சூலூர் வரலாற்று நூலுக்கு முன்னோடியான – ஊர் வரலாறுகள் உள்ளன; வாழ்வியல் வரலாறுகள் இல்லை.

வாழ்வியல் வரலாற்று நூல் வரிசையில் தமிழ் நாட்டின் முதல்முயற்சி – முன்னோடி நூல் – சூலூர் வரலாறுதான்!

ஓர் ஊரை மையப்படுத்தி, அவ்வோர் தொடர்பான மக்கள் வாழ்வியலின் பலமுனைச் செய்திகளையும் சமூகவியல் பார்வையோடு வழங்கும் பணியை சூலூர் வரலாறு தொடங்கி வைத்துள்ளது. எதிர்காலத் தமிழகத்தில் இப்பணி இன்னும் வேர்விட்டுக் கிளை பரப்பும் என நம்பலாம்.

sulurசிற்றூர் கலைச் செய்திக் களஞ்சியங்கள் என வாழ்வியல் வரலாற்றும் முயற்சியைத் தமிழக அரசே அறிவித்ததும் உண்டு; செய்திகள் தொகுக்கப்பட்டதும் உண்டு. ஏனோ, அவை நூலாக வெளிவரவில்லை.

சென்னை, மதுரை, நெல்லை, முகவை – இந்த நான்கு மாவட்டங்களில் சிற்றூர்க் கலைச் செய்திக் களஞ்சியங்கள், தொகுக்கப்பட்டன: வல்லுநர் குழுவிற்கும் அனுப்பப்பட்டன. அவை வெளியுலகை எட்டிப்பார்க்காத காரணம் புலப்படவில்லை.

தமிழ்நாட்டு வரலாற்றைத் தொகுத்தளிக்கும் தமிழ் நாட்டரசின் முயற்சியில் – இதுவரை மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன.

நிகழ்காலத்தைப் புரிந்து கொள்ளவும் எதிர்காலத்தை வடிவமைக்கவும் கடந்த காலச் செய்திகளே கைகொடுக்கும்.

தமிழருக்கு வரலாற்று உணரவில்லை என்னும் பழிச்சொல் வராமல் பாதுகாப்பது – இன்றைய அறிவாளர்களின் கடமை.

ஊர் வரலாறு என்ற வகையில் இது வரை சில நூல்கள் வெளிவந்துள்ளன.

செந்தலை வரலாறு - எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம்
பூளைமேடு - அ.கி. நாயுடு
சென்னை மாநகர வரலாறு - மா.சு. சம்பந்தன்
கோலார் தங்கவயல் வரலாறு - கே.எஸ். சீதாராமன்
கோவை மாநகர வரலாறு - சக்தி தேவி
அன்னூர் வரலாறு - க.அ. புவனேசுவரி
மாகி வரலாறு - சி.எஸ். முருகேசன்
இதுவோ எங்கள் கோவை - கோவை கிழார்
அரிக்க மேடு அகழ்வாய்வு - சு.தில்லைவனம்
வரலாற்றில் வளவனூர் - இலட்சுமிமூர்த்தி
நெஞ்சை அள்ளும் தஞ்சை - புலவர் செ. இராசு
பேருர் - அரங்க. பூங்குன்றன்
தருமபுரி வரலாறு - பெ. பெரும்பாக்கன்

ஊர் வரலாறு என்ற அடிப்படையில், பண்டைய அரசியல் வரலாற்றுக் தொகுத்துக் கூறும் நூல்களே இவற்றில் மிகுதி பூளைமேடு வரலாறு, இதுவோ எங்கள் கோவை, கோலார் தங்கவயல் வரலாறு – மூன்றும் வாழ்வியல் வரலா ற்றுச் சாயலுடையவை.

மக்களின் பொருளியல், சமுதாயவியல், பண்பாட்டியல் தொடர்பான வரலாறுகளை விரிவாகத் தொகுத்தளிக்கும் முயற்சி – சூலூர் வரலாறு என்னும் இந்த நூலிலிருந்து தான் தொடங்குகிறது.

------------------------

“பெரியார் மாவட்டத்தின் சமுதாய வரலாற்றை எழுதுவதே என் வாழ்க்கைப் பணியாகும். அரசியல் வரலாற்றைக் காட்டிலும் பொருளாதார, சமுதாய, பண்பாட்டு வரலாறுதான் மக்களுக்குத் தேவையான ஒன்றாகும்.”

