எகிப்து ஷார்ம் எல்-ஷேக் (Sharm el-Sheikh) நகரில் நவம்பர் 6 முதல் நவம்பர் 18 வரை காப்27 காலநிலை உச்சி மாநாடு நடைபெற்றது. நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் பல உலக நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்து கொள்ள வந்தனர். எகிப்து அரசு 200 நாடுகளின் தலைவர்களுக்கு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தது. மாநாட்டு அரங்கில் தலைவர்கள் தங்கள் நாட்டுப் பிரதிநிதிக் குழுவினருடன் கலந்துரையாடினர். தங்கள் நாடுகள் கூட்டத்தில் எடுக்க வேண்டிய நிலைபாடு பற்றி பேசினர்.

காப்27 என்றால் என்ன?

காலநிலை மாற்றம் என்பது பூமியில் எங்கோ இருக்கும் அலாஸ்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் மட்டும் நிகழ்ந்து கொண்டிருப்பதில்லை. மாற்றத்தின் மோசமான விளைவுகளை இன்று உலக மக்கள் அனைவரும் அனுபவிக்கிறோம். புதைபடிவ எரிபொருட்களின் மிதமிஞ்சிய பயன்பாட்டால் உயரும் புவியின் வெப்பம், சூழல் மீது தொடர்ந்தும் மனித குலம் ஏற்படுத்தி வரும் தாக்குதல் போன்றவற்றால் நிகழும் சீரழிவுகளை சமாளிக்க உலக நாடுகள் ஒன்றுகூடி செயல்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்த உதவும் ஐநாவின் தலைமையிலான மாநாடு இது.

ஆண்டுதோறும் நடைபெறும் இதில் ஐ நா உறுப்பினர்கள் அனைவரும் பங்காளி நாடுகள் (cop). 2021ல் காப்26 யு கே ஸ்காட்லாந்து க்ளாஸ்கோ நகரில் நடந்தது. எகிப்து மாநாடு இருவார காலம் நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொள்ள ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், இயக்கவாதிகள் உட்பட 9000 பேர் பதிவு செய்து கொண்டனர். மாநாட்டுக் கூடத்தில் பல நாடுகளின் மக்கள் அமைப்புகள், சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் தங்கள் அரங்குகளை தனித்தனியாக அமைத்தன.cop27நீல மண்டலம்

ஐ நாவின் கட்டுப்பாட்டில் செயல்படும் உயர் பாதுகாப்பு நீல மண்டலத்தில் (blue zone) முக்கியப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் மையக் கூடம் அமைந்திருந்தது. இதைச் சுற்றி இந்த அமைப்புகள் தங்கள் அரங்குகளை அமைத்தன. இங்கு விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், வணிக நிறுவனத் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் சூழல் செயல்பாட்டாளர்கள் முக்கிய சூழல் பிரச்சனைகள் குறித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். நவம்பர் 8, 2022 முதல் இது தொடங்கும் என்று நம்பப்படுகிறது.

பன்னாட்டு காலநிலைக் கூட்டங்கள்

இங்கிருந்தே பன்னாட்டு சூழல் பாதுகாப்பு குறித்த அமர்வுகள் உண்மையில் வடிவம் பெறுகின்றன என்று நேச்சர் பாசிட்டிவ் (Nature Possitive) சூழல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் லாய்டு (James Lloyd) கூறினார். பன்னாட்டு சூழல் உச்சி மாநாடுகள் அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் வெறும் கூட்டங்கள் அல்ல. உலக மக்கள் தங்கள் குரலை ஓங்கி உயர்த்த ஒரு களம்.

தொடக்க நாட்களில் என்ன நடந்தது?

மாநாட்டின் ஆரம்ப நாட்களில் உள்ளூர் நிர்வாகிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் சூழல் இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அனுமதிக்கப் பட்டனர். ஒத்துழைப்பை மேம்படுத்தி சூழலைக் காக்க உதவும் இலக்குகளை அடைய ஆட்சியாளர்களுக்கு இக்கருத்துப் பரிமாற்றங்கள் உதவுகின்றன.

