கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- இரா.வெங்கட்ராகவன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
திராவிட முன்னேற்ற கழக அரசு பதவியேற்றதில் இருந்தே தமிழ்நாட்டின் சூழலியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கொண்டு வருவதில் உறுதியாக செயலாற்றி வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் பல்லுயிர் சூழலியலில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழ்நாட்டின் மொத்த வனப்பரப்பு 26,419.23 சதுர கிலோ மீட்டர். இது மாநிலத்தின் மொத்த பரப்பில் 20.31 விழுக்காடு. உலகிலுள்ள முக்கியமான 36 உயிர்ப் பன்மை மிக்க தலங்களில் மேற்கு தொடர்ச்சி மலையும் ஒன்றாக விளங்குகிறது. தமிழ்நாட்டின் பல்லுயிர்ப் பெருக்கத்தில் 165 வகையான மீன் இனங்களும், 76 வகையான நீர் நில வாழ்வன, 177 வகையான ஊர்வன, 454 வகையான பறவைகள் மற்றும் 187 பாலூட்டிகள் தமிழகத்தில் காணப்படுகின்றன.
வனம் மற்றும் வன உயிரினங்களை பாதுகாத்து சூழலியல் சமத்துவத்தை பேணுவதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் 5 புலிகள் காப்பகங்கள், 3 உயிர்க்கோளக் காப்பகங்கள், 5 தேசிய பூங்காக்கள், 17 பறவைகள் காப்பகங்கள், 17 காட்டுயிர்க் காப்பகங்கள், 2 வன உயிரின காப்பகங்கள் என தமிழ்நாடு இந்தியாவில் தனித்துவமான சூழலியல் தன்மையை கொண்டுள்ளது.பசுமை தமிழ்நாடு இயக்கம்
திராவிட முன்னேற்ற கழக அரசு பதவியேற்றதில் இருந்து வனப் பரப்பை அதிகரிப்பதிலும், புதிதாக பறவைகள் மற்றும் வன உயிரினக் காப்பகங்கள் உருவாக்குவதிலும் தனி கவனம் செலுத்தி வருகிறது. 2021-22 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் வனப்பரப்பை 23.08 விழுக்காட்டில் இருந்து 33 விழுக்காடாக உயர்த்தும் வகையில் ‘பசுமை தமிழ்நாடு இயக்கம்’ தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் கீழ் அடுத்த பத்தாண்டுகளில் 261 கோடி உள்ளூர் மர வகைகள் நடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஈர நில இயக்கம் – ராம்சார் குறியீடு
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு பருவ நிலை மாற்ற இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஈர நில இயக்கம் ஆகியவற்றையும் தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 100 ஈர நிலங்களை கண்டறிவது இதன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈர நிலங்களின் மேம்பாட்டிற்காக சர்வதேச அளவில் வழங்கப்படும் ராம்சார் அங்கீகாரம் தமிழ்நாட்டில் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அரசு எடுத்த பெரும் முயற்சிகளால் தமிழ்நாட்டில் பள்ளிக்கரணை, கரிக்கிலி, பிச்சாவரம், வேடந்தாங்கல், கூந்தன்குளம், மன்னார் வளைகுடா, வெள்ளோடு, உதயமார்த்தாண்டபுரம், வேம்பனூர் ஆகியவை ராம்சார் அங்கீகாரம் பெற்றுள்ளன. ஒரே ஆண்டில் 10 இடங்கள் என தமிழ்நாட்டில் இதுவரை 13 இடங்கள் ராம்சார் அங்கீகாரம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார் வளைகுடா கடற்பசு காப்பகம்
தமிழ்நாட்டில் மன்னார் வளைகுடா மற்றும் பாக் விரிகுடா கடல் பகுதியில் காணப்படும் மிகவும் அரிய வகை கடல்வாழ் பாலூட்டி Dugong எனப்படும் ஆவுளியா ஆகும்.
கடல்மாசு மற்றும் கடற்புல் படுகைகள் அழிக்கப்படுவதால் இந்த ஆவுளியா இனம் அண்மை காலங்களில் பெரும் அழிவை சந்தித்து வருகிறது. இதனை பாதுகாக்கும் பொருட்டு இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகத்தை தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய மன்னார் வளைகுடா மற்றும் பாக் விரிகுடா கடற்பகுதியில் அமைத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தேவாங்கு சரணாலயம்
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் தேவாங்குகளை அருகி வரும் உயிரினமாக பட்டியலிட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய வனப் பகுதியில் தேவாங்குள் வாழ்ந்து வருகின்றன.
