கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
காலநிலைப் பேரழிவுகளைத் தடுத்து மனித குலத்தைக் காக்க உதவும் புதிய நிதி ஒதுக்கீடு குறித்த உடன்படிக்கையுடன் அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாக்கு (Baku) நகரில் நவம்பர் 11, 2024 அன்று காலநிலை உச்சி மாநாடு (COP29) தொடங்கியுள்ளது. இப்போதுள்ள நிலை தொடர்ந்தால் உலகில் எந்த நாடும் காலநிலை பேரழிவில் இருந்து தப்பமுடியாது என்று மாநாட்டின் தொடக்க நிகழ்வில் பேசிய காப்29ன் தலைவர் மற்றும் அஜர்பைஜானின் சூழல் அமைச்சர் மக்ஃப்டர் பாஃபேயெஃப் (Mukhtar Babayev) எச்சரித்துள்ளார்.“குறைந்த அளவே கார்பனை உமிழும் ஏழை நாடுகளுக்கு பெரும் வணிக நிறுவனங்கள் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இல்லையெனில் ஒட்டுமொத்த உலகமும் காலநிலைப் பேரழிவால் அழிய நேரிடும். அரசுகளின் கஜானாவை மட்டும் நம்பி செயல்பட முடியாது. வளரும் நாடுகளுக்கு தனியாரும் தங்கள் கோடிக்கணக்கான வருமான இலாபத்தில் இருந்து ஒரு சிறிய பகுதியையேனும் இதற்காக ஒதுக்க வேண்டும். தனியாரின் பங்கேற்பு இல்லாமல் காலநிலை பிரச்சனைக்கு எந்த ஒரு தீர்வும் ஏற்படாது. உலகம் உடனடியான அதிக நிதியை எதிர்பார்க்கிறது. வரலாறு இதையே எடுத்துக் காட்டியுள்ளது. இப்போதைய தேவை அரசுகளின் அவசர செயல்பாடு மட்டுமே" என்று அவர் மேலும் கூறினார்.
இம்மாநாட்டில் உலகின் 200 நாடுகளின் தலைவர்கள், உயர் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மாநாட்டின் நன்னம்பிக்கையுடன் கூடிய செயல்பாடுகள் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்கா பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து விலகும் என்றும், கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் அகற்றப்படும் என்றும் கூறிய டொனால்டு ட்ரம்பின் தேர்தல் வெற்றி மூலம் அவநம்பிக்கையின் நிழல் படர்ந்துள்ளது என்று சூழல் போராளிகள் அஞ்சுகின்றனர்.
2015 பாரிஸ் காலநிலை மாநாட்டில் புவி வெப்ப உயர்வை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற வரலாற்று ஒப்பந்தம் ஏற்பட்டது.
அமெரிக்காவில் ஆட்சிப் பொறுப்பேற்கவுள்ள புதிய அரசின் பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து விலகும் முடிவால் பூமியின் வெப்பநிலை மேலும் உயரும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இந்த மாநாட்டில் பசுமைக் குடில் வாயு உமிழ்வை கட்டுப்படுத்த உதவும் புதிய நெறிமுறைகள் வகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் காலநிலை அச்சுறுத்தல் தீவிரமாகும்போது அதை சமாளிக்க உதவும் வகையிலான நிதியை செல்வந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு ஒதுக்கி வழங்கும் புதிய திட்டங்கள் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. இதற்காக 2035ம் ஆண்டுக்குள் செல்வந்த நாடுகள் ஆண்டுதோறும் 100 மில்லியன் முதல் ஒரு டிரில்லியன் டாலர் வரை நிதி ஒதுக்க வேண்டும். இதற்கு அமெரிக்கா பெரும் தடையாக எழுந்துள்ளது என்று சூழல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தனியார் நிறுவனங்கள் நிதி வழங்கும்போது அதற்கும் பெரும் தொகை வட்டியாக வசூலிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும். இத்தகைய திட்டங்களுக்கு இலாபம் பார்ப்பதையே நோக்கமாக இருக்கும். இவ்வாறு நிகழ்ந்தால் ஏழை நாடுகள் மேலும் கடன் சுமையில் மூழ்கி திவாலாகும் நிலைக்குத் தள்ளப்படும் என்று அஞ்சப்படுகிறது. “அரசு வழங்கும் நிதியே தனியாரின் நிதியை விட மேலானது. அரசாங்கங்கள் மட்டுமே நிதியுதவியை மானியமாகக் கொடுக்க முடியும். இது மட்டுமே