கீற்றில் தேட...

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் அறைகூவலை ஏற்று, 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற `உப்புக் காய்ச்சும்’ அறப்போராட்டத்தில் இவரும் ஈடுபட்டார்! ஒரு கையில் தமது கைக்குழந்தையுடனும், மறுகையில் காங்கிரஸ் கட்சிக் கொடியுடனும் போராட்டத்தில் கலந்து கொண்டார். வெள்ளை ஏகாதிபத்தியக் காவலர்களின் குண்டாந்தடித் தாக்குதலையும் அச்சம் இன்றி எதிர் கொண்டவர் கடலூர் அஞ்சலையம்மாள்!

cuddalore anjalaiammal ஆங்கிலேய `நீலன்’ சிலையை அகற்றக் கோரி 1927 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் குடும்பத்தோடு கலந்து கொடு, செல்ல மகள் சின்னஞ்சிறுமி அம்மாக்கண்ணுவுடன் சிறை சென்றார்! சிறுமி அம்மாக்கண்ணு சிறைத்தண்டனை பெற்று சென்னை இளம் பெண்கள் சிறையிடடைகப்பட்டார். மகாத்மா காந்தி அப்பொழுது சென்னை வந்தார். சிறையில் அடைக்கப்பட்டவர்களை இராஜாஜியுடன் நேரில் சென்று சந்தித்தார். சிறையில் இருந்த, கடலூர் அஞ்சலையம்மாவையும், மகள் அம்மாக்கண்ணுவையும் காந்தியடிகளிடம் இராஜாஜி அறிமுகம் செய்தார். அப்போது, மிகுந்த மகிழ்ச்சி கொண்ட மகாத்மா, சிறுமி அம்மாக்கண்ணுவை வார்தாவில் உள்ள தமது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். அம்மாக்கண்ணுவின் பெயரை, `லீலாவதி’ என்று பெயர் மாற்றம் செய்து, தமது ஆசிரமத்தில் தங்கவைத்துப் பெருமைப்படுத்தினார்.

காந்தியத் தொண்டர்

 கடலூர் அஞ்சலையம்மாள், 1890 ஆம் ஆண்டு கடலூரில் பிறந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தில்1921 ஆம் ஆண்டு தென்னாட்டிலிருந்து ஈடுபட்ட முதல் பெண்மணி என்ற பெருமை அவருக்கு உண்டு.

 இவரது கணவர் முருகப்பாவும், இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவர்!

 கடலூர் அஞ்சலையம்மாள் 1940 ஆம் ஆண்டு நடைபெற்ற தனிநபர் அறப்போராட்டத்திலும் பங்கு பெற்றுச் சிறையேகினவர்!

 `வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தை காங்கிரஸ் கட்சி அறிவித்தவுடன் வீரமுடன் அதில் இறங்கியதால் கடலூர், திருச்சி, வேலூர், பெல்லாரி முதலிய இடங்களில் பல ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு `வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பெண்களை ஈடுபடச் செய்தார். கருவுற்றிருக்கும் போதே சிறையில் அடைக்கப்பட்டார். மகப்பேறு காலத்தில் சில வாரங்கள் சிறையிலிருந்து வெளியில் வந்து குழந்தை பிறந்தவுடன் கைக்குழந்தையுடன் மீண்டும் சிறை சென்றார்.

 சென்னை மாநகரில் தடை செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மாநாட்டிற்குத் தலைமை தாங்கிப் பெண்கள் படையுடன் கைது செய்யப்பட்டார். கடலூர் அஞ்சலையம்மாள் `சிறைப்பறவை`யாக வாழ்ந்தார் என்பதே சிறப்புக்குரிய வரலாறு!

 இவர், மிகச் சிறந்த பேச்சாளர். அக்காலத்தில் இவரது பேச்சைச் கேட்பதற்கு கிராமப்புற மக்கள் திரண்டு வந்தனர். இவரது உரை மக்களை வீறுகொண்டு எழச்செய்தது! விடுதலை உணர்வு பெற்றுப் போராட்டத்தில் ஈடுபடச் செய்தது.

 கடலூர் அஞ்சலையம்மாள் இல்லத்தில் தந்தை பெரியாரும், மகாத்மா காந்தியும் சந்தித்து உரையாடியுள்ளனர். அந்தளவு, அவரது குடும்பம் விடுதலைப் போராட்டத்தின் பாசறையாக விளங்கியது. தமது குடும்பச் சொத்துக்களை விற்று, விடுதலைப் போராட்டத்திற்குச் செலவிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 கடலூர் சட்டமன்றத் தொகுதியில் 1929 ஆம் ஆண்டு போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் கடலூர் சட்டமன்றத்தொகுதிக்கு 1929 முதல் 1952 வரை நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட்டவர் ; போட்டியிட்டபோதெல்லாம் வெற்றி பெற்றவர் கடலூர் அஞ்சலையம்மாள்!

 வட ஆற்காடு மாவட்டத்தில் புகழ் பெற்ற விடுதலைப் போராட்ட வீரரான ஜமதக்னி கடலூர் அஞ்சலையம்மாளின் மருமகன் ஆவார்! பொதுவுடைமைக் கட்சியின் நிறுவன உறுப்பினராகவும், வட ஆற்காடு மாவட்டத்தின் செயலாளராகவும், மார்க்சிய சிந்தனையாளராகவும் விளங்கியவர் ஜமத்க்னி! சிறையிலிருந்த தியாகியான தமது தந்தை முருகப்பாவைச் சந்திக்கச் சென்றபோதெல்லாம் அவரது மகள் லீலாவதி, ஜமத்க்னியையும் சந்தித்தார். அவர்களது சந்திப்பு காதலாக மலர்ந்தது. நாடு விடுதலை பெற்ற பின் ஜமதக்னியை லீலாவதி மணம் புரிந்து கொண்டார்! ஆம்! தாலிக்குப் பதிலாக அரிவாள் சுத்தியலைக் கொண்ட தங்கத் தகட்டினை அணிந்த திருமணம் புரிந்துகொண்டனர் இப்புரட்சித்தம்பதியினர்! இந்தியதேச விடுதலைப் போராட்டத்தில், கடலூர் அஞ்சலையம்மாள், அவரது கணவர் முருகப்பா அவரது மகள் லீலாவதி, அவரது மருமகன் ஜமத்க்னி ஆகிய நான்கு பேர் ஒரே குடும்பத்திலிருந்து சிறை சென்ற பெருமைக்குரியவர்கள்! இந்திய விடுதலை வேள்விக்கு ஆகுதியாய் ஆன அரும்பெரும்தியாகிகள்!

 இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலையம்மாள் 1961 ஆம் ஆண்டு மறைந்தார். அவரது பெயர் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்!

Pin It

சிவகங்கை இராசேந்திரன்(16.7.1947 – 27.1.1965)

rasendran hindi agitation

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் சிவகங்கை இராசேந்திரன், காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு முதன் முதல் பலியானார். சொந்த மக்களைக் கொள்வதற்காக இராணுவம் இறக்கப்பட்டதும், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதும் 1965 ஆம் ஆண்டு தான் தமிழகத்தில் முதன் முதலாய் நடந்தன.

காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியான இராசேந்திரன், காவலராய்ப் பணியாற்றியவரின் மகன் தந்தை முத்துக்குமார் சிவகங்கையில் காவலர் முத்துக்குமார் வள்ளிமயில் இருவரின் மகனாக 16.7.1947இல் பிறந்தவர் இராசேந்திரன். உடன் பிறந்தோர், ஆறு பேர் சக்திவேல், மேனகா, தைலம்மாள், சகுந்தலா, சேகர், கீதா.

இந்தி எதிர்ப்பு முழக்கத்துடன் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் 3000  பேருக்குமேல் 27.1.1965 காலை சிதம்பரம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். ‘இந்தி அரக்கி’ கொடும் பாவியும் இழுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலத்தை மரித்த காவல் துறையினர் கற்களை வீசிக் கலைக்க முடியாததால் தடியடி நடத்தினர்.

rasendran hindi agitation 1'தமிழ் வாழ்க' எனும் முழக்கம் கேட்டு ஆந்திரக் காவல் படை ஆத்திரம் கொண்டது. வானத்தில் சுட்டு எச்சரிக்கை செய்யாமல், அநியாயமாய் மாணவர் கூட்டத்தை நேருக்கு நேர் சுட்டது. சிவகங்கை இராசேந்திரனின் நெற்றியில் துப்பாக்கிக்கு குண்டு பாய்ந்தது.

காவல் வெறியாட்டத்தில் மாணவர் இராசேந்திரன் பலியான செய்தி தமிழக மாணவர் உலகத்தைத் துடிக்க வைத்தது. மாணவருலகம் ஏந்தும் தீப்பந்தமானார் சிவகங்கை இராசேந்திரன். மாணவர்களால் எழுப்பப்பட்ட மாணவர் இராசேந்திரன் சிலை, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு, இன்றும் திசைகாட்டிக் கொண்டுள்ளது.

எத்தனை நாள் இந்திப்போர்?

எத்தனை நாள் எத்தனை ஆண்(டு)

   எத்தனைப் போர் எத்தனைப் பேர்

         எத்தனைத் தோள் இந்திக் கெழுவதோ?

எத்தனைப்பேச்(சு) எத்தனைத்தாள்?

     எத்தனைப்பா(டு) எத்தனைப் பாட்(டு)

           எத்தனை தாம் எழுதிக் குவிப்பதோ?

எத்தனைநாள் நாம் பொறுப்ப(து)

     எத்தனைப் பேர் நாமிறப்ப(து)

           எத்தனைநாள் இந்தி எதிர்ப்பதோ?

ஒத்திணையும் எண்ணமிலை;

      ஒன்றிரண்டு பார்த்துவிட

              ஊர்ப்படைக்கு நாளொன் றுரைப்பமே! 