வேட்டையாடுதல் மற்றும் காடுகளின் அழிவால் தேவாங்குகள் அழிந்து வரும் சூழலை கருத்தில் கொண்டு அவற்றை பாதுகாக்கும் வகையில் மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள 11,806.56 ஹெக்டேர் பரப்பளவில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக கடவூர் தேவாங்கு சரணாலயத்தை அறிவித்து தமிழ்நாடு அரசு.
அகத்தியர் மலை யானைகள் காப்பகம்
தமிழ்நாட்டில் நீலகிரி, ஆனைமலை, கோயம்புத்தூர் மற்றும் திருவில்லிபுத்தூரில் யானைகள் காப்பகங்கள் அமைந்துள்ளன. ஆசிய யானைகளின் வாழ்விட மேம்பாட்டிற்காக கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களிலுள்ள வன வாழ்விடங்களை உள்ளடக்கி தமிழ்நாட்டின் 5-வது யானைகள் காப்பகமாக அகத்தியர் மலை யானைகள் காப்பகத்தை திமுக அரசு ஏற்படுத்தியுள்ளது.
பறவைகள் சரணாலயங்கள்
கழுவெளி பறவைகள் சரணாயலம்
பல்வேறு நாடுகளில் இருந்து வரும் வலசைப் பறவைகள் மற்றும் உள்நாட்டுப் பறவைகளுக்கு வசிப்பிடமாக விளங்கும் தமிழ்நாட்டின் ‘மசாய் மரா’ என்று அழைக்கப்படும் கழுவெளி சதுப்பு நிலம் பழவேற்காடு ஏரிக்கு அடுத்து தமிழ்நாட்டின் மிகப் பெரிய ஏரியை உள்ளடக்கியது. விழுப்புரம் மாவட்டத்தின் வானூர் மற்றும் மரக்காணம் தாலுகாக்களில் 5,161.60 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள கழுவெளி சதுப்பு நிலத்தை தமிழ்நாட்டின் 16வது பறவைகள் சரணாலயமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பல ஆண்டுகளாக கழுவெளியை பறவைகள்சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்று போராடி வரும் சூழலியலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயம்
திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் சர்க்கார் பெரியபாளையம் என்னும் இடத்தில் சுமார் 440 ஏக்கரில் அமைந்துள்ள நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக அமைக்க வேண்டும் என்று கடந்த 2009 ஆம் ஆண்டு முதலே கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து நஞ்சராயன் குளத்தை உள்ளடக்கிய 125.88 ஹெக்டேர் நிலத்தை உள்ளடக்கிய பகுதியை தமிழ்நாட்டின் 17வது பறவைகள் சரணாலயமாக அறிவித்துள்ளது திமுக அரசு.
வன உயிரின சரணாலயங்கள்
காவிரி தெற்கு வன உயிரின சரணாலயம்
கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் 686.405 ஹெக்டேர் பரப்பளவை உள்ளடக்கிய காப்புக்காடுகளை தமிழ்நாட்டின் 17-வது சரணாலயமாக ‘‘காவிரி தெற்கு வன உயிரின சரணாலயம்’ என்று உருவாக்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் காவிரி வடக்கு வன உயிரின சரணாலயம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் காவிரி வன உயிரின சரணாலயம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. நீலகிரி உயிர்கோளக் காப்பகம் வரை தொடர்ச்சியான பாதுகாக்கப்பட்ட வன உயிரின சூழலை ஏற்படுத்துகிறது.
அரிட்டாப்பட்டி பல்லுயிர் பாரம்பரியத் தலம்
சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பு, நீர்நிலைகள், பல்லுயிர் தன்மை மிக்க தாவர, விலங்கின சிற்றினங்களின் வாழ்விடங்கள் போன்றவற்றை பாதுகாக்கும் நோக்கில் மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களில் உள்ள 193.215 ஹெக்டேர் பரப்பிலான பகுதியை அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரியத் தலமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாகும்.
