மௌரியப் படையெடுப்பு:

      கி.மு. 297 வாக்கில் பிம்பிசாரன் மகத ஆட்சியில் அமர்ந்தவுடன் தக்காணப் படையெடுப்பைத் தீவிரப்படுத்தினான். மௌரியப்படை தக்காணத்தின்மீது படையெடுத்து வந்த போது அவர்களுக்கு வடுகர்கள் துணையாக இருந்து ஆதரவு தந்தனர். மௌரியப்படையில் சேர்ந்துகொண்ட கோசர்களும், வடுகர்களும் தென்பகுதியில் இருந்த அனைத்து அரசுகளோடும் போர் செய்து வென்று வரலாயினர். மௌரியர்கள் முதலில் வடுகர்கள் துணைகொண்டு துளுவ நாட்டைத்தாக்கி அதனை ஆண்ட நன்னன் மரபினனை முறியடித்து, அவனது தலைநகர் பாழியைக் கைப்பற்றிக் கொண்டனர். பின் அதனை ஒரு வலிமையான அரணாக மாற்றியமைத்து அங்கிருந்து அவர்கள் அதியமான் மரபினரையும், சோழநாட்டின் எல்லையிலுள்ள அழுந்தூர்வேள் திதியனையும், பாண்டிய நாட்டு எல்லையிலுள்ள மோகூர் பழையனையும் படிப்படியாகத் தாக்கத்தொடங்கினர். சேரர் எல்லையிலுள்ள நன்னனை முதலில் தாக்கித் தோற்கடித்த பின் அவர்கள் அதியன் மரபினர்களைத் தாக்கத் தொடங்கினர். போர் வெற்றி தோல்வி இல்லாமல் தொடர்ந்தது.       

சதிய புத்திரர்கள்:

      cheran 350அதியமான் மரபினர் மௌரியர்களை எதிர்த்து தொடர்ந்து இறுதிவரை தக்குதல் நடத்தினர். தமிழகத்தின் வடமேற்குப் பகுதியில் மேற்குக் கடற்கரையில் உள்ள குதிரை மலை முதல் கொங்குநாடு வரை அதியன்கள் மரபினர் ஆண்டு வந்ததால் தான் அவ்வழியே படையெடுத்து வந்த மௌரியப்படைகளை அவர்கள் கடுமையாக எதிர்த்துப் போரிட்டனர். தொடக்கத்தில் தமிழகத்தின் எல்லைப்பகுதியில் இருந்த சோழ பாண்டிய படைத்தலைவர்களோடு இணைந்து போரிட்டு மௌரியப் படைகளை தடுத்து நிறுத்துவதில் அவர்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றனர். அதன் காரணமாகவே அசோகரின் கல்வெட்டில் அவர்களின் அரசகுல வடமொழிப்(பிராகிருதம்) பெயரில் சதிய புத்திரர்கள் என மூவேந்தர்களுக்கு இணையாக இடம்பெற்றனர். இந்த அதியன் மரபினரும், சோழ நாட்டெல்லையில் உள்ள அழுந்தூர்வேள் திதியனும், பாண்டிய நாட்டின் எல்லையிலுள்ள மோகூர்ப்பழையனும் மௌரியர்களை எதிர்த்துத் தாக்கி அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

மோகூர்த் தலைவன்:

     இறுதியில் அதியன்மரபினரும், திதியனும் மோகூர்த் தலைவனும் எல்லையோர அனைத்துத் தமிழ் அரசுகளும் ஒன்றினைந்து மோரியர்களைப் போரில் தோற்கடித்துத் தங்களது எல்லையைவிட்டு துரத்திவிடுகின்றனர். மோரியர்படை பின்வாங்கி துளுவநாட்டை அடைந்து பாழிநகரில் நிலைகொள்ளுகிறது. துளுவநாட்டு வெற்றிக்குப்பின் மௌரியரது எல்லைப் பகுதிப் படைத்தலைவர்களே வடுகர்களின் துணையோடு போரிட்டு வந்தனர். ஆனால் அவர்களால் தமிழக எல்லையில் உள்ள குறுநில மன்னர்களை, வேளிர்களை வெல்ல இயலவில்லை. தமிழகத்தின் எல்லையில் மௌரியப்படைகளின் தோல்வி மௌரியப்பேரரசைத் தட்டி எழுப்பியது.

      மௌரியப்பேரரசின் பெரும்படை திரட்டப்பட்டது. பெரும் போருக்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்றன. துளுவ நட்டையும், எருமை நாட்டையும் கடந்துவரும் வழிகளிலுள்ள பாறைகளை வெட்டிச் செப்பனிட்டு மௌரியப்பெரும்படை வருவதற்கான பாதைகள் உருவாக்கும் பணி நடைபெற்றது. இந்தப்பெரும்போருக்கான ஆயத்தப்பணிகள் சில ஆண்டுகள் நடைபெற்றதாகத்தெரிகிறது. இப்பாறைகளை வெட்டி பாதைகள் அமைக்கும் பணி குறித்தும் வடுகர்கள் வழிகாட்டியாக இருந்து மௌரியர்களுக்கு உதவியது குறித்தும் மோகூர்த்தலைவன்மேல் பகைகொண்டு மௌரியர் படையெடுத்து வந்தது குறித்தும் மாமூலனாரும், பிற சங்கப்புலவர்களும் தங்கள் பாடல்களில் தெரிவித்துள்ளனர். இந்தப்பெரும்போருக்கான ஆயத்தப்பணிகள் முடிந்தவுடன் மௌரியப் பேரரசின் பெரும்படை துளுவ நாட்டில் வந்து தங்கி தமிழகத்தின் மீது படையெடுக்கத்தயாராகியது.

சோழர்களின் முதன்மை:

     தமிழகத்துக்கு வந்துள்ள மிகப்பெரிய ஆபத்தை, சோழன் இளஞ்செட்சென்னி நன்கு உணர்ந்து கொள்கிறான். எல்லையிலுள்ள படைத்தலைவர்களை, வேளிர்கள், சிற்றரசர்களை மட்டும் இப்பெரும்போருக்கு பொறுப்பாக்குவது பெரும் ஆபத்தில் முடியும் என்றெண்ணி, தமிழர் ஐக்கிய கூட்டணி அரசுகளை ஒன்றுதிரட்டி தனது தலைமையில் பெரும்படையைத்திரட்டுகிறான். இப்போர் தமிழகப்போராக தமிழகக் கூட்டணி அரசுகளின் போராக நடைபெற்ற போதிலும், இப்போரின் வெற்றி சோழர்களின் வெற்றியாகவே வடவரிடத்திலும், நமது இலக்கியங்களிலும், புராணங்களிலும் பதிவாகி சேர பாண்டியவர்களிவிட சோழர்கள் பெரும் புகழடைகின்றனர். அசோகன் கல்வெட்டுகளிலும் அதன் காரணமாகவே பாண்டியர்களைவிட சோழர்கள் முதன்மை பெறுகின்றனர் எனலாம். ஆகவே மௌரியர்களின் தமிழகப் படையெடுப்புக்கு அசோகன் கல்வெட்டுகள் ஒருவிதத்தில் மறைமுக ஆதாரங்கள் ஆகின்றன எனலாம்.

வல்லம்போர்:

      தமிழக கூட்டணி அரசுகளுக்கும், மௌரியப் பேரரசுக்குமிடையே பெரும் போர் துவங்கியது. சோழ நாட்டெல்லையிலேயே பல தடவை மௌரியர்கள் தோல்வியுற்றனர். எனினும் தொடர்ந்து புதுப் புதுப் படைகளை போருக்கு அனுப்பினர். மௌரியப் பேரரசின் முழு ஆற்றலும் திரட்டப்பட்டு பெரும்படை கொண்டு தமிழகம் தாக்கப்பட்டது. தமிழகத்தின் வட பகுதி முழுவதும் மௌரியப் பெரும்படையால் தாக்கப் பட்டது. வட ஆர்க்காட்டில் உள்ள வல்லம் என்ற இடத்தில் நடந்த பெரும் போரில், இளஞ்செட்சென்னி மௌரியர்களை பெரும் தோல்வி அடையச் செய்து துரத்தி அடித்தான். வல்லம் போர் குறித்து அகம் 336இல் பாடிய பாவைக் கொட்டிலார் என்கிற பெண்பாற் புலவர், மௌரியர்களை ஆரியர் எனக் குறிப்பிடுகிறார். மௌரியர் தங்களை ஆரியர் என்றே அழைத்துக் கொண்டனர். கி.மு.3ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்ட இப்பாடலில் குடும்ப மகளிர்கள் ‘கள்’ அருந்தி தங்கள் கணவன்மார்களின் பரத்திமை நடத்தை குறித்து வம்பளந்து கொண்டிருப்பது குறித்த குறிப்பு வருகிறது.

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

      வல்லம் போருக்குப் பின்னரும், மௌரியர்கள் சளைக்காமல் தொடர்ந்து பல தடவை, பெரும் படைகளை அனுப்பிக்கொண்டேயிருந்தனர். ஆனால் போரில் பெரும் இழப்புகள் ஏற்பட்டதே ஒழிய, அவர்களுக்கு வெற்றி கிடைப்பதாகத் தெரியவில்லை. இதுபோன்ற ஒரு நிலையில் தான் பாண்டியர் படைகளுக்குத்தலைமை தாங்கிய, இளைஞனாக இருந்த நெடுஞ்செழியன் மௌரியர்களின்பெரும்படை ஒன்றைத் தோற்கடித்து ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என பெயர் பெற்றான். முதல் கரிகாலனுக்குச் சம காலத்தவனாகவும், சேரன் செங்குட்டுவனுக்கு முந்தையவனாகவும் அவன் இருந்தான். ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன் கி.மு.290 வாக்கில் மௌரியப்படையை எதிர்த்துப் போரிடும்பொழுது 25 வயது இளைஞனாக இருந்தான் எனலாம். அதன்பின் சுமார் 20 வருடம் கழித்து தனது 45ஆவது வயது வாக்கில் வேந்தனாகிறான். ஆகவே ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியனின் வேந்தர் ஆட்சிக்காலம் கிட்டத்தட்ட கி.மு. 270-245 ஆகும். ‘தமிழகம் ஒன்றாக இருந்து பார்க்கும் வகையில் வட ஆரியப்படையை எதிர்த்து வெற்றி பெற்ற நெடுஞ்செழியன்’ என்கிறது சிலப்பதிகாரம்-(6). ஆகச் சோழன் தலைமையில் பாண்டியர்களும், சேரர்களும் மௌரியப்படையை பலமுறை தோற்கடித்தனர். இறுதியில் தொடர்ந்து அடைந்து வந்த தோல்விகளால் தாக்குப் பிடிக்க இயலாமல் பெரும் இழப்போடு மௌரியப்படை பாழி நகருக்குப் பின் வாங்கியது.

செருப்பாழிப் பெரும்போர்:

      இளஞ்செட் சென்னி போரைத் தொடர்ந்து நடத்தி, பாழி நகர் வரைப் படையெடுத்துச்சென்று பெரும் வெற்றிபெற்றான். இளஞ்செட்சென்னியின் பாழி நகர் வெற்றி குறித்து இடையன் சேந்தன் கொற்றனார் என்பவர் அகம் 375இல் பாடியுள்ளார். அதில் மௌரியர்களை அவர் வம்பவடுகர் என்கிறார். தமிழகத்தின் வடக்கே வாழ்பவர்களை வடுகர் என்பது பொது வழக்கு. வடக்கே வாழும் வடுகர்களை அவர் அறிவார். ஆனால் மௌரியர்களை அவர் அறியார். ஆனால் மௌரியர்களும் வடக்கிருந்தே வருகிற புதிய வடுகர்கள் என்பதால், அவர்களை வம்பு வடுகர் என்கிறார். பாழி நகரில் நடந்த இறுதி பெரும் போருக்குப் பின்னர் மௌரியர்கள் தமிழக அரசுகளைப் படை கொண்டு வெற்றிபெற இயலாது என்பதை உணர்ந்துகொண்டு நிரந்தரமாகப் பின் வாங்கினர். தமிழகத்தைக்கைப்பற்றும் முயற்சி கைவிடப்பட்டு தமிழக அரசுகளோடு நட்பு கொண்டனர். கி.மு.297இல் பிந்துசாரரின் காலத்தில் தீவிரப்படுத்தப்பட்ட தக்காணப் படையெடுப்பும், தமிழகப் படையெடுப்பும் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் தொடர்ந்து நடந்ததாகக் கொண்டு, பாழி நகரில் நடந்த இவ்விறுதிப்பெரும்போர் கி.மு.288 வாக்கில் முடிந்ததாகக் கணிக்கப் பட்டது. இந்தப் பெரும் போரில் சோழர் பெற்ற பெரும் புகழின் காரணமாகவே, அசோகன் தனது இரு கல்வெட்டுகளிலும் சோழர்களை முதன்மைப் படுத்தியுள்ளான்.

தெற்குப் பிரச்னை :

        கொ.அ.அன்தோனவா, கி.ம.போன்காரத்-லேவின் ஆகிய இரு இரசிய வரலாற்று அறிஞர்கள், அசோகன் இளவரசனாக இருக்கையில் உஜ்ஜயினியின் அவந்தி மாநிலத்திற்குத் தனது தந்தையால் அனுப்பப்பட்டு அப்பகுதியை அவன் நிர்வகித்து வந்தான் எனவும், அசோகன் ஆட்சிக் காலத்தில் தனிப்பட்ட தெற்குமாநிலம் அமைக்க, பிந்துசாரன் ஆட்சிக் காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த “தெற்குப் பிரச்னையே” காரணம் எனவும், பிற மாநில ஆட்சித் தலைவர்கள் குமாரர்கள் என்று பட்டம் பெற்றிருந்தபோது, தெற்கு மாநில ஆளுநர் மட்டும் ஆர்யபுத்ர(பட்டத்து இளவரசர்) என்கிற பட்டத்தைப் பெற்றிருந்தான் எனவும் கூறியுள்ளனர்-(7). பிந்துசாரரின் ஆட்சிக் காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த தெற்குப் பிரச்னை என்பது தமிழகக் கூட்டணி அரசுகளிடம் மௌரியப் பேரரசு பெருந்தோல்வி அடைந்ததும், பேரரசின் தெற்கிலுள்ள தமிழக அரசுகளிடமிருந்து எப்பொழுதும் பேரரசுக்கு ஆபத்து இருப்பதையுமே சுட்டிக் காட்டுகிறது எனலாம். தக்காணத்தின் துவக்கத்தில் அவந்தி மாநிலம் இருப்பதால் தமிழகப் படையெடுப்பு குறித்த முழு விவரத்தையும் அசோகன் அறிந்திருக்க வாய்ப்புள்ளது.

         மொழிபெயர்தேயம் எனப்படும் ஆந்திர, கர்நாடகப் பகுதியிலுள்ள பல காவல்அரண்கள் தொடர்ந்து தமிழக அரசுகளின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்ததும் ஒரு காரணம் ஆகும். மேலும் முதல் கரிகாலன் பிம்பிசாரன் இறந்தபின் வடதிசைப் படையெடுப்பை நடத்தி கிருட்டிணா நதிக்குத் தெற்கிலுள்ள தக்காண அரசுகளை, வாகைப்பறந்தலைப் போரின்மூலம் தோற்கடித்து தக்காணப்பகுதிகளில் தமிழரசுகளின் ஆட்சியதிகாரத்தை மீண்டும் நிலை நிறுத்தியது தான் மிக முக்கிய காரணமாக இருக்கலாம். மௌரியர்கள் பயந்தது போலவே, கி.மு.232 இல், அசோகர் இறந்தவுடன், சாதவாகனர்கள் தமிழக அரசுகளின் ஆதரவோடு தனி அரசாகினர் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்வது நல்லது.

        அசோகன் தனது கல்வெட்டில் அதியமான்களை மூவேந்தர்களுக்கு இணையாகச் சதிய புத்திரர் எனக் குறிப்பிட்டதும், சோழர்களை முதன்மைப் படுத்தி பாண்டியர்களை இரண்டாம் இடத்தில் வைத்ததும், மௌரியர்களால் தமிழகம் கைப்பற்றப்படாமல் இருந்ததும், செருப்பாழிப் போர், வல்லம்போர், மௌரியப்படையெடுப்பு முதலியன குறித்தச் சங்க இலக்கியக் குறிப்புகளும், மாமூலனார் அவர்களின் மொழிபெயர் தேயம் எனப்படும் தக்காணப்பகுதி தமிழக மூவேந்தர் களின் பாதுகாப்பில் இருந்தது என்கிற குறிப்பும்(அ-31) தமிழக அரசுகள் மௌரியப்பேரரசை முறியடித்து வெற்றிபெற்றதை உறுதிசெய்கின்றன.

வின்சென்ட் சுமித்&காரவேலன் கல்வெட்டு:

    மேலும், மௌரியப்பேரரசின் தெற்கு எல்லை, மேற்கில் கல்யாணபுரி ஆற்றின் முகத்துவாரம் வரையிலும், கிழக்கில் வடபெண்ணை ஆற்றில் இருந்த நெல்லூர் வரையிலும் இருந்தது என்கிற வின்சென்ட் சுமித் அவர்களின் குறிப்பும், அசோகப் பேரரசு மற்றும் கி.பி.150இல் இந்தியா முதலியன குறித்த இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற வரைபடங்களும், கலிங்க மன்னன் காரவேலனின் கல்வெட்டில் உள்ள 1) தமிழக அரசுகளின் ஐக்கிய கூட்டணி மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது என்கிற குறிப்பும், 2) கலிங்கத்தின் இரண்டாவது பெரிய துறைமுக நகரான பித்துண்டா தமிழரசுகளின் பாதுகாப்பு அரணாக இருந்தது என்கிற குறிப்பும் மௌரியப்பேரரசை எதிர்த்துத் தமிழகம் பெற்ற வெற்றியை உறுதி செய்கின்றன. செருப்பாழிப்போருக்குப்பின் 113 ஆண்டுகள் கழித்து கி.மு. 165 வாக்கில் வெட்டப்பட்ட கலிங்கமன்னன் காரவேலனின் கல்வெட்டு, மறைமுகமாக தமிழரசுகளின் ஐக்கிய கூட்டணி குறித்தும் கலிங்கத்தின் புத்துண்டா நகரை தங்கள் காவல் அரணாக வைத்திருந்த தமிழரசுகளின் கடற்படை வலிமை குறித்தும்பேசுகிறது(8) புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் வின்சென்ட் சுமித் அவர்கள் அன்று மௌரியர்களிடம், கடற்படை என்பது இராணுவத்தின் ஒரு அங்கமாக இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை எனவும் ஆனால் தமிழரசுகள் பெரும் கடற்படைகளைக்கொண்டிருந்தன எனவும் சொல்லியிருப்பது(9) காரவேலன் கல்வெட்டு மூலம் உறுதிப்படுகிறது. 

வரலாற்று மாணவன் அறிய வேண்டியது:                              

      தொல்லியல் நோக்கில் சங்ககாலம் என்கிற நூலில் முனைவர் க.இராசன் அவர்கள் குறிப்பிட்டுள்ள, கி.மு.1000 ஆம் ஆண்டின் துவக்கம் முதல் ஏற்பட்ட தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சி, சங்க கால தமிழ் மக்களின் தொழில் நுட்பத் திறன், அவர்களின் பொருள் உற்பத்தி, அவர்களுடைய உலகளாவிய வணிகத்தின் மேன்மை முதலியன பற்றியத் தரவுகள், தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணி மௌரியப் படையை தோற்கடிக்கும் அளவு வலிமை மிக்கதாக இருந்திருக்க முடியும் என்பதை உறுதிப் படுத்துகின்றன. ஆதலால் சோழன் இளஞ்செட் சென்னியின் தலைமையிலான தமிழக அரசுகள், தமிழகத்தின் மீது படையெடுத்த மௌரியப் படையை, பாலி நகரில் தோற்கடித்து பெரும் வெற்றிபெற்றன என்பது நடந்து முடிந்த, புகழ்பெற்ற ஒரு வரலாற்று நிகழ்வாகும். ஆகவே மௌரியப் படை கி.மு 300க்குப்பின் தமிழகத்தின் மீது படையெடுத்ததும், அப்படையெடுப்பை சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்செட் சென்னி தலைமையிலான தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணிப் படை முறியடித்ததும், பாழி நகரில் தமிழரசுகளின் படை பெற்ற இறுதி வெற்றியும் வரலாற்று மாணவன் அறிய வேண்டிய விடயமாகும்.

மாமூலனாரும் வேந்தர்களின் காலமும்:

     பழமொழி நானூற்றின் ஆசிரியர் மூன்றுரையரையனார், புலவரும் தனது மாமனுமாகிய இரும்பிடர்த் தலையாரிடம் கல்வி கற்று, முதல் கரிகாலன் சிறப்புப் பெற்றான் எனக் குறிப்பிடுகிறார்(10). முதல் கரிகாலன் சிறுவனாக இருந்த பொழுது அவனைவிட இரு தலைமுறைகள் மூத்த முதியவராக இருந்தவர் அவனது ஆசிரியர் இரும்பிடர்த் தலையார். அன்று அரச குடும்பச் சிறுவர்களுக்கு அறிவும் அனுபவமும் உடைய வயதானவர்களைத்தான் ஆசிரியராக நியமிப்பர். இரும்பிடர்த் தலையார் பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதியை புறம் 3இல் பாடியுள்ளார். இந்தப் பாண்டியன் பெரும்பெயர் வழுதியை, குடவாயிற் கீரத்தனார் அகம் 315ஆம் பாடலில் பாடியுள்ளார். ஆதலால் குடவாயிற் கீரத்தனாரும் இரும்பிடர்த் தலையாரும் சம காலத்தவர் ஆகின்றனர். இந்த குடவாயிற் கீரத்தனார் அகம் 44ஆம் பாடலில் பெரும்பூட்சென்னி என்கிற சோழ வேந்தனைப் பாடியுள்ளார். குடவாயிற்கீரத்தனாரும், இரும்பிடர்த் தலையாரும் சமகாலத்தவர் என்பதால் குடவாயிற்கீரத்தனாரால் பாடப்பெற்ற சோழன் பெரும்பூட்சென்னியும், பாண்டியன் கருங்கைஒள்வாள் பெரும்பெயர் வழுதியும் சமகாலத்தவர் என்பதோடு முதல்கரிகாலனை விட இருதலைமுறைகள் மூத்தவர்களும் ஆவர். அதாவது முதல்கரிகாலன் மூன்றாம் தலைமுறை எனில், குடவாயிற்கீரத்தனார், இரும்பிடர்த் தலையார், சோழன் பெரும்பூட் சென்னி, பாண்டியன் கருங்கைஒள்வாள் பெரும்பெயர் வழுதி ஆகிய நால்வரும் முதல்கரிகாலனை விட இரு தலைமுறைகள் மூத்தவர்கள் ஆவர்.

            மாமூலனார், இரண்டாம் பத்துக்குரிய இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனையும்(அ-55,127,347), அவனது தந்தை உதியன் சேரலாதனையும் (அ-65,233) பாடியுள்ளார். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் போரில் வென்ற முதல் கரிகாலனையும்(அ-55) அவர் பாடியுள்ளார். மாமூலனாரை விட இளையவரான பரணர் முதல் கரிகாலனையும்(அ-125,246,376), இமயவரம்பன் மகன் சேரன் செங்குட்டுவனையும்(5ஆம்,ப.ப.; பு-369; அ-212,396)பாடியுள்ளார். ஆனால் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை அவர் பாடவில்லை. ஆகவே முதல் கரிகாலனுடன் போரிட்ட இமயவரம்பன், முதல் கரிகாலனைவிட மூத்தவன் எனவும், இமயவரம்பனின் மகன் சேரன் செங்குட்டுவன் முதல் கரிகாலனைவிட இளையவன் எனவும் அறியலாம்.

         இத்தரவுகளின் மூலம் சோழன் பெரும்பூட் சென்னியைவிட இரு தலைமுறைகள் இளையவனான முதல் கரிகாலன் மூன்றாம் தலைமுறை எனில் அவனைவிட மூத்தவனான இமயவரம்பன் நெடுஞ்செரலாதன் இரண்டாம் தலைமுறை எனவும், இமயவரம்பனின் தந்தை உதியன் சேரலாதனும், சோழன் பெரும்பூட் சென்னியும் முதல் தலைமுறை எனவும் அறியலாம். அதாவது முதல் கரிகாலனைவிட பெரும்பூட் சென்னியும், உதியன் சேரலாதனும் இரு தலைமுறைகள் மூத்தவர்கள் ஆவார்கள். முதல் தலைமுறை உதியன் சேரலாதன், இரண்டாம் தலைமுறை இமயவரம்பன் நெடுஞ்செரலாதன்,, மூன்றாம் தலைமுறை முதல்கரிகாலன் ஆகிய மூவரையும் பாடிய மாமூலனார் இடைப்பட்ட இமயவரம்பன் காலத்திய, இரண்டாம் தலைமுறை ஆகிறார்.

    பரணர் சேரன் செங்குட்டுவனையும், முதல் கரிகாலனையும், பாடியுள்ளதோடு, முதல் கரிகாலனின் மகன் உருவப் பஃறேர் இளஞ்செட் சென்னியையும்(பு-4), பாடியுள்ளார். சேரன் செங்குட்டுவன் இமயவரம்பனின் மகன் என்பதால், இமயவரம்பனுடன் போரிட்ட முதல் கரிகாலன் சேரன் செங்குட்டுவனைவிட மூத்தவன் ஆகிறான். அதே சமயம், முதல் கரிகாலனின் மகன் உருவப்பஃறேர் இளஞ்செட் சென்னி, சேரன் செங்குட்டுவனைவிட இளையவன் ஆகிறான். ஆகவே முதல் கரிகாலன் மூன்றாம் தலைமுறை எனில் சேரன் செங்குட்டுவன் நான்காம் தலைமுறை ஆகிறான். உருவப்பஃறேர் இளஞ்செட்சென்னி ஐந்தாம் தலைமுறை ஆகிறான்.