                                                  - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

                                                        (கனிச்சாறு – 1, பக்கம் – 108)

- புலவர் செந்தலை ந.கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை

(தொடரும்...)

Pin It

சென்னையில் 1909 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘தி மெட்ராஸ் நான் பிராமின்ஸ் அசோஸியேசன்’ (The Madras Non-Bhramins Association) - எனும் அமைப்பை, ‘நான் பிராமின் கூட்டத்தாரென்றால் யாவர்?’ – என்ற தலைப்பில் பின்வருமாறு, பண்டிதமணி அயோத்திதாசர் விமர்சனம் செய்துள்ளார்.

“தற்காலம், பிராமணர்கள் என்று பெயர் வைத்துள்ள வகுப்பார்கள் கீழ்ச் சாதி, மேல் சாதி என்னும் வரம்புகளை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். சாதி பேதம் வைத்துள்ளவர்கள் யாவரும் பிராமணக் கூட்டத்தவர்களையே சேர்ந்தவர்களாவர். சைவம், வைணவம், வேதாந்தம் என்னும் சமயங்களை பிராமணர்கள் ஏற்படுத்தினர். அச்சமயங்களை எவரெவர் தழுவி நிற்கின்றனரோ, அவர்களும் பிராமணச் சிந்தனையுடையவர்களேயாவர். சாதி ஆசாரங்களையுந் தழுவிக்கொண்டே, ‘நான் பிராமின்ஸ்’ என்று சங்கம் கூடியிருக்கின்றனரா ? அல்லது சாதி ஆசாரங்களையும், சமய ஆசாரங்களையும் ஒழித்துள்ள கூட்டமாயிருக்குமாயின் அவர்களுடன் சேர்ந்துழைப்பதற்கு அனந்தம் (அனேகம்) பேர் காத்திருக்கின்றார்கள். பிராமணர் என்போரால் வகுத்துள்ள சாதி ஆசாரங்களையும், சமய ஆசாரங்களையும் வைத்துக்கொண்டு ‘நான் பிராமின்ஸ்’ (Non-Bhramins) எனக் கூறுவது வீணேயாகும்”.

ayothidasar 340“உள் சீர்திருத்தமென்றும், ராஜ்ய சீர்திருத்தமென்றும் இருவகை உண்டு. அவற்றுள் சாதி, சமய, சம்பந்தமானவைகள் யாவும் உட்சீர்திருத்தங்கள் என்றும், மற்றவை ராஜாங்க சீர்திருத்தங்கள் என்றும் கூறி யாங்கள் ராஜாங்க சம்பந்தத்தில் நான் பிராமின்ஸ் என வெளிவந்தோர் என்பாராயின் இந்துக்கள், முகமதியர், பௌத்தர், கிறிஸ்தவர்களெனும் பிரிவினைகளுக்கு மத சம்பந்தங்களே காரணமாயிருப்பது கொண்டு இந்துக்கள் என வெளிவந்துள்ளோர் ராஜ்ய காரியங்களிலும் நான் பிராமின்ஸ் எனப் பிடித்துக் கொள்வதற்கு ஆதாரமில்லை”.

“ஆதலின் இவற்றைக் கண்ணுறும் அன்பர்கள் ஒவ்வொருவரும் தற்காலம் தோன்றியிருக்கும் நான் பிராமின்ஸ் என்போர் யாவர் என்றும், அவர்கள் கூட்டத்தின் கருத்துக்கள் யாது என்றும் தெரிவிக்கும்படி கூறுகிறோம்”.

பார்ப்பனீயத்தை அரசியல், சமூக பண்பாட்டுக் களங்களில் வேரும், வேரடி மண்ணும் இல்லாமல் அழித்திட ஆர்த்தெழுந்த அயோத்திதாசரின் மேற்கண்ட போர்க்குரல் அனைவரையும் சிந்திக்க வைக்கக்கூடியதாகும்.

அயோத்திதாசர், சென்னை தேனாம்பேட்டையில் 1845 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் நாள் கந்தசாமி என்பவருக்கு மகனாகப் பிறந்தார். அவருடைய இயற்பெயர் காத்தவராயன் ஆகும். இளமையில் தமிழ் மூதறிஞர் வி.அயோத்திதாச கவிராஜ பண்டிதரிடம் கற்ற கல்வி அவரைப் பேரறிஞராகவும், சிந்தனையாளராகவும், தருக்கநெறி வல்லுநராகவும் விளங்க வைத்தது. ஆசிரியரின் நினைவாகத் தன் பெயரை அயோத்திதாசர் என வரித்துக் கொண்டார்.

எல்லீஸ் துரை என்ற ஆங்கிலேய ஆட்சியாளர், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்குக் காரணமாக இருந்தவர் அயோத்திதாசரின் தந்தை கந்தசாமி ஆவார். அவர்தான் எல்லீஸ் துரையிடம் திருக்குறளை அறிமுகப்படுத்தி, விளங்கவைத்து, ஈடுபாடு கொள்ளச் செய்தவர். அதன் விளைவாக எல்லீஸ் துரையால் திருக்குறள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. திருவள்ளுவரின் உருவம் பொறித்த நாணயமும் வெளியிடப்பட்டது.

பிரபந்தங்களையும், திருமுறைகளையும், நபியின் வழிமுறைகளையும், சமண, பௌத்த நூல்களையும், தமிழ் இலக்கியங்களையும் கற்று புலமை உடையவராக விளங்கினார்.

விபூதி ஆராய்ச்சி, கபாலீஸ்வரர் சரித்திர ஆராய்ச்சி, அரிச்சந்திரன் பொய்கள், இந்திரா தேச சரித்திரம் (இந்திய தேச சரித்திரம்), புத்த மார்க்க வினா-விடை, பூர்வத்தமிழொளி (அ) ஆதி வேதம், திருவள்ளுவர் வரலாறு, விசேச சங்கைத் தெளிவு, விவேக விளக்கம், தென்னிந்திரர் தேசப் புத்தகம் ஆகிய நூல்களைப் படைத்துள்ளார். மேலும் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றி ஞானம் போன்ற நூல்களுக்கு உரையும் எழுதியுள்ளார்.

சென்னை இராயப்பேட்டையில் இருந்து 19.06.1907 ஆம் நாள் முதல் ‘ஒரு பைசா தமிழன்’ என்ற வார இதழைப் பண்டிதமணி அயோத்திதாசர் வெளியிட்டார். ‘ஒரு பைசா தமிழன்’ என்று சற்று வித்தியாசமாகப் பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், பத்திரிக்கை ஒரு கோடிப் பொன் மதிப்பிற்குரியது என்பதை முதல் இதழிலேயே குறிப்பிட்டுள்ளார்.

இந்த இதழ் ஓராண்டிற்குப் பிறகு ‘ஒரு பைசா’ என்பது எடுக்கப்பெற்று வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ‘தமிழன்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இயல்பாகவே அயோத்திதாசரிடம் இருந்த தமிழ் உணர்வு ‘தமிழன்’ என்று இதழுக்குப் பெயர் வைக்கத் தூண்டியது.

தமிழனின் உள்ளடக்கத்திலும், தமிழ் நடையிலும் அயோத்திதாசரின் ‘பண்டிதத்தனம்’ முக்கிய ஆளுமையாக அமைந்திருந்தது.

‘நன்மெய்க் கடைப்பிடி’ எனும் மகுட வாக்கியம் அமைய, ‘தமிழன்’ என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் பெயர் பொறிக்கப்பட்டு வெளி வந்தது.

தமிழன் இதழில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஊராட்சி, நகராட்சி, சட்டமன்றம், பாராளுமன்றம் போன்றவைகளிலும், தொழில், கல்வி, விவசாயம், காவல் போன்ற அனைத்துத் துறைகளிலும் பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும் என்பதை முன் வைத்தார்.

               பௌத்தக் கருத்துக்களைத் ‘தமிழன்’ இதழ் மூலம் பரப்பினார். பௌத்த மதத்தை அழிக்க ஆரிய வேதங்களும், சாத்திரங்களும், புராணங்களும் செய்த சூழ்ச்சிகளையும், பிராமணர்களின் ஆதிக்கங்களை எதிர்த்தும், அம்பலப்படுத்தியும் தீவிரமாக எழுதினார். மேலும், பகுத்தறிவுக் கருத்துக்களையும் இதழ் தோறும் எழுதிவந்தார்.

               சிந்தனைச்சிற்பி ம.சிங்காரவேலரின் சொற்பொழிவுகளைத் தமிழன் இதழில் கட்டுரைகளாக வெளியிட்டார் அயோத்திதாசர்.

               தமிழன் இதழில் சமூகம், பொருளாதாரம், பண்பாடு, கலாச்சாரம், அரசியல், சாதி, மதம் ஆகியன குறித்து துணிந்து தனது கருத்துக்களை எழுதினார். தனது எழுத்தின் மூலம் மக்களைச் சிந்திக்கத் தூண்டினார்.

               தமிழன் இதழ் இலங்கை, பர்மா, மலேசியா, தென் ஆப்பிரிக்கா முதலிய நாடுகளில் வாழ்ந்த தமிழர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

               தமிழ் இதழியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க சிறப்புக்குரியது அயோத்திதாசனாரின் ‘தமிழன்’ இதழாகும்.

               தமிழ் மணம் பரவ விரும்பும் தமிழர்கள் அனைவரும் தமிழன் இதழை ஆதரிக்க வேண்டுமெனக் கோரினார் அயோத்திதாசர்.