இவ்வாறு ஆட்சிப் பொறுப்பேற்ற 18 மாதங்களில் தமிழ்நாட்டின் வன உயிரின பாதுகாப்பு மற்றும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு நடவடிக்கைகளை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக அரசு எடுத்து வருவது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளது.
- இரா.வெங்கட்ராகவன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
ஒவ்வொரு ஆண்டும் மனிதர்கள் 50 பில்லியன் டன் மண்ணையும், கற்களையும் பூமியில் இருந்து சுரண்டுகின்றனர் என்று சமீபத்திய ஐநா ஆய்வு கூறுகிறது. நீரிற்கு அடுத்தபடியாக உலகில் அதிகம் சுரண்டப்படும் பொருள் மண்ணே.
மதிப்பில்லாத மண்
ஆனால் நீர் போல அரசுகள் மற்றும் தொழிற்துறை இதை முக்கிய மூலவளமாகக் கருதுவதில்லை. இந்தப் போக்கு விரைவில் மாற வேண்டும். கூடுதல் கண்காணிப்பு, விநியோகச்சங்கிலி, எடுக்கப்படும் மண் மூலம் இழக்கப்படும் தாவர விலங்கினங்களுக்கு சமமான இழப்பீடு, சமத்துவமற்ற மண் சுரண்டலிற்கு எதிரான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐ நா அறிக்கை வலியுறுத்துகிறது.
கட்டுமானம் முதல் தகவல் தொடர்பு வரை
தொழிற்துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் கட்டுமானம் முதல் தகவல் தொடர்புத்துறை உட்பட பல்வேறு துறைகளின் முன்னேற்றத்திற்கு ஆதாரமாக இருப்பது மண்ணே. இந்நிலையில் மண் குறித்த அடிப்படைப் புரிதலும், அதன் மதிப்பும் உணரப்பட வேண்டும் என்று ஐ நா ஆய்வுக் குழு வலியுறுத்துகிறது.மனித குலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் மண்ணை நம்பியே இருக்கும்போது அது அனைத்து வகையிலும் முக்கியத்துவம் பெற்ற பொருளாக மதிக்கப்பட வேண்டும் என்று ஐநா சூழல் திட்டத்தின் உலக வள தகவல் தரவு மைய (Global Resource Information Database) இயக்குனரும், ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆசிரியருமான பாஸ்கல் பெடுஸி (Pascal Peduzzi) கூறுகிறார்.
மற்ற வளங்கள் போலவே மண்ணும் கட்டுப்பாடு இல்லாமல் சுரண்டப்பட்டால் அது மறைந்து போகும். இந்தப் போக்கைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று ஆய்வுக்குழு கூறுகிறது.
மண்ணை மதிக்கத் தெரியாத மனிதன்
மற்ற தாதுப்பொருட்கள் போலவே மண்ணும் கருதப்பட வேண்டும். பூமியில் தாதுக்கள், நீர், எண்ணெய் மற்றும் வாயு போன்றவற்றிற்குக் கொடுக்கப்படும் அதே மதிப்பும், முக்கியத்துவமும் மண்ணிற்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று நியூ கேஸில் (Newcastle) பல்கலைக்கழக ஆய்வாளர் மற்றும் ஆய்வுக்கட்டுரையின் மற்றொரு ஆசிரியர் கிறிஸ் ஹாக்னி (Chris Hackney) கூறுகிறார்.
கருந்துளை
ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கினால் மண் வணிகம் குறித்த தகவல்கள் பெரும் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. மண் வியாபாரம் தொடர்பான தரவுகளைச் சுற்றிலும் ஒரு கருந்துளை (blackhole) நிலவுகிறது. இது தொடர்பான உலக மதிப்பிடல் தகவல் வலையமைப்பின் (Global Aggregates information network) புள்ளிவிவரங்களின்படி மண்ணை ஆதாரமாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தயாரிப்பு கடந்த ஆண்டு 4.9% உயர்ந்துள்ளது.
2020ல் 42.2 பில்லியன் டன் என்ற அளவில் இருந்து இது 2021ல் 44.3 பில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது. உலகளவில் சுரண்டப்படும் மண் குறித்த துல்லியமான விவரங்கள் கிடைக்கவில்லை. அதைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் அளவைப் பற்றி மட்டுமே விவரங்கள் கிடைக்கின்றன என்று ஐ நா கூறுகிறது.