முன்னோக்கி செல்ல

கார்பன் உமிழ்வைக் குறைக்க, முந்தைய மாநாடுகளில் எடுக்கப்பட்ட இயற்கை நட்புடைய தீர்மானங்களின் முன்னேற்றத்தைக் குறித்து ஆராய இந்த அமர்வுகள் துணைசெய்கின்றன. காப்26 க்ளாஸ்கோ மாநாட்டில் அதிபர்கள், பிரதமர்கள், பழங்குடியினத் தலைவர்கள், க்ரெட்டா தன்பெர்க் உட்பட சூழல் போராளிகள், பல உலகப் பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்கள் இந்த அமர்வுகளில் கலந்து கொண்டனர்.

பசுமை மண்டலம்

நீல மண்டலத்தில் நாடுகளின் அதிகாரப்பூர்வமான பிரதிநிதிக் குழுக்கள் ஊடகத் துறையினர், நோக்கர்கள் மற்றும் சூழல் தன்னார்வ அமைப்பினருடன் கலந்துரையாடினர். மாநாட்டின் மற்றொரு முக்கியப் பகுதியான பசுமை மண்டலத்தில் (green zone) நிறுவனங்கள் தங்கள் பசுமை கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் இவற்றைப் பார்வையிட்டனர்.

காப் மாநாடுகளில் உலகத் தலைவர்கள் பங்கேற்கும் நீல மண்டலப் பகுதி அரசு நிர்வாகிகள், தலைவர்கள் தவிர மற்றவர்களுக்கு மூடப்படும். என்றாலும் தலைவர்களின் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தங்கள் அரசுகளை காலநிலை சீர்கேடுகளை அகற்ற வலியுறுத்தி சூழல் ஆர்வலர்கள் ஐநா விதிகளுக்கு உட்பட்டு அணிவகுப்புகள், போராட்டங்களை நடத்தினர்.

காப்27

விலைவாசி உயர்வு, உணவுப் பொருட்களின் விலையுயர்வு, வளரும் நாடுகள் தங்களுக்குப் பணக்கார நாடுகள் க்ளாஸ்கோ காப் 26 மாநாட்டில் அறிவித்து பின் காற்றில் பறக்கவிட்ட நிதியுதவிக்கான வாக்குறுதிகள் போன்ற பிரச்சனைகள் பற்றி தீவிரமாக விவாதிக்கப்பட்டன.

காலநிலை மாற்றம் என்பது உலக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்கொண்டு சமாளிக்க வேண்டிய பிரச்சனை. இதற்கு அர்த்தமுள்ள தீர்வு காண உலகம் கை கோர்த்து செயல்பட வேண்டும் எண்று உணவு முறைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஏற்பாட்டாளருமான கேட் குக் (Kate Cooke) கூறுகிறார்.

உலகம் உற்றுநோக்கும் உச்சி மாநாடு

2050ம் ஆண்டிற்குள் உலகில் எல்லாக் குழந்தைகளும் வெப்ப அலைத்தாக்குதலால் பாதிக்கப்படுவர், மீளமுடியாத சீரழிவை நோக்கி பூமி சென்று கொண்டிருக்கிறது, மனித குலத்தையே அச்சுறுத்தும் ஆறாம் இனப்பேரழிவு தொடங்கி விட்டது என்று ஒவ்வொரு நாளும் காலநிலை ஆய்வறிக்கைகள் நம்மை எச்சரிக்கும் நேரத்தில் எகிப்தில் நடைபெற்ற காப்27 ஷெர்ம் எல்-ஷேக் மாநாடு க்ளாஸ்கோ போல் அல்லாமல் சூழலைக் காக்க அதன் மூலம் நம்மை நாமே காத்துக் கொள்ள உருப்படியான முடிவுகளை எடுக்க முயற்சித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It