               மேலும், ‘இத்தமிழ் வழங்குந் தென்னிந்தியாவிலோ சாதி நாற்றமென்னும் கசு மாலத்தால் (அருவருப்பு) தங்கள் சாதியார் மட்டிலும் வாசிக்கலாம். ஏனைய சாதியோர் வாசிக்கப்படாதென்றும் பொறாமையும், பொச்சரிப்பும் வாய்ந்தவர்களாதலின் பொது நலங்கருதி பத்திரிக்கைகளை வாசிக்கப் பிரியமில்லாமல் விட்டு விடுகிறார்கள்’- எனத் தமிழ் இதழியல் வளர்ச்சியில் சாதியுணர்ச்சியின் காரணமாக ஏற்படும் சீரழிவைப் பற்றித் தமது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

               தமிழன் வார இதழ் 15.04.1914 வரையில் அயோத்திதாசர் பொறுப்பில் வெளிவந்தது. அவர் மறைவிற்குப் பிறகு அவரது புதல்வர் பட்டாபிராமனால் 17.06.1914 முதல் 26.08.1915 வரை வெளியிடப்பட்டது. பிறகு 07.07.1926 முதல் 27.06.1934 வரை கோலார் தங்கவயல் பண்டிதமணி ஜி. அப்பாதுரையாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.

               படித்தவர்களுக்கும், பாமர ஏழை மக்களுக்கும் பயன் தரத்தக்க வகையில் அயோத்திதாசர் எழுதினார்.

               சமூகக் கொடுமைகளை வேரோடு சாய்த்திடத் துடிக்கும் ஆவேசம், வர்ணாசிரமக் கொள்கைகளையும், அதைப் பாதுகாக்கும் சாத்திரங்களையும், சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் அம்பலப்படுத்திச் சாடும் தன்மை, சாதிக் கட்டமைப்பைத் தாங்கி நிற்கும் பிராமணீயத்தின் ஆதிக்கத்தைத் தகர்க்கும் வேகம், அரசியலில் மட்டுமன்று பண்பாட்டு – சமூக – கலாச்சாரத்தளங்களிலும் பிராமணீயத்தை வீழ்த்தும் வேகம் ஆகியவற்றுடன் சமூகத்தின் தீமைகளைச் சுட்டெரிக்கும் தீப்பொறிகளாக அவரின் சொற்கள் வெளிப்படும். இப்படித்தான் அயோத்திதாசரின் எழுத்துக்கள் சமூகத்தில் எழுச்சியை ஏற்படுத்தின.

               அயோத்திதாசர் ஆதிதிராவிடரை ஓரணியில் திரட்டவும், அவர்களது கோரிக்கைகளுக்காகப் போராடவும், 1890 ஆம் ஆண்டு ‘திராவிட மகாஜன சபை’ என்கிற அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் முதல் மாநாட்டை 01.12.1891 ஆம், நாள் நீலகிரியில் நடத்தினார். அந்த மாநாட்டில், தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி உரிமை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றி, இந்திய தேசிய காங்கிரசுக்கு அனுப்பி வைத்தார். அக்கோரிக்கைகள் குறித்து காங்கிரஸ் கட்சி எவ்விதப் பதிலும் அளிக்கவில்லை என்பது வேதனையளிக்கும் செய்தியாகும்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தவித பயனுமில்லை என்பதை மக்களிடம் பரப்பினார். மேலும், இந்தியாவிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் அடிமைப்படுத்தப்பட்டுள்ளதை எண்ணிப் பார்க்காதவர்கள், அந்நிய நாட்டில் வாழும் இந்தியர்களைப் பற்றி அக்கறை கொள்வது மிகவும் வேடிக்கையானதென விமர்சனம் செய்தார்.

அயோத்திதாசர் பௌத்த மதத்தைத் தழுவினார். சென்னை இராயப்பேட்டையில் ‘தென்னிந்திய சாக்கிய சங்கம்’ என்ற பௌத்த சமயப் பிரச்சார அமைப்பை 1902ஆம் ஆண்டு நிறுவினார். அயோத்திதாசர் தாழ்த்தப்பட்ட மக்களின் மதம் பௌத்தமே என்பதை வலியுறுத்தினார். இச்சங்கத்தில் சிந்தனைச் சிற்பி. ம. சிங்காரவேலர், பேராசிரியர் பி.லட்சுமி நரசு ஆகியோர் பௌத்த மதக்கருத்துக்களைப் பிரச்சாரம் செய்தனர். இதன் காரணமாக அயோத்திதாசர் ‘இந்திய பௌத்த மதத்தின் முதல் மறுமலர்ச்சியாளர்’ என்று போற்றப்படுகிறார்.

கிராமங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி உழைக்கும் மக்களுக்கு நிலம் வழங்க வேண்டும் என அயோத்திதாசர் கடிதங்கள் மூலமும், நேரிலும், பிரிட்டீஷாரிடம் கோரிக்கை வைத்தார்.

அயோத்திதாசரின் கோரிக்கையினைப் பிரிட்டீஷார் ஏற்றனர். அதன்படி, பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நிலமற்ற ஏழை-தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்கு ஒதுக்கீடு செய்தனர். அப்படி வழங்கப்பட்ட நிலங்கள், ‘பஞ்சமி நிலம்’ என அழைக்கப்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

‘பஞ்சமி நிலம்’ என்பது நிலமற்ற, கூலி, விவசாய ஆதிதிராவிட மக்கள் சொந்தமாக மற்றவர்களைப் போலவே பயிர் செய்து உரிமையுடன் வாழவேண்டும் என்ற அடிப்படையில் பிரிட்டீஷாரிடம் வாதாடிப் பெறப்பட்டது. அந்த நிலங்கள் தாம் இன்று பஞ்சமி நிலங்கள் என்று அழைக்கப்படுகிறன. ஆதி திராவிட மக்களுக்கு நிலம் கிடைப்பதற்கு முதல் குரல் எழுப்பிய அயோத்திதாசரைப் ‘பஞ்சமி நிலங்களின் தந்தை’ என அழைக்கலாம். ஆனால், காலப்போக்கில் ஆதிக்கச் சாதியினர், அரசியல் வாதிகள், நிலச்சுவான்தார்கள் ஆகியோர், மருட்டியும், அச்சுறுத்தியும் ஆதிதிராவிட மக்களிடமிருந்து பஞ்சமி நிலங்களைக் கைப்பற்றிக் கொண்டனர். அந்த நிலங்களை மீட்டு, நிலமற்ற கூலி ஆதி திராவிட மக்களுக்குக் கிடைத்திட தலித், இடது சாரி கட்சிகள் போராட வேண்டும். அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கல்வி, மனிதனைச் சுயமாகச் சிந்திக்க வைப்பதோடு, தன்மானத்தையும் கற்றுக் கொடுப்பதாகும் என்பதை வலியுறுத்தி அயோத்திதாசர் ஆதிதிராவிடர்களின் கல்வி வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டார்.

கர்னல் ஆல்காட் என்பவரின் துணையோடு ஆதி திராவிட மக்களுக்காகப் பல கல்வி நிறுவனங்களைத் தொடங்கி வைத்தார். நான்காவது படிவம் வரையில் (அந்தக் காலத்தில் நான்காவது ஃபாரம்) இலவசமாக கல்வி அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையைப் பிரிட்டீஷ் அரசிடம் முன்வைத்தார் அயோத்திதாசர்.

ஆதிதிராவிடர் யாருக்கும் அடிமையில்லை; அடிமைத் தொழில் ஒழிக்கப்படவேண்டும்; சுடுகாட்டுக்குப் பாதை வேண்டும்; குடிநீர் வேண்டும்; பெண்கள் கல்வி பெற வேண்டும்; கோயிலில் வழிபாடு செய்யும் உரிமை வேண்டும்; இவை போன்ற முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடினார் அயோத்திதாசர்.

‘விபூதி ஆராய்ச்சி’ என்ற நூலில் அயோத்திதாசர், “சிலர் சர்வ சோகங்களும், சாம்பலில் தீருமென்பார்கள், குருவை சுட்டச் சாம்பல், பிணங்கள் வெந்த சுடுகாட்டுச் சாம்பல், எரு முட்டைச் சாம்பல், ஜபமாலைகள் வெந்த சாம்பல் என்னும் விபூதிகளில் பெரிய அற்புதங்களிருப்பதாகச் சொல்லி மக்களை ஏமாற்ற நெற்றியில் பூசி வருகிறீர்கள்! இது நியாயமா? பகுத்தறியுங்கள்!... பொய்யான தேவதைகளை மெய்யென நம்பி சாம்பலைக் குழைத்து முகத்தில் தடவிக் கொண்டு மத அடையாளங்களைக் காட்டுவது பைத்தியமல்லவா?”

இவ்வாறு பகுத்தறிவுக் கொள்கைகளைத் துணிச்சலுடன் அக்காலத்திலேயே பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பகுத்தறிவு விதையை முதலாவதாக தமிழகத்தில் விதைத்த பெருமை அயோத்திதாசருக்கே உரியதாகும்.

 வேதங்களும், புராணங்களும் கட்டுக்கதைகள் என்பதையும், புளுகு மூட்டைகள் என்பதையும் மக்களிடையே எடுத்துரைத்தார். பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளையும், ஏமாற்றங்களையும், மக்களுக்குத் தோலுரித்துக் காட்டினார். தந்தை பெரியார் பிறப்பதற்கு முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தில் சுயமரியாதை, பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பியவர் அயோத்திதாசர்.

               சமுதாயம், சமயம், அரசியல் என்று எதுவானாலும் அவை மக்களின் வாழ்க்கைக்குப் பயன்பட வேண்டும் என்பதைத் தனது நோக்கமாகக் கொண்டிருந்தார்.

‘சுயராஜ்யத்திற்காகப் போராடும் இந்துக்கள், தங்களது மனுதர்ம சாஸ்திரத்தை விட்டுவிடத் தயாராக இல்லை. எனவே, மனுதர்ம சாஸ்திரத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஆட்சி செய்ய விரும்புவதால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை’ – என்று அறிவித்தார்.