வளரும் நாடுகளின் அதிகரித்து வரும் நிதித்தேவையை நிறைவு செய்யும். தனியார் எதிலும் இலாபம் பார்ப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுபவர்கள்” என்று கிறிஸ்ட்டியன் எய்டு அமைப்பின் (Christian Aid) பிரதிநிதி மரியானா பவுலி (Mariana Paoli) கூறுகிறார். வளரும் நாடுகள் கோரும் நிதி ஒன்று திரட்டப்பட்ட புதிய அளவிலான நிதிக்கான குறிக்கோள் (New Collective Quantify Goal NCQG) என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் காலநிலை பேரழிவின் பாதிப்புகளைக் குறைப்பதில் தனியார் நிறுவனங்களின் பங்கேற்பும் இருக்க வேண்டும் என்று சிறிய நாடுகளுக்கான கூட்டமைப்பின் பேச்சாளர் கூறுகிறார். “புதைபடிம எரிபொருட்களைப் பயன்படுத்துவதைக் குறைத்தால் காலநிலை மாற்றத்தினால் நிகழும் அழிவுகளைக் குறைக்க முடியும் என்பதுடன் பொருளாதாரத்தையும் மேம்படுத்தலாம். உலகில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் உடனடியாக காலநிலையை சீர்படுத்த முயற்சிக்காவிட்டால் பிறகு உலக நாடுகள் அனைத்தும் இதற்கான விலையைக் கொடுக்க வேண்டும். காலநிலை தீவிரத்தைக் குறைக்க வழங்கப்படும் நிதியுதவி ஒரு அறக்கட்டளைக்கு வழங்கப்படும் நன்கொடை இல்லை” என்று ஐநா காலநிலை மாற்றத்திற்கான தலைவர் சைமன் ஸ்டீல் (Simon Stiell) மாநாட்டில் பேசியபோது கூறினார்.
அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ், ஸ்பெயின் உட்பட பல்வேறு மேற்கித்திய நாடுகளில் சமீபத்தில் நிகழும் புயல்கள், வெள்ளப்பெருக்குகள், மிதமிஞ்சிய வெப்ப உயர்வு போன்ற சீரழிவுகள் இனியும் இது போல் தொடராமல் இருக்க, பல காலங்களாக வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகள் கோரும் நிதியுதவியை வழங்க ஒப்புக்கொள்ளும் உடன்படிக்கையுடன் இம்மாநாடு ஒரு சரித்திர சாதனை படைக்கும் என்ற என்ற எதிர்பார்ப்புடன் உலகம் அஜர்பைஜானின் தலைநகரை உற்றுநோக்குகிறது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
ஒவ்வொரு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை உலக தலைவர்கள் பூமியில் வாழும் உயிரினங்களின் நிலை பற்றி விவாதிக்க கூடுகின்றனர். உயிர்ப் பன்மயத் தன்மையை காப்பதும் இயற்கையின் அழிவை தடுப்பதும் இதன் முக்கிய நோக்கம். 196 நாடுகளின் பிரதிநிதிகள் கொலம்பியா காலி (Cali) நகரில் நடைபெறும் ஐநாவின் இந்த மாநாட்டிற்காக (COP16-Conference Of the Parties) கூடியுள்ளனர். 2022ல் நடந்த மாநாட்டிற்கு பிறகு கூடும் முக்கிய உச்சி மாநாடு இது.
இம்மாநாடுகள் பெரிய, பல்நாட்டு ஒப்பந்தங்களால் முக்கியத்துவம் பெறுகின்றன. 2015 காலநிலை உச்சிமாநாடு (ClimatteCOP) தொழிற்புரட்சிக்கு முன்பிருந்த அளவில் புவி வெப்பநிலையை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற வரலாற்று உடன்படிக்கையுடன் நிறைவடைந்தது. 2022 கனமிங் மாண்ட்ரீல் உயிர்ப் பன்மயத் தன்மை மாநாடு 23 இலக்குகள், நான்கு குறிக்கோள்களுடன் இந்த பத்தாண்டில் இயற்கையை காக்க உதவும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் இலட்சியத்துடன் முடிந்தது.
மோசமாகும் சூழல் நிலைபற்றி விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தாலும் பெரும்பாலான உலக நாடுகள் வாக்குறுதி அளித்த இலக்குகளை இன்னும் நிறைவேற்றாமல் உள்ளன. காலியில் அரசுகள் தேசீய உயிர்ப் பன்மயத் தன்மை திட்டங்களை (NBSAPS) அடையும் செயல்முறைகளை இம்மாநாட்டில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பன்மயத் தன்மை செழுமை மிக்க பிரேசில் போன்ற நாடுகள் அவை செயல்படுத்தவிருக்கும் பல பத்தாண்டு பயனளிக்கும் திட்டங்களை கூட்டத்தில் வெளியிடப் போவதாக கூறியுள்ளன.