          பெரும்பூட்சென்னி முதல் தலைமுறை என்பதாலும், முதல் கரிகாலன் மூன்றாம் தலைமுறை என்பதாலும், பெரும்பூட் சென்னியின் மகனும், முதல் கரிகாலனின் தந்தையும் ஆன செருப்பாழி எறிந்த இளஞ்செட் சென்னி இரண்டாம் தலைமுறை ஆகிறான். செருப்பாழி எறிந்த இளஞ்செட் சென்னி இரண்டாம் தலைமுறை என்பதால் மாமூலனாரும், இமயவரம்பனும் அவர் காலத்தவர் ஆகின்றனர். மௌரியப் படையை கி. மு. 297முதல் கி.மு.288 வரை போராடி வென்ற இளஞ்செட் சென்னியின் காலத்தவர் மாமூலனார் என்பதால், அவர் இந்தக் காலத்துக்குச் சிலகாலம் முன்பும் சிலகாலம் பின்பும் வாழ்ந்தவர் எனலாம். அதாவது கி.மு. 3ஆம் 4ஆம் நூற்றாண்டு எனலாம். முதல் தலைமுறையைச் சேர்ந்த சோழன் பெரும்பூட் சென்னி, உதியன் சேரலாதன் போன்றவர்கள் கி.மு. 4ஆம் நூற்றாண்டு ஆவர். அதே சமயம் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த மாமூலனார் போன்றவர்கள் கி.மு. 3ஆம், 4ஆம் நூற்றாண்டு ஆவர். முதல் கரிகாலன் போன்ற மூன்றாம் தலைமுறையையும், சேரன் செங்குட்டுவன் போன்ற நான்காம் தலைமுறையையும் சேர்ந்தவர்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டு எனலாம்.

கல்வெட்டுகள், நாணயங்களின் காலம்:

        கீற்றில் வெளியிடப்பட்டுள்ள ‘சேரன் செங்குட்டுவனும் கயவாகுவும்’ குறித்தக் கட்டுரையில், பாலைபாடிய பெருங்கடுங்கோ தான் புகளூர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட பொறையர் குலச் சேர அரசன் எனவும் இவனும் மாமூலனாரும் சம காலத்தவர்கள் எனவும் புகளூர் கல்வெட்டின் காலமான கி.மு. 3ஆம் 4ஆம் நூற்றாண்டு என்பது தான் இவர்களது காலம் எனவும் கண்டறியப்பட்டது. அது போன்றே மாமூலனாரை விடப் பரணர் இளையவர் எனவும், பரணரால் பாடப்பட்டவர்கள் தான் சம்பை கல்வெட்டின் அதியமானும், சேரன் செங்குட்டுவனும் எனவும், சம்பை கல்வெட்டும், அசோகன் கல்வெட்டும் சமகாலத்தவை எனவும் அசோகன் கல்வெட்டு, சம்பை கல்வெட்டு ஆகியவைகளின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதால் சம்பை கல்வெட்டின் அதியமான், அதியமானைப் பாடிய பரணர், பரணர் பாடிய சேரன் செங்குட்டுவன் ஆகிய அனைவரும் கி.மு. 3ஆம் நூற்றாண்டு எனவும் கண்டறியப்பட்டது. தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள், மாக்கோதை, குட்டுவன் கோதை நாணயங்கள் முதலியன சங்ககால இறுதிக்கால வேந்தர்களால் வெளியிடப்பட்டவைகள். இந்த நாணயங்களின் காலத்தைக் கொண்டும் செங்குட்டுவனின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே சேரன் செங்குட்டுவன், அவனைப்பாடிய பரணர் ஆகியவர்களின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதால் பரணரை விட முதியவரான மாமூலனாரின் காலம் கி.மு.4ஆம் 3ஆம் நூற்றாண்டு என்கிற கணிப்பு உறுதியாகிறது. ஆகவே மாமூலனாரின் காலக்கணிப்பு என்பது சங்ககால இலக்கியப் பாடல்கள், புகளூர் கல்வெட்டு, அசோகன் கல்வெட்டு, சம்பை கல்வெட்டு, மாக்கோதை, குட்டுவன் கோதை நாணயங்கள், தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள் ஆகிய பல்வேறு தரவுகளின் காலத்தையும் கணக்கில்கொண்டு கணிக்கப்பட்டதாகும்.

மாமூலனாரின் இறுதிக் காலம்:  

       செருப்பாழிப்போர் நடைபெற்ற இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பின், இளஞ்செட் சென்னியின் புகழ் பரவியதைப் பொறுக்க மாட்டாத சிலர் அவனைச் சூழ்ச்சி செய்து கொன்று விடுகின்றனர். அதன்பின் அவனது மகன் முதல் கரிகாலன் தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள நடத்திய போர் தான் முதல் வெண்ணிப்பறந்தலைப் போர் ஆகும். இப்போர் செருப்பாழிப் போருக்குப்பின் சில வருடங்கள் கழித்து நடந்தது என்பதால் அதன் காலம் கி.மு. 283 வாக்கில் எனக்கொள்ளலாம். அதன்பின் முதல் கரிகாலனுக்கும், சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் இடையே கி.மு.275 வாக்கில் நடந்த போர் தான் இரண்டாம் வெண்ணிப் பறந்தலைப் போராகும். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இப்போரில் தோல்வியடைந்து, முதுகில் விழுப்புண் பெற்று, நாணி, வடக்கிருந்து உயிர் துறந்து பெரும் புகழடைந்தான். சேரனாடு பெரும் இழப்பைச் சந்தித்தது. முதல் கரிகாலன் தமிழகத்தின் பேரரசனாக உயர்ந்தான். இப்போர் குறித்தும், சேரலாதன் வடக்கிருந்து உயிர் துறந்தது குறித்தும் வெண்ணிக் குயத்தியார் என்ற பெண்பாற் புலவரும், கழார்த் தலையாரும், மாமூலனாரும் பாடியுள்ளனர்-(11).

        கி.மு. 275 வாக்கில் நடைபெற்ற, மூன்றாம் தலைமுறையைச் சார்ந்த முதல் கரிகாலனின் இரண்டாம் வெண்ணிப் பறந்தலைப் போர் குறித்துப் பாடிய பாடலே மாமூலனாரின் இறுதிப்பாடலாகும். ஆகவே மாமூலனாரது இறுதிக்காலம் என்பதை முதல் கரிகாலனின் இரண்டாம் வெண்ணிப் பறந்தலைப் போருக்குப்பின் 5 வருடங்கள் கழித்து கி.மு. 270 வாக்கில் எனக் கொள்ளலாம். மாமூலனாரின் தொடக்க காலம் கிட்டத்தட்ட கி.மு.355 என முன்பே முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மாமூலனார் அவர்கள் வாழ்ந்த காலம் என்பது கிட்டத்தட்ட கி.மு. 355 முதல் கி.மு. 270 வரையான சுமார் 85 வருடங்கள் எனலாம். கி.மு.4ஆம் நூற்றாண்டின் இடையில் பிறந்த மாமூலனார் தனது இளவயதில் நந்தர்களையும், முதல் தலைமுறையைச் சேர்ந்த உதியஞ் சேரலாதனையும், கி.மு. 270க்கு முன் தனது இறுதிக் காலத்தில் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த சோழன் முதல் கரிகாலனையும் இடையில் மௌரியர்களையும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனையும் பாடியுள்ளார். ஆகவே பல்வேறு தரவுகளைக் கொண்டு ஏரணக் கண்ணோட்டம், பொது அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் கணிக்கப்பட்ட சுமாரான காலமே மாமூலனாரின் காலமாகும்.

காலக்கணிப்புக்கான ஆதாரங்கள்:

     புகளூர் கல்வெட்டு, அசோகன் கல்வெட்டுகள், சம்பைக் கல்வெட்டு முதுகுடுமிப் பெருவழுதி நாணயம், மாக்கோதை, குட்டுவன் கோதை நாணயங்கள், தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள், மாமூலனாரும் பிற சங்கப் புலவர்களும் நந்தர்கள் குறித்தும், மௌரியர்கள் குறித்தும், பாடிய பாடல்கள், செருப்பாழிப் போர், வல்லம் போர் குறித்தச் சங்கப் புலவர்களின் பாடல்கள், மொழிபெயர் தேயம் எனப்படும் தக்காணப் பகுதி தமிழ் மூவேந்தர்களின் பாதுகாப்பின் கீழ் இருந்து வந்தது என்கிற மாமூலனாரின் குறிப்பு போன்ற சங்க இலக்கியச் சான்றுகள் ஆகிய மேலே தரப்பட்டுள்ள பல்வேறு வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் கணிக்கப்பட்டதுதான் மாமூலனாரின் காலம் ஆகும்.

இக்கட்டுரை கீழ்க்கண்ட முடிவுகளை முன்வைக்கிறது.

1.சங்ககாலப் புலவர்கள் பெரும்பாலும் நிகழ்கால நிகழ்வுகளையும், நிகழ்காலப் புரவலர்களையும் மட்டுமே பாடினர்

2.வட இந்தியாவில் கிமு. 4ஆம் நூற்றாண்டின் இறுதியில் மௌரியர்கள், நந்தர்களை வீழ்த்தி, மகத அரசைக் கைப்பற்றிய போதும், மௌரியர்கள் கிமு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தின் மீது படையெடுத்தபோதும் மாமூலனார் வாழ்ந்து வந்தார்.

3.அசோகன் கல்வெட்டில் சோழர்கள் முதன்மை பெற்றதும், சதிய புத்திரர்கள் இடம்பெற்றதும், தமிழரசுகள் சுதந்திரமான அரசுகளாக குறிக்கப்படுவதும், வல்லம்போர், பாழிப்போர் குறித்தச் சங்ககாலப் பாடல்களும் கிமு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சோழர் தலைமையிலான தமிழரசுகளின் ஐக்கிய கூட்டணியால், மௌரியப் பேரரசு தோற்கடிக்கப்பட்டது என்பதை உறுதி செய்கின்றன.

4.சேரன் செங்குட்டுவன், பரணர், அதியமான் ஆகியவர்களுக்கு இரு தலைமுறைகள் முந்திய, மாமூலனாரின் காலம் சுமார் கி.மு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டாகும்.

5.சேரன் செங்குட்டுவன், பரணர், அதியமான் ஆகியவர்களுக்கு இரு தலைமுறைகள் முந்தியவரும், மகதத்தில், மௌரியர்கள் நந்தர்களை வீழ்த்தி, மகதஆட்சியைக் கைப்பற்றியபோது வாழ்ந்தவருமான மாமூலனாரின் காலம் சுமார் கி.மு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டாகும்.

பார்வை:

6.சிலப்பதிகாரம், மதுரைக்காண்டம், 23-கட்டுரைக்காதை: கட்டுரை வரி; 14, 15.

7.’இந்தியாவின் வரலாறு’ கொ.அ.அன்தோனவா, கி.ம.போன்காரத்-லேவின் இரசிய அறிஞர்கள், தமிழில் முன்னேற்றப் பதிப்பகம், 1987, பக்: 93, 104.

8.en.m.wikipedia.org/wiki/kalinga_india,   Hathigumpha inscription of kharavela of kalinga.

9.வின்சென்ட் சுமித், அசோகர், 2009, பக்:79 தமிழில் சிவமுருகேசன். 10.ஔவை.சு.துரைசாமிபிள்ளை, புறநானூறு-1, ஜூலை-2009, பக்:31.        

11.வெண்ணிக்குயத்தியார் என்ற பெண்பாற் புலவரின் புறநானூற்றுப்பாடல்: 66; கழார்த்தலையார் அவர்களின் புறநானூற்றுப் பாடல்: 65; மாமூலனார் அவர்களின் அகநானூற்றுப்பாடல்: 55.

குறிப்பு: அ-அகநானூறு; பு-புறநானூறு; ப.ப.-பதிற்றுப்பத்து.

- கணியன் பாலன், ஈரோடு

Pin It

        பைந்தமிழ்க் காவலர் பாண்டித்துரைத் தேவரும், சோழவந்தான் தமிழறிஞர் அரசஞ் சண்முகனாரும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அமர்ந்து தமிழ் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது, ‘ஸ்காட்’ என்னும் ஆங்கிலேயப் பாதிரியார் அங்கே வந்தார். வந்த பாதிரியார், “திருக்குறளில் பல இடங்களில் எதுகையும், மோனையும் சரியாக அமையவில்லை. எனவே, திருக்குறளைத் திருத்தி, எதுகை, மோனை அனைத்துக் குறள்களிலும் இடம் பெறுமாறு எழுதி ஒரு நூல் அச்சிட்டுள்ளேன்” என மகிழ்ச்சிப் பொங்கிடக் கூறியதுடன், நூலின் ஒரு பிரதியையும் பாண்டித்துரைத் தேவரிடம் கொடுத்தார்.

        pandiduraiதிருக்குறளைத் திருத்தி எழுதி அச்சாக்கியிருக்கும் செய்தியைக் கேட்டதுமே, அருகிலிருந்து அரசஞ் சண்முகனாரின் கண்கள் கோபத்தினால் சிவந்தன; உள்ளம் கொதிப்படைந்தது.

        பாண்டித்துரைத் தேவர், அந்தப் பாதிரியாரை, அச்சிடப்பட்ட நூல்களுடன், அவரது கையெழுத்துப் பிரதியையும் கொண்டு வருமாறு’ வேண்டினார். மேலும் அதற்குரிய தொகையை அளித்து விடுவதாகவும் கூறினார். அந்த ஆங்கிலேயப் பாதிரியார் அகமகிழ்ந்து, உடனே சென்று அச்சிட்ட அனைத்து நூல்களையும், தமது கையெழுத்துப் பிரதியையும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, பாண்டித்துரைத் தேவரிடமிருந்து ஒரு கணிசமான தொகையையும் பெற்றுச் சென்று விட்டார்.

        பாண்டித்துரைத் தேவர், சும்மா இருப்பாரா? பிழையாக அச்சிடப்பட்டிருந்த திருக்குறள் நூல்களைப் பெற்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பின்புறம் காலியாக உள்ள இடத்தில் தீயிட்டுச் கொளுத்தி அதன் சாம்பலைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டார். திருக்குறளைப் புரிந்து கொள்ளாத ஆங்கிலப் பாதிரியாரின் அறிவீனத்தையும், மண்டைக் கொழுப்பையும் மண்ணில் புதைத்தவர் மன்னர் பாண்டித்துரைத் தேவர்! இது கற்பனையல்ல, வரலாற்று உண்மை!

        இசை மேதையும் பாலவனத்தம் ஜமீன்தாருமாகிய பொன்னுச்சாமித் தேவரின் புதல்வராக 21.03.1867 ஆம் நாள் பிறந்தார் பாண்டித்துரைத் தேவர்.

        பாண்டித்துரைத் தேவர் தமிழ் மொழி மீது மிகுந்த பற்றுக் கொண்டவராகவும், ஆங்கிலப் புலமையுடையவராகவும், ஆய்வுத் திறமை படைத்தவராகவும், இசை ஞானமும், தமிழ் ஞானமும் ஒருங்கே பெற்றவராகவும் விளங்கினார். அனைத்திற்கும் மேலாக, வாரி வழங்கும் வள்ளல் தன்மை கொண்டவராக வாழ்ந்தார்.

        இராமநாதபுரத்து அரசவைக் கொலு மண்டபமும், பாண்டித்துரைத் தேவரின் ‘சோமசுந்தர விலாச மாளிகை’யும் இனிய தமிழ்ப் புலவர்களும், சிறந்த தமிழறிஞர்களும் நிறைந்திருக்கும் கலை இலக்கிய கூடமாகத் திகழ்ந்தது.

        ஒருமுறை பாண்டித்துரைத் தேவர் மதுரைக்கு வந்துள்ளதை அறிந்து, தமிழன்பர்கள் சிலர் அவரைச் சந்தித்தனர். பத்து நாட்களுக்கு, திருக்குறள் பற்றிய தொடர் சொற்பொழிவு ஆற்ற வேண்டுமென அவரை விரும்பிக் கேட்டுக் கொண்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்றார் பாண்டித்துரைத் தேவர். தமது கையில் எந்த நூலும் அப்போது எடுத்துவரவில்லை. எனவே, திருக்குறள், கம்பராமாயணம் ஆகிய இரண்டு நூல்களைக் கொண்டு வந்து தருமாறு அவர்களிடம் கேட்டார். திருக்குறளும், கம்பராமாயணமும் அங்கு எவரிடமும் இல்லை என்பதை அறிந்து திடுக்கிட்டார். ‘சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் திருக்குறளும், கம்பராமாயணமும் இல்லாது போயினவா’ என்று மிகுந்த வேதனையடைந்தார். பின்னர், புது மண்டபத்திற்கு ஒருவரை அனுப்பி, அங்கும் தேடித்தேடித் திருக்குறள் நூலை வாங்கி வரச் செய்தார்; அதன் பின்னர், பத்து நாட்கள் தொடர் சொற்பொழிவாற்றினார்.

        “தமிழ் நூல்களைப் பெற்றிராத தமிழர்கள், மதுரையில் மட்டுமன்று, தமிழ் நாடெங்கும் வாழ்ந்து வருகின்றனரே! அந்தியர் ஆட்சி, ஆங்கில மொழி மீது மோகத்தையும், தாய்த் தமிழ் மீது தாழ்ச்சியையும், தமிழர்கள் கொள்ள வைத்துள்ளதே? மொழிப்பற்றின்றிப் பாழ்பட்டுள்ள தமிழர்களுக்குப் பைந்தமிழுணர்வை நாம் ஊட்ட வேண்டாமா? எனத் தம் தமையனார் மன்னர் பாஸ்கர சேதுபதியிடம் கூறினார் பாண்டித்துரைத் தேவர்.

        அதைச் செவிமடுத்த, மன்னர் பாஸ்கர சேதுபதி, “அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?” என வினவினார். “தமிழுக்கு உயிர்ப் பூட்டவும், தமிழ் உணர்வுக்கு உரமூட்டவும் வேண்டும். தமிழ்ச் சங்கம் ஒன்றை மதுரையில் உருவாக்க வேண்டும்” என உறுதிபடக் கூறினார் பாண்டித்துரைத் தேவர்.

        தமிழ்க் கல்லூரி உருவாக்குதல் - சுவடிகள், நூல்கள் தொகுத்தல் – வெளியிடுதல் - பிறமொழி நூல்களை மொழிபெயர்த்துப் பதிப்பித்தல் - முறையாகத் தமிழ்த் தேர்வு நடத்துதல் – தமிழாராய்தல் - புது நூல்களும் புத்துரைகளும் படைத்து அரங்கேற்றுதல், இதழொன்று நடத்துதல் முதலிய உயரிய குறிக்கோள்களைக் கொண்டு, தமிழ்ச் சங்கம், தொடங்க முடிவு செய்தார். அதன்படி, மதுரையில் 14.09.1901 ஆம் நாள், வள்ளல் பாண்டித்துரைத் தேவர் தலைமையில், மன்னர் பாஸ்கர சேதுபதியின் முன்னிலையில், தமிழறிஞர்களும், தமிழன்பர்களும் குழுமியிருக்க தமிழ்ச் சங்கம் நிறுவப் பெற்றது.

        மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியை அடுத்திருந்த கட்டிடங்களில், ‘சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை’, ‘நூல் ஆராய்ச்சி சாலை’, ‘பாண்டியன் புத்தக சாலை’ முதலிய அமைப்புகள் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தொடங்கப்பெற்றன.

        தமிழ்ச் சங்கத் தொடக்க விழாவிற்கு, ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா, இரா. இராகவய்யங்கார், பரிதிமாற் கலைஞர், சோழவந்தான் அரசஞ் சண்முகனார் முதலிய தமிழறிஞர் பலர் தமிழகமெங்குமிருந்து வருகை தந்தனர். பாண்டித்துரைத் தேவரை ‘பைந்தமிழ்க் காவலர்’ எனப் புகழ்ந்து போற்றினார். தமிழ்ச் சங்கத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்துக் கருத்துரைகள் வழங்கினர். இதுவே, முத்தமிழ் வளர்த்த மதுரையில் உருவான நான்காம் தமிழ்ச் சங்கமாகும்!

        தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அங்கேயே தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு உண்டி உறையுள் அளித்து படிக்க வைத்தார் மன்னர்! தேர்வு நடத்திப் புலவர் பட்டம் வழங்கித் தமிழ் அறிஞர்களாகவும் தமிழாசிரியர்களாகவும், தமிழகத்திற்கு அளித்து மகிழ்ந்தார் பாண்டித்துரைத் தேவர்.

        யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரைக் கொண்டு, ‘திருக்குறள் பரிமேலழகர் உரை’, ‘திருக்கோவையார் உரை,’ ‘சேது புராணம்’ முதலிய பழந்தமிழ் நூல்கள் பலவற்றை ஏட்டுச்சுவடிகளிலிருந்து முதன் முதலில் அச்சில் பதிப்பித்தார். ‘தமிழ்த் தாத்தா’, உ. வே. சா, ‘புறநானூறு’, ‘புறப்பொருள் வெண்பாமாலை’, ‘மணிமேகலை’ போன்ற அரிய தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிக்க உதவி செய்தார்.

        சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியரான சிங்காரவேலு முதலியார், கலைக்களஞ்சிய அகராதிக்கான செய்திகளைச் சேர்த்து வைத்திருந்தார். அச்செய்திகளைத் தொகுத்து ‘அபிதான சிந்தாமணி’ என்ற நூலாக வெளியிடப் பொருளுதவி செய்தார்.

        தேவாரத் திருமுறைப் பதிப்புகளையும், சிவஞான சுவாமி பிரபந்தத் திரட்டு நூலையும், சிவசமவாதவுரை மறுப்பு’ என்ற நூலையும், தகுதிவாய்ந்த பெரும்புலவர்களைக் கொண்டு வெளியிட்டார்.

        ‘பன்னூற்றிரட்டு’, ‘சைவ மஞ்ஞரி’ முதலிய நூல்களைத் தாமே தொகுத்து வெளியிட்டார்.

        சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாருக்குப் பின்னர், அவரைப் போலவே, பாண்டித்துரைத் தேவர் இயற்றிய ‘காவடிச் சிந்து’ மிகவும் புகழ் வாய்ந்த நூலாகும்.

        தமிழ்ச் சங்கத்தின் வாயிலாக, ‘ஞானாமிர்தம்’, ‘வில்லி பாரதம்’, யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளையின் ‘தமிழகராதி’ முதலிய நூல்கள் வெயியிடப்பட்டன.

        பாண்டித்துரைத் தேவர் நாவன்மை பெற்றுச் சிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்கினார். தமிழ் நூல்கள் பலவற்றை முயன்று பதிப்பித்துள்ளார். தாமே பல நூல்களைப் படைத்தளித்துள்ளார். துமிழ் வளர்ச்சிக்காக நான்காம் தமிழ்ச் சங்கம் கண்டதுடன், சிறந்த நாட்டுப் பற்றாளராகவும், விடுதலை உணர்வு கொண்டவராகவும் விளங்கினார். ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக, கப்பலோட்டிய தமிழர் வ. உ. சி. யின் சுதேசிக் கப்பல் குழுமத்திற்கு ஒன்றைரை லட்சம் ரூபாய் நிதியை அள்ளிக் கொடுத்த வள்ளல் ஆவார்.

        நான்காம் தமிழ்ச் சங்கம் கண்ட பாண்டித்துரைத் தேவர் முதுமை எய்துமுன், தமது நாற்பத்து நான்காவது நடுவயதில், 02.12.1911 ஆம் நாள் இமை மூடினார். ‘தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை’ எனும் புரட்சிக்கவிஞர் வாக்கிற்கு ஏற்ப பாண்டித்துரைத் தேவரின் புகழ் என்றும் சாவதில்லை; அழியாமல் நிலைத்து நிற்கும்!

- பி.தயாளன்

Pin It

பெரியார் தமிழரின் இனப் பகைவரா? - 3

வழக்குரைஞர் பா.குப்பன் பெரியார் மீது சுமத்தும் மற்றொரு குற்றச்சாட்டு “தமிழ்ப் பார்ப்பனர்களிடம் சினப் பாய்ச்சல்; தெலுங்குப் பிராமணர்களிடம் இனப்பாசம்!” (பக் 53) என்று எழுதியுள்ளார். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பா.குப்பன் தமிழ்ப் பார்ப்பனர், தெலுங்குப் பார்ப்பனர் என்று வரையறை செய்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.

பழந்தமிழகத்தில் பார்ப்பனர் என்ற சாதியே கிடையாது. தொல்காப்பியர் காலகட்டத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியப் பார்ப்பனர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளனர். தொல்காப்பியத்திலேயே வடமொழிச் சொற்களை சேர்ப்பதற்கான விதிகளை அவர் உருவாக்கியதிலிருந்தே இதனை நாம் உணர முடிகிறது. பெரியாரியல்வாதிகளும், மார்க்சியவாதிகளும், உண்மையான தேசிய இன விடுதலையில் அக்கறை உள்ளவர்களும் தலைவர்களின் அரசியல் நடவடிக்கைகளை வைத்தே அவர்களின் அரசியலை மதிப்பீடு செய்ய வேண்டும். அதுதான் முறை. ஆனால் பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர்கள் தங்களை உயர்ந்தவர்களாக சாத்திரங்களிலும், சட்டங்களிலும் எழுதி வைத்துக் கொண்டும், அதில் அவர்கள் கட்டுப்பாடாகவும், உறுதியாகவும் இருந்து கொண்டு , மற்ற சமூகத்தினரின் மீது ஆதிக்கம் செலுத்தியதாலேயே திராவிடர் இயக்கத்தால் அவர்கள் எதிர்க்கப்பட்டார்கள்.