தமிழகத்தில் ஆதி திராவிடர் இயக்கம், பகுத்தறிவு இயக்கம், பௌத்த சமய இயக்கம் - ஆகிய அனைத்திற்கும் ஆற்றல் மிக்க முன்னோடியாகத் திகழ்ந்தவர் அயோத்திதாசரே.

அயோத்திதாசர் 1914 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் நாள் காலமானார். அயோத்திதாசரின் மறைவையொட்டி, தமிழ்த் தென்றல் திரு.வி.க. ‘தனக்கென வாழாப் பிறர்க்குரியான்’ என்ற இரங்கற்பாவை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   அயோத்திதாசரின் சிந்தனையும், கருத்துக்களும், இலட்சியங்களும் நிறைவேற பாடுபட வேண்டியது நமது வரலாற்றுக் கடமையாகும்.

தமிழக அரசு 2008 ஆம் ஆண்டு அயோத்திதாசரின் படைப்புகளை நாட்டுடைமையாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையத்திற்குத் தமிழக அரசு அயோத்திதாசர் பெயரைச் சூட்டிட வேண்டும் என்பது தமிழ் மக்களின் விருப்பமாகும்.

- பி.தயாளன்

Pin It

தேடிவரும் கவிஞர்களின் தேவை அறிந்து வாரி வழங்கும் பெருங்குணம் படைத்தவர், ‘கொடை கொடுத்த வித்தகர்’ எனப் போற்றப்பட்டவர்! காரைக்காலில் வாழ்ந்தவர்! தமிழ், அரபு, மலாய் முதலிய மூன்று மொழிகளிலும் திறம் பெற்றுத் திகழ்ந்தவர்! அவர்தான் ‘சாயபு மரைக்காயர்’ எனும் பெயருடைய பெருந்தகை! தமிழ்க் கவித்திறத்தால் ‘அமுதகவி’ என அழைக்கப் பெற்றார்! ‘கலைவளப் புலவர் போற்றும் காரையில் நிலைவளச் செல்வன், நிறைவளக் கல்வியின் அமுதகவி சாயபு மரைக்காயர்’ எனப் புகழ்ப் பெற்றார்.

பொது மக்களாலும், புலவர் பெருமக்களாலும் மதித்துப் போற்றப்பட்ட அமுதகவி சாயபு மரைக்காயர், இசுலாம் மார்க்கக் கல்வியை ஈடுபாட்டுடன் கற்றார். அமுதத் தமிழ் மொழியில் அப்பெருமகனார் எழுதிய கீர்த்தனைப் பாடல்கள் புகழ் வாய்ந்தவை. தமிழின் அனைத்து வகை யாப்புகளிலும் பாடல்களை இயற்றி அளித்துள்ளார். மேலும், தமிழில் வழக்கொழிந்த, ‘முடுகு வெண்பா’, ‘சவலை வெண்பா’ போன்ற யாப்புகளிலும் பாடல்களை எழுதிப் பரவசம் எய்தியவர்!

இவரது படைப்புகள் அனைத்தும் பாடல் பனுவல்களே! இலக்கணப் புலமையும், இசை நுட்பமும், இசுலாம் மார்க்கத்திடம் கொண்டிருந்த ஈடுபாடும், எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்மொழி மீது கொண்டிருந்த ஈடிணையற்ற பற்றும் காரணமாக விளங்கின.

அமுதகவி சாயபுமரைக்காயரின் பாடல்கள் எளிமையும், இனிமையும் கொண்டவை. குறைந்த படிப்பறிவு கொண்டோரும் பொருளுணர்ந்து கொள்ளும் அருமையும் பெற்றுத் திகழ்வன. “கவிதை, கற்றவரை மட்டும் களிப்படையச் செய்வதால், நோக்கமும், ஆக்கமும் முழுமை பெறுவதில்லை; மற்றவரையும் அதன் மையக் கருத்து மகிழ்ச்சி அடையச் செய்கிறபோதுதான் கவியின் குறிக்கோள் நிறைவு பெறுகிறது” - எனும் கோட்பாட்டின்படி, சாயபு மரைக்காயரின் பாடல்கள் அனைத்து மனங்களையும் பற்றிக் கொள்ளும் தன்மை படைத்தவை!

‘மனோன்மணிக்கும்மி’, ‘உபதேசக் கீர்த்தனம்’, ‘மும்மணிமாலை’, ‘காரை மஸ்தான் காரணக் கீர்த்தனப்பா’, முதலிய நூல்கள் அமுதகவிராயரின் தமிழாற்றலையும், இறையுணர்வையும் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. அவரது பாடல்கள் சந்தச் சீர்மையும், சொற்களின் கூர்மையும், எந்த மனத்தையும் வயப்படுத்தும் ஆற்றலையும் பெற்றவையாகும். அவரது கவிதைகளை ஒருமுறை படித்தால் போதும் அப்படியே கல் எழுத்தாய் உள்ளத்தில் பதிவாகிவிடும்.

சித்த மருத்துவம், யுனானி மருத்துவம் முதலியவற்றில் சிறந்து விளங்கினார் அமுதகவி. மானுட நேயத்துடன் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகத் தம் மருத்துவ திறத்தைப் பயன்படுத்தினார். மருத்துவத் துறையின் பல நுட்பங்களையும், கண்டுபிடிப்புகளையும் அறிந்திட, பல நூல்களை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரவழைத்துப் படித்து தமது மருத்துவ அறிவை நாளும் விரிவுபடுத்திக் கொண்டேயிருந்தார். எளிய வைத்திய முறையால், கடுமையான நோய்களையும் போக்கிடும் இயல்புடையவர்.

“புதுச்சேரி மாநிலத்தின் இரண்டாவது பெரு நகரம் காரைக்கால்; காரைச் செடிகள் அடர்ந்த காடாக இருந்ததாலும், உப்பளங்கள் நிறைந்திருந்ததாலும், ‘காரைக்காயல்’ எனப் பெயர் பெற்றிருந்த இப்பேரூர், காலப்போக்கில் மருவி, `காரைக்கால்’ என வழங்கப்பெற்றதாக’’- பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர் கூறுகிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலும், இருபதாம் நூற்றாண்டிலும் காரைக்காலில் வாழ்ந்த இசுலாமியப் புலவர்கள், தமிழ்மொழிக்குப் புதிய புதிய இலக்கியச் செல்வங்களை வழங்கி உள்ளனர்.

“காரைக்காலில் வாழ்ந்த இசுலாமிய தமிழ்ப் புலவர்களுள் முதன்மையானவராக அமுதகவி சாயபு மரைக்காயரை குறிப்பிட்டுக் கூறலாம்”- என்பார் ‘கலைமாமணி’ கவி கா.மு. ஷெரீப். இசுலாமிய நெறிமுறைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு விளங்கிய லெப்பை மரைக்காயருக்கும் - ஆயிஷா அம்மையாருக்கும் மகனாக, 1873-ஆம் ஆண்டு காரைக்காலில் பிறந்தார். மார்க்கக் கல்வியை வேலூரில் தங்கிக் கற்றார். புலவர் முகமது மஸ்தானிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களை முறையாகக் கற்றார். சிங்கப்பூர் சென்று சிலகாலம் வணிகராக வாழ்ந்தார். அங்கு மலாய் மொழியை மிகுந்த ஆர்வத்துடன் கற்றார்.

தமிழிசையின் புகழ் பரவ இருபதாம் நூற்றாண்டின் உதய காலத்தில் அதற்குத் தமது கீர்த்தனைப் பாடல்களால் ஊக்கமும், உற்சாகமும் ஊட்டி பேருதவி புரிந்தவர் அமுதகவி சாயபு மரைக்காயர்.

அமுதகவி சாயபு மரைக்காயர் தமிழ்மொழிக்கும், இசுலாம் நெறிக்கும் பெருந்தொண்டாற்றித் தமது எழுபத்திரண்டாம் வயதில் 1950-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘அமுதகவி’யின் தமிழ்ப் பணி சிறப்பிடம் பெற்றுத் திகழும்.

- பி.தயாளன்

Pin It

தென்தமிழக கடற்கரை நகரான வகுதை என்றழைக்கப்பட்ட கீழக்கரையில் ஏறத்தாழ 370 ஆண்டுகளுக்கு முன் பிறந்து, தன் ஈகைக் குணத்தாலும், கடல் வாணிப செல்வாக்காலும், பரங்கியர்களை எதிர்த்து நின்ற தீரத்தாலும், தாய்த் தமிழை போற்றிய புலவர்களை ஆதரித்ததாலும், சமய நல்லிணக்கத்தைக் காத்தும் வான்புகழ் எய்திட்ட சேது நாட்டுப் பெரியதம்பி மற்றும் விஜய இரகுநாத பெரியதம்பி என்ற மெய்கீர்த்திகள் கொண்டவர்தான் செத்தும் கொடை கொடுத்த வள்ளல் சீதக்காதி என்ற செய்கு அப்துல் காதிர் மரைக்காயர் அவர்கள். வள்ளல் சீதக்காதி மரைக்காயர் மறைந்து 320 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், கீழக்கரை வரலாற்றில் அவர் அழியாப்புகழ் நிலையை அடைந்து இப்புவி உள்ளவரை நினைவு கூறப்படுவார் என்றால் அது மிகை இல்லை.

