காற்றுமாசு Type2 வகை சர்க்கரை நோயை ஏற்படுத்துகிறது என்று இந்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. டெல்லி மற்றும் சென்னை நகரங்களில் குடியிருக்கும் 12,000 பேரிடம் ஏழாண்டு காலம் நடந்த ஆய்வில் இருந்து பி எம் 2.5 (PM 2.5-parts per million) அளவுள்ள துகள்களுக்கும் உயர் இரத்த சர்க்கரை அளவிற்கும் அதன் மூலம் Type2 சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நுண் துகள்கள் கலந்துள்ள மாசுக் காற்றை சுவாசிப்பதால் ஏற்படுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் முதல் ஆய்வு

ஒரு முடியிழையின் முப்பதில் ஒரு பங்கு மெல்லிய அளவுடைய இந்த நுண் துகள்கள் இரத்த ஓட்டத்துடன் கலந்து பல சுவாசக் கோளாறு நோய்களையும், இதய நோய்களையும் ஏற்படுத்துகிறது. இந்தியாவில் 2010ல் தொடங்கி நடைபெறும் இந்த ஆய்வுகள் நாட்பட்ட நோய்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி ஆராய்கிறது. உலக சுகாதார நிறுவனம் உலகளவில் காற்றின் தரம் மிக மோசமாக இருக்கும் இந்தியாவில் சுற்றுப்புறத்தில் உள்ள பிஎம் 2.5 துகள்களுக்கும் Type2 சர்க்கரை நோய்க்கும் இடையில் இருக்கும் தொடர்பு பற்றி நடத்தும் முதல் ஆய்வு இது.delhi smoke pollutionடெல்லியில் பிஎம் 2.5 அளவு துகள்களின் சராசரி அளவு 80- 100 ம்யூ/எம்3. சென்னையில் இதன் அளவு 30-40 ம்யூ/எம்3. உலக சுகாதார நிறுவனம் வரையறை செய்துள்ள அளவு 5 ம்யூ/எம்3 மட்டுமே. இந்தியாவின் காற்றின் தேசிய தர அளவு 40 ம்யூ/எம்3. ம்யூ என்பது காற்றுமாசின் அளவைக் குறிக்க உதவும் ஓர் அலகு. இந்தியர்கள் ஏற்கனவே சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், தொற்றாத நோய்களால் அவதிப்படுகின்றனர். மக்கத்தொகையில் 11% அல்லது 101 மில்லியன் பேர் சர்க்கரை நோயுடன் வாழ்கின்றனர்.

சுமார் 136 மில்லியன் பேர் சர்க்கரை நோய் வரும் வாய்ப்புள்ளவர்கள் என்று பிரபல மருத்துவ இதழ் லேன்சட் (Lancet) வெளியிட்ட ஆய்வறிக்கை கூறுகிறது.

2019ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இது 6.2 சதவிகிதமாகவும் 2016ல் யு கேயில் இது 8.6 சதவிகிதமாகவும் இருந்தது. இந்தியாவில் முன்பு கணிக்கப்பட்டிருந்ததைவிட இப்போது சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம். இவர்களில் பெரும்பாலோரும் கிராமப் பகுதிகளை விட நகரங்களிலேயே அதிகமாக வாழ்கின்றனர் என்று லேன்சட் ஆய்வுகள் கூறுகின்றன.

பி.எம்.ஜே (BMJ) என்ற சர்வதேச மருத்துவ ஆய்வு அமைப்பால் டெல்லி மற்றும் சென்னையில் வாழும் 12,000 ஆண், பெண்களிடம் 2010 முதல் 2017 வரை குறிப்பிட்ட இடைவெளிகளில் சர்க்கரை அளவுகள் பரிசோதிக்கப்பட்டு இந்த ஆய்வுகள் நடந்தன. பி எம் ஜே என்ற மருத்துவ ஆய்விதழில் விவரங்கள் அடங்கிய அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. ஆய்வு நடந்த காலத்தில் ஆய்வில் பங்கேற்ற ஒவ்வொருவரின் வாழிடத்தில் அப்போது நிலவிய காற்றின் தரம் செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன் அளவிடப்பட்டது.