அறிஞர் கு.ச. ஆனந்தம் 15.1.1994 ஆம் நாள், பெரியார் மாவட்டக் கலை இலக்கியக் கூட்டமைப்புத் தொடக்கவிழாவில் இவ்வாறு அறிவித்துள்ளார். (வளரும் தமிழ் உலகம் – சனவரி 94).

இது போன்ற அறிவிப்புகளும், அவற்றுக்கான முயற்சிகளும் – சூலூர் வரலாறு நூலைக் கண்டபின் இன்னும் மிகுதி பெறவும் வேகம் பெறவும் வாய்ப்பு உண்டு.

தமிழ்நாட்டின் பல துறைகளுக்குத் தலைமை தாங்கும் கோவை – வரலாற்றுத் துறையிலும் வழிகாட்டியாக உள்ளது.

கொங்கு நாட்டின் மண்வரலாறு – கோவை கிழார் எழுதிய கொங்குநாட்டு வரலாறு என்னும் நூலாக வெளி வந்துள்ளது. கொங்குநாட்டு மக்கள் வரலாறு – பாரதியார் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள கொங்கு நாட்டியல் என்னும் நூலாக உருவெடுத்துள்ளது.

கோவை நகரின் பல துறைவளர்ச்சியைச் சுருங்கக் கூறும் அறிய நூலாக கோவை கிழாரின் இதுவோ எங்கள் கோவை 1952 இலேயே வெளிவந்துள்ளது. ஊர் வரலாற்று வரிசையில் முதல் முயற்சியாக, கோவை மாவட்டத்தின் பூளைமேடு வரலாறு வெளிவந்துள்ளது.

கொங்கு நாட்டு வாழ்வியலை வெளிப்படுத்தும் அரிய பணியில் – கோவை வானொலி நிலையமும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.

கோவை வானொலி நிலையப் பொன் விழா மலராக வெளிவந்துள்ள தமிழ்மணம் – கொங்கு நாட்டு வரலாற்றுக்கு வளம் சேர்க்கும் நல்ல தொகுப்பு நூல்.

கொங்கு நாட்டுப் பண்பாட்டுப் படிவங்கள் என இப்போது (1995) வானொலியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் – நூலாக வெளிவரும் பொது – வரலாற்றிற்கு வளம் சேர்க்கவல்ல அரிய தொகுப்பாய் அமையும்.

சமகாலத் தமிழக வரலாற்றைத் தெளிவுபடுத்தும் நூல்கள் அண்மை நாளாக வெளிவரத் தொடங்கியுள்ளன.

தமிழ்நாட்டில் பண்பாட்டுப் புரட்சி (வே. ஆனைமுத்து)
மனித இன வரலாற்றில் பெரியார் பேணிய அடையாளம் (கு.வெ.கி.ஆசான்)
திராவிட தேசியும் தமிழ் தேசியமும் – குணா

நவீன காலத்திற்குள் தமிழகம் நுழைந்த வரலாற்றை விளக்கும் – ஏராளமான குறிப்புகள் இந்த நூல்களில் இடம் பெற்றுள்ளன.

அண்மைக் கால நடப்பு வரலாற்றை ஆழத்தோடும் கூர்மையோடும் வெளிப்படுத்தும் முயற்சி இப்போது பெருகி வருகிறது.

அறந்தை நாராயணன்
அ.மா.சாமி
அருணன்
க.திருநாவுக்கரசு
வே. ஆனைமுத்து
பெ.சு. மணி
புலவர் இரா. இளங்குமரன்
ரண்டார்கை
விடுதலை க. இராசேந்திரன்
ரகமி
கோ. கேசவன்
என். ராமகிருஷ்ணன்
மா.சு. சம்பந்தன்
ஆ.இரா. வெங்கடாசலபதி

சமகால வரலாற்றைத் தெளிவுபடுத்தும் முன்னணி ஆய்வாளர்களாக, இப்படிப் பலர் உருவாகியுள்ளனர்.

வரலாற்றுணர்வோடு செய்திகளைப் பதிவு செய்யும் அரசியல் தலைவர்களும் உள்ளமை – இந்நூற்றாண்டின் புதுமை.

கலைஞர் மு.கருணாநிதி, ம.பொ. சிவஞானம் இருவரும் – வரலாற்றாசிரியர்களாய்த் திகழும் அரசியல் தலைவர்களில் முன்னனி இடத்திற்கு உரியோர்.

கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி (மூன்று தொகுதிகள்) ம.பொ.சி. எழுதிய விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு விடுதலைக்குப் பின் தமிழ் வளர்ந்த வரலாறு, தமிழகத்தில் பிற மொழியினர் முதலிய நூல்கள் – வரலாற்றின் தனி மனிதச் சாதனைகளாக எதிர்காலத்தில் வியக்கப்படும்.

வளர்ச்சியும் மாறுதலும் நொடிதோறும் நிகழ்ந்து வரும் இன்றைய சூழலில் – ஆண்டு வாரியான வரலாற்றுப் பதிவுகளும் இன்றியமையாதவை. மலையாள மனோரமா இதழ் இவ்வகையான வெளியீட்டை 1991 முதல் வெளியிட்டு அரும்பணியாற்றி வருகிறது. ‘மனோரமா இயர்புக்’ என்னும் பெயரில் இதுவரை ஆண்டு நூல் களஞ்சியங்கள் அய்ந்து வெளிவந்துள்ளன.

தினத்தந்தி பொன் விழாவை ஒட்டி வெளியான வரலாறு படைத்த தினத்தந்தி (1992) என்ற வெளியீடும் குறிப்பிடத்தக்க ஒன்று. ஊர் வரலாறு என்ற முறையில் மிகச் சில நூல்களே வெளியாகி உள்ளன.

சூலூர் வரலாறு – ஆறாண்டு

சூலூர் வரலாறு 1989இல் தொடங்கப்பட்டது; ஆறாண்டு கால உழைப்பிற்குப் பின்பே நூல் வடிவைக் கண்டுள்ளது. வேறுவகையான நூல்களாயிருப்பின் – இந்த ஆறாண்டில் இருபது முப்பது நூல்களை உருவாக்கி இருக்க முடியும்.

கடும் உழைப்பை உணவாகத் தந்தால் மட்டுமே – வரலாறு கைநீட்டுகிறது. வாழ்வியல் வரலாறாய் உருவான சூலூர் வரலாறு – கூட்டு முயற்சி காரணமாக ஆறாண்டிற்குள் உருவம் பெற்று விட்டது.

காரல் மார்க்சு ‘மூலதனம்’ நூல் எழுத 17 ஆண்டுகள் தேவைப்பட்டதாம். கிப்பன் ‘ரோமப் பேரரசின் எழுச்சியும், வீழ்ச்சியும்’ எழுதி முடிப்பதற்கு 20 ஆண்டுகள் உருண்டோடி விட்டனவாம். ஆடம்சுமித்து ‘நாடுகளின் செல்வம்’ நூல் எழுத 17 ஆண்டுகள் எடுத்துக் கொண்டாராம். காரல் காண்டுபர்க்கு 'ஆபிரகாம் லிங்கன் வரலாறு' நூலை 30 ஆண்டுகளுக்குப் பின்பே முடிக்க முடிந்ததாம். சிங்காரவேல் முதலியார் ‘அபிதான சிந்தாமணி’ எழுதி முடிக்க 12 ஆண்டுகள் ஆயினவாம். பொன்னீலன் ‘புதிய தரிசனங்கள்’ புதினம் எழுதுவதற்குள் 14 ஆண்டுகள் கடந்து விட்டனவாம். ‘மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்’ நூல் எழுத, மறைமலையடிகளார் 24 ஆண்டுகளைச் செலவிட்டாராம்.

சூலூர் பாவேந்தர் பேரவை சூலூர் வரலாறு தொகுத்து முடிக்க எடுத்துக் கொண்ட காலமோ – ஆறு ஆண்டுகள்! கூட்டு முயற்சி காரணமாக, குறுகிய காலத்தில் நூலை அணியமைக்க முடிந்தது.

பேரவைத் தோழர்களின் கூட்டு முயற்சியில் செய்திகள் சேகரிக்கப்பட்டன. அவற்றை ஒழுங்கு செய்து நூலாக்கும் பணியைச் செந்தலை ந. கவுதமன் மேற்கொண்டார். தனிமனித முயற்சியாக சூலூர் வரலாறு தொகுக்கப் பட்டிருந்தால், இன்னும் பல ஆண்டுகளை எடுத்துக் கொண்டிருக்கும்.