சூழல் திட்டங்களுக்கான நிதி எங்கிருந்து வரும் என்பது மிகப் பெரிய வினாவாக உள்ளது. 2022 மாநாட்டில் நாடுகள் இந்த பத்தாண்டின் இறுதிக்குள் 23-30 பில்லியன் டாலர் நிதியை இயற்கையை பாதுகாக்கும் பணிகளுக்காக செலவிடப் போவதாக வாக்குறுதி கொடுத்தன.
2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இதில் 20 பில்லியன் டாலர் நிதியை வழங்குவதாக அந்நாடுகள் கூறின. நிதி வழங்கலில் யு கே, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பணக்கார மேற்கித்திய நாடுகள் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது பற்றி இம்மாநாட்டின் இறுதியில் தெரிய வரும்.
உலகின் பவளப்பாறைகள், மழைக்காடுகள், மற்ற செழுமையான சூழல் மண்டலங்கள் வருங்கால வணிகப் பயன்பாடுகளுக்காக பந்நாட்டு பண்நாட்டு பணக்கார கம்பெனிகளால் சூறையாடப்பட காத்துக் கொண்டிருக்கின்றன. இயற்கையின் மரபணு குறியீடுகள் மருந்துப் பொருட்கள், உணவு, பொருளியல் கண்டுபிடிப்புகள் குறித்த புள்ளியியல் மாதிரிகளை உருவாக்க இயற்கையை சுரண்டும் செயற்கை நுண்ணறிவு தொழிற்துறை சூழல் வளங்களை புதிய புரட்சிக்கான தளங்களாக மாற்ற தயாராகி வருகின்றன.
ஆனால் பூமியின் தென் கோளத்தில் உள்ள நாடுகள் இயற்கையில் இருந்து கண்டுபிடிக்கப்படும் மருந்துப் பொருட்கள், உணவுகள் போன்றவற்றை பற்றிய தகவல்கள் மூலம் கிடைக்கும் இலாபத்தை ஏழை நாடுகளுக்கு பகிர்ந்து கொள்ளாத மேற்கித்திய உலகுடன் கடும் சினத்தில் உள்ளன. காப்16ல் இது பிரதிபலிக்கும் என்று நம்பப்படுகிறது. மதிப்புமிக்க இந்த உயிரி மூலங்கள் எங்கிருந்து பெறப்பட்டன என்று வெளியிடாத பந்நாட்டு நிறுவனங்களின் போக்கு உயிரிக்கொள்ளை (Biopiracy) என்று அழைக்கப்படுகிறது. கொலம்பியா மாநாட்டில் இது பற்றிய உலகின் முதல் ஒப்பந்தம் ஏற்படும் என்று விஞ்ஞானிகல் நம்புகின்றனர்.
பழங்குடியினர் நிலை
சூழல் பாதுகாப்பு திட்டங்களில் பழங்குடியினர் பங்கு பற்றி இந்த பத்தாண்டின் இலக்குகளில் 18 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதில் முடிவெடுக்கும் வன வாழ் மக்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவே உள்ளது. இந்த நிலை மாறவேண்டும் என்பது சமீபத்திய ஆண்டுகளில் இயற்கை மற்றும் பழங்குடியின சமூகங்களின் முக்கிய முழக்கமாக உள்ளது. பல பழங்குடியின சமூகங்கள் நடைமுறையில் இது குறித்து உருவாகக்கூடிய உடன்படிக்கை எவ்வாறு செயல்படுத்தப்படும் என்று அறிய காத்திருக்கின்றன.
இலக்குகள் தங்கள் நில உரிமை, கலாச்சாரத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றிய அச்சத்துடன் இவர்கள் இம்மாநாட்டை எதிர்நோக்குகின்றனர். கொலம்பியாவின் முதல் இடது சாரி அரசு கஸ்ட்டாவோ பெட்ரோ (Gustavo Petro) தலைமையில் இம்மாநாட்டை தலைமையேற்று நடத்துகிறது. பல ஆண்டுகளாக இருந்த கொரில்லா போரை அரசு முடிவுக்கு கொண்டு வந்தது.