மண் சுரண்டினால் சூழல் அழியும்
வரையறை இல்லாமல் தொடரும் மண் சுரண்டலால் உயிர்ப்பன்மயத் தன்மைக்கு இழப்பு ஏற்படுகிறது. புயல்களின்போது இயற்கை அரணாக இருக்கும் மண் குன்றுகள், மேடுகள் அழிவதால் வெள்ளப்பெருக்கு அபாயம் அதிகரிக்கிறது. இது மீனவர் சமுதாயத்தைப் பாதிக்கிறது. எரிபொருள் தகராறுகளுக்கும் வழிவகுக்கிறது. காலநிலைச் சீரழிவிற்கும் முக்கிய காரணமாகிறது. கான்க்ரீட் உற்பத்தி, உலகில் அதிகளவில் கார்பன் உமிழும் தொழிலாக மாறியுள்ளது.
தாவர விலங்கினங்களின் அழிவு
மண் மற்றும் சரளைக்கற்கள் சுரண்டலினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவப்புப் பட்டியல் தாவர விலங்கினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த உயிரினங்களின் எண்ணிக்கை 24,000 இனங்களுக்கும் கூடுதல். என்றாலும் இன்னமும் மண்ணிற்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.
மண் என்னும் மகத்தான இயற்கைச் செல்வம் ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கும், சட்டரீதியிலான கட்டமைப்புகளுக்கும் இடையில் உள்ள விரிசல்களுக்கும் பிளவுகளுக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறது என்று மண் ஆய்வாளர், மண் சொல்லும் கதைகள் (Sand stories) என்ற அமைப்பின் ஆசிரியர் மற்றும் ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவரான கரன் பெரேரா (Kiran Pereira) கூறுகிறார்.
மாற்றுவழிகள்
மண் சுரண்டலைத் தடுக்க மாற்று வழிகள் உள்ளன என்று அறிக்கை கூறுகிறது. கட்டுமானப் பொருட்கள், மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்த விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். 2050ம் ஆண்டிற்கு முன் உலக மக்கட்தொகை 10 பில்லியனைத் தாண்டும். அப்போது உலக மக்களில் 70% பேர் நகரங்களிலேயே வாழ்வர் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மண் மீதான மனிதனின் மோகம் வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தியாவில்
தர நிர்ணயமும் விதிமுறைகளும் ஒழுங்காகப் பின்பற்றப்படாத இந்தியா போன்ற நாடுகளில் மண்ணிற்கு கிராக்கி அதிகம் உள்ளது. இந்தியாவில் மட்டும் 2020 முதல் மண் சுரண்டல் தொடர்பான வன்முறைகள் மற்றும் விபத்துகளில் அரசு ஊழியர்கள் உட்பட நானூறுக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.
கடுமையான சட்டதிட்டங்கள் நடைமுறையில் இருக்கும் வியட்நாம் மெக்காங் (Mekong) டெல்ட்டாவில் கொரோனா கொள்ளைநோய் காலத்தில் சட்டவிரோத மண் சுரண்டல் அதிகரித்துள்ளது.
மண் எடுத்தல் தொடர்பான சர்வதேச விதிமுறைகள் உருவாக்கப்பட்டால் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அரசுகளால் எளிதில் செயல்படமுடியும் என்று கிறிஸ் ஹாக்னி கூறுகிறார்.