காற்று மாசு அதிகரித்தால் நோயும் அதிகரிக்கும்

பி எம்2.5 துகள்கள் கலந்துள்ள காற்று உள்ள இடங்களில் ஒரு மாதம் வாழ்ந்தவர்களிடம் இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாக காணப்பட்டது. இவர்கள் ஓராண்டு அல்லது அதற்கும் மேல் நுண் துகள் மாசினால் பாதிக்கப்படும் போது சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. ஒவ்வொரு 10 ம்யூ/எம்3 அளவு நுண் துகள்களால் ஏற்படும் பாதிப்பு அதிகமாகும் போது ஆண்டு சராசரி பிஎம்2.5 அளவில் உள்ள நிலையில் இரு நகரங்களிலும் சர்க்கரை நோய் வருவதற்கான ஆபத்து 22% அதிகரிக்கிறது.

“இந்தியர்களின் நோய்க் குறியியலின்படி (pathophysiology) குறைவான உடற்பருமன் அளவு (BMI) இருந்தாலும் உயர்ந்த அளவு கொழுப்பு எடுத்துக் கொள்ளப்படுவதால் மேற்குலக மக்களை விட சர்க்கரை நோய் இந்தியாவில் அதிகமாக உள்ளது” என்று ஆய்வுக்குழுவின் முன்னணி ஆய்வாளர் மற்றும் டெல்லி நாட்பட்ட நோய்க்கட்டுப்பாட்டு மையத்தின் நிபுணர் சித்தார்த்த மேண்டல் (Siddhartha Mandal) கூறுகிறார்.

40% மக்களிடம் சர்க்கரை நோய் கண்டுபிடிக்கப்படாமலேயே போகிறது என்று மற்றொரு உலகளவிலான ஆய்வு கூறுகிறது. “கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் ஏற்பட்ட வாழ்க்கை முறை மாற்றங்களால் சூழல் மாசிற்கு ஒரு காரணமாக மட்டும் இருந்த காற்று மாசு இப்போது சர்க்கரை நோய் உயர்விற்கும் முக்கியக் காரணியாக மாறியுள்ளது.

கிராமப்பகுதி மக்களை விட நகர்வாழ் இந்தியர்களிடையில் உடற்பருமன், உணவு மற்றும் உடற்பயிற்சிக் குறைவு போன்றவற்றால் சர்க்கரை நோய் அதிகமாக இருந்தது என்று இது வரை கருதப்பட்டது. ஆனால் இந்த ஆய்வு முடிவுகள் காற்று மாசும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்பதை நிரூபித்துள்ளது” என்று ஆய்வுக்குழு ஆசிரியர்களில் ஒருவரும் சென்னை சர்க்கரை நோய் ஆய்வு அறக்கட்டளையின் தலைவருமான டாக்டர் வி மோகன் (Dr V Mohan) கூறுகிறார்.

காற்று மாசும் இரத்த அழுத்தமும்

டெல்லியில் இந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடம் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் ஆண்டு சராசரி காற்று மாசின் அளவு 90 ம்யூ/எம்3 ஆக இருக்கும்போது இரத்த அழுத்த உயர்வு மற்றும் அதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பாதுகாப்பான அளவை விட அதிகமாக பி எம் 2.5 துகள்கள் காணப்படும் இந்திய நகரங்களில் மக்களுக்கு அதிகமாக சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

இது ஆத்தராச்குலரோசிஸ் (atherosclerosis) என்ற நிலையை ஏற்படுத்துகிறது. பெருந்தமனி தடிப்பு என்றும் இது அறியப்படுகிறது. ஆத்தராச்குலரோசிஸ் என்பது தமனிகளின் உட்புறச்சுவரில் கொலஸ்ட்ரால், கொழுப்புப் பொருட்கள் படிந்து அவற்றின் உட்புறம் தடிமனாகி வீக்கம் உருவாவதைக் குறிக்கிறது. இது ஒரு நீண்டகால அழற்சி நோய். இதனால் மாரடைப்பு மற்றும் இதயத்தின் இயக்கம் பாதிக்கப்படுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