“காப்16 மாநாட்டின் மையக்கருத்து இயற்கையுடன் இணைந்து அமைதியாக வாழ்வது என்பதே (Peace with Nature)” என்று கொலம்பியாவின் சூழல் அமைச்சரும் மாநாட்டின் தலைவருமான சூசானா முகமது (Susana Muhamad) கூறுகிறார். நில பாதுகாப்பு, நிதி போன்றவற்றை அளவிடுவது எளிது. இவற்றை பொருளாதாரம் மற்றும் ஒத்துழைப்பு வளர்ச்சிக்கான ஐநா அமைப்பு கண்காணிக்கும். ஆனால் உயிரினங்களின் இழப்பு, உயிர்ப் பன்மயத்தன்மையின் செறிவு, நீடித்த நிலையான வளர்ச்சியை மேலாண்மை செய்வது கடினம் என்று ஐநா அதிகாரிகள் கூறுகின்றனர்.
மாநாட்டின் முதல் அமர்வில் ஐநா தலைவர் ஆண்டோனியோ குட்டரஸ், கொலம்பிய தலைவர் கச்ட்டாவோ பெட்ரோ, சூழல் அமைச்சர் சூசானா முகமது உட்பட பல தலைவர்கள் சூழல் பாதுகாப்பின் இன்றியமையாமை பற்றி பேசினர்.
இது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. தென்னமெரிக்காவின் மூன்றாவது பெரிய நகரமான காலியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 12 நாடுகளின் தலைவர்கள், 103 அமைச்சர்கள், 15,000 சூழல் போராளிகள் மற்றும் செயற்பாட்டாளர்கல், விஞ்ஞானிகள், நிதி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
மனிதன் என்ற ஒற்றை உயிரினமே இன்று பூமியில் உள்ள அணைத்து உயிரினங்களையும் அழித்துவருகிறான். நம்மை வாழவைக்கும் இயற்கையே நம் வரலாறு. இயற்கையை அழிக்கும் வேலையை தொடர்ந்தால் நாளை இந்த பூமியில் மனிதன் வரலாறு இல்லாதவனாகவே வாழ வேண்டும். இதை உணர்ந்து உருப்படியான உடன்படிக்கைகளுடன் காப்16 மாநாடு தரும் என்ற நம்பிக்கையுடன் உலகம் காத்திருக்கிறது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
பசுமைக் குடில் வாயுக்களில் மிக மோசமானதாகக் கருதப்படும் மீத்தேனை உணவாக உண்ணும் பாக்டீரியாக்கள் புவி வெப்ப உயர்வின் தீவிரத்தைக் குறைக்கும் என்று விஞ்ஞானிகள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். அதிக சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் மீத்தேன் வாயு - ஆற்றல், இயற்கை எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி, தொழிற்துறை, வேளாண்மை, வளமான மண்ணின் மிதமிஞ்சிய பயன்பாடு மற்றும் கழிவு மேலாண்மையின்போது உருவாகிறது.
மெத்தனாட்ராப்ஸ் (methanotrophs) என்ற வகை பாக்டீரியாக்களைப் பயன்படுத்தி இயற்கையான வழியில் சூழலில் இருக்கும் மீத்தேனை கார்பன் டை ஆக்சைடு மற்றும் உயிரி வளத்தொகுப்பாக (biomass) மாற்றும் முறையை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் லாங் பீச் (Long Beach) ஆய்வு மைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த குடும்பத்தைச் சேர்ந்த எல்லா பாக்டீரியாக்களும் மீத்தேனை உண்கின்றன. இவை காற்றில் இருந்து மீத்தேனை அகற்றி அதன் ஒரு பகுதியை செல் புரதத்தின் நீடித்த நிலையான பயனுடைய புரதமாக மாற்றுகின்றன என்று ஆய்வுக் குழுவின் முன்னணி ஆய்வாளர் மேரி இ லிவ்ஸ்ட்ராம் (Mary E Lidstrom) கூறுகிறார். இதே பாக்டீரியா குழுவில் உருமாற்றம் அடைந்த மெதைலாடுவிமைக்ரோபியம் பரியேட்டன்ஸ் 5ஜிபி1சி (methylotuvimicrobium buryatense 5GB1C) என்ற பாக்டீரியாவைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பாக்டீரியா மிகக் குறைந்த அளவில் இருந்தாலும் மீத்தேனை திறம்பட அகற்றும் ஆற்றல் உடையது.
பெருவாரியாக இது நடைமுறைக்கு வந்தால் இத்தொழில்நுட்பம் புவி வெப்பம் உயர்வதை திறம்பட குறைக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த பாக்டீரியாக்கள் வாழும் சுற்றுப்புற காற்று மண்டலத்தில் மீத்தேன் வாயு 5,000-10,000 பி பி எம் (parts per million) அளவில் உள்ளது.
