆராயும் பிரிவின் முதண்மை விஞ்ஞானி டாக்டர் மின ஸாரிஸ்ட்டோ (Dr Minna Saaristo) கூறுகிறார்.
இந்த அமைப்பு விக்டோரியாவில் உள்ள நான்கு ஆறுகள், நீர் நிலைகள் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கலந்துள்ள பதினெட்டு பொது மருந்துகளை ஆராய்ந்தது. மன அழுத்தத்திற்கு எதிரான மருந்துகள், இரத்த அழுத்தம், இதய நோய்கள், எப்பிலெப்சி மருந்துகள், காஃபின், நுண்ணுயிர் எதிர் மருந்துகள் மற்றும் ஆல்கஹாலுடன் பழச்சாறு கலந்த பானங்கள் போன்றவை சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.
பிடிக்கப்படும் மீன்களில் பொதுவாக காணப்படும் மருந்துப் பொருட்களையும் சூழல் முகமை ஆராய்ந்தது. சிவப்பு பெர்ச் (Red Perch) மீனின் உடலில் மன அழுத்தத்தை குறைக்கப் பயன்படும் வென்லாஃபாக்சைன் (Venlafaxine) என்ற மருந்து ஒரு கிலோகிராமுக்கு 150 மைக்ரோ கிராம் என்ற அளவில் கலந்திருந்தது.
ஈல் (Eel) மீனின் உடலில் சத்துகளற்ற உணவினால் ஏற்படும் வைட்டமின் பற்றாக்குறையைப் போக்க, பெண்களின் கர்ப்பகாலத்தில் பயன்படும் செர்ட்ரலைன் (sertraline) என்ற மருந்து ஒரு கிலோகிராமுக்கு 100 ம்யூ (μg/kg) என்ற அளவில் கலந்திருப்பது இந்த ஆய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்டது. கழிப்பறைகளில் கழிவுடன் மருந்துகளையும் கலந்து அகற்றக்கூடாது. இதற்குப் பதில் மக்கள் தேவையற்ற, காலாவதியான மருந்துகளை விற்பனையாளரிடமே திரும்பி கொடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இது நம் நீர் நிலைகளில் நீந்தி வாழும் மீன்களை நீண்ட காலம் வாழ வைக்கும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். அவ்வாறு செய்தால் மட்டுமே பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த அற்புத உயிரினங்களை நாளைய தலைமுறையினரும் பயன்படுத்த முடியும்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
குற்றங்கள் நிகழும் இடங்களில் ஆண்களின் ஆரோக்கியம் காக்க உதவும் “இதயத்திற்காக மரங்கள்” (Parks for Heart) என்ற திட்டம் அமெரிக்கா ஃபிலடெல்ஃபியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் இயற்கையின் மாயாஜாலம் என்று கருதப்படுகிறது. குற்றங்கள் அதிகமாக நடக்கும் இடங்களில் இது தூய காற்றுக்கு மட்டும் இல்லாமல் இதய நலம் காக்கவும் உதவுகிறது என்று புதிய ஆய்வு கூறுகிறது.இதனால் குறிப்பாக ஆண்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது. அடர்த்தியான மரம் செடி கொடிகள் இருக்கும் இடங்கள் இரத்தக் குழாய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இதயத்தை நோய்களிடம் இருந்து பாதுகாக்கிறது. பசுமையிடங்கள் ஒருவரின் ஒட்டுமொத்த உடற்தகுதி, மன நலம் மற்றும் சமூக நலத்தில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
2025ம் ஆண்டிற்குள் நகரின் எல்லா இடங்களிலும் இருக்கும் பசுமைப் பரப்பை 30 சதவிகிதமாக அதிகரிக்கும் என்ற நோக்கத்துடன் 2009ல் ஃபிலடெல்ஃபியா பசுமைப் பணிகள் (Greenworks Philadelphia) என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இழந்த பசுமையை மீட்க ஆயிரம் கால்பந்தாட்ட மைதானங்கள் அளவு நிலப்பரப்பில் மீண்டும் பசுமையை உருவாக்கும் குறிக்கோளுடன் நகர அமைப்பு இப்போது பணிபுரிகிறது.
