கடந்த இருபது ஆண்டுகளில் அதி தீவிர காலநிலை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 16 மில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. சமீப பத்தாண்டுகளில் புயல்கள், வெள்ளப்பெருக்கு, வெப்ப அலைத் தாக்குதல்கள், வறட்சி ஆகியவற்றால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்; உடைமைகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

மனித செயல்களால் உருவாகியுள்ள புவி வெப்ப உயர்வு ஏற்படுத்தும் சேதங்களைப் பற்றிய முதல் உலகளாவிய ஆய்வு இது. 2000 முதல் 2019 வரையுள்ள காலத்தில் மட்டும் சராசரியாக ஆண்டுக்கு 140 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. சேத மதிப்பு ஆண்டிற்கு ஆண்டு வேறுபடுகிறது. 2022ல் மட்டும் இதனால் 280 பில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டுள்ளது என்று சமீபத்திய தரவு விவரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

வருமானம் குறைந்த நாடுகளில்

வருமானம் குறைந்த நாடுகளில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சேதம் பற்றி மிகக் குறைவாகவே மதிப்பிடப்படுகிறது. தரவு விவரங்கள் குறைவாகவே உள்ளன. வெப்ப உயர்வினால் ஏற்படும் பயிர் இழப்பு, கடல் நீர் மட்ட உயர்வு போன்றவை இத்தகைய விவரங்களில் சேர்க்கப்படுவதில்லை. இழப்பு குறித்த பொருளாதார தரவுகளை அதி தீவிர காலநிலை சம்பவங்கள் புவி வெப்ப உயர்வை எந்த அளவு மோசமாகப் பாதிக்கிறது என்பது பற்றிய விவரங்களுடன் இணைத்து ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.hurricane katrinaகடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் காலநிலை மாற்றத்தால் உண்டாகும் அதி தீவிர வானிலையால் 1.2 பில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றில் இரண்டு பகுதி உயிரிழப்புகள், மற்றொரு பகுதி சொத்துகள் இழப்பு மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

ஹார்வி (Harvey) மற்றும் நார்கிஸ் (Nargis) சுழற்காற்று காலநிலை சேதங்களில் மூன்றில் இரண்டு பங்கு இழப்பிற்குக் காரணமாக இருந்தன.

இழப்பிற்கு காரணமான பேரிடர்கள்

16% சேதம் வெப்ப அலைத் தாக்குதல்கள், 10% இழப்புகள் வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சியால் ஏற்பட்டன. ஐநாவின் சார்பில் 2022ல் நடந்த காலநிலை மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்ட சேதம் மற்றும் இழப்பீட்டு உடன்படிக்கையின்படி ஏழை நாடுகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியுதவியைக் கணக்கிட, காலநிலை பாதிப்பால் ஏற்பட்டுள்ள தனிநபர் இழப்பை மதிப்பிட, நிதியுதவியின் விநியோகம் போன்றவற்றில் இந்த ஆய்வு உதவும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

“தரவு விவரங்களை விட நிலைப்படுத்தப்பட்ட கணினி மாதிரி கணிப்புகள் பாதிப்புகளை குறைவாகவே மதிப்பிடுகின்றன. தீவிர காலநிலை சம்பவங்கள் ஏராளமாக நடக்கின்றன. இவற்றால் கொல்லப்பட்டவர்கள், பொருளாதாரச் சேதங்கள் பற்றிய தரவுகள் போதுமான அளவு இல்லை. இதனால் 16 மில்லியன் டாலர் இழப்பு என்பது குறைவான மதிப்பு. ஐரோப்பாவில் ஏற்பட்ட வெப்ப அலைத் தாக்குதல் குறித்த தரவுகள் மட்டுமே முழுமையாக உள்ளன. சஹாரா துணைக்கண்டத்தில் பேரிடரால் உயிரிழந்தவர்களைப் பற்றி விவரங்கள் இல்லை” என்று சக ஆய்வாளர் ரெபெக்கா நியூமேனுடன் (Rebecca Newman) இணைந்து இந்த ஆய்வை நடத்திய நியூசிலாந்து வெலிங்டன் விக்டோரியா பல்களைக்கழக ஆய்வாளர் மற்றும் ஆய்வுக்குழுவின் தலைவர் பேராசிரியர் இலான் நய் (Illan Noy) கூறுகிறார்.

ஏழு மடங்கு உயர்வு

1970களுக்குப் பிறகு மோசமான வானிலையால் உண்டான இழப்புகள் ஏழு மடங்கு அதிகரித்துள்ளது என்று உலக வானிலை ஆய்வு நிறுவனம் (WMO) கூறுகிறது. புவி வெப்ப உயர்வுடன் ஒப்பிடும்போது மக்கட்தொகைப் பெருக்கம், நகரங்களை நோக்கிய இடம்பெயர்வு, செய்தி வெளியிடுதலில் உண்மைத் தன்மை போன்றவற்றால் இழப்பின் அளவு மாறும் என்று நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (Journal Nature Communications) ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இது பற்றிய ஆய்வுக்கட்டுரை கூறுகிறது.