பி பி எம் என்பது ஒரு மில்லியனில் ஒரு பங்கு. வளி மண்டலத்தில் 1.9 பி பி எம் என்ற மிகக் குறைந்த அளவிலேயே மீத்தேனின் அடர்வு உள்ளது. ஆனால் குப்பைக் கிடங்குகள், நெல் வயல்கள், எண்ணைக் கிணறுகள் போன்றவை உள்ள சில குறிப்பிட்ட இடங்களில் மீத்தேன் 500 பி பி எம் என்ற அதிக அடர்வில் உமிழப்படுகிறது. கால்நடைப் பண்ணைகள், வெப்ப மண்டல விவசாய நிலங்கள் போன்ற இடங்களில் பொதுவாக மீத்தேன் உறிஞ்சும் பாக்டீரியாக்கள் வாழ்கின்றன.
மீத்தேன் உமிழ்வு என்ற சூழலைப் பாதிக்கும் மிகப்பெரும் பிரச்சனையை இத்தொழில்நுட்பத்தின் உதவியுடன் திறம்பட குறைக்க முடியும் என்று லண்டன் பல்கலைக்கழக ராயல் ஹாலோவே (Royal Holloway) ஆய்வுக்கூடத்தின் புவி அறிவியல் துறை பேராசிரியர் யூவன் நிஸ்பிட் (Euan Nisbet) கூறுகிறார்.
இந்த வகை பாக்டீரியாக்கள் மீத்தேனை கார்பன் டை ஆக்சைடாக மாற்ற குறைந்த ஆற்றலையே பயன்படுத்துகின்றன. மீத்தேன் வாயுவின் மீது இந்த வகை பாக்டீரியாக்களுக்கு கவர்ச்சி மற்ற பாக்டீரியாக்களை விட ஐந்தாயிரம் மடங்கு அதிகமாக இருக்கிறது. இதனால் இவை பெருமளவில் மீத்தேனை உண்கின்றன என்று கருதப்படுகிறது. இவை மீத்தேனை ஆக்சிஜனேற்றம் அடையச் செய்து மிகக் குறைந்த பாதிப்பை உண்டாக்கும் கார்பன் டை ஆக்சைடாக மாற்றுகின்றன.
இந்த செயல்முறையின்போது வெளிவரும் கார்பன் டை ஆக்சைடை உயர் வேக உறிஞ்சு குழாய்களைப் பயன்படுத்தி உறிஞ்சி எடுத்து உருளைக்கிழங்கு போன்றவற்றை பயிர் செய்து வளர்க்கலாம். இப்போதுள்ளதை விட இருபது மடங்கு அதிகமாக மீத்தேனை மறு பயன்பாட்டிற்குரிய பொருளாக மாற்ற வேண்டும். இந்த இலக்கு எட்டப்பட்டால் இத்தொழில்நுட்பத்திற்கான முதலீடு அதிகரிக்கும். இன்னும் மூன்று நான்கு ஆண்டுகளில் இது வணிகப் பயன்பாட்டிற்கு வரும் என்று ஆய்வுக்குழுவினர் நம்புகின்றனர்.
விவசாயத்தில் பண்ணைக் கால்நடைகளின் கழிவுகள், கால்நடைகளின் உணவு செரித்தலின்போது (gastroenteric releases) ஏற்படும் உமிழ்வினாலேயே அதிக மீத்தேன் வெளியேற்றப்படுகிறது. வளி மண்டலத்தை அடைந்த முதல் இருபது ஆண்டுகளில் கார்பன் டை ஆக்சைடை விட 85 மடங்கிற்கும் கூடுதலாக மீத்தேன் பூமியை சூடாக்குகிறது. வளி மண்டலத்தில் இருக்கும் மீத்தேன் கடந்த 15 ஆண்டுகளில் வேகமாக சாதனையளவில் அதிகரிக்கிறது. இன்றுள்ள நிலையில் 30% புவி வெப்ப உயர்விற்கு இதுவே காரணம். அரசுகள் மற்றும் தனியார், பொது நிறுவனங்களின் மெத்தனப் போக்கால் வரும் ஆண்டுகளில் நிலைமை இன்னும் மோசமாகும் என்று பென்சில்வேனியா ஸ்டேட் பல்கலைக்கழக மண் நுண்ணுயிரியல் பேராசிரியர் மேரி ஆன் ப்ரண்ட்ஸ் (Prof Mary Ann Bruns) கூறுகிறார்.