பசுமையிடங்களுக்கும் உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள், சர்க்கரை நோய் போன்ற பல உடல் நல பாதிப்புகளை குறைக்க உதவும் இயற்கைத் தீர்வுகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளதை சமீப ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன. இதயக் கோளாறு தொடர்பாக ஏற்படும் மரணங்களைத் தடுக்க குறிப்பாக ஆண்களிடம் பசுமையிடங்கள் முக்கிய பங்கு வகிப்பதை அண்மையில் டிரக்ஸெல் (Drexel) பல்கலைக்கழக டோன்சைஃப் (Dornsife) பள்ளி விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இருந்து கண்டறியப்பட்டது.
இது பற்றிய ஆய்வுக் கட்டுரை ஆரோக்கியம் மற்றும் இடங்கள் ஒன் செக் (Health and Place (1✔) ) என்ற இதழில் வெளிவந்துள்ளது.
மேம்பட்ட மன நலம் பெற பசுமை இடங்கள் அதிகம் உள்ள பகுதிகளைத் தேர்ந்தெடுத்து வாழ வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். பணிபுரியும் இடங்களுக்கு பசுமையிடங்கள் வழியாக செல்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று மற்றொரு ஆய்வு கூறுகிறது.
2008 முதல் 2015 வரை உள்ள காலத்தில் பூங்காக்கள், மரங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இதயக் கோளாறுகளால் ஏற்படும் மரணங்கள் குறைந்துள்ளது என்று பசுமையிடம் மற்றும் இதய நோய்கள் என்ற அமைப்பின் தரவுகள் கூறுகின்றன.
“இதய நலம் மேம்படுவதன் மூலம் குற்றச்செயல்கள் குறைய வாய்ப்புள்ளது. சிக்கலான சமூக நலத்தின் பல்வேறு கூறுகளுக்கும் செயற்கை பசுமையிடங்கள், தனிநபர்களின் ஆளுமை அடையாளங்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பைப் புரிந்து கொண்டால் பசுமையிடங்கள் அதிகமுள்ள சமூகப் பகுதிகளால் அனைவரும் நலம் பெறலாம்” என்று டோன்ஸைஃப் பள்ளியின் முனைவர் பட்டதாரியும் ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியருமான லீஸ்கை நாசி (Leah Schinasi) கூறுகிறார். அமெரிக்காவில் அதிக உயிரிழப்புகளுக்கு இதயக் கோளாறுகளே முக்கியக் காரணம்.
இதய நோய்களால் மட்டும் அங்கு ஆண்டுக்கு 702,880 பேர் உயிரிழக்கின்றனர் என்று சி டி சி (CDC) ஆய்வு அமைப்பு கூறுகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் வறுமை, இனப்பாகுபாடு, மக்கட்தொகை அடர்த்தி பற்றிய தரவுகளை ஆய்வாளர்கள் அமெரிக்க சமூக ஆய்வுகள் கணக்கெடுப்பிற்கான ஆணையத்திடம் இருந்து பெற்றனர்.
2009ல் ஃபிலடெல்ஃபியா மேயராக இருந்த மைக்கேல் நட்டர் (Michael Nutter) பசுமைப் பணிகள் ஃபிலடெல்ஃபியா (Greenworks Philadelphia) என்ற திட்டத்தை 2025ம் ஆண்டிற்குள் நகரின் ஒவ்வொரு பகுதியிலும் 30% பசுமையிடங்களை உருவாக்கும் நோக்கத்துடன் அறிவித்தார். 2008ல் நகரில் 20% பசுமைப் பகுதிகள் இருந்தன. பசுமையிடங்களுக்கு அருகில் இருந்தால் மன மகிழ்வு, செய்யும் வேலையில் உற்சாகம் மற்றும் வாழ்க்கையில் மன நிறைவு அதிகரிக்கிறது.
பசுமைப் பகுதியில் தனிநபர்கள் நேர்மறை உணர்வுகளை அதிக அளவில் பெறுகின்றனர். பூங்காக்கள் இதயநோய்களுக்கு எதிரான வாழ்வின் வழிமுறையாக செயல்படுகின்றன. பசுமையிடங்களால் ஏற்படும் ஏராளமான நன்மைகளை இந்த ஆய்வு மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறது” என்று டோன் ஸைஃப் பள்ளி பொது உடல் நலப் பிரிவு முனைவர் பட்டதாரி மாணவரும் ஆய்வில் முக்கியப் பங்காளியுமான வான்யூ வாங் (Wanyu Huang) கூறுகிறார்.