seethakathiமுகில் மறைந்து, நிலம் வறண்டு, தன் குலம் வாடிய காரிருள் பஞ்சத்திலும் நாட்டார் மனமும், வயிறும் குளிர ஊனளித்த வான்புகழ் சீதக்காதி வள்ளலின் முன்னோர்கள் கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் கீழக்கரை பகுதி பாண்டியர்களின் வசம் இருந்த காலம் தொட்டு மன்னார் வளைகுடா பகுதியின் நீர்வழிப் போக்குவரத்து, கடல் வாணிபக் கட்டுப்பாடு, கடலோர மற்றும் கடல்வளப் பாதுகாப்புக்கான அதிகாரத்தைப் பெற்று மலிக் அல்லது கறுப்பாறு காவலர்கள் என்றும், பின்பு பெரியதம்பி என்ற அரசப் பட்டங்களைப் பெற்றும், சேது சீமையின் கடல்புறத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

போர்த்துகீசிய‌ர்களுக்குப் பின் கீழக்கரை பகுதிக்குள் நுழைந்த பரங்கியர்களான டச்சுக்களின் அடாவடியை எதிர்த்து, அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வள்ளல் சீதக்காதி, இராமநாதபுரம் அரசர் கிழவன் சேதுபதியுடன் நேசம் பாராட்டி நட்புக்கு இலக்கண‌மாக இருந்ததுடன், அரசருக்கு ஆலோசனை கூறும் அமைச்சராகவும் விளங்கினார். வள்ளலின் வேண்டுகோளின்படியே இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு தாய்த் தமிழில் உமறுப்புலவரால் சீறா புராணம் என்ற காப்பியமாக இயற்றப்பட்டது. அக்காலத்தில் வாழ்ந்த சறகுப்புலி இமாம் சதக்கத்துல்லா அப்பா அவர்களிடம் பெருமதிப்பு கொண்டிருந்த வள்ளல் சீதக்காதி , சதக்கத்துல்லா அப்பா அவர்களின் ஆலோசனையின் பேரில் திராவிட தொன்கலை நயத்துடன் நடுத்தெரு ஜும்ஆ பள்ளியை நிர்மாணித்து இருக்கலாம் என்று கருத்தும் நிலவுகிறது. வங்காளத்திற்கு கவர்னராக நியமிக்க மாதிஹ் ரசூல் சதக்கத்துல்லா அப்பாவை ஆற்காடு நவாப் மூலம் பேரரசர் ஒளரங்கசீப் பாதுஷா வேண்டியபோது, தனக்கு அந்தப் பதவி ஒத்துவராது என்றும், வள்ளல் சீதக்காதி மரைக்காயர்தான் சரியான தேர்வாக இருக்க முடியும் என்று கருதி , சீதக்காதி மரைக்காயரையே கவர்னராக நியமிக்கலாம் என ஆற்காடு நவாபின் சமூகத்துக்கு சதக்கத்துல்லா அப்பா பரிந்துரை செய்ததாகவும் , வள்ளல் சீதக்காதி அச்சமயம் தனது வர்த்தகத் தொடர்பை கல்கத்தா வரை விரிவுபடுத்தி இருந்தமையால், அந்த கவர்னர் பொறுப்பினை ஏற்று, கல்கத்தா சென்று, சிறிது காலம் கவர்னர் பதவியில் இருந்து, பின் ஊர் திரும்பியதாகவும் செய்திகள் உண்டு. இந்த நிகழ்வுக்கான சான்றுகளை உறுதிப்படுத்த முடியவில்லை எனினும் மூதறிஞர் இராஜாஜி அவர்கள் வங்காளத்தின் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்க கல்கத்தா சென்ற போது, தன்னை மதராஸில் இருந்து வரும் இரண்டாவது கவர்னர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

காஜி முதலாம் சேக் அப்துல்லா அவர்கள் கீழக்கரையின் நகர காழியாகவும், நகர் தலைவராகவும் இருந்த கி.பி.1680 களில் இந்தியாவை ஆட்சி புரிந்த மொகலாய சக்கரவர்த்தி ஔரங்கசீப் பாதுஷா அவர்களால் சீதக்காதி மரைக்காயருக்கு தன் கைப்பட எழுதி வழங்கிய திருக்குர்ஆன் பிரதியினை, தனது நண்பரான காஜி அவர்களுக்கு சீதகக்காதி மரைக்காயர் வழங்கியதாகக் கூறப்படும் திருக்குர்ஆன் பிரதி இன்றும் காஜிக்களின் வாரிசுகளால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

17 ஆம் நூற்றாண்டில் சேதுபதிகள் இராமநாதபுரத்தில் வைகை ஆற்றின் களரிக் கம்மாய்க் கரையில் உருவாக்கிய சிங்காரத்தோப்பு போன்றே, வள்ளல் சீதக்காதி அவர்களும் கீழக்கரையில் ஆற்றங்கரையோரம் கொடிக்கால்கள் நிறைந்த செவ்வல் என்ற செம்மணல் பகுதியில் தனது சிங்காரத்தோப்பை உருவாக்கி இருக்கிறார். கீழக்கரை புறநகரில் இருக்கும் சிங்காரத்தோப்பு தற்பொழுது பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனை மற்றும் குடியிருப்புப் பகுதியாக உருமாறி இருக்கிறது.

கீழக்கரை கடற்பிரதேசத்தில் அரசியல் ஆதிக்கம் பெற்று பாண்டிய மன்னர்களால் சாமந்தர்களாக நியமிக்கப்பட்ட கறுப்பாறு காவலர்கள் என்றழைக்கப்பட்ட சோனக சாமந்தர்கள் 9 ஆம் நூற்றாண்டு முதல் வள்ளல் சீதக்காதி மரைக்காயர் வாழ்ந்த 17 ஆம் நூற்றாண்டு காலம் வரை தொடர்ந்து ரீஜெண்ட்களாகவே இந்தப் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தது எட்டயபுரம் உமறு கத்தாப் புலவர் இயற்றிய சீதக்காதி திருமண வாழ்த்துப் பாடலின் வாயிலாகத் தெளிவாகிறது.

பாண்டிய மண்னர்களால் தங்களுக்கு 12 ஆம் நூற்றாண்டிலேயே வழங்கபட்ட கறுப்பாறு காவலர்கள் என்ற அந்தஸ்த்துடனும் , 15 ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட நாயக்க அரசால் பெரியதம்பி என்ற பட்டத்துடனும் ரீஜண்ட்களாகவும் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தனர். பாம்பன் நீர்வழி கால்வாயில் வர்த்தகக் கப்பல்களின் போக்குவரத்தை கண்காணிக்கும் மிகப்பெரும் பொறுப்பு கீழக்கரை மரைக்காயர்களான பெரிய தம்பிகளிடமே இருந்தது, குறிப்பாக சீதக்காதி வள்ளலின் முன்னோரான ஆறாம் பாண்டியன் என்று மதிப்புடன் அழைக்கப்பட்ட கறுப்பாறு காவலரிடம் 12 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கடல்வழி வர்த்தகப் பொறுப்பு வழங்கப்பட்டு பின் தொடர்ந்து வந்ததை சீதக்காதி திருமண வாழ்த்துப் பாடல் குறிப்பிடுகிறது.

நிரைகொழிக்கும் முத்தும் நிதியும் திரைக்கரத்தால்
கரைகொழிக்கும் செல்வக் கறுப்பாறு காவலன்..

இந்தப் பகுதிகளில் போர்த்துகீசியர்கள் ஆதிக்கம் தலையெடுத்த அச்சுதப்ப நாயக்கர் காலமான 16 ஆம் நூற்றாண்டின் மத்தியில் சேகுகண்டு மரைக்காயர் அவர்களது பேரரும், சீதக்காதி மரைக்கயரின் பாட்டனாருமான மாமு நெய்னா என்ற மஹ்மூது நெய்னா மரைக்காயர் மற்றும் சீதக்காதி மரைக்காயரின் தாயைப் பெற்ற பாட்டனார் பாவா அலி என்ற வாவாலி மரைக்காயர் போன்றவர்களிடம் கடல்வழி வர்த்தகப் பொறுப்பு இருந்திருக்கலாம் எனக் கருத முடிகிறது. சேகுகண்டு மரைக்காயர் காலம் தொடங்கி வகித்து வந்த அரசுப் பதவிக்குரிய‌ பெரியதம்பி என்ற பட்டத்துடன் தொடர்ந்து அழைக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். இந்த நிலை சேதுபதி அரசர்களால் நியமிக்கப்பட்ட வள்ளல் சீதக்காதி மரைக்காயர் காலம் வரை இருந்து வந்தது. அரசர் கிழவன் சேதுபதி, சீதக்காதி மரைக்காயருக்கு இந்தப்பகுதியில் வர்த்தக வரி வசூலிப்பது, முத்துக் குளித்தல், கடல் வழி பண்டமாற்று, கடல்வணிகக் கட்டுப்பாடு, கடலோர எல்லைகளைக் கண்காணித்துப் பாதுகாப்பது போன்ற கூடுதல் பொறுப்புகளையும் வழங்கி, விஜய இரகுநாத பெரியதம்பி என்ற பட்டத்தையும் வழங்கி இருக்கிறார். போர்த்துக்கீசிய ஆவணங்களில் கீழக்கரை துறைமுகப் பொறுப்பில் இருந்த மரைக்காயர்கள் அனைவரையுமே முதலாம், இரண்டாம், மூன்றாம் பெரியதம்பி என்று குறிப்பிட்டு வள்ளல் சீதக்காதி இன்னாரெனக் குறிப்பிடாமல் வரலாற்றுக் குழப்பத்தை விளைவித்து விட்டனர்.