2021ல் காப்26 காலநிலை உச்சி மாநாட்டில் பல பொருளாதார முன்னேற்றமடைந்த நாடுகள் இந்த வாயு உமிழ்வின் அளவைக் கட்டுப்படுத்த ஒன்றுபட்டு செயல்படுவதாக வாக்குறுதி அளித்தன. என்றாலும் மீத்தேன் உமிழ்வு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மீத்தேனை உண்ணும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை பெருமளவில் அதிகரிக்க ஆயிரக்கணக்கான உயர் செயல்திறனுள்ள உற்பத்திக் கூடங்கள் நிறுவப்பட வேண்டும்.
இதற்கான செலவு அதிகமாக இருக்கலாம். ஆனால் நாம் இந்த பூமியில் உயிர் வாழ வளி மண்டல மீத்தேனைக் குறைப்பது மட்டுமே ஒரே வழி என்ற நிலையை அடையும்போது செலவு பெரிதாகத் தோன்றாது. இயற்கைச்சூழலில் சரியான தொழில்நுட்பத்தின் உதவியில்லாமல் பாக்டீரியாக்களை பயன்படுத்தி உமிழ்வை குறைத்தால் மீத்தேனை விட பூமியை பத்து மடங்கு அதிகமாக வெப்பமடையச் செய்யும் ஆற்றலுள்ள நைட்ரஸ் ஆக்சைடின் (N2O) உமிழ்வு அதிகரிக்கும். ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பத்தின் (methanotrophic bacteria-based technology) மூலம் நைட்ரஸ் ஆக்சைடு உமிழ்வு ஏற்படுவது இல்லை.
2050ம் ஆண்டிற்குள் 0.3 முதல் 1 பெட்டாகிராம் (petagram) வரை மீத்தேனை அகற்றினால் புவி வெப்ப உயர்வை 0.21 முதல் 0.22 டிகிரி வரை குறைக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒரு பெட்டாகிராம் என்பது 1,000 டிரில்லியன் அல்லது 1015 கிராமின் நிறைக்கு சமமான அளவிற்கான அலகு. இந்த அலகின் குறியீடு Pg. இந்த வெப்பநிலை குறைப்பு மற்ற உமிழ்வுகளின் குறைப்புடன் சேர்த்து கணக்கிடும்போது பூமியின் வெப்பம் குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த கண்டுபிடிப்பின் மூலம் பூமியை அச்சுறுத்தும் மீத்தேனின் உமிழ்வு குறையும் என்ற புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
உலகக் கடல்களில் இருந்து ஒவ்வொரு நாளும் எடுக்கப்படும் ஒரு மில்லியன் லாரி கடல் மணல், ஏற்கனவே கடல்நீர் மட்ட உயர்வு மற்றும் புயல்களால் பாதிக்கப்பட்டுள்ள கடல்சார் சூழல் மற்றும் கடலோர சமூகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று உலகளவில் இது பற்றி முதல்முறையாக நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன. மணல் அகழ்வுத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட சர்வதேச தரவு தளத்தின் மூலம் அதிர்ச்சி தரும் இந்த செய்தி வெளிவந்துள்ளது.
ஐநாவின் சூழல் அமைப்பால் (UNEP) ஏற்படுத்தப்பட்ட இந்தத் தளம் தானியங்கி அடையாளம் காணும் (Automatic Identification System AIS) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடல் சூழலில் மணல் அகழ்ந்து எடுக்கப்படும் இடங்களை கப்பல்களைக் கொண்டு கண்டறிந்து, இந்தத் தரவுகள் பெறப்பட்டன.
ஆண்டிற்கு ஆறு பில்லியன் டன்
கடல் மணல் கண்காணிப்பு அமைப்பு (Marine Sand Watch) 2012-19 தரவுகளை இதற்காக ஆராய்ந்தபோது உலகம் முழுவதும் மணல் எடுப்பதில் ஈடுபட்டுள்ள தொழிற்துறை ஆண்டிற்கு 6 பில்லியன் டன்கள் மணலை கடல்களில் இருந்து அகழ்ந்தெடுப்பது தெரிய வந்துள்ளது. ஆண்டிற்கு ஆண்டு இந்த அளவு அபாய நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.இழக்கப்படும் அளவை ஈடு செய்ய 10 முதல் 16 பில்லியன் டன்கள் மணல் ஆறுகளில் இருந்து அடித்து வரப்பட்டு கடலில் சேர்க்கப்படுகிறது. கடலோரக் கட்டமைப்புகள் மற்றும் கடற்சார் சூழலைப் பேணிப் பாதுகாக்க அவசியமான இயற்கை எல்லையை, அகழ்வுகள் தொடும் அளவிற்கு மணல் எடுத்தல் நடக்கிறது என்று ஐநா சூழல் பாதுகாப்புத் திட்டம் எச்சரிக்கிறது.