மண் சுரண்டினால் மனிதன் அழிவான்
மிதமிஞ்சிய நிலத்தடி நீரை எடுப்பதால் டெல்லி, பாக்தாத் உட்பட உலகில் பல நகரங்களும் மண்ணிற்கடியில் புதைந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மண் சுரண்டலை இதேபோல் தொடர்ந்தால் நாளை ஆறு, குளம், ஏரி போன்ற இயற்கை நீர்நிலை அமைப்புகளே இல்லாமல் போய்விடும். மண் என்னும் மகத்தான வளத்தின் மதிப்பை உடனடியாக மனிதன் உணராவிட்டால் அவனை அழிக்கும் மாபெரும் பேரிடராக விரைவில் அது மாறும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
உலகில் இதுவரை பதிவு செய்யப்பட்டதில் வெப்பமான ஆண்டாக 2021 இருந்தது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். புவி வெப்ப உயர்விற்குக் காரணமான கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் ஆகிய வாயுக்களின் அளவில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்குக் காரணம் என்று ஐரோப்பிய யூனியனின் கோபர்நிகஸ் காலநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்யும் மையத்தின் (Copernicus Climate Change Services) ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஏழு ஆண்டுகள் சாதனை அளவு வெப்பம் நிலவிய ஆண்டுகள். 2021ல் சராசரி புவி வெப்பநிலை உயர்வு 1.1-1.2 செல்சியஸ் அதிகரித்தது. காலநிலை மாற்றம் வெள்ளப் பெருக்குகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூற்றை 20% அதிகரித்துள்ளது. இதற்கு முன் 2016, 2020 ஆகிய ஆண்டுகளில் மிக உயர்ந்த வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. 2015 பாரிஸ் உடன்படிக்கையின்படி உலக நாடுகள் புவி வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸிற்குள் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. இதன் பலன்கள் 2030ம் ஆண்டிலேயே தெரிய வரும்.பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வு காலநிலை மாற்றத்தைத் தீவிரப்படுத்தியதால் உயரும் பூமியின் வெப்பம் வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர். ஐரோப்பா, சீனா ஆகிய இடங்களில் வெள்ளப்பெருக்குகள் முதல் சைபீரியா, அமெரிக்கா ஆகிய இடங்களில் காட்டுத்தீ வரையுள்ள சம்பவங்கள் கார்பன் உமிழ்வின் அளவை அதிகரிக்கக் காரணமானது.
வரும் ஆண்டுகளில் இது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 2021ல் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேனின் அளவு வெகுவாக அதிகரித்தது.
தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளில் மீத்தேன் அளவில் அதிகரிப்பு எதனால் ஏற்பட்டது என்பது குறித்து விஞ்ஞானிகளால் உறுதியாகக் கூற முடியவில்லை.
கடந்த கோடையில் ஐரோப்பாவில் இதுவரை பதிவு செய்யப்பட்டதில் மிக உயர்ந்த வெப்பநிலை பதிவாகியது. இது பிரான்ஸ், ஹங்கேரி ஆகிய நாடுகளில் பல விளைபொருட்களின் அழிவிற்கும் காரணமானது. ஜூலை ஆகஸ்ட்டில் ஏற்பட்ட வெப்ப அலைத் தாக்குதல் துருக்கி, கிரீஸ் நாடுகளில் வனப்பகுதிகளை தீக்கிரையாக்கியது
ஜூலையில் மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருநூறிற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் வரலாறு காணாத பெருமழை, அதனால் பெரும் வெள்ளப் பெருக்குகள் ஆயிரக்கணக்கான மனிதர்களின் வாழ்வை நரகமாக்கியது. இந்தியா, பங்களாதேஷ் நாடுகளில் வீசிய புயல்களால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதே நிலை தொடர்ந்தால் நாளை மனிதன் வாழ பூமி என்றொரு கோள் இருக்குமா என்பது சந்தேகமே.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
எகிப்து ஷார்ம் எல்-ஷேக் (Sharm el-Sheikh) நகரில் நவம்பர் 6 முதல் நவம்பர் 18 வரை காப்27 காலநிலை உச்சி மாநாடு நடைபெற்றது. நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் பல உலக நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்து கொள்ள வந்தனர். எகிப்து அரசு 200 நாடுகளின் தலைவர்களுக்கு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தது. மாநாட்டு அரங்கில் தலைவர்கள் தங்கள் நாட்டுப் பிரதிநிதிக் குழுவினருடன் கலந்துரையாடினர். தங்கள் நாடுகள் கூட்டத்தில் எடுக்க வேண்டிய நிலைபாடு பற்றி பேசினர்.
காப்27 என்றால் என்ன?
காலநிலை மாற்றம் என்பது பூமியில் எங்கோ இருக்கும் அலாஸ்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் மட்டும் நிகழ்ந்து கொண்டிருப்பதில்லை. மாற்றத்தின் மோசமான விளைவுகளை இன்று உலக மக்கள் அனைவரும் அனுபவிக்கிறோம். புதைபடிவ எரிபொருட்களின் மிதமிஞ்சிய பயன்பாட்டால் உயரும் புவியின் வெப்பம், சூழல் மீது தொடர்ந்தும் மனித குலம் ஏற்படுத்தி வரும் தாக்குதல் போன்றவற்றால் நிகழும் சீரழிவுகளை சமாளிக்க உலக நாடுகள் ஒன்றுகூடி செயல்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்த உதவும் ஐநாவின் தலைமையிலான மாநாடு இது.