“பி எம் 2.5 துகள்களில் சல்பைடுகள், நைட்ரைடுகள், கன உலோகங்கள் மற்றும் இரத்தத் திசுக்களை பாதித்து இதயத் தமனிகளை இறுக்கமடையச் செய்யும் கறுப்பு கார்பன் போன்றவை அடங்கியுள்ளன. இவை கொழுப்பு செல்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதய தசைகளை நேரடியாகப் பாதிக்கிறது” என்று நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர், ஆய்வறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவர் மற்றும் இதய சிகிச்சை வல்லுனர் டாக்டர் துரைராஜ் பிரபாகரன் (Dr Dorairaj Prabhakaran) கூறுகிறார்.

நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டைப் பாதிக்கும் காரணியாக உள்ள பி எம்2.5 துகள்கள் உடலில் இன்சுலின் சுரப்பு மற்றும் அதன் செயல்பாட்டைப் பாதிக்கிறது. இந்திய நகரப் பகுதிகளில் ஹைப்போ தைராய்டு நோய் குறைபாடு (hypothyroidism), கருப்பையில் நீர்க்கட்டிகள் தோன்றும் குறைபாடு (polycystic ovarian syndrome (PCOS) மற்றும் கர்ப்பகால நீரிழிவு (gestational diabetes) போன்ற குறைபாடுகள் அதிகரிக்கின்றன. காற்று மாசு உடலில் எல்லா ஹார்மோன்களையும் சுரக்கும் நாளமில்லா சுரப்பிகளைப் பாதிக்கிறது.

காற்று மாசு உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் மற்றும் வைட்டமின் டி நிலையில் செலுத்தும் தாக்கம், அதனால் தனிநபர் வாழ்க்கைச் சுழற்சியில் பிறந்தபோது இருந்த எடை, கருவுற்றிருக்கும் பெண்களின் ஆரோக்கியம், வயது வந்தவர்களில் இன்சுலினுக்கு எதிர்ப்பாற்றல், பார்க்கின்சன் மற்றும் ஆல்சைமர்ஸ் (Alzheimer’s) உள்ளிட்டவற்றால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி நிபுணர்கள் இப்போது ஆராய்ந்து வருகின்றனர்.

இது எச்சரிக்கை அளிப்பதாக இருந்தாலும் காற்று மாசைக் குறைத்து, அதன் மூலம் சர்க்கரை நோய் பாதிப்பையும் வாழ்க்கை மாற்றங்களால் ஏற்படும் மற்ற நோய்களையும் குறைக்க இந்த ஆய்வுகள் உதவும். 2016ல் காற்றுமாசு உயர்விற்கு எதிராக உருவான மக்கள் எதிர்ப்பால் மத்திய மற்றும் டெல்லி அரசுகள் பழைய டீசல் வாகனங்களுக்குத் தடை விதித்தது, கட்டுமானங்களைக் கட்டுப்படுத்தியது, சாலைகளை மேம்படுத்தியது, புறவழிச் சாலைகளை அமைத்தது, வேளாண் கழிவுகளை எரிக்கத் தடை விதித்தது போன்ற கொள்கை முடிவுகளால் 2016-2021 காலத்தில் பிஎம்2.5 மாசின் அளவு 22% குறைந்தது.

காற்று மாசு முற்றிலும் குறையவில்லை என்றாலும் இது வரவேற்கத்தக்கது. இது போன்ற உள்ளூர் அளவிலான நடவடிக்கைகள் நாடு முழுவதும் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/global-development/2023/nov/01/air-pollution-raises-risk-of-type-2-diabetes-says-landmark-indian-study-acc?

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It