இராஜாஜியின் அரசியல் தலைமையைக் காப்பதற்காக ம.பொ.சியால் திட்டமிட்டு, பரப்பப்பட்டதே தெலுங்கர் ஆதிக்கம் என்பதெல்லாம். அடுத்தது தெலுங்கர் டி.பிரகாசம் முதல்வராக வந்ததற்கு, பார்ப்பனரல்லாதார் கொள்கையே காரணம் என்கிறார்.

ma po si rajaji

(ம.பொ.சி. &  இராஜாஜி)

1937 தேர்தலிலேயே பிரகாசம் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டார். அவர் ஆந்திரா பகுதியில் காங்கிரஸ் கட்சிக்காக வசூலிக்கப்பட்ட தொகை ரூ.80,000த்தைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டு விட்டார். அதனால் அவரை முதல்வர் வேட்பாளருக்கு காந்தி பரிந்துரைக்கவில்லை. எனினும் 1937இல் இராஜாஜி அமைச்சரவையில் பிரகாசம் வருவாய்த்துறை அமைச்சராக இரண்டாமிடத்தில் இருந்தார்.

1946 தேர்தலை திராவிடர் கழகம் முற்றிலுமாகப் புறக்கணித்தது. திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையிலேயே அதிதீவிரம் காட்டியது. பிரகாசத்தை பெரியார் ஆதரித்தார் என்பதெல்லாம் பச்சைப் பொய்.

1946 தேர்தலிலும் இராஜாஜியே முதல்வராக ஆசைப்பட்டார். காந்தியும் 1946 ஜனவரி மாதம் ‘அரிஜன்’இதழில் “இராஜாஜியை விட்டால் முதல்வர் வேட்பாளருக்கு வேறு தகுதியான நபர் யாரும் இல்லை. எனக்கு அதிகாரமிருந்தால் இன்றே இராஜாஜியை முதல்வர் பொறுப்பில் அமர்த்திவிடுவேன். என்ன செய்வது அந்த அதிகாரம் மாகாண காங்கிரஸ் கமிட்டியிடம் உள்ளது” என்று கட்டுரை எழுதினார். ஆனால் 1942இல் பாகிஸ்தான் பிரிவினைக் கொள்கையை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற காரணத்தைக் கூறி இராஜாஜி காங்கிரசை விட்டு வெளியேறி விட்டார். மறுபடியும் 1945 சூன் மாதத்தில் திரும்ப வந்து காங்கிரசில் சேர்ந்து கொண்டார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் கலந்து கொள்ளாத இராஜாஜியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியாது எனப் பல காங்கிரசார் காந்திக்கு கடிதங்களும், தந்திகளும் அனுப்பினர்.

காங்கிரஸ் மேலிடம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் காமராசர், ஆந்திர காங்கிரஸ் தலைவர் டி. பிரகாசம், கேரள காங்கிரஸ் தலைவர் மாதவ மேனன் ஆகியோரை தில்லிக்கு வரவழைத்து, பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சென்னை மாகாணத்தில் மொத்தம் 215 சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. பலமான எதிர்க்கட்சி எதுவுமில்லாததால் காங்கிரஸ் 163 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. தடை நீக்கம் செய்யப்பட்ட இந்திய பொதுவுடைமைக் கட்சியினர் முதன் முதலாக தேர்தலைச் சந்தித்தனர். 2 இடங்களில் வெற்றி பெற்றனர். காந்தியின் தலையீட்டின் பேரில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இராஜாஜி முதல்வராக வருவதற்கு 38 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவளித்தனர். இதனால் இராஜாஜி முதல்வர் வேட்பாளர் பட்டியலில் இருந்து விலகினார்.

ஆந்திர காங்கிரஸ் தலைவர் பிரகாசம் முதல்வர் பதவிக்குப் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, பக்தவச்சலத்தின் தாய்மாமன் முத்துரங்க முதலியாரைக் காமராசர் நிறுத்தினார். ஆந்திரப் பகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மொத்தம் 77 பேர்கள் மட்டுமே. வாக்கெடுப்பில் இராஜாஜி குழுவினர் 38 பேர் டாக்டர் சுப்பராயன் தலைமையில் நடுநிலை வகித்தனர். மா.பொ.சியின் ‘எனது போராட்டம்’ நூலில் 33 பேர் என்று உள்ளது. அது அச்சுப் பிழையாக இருக்கலாம்.

பிரகாசத்துக்கு 82 வாக்குகளும், முத்துரங்க முதலியாருக்கு 64 வாக்குகளும் கிடைத்தன. 13 வாக்கு வித்தியாசத்தில் முத்துரங்க முதலியார் தோல்வியுற்றார். இராஜாஜி குழுவினர் நடுநிலை வகித்தற்குக் கூறிய காரணம் மிகவும் முதன்மையானது. 1937 தேர்தலின் போதே ஆந்திர காங்கிரசாருடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டோம். அடுத்த தேர்தலில் முதல்வர் பதவி ஆந்திராவைச் சேர்ந்தவருக்குக் கொடுக்க வேண்டும் என்று, ஆகவே நடுநிலை வகிக்கிறோம் என்றார்கள் (சான்று Wikipedia 1946 Madras presidency election result). ஆக, பிரகாசம் முதல் அமைச்சராக வருவதற்கு இராஜாஜிதான் காரணமே ஒழிய, பெரியாரோ அல்லது காங்கிரசிலிருந்த பார்ப்பனரல்லாதார் உணர்வோ காரணமல்ல.

இந்த வரலாற்றை ம.பொ.சி. அப்படியே திருப்பிப் போட்டார். “இராஜாஜி சென்னை மாநிலத்தின் முதல்வராக வேண்டுமென்று 1946இல் நான் விரும்பினேன். அதற்காக கோஷ்டி சேர்ந்து பாடுபட்டேன். சகோதர காங்கிரஸ்காரர்களிடம் கல்லடியும் சொல்லடியும் பட்டேன். அன்று இராஜாஜியிடம் எனக்கிருந்த பக்தி இன்றும் உண்டு”(ம.பொ.சி. ‘எனது போராட்டம்’ பக் 585) இந்தப் புத்தகம் 1974 இல் வெளியிடப்பட்டது.

1971இல் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அனந்தநாயகியிடம் தோல்வியுற்ற மா.பொ.சியை 1972 இல் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமித்து, அதே ஆண்டில் மேலவைத் துணைத் தலைவராகவும் நியமித்து, அரசாங்க காரும், அரசாங்க பங்களாவும் கொடுத்ததால் குளிரூட்டும் அறையில் இருந்து கொண்டு, இரண்டு ஆண்டுகளில் எழுதி 1974இல் இந்நூல் வெளியிடப்பட்டது. வி.வி.கிரி என்கிற ஆந்திரப் பார்ப்பனர்தான் இந்த நூலை வெளியிட்டார்.

மேலும் ம.பொ.சி. கூறுகிறார். “இந்த நேரத்தில், இராஜாஜி டில்லி மாநகரில் தம்முடைய மகள் திருமதி லட்சுமி தேவியின் இல்லத்தில் இருந்தார். அதனால் எனது கருத்தை அவருக்கு எடுத்துரைக்கவும் இயலாதவனாக இருந்தேன். ஆனால் எப்படியோ தனது கோஷ்டியினர் நடுநிலை வகிப்பதென்ற எண்ணம் இயற்கையாகவே இராஜாஜிக்குத் தோன்றியது. இந்த நிலையே திரு முத்துரங்க முதலியாருக்கு வெற்றியளித்து விடுமென்று அவர் கருதினாரோ என்னவோ.” ம.பொ.சி (‘எனது போராட்டம்’ பக்கம் 364) அப்படியே வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டி எழுதிவிட்டார் ம.பொ.சி. முத்துரங்க முதலியார் வெற்றி பெற வேண்டுமென்று இராஜாஜி குழு நினைத்திருந்தால் அவருக்கு வாக்களித்திருக்கலாமே.

தன்னை முதலமைச்சர் பதவிக்கு வரவிடாமல் தடுத்த காமராசர் குழு வேட்பாளர் முத்துரங்க முதலியார் தோற்க வேண்டும் என்று இராஜாஜி கருதியிருக்க வேண்டும். அல்லது தமிழ்த் தேசியர் பார்வையில் கூற வேண்டுமானால் தனது இனமான தெலுங்குப் பார்ப்பனர் பிரகாசம் முதலமைச்சராக வரவேண்டுமென்று அவர் உள்ளூர நினைத்திருக்க வேண்டும்

இராஜாஜி தெலுங்குப் பார்ப்பனரே

இராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை அவருடைய பேரன் ராஜ்மோகன் காந்தி எழுதியுள்ளார். கல்கி ராஜேந்திரன் தமிழாக்கம் செய்து 1000 பக்கங்களில் வானதி பதிப்பகம் 2010 இல் வெளியிட்டுள்ளது.

“இராஜாஜியின் முன்னோர் திருப்பதிக்கு அருகே வசித்து வந்ததாகத் தெரிகிறது. இந்த தெலுங்குப் பகுதியிலிருந்து மைசூர் மன்னர்களின் ஆட்சியிலிருந்த பல காட் பீடபூமியில் பன்னப் பள்ளி கிராமத்துக்கு வந்து சேர்ந்தார்கள். (பக்கம்5)

இராஜாஜியின் தந்தையார் பெயர் ‘வேங்கடார்யா’. சக்ரவர்த்தி என்பது அவர் குடும்பப் பெயர். ஒசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளியில் அவர் முனிசிப்பாக இருந்தார். இராஜாஜிக்குப் பெற்றோர் இட்ட பெயர் ‘ராஜகோபாலாச்சார்’ (பக் 70)

 இராஜாஜியின் தந்தையைச் சக்ரவர்த்தி அய்யங்கார் என்று எல்லோரும் அழைப்பர். அவர் சமஸ்கிருத நூல்களைத் தெலுங்கில் எழுதி, படித்து சுமாரான ஞானம் பெற்றிருந்தார் (பக்9)

இராஜாஜி பட்டப்படிப்பில், தமிழில் தேர்ச்சியடையவில்லை. சட்டக்கல்லூரியில் சேர்ந்த பின்பு, அவர்கள் பட்டப் படிப்பில் தமிழில் தேர்ச்சி பெற்றால்தான் சட்டப்படிப்பில் தேர்வு எழுத முடியும் என்று அறிவித்தனர். மீண்டும் தமிழ்த் தேர்வு எழுதினார். மயிரிழையில் 46/120 மதிப்பெண்கள் பெற்றுத் தேறினார். தன்னுடைய தந்தையாரிடம் “தமிழ்ப் பூதத்திடமிருந்து ஒரு வழியாக விடுபட்டு வந்து விட்டேன்” என்று கூறினார். (பக் 18)

ஆந்திராவில் உள்ள குப்பம் கிராமத்தில் இராஜாஜியின் திருமணம் நடைபெற்றது. குப்பம் கிராமத்தில் தெலுங்கு பேசுவோரே அதிகமாக இருந்தனர். இராஜாஜியின் மனைவியின் பெயர் அலமேலு மங்கம்மாள் (பக்22)

இராஜாஜியின் மனைவிக்கு தெலுங்கு மட்டுமே எழுதப் படிக்கத் தெரியும். திருமணத்துக்குப் பின் இராஜாஜி அவருக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தார் (பக்.45)

இராஜாஜி வழக்குரைஞர் தொழில் நடத்துவதற்காக அவருடைய குடும்பம் 1900த்தில் சேலத்தில் குடியேறியது.

இராஜாஜி 1952இல் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்தபோதும் ஆந்திரர்களுக்குச் சார்பாகவே நடந்து கொண்டார்.

வடக்கு எல்லை மீட்புக் குழுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.விநாயகம் (தி.க, தி.மு.க.வின் ஆதரவோடு), செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்றவர். ஆச்சார்யா கிருபாளனியின் ‘கிஷான் மஸ்தூர் பிரஜா பார்ட்டியின்’ (அதாவது விவசாயிகள் தொழிலாளர்கள் மக்கள் கட்சி) வேட்பாளராக அவர் போட்டியிட்டார். அந்த கட்சிக்குத் தமிழகத்தில் செல்வாக்கு இல்லை. 1952 தேர்தலில் தி.க, தி.மு.க இரண்டுமே காங்கிரசைக் கடுமையாக எதிர்த்தும், எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாகவும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்ததால்தான் கே. விநாயகம், சி.பா.ஆதித்தனார் போன்றவர்கள் கிஷான் மஸ்தூர் பிரஜா கட்சியில் இருந்தபோதிலும் வெற்றிபெற முடிந்தது.

கே.விநாயகம் திருத்தணியைச் சேர்ந்தவர். எம்.ஏ.எல். படித்து வழக்குரைஞராக இருந்தவர். அவருடைய பகுதி நேரு சர்க்காரால் ஆந்திராவுக்குக் கொடுக்கப்பட்டதால், அதை எதிர்த்து அவர் தீவிரமாகப் போராடினார். அவர்தான் ம.பொ.சி.யை வடக்கு எல்லை போராட்டக் குழுவுக்குத் தலைவராக 1953 இல் நியமித்தார். ம.பொ.சி. முதலமைச்சர் இராஜாஜியுடன் நெருக்கமாக இருந்ததால் வடக்கெல்லைப் பிரச்சனையை சுமூகமாக முடித்து விட முடியும் என்ற நம்பிக்கையிலேயே கே. விநாயகம் அதைச் செய்தார். அதுவரை தி.மு.க.வினரும் வடக்கெல்லைப் பிரச்சனையில் ஒன்றாகவே இருந்து போராடினர். ம.பொ.சி அப்போது குலக்கல்விக்கு ஆதரவாக தீவிரப் பிரச்சாரம் செய்து வந்ததால் அவருடைய தலைமையை ஏற்க முடியாது என்று வ.ஆ.மா. தி.மு.க செயலாளர் ஏ.எல்.சி கிருஷ்ணசாமி செய்தி ஏடுகளுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பினார் (நம் நாடு. 12.2.1954) தி.மு.க. வடக்கெல்லைப் பிரச்சனையில் தனித்தே போராடும் என்றும் அறிவித்தார்.

ஆந்திர மாநில மசோதா விவாதத்தின் போது 15-7-1953 இல் சட்டசபையில் பேசிய விநாயகம் சித்தூர் பகுதியின் வரலாற்றை எடுத்துக் கூறிவிட்டு

“I cannot understand why the Government or the Members interested in the Andhara Bill should take objection. It narrates the history of the chittor district. After all it is a history of how the Tamillians were slowly made to appear as Telugus in my parts ”

“என்னுடைய பகுதியின் பிரச்சனையை அரசாங்கமோ, உறுப்பினர்களோ புரிந்து கொள்ள மறுப்பது ஏன் என்று எனக்குப் புரிய வில்லை. என்னுடைய பகுதியில் தமிழர்கள் எல்லாம் கொஞ்ச கொஞ்சமாகத் தெலுங்கர்களாக மாற்றப்பட்டு வருகிறார்கள்” என்று வேதனையோடு பேசினார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் இராஜகோபாலச்சாரியார்,

“It is a very good thing” (இது நன்றாக இருக்கிறதே) என்று கமண்ட் அடித்தார் (ஆதாரம்: சட்டமன்ற விவாதங்கள் (பக் 153), நாள் 15.7.1953) ஆந்திர மாநில மசோதாவின் விவாதத்தில் இந்திய பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த ப.ஜீவானந்தம் அவர்கள் பேசும்போது சில முக்கியமான செய்திகளைக் கூறியுள்ளார்.

“இந்த மசோதாவைக் கொண்டு வரும்போது நான் ஏற்கெனவே கூறினேன். இந்த அமைப்பு (மொழிவழி மாநில அமைப்பு) தேசிய ஒற்றுமைக்கு ஏற்றதாக இருக்காது என்றும், இது தேசத்திற்கு விரோதம் என்றும் இதில் உள்ளது. மசோதாவில் மார்ச் 25 ஆம் தேதி பாராளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் நேரு பிரகடனம் செய்தபோது ஆந்திர மாகாணம் அமைந்ததும் உடனடியாக ஒரு கமிஷன் அல்லது பல எல்லைக் கமிஷன்கள் ஏற்படுத்தி எல்லைகள் நிர்ணயிக்கப்படும் என்று கூறினார். இன்று இருக்கக் கூடிய எல்லையைக் கொண்டு ஆந்திர ராஜ்யம் அமைக்கப்படும் என்றும, பிறகு எல்லைக் கமிஷன் நியமிக்கப்படும் என்றும் கூறினார். ஆனால் இன்று இந்த மசோதாவில் என்ன பார்க்கிறோம்? எல்லைக் கமிஷன் நிர்ணயம் செய்யப்படுவது துண்டு விழுந்திருப்பதைப் பார்க்கிறோம். எங்கு தேடிப் பார்த்தாலும் ஒரு இடத்திலாவது எல்லைக் கமிஷன் அமைக்கப்பட வேண்டியதைப் பற்றி இந்த மசோதாவில் கூறவே இல்லை என்பதை நாம் பார்க்கவேண்டும்...”

இராஜாஜி தயாரித்த ஆந்திரப் பிரிவினை மசோதாவில் எல்லைக் கமிஷன் வேண்டும் என்ற விதி உருவாக்கப்படவில்லை.

“ஆகவே நான் சொல்லுகிறேன்... மொழி வாரியாக மாகாணங்கள் அமைப்பதில், அமைத்துக் கொள்வதில் சகோதரச் சண்டைகள் வேண்டாம். நமக்குள்ளேயே ஒருவருக்கொருவர் போராட்டங்கள் தற்போது எழுந்திருக்கிற சண்டையும் கூட இந்தத் தாலுகா அத்துடன் சேருவதா, இத்துடன் சேருவதா என்ற எல்லையை நிர்ணயப்பதில் ஏற்பட்டிருக்கும் தகராறு தான். எல்லைகளை சண்டை, சக்சரவுகள் இன்றி, சமாதான முறையிலேயே ஜனநாயக ரீதியாக நிர்ணயிக்க முடியும் என்று தான் கம்யூனிஸ்டு கட்சி கூறுகிறது." (சட்டமன்ற விவாதங்கள் பக்-171-176 நாள் 15-7-1953).

இப்பபடி சட்டமன்றத்தில் பேசிய ஜீவானந்தமும் அவருடைய கம்யூனிஸ்டு கட்சியும் வடக்கெல்லைப் போராட்டத்தில் தமிழகத்துக்கு துரோகமே இழைத்தது. அதை ஜீவானந்தமே ஜன சக்தி தலையங்கத்தில் எழுதியுள்ளார்.

‘புதிய தமிழகம்’ என்ற தலைப்பில் 26-7-52 இல் ஜீவா ஒரு தலையங்கம் எழுதியுள்ளார்.

“திருப்பதி வரையில் சித்தூர் ஜில்லாவின் பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையில் கிஞ்சிற்றும் நியாயமில்லை. ‘சித்தூர் ஜில்லாவும், திருப்பதியும் ஆந்திரர்களுக்கே உரியது’ என்று தமிழ்நாடு கம்யூனிஸ்டு கட்சி 1948-லேயே மிக விளக்கமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் சென்னை ஆந்திரர்கள் கோருகிற தவறுக்குக் குறையாத தவறு. சரித்திரப் பூர்வமாக, திட்டவட்டமாக ஆந்திரப் பிரதேசமாக உருவாகிவிட்ட சித்தூர் ஜில்லாவையும், திருப்பதி நகரையும் தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும் என்று கோருவதும், இலக்கியத்தில் காணப்படுகிற சில எல்லைக் கோடுகளைக் கொண்டு யதார்த்த வாழ்வில் சரித்திரப் பூர்வமாக உருவாகி வந்திருக்கிற, தேசிய இன மக்களின் பிரதேசங்களை மாற்றி அமைத்துவிட முடியும் என்பது நியாயமல்ல. சரித்திரத்திற்குப் புறம்பானது என்பதைத் தமிழ் மக்கள் நிதானமாக சிந்திக்க வேண்டுமென்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” (ப.ஜீவா. ஜனசக்தி 26.7.1952)

கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்களைப் பொருத்த வரை சட்ட சபையில் என்ன பேசினாலும் வாக்கெடுப்பு என்று வருகிறபோது தங்கள் கட்சியின் நிலைபாட்டையே ஆதரிப்பார்கள். “கம்யூனிஸ்டு கட்சியினர் சட்டமன்றத்தில் ஆந்திராவுக்கு ஆதரவாக வாக்களித்ததுபோல், தெற்கெல்லை போராட்டத்தில் கேரளாவுக்குச் சாதகமாக வாக்களித்து விட வேண்டாம்” என்று அ.கோவிந்தசாமி மொழி வாரி மாநில சீரமைப்பு ஆணையத்தின் விவாதத்தின் போது சட்ட மன்றத்தில் கூறினார்...(சட்டமன்ற விவாதங்கள் பக் 296 நாள் 23-11-1955)

ஆந்திர மாநில மசோதாவின் மீது பேசிய அ.கோவிந்தசாமி (இவர் 1952 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.க, தி.மு.க. ஆதரவால் உழைப்பாளர் கட்சி விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர். அக்கட்சித் தலைமை, காங்கிரஸ் ஆதரவு போக்குக்குச் சென்றவுடன் இவர் தி.மு.க.விற்கு வந்துவிட்டார்).

15.7.53 அன்று சட்டமன்றத்தில் பேசிய அவர்,

“இன்றைய தினம் வடநாட்டினர், டில்லி சர்க்கார், நம்மை அடிமைப்படுத்திக் கொண்டு, தென்நாட்டை வியாபார ஸ்தலமாக வைத்துக்கொண்டு சுரண்டும் இடமாகவும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கு நாம் என்ன பார்க்கிறோம் - சேட்டுகளும் மார்வாடிகளும் மெத்தையில் படுத்துக்கொண்டு வியாபாரம் செய்யும் நிலைமையை நாம் இப்பொழுது பார்க்கிறோம். இதையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்பதற்காகவும்தான் பெரியாரும் அறிஞர் அண்ணாவும் ஜவுளிக் கடையின் முன்பாக, வடநாட்டார் வியாபாரம் செய்யும் கடைகளின் முன்பாக தியாகம் செய்து மறியல் செய்தார்கள். இதை அடிப்படையில் வைத்துக் கொண்டுதான் மொழி வாரி மாகாணம் முதலில் பிரிந்து, இறுதியில் இனத்தின் அடிப்படையில் நாம் ஒன்று பட்டு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் வேலை செய்து வருகின்றன. இது எல்லோருக்கும் தெரியும்.

திராவிடம் பிரிய வேண்டும் என்பதற்காகத்தான் மதிப்புக்குரிய மாணிக்க வேலு நாயக்கர் அவர்களும், பக்தவச்சலு அவர்களும், இன்னும் இந்தப் பக்கத்திலுள்ள 38 பேர்களும் கையெழுத்திட்டு, சென்ற தேர்தலில் வெற்றிபெற்றோம். நாம் வடநாட்டை விட்டுப் பிரிந்து சுகமாக வாழவேண்டும் என்று தீர்மானித்தோம். காரணம் வட நாட்டார்கள் வரிகளையும், வருமானத்தையும் வாங்கிக் கொண்டு போகிறார்கள். இன்னும் சுரண்டல் மூலமாகவும் இன்சூரன்ஸ் மூலமாகவும், பாங்குகள் மூலமாகவும் சேட்டுகள் சுரண்டிக் கொண்டு போகிறார்கள். ஏன்? கல்லக்குடியை டால்மியாபுரம் என்று மாற்றும் போது எதைத்தான் செய்ய மாட்டார்கள். அதைப் போலவே சென்னையில் சௌகார்பேட்டை என்று பெயர் வைத்திருக்கிறார்கள் ஏன்? டில்லியில் காமராஜ் பேட்டை என்ற பெயரை வைக்க முடியுமா? அல்லது ராஜாஜிபேட்டை என்றுதான் வைக்க முடியுமா? நமது ராஜாஜி அவர்களும் அங்கு கவர்னர் ஜெனரலாகத் தான் இருந்தார். அப்படி இருந்தும் அவருடைய பெயரை அங்கு வைக்க முடியுமா? ஒருக்காலும் வைக்க முடியாது......

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் பெயரால் தன்னுடைய 60 ஆவது வயதில் பெரியாரும், தாளமுத்து நடராஜனும் இன்னும் பல தோழர்கள் சிறை சென்றார்கள்.. தாளமுத்துவும் நடராஜனும் சிறையில் பலியானார்கள். அதற்காகவே தான் அண்ணாவும் போராட்டத்தை நடத்தினார்.... மொழியின் பெயரால் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதற்காகத்தான்... நேரு தலைவராக இருக்கும் வரையில் வடநாட்டு ஆதிக்கம் இருக்கும் வரையில் தீர்ப்பு கிடையாது. வாஞ்சுவை அனுப்பக் கூடிய வடநாட்டு ஆதிக்கம் இருக்கும் வரையில் நமக்குத் தீர்ப்பு கிடையாது. நாம் சுபிட்சமாக வாழ முடியாது. நாம் சுமூகமாக பங்கிட்டுக் கொள்ள முடியாது. அந்த ஆதிக்கம் இருக்கும் வரையில் குரங்கு அப்பத்தை பங்கிட்டுக் கொடுத்தது போல தான் ஆகும். இப்பொழுது இருக்கும் நிலைமையில் தமிழர்களுக்கும் ஆந்திரர்களுக்கும் கசப்பு, மலையாளிகளுக்கும் கன்னடியர்களுக்கும் கசப்பு. இதெல்லாம் ஏன் வருகிறது? நம்முடைய அதிகாரத்தை எல்லாம் வட நாட்டார் வைத்திருக்கிறார்கள். நாம் பிரிந்து கொள்ளக் கூட நமக்கு உரிமை இல்லை. நமக்கு எவ்விதமான உரிமையும் இப்போது இல்லை.