ஆண்டுதோறும் நடைபெறும் இதில் ஐ நா உறுப்பினர்கள் அனைவரும் பங்காளி நாடுகள் (cop). 2021ல் காப்26 யு கே ஸ்காட்லாந்து க்ளாஸ்கோ நகரில் நடந்தது. எகிப்து மாநாடு இருவார காலம் நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொள்ள ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், இயக்கவாதிகள் உட்பட 9000 பேர் பதிவு செய்து கொண்டனர். மாநாட்டுக் கூடத்தில் பல நாடுகளின் மக்கள் அமைப்புகள், சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் தங்கள் அரங்குகளை தனித்தனியாக அமைத்தன.நீல மண்டலம்
ஐ நாவின் கட்டுப்பாட்டில் செயல்படும் உயர் பாதுகாப்பு நீல மண்டலத்தில் (blue zone) முக்கியப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் மையக் கூடம் அமைந்திருந்தது. இதைச் சுற்றி இந்த அமைப்புகள் தங்கள் அரங்குகளை அமைத்தன. இங்கு விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், வணிக நிறுவனத் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் சூழல் செயல்பாட்டாளர்கள் முக்கிய சூழல் பிரச்சனைகள் குறித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். நவம்பர் 8, 2022 முதல் இது தொடங்கும் என்று நம்பப்படுகிறது.
பன்னாட்டு காலநிலைக் கூட்டங்கள்
இங்கிருந்தே பன்னாட்டு சூழல் பாதுகாப்பு குறித்த அமர்வுகள் உண்மையில் வடிவம் பெறுகின்றன என்று நேச்சர் பாசிட்டிவ் (Nature Possitive) சூழல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் லாய்டு (James Lloyd) கூறினார். பன்னாட்டு சூழல் உச்சி மாநாடுகள் அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் வெறும் கூட்டங்கள் அல்ல. உலக மக்கள் தங்கள் குரலை ஓங்கி உயர்த்த ஒரு களம்.
தொடக்க நாட்களில் என்ன நடந்தது?
மாநாட்டின் ஆரம்ப நாட்களில் உள்ளூர் நிர்வாகிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் சூழல் இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அனுமதிக்கப் பட்டனர். ஒத்துழைப்பை மேம்படுத்தி சூழலைக் காக்க உதவும் இலக்குகளை அடைய ஆட்சியாளர்களுக்கு இக்கருத்துப் பரிமாற்றங்கள் உதவுகின்றன.
முன்னோக்கி செல்ல
கார்பன் உமிழ்வைக் குறைக்க, முந்தைய மாநாடுகளில் எடுக்கப்பட்ட இயற்கை நட்புடைய தீர்மானங்களின் முன்னேற்றத்தைக் குறித்து ஆராய இந்த அமர்வுகள் துணைசெய்கின்றன. காப்26 க்ளாஸ்கோ மாநாட்டில் அதிபர்கள், பிரதமர்கள், பழங்குடியினத் தலைவர்கள், க்ரெட்டா தன்பெர்க் உட்பட சூழல் போராளிகள், பல உலகப் பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்கள் இந்த அமர்வுகளில் கலந்து கொண்டனர்.
பசுமை மண்டலம்
நீல மண்டலத்தில் நாடுகளின் அதிகாரப்பூர்வமான பிரதிநிதிக் குழுக்கள் ஊடகத் துறையினர், நோக்கர்கள் மற்றும் சூழல் தன்னார்வ அமைப்பினருடன் கலந்துரையாடினர். மாநாட்டின் மற்றொரு முக்கியப் பகுதியான பசுமை மண்டலத்தில் (green zone) நிறுவனங்கள் தங்கள் பசுமை கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் இவற்றைப் பார்வையிட்டனர்.