பூங்காக்கள், நதிகள், ஏரிகளுக்கு அருகில் வசிப்பதால் அதி தீவிர மன அழுத்தம் குறைகிறது. இதனால் அறிவாற்றல் குறைபாடு, டிமென்சியா போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. இலைகள் உயிர் காக்க உதவும் அற்புதங்கள். மரங்கள், பசுமை ஆகியவை அழுத்தக் குறைவு, கோடையில் குளிர்ந்த காற்றை வெளியிடுகிறது. அமைதியான சூழலை உருவாக்குகிறது.
ஒலி மாசைக் குறைக்கிறது. இது பற்றிய சமூகங்களின் பாதுகாப்புக்கு பசுமையிடங்கள் எவ்வாறு உதவுகின்றன என்று ஆழமாக ஆராயப்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பூங்காக்களுக்கு பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் செல்கின்றனர். பூங்காவிற்கு செல்லும் ஒவ்வொரு சமயத்திலும் அங்கு அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.
இதனால் மரம் செடி கொடிகள் உள்ள இடங்கள் பெண்களை விட ஆண்களுக்கு அதிக நன்மைகளை ஏற்படுத்துகிறது என்று ஆய்வுக் குழு கூறுகிறது. பசுமை அதிகம் உள்ள இடங்களில் பெண்கள் செல்வதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிக அளவில் செய்யப்பட வேண்டும். இயற்கை தரும் நன்மைகள் அனைவருக்கும் சுலபமாக கிடைக்க வேண்டும். அப்போது மனிதன் சந்திக்கும் இன்றைய பிரச்சனைகளுக்கு நேர்மறையான நிரந்தர நல்ல தீர்வு ஏற்படும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
மற்ற வகை மாசுகள் போல செயற்கையாக ஒளியூட்டுதலையும் கருத வேண்டும். மனிதன் உருவாக்கும் செயற்கை வெளிச்சத்தின் தாக்கம் இயற்கை உலகை அழிக்கும் மாசாக மாறியுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காலநிலை மாற்றத்துடன் ஒப்பிடக்கூடிய பிரச்சனையாக இந்த ஒளியூட்டுதலின் (lighting) அளவும் அதன் தீவிரத் தன்மையும் ஆண்டிற்கு 2% என்ற அளவில் அதிகரிக்கிறது என்று எக்ஸிடர் (Exeter) பல்கலைக்கழக உயிரியலாளர்கள் நடத்திய ஆய்வு கூறுகிறது.விடியும் முன்பே இரை தேடும் பறவைகள்
பல்வேறு உயிரினங்களில் பரவலாக ஹார்மோன்களின் அளவு, இனப்பெருக்கச் சுழற்சிகள், செயல் புரியும் பாணிகள் மற்றும் எதிரிகளுக்கு இரையாகும் பலவீனத் தன்மை ஆகியவை இந்த மாசால் பாதிக்கப்படுகின்றன என்று இது பற்றி நேச்சர் சூழலியல் பரிணாமம் (Nature Ecology and Evolution) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரையில் ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர்.
பூச்சிகளின் மகரந்த சேர்க்கையில் குறைவு, வசந்த காலத்தில் முன்கூட்டியே மரங்களில் மொட்டுகள் தோன்றுவது, கடற்பறவைகள் கலங்கரை விளக்கங்களை நோக்கி பறந்து வருவது, கடல் ஆமைகள் விடியும் சூரியனின் ஒளியைத் தேடி கரை உள்பகுதிகளில் பிரகாசிக்கும் ஹோட்டல்களை நோக்கி வருவது உள்ளிட்ட பல சீர்கேடுகள் ஏற்படுவதை விஞ்ஞானிகள் முந்தைய 126 ஆய்வுகளை ஆய்வு செய்து செயற்கை ஒளியால் ஏற்படும் தாக்கத்தை மதிப்பிட்டனர்.