வட கடல், தென் கிழக்கு ஆசியா, யு எஸ்ஸின் கிழக்குக் கடற்கரைப்பகுதி ஆகிய இடங்களில் இது கவலை தரும் அளவில் உள்ளது என்று இந்த ஆய்வு கூறுகிறது.
ஆசியப் பகுதிகள் உட்பட மணல் எடுத்தல் தீவிரமாக நடக்கும் பல இடங்களில் ஆறுகள் கொண்டு வந்து நிரப்பும் அளவை விட அதிக அளவில் மணல் எடுக்கப்படுகிறது.
கடலுக்கு அடியில் நடைபெறும் இந்த சட்டவிரோத சுரண்டல் உயிர்ப் பன்மயத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்துவோடு, அடித்தட்டில் சேறு படிந்துள்ள பகுதி வரை மணல் வாரப்பட்டு உருவாக்கப்படும் நீர் அற்ற நிலை (water turbidity), கடல்வாழ் உயிரினங்கள் ஒலி மாசால் பாதிக்கப்படுதல் போன்ற சூழல் சீர்கேடுகளை ஏற்படுத்துகிறது என்று ஐநா சூழல் அமைப்பின் ஜெனீவா கிரிட் (GRID) பிரிவு இயக்குனர் பாஸ்கல் பெடூசி (Pascal Peduzzi) கூறுகிறார்.
இதனால் ஏற்படும் சூழல் பாதிப்புகள் குறைக்கப்பட வேண்டும். கடலின் மணல் வளம் சூழல் நட்புடைய விதத்தில் மேலாண்மை செய்யப்பட வேண்டும் என்று பெடூசி கூறுகிறார். கடல் மணல் மதிப்புமிக்க முக்கியப் பொருளாகக் கருதப்பட வேண்டும். ஐநாவின் ஜெனீவா பகுப்பாய்வு மையத்தால் உருவாக்கப்பட்டு மணல் கண்காணிப்பு அமைப்பால் பயிற்றுவிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தானியங்கி முறை தரவுகளைப் பயன்படுத்தி உலகக் கடல்களில் மணல் எடுக்கும் கலன்களின் நடமாட்டத்தைக் கண்காணித்தது.
மணல் மற்றும் சரளைக்கற்களே பூமியில் இருந்து எடுக்கப்படும் பொருட்களில் பாதி இடத்தைப் பிடிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 50 பில்லியன் டன் மணல் மற்றும் சரளைக் கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது 27 மீட்டர் நீளமும் 27 மீட்டர் அகலமும் உடைய நிலநடுக்கோட்டைச் சுற்றிலும் எழுப்பப்படும் சுவருக்கு சமமான அளவு. மணல் கான்க்ரீட் மற்றும் இயற்கையான தரைப்படுகை அல்லது பெட்ரோலியப் பொருட்களில் இருந்து கிடைக்கும் கசடைப் பயன்படுத்தி உண்டாக்கப்படும் மண் பொருட்களுக்கான (asphalt) முக்கிய மூலப்பொருள்.
நாம் குடியிருக்கும் வீடுகள், கட்டிடங்கள், ஜன்னல்களில் உள்ள கண்ணாடிகள், சாலையில் போடப்பட்டுள்ள சரளைக் கற்கள் என்று பல வகைகளில் மனித சமூகம் மணலால் கட்டப்பட்டுள்ளது. பசுமை வழிக்கு மாற உதவும் காற்றாலைகளை அமைப்பது முதல் மற்ற பல தேவைகளுக்கும் நமக்கு கான்க்ரீட் அவசியமாக உள்ளது.
கடலோரப் பகுதிகளில் இர்ருந்து மணல் எடுப்பதைத் தடை செய்ய வேண்டும், கடலில் இருந்து மணல் எடுப்பதை ஒழுங்குபடுத்த வேண்டும், நிலப்பகுதியில் குவாரிகளில் இருந்து மணல் எடுப்பதை கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க வேண்டும் என்று ஐநா பரிந்துரை செய்கிறது. மணல் மற்றும் மற்ற பொருட்களை கடல் மற்றும் நதிச்சூழலில் இருந்து தொடர்ந்து எடுப்பது நதி அல்லது கடலோரப் பகுதியின் கட்டமைப்பை மாற்றிவிடும். கடலின் ஆழ்பகுதியை வளமற்றதாக்கி விடும். இது மிக ஆபத்தானது.