நாட்டில் எந்த விதமான கிளர்ச்சி வந்தாலும் மொழி ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. ஆகவேதான் ஆகஸ்டு 1 ஆம் தேதியன்று பெரியாரும் அண்ணாவும் தமிழ் நாட்டில் திருப்பதியிலிருந்து தூத்துக்குடி வரையிலுள்ள ரயில்வே நிலையங்களிலுள்ள இந்திமொழியை அழித்தார்கள். இந்திக்கு இங்கு என்ன இடம் இருக்கிறது? அன்று வெள்ளைக்காரன் மவுண்ட் பேட்டன் இருந்த இடத்தில் இன்று ராஜேந்திர பிரசாத் இருக்கிறார். அன்று ஹோப் இருந்த இடத்தில் இன்று ஸ்ரீ பிரகாசா (கவர்னர்) இருக்கிறார். அப்பொழுது எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டதோ அவ்வளவு சம்பளம் தான் இப்பொழுதும் கொடுக்கப்பட்டு வருகிறது. வெள்ளைக்காரன் சுரண்டல் அப்பொழுது எப்படி இருந்ததோ அப்படித்தான் இப்பொழுதும் இருக்கிறது. அவர்கள் வியாபார முறையில் வந்து இங்கிருந்து சுரண்டிக் கொண்டு போனார்கள். அன்று அவர்கள் எஜமானராக இருந்தார்கள். இன்று வடநாட்டினர் எஜமானர்களாக இருக்கிறார்கள்”....

“போராட்டம் நடக்கும் போது நானும் திருத்தணிக்குப் போயிருக்கிறேன். அங்கு பெருவாரியாகத் தமிழ் பேசுகிறார்கள். எந்தப் பக்கங்களில் தமிழ் பேசுகிறார்களோ அந்தப் பக்கங்களை தமிழ் நாட்டுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதைப் போலவே எங்கு தெலுங்கர்கள் அதிகமாக இருக்கிறார்களோ அந்தப் பகுதியை ஆந்திர ராஜ்யத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். “

“ஆந்திரர்கள் புதிதாக தங்கள் ராஜ்யத்திற்குத் தலைநகரம் ஏற்படுத்த வேண்டும், அதற்காக நஷ்ட ஈடு கோருகிறார்கள் என்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் சொத்தை ஜனத்தொகை வாரியாகப் பிரித்திருக்கிறார்கள். அதே முறையில் கடனையும் பிரித்திருக்க வேண்டும். கடனை அப்படிப் பங்கிடாமல், தமிழர்களே கடனை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று சொல்வதில் நியாயமில்லை. ஒரு குடும்பத்தில் சகோதரர்களுக்குள் பாகம் பிரிக்கின்ற போது, சொத்தையும் பிரிப்பார்கள், கடனையும் பிரிப்பார்கள். அந்த முறையில் பிரித்திருக்கலாம். ஆனால் அப்படிப் பிரிக்கவில்லை.”

இராஜாஜி ஆந்திர அரசுக்கு புதிய தலைநகரை உருவாக்க 2.30 கோடி கொடுக்க வேண்டும் என்ற விதியை சேர்த்திருந்தார்.

“இராஜாஜி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்; பல ஆயிரக்கணக்கான மக்கள் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள், சுட்டுக் கொல்லப்படுகிறார்கள், நாடு பிரிகின்ற இந்த நல்ல நேரத்தில், இராஜாஜி கொண்டு வந்திருக்கின்ற புதுக் கல்வித் திட்டத்தை (குலக்கல்வித்திட்டத்தை) வாபஸ் வாங்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.” (ஆதாரம் - சட்டமன்ற நடவடிக்கை பக் 186 முதல் 190 வரை நாள் 15-7-1953)

ம.பொ.சி. அப்போது சட்ட மேலவையில் உறுப்பினராக இருந்தார். அப்போது அவர் பேசியதாவது

“மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, நம்முடைய முதல் அமைச்சர் அவர்கள் இந்தக் கவுன்சிலின் முன்பு வைத்துள்ள ஆந்திர ராஜ்ய அமைப்பு மசோதாவை நான் மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்...

இந்த எல்லைப் பிரச்சினையைப் பொருத்தவரையில் ஒரு நியாயம் நடந்திருக்க வேண்டும். சித்தூர் ஜில்லா தகராறுள்ள பிரதேசமாக இருப்பதால் அதை எஞ்சிய சென்னை ராஜ்யத்தோடு சேர்ந்திருக்க வேண்டும். சித்தூர் ஜில்லா தகராறுள்ள ஜில்லா என்று முத்திரை போட்டு எஞ்சிய சென்னை ராஜ்ஜியத்தில்தான் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியில்லாமல் மொழியின் அடிப்படையிலே அமைக்கப்படுகிற ஆந்திர ராஜ்ஜியத்தில் தகராறுள்ள இந்த சித்தூர் ஜில்லாவை சேர்த்திருக்கக்கூடாது. எஞ்சிய சென்னை ராஜ்ஜியத்தில் சேர்க்காமல், ஆந்திர ராஜ்ஜியத்தில் சேர்ப்பதற்கு நியாயமில்லை. ஆனால், சந்தர்ப்பம், சூழ்நிலை, தயக்கம் முதலிய விஷயங்கள் வேறுவிதமாக மாற்றி அமைத்து விட்டது. ஆயினும் இதைப் பெரிதாகக் கொள்ளாமல் எல்லைக் கமிஷன் அமைக்கப்படும் வரையில் பொறுத்திருந்து, இதற்கு முடிவு காண்பதில் ஆட்சேபனை ஒன்றுமில்லை. ஆகவே எல்லைக் கமிஷன் சீக்கிரமாக வரவேண்டும்.....

ஏற்கெனவே பிரிந்துபோன ராஜ்ஜியங்களுக்கு நஷ்டஈடு கொடுக்கப்படவில்லை. ஆனால் இங்கே மட்டும் நஷ்டஈடு என்ற ஒரு பிரிவு இருக்கிறதைப் பார்க்கும்போது ஒரு புது சம்பிராதயமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. இப்படி கொடுக்க உத்தேசித்திருப்பதை நஷ்டஈடு என்று சொல்லாமல், சகோதரர்களுக்கு செய்யும் உதவி என்று வேண்டுமானால் சொல்லலாம், கொடுக்கலாம்” என்று கூறுகிறார் (சட்டமேலவை விவாதங்கள் பக் 111-116 நாள் 21.7.53).

எந்தப் பெயரில் கொடுத்தாலும் தமிழகத்தின் பணம் ஆந்திராவுக்குத் தானே போகும்.

திருத்தணி, சித்தூர், திருப்பதி முதலான பகுதிகளை ஆந்திராவோடு இணைத்து இராஜாஜி ஆந்திரப் பிரிவினை மசோதா தயாரித்திருந்தார். ம.பொ.சி. இதைப் பெரிதுப்படுத்த வேண்டாம் என்கிறார். தேவிகுளம், பீர்மேடு கேரளாவுக்கே சொந்தம் என்றபோது காமராஜர் ஆட்சி பதவி விலக வேண்டும் என்று கூறிய ம.பொ.சி. இராஜாஜி செய்தியில் இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்கிறார். இவர்தான் வடக்கெல்லை பாதுகாப்புக் குழுத் தலைவர்.

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கோசல்ராமன் பேசிய அளவுக்குக்கூட ம.பொ.சி. பேசவில்லை. இராஜாஜிக்கு சார்பாகவே பேசியுள்ளார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. திருவில்லிப்புத்தூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கே.டி.கோசல்ராமன் ஆந்திரப் பிரிவினை மசோதாவின் மீது சட்டமன்றத்தில் இராஜாஜின் ஆந்திர ஆதரவுப் போக்கை வன்மையாகக் கண்டித்தார்.

“இந்த ராஜ்யத்தின் தலைவராகிய கனம் இராஜாஜி அவர்கள் பிரிந்துபோகின்ற ஆந்திரர்களுக்கு சலுகை காட்டும் வகையில் தமிழர்களுடைய உரிமைகளை ஏன் விட்டுக்கொடுக்க வேண்டுமென்றுதான் நான் கேட்கிறேன். எதற்காக இதைச் சொல்லுகிறேன் என்று நீங்கள் கேட்கலாம். சித்தூர் ஜில்லாவில் 6 தாலுக்காக்கள் தமிழர்கள் வாழுகின்ற பிரதேசம். தமிழ் கலாச்சாரம், நாகரீகம், இலக்கியம் தழைத்திருக்கின்ற பிரதேசம். அதையும் ஆந்திர மாகாணத்தோடு சேர்ந்திருப்பதைக் கண்டு அங்குள்ள தமிழர்கள் உள்ளம் குமுறுகிறார்கள். புள்ளி விவரங்களுடன் கூட அந்தத் தாலுகாக்கள் தமிழர்களுடைய தாலுகாக்கள் தான் என்று நிரூபிக்கிறார்கள்..... சந்திரகிரி தாலுகா என்ற திருப்பதிதான் நமது மதிப்பிற்குரிய தலைவர் கனம் இராஜகோபாலாச்சாரியார் அவர்களின் பரம்பரையினர் பிறந்த இடம். அங்கிருந்து வந்தவர்தான் நமது சக்கரவர்த்தி இராஜாஜி அவர்கள். அப்படி இருக்கும்போது கனம் இராஜாஜி அவர்கள் அந்த தாலுகாக்களையெல்லாம் ஆந்திரர்களுக்கு விட்டுக் கொடுக்க எப்படி முன் வந்தார்கள் என்றுதான் தெரியவில்லை.”

முதலமைச்சர் இராஜாஜி குறுக்கிட்டு “அது அவருடைய தாராள குணத்தினால்” அவையில் ஒரே (சிரிப்பு)

கே.டி.கோசல்ராமன்: “தன்னுடைய தாராள குணத்தினால்தான் விட்டுக் கொடுத்திருப்பதாக கனம் இராஜாஜி சொல்லுகிறார்கள். தமிழர்கள் எல்லோரும் தாராள மனப்பான்மையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும்தான் உடையவர்கள். ஆனால் மிக அதிகமான தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறபோது அதை தாராளமான மனப்பான்மையென்று சொல்லி விட்டுக் கொடுக்கவே முடியாது. தமிழர்கள் எல்லோரும் இன்றைய தினம் என்ன சொல்லுகிறார்கள் என்றால், கனம் இராஜாஜி அவர்கள் ஆந்திரர்களுக்கு சலுகை காட்டுகிறார்களே தவிர தமிழர்களின் உரிமையைக் காக்க முயற்சிக்கவில்லை என்று கூறுகிறார்கள்....

பெல்லாரி ஜில்லாவை எத்துடன் சேர்ப்பது என்று விசாரிக்க ஒரு நீதிபதியை அனுப்பினார்களே, 'நீதிபதி மிஸ்ரா' அது மாதிரியாக சித்தூர் ஜில்லாவைப் பற்றியும் விசாரணை செய்து ஒரு முடிவு அறிவிக்க ஏன் ஒரு நீதிபதியை அனுப்பக்கூடாது என்று நான் கேட்கிறேன்? கனம் இராஜாஜி அவர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும். தமிழர்களின் உரிமைகளை விட்டுவிடக் கூடாது. ஏன் இந்த ஆந்திர மாகாணப் பிரிவினை மசோதாவிலேயே, சித்தூர் ஜில்லாவிலுள்ள ஆறு தாலுகாக்கள் நீங்கலாக இதர சச்சரவு அற்ற பிரதேசங்களைக் கொண்டு ஆந்திர மாகாணம் அமைக்கப்படுமென அறிவிக்கக்கூடாது என்று தான் நான் கேட்கிறேன்” (சட்டமன்ற விவாதங்கள் பக் 54, 55 நாள் 14.07.1953)

இராஜாஜி ஆந்திரர்களுக்கு சார்பாகவே இம்மசோதாவை தயாரித்திருந்தார் என்பதை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரே சட்டசபையில் இராஜாஜி முன்னிலையிலேயே கண்டித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது. ஆந்திரப் பிரிவினை மசோதாவின் மீது பேசிய பிரகாசம் “வ.ஆ.மாவட்டம், சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர் கூடவே இராஜாஜியையும் சேர்த்து எடுத்துக் கொள்வோம். ஏனென்றால் இராஜாஜியும் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட தெலுங்கர்தான்” என்று பேசினார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் இராஜாஜி, பிரகாசம் ஆங்கிலத்தில் பேசவே இராஜாஜியும் ஆங்கிலத்தில் “you take me or Hosur?” (நீங்கள் என்னை எடுத்துக் கொள்ளப் போகிறீர்களா அல்லது ஓசூரையா?) என்று கேட்டார். அதற்கு பதிலளித்த பிரகாசம் ஓசூரையும் எடுத்துக் கொள்வோம். உங்களையும் அழைத்துக் கொள்வோம்” என்றார். (சட்டமன்ற விவாதங்கள் பக். 342, 343 நாள் 16.07.1953)

புதுதில்லியில் நாடாளுமன்றத்தில் ஆந்திரப் பிரிவினை மசோதாவின் மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வி.இராமசாமி, “சென்னை மாகாணத்தில் கடந்த பல ஆண்டுகளாக முதலமைச்சர்களாக இருந்தவர்களில் இரண்டு பேர்தான் தமிழர்கள். ஒருவர் டாக்டர் சுப்பராயன், மற்றொருவர் இராஜாஜி” என்று கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த எல்லூரு நாடாளுமன்ற உறுப்பினர் பி.எஸ்.மூர்த்தி, “இராஜாஜி தெலுங்கர். அவரை நீங்கள் உரிமை கொண்டாடக்கூடாது” என்றார். “அவர் தெலுங்கு மனிதரேதான். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நாங்கள் தான் அவரை உங்களிடம் விட்டு வைத்தோம்” என்று மீண்டும் கூறினார். “சக்ரவர்த்தி என்பது அவரது குடும்பப் பெயர்தான். அதை வைத்து ஏமாற வேண்டாம்” என்றும் கூறினார். (நாடாளுமன்ற விவாதங்கள் பக். 1530, நாள் 22.08.1953)

ma po si with Kamarajar

இராஜாஜி தெலுங்கர்தான் என்பது, சட்டமன்றப் பதிவேட்டிலும், நாடாளுமன்றப் பதிவேட்டிலும் இடம் பெற்றுள்ளது. ம.பொ.சி. தன்னுடைய சுயநல அரசியலுக்காக இராஜாஜியை ‘தமிழ்ப் பார்ப்பனர்’ என்று கூறி தமிழர்களை ஏமாற்றி விட்டார்.

ஆந்திர மசோதாவில் இராஜாஜி ஆந்திரர்களுக்குச் சார்பாகவே அந்த மசோதாவை தயாரித்திருப்பது மேற்கண்ட சட்டமன்ற உரைகளிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.

சென்னை நகர் பிரச்சினையிலும் இராஜாஜி ஆந்திரர்களுக்குச் சார்பாக இருந்தார் என்பதையும் ம.பொ.சி.யின் ‘எனது போராட்டம்’ நூலே சாட்சியாக உள்ளது.

இராஜாஜியின் ஊசலாட்டம் என்ற தலைப்பில் ம.பொ.சி கூறுவதாவது.

“மாநகராட்சியின் சிறப்புக் கூட்டம் நடைபெறவிருக்கும் செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்ததும், மேயரையும் என்னையும் இராஜாஜி தமது இல்லத்திற்கு அழைத்துப் பேசினார். ‘ஆந்திர அரசுக்குத் தற்காலிகமாகக் கூட சென்னையில் இடம் தரக் கூடாது’ என்ற வாசகத்தைத் தீர்மானத்திலிருந்து நீக்கி விடும்படி மேயரையும், என்னையும் இராஜாஜி கேட்டுக் கொண்டார்” (ம.பொ.சி. ‘எனது போராட்டம்’ பக் 632) இதற்குப் பொருள் என்ன? ஆந்திரர்களுக்குச் சென்னையில் தற்காலிகத் தலை நகரமாக இருக்க இடம் தர வேண்டும் என்பது தானே.

பிரிந்து செல்லும் ஆந்திர சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களுக்குப் பிரிவு உபச்சார விழா 30.7.53 அன்று பேரவையில் நடைபெற்றது. அப்போது பேசிய பிரகாசம் அவர்கள் “இராஜாஜி ஆந்திராவைச் சேர்ந்தவர், அவரை நாங்கள் அழைத்துக் கொள்வோம்” என்று கூறினார். அன்று பேரவையில் பேசிய தி.மு.க உறுப்பினர் அ.கோவிந்தசாமி ஆந்திர உறுப்பினர்களைப் பாராட்டி விட்டு முடிக்கும் தறுவாயில் “கடைசியாக ஒரு வேண்டுகோள்; கனம் பிரகாசம் அவர்கள் பேசும்போது சொன்னார், கனம் இராஜாஜி அவர்களும் ஆந்திராவைச் சேர்ந்தவர் தான் என்றும், அதனால் தன்னுடன் அழைப்பேன் என்றும் சொன்னார். அவ்விதம் அழைத்து கனம் இராஜாஜி அந்த நாட்டிற்குப் போய் விட்டால் சந்தோஷமாக இருக்கும். நாட்டில் குழப்பம் இருக்காது என்று சொல்லிக் கொண்டு இத்துடன் முடித்து கொள்கிறேன்” என்றார். (ஆதாரம்: சட்டப்பேரவை நடவடிக்கைகள் பக். 1807 நாள் 30.7.1953)

அன்று ம.பொ.சி.யும் சட்ட மேலவையில் தான் வீற்றிருந்தார். இதிலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால் இராஜாஜி தெலுங்குப் பார்ப்பனர் என்பதும், அவருடைய செயல்பாடுகள் ஆந்திரர்களுக்கு ஆதரவாகவே இருந்தது என்பதும் வெளிப்படையான உண்மையாகும். ம.பொ.சி. தன்னுடைய சுயநலத்திற்காக இராஜாஜி தமிழ்ப் பார்ப்பனர் என்ற பொய்யைக் கட்டவிழ்த்தார். அதை நம்பிய முனைவர் அருகோ, வழக்குரைஞர் பா.குப்பன், பழ.நெடுமாறன், பெ.மணியரசன், ராஜேந்திர சோழன் உள்ளிட்ட தமிழ்த் தேசியவாதிகள் உண்மையைக் கண்டறியாமல். ம.பொ.சி சொன்ன பொய்யையே திரும்பத் திரும்பக் கூறிவருவது தமிழ்த் தேசியம் அடைவதற்கு எந்த வகையிலும் பயன்படாது.

இராஜாஜி சட்டமன்றத்திற்கு வெளியிலும் வடக்கெல்லைப் போராட்டத்திற்கு ஆதரவாக இல்லை என்பதை ம.பொ.சியின் ‘எனது போராட்டம்’ நூலே சாட்சி. “முதலமைச்சர் இராஜாஜியைச் சந்தித்துப் பேசி, சித்தூர் மாவட்டத்தை ‘தகராறுக்கிடமான பிரதேசம்’ என்றறிவிக்குமாறு பிரதமர் நேருவிடம் தமக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்துமாறு மீண்டும் ஒரு முறை அவரை வற்புறுத்திக் கேட்க விரும்பினேன். அதன்படி 26.6.53 இல் முதல்வர் இராஜாஜியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினேன்......”

“இப்பிரச்சனையில் தமக்குள்ள சங்கடத்தை மற்றொரு முறையும் அவர் எனக்கு விளக்கினார். தமது அமைச்சரவையில் சரிபாதிப்பேர் ஆந்திரராயிருப்பதாலும், சட்டமன்றக் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயும் சரி பாதிப்பேர் தமிழரல்லாதாராக இருப்பதாலும் ஆந்திரர் நிலைக்கு எதிராக தமிழர் மட்டுமே நடத்தும் எல்லைக் கிளர்ச்சிக்கு ஆதரவாக முதல்வர் என்ற முறையில் தாம் எதையும் செய்ய இயலாமல் இருப்பதை எனக்கு உணர்த்தினார்”. (ம.பொ.சி. ‘எனது போராட்டம்’ பக் 659). இது இராஜாஜியின் ஆந்திரர்களுக்குச் சார்பான போக்கேயாகும்.

1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சென்னை மாகாணத்தில் 375 சட்ட மன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். அதில் காங்கிரஸ் கட்சியினர் 152 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். பெரியார் அந்தத் தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சியையும் காங்கிரஸ் அல்லாத வேட்பாளர்களையும் ஆதரித்தார். தி.மு.க திராவிட நாட்டுக்கு ஆதரவாக உறுதி கொடுத்த கட்சியையும், வேட்பாளர்களையும் ஆதரித்தது.

ஆந்திர காங்கிரஸ் தலைவர் டி.பிரகாசம் 1950 இல் காங்கிரசை விட்டு வெளியேறி, 1951 இல் ஐதராபாத் பிராஜா பார்டி என்பதைத் தொடங்கினார். என்.ஜி.ரங்கா அதன் செயலாளராக இருந்தார். 1952 இல் கிருபாளனி தலைமையிலான. கிஸான் மஸ்தூர் பிரஜா பார்ட்டி (K.M.P.P) விவசாயிகள் தொழிலாளர்கள் மக்கள் கட்சியுடன் இணைத்துக் கொண்டார். 1952 தேர்தலுக்கு முன்பு ஆந்திரப் பகுதியில் கம்யூனிஸ்டு கட்சியுடன் இணைந்து குறைந்த பட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் (Democratic peoples front) என்ற கூட்டமைப்பை உருவாக்கினார். ஆந்திரா தனி மாநிலம் பெறுவதே இதன் முக்கிய கொள்கைகளுள் ஒன்று. ஆந்திர கம்யூனிஸ்டு கட்சியினர் தாங்கள் தேர்தலில் வெற்றிபெற்றால், வீட்டுக்கு 5 ஏக்கர் நிலம், ஏர் உழுவதற்கு வீட்டுக்கு ஒரு ஜதை ஏர் மாடு, வீட்டில் பால் கறந்து குடிக்க வீட்டுக்கு ஒரு பசுமாடு தரப்படும் என்று வாக்காளர்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்தனர். தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் எதிர்ப்பாலும் ஆந்திராவில் பிரகாசம் கூட்டணி எதிர்ப்பாலும் காங்கிரஸ் படு தோல்வி அடைந்தது. சரிபாதி உறுப்பினர் கூட காங்கிரசுக்கு இல்லை. டெல்லி மேலிடம் இராஜாஜியை முதல்வர் பதவி ஏற்குமாறு ஆணையிட்டது. அப்போது ஸ்ரீ பிரகாசா என்ற உ.பி. காரர் சென்னை மாநில ஆளுநராக இருந்தார். ஆளுநர் நியமனத்தின் பேரில் மேலவை உறுப்பினராகி இராஜாஜி முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மந்திரி பதவி ஆசை காட்டி, மாணிக்கவேலரையும், இராமசாமி படையாச்சியையும் தம் வலையில் விழவைத்தார். முன்னவருக்கு 6 சட்ட மன்ற உறுப்பினர்களும் பின்னவருக்கு 19 சட்டமன்ற உறுப்பினர்களும் இருந்தனர். மாணிக்க வேலருக்கு அமைச்சர் பதவி கொடுத்தார். 1954 இல் காமராசர் இராமசாமி படையாச்சிக்கு அமைச்சர் பதவி கொடுத்தார். இராஜாஜி ஆந்திராவில் பிரகாசத்திடம் இருந்து பிரிந்து சென்ற என்.ஜி.ரங்கா தலைமையிலான ‘கிரிஸ்கர் லோக் பார்ட்டியில்’ இருந்து சில உறுப்பினர்களை இழுத்தார். எப்படியோ ஒரு வகையில் மெஜாரிட்டியை நிரூபித்துவிட்டு முதலமைச்சர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார்.

அப்போது சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களில்

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்                  190

ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்                     140

மலபார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்                     30

கன்னடாப் பகுதியைச் சார்ந்தவர்கள்                  15

மொத்தம்                      375 பேர்                                            

அந்தத் தேர்தலில் வரலாறு காணாத அளவில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினர் 62 பேர் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தனர். தமிழ்நாட்டில் பெரியார் பிரச்சாரமும், ஆந்திராவில் தெலுங்கானா புரட்சியின் தாக்கமும் பிரகாசத்தின் கூட்டணியும் அதற்குக் காரணமாகும். தமிழ்நாட்டில் 14 பேர் மட்டுமே இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினர். தமிழ்ப் பகுதியைச் சார்ந்த 190 சட்ட மன்ற உறுப்பினர்களில் இந்த 14 பேர் மட்டுமே வடக்கெல்லைக்கு ஆதரவு தரமாட்டார்கள். தங்கள் கட்சிக் கட்டுபாடு என்ற முறையில், மற்ற சட்ட மன்ற உறுப்பினர்கள் கட்சி பாராமல் வடக்கெல்லைக்கு 176 பேர் ஆதரவளித்திருப்பார்கள். ஆந்திர சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையை விட இது அதிகம் தான். தமிழர்களுக்கு உதவி செய்ய இராஜாஜிக்கு விருப்பமில்லை. அவ்வளவுதான். ‘இராஜாஜி பரந்த தமிழகம் காண விழைந்தார்’ என்ற அருகோவின் கருத்தும் தவறானது ஆகும். (அருகோ தமிழர் இந்தியர் இல்லையா பக்கம் 4)

இராஜாஜி மொழி வாரி மாநிலக் கொள்கைக்கும் தொடக்கம் முதலே எதிராகத்தான் இருந்தார். இது பற்றி ம.பொ.சி கூறுவதாவது. “பிரதமர் நேரு திடீர்ப் பிரகடனம் ஒன்றை வெளியிட்டார். அதாவது பசல்அலி கமிஷன் பரிந்துரையில் கண்டபடி மொழி வாரி ராஜ்யங்கள் அமைப்பதற்கு மாறாக, இந்தியாவை ஐந்து ராஜ்ஜியங்களாகச் செய்யும் திட்டமொன்றை திடீரென்று வெளியிட்டார் . அவை தட்சிணம்(தெற்கு) ராஜ்யம், உத்திர (வடக்கு) ராஜ்யம், மேற்கு ராஜ்யம், கிழக்கு ராஜ்ஜியம், மத்திய ராஜ்யம் என்பவனாம்...... நேருவின் திடீர்ப் பிரகடனத்தை இராஜாஜி அவர்கள் மன நிறைவோடு வரவேற்றார். அதற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யவும் முற்பட்டார். முதல் கூட்டம் மயிலை விவேகானந்தர் கல்லூரியில் நடைபெற்றது. அதில் இராஜாஜி “மொழி வாரி அரசு காண விழைவோர் காட்டுமிராண்டிகள்” என்று கடுஞ்சொல் புகன்றார். இந்தக் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன்”(ம.பொ.சி. ‘எனது போராட்டம்’ பக்.761) இராஜாஜி மொழி வாரி மாநிலம் கேட்பவர்கள் காட்டுமிராண்டிகள் என்று திட்டினாலும் ம.பொ.சிக்கு இனிக்கும். பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று கூறினால் மட்டும் கசக்கும்.