பரிசோதிக்கப்பட்ட அனைத்து வகை விலங்குகளிலும் இரவு நேர செயற்கை ஒளியால் மெலட்டானின் (melatonin) என்னும் உறக்கச் சுழற்சியை (sleep cycles) ஒழுங்குபடுத்தும் ஹார்மோனின் அளவு குறைவாகக் காணப்பட்டது. இரவு மற்றும் பகல் நேர உயிரினங்களின் (nocturnal and diurnal creatures) நடத்தை பாணிகள் மாறுகின்றன. பெரும்பாலும் இரவில் இரை தேடும் கொறிக்கும் வகை பிராணிகள் குறைந்த கால அளவிற்கே செயல்திறனுடன் செயல்படுகின்றன.
பறவைகள் நாளின் தொடக்கத்திலேயே பாடத் தொடங்குகின்றன. இரையாக உண்ண புழுக்களைத் தேடுகின்றன. ஒளி மாசு கண்ணுக்குத் தெரியாத பூச்சிகளை படையெடுத்து வரச் செய்கிறது. என்றாலும் ஆய்வு முடிவுகள் அனைத்தும் எதிர்மறையானவை அல்ல. சில பிரதேசங்களில் காணப்படும் சில இனத் தாவரங்கள் இரவு நேர ஒளியால் நன்மை அடைகின்றன. சில தாவரங்கள் வேகமாக வளர்கின்றன. சில வகை வௌவால்கள் செழித்து வாழ்கின்றன.
“ஆனால் சுட்டுப் பொசுக்கும் ஒளியுடன் எரியும் பல்புகள் அல்லது வேகமாகச் செல்லும் காரின் விளக்கொளியால் பூச்சிகள் போன்ற சில குறிப்பிட்ட உயிரினங்கள் ஒட்டுமொத்த அழிவை சந்திக்கின்றன. நுண்ணுயிரிகள், முதுகெலும்பற்றவை, தாவரங்கள், விலங்குகள் என்று எல்லா உயிரினங்களிலும் இதன் தாக்கம் பரவலாக காணப்படுகிறது.
இருட்டைக் கண்டு இன்னும் அஞ்சும் மனிதன்
நினைக்கும் இடங்கள் எல்லாவற்றிலும் ஒளியூட்டுவதைப் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும். செயற்கை ஒளி மாசு என்பதும் காலநிலை மாற்றம் போல மிக மோசமான சூழல் சீரழிவே. செயற்கை ஒளியூட்டல் கடந்த ஐந்து முதல் பத்தாண்டுகளில் வேகமாக அதிகரித்து வருவதால் இது பற்றி தீவிரமாக ஆராயப்படுகிறது. இதற்கான சான்றுகள் ஆதாரப்பூர்வமானவை.
புவியியல் ரீதியாக இப்பிரச்சனை எந்த அளவு விரைவாக பரவி வருகிறது என்பதை இரவில் எடுக்கப்படும் பூமியின் செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. செலவு பிடிக்கும் மென்மையான ஆம்பர் பல்புகள் (soft amber bulbs) வெண்ணிற ஒளி தரும் மலிவு விலை ஒளி உமிழ் விளக்குகளால் (LEDs) மாற்றப்பட்டு விட்டன. இதனால் செயற்கை ஒளியின் தீவிரம் அதிகமாகி விட்டது.
மென்மையான ஆம்பர் பல்புகள் என்பவை மஞ்சள் அல்லது செம்பழுப்பு நிறமுடைய ஒரு பிசின். ஒளி ஊடுருவும் தன்மையுடைய இது மற்றொரு பொருளுடன் உராயும்போது மின்னேற்றம் பெறுகிறது. சூரிய ஒளியைப் போல விரிவான நிறமாலையைக் கொண்டிருப்பதால் ஒளி உமிழ் விளக்குகளின் வெண்ணிற ஒளி உயிரியல் ரீதியாக பிரச்சனைக்குரியது. இப்பிரச்சனையில் அரசுகள், நிறுவனங்கள், தனிநபர்கள் பாரபட்சம் காட்டுகின்றனர்.