காப் மாநாடுகளில் உலகத் தலைவர்கள் பங்கேற்கும் நீல மண்டலப் பகுதி அரசு நிர்வாகிகள், தலைவர்கள் தவிர மற்றவர்களுக்கு மூடப்படும். என்றாலும் தலைவர்களின் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தங்கள் அரசுகளை காலநிலை சீர்கேடுகளை அகற்ற வலியுறுத்தி சூழல் ஆர்வலர்கள் ஐநா விதிகளுக்கு உட்பட்டு அணிவகுப்புகள், போராட்டங்களை நடத்தினர்.
காப்27
விலைவாசி உயர்வு, உணவுப் பொருட்களின் விலையுயர்வு, வளரும் நாடுகள் தங்களுக்குப் பணக்கார நாடுகள் க்ளாஸ்கோ காப் 26 மாநாட்டில் அறிவித்து பின் காற்றில் பறக்கவிட்ட நிதியுதவிக்கான வாக்குறுதிகள் போன்ற பிரச்சனைகள் பற்றி தீவிரமாக விவாதிக்கப்பட்டன.
காலநிலை மாற்றம் என்பது உலக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்கொண்டு சமாளிக்க வேண்டிய பிரச்சனை. இதற்கு அர்த்தமுள்ள தீர்வு காண உலகம் கை கோர்த்து செயல்பட வேண்டும் எண்று உணவு முறைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஏற்பாட்டாளருமான கேட் குக் (Kate Cooke) கூறுகிறார்.
உலகம் உற்றுநோக்கும் உச்சி மாநாடு
2050ம் ஆண்டிற்குள் உலகில் எல்லாக் குழந்தைகளும் வெப்ப அலைத்தாக்குதலால் பாதிக்கப்படுவர், மீளமுடியாத சீரழிவை நோக்கி பூமி சென்று கொண்டிருக்கிறது, மனித குலத்தையே அச்சுறுத்தும் ஆறாம் இனப்பேரழிவு தொடங்கி விட்டது என்று ஒவ்வொரு நாளும் காலநிலை ஆய்வறிக்கைகள் நம்மை எச்சரிக்கும் நேரத்தில் எகிப்தில் நடைபெற்ற காப்27 ஷெர்ம் எல்-ஷேக் மாநாடு க்ளாஸ்கோ போல் அல்லாமல் சூழலைக் காக்க அதன் மூலம் நம்மை நாமே காத்துக் கொள்ள உருப்படியான முடிவுகளை எடுக்க முயற்சித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- புவி வெப்ப உயர்வு: அடைபடும் சாளரங்கள்
- Fukushima அணு உலை விபத்து - பத்தாண்டுகள் கடந்து அங்கு நிலவும் சூழல் என்ன?
- மரண பள்ளத்தாக்கில் பதியப்பட்ட பூமியின் அதிகபட்ச வெப்பமும், கலிபோர்னியாவின் காட்டுத் தீ காலமும்
- கடல் பகுதிகளை அச்சுறுத்தும் கச்சா எண்ணெய் - சுற்றுச்சூழல் பாதிப்பில் மொரிஷியஸ் தீவுகள்
- சுற்றுச் சூழல் தாக்க அறிக்கை 2020 (EIA 2020) ஏன் எதிர்க்கப்பட வேண்டியது?
- இ.ஐ.ஏ 2020 எதிர்ப்புகள் வலுப்பெறுமா?
- சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்
- 5 டிரில்லியன் பொருளாதாரம்: நாம் கொடுக்கப் போகும் விலை என்ன?
- பிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்
- சுற்றுச்சூழல் - அறிவியல் அறிஞர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!
- கனிம எரிபொருள் துறையும், சீரழியும் சுற்றுச்சூழலும்
- பேரழிவினால் நிலை குலைந்திருக்கும் ஆஸ்திரேலியா!
- கிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்
- சூழலியல் - நாய் விற்ற காசு குரைக்குமா?
- புவி வெப்பமடைதல் - ஓர் எச்சரிக்கை
- சூழலியல் பேரழிவுக்குத் தொழில்நுட்பத் தீர்வுகள் போதா!
- காஸாவின் பாதிப்புகளால் சுற்றுச்சூழல் ஆபத்துகளை எதிர்நோக்கும் இஸ்ரேல்!
- பருவநிலை மாற்றமும், பேரழிவு புயல்களும்
- பருவநிலை மாற்றத்தால் உலகிற்கு பேராபத்து
- பிளாஸ்டிக்கை ஒழிப்போம்! உயிரினங்களை காப்போம்!