நூலுக்கு இடம் பெறுவது இரண்டு வரியாக இருந்தாலும், அந்த இரண்டு வரிக்காகப் பல நாள்களைப் பலியிட்டுப் பேரவைத் தோழர்கள் அலைந்த நிகழ்ச்சிகளை, அருகிலிருந்தோர் மட்டுமே அறிவர். பாவேந்தர் பேரவைத் தோழர்களின் ஒன்றுபட்ட முயற்சியில் உருவான சூலூர் வரலாறு பல்வேறு பட்டறிவுகளை வழங்கியது.

* * * * *
ஈரான் நாட்டு வணிகம் கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் சூலூரில் நடந்தது என ஆய்வாளர் ஒருவர் எழுதியிருந்த குறிப்பைக் கண்டு எங்களுக்குப் பெருமகிழ்ச்சி. உரோமானிய வணிகம் மட்டுமல்ல ஈரானிய வணிகமும் சூலூரில் நடந்துள்ளதே! அதுவும் கி.மு. 2 ஆம் நூற்றாண்டில்! சொல்பவர் ஆய்வாளராயிற்றே. செய்தியை நம்பினோம். இந்தச் செய்திக்கு ஆதாரமாக ஆய்வாளர் காட்டிருந்த வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய ஆங்கில நூலைத் தேடி அலைந்தோம். நல்ல வேளை! மூலநூல் கிடைக்காவிட்டாலும் (புலவர் கா. கோவிந்தன் மொழி பெயர்த்த) மொழி பெயர்ப்பு நூல் கிடைத்தது. அதில் ஈரானைக் காணோம்! எரான் எனும் நாணயவகை மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. எரான் என்னும் நாணயப் பெயரை, ஈரான் என்னும் நாட்டுப் பெயராக அந்த ஆய்வாளர் மொழிபெயர்த்திருந்த ‘பொறுப்புணர்ச்சி’ அப்போது தான் புரிந்தது.

‘சூலூர் தந்தது – ஈரான் நாட்டு வணிகம் அல்ல! எரான் வகை நாணயம்’! மொழி பெயர்ப்பு நிகழ்த்திய குழப்பத்திலிருந்து நாங்கள் விடுபட, வெகுநாள் முயற்சி தேவைப்பட்டது. (காண்க : ஏடு போற்றும் சூலூர்)

சூலூர் வரலாறு தொடர்பான தொடர் சொற்பொழிவுகளை – தொல் பொருள் ஆய்வாளர்கள் அரங்க பூங்குன்றன், ஐ. இராமசாமி, அ. செல்வராசு, இரா.ப. கருணானந்தன் நால்வரும் சூலூர் வந்து வழங்கினர். சூலூர் வரலாற்றுக் கருத்தரங்கம் எனப் பாவேந்தர் பேரவை அவர்களைக் கொண்டு பல தொடர் நிகழ்ச்சிகளை நடத்தியது.

சூலூர் பற்றிய ஒரு சொல் இருந்தாலும் போதும். சூலூர் தொடர்பான எல்லா நூல்களையும் திரட்டிவிட வேண்டும் என விரும்பினோம். நூல்களைத் தேடத் தொடங்கினோம். செய்தி இருக்குமோ என அய்யுற்ற எல்லா நூல்களையும் வாங்கிக் குவித்தோம். பல நூறு புத்தகங்களை எழுத்து எழுத்தாகப் படித்துப் பார்த்தோம். பல நூறு நூல்களில் சில பத்து நூல்களே தேறினே.

சூலூர் பற்றிய செய்திகளைச் சுமந்து நிற்கும் அறுபத்து மூன்று நூல்களும் இதழ்களும் கிடைத்தன. செய்திகளுக்கு ஆதாரம் காட்டுவதாக அவற்றைப் பயன்படுத்துவதே முறை.

ஆய்வு நூல் தோற்றத்திலிருந்து சூலூர் வரலாறு விலகி நிற்க வேண்டுமென விரும்பினோம். ஊர் வரலாற்றுச் செய்திகளை, ஊர் மக்கள் அறிந்து கொள்வது தானே முதன்மை.

சூலூர் வரலாறு ஆய்வு நூலாக அமைந்துவிட்டால் – மக்கள் விலகி நின்று அச்சத்தோடு பார்ப்பார்களோ என அஞ்சினோம். மிகவும் எளிமையாக அமைந்துவிட்டால் – ‘ஆசை’யில் உருவான நூலாக ஆய்வுலகம் ஒதுக்கிவிடுமோ என்றும் கவலைப்பட்டோம்.

இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் – எல்லோரையும் சென்றடையும் வண்ணம் சூலூர் வரலாற்றை உருவாக்க முனைந்தோம்.

சூலூர் பற்றிய நூல் செய்திகளை ஏடு போற்றும் சூலூர் எனத் தனித் தலைப்பாகத் தந்துள்ளோம். பொதுமக்களுக்கு அது அறிமுகப்பகுதி! ஆய்வாளருக்கு அது அடிக்குறிப்புப் பகுதி! இரண்டின் சாயலும் அதில் கலந்து நடக்கக் காணலாம்.

சூலூர் பற்றித் ‘திராவிட நாடு’ இதழில் அண்ணா எழுதியுள்ளார் எனச் சிலர் செய்தி தந்தனர். நானும் படித்திருக்கிறேன் என்று சிலர் சொன்னார்கள். என்ன எழுதியிருக்கிறார் என்பதைச் சொல்ல யாரும் இல்லை.

திராவிட நாடு இதழில் ‘தம்பிக்கு’ கடிதமாகச் சூலூர் பற்றி அண்ணா எழுதியுள்ளார். தம்பிக்கு கடிதத் தொகுப்பில் அக்கடிதம் இருக்குமே! இதழையும் நூலையும் தேடித் தேடிச் சலித்தோம். இரண்டுமே கிடைக்கவில்லை.

சூலூரிலிருந்து சுடலையூர் வரை என்பது அக்கடிதத்தின் தலைப்பு எனக் கூறினர். இது மட்டுமே நாங்கள் அறிந்த உச்சநிலைச் செய்தி.

நூலை வெளியிட்டுள்ள, சென்னை பாரிநிலையம் சென்றே பார்த்து விட்டு வந்துவிடுவோம். சூலூர் பற்றி அண்ணா எழுதியுள்ள செய்தியாயிற்றே! அது இல்லாமல் என்ன சூலூர் வரலாறு?

சென்னை சென்று, பாரிநிலையம் புத்தகக் கடையில் செய்தியைச் சொன்னோம். அண்ணா எழுதிய தம்பிக்கு தொகுப்புகள் அனைத்தும் எங்கள் முன் அடுக்கி வைக்கப்பட்டன.

பாரிநிலையத்தில் அமர்ந்தபடி, சூலூர்... சூலூர்... என பக்கம், பக்கமாக விழிகளால் தாவினோம். ஊகூம்... எந்தத் தொகுப்பிலும் சூலூரைக் காணோம். சென்னைக்கு வந்ததும் கிடைக்காத செய்தியை, இனி எங்கே போய்த் தேடுவது ? ஏமாற்றமும் வருத்தமும் எங்களைத் தொடர்ந்தன.

சென்னை குறளகம் சென்று தமிழ்நாட்டு அரசு வெளியிட்டுள்ள ‘தொல் பழங்காலம்’ நூலை வாங்கினோம்.

சூலூர் பற்றி அண்ணா எழுதிய செய்தி கிடைக்காத வருத்தத்துடன், தொடர் வண்டியில் சோர்வாக ஏறி அமர்ந்தோம்.

தொல் பழங்காலம் நூலைப் புரட்டியபடி, கையும், கண்ணும் அசைந்து கொண்டிருந்தன, சென்னையிலிருந்து கோவை நோக்கித் தொடர்வண்டி பறந்து கொண்டிருந்தது. அதைவிட அதிகமான வேகத்தில் மனம் பறக்கத் தொடங்கிய வியப்பு அப்போதுதான் நடந்தது.

தொல் பழங்காலம் நூலில் சூலூர் பற்றிய செய்தி இருக்கும் என நாங்கள் நம்பவில்லை. நம்பாதது நடக்கும் போது, மனம் பறக்கத் தானே செய்யும்! சூலூரின் தொன்மை பற்றிய செய்தி ‘தொல் பழங்காலம்’ நூலில் இடம் பெற்றிருந்தது.

சூலூர் பற்றி – எதிர் பார்த்த செய்தி கிடைக்காமல் போனாலும் இன்னொரு செய்தியாவது கிடைத்ததே! சென்னை அலைச்சல் வீண் போகவில்லை என்று மனதைத் தேற்றிக் கொண்டோம்.