ஒளி உமிழ்வை ஏற்படுத்திவிட்டு அது பற்றி நாம் சிந்திப்பதேயில்லை. செயற்கை ஒளியை எங்கு, எப்போது தேவை என்பதை முடிவு செய்த பிறகே பயன்படுத்த வேண்டும். காலநிலை மாற்றத்தைப் போல இல்லாமல் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கண்டால் அது ஒளியூட்டலுக்கு ஆகும் செலவைக் குறைக்கும். பொருளாதார பயன் தரும். ஒரு சில விளக்குகளை மட்டும் பயன்படுத்தினால் குறைவான அளவு மின்சாரம் மட்டுமே செலவாகும். உமிழ்வு குறையும். சூழல் பாதுகாக்கப்படும். ஆனால் இதற்கு மனிதர்களின் மனப்போக்கு மாற வேண்டும். இருட்டைப் பார்த்து நாம் இன்னும் அஞ்சுகிறோம். இதனால் வெளிச்சத்தை ஏற்படுத்தி பயத்தைப் போக்க நினைக்கிறோம். அவசியத்திற்கு அதிகமாக இரவை பகல் போல ஆக்க விரும்புகிறோம். இந்த போக்கு மாறினால் இவ்வகை ஒளி மாசினால் உண்டாகும் அழிவிலிருந்து உயிரினங்கள் பாதுகாக்கப்படும் என்று ஆய்வுக் கட்டுரையின் முன்னணி ஆசிரியரும் எக்ஸிட்டர் பல்கலைக்கழக சூழல் மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான கழகத்தின் பேராசிரியருமான கெவின் காஸ்ட்டன் (Kevin Gaston) கூறுகிறார். பூமியை வாழ விடுவதும் அழிப்பதும் மனிதர்களாகிய நம் கைகளில்தான் உள்ளது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- அ.ஸ்டீபன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
2025 - புத்தாண்டு தொடங்கிய முதல் வார இறுதியில் ஊடகங்கள் அதிகமாக உச்சரிக்கத் தொடங்கிய சொற்கள் : அமெரிக்கா, கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலிஸ், ஹாலிவுட் ! ஆம், ஜனவரி ஆறாம் நாள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு உட்பட்ட லாஸ் ஏஞ்சலிஸ் நகருக்கு அருகில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் எதிர்பாராத விதமாக நெருப்புப் பற்றிக்கொள்ளவே, அமெரிக்கா அதிர்ச்சிக்குள்ளானது. அதற்குக் காரணம் நெருப்பு பரவிய அதே வேகத்தில் புயல் காற்றும் வீசத் தொடங்கியதே! பரவும் நெருப்போடு புயல் கூட்டணி அமைத்தால் என்ன நடக்கும் என்பதை நாமறிவோம்.. 10 நாள்களுக்கும் மேலாகத் தொடர்ந்து பரவிய நெருப்பு சுமார் 17,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பைச் சாம்பலாக்கியது. அடர்ந்த காட்டைத் தாண்டி லாஸ் ஏஞ்சலிஸ் நகரமும் தீக்கிரையானது. காடுகள் அழிந்தது மட்டுமின்றி, மனித உயிர்கள், காட்டு உயிரினங்கள், வீட்டு விலங்குகள் நெருப்புக்கு இரையாயின. 1,00,000க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து புலம் பெயர்த்தப்பட்டனர். கான்கிரீட் காடுகள் எனப்படும் பெரிய பெரிய கட்டடங்களும் வீடுகளும் எலும்புக்கூடாகக் காட்சியளித்தன. பொருளாதார இழப்பு குறித்த வெவ்வேறு புள்ளிவிவரங்கள் வெளியானாலும், அவற்றைச் சரியாகக் கணக்கிடுவது அவ்வளவு எளிதல்ல. மொத்தத்தில் அணுகுண்டு வீசப்பட்ட நகரம் போல் லாஸ் ஏஞ்சலிஸ் காட்சியளிப்பதாகவும் ஹாலிவுட் திரைப்படக் காட்சிகள் போல இருப்பதாகவும் ஊடகங்கள் வர்ணித்தன.இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், இந்நகரில் ஊடக வெளிச்சம் அதிகம் பாயும் பகுதியான ஹாலிவுட் நகரமும் நெருப்பில் கருகத் தொடங்கியதே! 1853இல் தொடங்கப்பட்டு. நீண்ட வரலாறைக் கொண்டதுதான் ஹாலிவுட் எனப்படும் அமெரிக்காவின் திரைப்பட நகரம் ! இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகத் திரைப்படத் தொழிற்சாலையில் இன்று வரை ஆதிக்கம் செலுத்தி வரும் இந்நகரம் நெருப்புக்கு இரையானது யாரும் எதிர்பாராத திருப்புமுனை! ஒருசில நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்படக் கலைஞர்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்திருப்பதாகத் தொலைக்காட்சி அலைவரிசைகள் பட்டியலிட்டன.