மோசமான சூழல் பேரிடர்களை புவி வெப்ப உயர்வு எவ்வாறு அடிக்கடி ஏற்படுத்துகிறது என்பது பற்றி நூற்றுக்கணக்கான பல சிறிய ஆய்வுகள் நடந்துள்ளன. இது மனித செயல்கள் மூலம் உருவாகும் புவி வெப்ப உயர்வினால் ஏற்படும் சேதத்தின் மதிப்பை சிறிய அளவுகளில் கணக்கிடுகிறது. இத்தகைய சிறிய ஆய்வு முடிவுகளின் மதிப்புகளை ஆய்வாளர்கள் சர்வதேச பேரிடர் தரவு தளத்தில் (International disaster data base) பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள கோப்புகளுடன் இணைத்து ஆராய்ந்தனர்.

இந்த தளத்தில் பேரிடரால் 10 பேர் உயிரிழந்திருந்தாலும், 100 பேரின் உடைமைகள் சேதமடைந்திருந்தாலும், பாதிக்கப்பட்ட நாடுகளில் இதனால் அவசரநிலை அறிவிக்கப்பட்டாலும், பன்னாட்டு உதவி கோரப்பட்டிருந்தாலும் அது பற்றிய அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. வேறுபட்ட இந்த புதிய அணுகுமுறையை ஆய்வாளர்கள் பயன்படுத்தி ஆராய்ந்தபோது காலநிலை பாதிப்பால் சராசரியாக ஆண்டிற்கு 140 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

60 முதல் 230 பில்லியன் டாலர் வரை இழப்பின் மதிப்பு உள்ளது. கணினி மாதிரிகள் கணித்துக் கூறிய மதிப்புகளை விட இது மிக அதிகம். உலகில் காணப்படும் மிக உயர்ந்த வெப்பநிலையை ஆதாரமாகக் கொண்டு இந்த புதிய ஆய்வுகள் நடந்தன. ஆனால் முந்தைய ஆய்வுகள் கணினி மாதிரிகள், உலகளாவிய சராசரி வெப்பநிலையை பயன்படுத்தி ஆராய்ந்தன.

அதிக இழப்பை ஏற்படுத்திய சம்பவங்கள்

2003ல் ஐரோப்பாவைத் தாக்கிய வெப்ப அலை, 2008ல் மியான்மாரை பாதித்த நார்கீஸ் சுழற்காற்று, 2010ல் சோமாலியாவில் ஏற்பட்ட கடும் வறட்சி மற்றும் ரஷ்யாவை பாதித்த வெப்ப அலை ஆகியவை இதுவரை நடந்தவற்றில் மிக அதிக இழப்பை ஏற்படுத்தியுள்ளன. 2005 மற்றும் 2017ல் ஹரிக்கேன் புயல்கள் அமெரிக்காவைத் தாக்கியபோது மிக அதிக பொருளாதார சேதம் ஏற்பட்டது. உயிரிழப்பின் மதிப்பைக் கணக்கிடுவது பலருக்கும் சங்கடத்தைத் தருகிறது. ஆனால் பல துறைகளில் நிதி ஒதுக்கீட்டிற்கு இது அவசியம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

“உலகளவில் காலநிலை மாற்றம் சேதங்களின் அளவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. பொருளாதார வளர்ச்சி, நகரமயமாக்குதல் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது இந்த சேதங்கள் புறக்கணிக்கத் தக்கவையே என்று பலர் கூறுவது தவறு என்பதை இந்த ஆய்வு நிரூபிக்கிறது. கண்ணெதிரில் நிகழும் சம்பவங்களின் அடிப்படையிலேயே இந்த ஆய்வுகள் அமைந்துள்ளன என்பதே இதற்குக் காரணம்” என்று உலக வங்கி ஆய்வாளர் டாக்டர் ஸ்டெஃபான் ஹாலிகார்ட் (Dr Stepaane Hallegatte) கூறுகிறார்.

பணக்கார நாடுகளில் காலநிலை ஆய்வு நிலையங்கள் அதிக அளவில் செயல்படுகின்றன. ஏழை நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை அறிய அங்கு அதிக ஆய்வு அமைப்புகள் தோற்றுவிக்கப்பட வேண்டும். புவி வெப்ப உயர்வை முற்றிலும் தடுத்து நிறுத்த முடியாத நிலையை நோக்கி பூமியை இழுத்துச் செல்லும் மனிதன் அதைக் குறைக்கவேனும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே இந்த ஆய்வின் முடிவுகள் வலியுறுத்துகின்றன.

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2023/oct/09/climate-crisis-cost-extreme-weather-damage-study?

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It