1537 ஆம் ஆண்டு குஞ்சாலி மரைக்காயர் படைக்கும், போர்த்துகீயர்களுக்கும் போர் நடைபெற்ற வேதாளை நகரில், மீண்டும் கொல்லம் 863 (கி.பி. 1687) ஆம் ஆண்டு வள்ளல் சீதக்காதி மரைக்காயரின் மூத்த சகோதரர் மலிக் சேய்ஹ் இப்ராஹீம் மரைக்காயர், கிழவன் சேதுபதி அரசரின் படைத் தளபதியாக, பாம்பன் கால்வாய் நீர் வழி கண்காணிப்புப் பொறுப்பில் இருந்த சூழலில் போர்த்துக்கீசியர்களுடன் நடைபெற்ற போரில் சமர் புரிந்து, குடல் சரிந்து வீர மரணம் அடைந்தார் என்ற செய்தியின் மூலம் கீழக்கரைப் பகுதி வர்த்தகர்களும், மக்களும் நூறாண்டுகளுக்கும் மேலாக போர்த்துக்கீசிய‌ மற்றும் டச்சுக்காரர்களான பரங்கியப் படைகளால் எத்தகைய துன்பம் அடைந்திருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது, போர்த்துக்கீசியர்களின் ஆதிக்க சூழலை சீதக்காதி மரைக்காயர் சேதுபதி அரசரின் உதவியுடன் கையாண்ட விதத்தின் மூலம் அவரது ஆளுமையும் திறமையும் வெளிப்படுகிறது.

சீதக்காதி மரைக்காயர் மறைந்து ஏறக்குறைய 320 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், அவரது புகழ் இன்னும் சுடர்விட்டு எரிந்து கொண்டிருப்பதே அவர் வாழ்ந்த சீர்மிகு வாழ்வுக்கு சாட்சியாகக் கொள்ளலாம். எல்லையற்ற ஈகைக் குண‌ம் கொண்டு, தான் சார்ந்த பகுதி மக்களின் காவலனாகத் திகழ்ந்து, சமூக நல்லிண‌க்கம் காத்த நெறியாளராக, சேது சீமையின் ரீஜண்ட்டாக போர்ச்சுக்கீசியர்களுடன் மூர்க்கமாக மோதி நாடு காத்த வீரத்தின் திலகமாக, தமிழ்ப் புலவர்களை ஊக்குவித்த தமிழ் ஆர்வல‌ராக , வள்ளுவம் கூறும் அனைத்து நல் அறங்களுக்கும் குறியீடாக விளங்கியவர் வள்ளல் சீதக்காதி மரைக்காயர். அவர் வாழ்ந்த வாழ்வின் எச்சமாக சிதைந்த நிலையில் கீழக்கரை தென்கிழக்குப் பகுதியில் கடலோரத்தில் அவரின் வசந்த மாடம் இன்றும் இருக்கிறது. சிதிலடைந்த நிலையில் இருக்கும் இந்த மாடம் தற்போது சுங்கத்துறையால் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. எக்காலத்துக்கும் வரலாற்று சாட்சியாக கி.பி 1680 களில் நடுத்தெருவில் அவர் நிர்மாணித்த பெரிய குத்பா பள்ளி விளங்குகிறது, காதில் கடுக்கனுடன், மரைக்கயர் பச்சை என்ற மரகத கல் வைத்த கணையாழி அணிந்து, யானைதந்த பிடி வைத்த வாள் கொண்டு வீரச் செருக்குடன் பரங்கியர் படைகளை நடுங்க வைத்த சீதக்காதி மரைக்காயரை குறித்த வரலாறு சரியான முறையில் ஆவணப்படுத்தப்படவில்லை என்பதே இன்றைய நிலை.

வேதாளையில் வீரமரணம் அடைந்த சீதக்காதி மரைக்காயரின் சகோதரர் மலிக் சேய்ஹ் இப்ராஹீம் மரைக்காயர் அவர்களின் கல்லறை வேதாளை கூரைப் பள்ளியில் இருக்கிறது. இவரின் மூதாதையரான மலிக் சுங்கம் கட்டளை செய்யது (எ) செல்லக்குட்டி மரைக்காயர், முளம்மர் (எ) மழ மரைக்காயர் முதல் இவரின் பாட்டனார் மலிக் மஹ்மூது நெய்னா (எ) மாமு நெய்னா மரைக்காயர், தந்தை மலிக் பெரியதம்பி மரைக்காயர் வரையிலான வம்சாவழிப் பெயர்கள் இவரது கபுரின் மீஜான் கல்லில் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். மீஜான் கல்லில் பொறிக்கப்பட்ட இந்த வம்சாவழிக் குறிப்பை 1851 ஆம் ஆண்டு சீதக்காதி மரைக்காயர் வாரிசுகளால் எழுதப்பட்ட ஜாபிதாவுடன் ஒப்பிடும் போது, சீதக்காதி மரைக்காயரின் பாட்டனாரான மாமு நெய்னா மரைக்காயரின் பாட்டனார் பெயர் சேகுகண்டு மரைக்காயர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது சற்று குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனினும் சீதக்காதியின் பாட்டனார் பெயர் மஹ்மூது நெய்னா என்ற மாமு நெய்னா மரைக்காயர் என்பது வேதாளை கல்வெட்டிலும், வம்சாவழி ஜாபிதாவிலும் குறிப்பிடப்பட்டு உறுதிப்படுத்தப்படுகிறது. மேலும் நாகலாபுரம் உமறு கத்தாப் புலவர் தான் வடித்த சீதக்காதி திருமண வாழ்த்தில் கூறும் கருப்பாறு காவலர் என்பது பாண்டிய மன்ன‌ர்களால் தென் தமிழக கடலாதிக்கத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்ட சுங்கம் கட்டளை செய்யது என்ற சேகுகண்டு மரைக்காயராக இருக்கலாம் என்றும், வன்ணப்பரிமளப் புலவர் இயற்றிய ஆயிரம் மசாலா என்ற புராணத்தில் குறிப்பிடப்படும் அதன் கொடை நாயகராகிய கறுப்பாறு காவலர் என்பவர் 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த சீதக்காதி மரைக்காயரின் பாட்டனார் மலிக் மஹ்மூது நெய்னா என்ற மாமு நெய்னா மரைக்காயர் ஆக இருக்கலாம் என்றும் கருத முடிகிறது.

கி.பி 1650 ஆம் ஆண்டு, மதுரை நாயக்கர் பேரரசின் தென்கடல்பகுதி துறைமுக நகரமான கீழக்கரையின் வணிக வளம் உலகெங்கும் புகழுச்சியில் இருந்த காலம், மன்னர் திருமலை நாயக்கர் ஆட்சியின் கீழ் இருந்த இந்தப் பகுதியில் போர்த்துக்கீசியர்கள் தங்கள் மேலாதிக்கத்தை வீம்புடன் செயல்படுத்தி மரைக்காயர் வணிகர்களை அச்சுறுத்திய போர்ச் சூழல், கீழக்கரையில் கறுப்பாறு காவலர் என்ற கடல் பகுதி வர்த்தகத்துக்கு 6 தலைமுறையாக இங்கே பொறுப்பாளர்களாக இருந்த, தென்தமிழகத்தின் தலைசிறந்த கடல் வாணிபக் குடும்பமும் செல்வாக்கு மிக்க செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவருமான பெரிய தம்பி மரைக்காயர் அவர்களின் மகனாக செய்கு அப்துல் காதிறு மரைக்காயர் என்ற சீதக்காதி மரைக்காயர் அவர்கள் கீழக்கரை நடுத்தெருப் பகுதியில் கல்வீட்டில் (தற்போதைய கல்வீட்டுத் தெரு) பிறந்தார்கள்.

சீதக்காதி மரைக்காயரின் வாரிசுகளில் 10, 11 மற்றும் 12 ஆம் தலைமுறையினர் இன்று நடுத்தெருவில் வாழ்ந்து வருவதைக் காண முடிகிறது, இன்று ஒரு நெருக்கமான குடியிருப்பாக மாறிப்போன கல்லூட்டு முடுக்கு என்றழைக்கப்படும் கல்வீட்டுத் தெரு, அதையொட்டிய மரைக்காயர் அப்பா குடும்பத்தினருக்கு சேர்ந்த காணிகள், அதற்கு எதிரில் இருக்கும் குத்பா பள்ளி வளாகம், மையவாடி ஆகியவை அனைத்தும் சீதக்காதி அவர்களுக்கு சொந்தமான நிலமாக இருக்கலாம் என்றும், காலப்போக்கில் அது அவரது வாரிசுகளால் விற்கப்பட்டிருக்கலாம் என்றும் கருத முடிகிறது, பெரிய குத்பா பள்ளி வளாகம் முழுதும் வள்ளல் சீதக்காதி மரைக்காயர் குடும்பத்தாரின் பண்டக சாலை இருந்த இடம் என்றும் செய்திகள் உண்டு. நடுத்தெரு, கல்வீட்டுப் பகுதியில் இருந்த வள்ளல் சீதக்காதி மரைக்காயரின் மாளிகைக்கு முன்பும் ஒரு பெரிய ஆசாரம் (சதுக்கை) இருந்ததாகவும் , பார்வையாளர்கள் சீதக்காதி மரைக்காயரை சந்திக்க இந்த ஆசாரத்தில் அமர்ந்து காத்திருப்பார்கள் என்றும் சீதக்காதி நொண்டி நாடகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சீதக்காதி மரைக்காயரின் பேரர் கப்ப நெய்னா மரைக்காயர், அவருடைய பேரர் பட்டனசாமி முத்தலிஃப் வம்சவழியில் சீதக்காதி மரைக்காயர் அவர்களின் மகள் முத்து மீரா நாச்சியின் மரபினராக, மரைக்காயர் அப்பா வீடு, முத்தலிஃப் காக்கா வீடு என்ற அடைமொழியுடன் இன்றும் அழைக்கப்படுகிறார்கள். சீதக்காதி மரைக்காயரின் மகள் பெரிய மீரா நாச்சி வழியில் வள்ளலின் 8 ஆவது தலைமுறையில் வந்தவர்தான் நடுத்தெருவில் பிறந்து, இலங்கையில் மறைந்த ஆசாரக் கோவை தந்த அப்துல் மஜீது புலவர் என்று வரலாற்றின் மூலமும், 1851 ஆம் ஆண்டு வள்ளலின் குடும்பத்தினரால் எழுதப்பட்டு பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த வம்சாவழி ஜாபிதா முலமும் அறிய முடிகிறது.