இந்தப் பேரழிவைத் தடுப்பதற்கு அல்லது குறைப்பதற்கு கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவிற்கு உதவிக்கரம் நீட்டின. தீயணைப்பு வீரர்கள், தரையூர்திகள், வானூர்திகள் வழியாகவும் தண்ணீரைப் பாய்ச்சிப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இரசாயனத் தூளை வானிலிருந்து தெளித்து நெருப்புப் பரவலைக் கட்டுப்படுத்த முயன்றனர். இவ்வளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், அமெரிக்காவின் மூன்றாவது பெரிய வளமையும் வசதியும் படைத்த லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்தில் ஏற்பட்ட பேரழிவைத் தடுக்க இயலாமல் போனது.
சரி, இந்தக் காட்டுத்தீ உருவானதற்கும் அது கட்டுக்கடங்காமல் பரவியதற்கும் என்ன காரணம்? இது குறித்து பல்வேறு யூகங்கள், சாத்தியங்கள் முன்னணி ஊடகங்களில் வலம் வந்தன. அவற்றில் ஒரு கருத்து சமூக ஊடகங்களை அதிர வைத்தது. அதாவது, இந்தக் காட்டுத் தீக்கும் ‘சாட்ஜிபிடி’ (ChatGpt) எனப்படும் திறந்த நிலை செயற்கை நுண்ணறிவுக்கும் (Open AI) தொடர்பு உண்டு என்பதே அக்கருத்து. முதலில் சமூக ஊடகங்களில் இந்தக் கருத்தைப் பார்த்ததும், “சமூக ஊடகங்கள் இப்படிப் பரபரப்புக்காக எதையாவது கிளப்பிவிடுகின்றனவோ” என்று தோன்றியது. தேவையில்லாமல், மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் வேலையை இந்தச் சமூக ஊடக வலைஞர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணமே முதலில் மேலோங்கியது. ஆனால், இது குறித்த விவாதங்கள் ஒருசில முன்னணி ஊடகங்களுக்கும் பரவியதால் இந்தக் கருத்தைப் புறந்தள்ள முடியவில்லை. சரி, இது குறித்து இவர்கள் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்று பார்க்க முயன்ற போது சில தரவுகள் கிட்டின.
முதலில் லாஸ் ஏஞ்சலிஸ் நகரம் உருவான நாள் முதலே நீர் மேலாண்மை குறித்த பிரச்சனை நிலவி வந்திருக்கிறது. அவ்வப்போது மழை வெள்ளம் ஏற்பட்டாலும் அதை மேலாண்மை செய்யப் போதிய கட்டமைப்பு வசதி இங்கு இல்லை என்ற குற்றச்சாட்டு பல காலமாக நிலவி வந்திருக்கிறது. தொடக்கத்தில் 75 விழுக்காடு தண்ணீர் இந்நகரின் ஒருசில நீராதாரங்களிலிருந்து கால்வாய் வழியாகப் பெறப்பட்டு வந்தது. ஆனால், அண்மைக் காலமாக வட அமெரிக்காவின் கொலொரடோ ஆற்றிலிருந்தே 50 விழுக்காடு தண்ணீர் இங்கு அனுப்பப்பட்டு வருகிறது. காட்டுத்தீயை எதிர்கொள்ளும் அளவுக்கு இங்கே நீர்க் கட்டமைப்பு உருவாக்கப்படவில்லை. அதாவது, கலிபோர்னியா மாகாணத்தில் போதிய தண்ணீர் இருந்தாலும் பாதிப்புக்குள்ளான பகுதியில் தேவையான அளவுக்குத் தண்ணீர் இல்லை என்கிறார்கள். மேலும் கடந்த மழைக்காலங்களில் இப்பகுதியில் குறைந்த அளவே மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. இதனால் வறட்சி அதிகரித்துள்ளது. வறட்சி அதிகரிக்கும்போது வெப்பம் அதிகரிப்பதும் காடுகள் சூடாவதும் தவிர்க்க இயலாதவை.
