நகரங்களில் தெருவோர மரம் நடுதல், மழைநீர் சேகரிப்புத் தோட்டங்கள் அமைத்தல், நடைபாதைகளில் செடி வளர்ப்பு போன்றவற்றின் மூலம் பசுமைப் போர்வையின் பரப்பை அதிகரிப்பது நகரங்கள் சூடாவதைத் தடுக்க உதவும் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன.

நகர விரிவாக்கம் மற்றும் புவி வெப்ப உயர்வு நகரங்களை நாளுக்கு நாள் வெப்பமடையச் செய்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பத்தாண்டிலும் 0.05 சி என்ற அளவில் வெப்பநிலை சராசரியாக அதிகரிக்கிறது. நாஞ்ஜிங் (Nanjing) மற்றும் ஏல் (Yale) பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 2000 முதல் 2021 வரை 2000 நகரங்களின் செயற்கைக்கோள் தரவுகளை கிராமப்புற தரை வெப்பநிலை அளவுகளுடன் ஒப்பிட்டு ஓர் ஆய்வை நடத்தினர்.

நகரப் பகுதிகளில் பகல்நேர வெப்பநிலை பத்தாண்டிற்கு சராசரியாக 0.56 டிகிரி, இரவு நேர வெப்பநிலை சராசரியாக 0.43 டிகிரி என்ற அளவில் அதிகரித்துள்ளது இந்த ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. கிராமப் பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது இந்த உயர்வு சராசரியாக பகலில் 0.4 மற்றும் இரவில் 0.37 டிகிரி என்ற அளவில் இருந்தன. நகரங்கள் கிராமப் பகுதிகளை விட 29% வேகமாக சூடாகின்றன என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.urban heatingநகரங்களின் அளவும் வெப்ப உயர்வும்

நகரங்களின் அளவு அதன் வெப்பமடைதலுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்கிறது. பகல் நேரத்தில் மாநகரங்கள் கடந்த பத்தாண்டுகளில் சராசரியாக 0.69 டிகிரி சூடாகியுள்ளன. சிறிய நகரங்கள் 0.41 டிகிரி மட்டுமே வெப்பமடைந்துள்ளன. கண்டங்களைப் பொறுத்தும் நகரங்கள் சூடாவதில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. மாநகரங்கள் அதிகமாக இருக்கும் ஆசியாவில் பகல் மற்றும் இரவு நேர வெப்பம் அதிகரித்துள்ளது.

ஐரோப்பிய நகரங்கள் பகலில் குறைவான அளவே வெப்பமடைகின்றன. ஓசியானா பகுதியில் இருக்கும் நகரங்கள் இரவில் குறைவான அளவு வெப்பமடைகின்றன. ஆனால் ஆசிய நகரங்கள் பகல், இரவு என்று வேறுபாடில்லாமல் வெப்பமடைந்து வருகின்றன. ஆராயப்பட்டவற்றில் 90% நகரங்களில் நகர விரிவாக்கம், காலநிலை மாற்றமே இதற்கு முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது. இங்கு பத்தாண்டுகளில் சராசரியாக மனித செயல்களால் மட்டும் 0.3 டிகிரி வெப்ப உயர்வு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் நிலை

இந்தியாவில் கடந்த பத்தாண்டில் விரைவான நகரமயமாக்கம் 0.23 டிகிரி வெப்ப உயர்விற்குக் காரணமாக இருந்துள்ளது. ஆனால் கட்டாந்தரையாக இருக்கும் நிலப்பகுதிகள் மரம் செடிகள் நட்டு வளர்க்கப்படும்போது குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தை விட இரவில் இது அதிகம் நிகழ்கிறது. அப்போது தாவரங்கள் தங்களைச் சுற்றியுள்ள நிலப்பகுதியில் இருந்து வெப்பத்தை உறிஞ்சி குளிரச் செய்கின்றன என்று இந்த ஆய்வு கூறுகிறது.

சிகாகோ மாதிரி

ஐரோப்பாவில் நகரப் பசுமையாக்குதல் மூலம் நகரங்கள் வெப்பமடைவதை சராசரியாக 0.13 டிகிரி சி என்ற அளவில் குறைக்க முடிந்துள்ளது. சிகாகோவில் 1995ல் ஏற்பட்ட வெப்ப அலைத் தாக்குதலிற்குப் பிறகு நடைமுறைப் படுத்தப்பட்ட பசுமையாக்கல் திட்டத்தினால் கடந்த பத்தாண்டில் 0.084 டிகிரி வெப்பம் குறைந்துள்ளது.

நகர வெப்பமயமாவதை மேலும் மோசமாகாமல் தடுக்க நகர விரிவாக்கத் திட்டங்களின்போது அவற்றின் பசுமைப் போர்வையை அதிகரிக்கச் செய்ய முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கொள்கை வகுப்பவர்களை வலியுறுத்தியுள்ளனர்.

இயற்கை வழியில் தாவரங்கள் வளர்ப்பதன் மூலம் மேற்கொள்ளப்படும் பசுமையாக்குதல், நகரங்களில் எல்லா காலநிலைகளுக்கும் பயனளிக்கிறது என்று க்ளாஸ்ட்டர்ஷெர் (Gloucestershire) கவுன்சிலின் காலநிலை மேலாளர் ஜான் பெர்க் (Jon Burke) கூறுகிறார். பசுமைப் பரப்பு அதிகரிப்பதால் நகரங்களில் குற்றச் செயல்கள், மனநலக் கோளாறுகள் குறையும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

40% பசுமைப் போர்வை

வெப்பநிலையைக் குறைக்க நகரப்பரப்பில் 40% பசுமை தேவை. ஆள்பவர்கள் இதற்கு உடனடி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அதிகரித்து வரும் நகர வெப்பம் மற்றும் வெள்ளப் பெருக்குகளை குறைக்க முடியும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். நகர நிர்வாகங்கள் மக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்காக செலவிடும் தொகையை விட இதற்குக் குறைவாகவே செலவாகும் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

வளர்ச்சி என்ற பெயரில் இருக்கும் மரங்களை வெட்டி, மனிதன் கட்டியெழுப்பும் கான்க்ரீட் காடுகள் நாளை அவனைக் காக்க முன்வராது. கிராமங்களை அழித்து நகரங்களாக்கி அவன் நாகரீகப் போர்வையால் உருவாக்கும் இடங்களே அவனுக்கு கல்லறையாவதற்கு முன், பசுமைப் போர்வையை ஏற்படுத்த முயலவேண்டும்.

மேற்கோள்கள்

https://www.theguardian.com/environment/2022/sep/29/urban-greening-reduce-impact-global-heating-cities-study

https://www.mathrubhumi.com/environment/news/global-warming-rate-30-percent-faster-when-comparing-to-rural-area-1.7936660

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It