கடையேழு வள்ளல்களுக்கு பிறகு எட்டாம் வள்ளலாக அறியப்பட்டவர் வள்ளல் சீதக்காதி. இராமநாதபுரத்தை ஆண்ட கிழவன் சேதுபதி என்றழைக்கப்படும் ராஜா விஜய இரகுநாதத் தேவருக்கும், இவருக்கும் இடையிலான தோழமை சமய நல்லிணக்கத்திற்குத் தக்கதோர் எடுத்துக்காட்டாக அந்நாளில் திகழ்ந்தது. அரபிக்கடல், கோரமண்டல் கடல் பகுதி முதல் வங்காளம் வரையிலுமான (கொல்லம், குட்ட நாடு, மலப்புரம், மராட்டியம், கர்நாடகம், குடகு மற்றும் துலு நாடு என்ற கோவா பகுதிகள், பல்லவம், கலிங்கம் என்ற ஒரிசா , காம்பீலி, திரிகூடம், பப்பாவம், டில்லி, ஆக்ரா, அயோத்தி, பாஞ்சாலம் உள்ளடக்கிய உத்திரபிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் பகுதிகள், கீழைக்கடல் பகுதிகளான காம்போஜம் (கம்போடியா), சைக்கோன் (வியட்நாம்), சாவகம் (ஜாவா), சுவர்ணதீபம் (சுமத்ரா), கடாரம் மற்றும் மலாக்கயிஸ் (மலேசியா), ஈழம், கண்டி மற்றும் சிங்களம் (ஸ்ரீலங்கா), முச்சீனம் (சீனா) அக்ஸைன் (பர்மா உள்ளிட்ட இந்தோ சீன நாடுகள்) மற்றும், மக்கம் (அரேபிய நாடுகள்) ,கிரீஸ், பிரான்ஸ்லாந்த் (ஃப்ரன்ஸ்) ஆகிய மேலை நாடுகளிலும் சீதக்காதி மரைக்காயர் கப்பல்கள் மூலம் வணிகம் புரிந்து பெரும் செல்வாக்கு கொண்டிருந்தமையால் மொகலாயர்கள் மற்றும் கர்னாடக நவாப்கள் என்ற ஆற்காடு நவாபுகளும் சீதக்காதி மரைக்காயரின்பால் பெரும் மதிப்பு வைத்திருந்தனர், மேலும் இலங்கையில் விளையும் கொட்டைப் பாக்குகள் அனைத்தையும் கொள்முதல் செய்யும் உரிமையையும் பெற்றிருந்தார்.

மன்னார் வளைகுடா மற்றும் இலங்கைக் கடலில் சங்கு மற்றும் முத்துக் குளிப்பு, கப்பல் வாணிபம், சுங்க வசூல், கடலோரப் பாதுகாப்பு என அனைத்தும் சீதக்காதி மரைக்காயரின் ஆதிக்கத்தில் இருந்தது. அப்பொழுது இங்கு வியாபாரம் மட்டுமே செய்து கொண்டிருந்த ஆங்கிலேய கிழக்கியக் கம்பெனியர் சீதக்காதி மரைக்காயரின் வர்த்தகத் திறமையையும், செல்வாக்கையும் கண்டு வியந்து, பெரிதும் மதித்து அவருடன் மிளகு மற்றும் இதர பொருட்களை கொள்முதல் செய்து கொள்ளவும், மேலும் பல வியாபாரங்களுக்கும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். சீதக்காதி திருமண வாழ்த்தில் இடம்பெறும் பாடல்கள் மூலம் சீதக்காதி மரைக்காயரின் நாடுகள் கடந்த வணிக ஆதிக்கத்தை அறியலாம்.

1680 களில் திருச்சியை தலை நகராகக் கொண்டு ஆண்டு வந்த மன்னர் சொக்கநாத நாயக்கருக்கு எதிராக பாளையக்காரர்கள் கிளர்ந்தெழுந்த நிலையில், சேதுபதிகளின் உதவியால் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது, அந்த நேரத்தில் சீதக்காதி மரைக்காயரின் ராஜதந்திர யுக்திகள் முறியடிப்புக்கு பெரிதும் பயன்பட்டது. மேலும் மைசூர் படைகள் மதுரையைக் கைப்பற்ற வந்த சமயத்திலும் சீதக்காதி மரைக்காயரின் அணுகுமுறைகள் மூலம் முறியடிக்கப்பட்டது.

மேலும் 1690களில் நாயக்கர் அரசி ராணி மங்கம்மாள் ஆட்சிக் காலத்தில் சேதுபதி சீமையை கிழவன் சேதுபதி சுதந்திர சமஸ்தானமாக அறிவித்து, நாயக்கர் ஆட்சியின் கீழிருந்த நிலையை விலக்கிக் கொண்ட காலத்தில், சேதுபதிகளின் பாதுகாப்புக் காரணங்களுக்காக போகலூரில் இருந்த சேதுபதி மன்னர் கோட்டையை இராமநாதபுரத்திற்கு மாற்றியதில் பெரும் பங்கு வகித்தவர் வள்ளல் சீதக்காதி. இராமலிங்க விலாசம் என்ற தர்பார் மண்டபத்தை அரண்மனைக்குள் அமைக்க யோசனை தந்தவர், சீதக்காதி மரைக்காயரின் அலுவல்களுக்காக இராமநாதபுரம் அரண்மனைக்குள் சின்ன அரண்மனை என்ற ஒரு மாளிகையை அரசர் நிர்மானிக்க உத்தரவிட்டார். சீதக்காதி நொண்டி நாடகத்தில், ஒடுங்காபுலி முதலில் சீதக்காதியைத் தேடி இராமநாதபுரம் அரண்மனைக்குச் சென்று, அங்கு அவரில்லை, கீழக்கரையில் இருப்பதாக செய்தி சொன்னதால் அவன் கீழக்கரையை நோக்கி வந்ததாகவும் அந்தப் பாடல் குறிப்பிடுகிறது. இதன் மூலம் சீதக்காதி மரைக்காயர் இராமநாதபுரம் அரண்மனையிலேயே பெரும்பாலும் அலுவல்கள் காரணமாக வசித்திருக்கிறார் என்றே கருத முடிகிறது..

தலைமலைக் கண்ட தேவர், அழகிய சிற்றம்பலக் கவிராயர், படிக்காசுத் தம்பிரான் முதலான தமிழ்ப் புலவர் பெருமக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களின் நன்மதிப்பைப் பெற்றவராகவும், அண்ணல் நபியின் புகழ்பாடும் சீறாப்புராணக் காப்பியத்தை உமறுப்புலவர் இயற்ற ஆதரவும், உதவியும் நல்கியவராகவும் இருந்திருக்கிறார். சீறாவின் கொடை நாயகரான பரங்கிப்பேட்டையைச் சார்ந்த அபுல்காசிம் மரைக்காயர் என்பவர் சீதக்காதி வள்ளலின் நண்பராகவோ, நிதி மற்றும் நிர்வாகத்துக்கான பொறுப்பாளராகவோ அல்லது வள்ளல் குடும்பத்தின் பொக்கிஷதாரராகவோ இருக்கலாம் அல்லது வள்ளலின் வணிகக் கூட்டாளியாகக் கூட இருக்கலாம் என கருத்துகள் நிலவுகிறது, அவர் கீழக்கரையை சார்ந்தவர்தான் என்ற கருத்து உறுதிப்படுகிறது, அதற்கான ஆதாரமாக சீறாபுராணத்தில் உமறுப்புலவர் வகுதை அபுல்காசீம் மரைக்காயர் என பலமுறை குறிப்பிடுகிறார். அதுமட்டுமின்றி வைகையம்பதிக்கு வேந்தன் என்றும் குறிப்பிடுவதால் வகுதை மற்றும் வைகயம்பதி என்பதும் கீழக்கரையை குறிக்கும் சொல்லாக தெளிவுற உறுதியானதாலும், சீறாபுராண‌ம் கி.பி. 1665 ஆம் ஆண்டு கீழக்கரையில் சீதக்காதி மரைக்காயரின் அமைச்சரான அபுல்காசீம் மரைக்காயர் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டதாகவும், பன்னூலாசிரியர் திரு. கா.சு. பிள்ளை தனது தமிழ் இலக்கிய வராலாறு – 2 ஆம் பாகத்தில் குறிப்பிடுவதாலும், கொடைநாயகர் அபுல்காசீம் மரைக்காயர் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்தவர் என பதிவிடுவது நகைப்புக்குரியதாகிறது.

மாதிஹ் ரசூல் இமாம் சதக்கத்துல்லா அப்பா அவர்களின் மேல் அளவற்ற பாசமும் மரியாதையும் கொண்டிருந்தவர் மட்டுமின்றி, அவர்களது அறிவுரைகளை என்றும் ஏற்று நடப்பவராகவும், அப்பா அவர்களது வழிகாட்டுதலின் படிதான் பெரிய குத்பா பள்ளியை வள்ளல் சீதக்காதி கட்டத் துவங்கினார். கீழக்கரை பெரிய குத்பா பள்ளியை நிர்மாணிக்க சீதக்காதி மரைக்காயரின் தந்தையாரான பெரியதம்பி மரைக்காயர் காலத்தில் இமாம் மஹ்தூம் சின்னீனா லெப்பை ஆலிம் அவர்களின் வேண்டுகோள்படி திட்டமிடப்பட்டதாகவும் சில வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சின்னெய்னா லெப்பை ஆலிம் கீழக்கரை பழைய குத்பாபள்ளி தெருவில் அக்காலத்தில் சீதக்காதி மரைக்காயரின் முன்னோர்களால் நடத்தப்பட்டு வந்த தாருல் உலும் என்ற அரபி மத்ரஸவின் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர்.