இப்போது சாட்ஜிபிடிக்கு வருவோம். பொதுவாகவே, சமூக ஊடகங்களுக்கும் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டுக்கும் மின்சாரம் எவ்வளவு தேவை என்பதை நாம் அறிவோம். நாம் அன்றாடம் பயன்படு;த்தும் கணினி, திறன்பேசி ஆகியவற்றைக் கடந்து, இவற்றின் தலைமைச் செயலகமாக விளங்கும் தரவு மையங்களை (Data centres) நாம் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவற்றை நிர்வகிக்கும் தரவு மையங்கள் மின்சாரத்தில் இயங்கி, அதிகமாக கார்பன்-டை-ஆக்சைடை உமிழும் தன்மையுடையவை. இதனால் இவை அதிகமாக வெப்பத்தை வெளியேற்றும் தன்மையுடையவை. இவற்றில் அடங்கியுள்ள எந்திரங்களைக் குளிர்விக்கவும் தேவையான குளிர்நிலையில் இவற்றைப் பராமரிக்கவும் 24 மணிநேரமும் அதிகக் கொள்ளளவில் தண்ணீர் தேவைப்படுகிறது. மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற தரவு மையங்கள் உட்கொள்ளும் தண்ணீரின் அளவை விட செயற்கை நுண்ணறிவுத் தரவு மையங்கள் உட்கொள்ளும் தண்ணீரின் அளவு மிக அதிகம் என்கிறார்கள்;.
Washington Post இதழ் கடந்த 2024ஆம் ஆண்டு தெரிவித்துள்ள ஒரு தகவலின்படி, 100 சொற்கள் அடங்கிய ஒரு மின்னஞ்சலைத் தட்டச்சு செய்ய சாட்ஜிபிடி 519 மில்லி லிட்டர் அதாவது ஒரு பாட்டில் தண்ணீர் குடிக்கிறது. ஆண்டு முழுவதும் வாரத்திற்கு ஒரே ஒரு மின்னஞ்சல் அனுப்பினாலே, 27 லிட்டர் தண்ணீர் சாட்ஜிபிடிக்குத் தேவைப்படுகிறது. சற்றே விரிவாகச் சொல்ல வேண்டுமானால், அமெரிக்கா வாழ் மக்களில் பத்தில் ஒரு பகுதியினர், அதாவது 16 மில்லியன் மக்கள் சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி வாரத்திற்கு ஒரே ஒரு மின்னஞ்சல் அனுப்பினால், ஆண்டு முழுவதும் 43,50,00,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். அப்படியானால், இதன் அதிகபட்சப் பயன்பாட்டுக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்பதை நாம் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
இந்தப் பின்புலத்தில், லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் நீரேற்றம் குறைவதற்கு அதிகரித்துள்ள செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடும் ஒரு காரணம் என்று ஒரு சிலர் சுட்டிக் காட்டுகிறார்கள். அதே நேரத்தில் நீர்க் கட்டமைப்புக் குறைபாடுதான் காரணமே தவிர, செயற்கை நுண்ணறிவு காரணமல்ல என்று மாற்றுக் கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இவற்றைச் சீர்தூக்கிப் பார்க்கும்போது, செயற்கை நுண்ணறிவுதான் இப்பிரச்சனைக்கு காரணம் என்று சமூக ஊடகங்கள் கூறுவதை நாம் ஏற்பது கடினம். அதே நேரத்தில் இதுவும் ஒரு காரணம் என்று அவர்கள் கூறுவதை முற்றிலும் மறுக்க முடியுமா என்று பார்ப்போம்
ஜனவரி – 2025இல் கிடைத்த சில புள்ளி விவரங்களின்படி,
1) 2024இல் சாட்ஜிபிடிக்கு 300 மில்லியன் வாராந்திரப் பயனாளிகள் இருந்திருக்கிறார்கள்.
2) அமெரிக்காவின் சாட்ஜிபிடி பயனாளிகளின் எண்ணிக்கை 67.7 மில்லியன்.
3) உலகப் பயனாளிகளில் அமெரிக்கா 16 விழுக்காட்டுடன் முதல் இடம் வகிக்கிறது.
இந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 1) லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் நிலவும் தண்ணீர்ப் பற்றாக்குறை, 2) அணைக்க இயலாமல் பரவிய தீ, 3) தண்ணீரை விழுங்கும் செயற்கை நுண்ணறிவு என்று மூன்று புள்ளிகளையும் இணைக்க முயல்கிறார்கள் சமூக ஊடகத்தினர்.