இராஜாஜி தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தையும் வர விடவில்லை. ஆ.கசபதி நாயகர் தமிழ் ஆட்சி மொழி மசோதாவை சென்னை சட்ட மேலவையில் 5-1-1954இல் தாக்கல் செய்தார். அதை விவாதத்துக்கே வரவிடாமல் முதல் அமைச்சர் இராஜாஜி தடுத்து விட்டார். இராஜாஜியின் பச்சை அடிமை ம.பொ.சியும் அன்று மேல் அவையில் தான் இருந்தார். அவர் வாய் மூடி மௌனியாவே இருந்தார். கசபதி நாயகரின் ஆட்சி மொழி மசோதாவை வரவேற்று நம்நாடு நாளேடு 16.1.54 இல் தலையங்கம் எழுதியது. 20.12.54 அன்று சென்னையில் அனைத்து கட்சிகளையும் அழைத்து, கசபதியார் தமிழ் ஆட்சி மொழி மாநாட்டை நடத்தினார். அங்கு பேசியவர்களின் உரைகள் நம்நாடு நாளிதழில் தொடராக வெளிவந்துள்ளது. இதையெல்லாம் ம.பொ.சி. திட்டமிட்டு தன்னுடைய செங்கோல் இதழில் வெளியிடாமல் மறைத்து விட்டார்.

மத்தியில் இந்தி ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று ம.பொ.சி.யும், மத்தியில் இந்தி ஆட்சி மொழியாக இருக்கக்கூடாது, ஆங்கிலம்தான் இருக்கவேண்டும் என்று இராஜாஜியும் கூறிவந்தனர். அப்போது ம.பொ.சிக்கும் இராஜாஜிக்கும் இடையே சிறு உரசல் ஏற்பட்டது. ‘கல்கி’ ஏடு இராஜாஜியை ஆதரித்து எழுதியது. அதற்கு பதில் அளித்து ம.பொ.சி. 21.07.63 செங்கோல் ஏட்டில் இராஜாஜியைப் பற்றி எழுதியுள்ளார். “மொழிவாரி மாநிலத்தை அன்று எதிர்த்தாரே. இராஜாஜி மொழிவாரி மாநிலக் கோரிக்கையைக் “காட்டு மிராண்டிகளின் கொள்கை” என்று அய்தராபாத் காங்கிரஸ் மகாசபையில் பேசினார். அது மட்டுமன்றி மொழிவாரி மாநிலம் அமையவிருந்த தருணத்தில் அதனை அழிப்பதற்கென்றே “தட்சிணப்பிரதேசத் திட்டம்” என்ற கரடியை கட்டவிழ்த்து விட்டார். இதனை கல்கி மறந்ததா? இல்லை மறைக்கிறதா? இன்றளவும் இராஜாஜி வாய்ப்பு நேரும் போதெல்லாம் மொழிவாரி மாநில அமைப்பை எதிர்த்து வருகிறார்.”

பெரியார் மொழிவாரி மாநிலம் பிரிந்தவுடன் அதனை ஏற்றுக்கொண்டு சுதந்திரத் தமிழ்நாடு கோரினார். ஆனால் இராஜாஜி 1963இல் கூட மொழிவாரி மாநிலத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என ம.பொ.சியே எழுதியுள்ளார்.

“1952 இராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது, ஆந்திரம் தனி மாநிலமாக பிரிந்து போன சந்தர்ப்பத்தில் எஞ்சிய சென்னை ராஜ்ஜிய ஆட்சியை தமிழிலே நடத்த வேண்டுமென்று ஒரு மசோதா மேல் சபையில் அரங்கேற்றப்பட்டபோது, அதனை இராஜாஜி ஆதரிக்கவில்லை. அப்போது அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சியின் பலங்கொண்டு தோற்கடித்தார்.”

கசபதியார்தான் தமிழ் ஆட்சிமொழி மசோதாவை மேல் அவையில் கொண்டுவந்தார் என்று சொல்லுவதற்குக்கூட ம.பொ.சி. தயாராயில்லை. அன்றைக்கு இராஜாஜியின் ஆணைக்குக் கட்டுப்பட்டு, ம.பொ.சியும் தான் தமிழ் ஆட்சிமொழி மசோதாவை எதிர்த்தார். கொள்கையை விட தனி நபர் தன் குருநாதர் தான் முக்கியம் என்று செயல்பட்டவர் ம.பொ.சி.

“இராஜாஜியிடமிருந்து விலகி நிற்பதிலோ, அவர் மீது பழிசுமத்தி பிரச்சாரம் செய்வதிலோ எனக்கு துளிஅளவும் மகிழ்ச்சி கிடையாது” (செங்கோல் 21.7.63)

பெரியார் தன்னுடைய கொள்கைக்கு எதிராக யார் இருந்தாலும் எதிர்க்கத் தவறமாட்டார். 1948இல் ஓமந்தூரார் ஆட்சிக்காலத்தில் இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினார்.

தன்னுடைய நண்பர் வரதராசலு நாயுடு பார்ப்பனர்களுக்கு ஆதரவாக 1927முதல் தமிழ்நாடு பத்திரிக்கையில் எழுதி வந்ததை குடிஅரசு இதழில் வன்மையாகக் கண்டித்தார்.

1927இல் நீதிக்கட்சியைச் சார்ந்த ஏ.பி.பாத்ரோ, முத்துலட்சுமி ரெட்டியின் தேவதாசி ஒழிப்பு மசோதாவை பொறுப்புக் குழுவுக்கு விடவேண்டும் என்று சட்டசபையில் பேசியபோது, ‘இவர் பார்ப்பனரல்லாதார் கட்சியில் இருப்பதற்கே தகுதியில்லை. நீதிக்கட்சியில் இருந்து விலக வேண்டும்’ என்று பெரியார் குடிஅரசில் எழுதினார்.

1930இல் முதலமைச்சராக இருந்த சித்தூர் முனிசாமி நாயுடுவின் ஆட்சியில் ஆதிதிராவிட பள்ளிகள் மூடப்பட்டதைக் கண்டித்து அவர் பதவி விலக வற்புறுத்தி திராவிடன் ஏட்டில் பெரியார் எழுதியுள்ளார்.

ஆனால் ம.பொ.சி தன் கொள்கைகளுக்கு எதிரான கொள்கைகளையுடைய இராஜாஜியைத் தான் எப்போதும் ஆதரித்து வந்தார். இவர் என்ன கொள்கை வீரர் என்பது ம.பொ.சி அன்பர்களுக்கே வெளிச்சம்.

ம.பொ.சிக்கு எப்போதுமே இராஜாஜிதான் குருநாதர் அவர் சொல்படிதான் கேட்பார். தி.மு.கவோடு தேர்தல் உறவு கொண்டதற்கும் இராஜாஜிதான் காரணம் என ம.பொ.சியே கூறியுள்ளார்.

“பிரிவினைக் கோரிக்கையை தி.மு.கழகம் கைவிட்டு விட்டதால், அதனோடு தேர்தல் களத்தில் கூட்டு சேருவதற்கு எனக்கோ, தமிழரசுக் கழகத்திற்கோ அரசியல் ரீதியான தடை எதுவும் இல்லை. இதைச் சுட்டிக்காட்டி, சுதந்திரா தி.மு.க. கூட்டணியில் தமிழரசுக் கழகமும் இணைய வேண்டும் என்று என் தலைவர் இராஜாஜி வற்புறுத்தினார்.”

“தேர்தலில் நான் வெற்றிபெற்ற செய்தி கிடைத்தவுடன் முதன்முதலாக இராஜாஜியின் இல்லத்திற்குச் சென்று, அவருக்கு மாலை அணிவித்து நன்றி தெரிவித்தேன். இராஜாஜியின் பிடிவாதமான வற்புறுத்தல் இருந்ததில்லையானால், நான் பார்லிமெண்டரி அரசியலில் புகுந்திருக்கவே மாட்டேன். சட்டமன்றத்திற்கு வெளியிலிருந்தே என் வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும், தமிழினத்திற்கும், என்தாய் நாடான பாரதத்திற்கும் தொடர்ந்து பணியாற்றி வந்திருப்பேன். ஆனால், இராஜாஜி என் மீது வெற்றி கண்டுவிட்டார்.” (ம.பொ.சி. ‘நானறிந்த இராஜாஜி’ பக். 309-312)

தனக்கென ஒரு கொள்கை இல்லாத ம.பொ.சியை, தமிழனத்தின் தலைவராகக் காட்டுவதற்கு முனைவர் அரு.கோபாலன், பா. குப்பன் போன்ற தமிழ்த் தேசியவாதிகளுக்கு எப்படித்தான் மனம் வருகிறதோ தெரியவில்லை.

 1937இல் இராஜாஜி பள்ளிப்பாடங்களில் இந்தியைக் கட்டாயமாகத் திணித்ததால் பெரியார் எதிர்த்தார். தமிழினமே கொந்தளித்து எதிர்த்தது.

1952இல் இராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது அரைநாள் கல்வித்திட்டம் (குலக்கல்வித் திட்டம் - அரைநாள் பள்ளியில் பாடம் பயில வேண்டும். மீதம் அரைநாள் பெற்றோர் தொழிலை செய்யவேண்டும்) என்று உத்தரவிட்டு அதுவும் அது கிராமப்புறப் பள்ளிக்கு மட்டுமே என்பதை நடைமுறைப் படுத்தினார். பார்ப்பனரல்லாத பிள்ளைகளின் எதிர்காலமே பாழடிக்கப்படுகிறது என்ற காரணத்தில்தான் பெரியார் எதிர்த்தாரே தவிர, பா. குப்பன் கூறுவது போல் இராஜாஜி தமிழ்ப் பார்ப்பனர் என்பதால் எதிர்க்கப்படவில்லை. அவர் தெலுங்கு பார்ப்பனரே என்பதை நிரூபித்துள்ளேன்.

தமிழ் ஆட்சி மொழி பற்றியும் ம.பொ.சி. மழுப்பலாகவே மேலவையில் பேசினார். 11-3-1954 அன்று மேலவையில் பேசிய ம.பொ.சி “தலைவர் அவர்களே, ஆட்சி மொழிப் பிரச்சினையைப் பற்றி நான் வற்புறுத்திப் பேசுகின்றபோது. உடனடியாகத் தமிழ் மொழியை இந்த இராச்சியத்தின் ஆட்சி மொழியாகச் செய்ய வேண்டுமென்று கூட நான் சொல்லவில்லை. இன்றைய நிலைமையில் சட்டத்திலுள்ள சிக்கல்களையும், நிர்வாகத்திலுள்ள கஷ்டங்களையும் நான் அறிகின்றேன்”. என்று இராஜாஜிக்கு ஒத்தூதும் தன்மையிலே பேசினார். “இந்தியா முழுவதற்கும் ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தி மொழியைத்தான் தேசிய மொழியாகக் கொண்டு வர வேண்டுமென்று நமது அரசியல் அமைப்பில் தெள்ளத் தெளிய விளக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் விடுதலைக்காகப் போரிட்ட வீரர்களில் ஒருவன் என்ற முறையில் நான் இந்தியைத் தேசிய பாஷையாக ஆக்குவதற்கு ஒப்புக் கொள்கிறேன்... தமிழ்மொழி இருக்க வேண்டிய இடங்களை எல்லாம் இன்றைக்கு ஆங்கிலம் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போதுதான், அந்த இடத்தில் இனிமேல் இந்தி உட்கார்ந்து கொண்டு தாய் மொழி மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. அதனால் தேசிய வாதிகளிற் பலரும், இந்தியை எதிர்க்கும் தேசிய எதிர்ப்பு சக்திகளின் கூட்டத்தினிடையே வழுக்கி விழும்படி நேரிட்டு விடுமோ என்று நான் அச்சப்படுகிறேன். ஆகவே தமிழை ஆட்சி மொழியாக ஆக்குவதற்கு வேண்டிய ஏற்பட்டை உடனே எடுத்துக் கொள்ள வேண்டுமென்று நான் அரசாங்கத்திற்கு வற்புறுத்திக் கூற விரும்புகிறேன்” அதே உரையில் மேலும் கூறுகிறார்.

“ஒரு பாட்டாளி ஆங்கிலம் தெரியாது என்பதினால் பாராளுமன்றத்திற்கு வரமுடியவில்லை என்பதை நினைக்கும் போது என் நெஞ்சு துடிக்கிறது. மனம் கொதிப்படைகிறது”.

ம.பொ.சிக்கு ஆங்கிலத்தின் மீது ஏன் அவ்வளவு ஆத்திரம் என்பது உங்களுக்குப் புரிகிறதா? 1946 இல் வடசென்னை பாராளுமன்றத் தொகுதிக்கு ம.பொ.சி மனுப்போட்டிருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலிலும் இவர் பெயர் இருந்தது. பட்டியல் டில்லிக்குச் சென்ற பிறகு ம.பொ.சி பெயர் நீக்கப்பட்டு நரசிம்மராவ் பெயர் வெளியிடப்பட்டது. (‘எனது போராட்டம்’ பக் 356) இதை மனதில் கொண்டுதான் ம.பொ.சி பேரவையில் பேசியுள்ளார். அதே மேலவை உரையில் ம.பொ.சி. மேலும் கூறுகிறார். “ஆங்கிலத்தை உலகப்பொது மொழியாக நாங்கள் ஏற்றுக் கொள்ளத்தயார். இந்தியை இந்திய நாட்டுப் பொது மொழியாகவும் ஏற்றுக் கொள்ளத் தயார். ஆனால் தமிழை இந்த ராச்சியத்தின் ஆட்சி மொழியாகச் செய்தே தீரவேண்டும்” என்கிறார்.

ஆக மும்மொழித் திட்டத்தை ம.பொ.சி. ஏற்றுக் கொண்டார் என்பதே இதன் பொருள்.

அன்றே குலக் கல்வித்திட்டத்தையும் ஆதரித்துப் பேசியுள்ளார்

“கல்வித்திட்டம். இதற்கு எதிராகச் சொல்லப்படும் வாதங்கள் பலர் பேசிப் பேசிப் புளித்துப் போனவைகள். சொல்லிச் சொல்லி சலித்துப் போனவைகள். இருந்தாலும் கூட அதே சான்றுகளை பழைய அத்தாட்சிகளை எடுத்து சிலர் சொல்லுகிறார்கள். ஆனால் உண்மையில் கல்வித் திட்டத்திற்கு முன்பு இருந்த எதிர்ப்பு சக்திகள் தேய்ந்து கொண்டே வருகின்றது. ஆதரவு தான் அமோகமாக வளர்ந்து கொண்டிருந்தது. தேய்பிறை போல நாளுக்கு நாள் தேய்ந்து வரும் எதிர்ப்பை எனது நண்பர் டி.ஜி கிருஷ்ணமூர்த்தி பேசினார். ஆரம்பத்திலிருந்தே அதற்கு ஆதரவு தேடிக் கொண்டு வரும் நான், தற்போது அதற்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அதிக ஆதரவைக் கண்டு உள்ளம் பூரித்து உவகை கொள்கிறேன்” ஆதாரம்: (சட்ட மேலவை விவாதங்கள் பக்கம் 412 - முதல் 420 வரை நாள் 11.3.1954 வரவு - செலவு திட்டத்தின் மீதான உரை)

ம.பொ.சி பேசியதில் ஒரு துளிகூட உண்மை இல்லை. இராஜாஜியை மகிழ்ச்சியடையச் செய்வதற்காக அந்தத் திட்டத்திற்கு ஆதரவு பெருகுவதாக அவர் பொய்யாகப் பேசியுள்ளார். உண்மையில் குலக் கல்விக்கு எதிர்ப்புதான் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ம.பொ.சி பேசிய 20 நாட்களில் மார்ச்சு 31 ஆம் நாள் இராஜாஜி ஆட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது தோற்று ஆட்சியை மூட்டைக் கட்டிக்கொண்டது. காமராசர் 1954 ஏப்ரல் 14 ஆம் நாள் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

காமராசர் ஆட்சிக்கு வந்தவுடனேயே குலக் கல்வித்திட்டத்தை நீக்கினார். அதனால் பெரியார் அவருக்கு ஆதரவு கொடுத்தார்.

வடக்கு எல்லைப் பிரச்சினையை இழுத்தடிக்க இராஜாஜி சூழ்ச்சி செய்தார். இதை கஜபதி நாயகர் கண்டித்தார். 25.2.1954 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பேசிய ஆ.கசபதி நாயகர் “தமிழ்நாட்டுடன் சேர்ந்திருக்க வேண்டிய பகுதிகளாகிய சித்தூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி போன்ற பிராந்தியங்களை ஆந்திர ராஜ்யத்தோடு இந்திய சர்க்கார் சேர்ப்பதற்கு அனுமதித்தது தவறு ஆகும். அதனால் நாட்டில் எழுந்த கேடுகளை, கிளர்ச்சிகளை குழப்பங்களை நீங்கள் எல்லாம் அறிவீர்கள். அந்தப் பிராந்தியங்களில் வசிக்கின்ற பெருபான்மையான தமிழ் மக்களின் கலாச்சாரத்தைப் பாதிக்கின்ற ஒரு பெரிய விஷயத்தைப் பற்றி அந்தச் சபையில் என் நண்பர் திரு விநாயகம் அவர்கள் பேசும்போது, சித்தூர் விஷயம் ஆந்திர சர்க்காரின் பொறுப்பும் அல்ல, சென்னை ராஜ்யசர்க்கரின் பொறுப்பும் அல்ல. அது மத்திய சர்க்காரின் பொறுப்பு! என்று குறிப்பிட்டார்கள். ஆனால் மேன்மை தாங்கிய கவர்னர் பிரான் அவர்களுடைய சொற்பொழிவில் இருந்து என்ன தெரியவருகிறது என்றால் இது மத்திய சர்க்காரின் பொறுப்பு அல்ல. சென்னை ராஜ்ய அரசியலாரும், ஆந்திர ராஜ்ய அரசியலாரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டிய நிலைமையில் இருவர்களுடைய பொறுப்பாகவே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது......

ஆனால் கவர்னர் பிரான் சொல்லுகிறார். எப்போதும் நிர்வாகப் பிரிவுகள் மொழி வழியாகப் பிரிக்கப்பட்ட ஒரு பிரிவாக இருக்க முடியாது என்பதை நாம் எல்லோரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமென்று, மக்களுடைய விருப்பங் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால் ஏன் என்று தான் நான் கேட்கிறேன். இப்பொழுது இருக்கும் எல்லைகளை யார் வகுத்தது? யாரால் இந்த எல்லைகள் பிரிக்கப்பட்டது? இவைகளை யெல்லாம் மொழி வழி பிரிப்பதற்கு என்ன கஷ்டம் இருக்கப் போகிறது என்பது தான் எனக்குத் தெரியவில்லை.”

“ஒரு எல்லையை நீங்களாவே அமைத்துக் கொண்டு அதில் தமிழ்த் தாயகத்தோடு சேர வேண்டிய தமிழ்ப் பிரதேசங்கள் இருந்தாலும் கூட அதைக் கவனிக்காது அந்த இடத்தோடு ஒரு கோட்டைப் போட்டு இதற்கு அப்பாலுள்ள பிராந்தியங்கள் எல்லாம் தெலுங்கு ராஜ்யத்தைச் சேர்ந்தது என்று அறிவித்திருப்பது ரொம்பவும் வருந்தத்தக்க விஷயம் ஆகும்” என்று கண்டித்துப் பேசினார்.(சட்டமேலவை விவாதங்கள் பக் 56-59 நாள் 25-2-54)

ஆனால் வடக்கெல்லைப் போருக்காக தாம் வாழ்வதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்ட ம.பொ.சி, இராஜாஜியின் எல்லைப் பிரச்சினையை இழுத்தடிக்கும் சதித் திட்டத்திற்கு ஆதரவாகவே இருந்தார்.

“மதிப்பிற்குரிய துணைத் தலைவர் அவர்களே! கவுன்சில் முன்புள்ள நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை மனப் பூர்வமாக ஆதரிக்கிறேன். குறிப்பாக சித்தூர் மாவட்டத்திலுள்ள தமிழ்ப் பகுதிகளை இந்த ராஜ்யத்தோடு சேர்ப்பதற்காக இந்தச் சர்க்கார் ஒரு உடன்படிக்கை செய்து கொள்வார்கள் என்பதாக அவ்வுரையின் ஆரம்பத்திலேயே அந்தப் பிராந்தியத்திலுள்ள மக்களுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக, அவ்வுரையை நிகழ்த்திய கவர்னர் அவர்களுக்கும் அதனைத் தயாரித்துள்ள மந்திரிமார்களுக்கும் நான் சித்தூர் மாவட்டத் தமிழர்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆந்திர அரசாங்கத்துடன் நம் சர்க்கார் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தைகள் நடத்தியே ஒரு நேர்மையான முடிவைக் காண வேண்டும் என்பது அபிப்பிராயம். என்னைக் கேட்டால் எல்லைக் கமிஷன் சர்ச்சைக்கே இப்பிரச்சனையை விடாமல், உண்மை இந்தியர்கள் நாம் என்பதை அகில உலகுக்கும் எடுத்துக் காட்டும் முறையில் தமிழர்களும், தெலுங்கர்களும் கூடிப்பேசி இவ்விஷயத்தைத் தீர்த்து கொள்வது தான் சரியானதாகும். இன்றைய தினம் சென்னை ராஜ்ஜியத்திற்கும் சரி, ஆந்திர ராஜ்யத்திற்கும் சரி அறிவும், அனுபவமும், வயதும் முதிர்ந்த இரு பெரியார்கள், இரு அறிஞர்கள், இரு சிறந்த தேசத்தலைவர்கள்தான் முதலமைச்சர்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள். சென்னை முதல்வர் இராஜாஜியும், ஆந்திர முதல்வர் பிரகாசமும் இவர்கள் இருவருமே தேச விடுதலைப் போராட்டத்தில் ஒன்றாக, ஒரே கட்சியில் நின்று போராடி வெற்றி பெற்ற சிறந்த தியாகிகள். ஆகவே ஆந்திர நாட்டுப் பிரதமராகவும், தமிழ்நாட்டுப் பிரதமராகவும் வீற்றிருக்கின்ற இந்த இரு நண்பர்களுமே ஓரிடத்தில் கூடி இப்பிரச்சினைக்கு உடனடியாக ஒரு முடிவைக் காணுவதுதான் சிறந்த வழியாகும்”. (மேலவை விவாதங்கள் பக் 106 நாள் 26.2.1954)

முன்பு எல்லைக் கமிஷன் வேண்டுமென்று விநாயகம் மூலம் தீர்மானத்தைக் கொடுத்து நான்தான் அதைச் சட் முன் வடிவில் சேர்த்தேன் என்றார். (ம.பொ.சி ‘எனது போராட்டம்’ பக் 673). ஆனால் இப்போது எல்லைக் கமிஷனுக்கே விட வேண்டாம் என்கிறார்.

ஏனென்றால் ஆளுநர் உரையில் அப்படி உள்ளது; அதற்காக இராஜாஜிக்குப் பக்கமேளம் வாசித்தார். இதனால் வந்த விளைவு பல முறை பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 1956 இல் தீர்ந்திருக்க வேண்டிய வடக்கெல்லை தீராமல், பவுண்டரி கமிஷன் அனுப்பு என்று நான்காண்டுக் காலம் போராட்டம் நடத்தினார். இராஜாஜி, ம.பொ.சி கூட்டுறவால் காலம் கடந்ததுதான் மிச்சம்.