(திருப்பூர் க.நா. சங்கரன் அவர்களின் நூலகத்திலிருந்து) கோவை யாழ் நூலகம் துரை மடங்கன் – அண்ணாவின் சூலூர் செய்தி கிடைக்கக் காரணமாயிருந்த நிகழ்ச்சி, அதற்குப் பின் நிகழ்ந்தது.

கிளிக்குப் பச்சை பூசுவதா – என்று திராவிடநாடு இதழில் அண்ணா எழுதிய கடிதத்தில்தான் சூலூர் பற்றிய செய்தி கிடைத்தது. (தவறான தலைப்பில் தேடியதால்தான் சென்னை ஏமாற்றம்) அதே கடிதம் தம்பிக்கு என்னும் இரண்டாம் தொகுதி நூலாகவும் வெளிவந்துள்ளது. இதழ், நூல் இரண்டையும் கிடைக்கச் செய்து எங்களை மகிழ்ச்சியில் திக்கு முக்காடச் செய்து விட்டார் யாழ் நூலகம் துரை மடங்கன்.

சூலூர் பற்றிய ஒவ்வொரு செய்திக்குப் பின்னும் – இப்படிக் கவலையும் உழைப்பும் கலந்த ஒரு வரலாறு உண்டு.

ஓய்வு, விடுமுறை, பொழுதுபோக்கு – என எல்லா மகிழ்ச்சியையும் பேரவைத் தோழர்கள் இழந்து திரட்டிய செய்திகளே சூலூர் வரலாறு.

சூலூர் பேருராட்சிச் செய்திகளுக்கு மட்டுமே ஆறுமாதம் நாங்கள் செலவிட வேண்டியிருந்தது. தூசியும் அழுக்கும் மண்டிய நிலையில் பழைய பதிவேடுகள் எங்கள் கைக்கு வந்தன. சளியும் தும்மலும் தொடர்ந்த நிலையில் இரவு, பகலாக பணி நடந்தது. செய்தி திரட்டுவதற்கு மட்டுமே ஆறுமாதம் ஆனது. திரட்டிய செய்தியை வகைப்படுத்த வேண்டும். வகைப்படுத்தியவற்றை ஒன்று சேர்க்க வேண்டும். ஆவணங்கள் தரும் ஆதாரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். ஊர் மக்கள் நேர் காணல் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். கூறியது கூறலாகிவிடாமல் தனிப்படுத்த வேண்டும். அவற்றைப் முன் பின் மாற்றி முறைப்படுத்த வேண்டும், இத்தனைக்கும் பின்புதான் அச்செய்தி ஓர் உருவத்துடன் பார்க்க முடியும். இவற்றுக்கான உழைப்பும் நேரமும் தனியாகவும், கூட்டாகவும் – தொடர்ந்து ஆறாண்டுகள் செலவிடப்பட்டன.

கல்வெட்டுகள்
நேர்காணல்கள்
அகழ்வாய்வுப் பொருட்கள்
பதிவேட்டு ஆவணங்கள்
செவிவழிச் செய்திகள்
நூல்கள்
அழைப்பிதழ்கள்
இதழ்கள்
அறிக்கைகள்
எழுத்துரைகள்
ஒலிநாடாக்கள்
பட்டயங்கள்
வினா நிரல்கள்
ஆய்வேடுகள்
கருத்தரங்கக் கட்டுரைகள்

இப்படிப் பல வடிவங்களில் திரட்டப்பட்ட செய்திகளால் – சூலூர் வரலாறு வரைந்தது.

வெளியீட்டு எல்லையை விளங்கிக் கொள்ள முன் வெளியீட்டுத் திட்டத்தைப் பேரவை முன் வைத்தது.

தமிழில் முன் வெளியீட்டுத் திட்டம் சீவக சிந்தாமணி நூலுக்காக 1887 இல் உ.வே. சாமிநாதய்யர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த முறையில் பல நூல்கள் தமிழில் வெளியாகி உள்ளன. பேரவைத் தோழர்களின் முயற்சியும் ஊர் மக்களின் ஆர்வமும் முன் வெளியீட்டுத் திட்டத்தின் மூலம் – நூலுக்கான தேவை எல்லையைத் தீர்மானிக்க உதவின.

- புலவர் செந்தலை ந.கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை

Pin It