இதில் பலருக்கு மாற்றுக் கருத்து உண்டு என்றாலும், எதிர்காலப் பார்வையில் இதை ஓர் எச்சரிக்கை மணியாகக் கருத வேண்டும். செயற்கை நுண்ணறிவு விழுங்கும் தண்ணீர், அன்றாட அடிப்படைத் தேவைக்கான தண்ணீர், பேரிடர் காலங்களில் தேவைப்படும் தண்ணீர் இவற்றை ஒருங்கிணைத்து பரந்துபட்ட பார்வையில் பார்ப்பது இனிமேல் அவசியமாகும். செயற்கை நுண்ணறிவு தவிர்க்க இயலாத எதிர்காலப் பாதையில் பயணிக்கிற வேளையில், மாற்று ஏற்பாடுகளைப்பற்றித் தரவு மைய நிர்வாகங்கள் சிந்திக்க வேண்டும். அதாவது, தண்ணீர் தவிர மாற்று வழிகளில் தரவு மையங்களைக் குளிர்விக்கும் சாத்தியங்களை உருவாக்க வேண்டும். குறிப்பாக, தண்ணீர் உள்ளிட்ட இயற்கை ஆதாரங்களை நிலைத்த மேம்பாட்டுச் (Sustainable development) சிந்தனையில் பயன்படுத்தும் செயல்பாடு அதிகரிக்க வேண்டும்.
மாற்றுச் செயல்பாட்டின் முதல் படியாக, இயற்கை குறித்த மனப்பாங்கு மாற்றம் காலத்தின் கட்டாயம். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், இயற்கை குறித்த ஆதிக்கப் பார்வையையும் அதைத் திரைப்படங்கள் வழியாக பரவலாக்கம் செய்வதையும் ஹாலிவுட் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இயற்கைச் சுரண்டல் மனிதருக்குள்ள அதிகாரம் என்ற கருத்தைத் தவறாமல் முன்வைக்கும் கதையோட்டம், பாம்பு முதல் டயனோசர் வரை அனைத்து உயிரினங்களையும் வில்லன்களாகச் சித்தரிக்கும் போக்கு, அவற்றை அழித்தொழிப்பதே “கிளைமாக்ஸ்” என்ற கற்பனை வறட்சி ஆகியவற்றைத் தவிர்த்து, உயிர்நேய அணுகுமுறையிலான படைப்பாற்றலுக்கு ஹாலிவுட் கதவைத் திறக்க வேண்டும்.
- அ.ஸ்டீபன்
- அல்சைமர்ஸ் நோயை அதிகரிக்கும் ஒளி மாசு
- பத்து டிரில்லியன் டாலர் பயன் தரும் உணவுமுறை மாற்றம்
- கடலுள் மூழ்கும் நிலப்பகுதிகள்: காவிரிப் படுகையின் நிலை என்ன?
- பூநாரையும் லித்தியமும்
- எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய ஓர் உச்சி மாநாடு
- உயிர்ப் பன்மயத் தன்மையைக் காக்க ஓர் உச்சி மாநாடு
- மீத்தேனை உண்ணும் பாக்டீரியாக்கள்
- ஒவ்வொரு நாளும் ஒரு மில்லியன் லாரி கடல் மணல்
- பிளாஸ்டிக் கட்டுப்பாட்டை நோக்கி முன்னேறும் உலகம்
- நிலை தடுமாறும் நீலகிரி
- வெப்பத் தாக்குதலுக்கான உலகின் முதல் மாநாடு
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதினாறு மில்லியன் டாலர் இழப்பு
- கப்பல்கள் உடைக்கப்படும்போது...
- மாண்ட்ரீல் மாநாடு முடிந்து ஓராண்டிற்குப் பிறகு...?
- காலநிலை மாநாடு - வெற்றியா தோல்வியா? துபாயில் நடந்ததென்ன?
- உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் புவி வெப்ப உயர்வு
- மழைக் காடுகளைக் காக்க ஓர் உச்சி மாநாடு
- பிளாஸ்டிக் கட்டுப்பாட்டில் ஒரு புதிய நம்பிக்கை
- புவி வெப்ப உயர்வைக் குறைக்க உதவும் மண்