கடலில் மணல் எடுக்கும் கலன்கள் ஆழ்கடலில் வெற்றிடச் சுத்திகரிக்கும் இயந்திரங்களைப் போல செயல்படுகின்றன. அடித்தட்டு மணலில் வாழும் அனைத்து வகையான நுண்ணுயிரிகளும் நசுக்கி அழிக்கப்பட்டு அங்கு உயிரற்ற சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. இந்த மணல் தரிசான பூமிக்கு எடுத்துச் செல்லப்படும்போது அங்கு எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. ஆனால் ஆழ்கடலில் 30-50 செண்டிமீட்டர் மணல் அங்கேயே விடப்பட்டால் அங்குள்ள உயிரினங்கள் உயிர் பிழைத்துக் கொள்ளும்.
வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்ட சுரண்டல்
இந்த ஆய்வுகள் மிதமிஞ்சி மணல் எடுக்கும் நிறுவனங்களின் பெயரைக் குறிப்பிட அல்லது அவற்றை அவமானப்படுத்த நடத்தப்படவில்லை. ஆனால் உலகின் எங்கோ ஒரு மூலையில் மனித நடமாட்டம் எதுவும் இல்லாத ஆழ்கடல் பகுதியில் இருந்து எடுக்கப்படும் சூழல் சுரண்டலை வெளிச்சத்திற்கு கொண்டு வரவே ஐ நாவின் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மறைக்கப்படும் இந்தப் பிரச்சனையை இந்த ஆய்வுகள் இப்போது உலகறியச் செய்துள்ளது.
இந்த ஆய்வு முடிவுகளைத் தொடர்ந்து கடலில் மணல் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் சர்வதேச சங்கம் (IADC) இது தொடர்பான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இத்தொழிற்துறை பில்லியன் கணக்கான டாலர்களை ஒவ்வொரு ஆண்டும் வருமானமாக ஈட்டுகிறது. விதிமுறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன என்றாலும் இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் மற்றும் கம்போடியா ஆகியவை கடல் மணல் ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளன.
சமீபத்திய ஐ நா பொதுச்சபை தீர்மானத்தின்படி மணல் எடுத்தல் தொடர்பான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை அறிவை விரிவுபடுத்தி அதன் மூலம் சூழலுக்கு நட்புடைய விதத்தில் கடல் மணலை எடுத்தல் மற்றும் அதை பயன்படுத்துவதற்கான உலகளாவிய செயல்களை வலுவூட்ட ஜெனீவாவில் இதற்கான ஆய்வு மையம் ஏற்படுத்தப்பட்டது.
மணல் இல்லாத கடலும் கடற்கரைப்பகுதியும் பூமியை உயிர்களற்ற கோளாக மாற்றிவிடும். இந்த நிலை தொடர்ந்தால் நாளை கடலில் மட்டும் இல்லாமல் கரையிலும் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் அழியும் நிலை ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிளாஸ்டிக் கட்டுப்பாட்டை நோக்கி முன்னேறும் உலகம்
- நிலை தடுமாறும் நீலகிரி
- வெப்பத் தாக்குதலுக்கான உலகின் முதல் மாநாடு
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதினாறு மில்லியன் டாலர் இழப்பு
- கப்பல்கள் உடைக்கப்படும்போது...
- மாண்ட்ரீல் மாநாடு முடிந்து ஓராண்டிற்குப் பிறகு...?
- காலநிலை மாநாடு - வெற்றியா தோல்வியா? துபாயில் நடந்ததென்ன?
- உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் புவி வெப்ப உயர்வு
- மழைக் காடுகளைக் காக்க ஓர் உச்சி மாநாடு
- பிளாஸ்டிக் கட்டுப்பாட்டில் ஒரு புதிய நம்பிக்கை
- புவி வெப்ப உயர்வைக் குறைக்க உதவும் மண்
- சூழலுக்காக உயிர் கொடுத்தோர்
- சூடாகும் நகரங்கள்
- எர்த்ஷாட் விருது இந்தியாவிற்கும்
- மரம்
- சூழலியல் மேம்பாட்டில் திமுக அரசு
- மண்வளம் குறைந்தால் மனிதன் அழிவான்
- 2021 ஐந்தாவது வெட்பமான ஆண்டு
- திரைசீலை விழுந்த காலநிலை உச்சி மாநாடு