வடக்கெல்லைப் போராட்டத்திலும், தெற்கெல்லைப் போராட்டத்திலும், மொழிவாரி மாநில அமைப்பிலும், தமிழ் ஆட்சி மொழியாக்குவதிலும், எதிலுமே ம.பொ.சிக்கு ஆதரவாக இராஜாஜி இல்லை. தட்சிண பிரதேசத்திட்டத்தை ம.பொ.சி. எதிர்த்தார்; இராஜாஜி ஆதரித்தார். மொழி வாரி மாநிலப் பிரிவினை கேட்பவர்கள் “காட்டுமிராண்டிகள்” என்று இராஜாஜி பேசினார். 5.11.1953இல் நடைபெற்ற வடக்கெல்லை மீட்பு மாநாட்டிற்கு “மாநாடு வெற்றி பெறக் கோரி” பெரியார் ஈ.வெ.ரா. ராஜா சர்.முத்தையா செட்டியார் ஆகியோர் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தனர். (கோல்டன் நா.சுப்பிரமணியன் தமிழக வடக் கெல்லைப் போராட்டமும் தணிகை மீட்சியும். பக் 48, ம.பொ.சியின் செங்கோல் 11-1-1953)

 9-2-1953இல் நகரில் நடைபெற்ற தமிழர் மாநாட்டுக்கு திருவாளர்கள் ஈ.வெ.ரா, கோவை ஜி.டி.நாயுடு, செட்டி நாட்டரசர், டாக்டர் மு.வ., திருமதி மரகதம் சந்திரசேகர் முதலிய பல தலைவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தனர்.(கோல்டன் நா.சுப்பிரமணியன் தமிழக வடக்கெல்லைப் போராட்டமும் தணிகை மீட்சியும், பக் 55 ம.பொ.சியின் செங்கோல் 15-2-53)

ஆக, பெரியார் வடக்கெல்லைப் போராட்டத்திற்கு எதிர்ப்பாக இருந்தார் என்று கூறுவது தவறே ஆகும். ம.பொ.சி.யின் எந்தக் கொள்கைக்கும் ஒத்துவராத இராஜாஜியை ம.பொ.சி ஏன் தலைவராக ஏற்றுக் கொண்டார் என்பதையும் வடக்கெல்லை, தெற்கெல்லைப் போராட்டத்தை ஆதரித்த, தட்சிணப் பிரதேச திட்டத்தை எதிர்த்த ம.பொ.சிக்கு ஒத்த கொள்கையுடைய பெரியாரை ஏன் எதிர்த்தார் என்பதையும், அடிக்கடி இராஜாஜி வீட்டுக்குப் போய் அவரைப் பார்த்து வரும் ம.பொ.சி. இராஜாஜி தெலுங்குப் பார்ப்பனர் என்பதை ஏன் மறைத்தார் என்பதையும், இராஜாஜி தமிழ்ப் பார்ப்பனர்; அதனால்தான் பெரியார் எதிர்த்து வந்தார் எனக்கூறித் திரியும் தமிழ் தேசியம் பேசுவோர் மற்றும் ம.பொ.சியின் பற்றாளர்கள் தான் விளக்க வேண்டும்.

(தொடரும் 

- வாலாசா வல்லவன்

Pin It

சங்க காலப் புலவர்களின் இயல்பும் அதன் வரலாற்றுப் பயனும்

       சங்ககாலப் புலவர்களும் சரி, பாணர்களும் சரி வேந்தன் இருக்குமிடம் சென்று, அவனை நேரடியாகப் புகழ்ந்து பாடி பரிசுகள் பெற்று வருவதே சங்ககால வழக்கமாக இருந்து வந்துள்ளது. இதனால் தங்கள் காலகட்டத்துக்கு முந்தைய புரவலர்களைப் பாடும் பழக்கம் அவர்களிடத்தில் இருக்கவில்லை. புறப் பாடல்களில் மட்டுமின்றி அகப்பாடல்களிலும் இதே நிலை தான் இருந்து வந்துள்ளது. முந்தைய காலகட்டப் புரவலர்களை மட்டுமல்ல, முந்தைய காலகட்ட நிகழ்வுகளையும் அவர்கள் பெரும்பாலும் பாடுவதில்லை. புரவலர்களை நேரடியாக அவர்களின் இடத்திற்கே சென்று சந்த்தித்து அவர்களிடம் நேரடியாகத் தங்கள் புகழ்ந்துரைகளைப் பாடல்களாகப் பாடிப் பரிசில்பெறுவது என்பது பாணர், புலவர்களின் மிகப் பழமையான, தொன்று தொட்டு இருந்து வருகிற ஒரு மரபாகும். அதனால் தங்கள் காலத்துக்கு முந்தையவர்களை, இறந்து மறைந்து போன பழைய தலைமுறைப் புரவலர்களை, தங்கள் காலகட்டத்துக்கும் முந்தைய, பண்டைய காலகட்டத்துக்குரியவர்களை பாடும் பழக்கம் என்பது சங்ககாலப் புலவர்களிடம் இருக்கவில்லை.

       இதனால் நிகழ்காலப் புரவலர்களையும், நிகழ்கால நிகழ்வுகளையும் மட்டுமே அவர்கள் பாடினர் எனலாம். அதற்குரிய பரிசும் பெற்றனர். அவர்கள் புரவலர்களைப் புகழ்ந்து பாடுவதின் முக்கிய நோக்கம் பரிசு பெறுவதும், அதன் மூலம் தங்கள் வறுமையைப் போக்கிக் கொள்வதுமே ஆகும். சில புலவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும், புகழ் பெறவும், மன்னர்களுக்கு அறிவுரை வழங்கவும் பாடினர். அவர்களும் நிகழ்கால அரசர்களையே, நிகழ்கால வேந்தர்களையே பாடினர். மறைந்தவர்களை, பழைய தலைமுறைகளைச் சேர்ந்தவர்களைப் பாடுவது என்பது இல்லை எனலாம். ஆகையால் சங்ககாலப் புலவர்களால் பாடப்பட்ட புரவலர்களை, அந்தப் புலவர்களின் காலகட்டத்தைச் சார்ந்தவர்கள்தான் என உறுதிப் படுத்த முடியும். ஒரே புலவர் இரு புரவலர்களைப் பாடியிருந்தால், அந்த இரு புரவலர்களும் ஒப்பீட்டளவில் ஒரே காலகட்டத்தைச் சார்ந்தவர்கள் தான் என அறிந்து கொள்ளலாம். அதுபோன்றே ஒரு புரவலரை இரண்டு மூன்று புலவர்கள் பாடியிருந்தால், அந்தப் புலவர்கள் அனைவரும் கிட்டதட்ட ஒரே காலகட்டத்தைச் சார்ந்தவர்கள் தான் என அறிய முடியும். உதாரணமாகக் கபிலர் பாரியிடமும், ஔவையார் அதியமானிடமும், பரணர் செங்குட்டுவனிடமும், அரிசில்கிழார் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையிடமும், நக்கீரர் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனிடமும் நேரடியாகச் சென்று தான் பாடிப் பரிசில் பெற்றார்களே ஒழிய வேறு வழியில் பாடவோ, பரிசில் பெறவோ இல்லை. பொதுவாகச் சங்க காலப் புலவர்கள் பழைய தலைமுறைப் புரவலர்களைப் பாடவில்லை என்பதற்கு மேலும் சில சான்றுகளைக் கீழே காண்போம்.

மாமூலனார்:

       சான்றாக மாமூலனார் என்ற வரலாற்றுப் பெரும்புலவரை எடுத்துக் கொள்வோம். இவர் சேர வேந்தர்களை மட்டுமே பாடினார் மற்ற வேந்தர்களைப் பாடவில்லை. இவர் தனது இளவயதில் உதியஞ் சேரலாதனைப் பாடினார். பின் அவனது மகனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடினார். பின், இந்த நெடுஞ்சேரலாதனுடன் போரிட்ட சோழன் முதல் கரிகாலனைப் பாடினார். ஆனால் இவர் சேர வேந்தர்களில் உதியஞ்சேரலாதனுக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த யாரையும் பாடவில்லை. தனது காலத்திய மகத நாட்டு நந்தர்களின் செல்வ வளம் குறித்துப் பாடியுள்ளார். நந்தர்களுக்குப் பின் மகத ஆட்சிக்கு வந்த மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு குறித்துப் பாடியுள்ளார். மாமூலனார் காலத்தில் நடந்த நிகழ்வுகள் தான், இவர் பாடல்களின் பாடுபொருளாக இருந்தன எனலாம். தனக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த பண்டைய நிகழ்வுகள் குறித்து இவர் எதுவுமே பாடவில்லை.

பரணர்:

    மாமூலனார் முதியவராக இருந்த போது இளையவராக இருந்த, மிக நீண்ட காலம் வாழ்ந்த பரணர் என்ற வரலாற்றுப் பெரும் புலவரை எடுத்துக் கொள்வோம். மிக அதிகமான வரலாற்றுக் குறிப்புகளைத் தந்தவர் இவர். இவர் தனது இளவயதில் மாமூலனார் பாடிய முதல் கரிகாலனைப் பாடியுள்ளார். பின் அவனது மகனான உருவப்பஃறேர் இளஞ்செட் சென்னியைப் பாடியுள்ளார். முதல் கரிகாலனுக்குப் பிந்தைய சேரன் செங்குட்டுவனைப் பாடியுள்ளார். ஆனால் சேரன் செங்குட்டுவனுக்கு முந்தைய மாமூலனரால் பாடப்பட்ட இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனையோ, உதியஞ்சேரலாதனையோ அவர் பாடவில்லை. அதுபோன்றே, முதல் கரிகாலனுக்கு முந்தைய சோழ வேந்தர்களான இளஞ்செட்சென்னியையோ அல்லது பெரும்புட்சென்னியையோ அவர் பாடவில்லை.

    thennattu porkalangal 300பாண்டியர்களில் நம்பி நெடுஞ்செழியனையும் அவனுக்குப் பின் வந்த பசும்பொன் பாண்டியனையும் பாடினாரே ஒழிய அவர்களுக்கு முந்தைய முது குடுமிப் பெருவழுதி மற்றும் கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதி போன்ற பாண்டிய வேந்தர்களைப் பரணர் பாடவில்லை. இவர்களைப் போன்று தான் பெரும்பாலான புலவர்கள் தங்கள் கால கட்ட நிகழ்காலப் புரவலர்களை, நிகழ்கால நிகழ்வுகளை மட்டுமே பாடியுள்ளனர். பரணர் தமது காலத்துக்குச் சற்று முன்பு நடந்த மௌரியப் படையெடுப்பு குறித்துக் கூடப் பாடவில்லை. ஆகவே பொதுவாக நிகழ்கால நிகழ்வுகளை, நிகழ்காலப் புரவலர்களை மட்டுமே சங்க காலப் புலவர்கள் பாடி உள்ளார்கள் என்பது வரலாற்றுக்கு மிகப்பெரிய அளவில் துணை செய்கிறது எனலாம். புலவர்கள் மற்றும் புரவலர்களின் காலத்தை உறுதிசெய்வதற்கு இது மிகப்பெரிய உதவியாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

      பண்டைய நிகழ்வுகளை, பண்டைய புரவலர்களை சங்க காலப் புலவர்கள் பாடாததால், புலவர்களின் பாடல்களில் உள்ள புரவலர்களும், நிகழ்வுகளும் புலவர்களின் காலகட்டமே தான் என முடிவு செய்ய இயலும். புலவர்களின் காலத்தை நிர்ணயித்தால் அதனைக் கொண்டு அவர்கள் பாடிய புரவலர்கள் மற்றும் நிகழ்வுகளின் காலத்தை நம்மால் நிர்ணயம் செய்ய முடியும் என்ற முடிவு நமது சங்க கால வரலாற்றுக்கும், அதன் கால நிர்ணயத்துக்கும் பெருந்துணை புரிகிறது எனலாம். அந்த வகையில்தான் மாமூலனாரின் காலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது கிடைத்துள்ள புகளூர் கல்வெட்டு, அசோகரின் கல்வெட்டுக்கள், சம்பைக் கல்வெட்டு, காரவேலன் கல்வெட்டு போன்றவைகளின் காலத்தை, நமது சங்க கால இலக்கியக் குறிப்புகளைக் கொண்டு கணிக்கப்பட்ட கால அளவோடு பொருத்திப் பார்த்து, நமது கணிப்பு இறுதி செய்யப்பட்டுள்ளது. இறுதியாகக் கல்வெட்டுக்கள், இலக்கியக் கணக்கீடுகள், தொல்லியல் ஆய்வுகள், நாணயங்கள் முதலிய பல துறைகளின் காலக்கணிப்புகளும் இணைக்கப்பட்டுக் கால நிர்ணயம் வலுப்படுத்தப் பட்டுள்ளது. 

மாமூலனார் பாடல்கள்:      

       பொதுவாகப் பெரும்பாலான சங்ககாலப் புலவர்கள் தங்கள் காலகட்ட நிகழ்கால நிகழ்வுகளை மட்டுமே பாடுபொருளாகக் கொண்டு பாடல்களை இயற்றி உள்ளனர் எனவும், வரலாற்றுக் கண்ணொட்டத்தில் இது மிகுந்த பலன் தரக்கூடிய ஒன்று எனவும் முன்பே பார்த்தோம். ஒரு சில புலவர்கள் ஆட்சியாளர்களின் இயற் பெயரைக் குறிப்பிடாமல் அவர்களின் குலப்பெயரை அல்லது வம்சப்பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளனர்; ஓரிரு ஆட்சியாளர்களை மட்டுமே பாடியுள்ளனர். இவை வரலாற்றுக் காலகட்டத்தை நிர்ணயிப்பதில் குழப்பத்தைத் தருபவனாக உள்ளன. எனினும் சங்ககாலப் பாடல்களை எழுதிய புலவர்கள், அவர்களால் பாடப்பட்ட புரவலர்கள் குறித்த ஆழ்ந்த ஆய்வு இக்குழப்பங்களைக் கடந்து தெளிவுபெற உதவுகிறது எனலாம்.

     முதலில் ஓரளவு துல்லியமான காலத்தை நிர்ணயிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் கொண்ட மாமூலனாரின் ஒருசில சங்கப் பாடல்களைக் காண்போம். இவர் பாடல்கள் மொத்தம் 30 ஆகும். அகநானூற்றில் 27 பாடல்களும், நற்றினையில் இரு பாடல்களும், குறுந்தொகையில் ஒரு பாடலும் பாடியுள்ளார். புறநானூற்றில் இவர் பாடல் எதுவும் இல்லை. மாமூலனார் தனது பாடல் ஒன்றில்

  " பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்

   சீர்மிகு பாடலிக் குழிஇக், கங்கை

   நீர்முதற் கரந்த நிதியம் கொல்லோ! "   (அகம் - 265) என்கிறார்.

     மகதத்தை ஆண்ட நந்தர்கள் பெரும் புகழை உடையவர்களாகவும், பெரும் படை உடையவர்களாகவும் இருந்ததோடு, மிகப் பெரிய அளவிலான செல்வத்தையும் கொண்டிருந்தனர் என்கிறார். நந்தர்கள் காலம் கி.மு.4 ஆம் நூற்றாண்டு ஆகும். நந்தர்கள் குறித்துப் பேசிய அவர், தனது வேறு இரு சங்கப் பாடல்களில் நந்தர்களுக்குப் பின், மகத ஆட்சிக்கு வந்த மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு குறித்து,

      “தொல்மூ தாலத்து அரும்பணைப் பொதியில்

   இன் இசை முரசம் கடிப்பித்து இரங்கத்                            

     தெம்முனை சிதைத்த ஞான்றை; மோகூர்,

   பணியா மையின், பகைதலை வந்த

     மாகெழு தானை வம்ப மோரியர்

     புனைதேர் நேமி உருளிய குறைத்த"  (அகம் - 251)    எனவும்

                                        

     "முரண்மிகு வடுகர் முன்னுற, மோரியர்

     தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு

     விண்ணுற ஓங்கிய பனிஇருங் குன்றத்து,

     எண்கதிர்த் திகிரி உருளிய குறைத்த " (அகம் - 281)    எனவும்

          பாடியுள்ளார். அதில் அகம் 251ஆம் பாடலில், ‘தெம்முனை சிதைத்த ஞான்றை’ என்கிறார் மாமூலனார். தெம்முனை என்றால் போர்க்களம், பகைமுகம் எனவும், சிதைத்த என்றால் அழித்தல் எனவும்பொருள் தருகிறது கழகத்தமிழ் அகராதி. இதன்படி போர்க்களமான வடதமிழகம் மௌரியப் படையெடுப்பால் அழிந்து கொண்டிருந்த போது, சிற்றரசர்களான மோகூர் பழையன் போன்ற, தமிழரசுகளின் எல்லைக் காவல் படைத் தலைவர்கள், அதனைத்தடுத்து நிறுத்தி, மௌரியப்படைக்குப் பணியாது எதிர்த்து நின்றனர். அதனால் மோகூர் பழையன் போன்ற தமிழக எல்லைகாவல் படைத் தலைவர்களின் எதிர்ப்பை முறியடித்து வெற்றிபெற, வடுகர்கள் வழிகாட்ட, வம்ப மோரியர்கள் (மோரியர் என்பது மௌரியர் என்பதன் பிராகிருதச் சொல்லாடல் ஆகும்), மேற்குமலைத் தொடர்ச்சியில் உள்ள பாறைக் குன்றுகளை வெட்டித் தகர்த்து, பாதையமைத்து, பெரும்படை கொண்டு தமிழகத்தை நோக்கி படையெடுத்து வந்தனர் என்கிறார் மாமூலனார்.

      அகம் 251ஆம் பாடலில் மாமூலனார், நந்தர்களின் செல்வ வளம் குறித்து, “நந்தன் வெறுக்கை எய்தினும்”(நந்தர்களின் செல்வத்தைப் பெறினும்), எனக் குறிப்பிட்டுவிட்டு, மௌரியர்களைப் பற்றிய அம்முதல் பாடலில் அவர்களை “வம்பமோரியர்” எனக்குறிப்பிடுகிறார். இப்பாடல் மௌரியர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வந்தபோது பாடிய முதல் பாடல் ஆகும். நந்தர்கள் வீழ்ச்சியடைந்து விட்டார்கள் என்பதை மாமூலனார் முன்பே அறிந்திருப்பார் எனினும், அதற்குப்பின் ஆட்சிக்கு வந்த புதியவர்கள் யார் என்பதை, மௌரியர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தபோது தான் அவர் அறிந்திருப்பார் போல் தெரிகிறது. அதனால் தான் பழையவர் களான நந்தர்களுக்குப் பின் புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களைக் குறிப்பிடும் போது அவர்களைப் புதியவர்கள் என்கிற பொருளில் வம்பமோரியர் என்கிறார். அதேசமயம் மௌரியர்கள் குறித்த இரண்டாவது பாடலான அகம் 281ல் வம்ப என்பதை விடுத்து மோரியர் என்றே மாமூலனார் குறிப்பிடுகிறார்.

இதர புலவர்கள்:

      மாமூலனார் தவிர வேறுசில சங்கக் புலவர்களும், மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு குறித்துப் பாடியுள்ளனர். வேங்கட மலைத் தலைவன் ஆதனுங்கனைப் பாடவந்த கள்ளில் ஆத்திரையனார்,

    "விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்        

    திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த"(புறம் - 175)  என்கிறார்.                          

உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் தனது அகப் பாடலில், காதலன் கடந்து சென்ற பாதை குறித்து,

    "விண்பொரு நெடுங்குடை இயல்தேர் மோரியர்

    பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த(அகம் - 69)  என்கிறார்.

        இவர்களின் இச்சங்கப் பாடல்களும், மௌரியர்கள் தங்களின்  தேர்படை முதலான பெரும்படைகளைக் கொண்டு வர மலைக்குன்றுகளை வெட்டிப் பாதையமைத்தனர் என்பதைக் குறிப்பிடுகின்றன. எனவே மாமூலனார் மற்றும் இதர சங்கப் புலவர்களின் பாடல்கள், வடுகர்கள் வழிகாட்ட மௌரியர்கள் பெரும்படைகொண்டு தமிழகத்தைத் தாக்கினர் என்பதை உறுதி செய்கின்றன.                                                        

மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு :

       நந்தர்களை அகற்றிய பின், மகதத்தில் ஆட்சி ஏற்ற மௌரியர்கள் வட இந்தியாவின் பெரும்பகுதியைக் கைப்பற்றிய பின் தென் இந்தியா மீது படை எடுத்ததும், இன்றைய கர்நாடகம் வரை அவர்கள் தங்கள் படையெடுப்பை நடத்தியதும் குறித்து வரலாறு பேசுகிறது. ஆனால் மௌரியர்கள், வடுகர்கள் துணையோடு தமிழகத்தைத் தங்கள் பெரும்படை கொண்டு தாக்கினர் என்கிற, மேலே உள்ள சங்கப் பாடல்கள் தரும் நிகழ்வுகள் குறித்து வரலாற்றில் செய்திகள் எதுவும் இல்லை. இப்படை எடுப்பு நடந்த காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கம் ஆகும். மௌரியர்களின் இந்தத் தமிழகப் படையெடுப்பு, சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்பவனின் தலைமையில் தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகளால் முறியடிக்கப்பட்டது. இவன் குறித்தும் இப்போர் குறித்தும் ஊன்பொதி பசுங்குடையாரும், இடையன்சேந்தன் கொற்றனாரும், பாவைக் கொட்டிலாரும் பாடியுள்ளனர்-(1).

கே. ஏ. நீலகண்ட சாத்திரி:

    மாமூலனாரின் சங்கப்பாடல்கள் குறித்து கே. ஏ. நீலகண்ட சாத்திரி அவர்கள், “மாமூலனார் கூறும் நிகழ்ச்சிகள் அசோகன் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நடைபெற்றிருக்கக் கூடும் என்று நாம் கூறலாம்” எனவும் ‘வம்ப’ என்ற சொல்லுக்குரிய ‘புதிய’ என்பதன்படி, “மாமூலனார் தமது பாடலை இயற்றிய காலத்தில் மௌரியர்கள் தென்னாட்டிற்கு வந்தது அண்மையில் நடந்த நிகழ்ச்சியாய் இருந்திருக்கலாம்” எனவும் மாமூலனாரின் கூற்று நம்பத்தகுந்தவை எனவும் குறிப்பிடுகிறார்-(2). வரலாற்று ஆய்வாளர் ஆர். எஸ். சர்மா அவர்கள் தனது நூலில், “நந்தர்கள் மிகவும் செல்வச் செழிப்பில் செழித்தனர். மிகவும் வலிமை வாய்ந்தவர்களாய் விளங்கினர்” என்கிறார்-(3). இக்கூற்று மாமூலனார் 2300 வருடங்களுக்கு முன்பு கூறியதோடு ஒத்துப்போகிறது.

டி.டி. கோசாம்பி:

          மௌரியர்களின் தமிழகப்படையெடுப்பு குறித்து டி.டி. கோசாம்பி அவர்கள், “அசோகரோ, அவரது தந்தையோ போர் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமலேயே மைசூர் அவர்கள் வசமானது. பண்டைத்தமிழ்க் கவிதை இலக்கியம் குறிப்பிடும் வம்பமோரியர் என்பது, திருப்பித் துரத்தியடிக்கப்படும் முன்போ அல்லது தம் தேர்களால் கடக்க முடியாத ஒரு மலையால் தடுத்து நிறுத்தப்படும் முன்போ உள்ளபடியே மதுரையையே அடைந்திருந்த ஒரு மௌரியப்படையையே குறிப்பிடுவதாகலாம்” என்கிறார்-(4). மேலே தந்த சங்கப்பாடல்கள், மௌரியர்களின் தேர் முதலான பெரும் படையைக் கொண்டு செல்வதற்குத்தான் மலையை வெட்டி மௌரியர்கள் பாதை அமைத்தனர் என்கின்றன. ஆதலால் மௌரியப்படை மலையால் தடுத்து நிறுத்தப்படவில்லை, அவை தமிழர்களால் துரத்தியடிக்கப்பட்டது. ஆதலால், மௌரியர்கள் தமிழகம்வரை படையெடுத்தனர் என்பதையும் ஆனால் அவர்கள் தமிழரசுகளால் துரத்தியடிக்கப்பட்டனர் என்பதையும் டி.டி. கோசாம்பி அவர்களின் மேற்கண்ட சொற்களும் உறுதிப்படுத்துகின்றன.

மகத அரசில் ஆட்சி மாற்றம்:     

       ஆகவே மாமூலனாரின் பாடல்கள் மகதஅரசில் கி.மு. 4ஆம் நூற்றாண்டில் நடந்த ஆட்சி மாற்றங்கள் குறித்தும், நந்தர்களுக்குப் பின்வந்த மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு குறித்தும் பேசுகிறது. மாமூலனார் நந்தர்களைப் பற்றி அறிந்திருப்பதும், மௌரியர்களைப் புதியவர்கள் எனக் குறிப்பிடுவதும் அதே காலகட்டத்தில் அவர் வாழ்ந்து வந்தவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. கே. ஏ. நீலகண்ட சாத்திரி அவர்களின் கூற்றும் இதனை வலியுறுத்துகிறது. ஆகவே மகத அரசில் நடந்த இந்த ஆட்சி மாற்றங்களின் ஆண்டுகள் மாமூலனாரின் காலத்தை நிணயிக்கப் பயன்படும் எனலாம். கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர் கி.மு. 327 வாக்கில் இந்தியாவின் மீது படையெடுத்தான். அவன் கி.மு. 325 வாக்கில் இந்தியாவிலிருந்து திரும்பினான். கி.மு. 323இல் பாபிலோனியாவில் இறந்தான். அதன்பின் சந்தரகுப்த மௌரியன் நந்தர்களின் மகத ஆட்சியை வீழ்த்தி விட்டு கி.மு. 321 வாக்கில் மகத ஆட்சியைக் கைப்பற்றினான். இந்த ஆண்டுகள் ஆதார பூர்வமான உலக வரலாற்றுக்காலத்தோடு இணைக்கப்பட்ட ஆண்டுகள். இந்த ஆண்டுகளைக் கொண்டு தமிழக வரலாற்றுக்காலத்தை நிர்ணயிப்பதே சரியானதும் முறையானதும் ஆகும். அதனைத்தான் நாம் செய்துள்ளோம்.

     நந்தர்கள் சுமார் கி.மு. 365 முதல் கி.மு. 321 வரை சுமார் 44 ஆண்டுகள் மட்டுமே ஆண்டனர். அவர்களில் மகாபத்ம நந்தன் மிகவும் புகழ் பெற்றவனாக இருந்தான். அவனால் நந்தர்களின் புகழ் இந்தியா முழுவதும் பரவி இருந்தது. நந்தர்களின் புகழ் இந்தியா முழுவதும் பரவி இருந்த காலத்தில் இயற்றப்பட்டது தான் மாமூலனாரின் அகம் 265ஆம் பாடலாகும். கி.மு. 321இல் நந்தர்கள் வீழ்ச்சி அடைந்தனர் என்பதால், அவர்களின் புகழும் அத்தோடு வீழ்ச்சி அடைந்தது. அதற்கு முன்னர் கி.மு. 330 வாக்கில் தனது இளைய வயதில் மாமூலனார் நந்தர்களைப் புகழ்ந்து பாடிய பாடல்தான் அகம் 265ஆம் பாடலாகும். மௌரியர் ஆட்சியேற்ற பின்னரும் மாமூலனார் மிக நீண்ட காலம் வாழ்ந்தார். ஆகவே அப்பாடலைப் பாடியபோது அவரது வயது 25 எனக் கொள்வோம் எனில் அவர் கி.மு. 355 வாக்கில் பிறந்தார் என முடிவு செய்யலாம்.