சீதக்காதி மரைக்காயரின் சகோதரரான பட்டத்து மரைக்காயரின் (முஹம்மது அப்துல் காதிறு மரைக்காயர்) மகன் அபூபக்கர் மரைக்காயர் அவர்கள் சதக்கத்துல்லா அப்பாவின் மகள் சாரா உம்மாவை மணம் முடித்ததாகவும், இவர்களின் புதல்வர்களான வள்ளல் லெப்பை நெய்னா மரைக்காயர் மற்றும் அவ்வாகாறு என்ற அப்துல் காதிறு மரைக்காயர் ஆகியோர்கள் தமது மூதாதையர் என்றும் வரலாற்று ஆய்வாளர் எம். இத்ரீஸ் மரைக்காயர் தனது கீர்த்திமிகும் கீழக்கரை நூலில் குறிப்பிடுகிறார். 1851 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற வம்சாவழி ஜாபிதாவில், சீதக்காதியின் இளவல் பெயர் செய்யது லெவ்வை நெய்னா என்ற பட்டத்து மரைக்காயர் என்றும், அவர்களின் வாரிசு குறித்த செய்திகள் எதுவும் கிட்டவில்லை எனவும் கவிஞர் ச.சி.நெ. அப்துல் ஹக்கீம், ச.சி. நெ.அப்துற் ரஸாக் ஆகியோர் எழுதிய சேது நாட்டு பெரியதம்பி நூலின் மூலம் தெரிவிக்கின்றனர். சீதக்காதி நொண்டி நாடகத்தில் வரும் மாமு நெய்னா பிள்ளை என்பவர் சீதக்காதி மரைக்காயரின் சிறிய தகப்பனார் மீராப்பிள்ளையின் மகன் என்றும், வள்ளலின் மகள் முத்து மீரா நாச்சியை மணம் முடித்தவர் என்றும் அறிய முடிகிறது.

17 ஆம் நூற்றாண்டில் 1675 ஆம் ஆண்டு தொடங்கி 1682 வரை 7 வருடங்களாக தொடர்ந்து சேது சீமையில் ஏற்பட்ட கடும் பஞ்ச காலத்தில் தனது தானியக் களஞ்சியத்தில் சேமிக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை மக்களுக்கு வாரி இறைத்த, கடல் வாணிபத்தில் தாம் ஈட்டிய பெருமளவிலான செல்வத்தை மக்களுக்கு கணக்கின்றி வாரிக் கொடுத்த செந்தமிழ் வள்ளலாகச் சீதக்காதி திகழ்ந்தார். இதனைப் புகழ்ந்து படிக்காசுப்புலவர் கீழ்கண்ட பாடலை பாடியிருக்கிறார் .

ஓர்தட்டி லேபொன்னு மோர்தட்டி லேநெல்லு மொக்கவிற்குங்
கார்தட் டியபஞ்ச காலத்தி லேதங்கள் காரியப்பேர்
ஆர்தட்டி னுந்தட்டு வாராம லேயென்ன தானத்துக்கு
மார்தட் டியதுரை மால்சீதக் காதி வரோதயனே.

மேலும் செய்தக்காதி நொண்டி நாடகம் மற்றும் உமர் கத்தாப் புலவர் எழுதிய செய்தக்காதி மரைக்காயர் திருமண வாழ்த்து என்ற இரண்டு இசுலாமியச் சிற்றிலக்கியங்கள் இன்றைக்கும் சீதக்காதியின் புகழ் பாடுவனவாக நமக்குக் கிடைக்கின்றன. படிக்காசு தம்பிரான் புலவர் பாடிய இன்னுமொரு பாடலில் சீதக்காதி வான்புகழ் வள்ளல்தன்மையை தெளிவுற வரையறுக்கிறார்

காய்ந்து சிவந்தது சூரிய காந்தி கலவியிலே
தோய்ந்து சிவந்தது மின்னார் நெடுங்கண்க டொல்பல நூல்
ஆய்ந்து சிவந்தது பாவாணர் நெஞ்ச மனுதினமும்
ஈந்து சிவந்தது மால்சீதக் காதி யிருகரமே…

சீதக்காதியின் மறைவுக்குப் பின்னர் செத்தும் கொடை கொடுத்தார் சீதக்காதி என்றதோர் சொல்வழக்கு தமிழகத்திலே இன்றும் நின்று நிலவுகின்றமையே அவரின் வள்ளல் தன்மைக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும். படிக்காசுத் தம்பிரானின் கீழ்க்கண்ட இரங்கற்பா , தமிழ் புலவர்களுக்கும் சீதக்காதி மரைக்காயருக்கும் இருந்த உறவினை நமக்குத் தெளிவாகப் புலப்படுத்தும்.

மறந்தா கிலும் அரைக் காசும் கொடாத மாந்தர் மண்மேல்
இறந்தா வதென்ன! இருந்தா வதென்ன! இறந்து விண்போய்ச்
சிறந்தா ளுங்கா யல்துரை சீதக்காதி திரும்பி வந்து
பிறந்தா லொழியப் புலவோர் தமக்குப் பிழைப்பில் லையே..

அலிபாபாவும் 40 திருடர்களும் திரைப்படத்தில் பானுமதி பாடிய "அன்பினாலே ஆளவந்த அழகு பூபதி அமீர் பூபதி" பாடலின் சரணத்தில் "சிந்தை தன்னை கவர்ந்து கொண்ட சீதக்காதியே..." என்ற வரிகள் வருவதைக் கேட்டிருப்போம், 1956 ஆம் ஆண்டு டி.ஆர். சுந்தரம் இயக்கி, எம்.ஜி.ஆர், பானுமதி ஆகியோர் நடிப்பில் தென்னிந்தியாவில் முதல் முழு ஈஸ்ட்மெண்ட் கலரில் வெளிவந்த திரைப்படம்தான் அலிபாபாவும் 40 திருடர்களும். இதன் பாடலாசிரியர் மருதகாசி அவர்களுக்கும், சீதக்காதிக்கும் என்ன தொடர்பு என ஆராய்ந்ததில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்துக்கும் பல்லவி அமைத்துக் கொடுத்து உதவியர், எழுத்தாளரும், கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரரும், வள்ளல் சீதக்காதி வரலாறு என்ற நூலை எழுதியவருமான மறைந்த கவி. கா.மு. சரீஃப் அவர்கள். இந்தப் பாடலில் விந்தை ஒன்றும் பொதிந்திருப்பதைக் காணலாம். 8 ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்ட அரேபிய இலக்கியக் காவியமான அலிபாபா கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சீதக்காதி மரைக்காயரின் புகழைப் பறைசாற்றிய பின் வரலாற்றுப் பாத்திரத்தை முன் வரலாற்று கதைப் பாடலில் புகுத்தி கவி.கா.மு சரீஃப் நவீனம் நிகழ்த்தியிருப்பார்.

வள்ளல் சீதக்காதியின் வாழ்க்கை குறித்து பல நூல்கள் வெளிவந்திருக்கிறது. குறிப்பாக டாக்டர் ஹூசைன் நைனார் எழுதிய சீதக்காதி வள்ளல்., கவி. கா.மு. ஷரீஃப் எழுதிய வள்ளல் சீதக்காதி வரலாறு, கேப்ட்டன் அமீர் அலி எழுதிய வள்ளல் சீதக்காதியின் வாழ்வும் காலமும், டாக்டர் எஸ்.எம். கமால் எழுதிய செந்தமிழ் வள்ளல் சீதக்காதி, பாவலர் உசேன் எழுதிய செந்தமிழ் வள்ளல் சீதக்காதி அகப்பொருள் கோவை, டாக்டர் எஸ்.எம்.ஏ. காதர் எழுதிய சீதக்காதி பிள்ளைத் தமிழ் ,கவிஞர் ச.சி. நெ, அப்துர் ரஸாக், கவிஞர் ச.சி. நெ. அப்துல் ஹக்கீம் ஆகியோர் எழுதிய சேது நாட்டு பெரியதம்பி வள்ளல் சீதக்காதி ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை..

பஞ்சத்தில் சேதுமண் பட்டினி நோயில் பரிதவிக்க
அஞ்சற்க என்றே கரத்தால் படியை அளந்த வள்ளல்…

என்ற உசேன் பாவலரின் பாடலுக்கேற்ப தனது ஈகை குணத்தாலும், தமிழ்ப் பற்றாலும் புகழோங்கியவராகவும், பெரும் வணிகராகவும், சமூக நல்லிண‌க்கத்தின் சிகரமாகவும், வீரத்தின் பிறப்பிடமாகவும் திகழ்ந்த வள்ளல் சீதக்காதி மரைக்காயர் அவர்கள் தனது 48 ஆவது வயதில் கி.பி.1698 ஆம் ஆண்டு இவ்வுலகைவிட்டு மறைந்தார், வள்ளலின் பூத உடல் நடுத்தெரு குத்பா பள்ளியில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

18 ஆம் நூற்றாண்டில் கீழக்கரையில் வாழ்ந்த புலவர் பெருமக்களும் கூட சீதக்காதி வள்ளலின் வரலாற்றினை விரிவாகப் பதிவு செய்யாமல் போனது ஏன் என்று அறிய முடியவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் டாக்டர் ஹூசைன் நெய்னார் எழுதிய வள்ளல் சீதக்காதி என்ற நூல் வெளியாகும் வரை சீதக்காதி நொண்டி நாடகமும், சீதக்காதி திருமண‌ வாழ்த்தும், படிக்காசு தம்பிரான் புலவர் எழுதிய சரம கவிகளுமே வள்ளளின் வாழ்வு குறித்து பதிவு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- எஸ்.மஹ்மூது நெய்னா

Pin It