சோழர்களின் முதன்மை:

      மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு குறித்த மாமூலனார் குறிப்புகளுக்கு, அசோகன் கல்வெட்டுகளில் ஆதாரங்கள் உள்ளன. மெகத்தனிசு, சாணக்கியர் குறிப்புகளில் இருந்தும் அசோகரின் கல்வெட்டுகளில் இருந்தும் தமிழக வரலாற்றில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வை அறிய முடிகிறது. கி.மு. 325 முதல் கி.மு. 300 வரையான காலகட்டத்தில், அதாவது கி.மு. 4ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தமிழக மூவேந்தர்களில் முதன்மையான அரசாகவும் ஒரே அரசாகவும் குறிக்கப்படுவது பாண்டிய அரசு தான். ஆனால் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பொறிக்கப்பட்ட, அசோகன் கல்வெட்டுகளில் முதன்மை பெற்றிருப்பது சோழ அரசு தான். பாண்டிய அரசு அசோகனின் இரு கல்வெட்டுகளிலும் இரண்டாவது இடத்தில் தான் குறிக்கப்பட்டுள்ளது. அரை நூற்றாண்டுக்குள் மௌரிய அரசியலில் சோழர்கள் முதன்மை பெற்று, பாண்டியர்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்ட நிகழ்வே மௌரியர்களின் தமிழகப் படையெடுப்புக்கான ஆதாரமாகும். இதனை விரிவாகக் காண்போம்.

பெரும்தோல்வி:

        சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக்காலம் கி.மு. 321 முதல் கி.மு. 297 வரையான 24 வருடங்கள் ஆகும். அவர் மகன் பிந்துசாரரின் ஆட்சிக்காலம் கி.மு. 297 முதல் கி.மு. 272 வரையான 25 வருடங்கள் ஆகும். சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக்காலத்திலேயே, கி.மு. 300க்குப்பின் தக்காணத்தைக் கைப்பற்றும் பணி தொடங்கிவிடுகிறது. ஆனால் பிந்துசாரரின் ஆட்சிக்காலத்தில் அதாவது கி.மு. 297க்குப் பிறகு அது தீவிரப்படுத்தப்படுகிறது. இதுகுறித்து கா. அப்பாதுரை அவர்கள் முனைவர் எம். இராசமாணிக்கனார் அவர்கள் சங்க இலக்கியங்களில் இருந்து திரட்டிய தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு, ஒரு விரிவான விளக்கத்தை வழங்குகிறார்-(5).

       தக்காணத்தையும் தமிழகத்தையும் கைப்பற்றும் மௌரியர்களின் படையெடுப்பு கிட்டத்தட்ட கி.மு. 297 முதல் கி.மு. 288 வரையான காலங்களில் மிகத் தீவிரத்தோடும், மௌரியப் பேரரசின் முழு ஆற்றலோடும் நடைபெற்றது. தக்காணத்தின் பல பகுதிகள் பிடிக்கப்பட்டன. ஆனல் தமிழகத்தை பொருத்தவரை அப்படையெடுப்பு ஒரு பெரும் தோல்வியில் முடிந்தது என்பதுதான் வரலாறு. சங்க இலக்கியங்கள் தரும் செய்தியும் அதுவேயாகும். பாரசீகப்பேரரசு கி.மு. 5ஆம் நூற்றாண்டில் கிரேக்க அரசுகளைக் கைப்பற்ற முயன்றபோது அம்முயற்சி பெருந்தோல்வியில் முடிந்தது போன்ற நிலையே மௌரியப் பேரரசின் தமிழகப் படையெடுப்புக்கும் ஏற்பட்டது. பின் பிந்துசாரரின் கடைசி ஆண்டுகளில் தமிழரசுகளோடு நட்புறவு ஏற்படுத்தப்பட்டது.

(தொடரும்)

பார்வை:

1.ஊன்பொதி பசுங்குடையார் பாடிய புறநானூற்றுப் பாடல்: 378; இடையன் சேந்தன் கொற்றனார் பாடிய அகநானூற்றுப்பாடல்: 375; பாவைக்கொட்டிலார் பாடிய அகநானூற்றுப் பாடல்: 336.

2.நீலகண்ட சாத்திரி, சோழர்கள், தமிழில் கே.வி. இராமன், புத்தகம்-1, நவம்பர்-2009, பக்: 28, 37.

3.பண்டைக்கால இந்திய, ஆர். எஸ். சர்மா, தமிழில் மாஜினி, NCBH வெளியீடு, ஜூன்-2004, பக்:180.      

4. டி.டி. கோசாம்பி, ‘இந்திய வரலாறு ஓர் அறிமுகம்’ தமிழில் சிங்கராயர், அக்டோபர்- 2011, விடியல் பதிப்பகம், பக்: 271.

5.தென்னாட்டுப் போர்க்களங்கள், கா. அப்பாதுரை, ஜூலை-2003, பக்:57-63.

- கணியன் பாலன், ஈரோடு

Pin It

பெரியார் தமிழினப் பகைவரா? - பகுதி 2

நீதிக் கட்சி ஆட்சியில் ஆதி திராவிடர்கள் எவரும் அமைச்சராக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை ம.பொ.சி.யின் ‘தமிழ்நாட்டில் பிற மொழியினர்’ என்ற நூலிலிருந்து மேற்கோள் கொடுத்துள்ளார் வழக்குரைஞர் பா.குப்பன் (பக்கம் -81). இது வழக்கமான குற்றச்சாட்டுதான். இதே மேற்கோளை பழ. நெடுமாறன் தனது ‘உருவாகாத இந்திய தேசியமும் உருவான இந்துப் பாசிசமும்’ என்ற நூலிலும் கொடுத்துள்ளார். இவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். 1919இல் இயற்றப்பட்ட மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டப்படி நடைபெற்றது நீதிக் கட்சி ஆட்சி. அது இரட்டை ஆட்சி முறையாகும். நீதிக் கட்சி ஆட்சிக் காலம் முழுவதும் ஒரு முதலமைச்சர், 2 அமைச்சர்கள் என மொத்தம் 3 பேர் மட்டுமே அமைச்சர்களாக இருந்தனர். 1935 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டப்படி, இரட்டை ஆட்சி முறை நீங்கி விட்டது. முழுப் பொறுப்பும் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களுக்கே இருந்தது.

panagal arasar1937 இல் அமைந்த இராஜாஜி ஆட்சியில் முதலமைச்சர் உட்பட 10 பேர் அமைச்சர்களாக இருந்தனர். 10 அமைச்சர்களில் தாழ்த்தப்பட்டவர் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் அல்ல. 10 அமைச்சர்களில் முதலமைச்சர் இராஜாஜி, டி.பிரகாசம், டாக்டர் டி.எஸ்.எஸ்.இராஜன், வி.வி.கிரி ஆகிய 4 பார்ப்பனர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள். சபாநாயகரும் புலுசு சாம்பமூர்த்தி என்ற ஆந்திரப் பார்ப்பனரே. இது நியாயமா என்பதை ம.பொ.சி. அன்பர்கள்தான் கூற வேண்டும். இராஜாஜி ஆட்சியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த வி.ஐ.முனிசாமிப் பிள்ளை என்பவரை பொம்மையாக ஆட்சியில் அமர வைத்துக் கொண்டு ஆதிதிராவிடர்களுக்கு எதிராக பல காரியங்களை இராஜாஜி செய்தாரே, அது நியாயமா?

15.8.1938 அன்று எம்.சி.ராஜா ஆதிதிராவிடர்கள் கோயில் நுழைவு மசோதா ஒன்றை சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். “உடனே பிரதம மந்திரியார் எழுந்து தடுமாற்றத்துடன், தர்க்கதியற்ற விதமாய், ஒருவரும் நம்ப முடியாத வகையில் அம் மசோதாவை எதிர்த்துப் பேசியது மிக்க ஆச்சரியத்தை விளைவித்தது.... பிறகு முதலமைச்சர் உருக்கமாகப் பேசி இந்த மசோதவை நிறுத்தி வைக்கும்படி எம்.சி.ராஜாவிடம் சொன்னார். அதற்கு எம்.சி.ராஜா பதில் அளிக்கும்போது நான் அவரை (முதலமைச்சரை) நம்பினேன். ஆனால் இப்பொழுது அவர் கூறுவதைச் செவியுற்றுக் கேளுங்கள்! இம் மசோதாவை வாபாஸ் பெற்றுக் கொள்ளவும், சபையிலே இவ்விஷயம் விவாதிக்கப்படாமலிருக்கவும் வேண்டிய முயற்சிகளை இப்பொழுது செய்கிறார் இப்பிரதம மந்திரியார். இது அவருக்கே நியாயமாகத் தோன்றுகிறதா? நான் இவ்விஷயத்தில் பெரிதும் ஏமாற்றமடைந்தேன்” என்று சட்டசபையிலேயே பேசினார்.

முதலமைச்சர் இராஜாஜி 45 நிமிடங்கள் இம் மசோதாவை எதிர்த்துப் பேசி, காங்கிரஸ் கட்சியினர் யாரும் இதற்கு வாக்களிக்கக் கூடாது என்று கூறினார். வாக்கெடுப்பில் எம்.சி.ராஜாவின் ஆதி திராவிடர் கோயில் நுழைவு மசோதாவுக்கு ஆதரவாக 24 வாக்குகளும் எதிராக 130 வாக்குகளும் கிடைத்தன. (ஆதாரம்: ஆரிய ஆட்சி, பதிப்பாசிரியர் வாலாசா வல்லவன், பக் - 50 முதல் 56 வரை.) நீதிக் கட்சி ஆட்சியில் ஆதிதிராவிடருக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்றாலும் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை மறுக்கவில்லை. ஆனால் இராஜாஜி ஆட்சியில் பொம்மையாக ஓர் அமைச்சரை உட்கார வைத்துக் கொண்டு அவரை அந்தச் சமூகத்துக்கு எதிராக வாக்களிக்க வைத்தார் இராஜாஜி. நீதிக்கட்சி ஆட்சியில் மாபெரும் சமூகப் புரட்சிக்கு வித்திடப்பட்டது. இதை வெறும் தெலுங்கர்கள் ஆதிக்கம் செலுத்திய ஆட்சி என்று புறந்தள்ளி விட முடியாது.

நீதிக்கட்சி ஆட்சியைத் தெலுங்கர்கள் ஆதிக்கம் மிகுந்த ஆட்சி என்று குறை சொல்லும் தமிழ்த் தேசியர்கள், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இராஜாஜி முதல்வராக இருந்தபோது 1937, 1952 ஆண்டுகளில் என்ன நிலைமை என்பதை மூடி மறைக்கின்றனர்.

1937 இல் இராஜாஜி முதல்வராக இருந்தபோது, அவர் உள்பட 10 பேர் அமைச்சர்களாக இருந்தார்கள். அதில் டி.பிரகாசம், வி.வி.கிரி, பெசவாட கோபால ரெட்டி ஆகிய மூவரும் ஆந்திராவைச் சேர்ந்த அமைச்சர்கள். ப.சுப்பராயன், வி.ஐ.முனிசாமிப் பிள்ளை, எஸ்.இராமநாதன், டி.எஸ்.எஸ்.இராஜன் என்கிற பார்ப்பனர் ஆக நால்வர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர்களாக இருந்தார்கள். மற்ற அமைச்சர்கள் கேரளாவையும், கன்னடப் பகுதியையும் சேர்ந்தவர்கள். சபாநாயகர் புலுசு சாம்பமூர்த்தி ஒரு ஆந்திரப் பார்ப்பனரே.

1952இல் இராஜாஜி அமைச்சரவையில் 15 பேர் அமைச்சர்களாக இருந்தார்கள். அதில் என்.ரங்கா ரெட்டி, எம்.வி.கிருஷ்ணாராவ், என்.சங்கர ரெட்டி, பட்டாபி ராமராவ், டி.சஞ்சீவய்யா ஆகியோர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். ஆர்.நங்கன்னகவுடா, ஏ.பி.ஏ.ஷட்டி கர்நாடகப் பகுதியைச் சேர்ந்தவர்கள். வெங்கடசாமி நாயுடு தமிழ்த் தேசியவாதிகள் பார்வையில் தெலுங்கர். குட்டி கிருஷ்ணன் நாயர் கேரளாவைச் சேர்ந்தவர். ப.சுப்பராயன், வி.சி.பழனிச்சாமி, எம்.ஏ.மாணிக்கவேலர் (உழைப்பாளர் கட்சியைக் கலைத்துவிட்டு வந்ததால் அமைச்சர் பதவி). சண்முக ராஜேஸ்வர சேதுபதி ஆகியோர் தமிழர்கள். 15 பேர் கொண்ட இராஜாஜி அமைச்சரவையில் 4 பேர் மட்டுமே தமிழர்கள். இதையெல்லாம் ம.பொ.சி. எழுதமாட்டார். ஏனெனில் ராஜாஜி அவருடைய குருநாதர். நீதிக் கட்சியைப் பற்றி குறை கூறும் தமிழ்த் தேசியவாதிகள் இனியேனும் உண்மையை உணர்வார்களா?

நீதிக்கட்சி ஆட்சியில் ஆதிதிராவிடர்கள் பெற்ற நன்மைகள்:

பள்ளர், பறையர் என்று இழிவாக உள்ள பெயரை மாற்றி, ஆதி திராவிடர் என்ற பெயரை எங்கள் சமூகத்திற்கு இட்டு அழைக்க வேண்டும் என்று எம்.சி.இராஜா 20.02.1922ல் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். அத்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. அதன் அடிப்படையில் இனி இச்சமூகத்தினரை ஆதிதிராவிடர்கள் என்றே அனைத்து ஆவணங்களிலும் பதிய வேண்டும் என்று அரசாணை எண் 217 சட்டம் (பொது) நாள் 25.03.1902இல் பிறக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.

                ஆதிதிராவிடர் பிள்ளைகளை பொதுப் பள்ளிகளில் கட்டாயமாகச் சேர்க்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. (G.O.No..87 கல்வி நாள் 6.1.1923)

அரசு மானியம் பெறும் பள்ளிகளில் ஆதி திராவிடர் பிள்ளைகளைச் சேர்க்க மறுத்தால் அரசு மானியம் இரத்து செய்யப்படும் என அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. (G.O.NO. 88. கல்வி நாள் 16.1.1923.)

திருச்சி மாவட்ட நிர்வாகம் (Distric Bord) ஆதிதிராவிடர் பிள்ளைகளை தனி இடத்தில் தங்க வைத்து, படிக்க அனுமதி கோரியதை அரசு ஏற்க மறுத்து, ஆதி திராவிடப் பிள்ளைகளையும், மற்ற சாதிப் பிள்ளைகளையும் ஒன்றாகத்தான் படிக்க வைக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது. (G.O.NO. 2015 கல்வி நாள் 11.2.1924.)

தொடக்கப்பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் கட்டத் தொடங்கும்போதே ஆதி திராவிடப் பிள்ளைகள் அணுக முடியுமா? ஏனெனில் கோவில், அக்கிரகாரம் போன்ற இடங்களில் ஆதி திராவிடர் பிள்ளைகளை மற்ற சாதியினர் அனுமதிக்க மறுப்பார்கள் என்பதால், அதை ஆய்ந்து பார்த்து, ஆதி திராவிடர் பிள்ளைகள் வருவதற்குத் தடையில்லாத இடத்தில் பள்ளிக் கட்டிடங்களைக் கட்ட அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. (G.O.NO.2333 நாள் 27-11-1922)

இந்தியாவிலேயே முதன் முதலாக ஆதி திராவிட மாணவர்கள் இலவசமாகத் தங்கிப் படிக்க ஆதி திராவிடர் மாணவர் விடுதி திறக்கப்பட்டது (G.O.NO..2563 நாள் 24.10.1923.). இதைக் கட்டுவதற்கான பணம் முழுவதையும் ஆதி திராவிடர் தலைவர் எம்.சி.ராஜா அவர்களிடமே கொடுத்து கட்டுவித்தார்கள்.

1931க்குள் ஆதி திராவிட மாணவர்களுக்கு மூன்று விடுதிகள் ஏற்படுத்தப்பட்டன. (T.G.Boag ICS. Madras prsidency 1881 - 1931 பக்கம் 132)

ஆதி திராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 1243. நாள் 5.7.1922)

ஆதி திராவிட மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத தேர்வுக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 1241 சட்டம் (கல்வி) நாள் 17.10.1922)

ஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிலையைப் பற்றிய விவரத்தை அரசுக்கு அளிக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 859 நாள் 22.06.1923)

ஆதி திராவிட வகுப்பு மாணவர்களுக்கு நான்காம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொகை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 1568 சட்டம் (கல்வி) நாள் 06.11.1923)

ஆதி திராவிட மாணவர்களுக்கு சில பள்ளிகளில் தனி வகுப்பறைகள் இருந்ததை அரசு கண்டித்தது. ஆதி திராவிட மாணவர்களை அதிக எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளும் கல்வி நிறுவனங்களுக்கு அதிக அளவில் அரசின் பண உதவி அளிக்கப்படும் என்று அரசாணை பிறக்கப்பட்டது. (அரசாணை எண் 205 கல்வி நாள் 11.02.1924)

மருத்துவக் கல்லூரியில் பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பின் தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 866 (பொது) சுகாதாரம் நாள் 17.06.1922)

சிதம்பரத்தில், சாமி சகஜானந்தம் ஆதி திராவிடப் பிள்ளைகளுக்கென 1916இல் ஒரு பள்ளியைத் தொடங்கினார். ஆங்கில அரசிடம் நிலம் கேட்டார். அவர்கள் கொடுக்கவில்லை. அவர் திண்ணைப் பள்ளி மாதிரி நடத்தினார். பனகல் அரசர்தான் 50 ஏக்கர் நிலம் கொடுத்து, அதை நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தி அங்கீகாரம் கொடுத்து, ஆண்டு தோறும் அரசின் நிதியுதவி கிடைக்கவும் வழி செய்தார்.

சென்னையில் எல்.சி.குருசாமி அருந்ததியர்களுக்கு 5 பள்ளிகளைத் தொடங்கினார். அதில் நான்கு இரவுநேரப் பள்ளிகள். ஒன்று பகல்நேரப் பள்ளி. பனகல் எல்.சி. குருசாமியை மேலாளராக இருக்க வைத்து அய்ந்து பள்ளிகளுக்கும் அரசின் நிதி உதவியை எல்.சி. குருசாமியிடமே கொடுத்து வந்தார்.

பனகல் அரசர் காலத்தில்தான் ஆதிதிராவிட மாணவர்கள் 3 பேருக்கு வகுப்புரிமையின் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் இடம் கிடைத்தது. அதேபோல் பொறியியல் மற்றும் வேளாண் கல்லூரியிலும், கால்நடை மருத்துவக் கல்லூரியிலும் இடங்கள் கிடைத்தன. மற்ற பல அரசுப் பணிகளிலும் ஆதிதிராவிடர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆதி திராவிடர்களின் நலனைக் காப்பதில் அவருக்கு நிகர் அவரே. இதுவும் பெரியாரை பனகல் பக்கம் இழுத்துச் சென்றதற்கு மற்றொரு காரணம் ஆகும்.

இந்தியாவில் இருந்த வேறு எந்த மாகாணத்திலும் இல்லாத அளவிற்கு நீதிக் கட்சி ஆட்சியில் ஆதி திராவிடர்களுக்கு பஞ்சமி நிலத்தை வாரி வழங்கியது. நீதிக் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை 1920-21 ஆதி திராவிடர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பஞ்சமி நிலம் 19,251 ஏக்கர் மட்டுமே. ஆனால் நீதிக் கட்சி ஆட்சியில் 1931 வரை கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலம் 3,42,611 ஏக்கர் ஆகும். (ஆதாரம் T.G.Boag I.c.s என்ற சென்னை மாகாண அரசின் புள்ளிவிவர அதிகாரி எழுதிய Madras prsidency 1881 - 1931 என்ற நூல் பக்கம் 132.) மேலும் 1935 மார்ச் 31 வரை ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தின் அளவு 4, 40, 000 ஏக்கராக உயர்ந்துள்ளதை ஜஸ்டிஸ் ஏடு 19.7.1935 இல் சுட்டிக் காட்டியுள்ளது.

கல்வி, சுகாதாரம், பொதுப்பணி போன்ற முக்கிய பணிகளை அப்போது உள்ளாட்சி நிர்வாகங்களே கவனித்து வந்தன. அந்த நிறுவனங்களில் ஆதி திராவிடர் ஒருவரை அரசு நியமனம் மூலம் நிரப்பி அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களித்தது நீதிக் கட்சியே. சென்னை மாகாணத்தில் உள்ளாட்சியில் ஆதி திராவிடர் பிரதிநிதித்துவம் பெற்றிருந்த விவரம்:

justice party dalit

1921 இல் இருந்து 1928க்குள் ஆதி திராவிடர்கள் உள்ளாட்சி நிர்வாகங்களில் 100% நியமனம் செய்யப்பட்டனர். (T.G. Boag ICS Madras prsidency 1881-1931 P No. 134)

இந்தியா முழுவதும் 1928இல் இருந்த தாழ்த்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மாகாணம் வாரியாக:      

வ.எண் மாகாணம் உறுப்பினர் எண்ணிக்கை
1. சென்னை 10
2. பம்பாய் 2
3. வங்காளம் 1
4. அயக்கிய மாகாணம் 1
5. பஞ்சாப் -
6. பீகார் 2
7. மத்திய மாகாணம் 4
8. அஸ்ஸாம் -
9. பர்மா -

(சான்று - எம்.சி. ராஜா வாழ்க்கை வரலாறு எழுத்தும் பேச்சும், ஜெ. சிவசண்முகம் பிள்ளை பக். 35, 36)

இந்தியா முழுவதும் ஆங்கிலேயர்தான் ஆண்டனர். ஆனால் சென்னை மாகாணத்தில் மட்டும் தான் சட்டமன்றத்திற்கு தாழ்த்தப்பட்டவர்கள் 10 பேர் நியமிக்கப்பட்டனர். 1935 அரசியல் சட்டம் வரும்வரை தாழ்த்தப்பட்டவர் நியமனம் மூலம் மட்டுமே பதவி வகித்தனர். அப்போது டெல்லியில் இருந்த சட்டசபைக்குப் பெயர் (MLA) Member of Legislative Assembly. 1928இல் சென்னை சட்டமன்றம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி சட்டசபைக்கு அனுப்பப்பட்ட முதல் தாழ்த்தப்பட்ட உறுப்பினர் எம்.சி.ராஜா தான். நீதிக் கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் ஆட்சியில் தான் அது நிறைவேறியது. அவர் டெல்லி சென்றதால் தான் அகில இந்திய அளவில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஒருங்கிணைக்க முயற்சி செய்தார்.

ஆதி திராவிடர் பொது இடங்களில் புழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று இரட்டைமலை சீனிவாசன் 22.08.1924 இல் சென்னை சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தையும், வீரய்யன் 24.02.1925 இல் கொண்டு வந்த தீர்மானத்தையும் ஏற்றுக் கொண்டு, சத்திரம், சாவடி, அரசு அலுவலங்கள், பொதுச் சாலைகள், பொதுக் கிணறுகள் போன்ற பொதுவான இடங்களில் ஆதி திராவிடர்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று அரசாணையில் (Gasate notification 08.04.1925 part IV) தெரிவிக்கப்பட்டது. இந்த அரசாணையை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய மொழிகளில் வெளியிட்டதோடு, தண்டோரா மூலம் சென்னை மாகாணம் முழுவதும் பொது மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆதி திராவிடர்களுக்கு இருந்த சமூகத் தடைகளை நீக்க வழிவகை செய்தது நீதிக் கட்சியே.

1927 முதலே சுயமரியாதை இயக்கத்தினரும், நீதிக் கட்சியினரும் பல்வேறு கோயில்களில் ஆதி திராவிடர்களை உள்ளே அழைத்துச் சென்று ஆதி திராவிடர்களின் உரிமைகளுக்காகப் போராடினர். (பார்க்க - கோவில் நுழைவுப் போராட்டங்களில் திராவிடர் இயக்கங்களின் பங்களிப்பு - வாலாசா வல்லவன்)

அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்டோருக்கும், மற்ற பார்ப்பனரல்லாதார்களுக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது நீதிக் கட்சி ஆட்சிதான்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளித்து நிறைவேற்றப்பட்ட முதல் அரசாணை எண் 613, நாள் 16.09.1921இல் வெளியிடப்பட்டது.

இரண்டாவது வகுப்புரிமை ஆணை எண் 652, நாள் 15.08.1922இல் பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையின்படி வகுப்புரிமை அடிப்படையில் பணியிடம் நிரப்பப்படுவதை ஆறு மாதத்திற்கு ஒருமுறை உறுதி செய்யும்படி துறைத் தலைவர்கள், உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள் ஆகியோருக்கு ஆணை இடப்பட்டது.

1921 - 22இல் வகுப்புரிமை ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும் பார்ப்பனர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதை நடைமுறைப்படுத்தா வண்ணம் இடையூறு செய்து வந்தனர்.

1924 இல் அரசுப் பணிகளில் வேலைக்கு ஊழியர்களை அமர்த்துவதற்காக ஓர் ஆணையம் உருவாக்கப்பட்டது. ‘Staff Selection board’ என்று அதற்குப் பெயர். அது தான் இப்போது T.N.P.S.C ஆக மாறியுள்ளது. 1925 முதல் அரசாங்க ஆண்டறிக்கைகளில் வகுப்பு வாரியாக அரசு ஊழியர்கள் விவரம் வெளியிடப்பட்டு வந்தது. பனகல் அரசர் ஆட்சிக்காலத்தில் 1927-1926க்குள் ஆதி திராவிடர்கள் காவலர் பணியில் 382 பேரும், தலைமைக் காவலர் பணியில் 20 பேரும், துணை ஆய்வாளர் பணியில் ஒருவரும் அமர்த்தப்பட்டனர். 1935இல் துணைக் கண்காணிப்பாளர் வரை ஆதி திராவிடர் பதவி உயர்வு பெற்றனர். 1927 இல் தான் ஆதி திராவிடர் ஒருவர் இன்ஸ்பெக்டராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். (‘Staff Slection board’ அறிக்கை பக் 120.) அந்த காலகட்டத்தில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஆதி திராவிடர்களை காவல் துறையில் காவலர்களாகக் கூட சேர்த்துக் கொண்டதில்லை என்று எம்.சி.ராஜா 1928இல் மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியுள்ளார். (எம்.சி.ராஜா வாழ்க்கை வரலாறும் எழுத்தும் பேச்சும், ஜெ.சிவசண்முகம் பிள்ளை பக். 42)

 ‘Staff Slection board’இல் 7.2.1925 சி.நடேச முதலியார் கொண்டு வந்த சட்டமன்றத் தீர்மானத்தின்படி கீழ்க்கண்டவாறு இடஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதனால் பார்ப்பனரல்லாதாரிலும், ஆதி திராவிடர்களிலும் அரசு வேலைக்குச் செல்ல முடிந்தது.

                                1. பார்ப்பனரல்லாத இந்துக்கள்  -              40

                                2. பார்ப்பனர்கள்        -              20

                                3. முகமதியர்கள்    -              20

                                4. ஆங்கிலோ இந்தியர், இந்தியக்             கிறித்துவர் -                10

                                5. ஆதி திராவிடர்கள்           -              10

(ஆதாரம்: சென்னை சட்ட மன்ற விவாதக் குறிப்பு நாள் 27 - 8- 1927 பக்கம் 469)

1930இல் இராமநாதபுரம் மாவட்ட கழகத் தலைவராக இருந்த ஊ.அ.பூ. சௌந்தரபாண்டியன் பேருந்து முதலாளிகளுக்கு ஓர் உத்தரவை அனுப்பினர். பேருந்துகளில் ஆதி திராவிடர்களை ஏற்ற மறுத்தால், பேருந்து உரிமங்கள் இரத்து செய்யப்படும் என்று உத்தரவிட்டார். அந்த மாவட்டத்தில் அக்காலத்தில் சுப்பிரமணியம் என்ற பார்ப்பனர் பேருந்தை நடத்தி வந்தார். அவர் பேருந்துப் பயணச் சீட்டுகளிலேயே ஆதி திராவிடர்கள் பேருந்தில் ஏற்றிக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று அச்சடித்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

நீதிக் கட்சி ஆட்சிக்காலத்தில் எதிர்க் கட்சி வரிசையில் இருந்த டாக்டர் சுப்பராயன் 2.11.32 அன்று ஆதி திராவிடர்கள் கோயில் நுழைவு மசோதா ஒன்றைக் கொண்டு வந்தார். அந்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்வதற்கு முன்பே பெரியார் அதை ஆதரித்து, குடி அரசில் ஒரு தலையங்கம் எழுதினார். அதில் நீதிக் கட்சியினரையும் அம்மசோதாவை ஆதரிக்கும்படி கேட்டுக் கொண்டார். “ஜஸ்டிஸ் கட்சியினரோ, சமூகச் சீர்திருத்தக் கொள்கையையே அடிப்படை நோக்கமாகக் கொண்டவர்கள். அவர்கள் பல ஆண்டுகளாக எல்லா வகுப்பினருக்கும் ஆலயங்களில் சம உரிமை இருக்க வேண்டும் என்னும் விஷயத்தை ஆதரித்து வருபவர்கள். ஆகையால் அவர்கள், தமது எதிர்கட்சித் தலைவர்களால் கொண்டு வரப்படும் மசோதா என்ற அற்பமான காரணத்தை மாத்திரம் கருதி, இந்த நல்ல மசோதாவை எதிர்க்க மாட்டார்கள் என்றே நாம் நிச்சயமாக நம்புகிறோம். ஒரு சமயம் ஜஸ்டிஸ் கட்சியினர் திரு சுப்பராயன் அவர்களுடைய கட்சிக்கும் தமது கட்சிக்குமுள்ள அரசியல் அபிப்பிராயங்களை முன்னிட்டும், எதிர்க்கட்சியினர் எந்த நல்ல மசோதாவைக் கொண்டு வந்தாலும் அதை எதிர்ப்பதே எமது கடமை என்னும் அரசியல் வஞ்சம் தீர்க்கும் கொள்கையை முன்னிட்டும், இம்மசோதாவை ஆதரிக்காமல் நடுநிலைமை வகித்தாலும் அல்லது எதிர்த்தாலும், அது மிகவும் வெறுக்கத்தக்க செய்கையாகுமென்றே நாம் கூறி எச்சரிக்கிறோம்.” (குடிஅரசு 30.10.1932)

நீதிக் கட்சியின் சார்பில் டாக்டர் நடேச முதலியார் ஆதரித்துப் பேசினார், இரட்டைமலை சீனிவாசன், என்.சிவராஜ் ஆகியோர் பேசிய பின்பு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ஆதரித்து 56 பேர் வாக்களித்தனர்; 19 பேர் நடுநிலையாக இருந்தனர். எதிர்ப்பே இன்றி தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. ஆனால் பார்ப்பனர்கள் ஆளுநரிடம் தங்களுக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி இம்மசோதாவைச் சட்டமாக்காமல் தடுத்து நிறுத்திவிட்டனர்.

ஆதி திராவிடர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஏராளமான தொகை கடன் உதவியாக அளிக்கப்பட்டது. 31.10.1931இல் சட்டமன்றத்தில் ரங்கநாத முதலியார் நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு ஆதி திராவிடர்களுக்குக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் எவ்வளவு கடனாகத் தரப்பட்டது, அதில் எவ்வளவு தொகை திரும்பப் பெறப்பட்டது என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு அரசு தெரிவித்த பதில் வருமாறு: 

dalit loan 1

dalit loan 2

(ஆதாரம் - சென்னை சட்டமேலவை விவாதக் குறிப்புகள், தொகுதி LVIII, பக். 268)

அனைவருக்கும் கட்டாயக் கல்விச் சட்டம் G.O.NO.376 சட்டம் (கல்வி) நாள் 9.3.1923 தொடக்கக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தனர். நீதிக் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கல்வித்துறையில் உயர்கல்விக்கே அதிகமாக செலவழித்து வந்தனர். இதனால் பெரிதும் பயனடைந்தவர்கள் பார்ப்பனர்களே. அதை மாற்றி, தொடக்க கல்விக்கு பெருமளவு நிதி செலவழிக்க வேண்டுமென நீதிக்கட்சியின் மாநாடுகளில் வலியுறுத்தப்பட்டது. அதனை ஆட்சிக்கு வந்தவுடன் செயல் முறையிலும் நடைமுறைப்படுத்தினர். தொடக்கக் கல்விக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அளித்து வந்த மானியம் விவரம்:                                                                             

ஆண்டு   தொகை
1920 - 21 - 34, 79, 134
1921 - 22 - 30, 37, 641
1922 - 23 - 41, 72, 787
1923 - 24 - 44, 51, 359
1924 - 25 - 49, 43, 065
1925 - 26 - 55, 37, 396

(ஆதாரம் - சட்டமன்ற விவாத குறிப்புகள், பக்.407, நாள் 27.8.1927.)

அந்தக் காலத்தில் உள்ளாட்சி அமைப்புகள்தான் தொடக்கக் கல்வியை - பள்ளிகளை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

28.7.1929 இல் K.V.A சாமி என்பவர் சட்டமன்றத்தில் 1921 முதல் 1928 வரை புதிதாகத் தொடங்கப்பட்ட தொடக்கப் பள்ளிகள் எத்தனை என்று கேள்வி கேட்டார். அரசு தரப்பில் 19,095 பள்ளிகள் என்று பதில் அளிக்கப்பட்டது.

1925 - 26 இல் அரசு ஊழியர் வகுப்புவாரி விவரம் சென்னை அரசின் நிர்வாக ஆண்டறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரம்:

caste income

ஆதாரம்: 1925 - 26 ஆம் சென்னை மாகாண அரசின் ஆண்டறிக்கையின் பக்க எண் 201

caste income 1

 (1.04.1935 இல் வெளியிடப்பட்ட அரசு ஆண்டறிக்கை பக் 207)

இந்த இரண்டு புள்ளிவிவரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஆதி திராவிடர்கள் மற்றும் பார்ப்பனரல்லாதார் அரசு வேலைகளில் சற்று அதிகரித்திருப்பதைக் காணலாம்.

முத்தையா முதலியார் பிறப்பித்த உத்தரவில் வகுப்புவாரி சுழற்சி முறை 1928இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

muthiah table

இந்த பனிரெண்டு இடங்களும் சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட்டன.

                                1. பார்ப்பனரல்லாத இந்துக்கள்

                                2. முகமதியர்கள்

                                3. பார்ப்பனரல்லாத இந்துக்கள்

                                4. ஆங்கிலோ இந்தியர்கள், இந்திய கிறித்தவர்கள்

                                5. பார்ப்பனர்கள்

                                6. பார்ப்பனரல்லாத இந்துக்கள்

                                7. ஆதி திராவிடர்கள்

                                8. பார்ப்பனரல்லாத இந்துக்கள்

                                9. முகமதியர்கள்

                                10. பார்ப்பனரல்லாத இந்துக்கள்

                                11. ஆங்கிலே இந்தியர்கள், இந்தியக் கிறித்தவர்கள்

                                12. பார்ப்பனர்கள்

இந்த வரிசை அடிப்படையில் தான் பதவிகள் நிரப்பப்பட்டன. ஆதி திராவிடர்களில் படித்தவர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததால் தான் அவர்களுக்குக் குறைந்த அளவு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் உயர்கல்வியில் பார்ப்பனர் ஆதிக்கத்தைக் குறைக்க முயற்சி செய்தது. ‘கல்லூரி மாணவர் சேர்க்கைக் குழுவை’ கலை அறிவியல் கல்லூரி, பொறியியல், மருத்துவம், வேளாண்மை, சட்டம் உட்பட அனைத்துக் கல்லூரிகளிலும் ஏற்படுத்தியது. அந்தக் குழுவில் கல்லூரியின் முதல்வர், நீதிக் கட்சியைச் சார்ந்த துறைரீதியான அறிவு பெற்ற அறிஞர் ஒருவர், அந்தத் துறையின் இயக்குநர் (அ) செயலாளர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். 50% இடங்களுக்கு மேல் பார்ப்பன மாணவர்களை சேர்க்கக் கூடாது என்று அக்குழுவிற்கு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. (அரசு ஆணை எண் 536, கல்வி நாள் 20.05.1922)

1922 ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் அக் கல்லூரி மாணவர் சேர்க்கைக் குழுவில் டாக்டர் நடேச முதலியார் இடம் பெற்றிருந்தார். மொத்த இடங்கள் 242. பார்ப்பன மாணவர்கள் 167 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். 50% அடிப்படையில் 121 பார்ப்பன மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட்டனர். மீதம் 46 பார்ப்பன மாணவர்களை சேர்க்க மறுத்தனர் (Madras Mail, 21.07.1922). கடந்த இரண்டாயிரம் ஆண்டு இந்திய வரலாற்றில் முதல் முறையாகப் பார்ப்பன மாணவர்களுக்கு இடமில்லை என்று சேர்க்க மறுத்த சமூகப் புரட்சி நீதிக் கட்சி ஆட்சியில் தான் நடைபெற்றது.

7.12.21இல் சி. நடேச முதலியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை வகுப்பு அடிப்படையில் தெரிவிக்க வேண்டும் என்றார்.

18.9.22இல் எஸ்.சீனிவாச அய்யங்கார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை வகுப்பு அடிப்படையில் தெரிவிக்க வேண்டும் என்றார். இவர்கள் இருவர் கேள்விக்கும் அவரவர்கள் கேட்ட தேதியிலேயே சட்டமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டது. ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக இரண்டையும் இணைத்துக் கொடுத்துள்ளேன்.

medical college

மருத்துவக் கல்லூரிச் சேர்க்கையில் 1921க்கும் 1922க்கும் இடைப்பட்ட ஓராண்டுக் காலத்தில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காணலாம். 1921 இல் 58 ஆக இருந்த பார்ப்பன மாணவர் எண்ணிக்கை 1922 இல் 33 ஆகக் குறைந்தது. 1921 இல் 15 ஆக இருந்த பார்ப்பனரல்லாத மாணவர் எண்ணிக்கை 36 உயர்ந்துள்ளதைக் (இரண்டு மடங்கு) காணலாம். இது கல்லூரி மாணவர் சேர்க்கைக் குழுவால் ஏற்பட்ட நன்மையாகும்.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தங்கள் ஆட்சியில் பணிபுரிய உயர் கல்வி படித்த இந்தியர்களை உருவாக்குவதற்காக 1857இல் சென்னை, மும்பை, கல்கத்தா ஆகிய மூன்று இடங்களில் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டன. அவை இந்தியப் பல்கலைக் கழகச் சட்டத்தின் படி இயங்கி வந்தன.

1920 இல் நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, 1921 முதலே வகுப்பு அடிப்படையில் மாணவர் சேர்க்கை முதலானவற்றுக்கு சென்னை பல்கலைக் கழகம் இணங்க மறுத்து வந்தது. எனவே நீதிக் கட்சி அரசு 1923இல் சென்னை பல்கலைக் கழகச் சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி மாகாண அரசின் கட்டுப்பாட்டில் பல்கலைக் கழகத்தைக் கொண்டு வந்தது. சட்டப்படி கல்வி அமைச்சர் துணை வேந்தருக்கும் மேலாக இணை வேந்தராக்கப்பட்டார்.

பல்கலைக் கழக செனட் அவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்தினார். நீதிக் கட்சியினர் பலர் நடேச முதலியார் உட்பட செனட் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அதன் பிறகு தான் அதில் பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டது.

உயர்கல்வியில் பார்ப்பனர்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் சமஸ்கிருதத்தை ஒரு பாடமாகப் படிக்காமல், தமிழ் உள்ளிட்ட எந்த மொழியிலும் பட்டம் வாங்க முடியாத நிலை இருந்தது. 1924 இல் கல்வி அமைச்சராக இருந்த பரசுராம பாத்ரோவ் சட்டமன்றத்திலேயே இது திராவிட அரசு, இந்த அரசின் பணம் திராவிட மொழிகளுக்கு மட்டுமே செலவிடப்படும் என்று அறிவித்ததோடு நில்லாமல் அரசாணையும் பிறப்பித்தார் (அரசாணை எண் 2123 சட்டம், (கல்வி) நாள் 08.12.1925). அதன் பிறகு தான் 1925 இல் சென்னை பல்கலைக் கழக செனட் கூட்டத்தில் சமஸ்கிருதம் படிக்காமலேயே தமிழைப் படித்து புலவர் பட்டம் பெறலாம் என்ற நிலை உருவாயிற்று. 1926 முதல் தமிழை மட்டுமே படித்து, தமிழ் பண்டிட் பிற்காலத்தில் புலவர் படிப்பு படிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. 1927 முதல் சமஸ்கிருதம் படிக்காமல் பி.லிட் படிக்க வாய்ப்பு ஏற்பட்டது.

தமிழ் மொழிக்கே சமஸ்கிருதத்திலிருந்து விடுதலை வாங்கிக் கொடுத்தது நீதிக் கட்சி ஆட்சி தான்.

இங்கிலாந்தில் I.C.S. படித்துவிட்டு, தமிழகத்திற்கு வேலைக்கு வருபவர்களுக்குத் தமிழறிவு இருக்க வேண்டும் என்பதற்காகத் தமிழ் லெக்சிகன் தொகுக்கும் பணிக்கு 1906ல் பணம் ஒதுக்கியது ஆங்கில அரசு. பணம் செலவானாதே தவிர ஒரு வேலையும் நடக்கவில்லை. 1921க்குப் பிறகு பனகல் அரசர் திட்டமிட்டு, பணம் ஒதுக்கி 1922இல் தமிழ் லெக்சின் முதல் தொகுதி வெளிவந்தது. நீதிக் கட்சி ஆட்சி முடிவதற்குள் 1936 இல் தமிழ் லெக்சின் ஏழாம் தொகுதி வெளியிடப்பட்டது. அவர்கள் தெலுங்கு மொழிக்கு இப்படி ஒரு லெக்சிகன் உருவாக்கிக் கொள்ளவில்லை. தமிழ் மொழிக்கு மட்டும் தான் செய்தார்கள்.

நீதிக் கட்சி தொடங்கிய காலத்தில் அரசியலில் காங்கிரசின் பேரால் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். கவர்னர் கவுன்சிலுக்கும், கவர்னர் ஜெனரல் கவுன்சிலுக்கும் பெரும்பாலும் பார்ப்பனர்களே தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தேர்தல் நடைபெற்றால் பார்ப்பனர்கள் மட்டுமே வெற்றி பெறுவார்கள். பார்ப்பனரல்லாதார்கள் முன்னேறுவது கடினம் என்று கருதிய நீதிக் கட்சியினர் அதன் செயல் தலைவர் டாக்டர் டி.எம்.நாயரை இரண்டு முறை இலண்டனுக்கு அனுப்பி, பார்ப்பனரல்லாதாருக்கு தேர்தலில் நிற்க தனித்தொகுதியைப் பெற்றனர்.

Non-Brahmin Reserved Seat என்ற பெயரில் தான் முதல் அரசாணை வெளிவந்தது (MRO Public (Retorms) G.O.335 A May 25 - 1920). பார்ப்பனரல்லாதார் என்ற பெயர் இருக்கக் கூடாது என்று கூறி, பார்ப்பனர்கள் ஆங்கிலேயே அரசிடம் கோரிக்கை வைத்து ஒரே மாதத்தில் ‘முகமதியர் அல்லாத தொகுதி’ என்று பெயர் மாற்றம் செய்து விட்டனர். முகமதியர்களுக்கு மிண்டோ மார்லி சீர்திருத்தப்படி 1909 முதலே அரசு வேலைகளில் 25% இட ஒதுக்கீடு, அதே அடிப்படையில் தேர்தல்களில் ரிசர்வ் தொகுதிகளும் வழங்கப்பட்டிருந்தன.

நீதிக் கட்சியை சார்ந்த கிருஷ்ணன் நாயர் 4.7.1921 இல் பெண்களுக்கும் வாக்குரிமை வேண்டும் என்று சென்னை சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். 44 பேர் ஆதரித்தனர்; 13 பேர் எதிர்த்து வாக்களித்தனர். அதை உடனடியாகச் சட்டமாக்க ஆளுநர் மறுத்தார். 1926 முதல் தான் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. அதனால் தான் 1927 இல் முத்துலட்சுமி ரெட்டி சட்டசபைக்கு நியமனம் செய்யப்பட்டார். அவை துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி ஒழிப்பு மசோதாவை முன்மொழிந்தார். அவர் நீதிக் கட்சியினரை நம்பாமல் சர். சி.பி. ராமசாமி அய்யரிடம் கொடுத்து மசோதாவை தயார் செய்திருந்தார். 1.12.1929 இல் அது சட்டமன்றத்தில் நிறைவேறி சட்டமானது. ஆனால் 18 வயது நிரம்பிய பெண்கள் தாமாக விரும்பினால் தேவதாசியாக ஆகலாம் என்று அந்தச் சட்டத்தில் ஓர் ஓட்டை இருந்தது.

9.10.1947இல் ஓமந்தூரார் ஆட்சியில் அமைச்சராக இருந்த டாக்டர் சுப்பராயன், தேவதாசியாக மாறும்படி வற்புறுத்துவோருக்கு 500 ரூபாய் அபராதம், ஆறுமாதம் சிறை என்று தேவதாசி ஒழிப்பு மசோதாவைக் கொண்டு வந்து அந்த முறையை முற்றிலுமாக ஒழித்தார்.

பெண்கள் முன்னேற்றத்திற்காக சுயமரியாதை இயக்கமும், நீதிக் கட்சியும் ஆற்றிய பங்களிப்புகள் ஏராளம். பெண்கள் கல்விக்காக, பெண்களுக்கான ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கினர். இந்தியாவில் பெண்கள் முன்னேற்றம் எந்த அளவில் இருக்கிறது என்பதை ஆராய்வதற்காக ‘அண்டர்’ தலைமையில் 1928 இல் ஒரு குழுவை இந்தியா முழுவதும் அனுப்பியது அன்றைய இந்திய அரசு. அக்குழுவின் அறிக்கையில் சென்னை மாகாணத்தில் பெண்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததைப் பாராட்டியுள்ளது.

பெண்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. படிப்பு வரை கட்டணமில்லாமல் இலவசக் கல்வி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் உண்டாக்கவும் பாடுபட்டது நீதிக்கட்சி ஆட்சி. இப்படிப்பட்ட ஒரு நல்ல ஆட்சி இந்தியாவில் வேறு எந்த மாகாணத்திலும் அன்று இல்லை என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது.

இந்துமத பரிபாலன போர்டு:

தென்னகத்தில் ஆட்சிபுரிந்த அரசர்கள் பெரிய பெரிய கோவில்களைக் கட்டி அவற்றிற்கு ஏராளமான சொத்துக்களையும் வைத்துச் சென்றனர். இவற்றைப் பார்ப்பனர்கள் கொள்ளையடித்து வாழ்ந்து வந்தனர். இந்தப் பார்ப்பனக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த பனகல் முயன்றார். இந்துமத பரிபாலனைச் சட்ட மசோதா 18.12.1922இல் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். கோவில்களின் வருமானத்தை அரசு ஊழியர்களைக் கொண்டு பராமரித்தல், உபரிநிதியை கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்குப் பயன்படுத்துதல் முதலானவை இச்சட்டத்தின் நோக்கமாகும். நீண்ட விவாதத்திற்குப் பிறகு, சுமார் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகு 1923 நவம்பரில் இது சட்டமாக்கப்பட்டது. இதை நடைமுறைப் படுத்துவதற்குள் 1923 நவம்பர் மாதத்தில் முதல் அமைச்சரவையின் பதவிக் காலம் முடிவுற்றது.

இரண்டாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு மீண்டும் 19.11.1923இல் பனகல் அரசரே முதல்வராகப் பொறுப்பேற்றார். இம்முறை ஒரு தமிழர் சிவஞானம் பிள்ளை அமைச்சராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இந்துமத பரிபாலனைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவண்ணம் பார்ப்பனர்கள் சதி செய்து, ஆளுநரும் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டார்.

பனகல் அரசர் சளைக்கவில்லை. எப்படியாவது இதை நிறைவேற்றியே தீருவது என்று முடிவுசெய்து, மீண்டும் ஒரு மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இம்முறை சத்தியமூர்த்தி அய்யர் சென்னை பல்கலைக்கழக பட்டதாரித் தொகுதி மூலமாக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் இதை எதிர்த்து ஓயாமல் சட்டமன்றத்தில் பேசினார்; திட்டினார். 475 திருத்தங்களை அவர் ஒருவர் மட்டுமே கொண்டு வந்தார். மொத்தம் 800 சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. திருப்பதி கோவிலுக்கு மட்டும் விலக்கு அளித்தால் ரூ. 5 இலட்சம் கையூட்டு தருவதாக பனகலிடம் பேசிப் பார்த்தனர். எதற்கும் பனகல் மசியவில்லை. 1925 நவம்பரில் வெற்றிகரமாக சட்டமாக்கி நடைமுறைப்படுத்தினார். பனகல் அரசுமீது மடாதிபதிகளும், கோவில் நிர்வாகிகளும் 50க்கும் மேற்பட்ட வழக்குகளை உயர்நீதி மன்றத்தில் தொடுத்தனர். இதனால் காங்கிரசில் இருந்த பெரியாருக்கு, பனகல் அரசர் மீது நேசம் ஏற்பட்டது. காங்கிரசை விட்டு பெரியார் வெளியேறிய காலகட்டமும் அதுதான்.

பனகல் அரசர் காலத்தில்தான் 1924இல் சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் சமஸ்தான அரசுக்கும் இடையே காவிரி நீர்ப் பங்கீடு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் பயனாக மேட்டூர் அணை கட்டத் திட்டம் உருவாக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று 1924 முதல் 1933க்குள் 10 ஆண்டுகளில் ரூ.5,91,38,000 செலவில் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு 3,10,000 ஏக்கர் பாசன வசதி பெற்று, தமிழகம் பஞ்சமில்லாமல் இருக்க வழிவகை செய்தார்.

 ஆதிதிராவிடர்களின் நலனுக்காகச் செயல்பட்ட நீதிக் கட்சியை, தலித்துக்கள் ‘மேல்சாதியினருக்கான கட்சி’ என்று கூறுவதும், சமஸ்கிருதப் பார்ப்பன மேலாண்மைக்கு எதிராகப் போராடி தமிழ் மொழிக்கு சமஸ்கிருதத்திலிருந்து விடுதலை பெற்றுத் தந்த நீதிக் கட்சியை ‘தெலுங்கர்கள் கட்சி’ என்று தமிழ்த் தேசியர்கள் கூறுவதும், உழைக்கும் மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட நீதிக் கட்சியைப் பொதுவுடைமைவாதிகள் ‘நிலக்கிழாரிய கட்சி’ என்று கூறுவதும் ஏற்கத்தக்கதல்ல. ஆயிரம் ஆண்டுகளாக சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை மற்ற சாதிமக்களோடு இரண்டறக் கலந்து பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததே நீதிக் கட்சி ஆட்சி தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

- வாலாசா வல்லவன்

Pin It