ஐம்பதுகளில், தமிழ்நாட்டில் சின்ன ஊர்களில் இருந்து பெரிய நகரங்கள் வரை... அங்கிருந்த உணவகங் களுக்கு சாதிப் பெயர் வைக்கப்பட்டிருந்தன. சாதிப் பெயர் என்றால்... செட்டியார் ஓட்டல், முதலியார் கபே, நாடார் மெஸ், என்று பெயர்கள் சூட்டப்பட வில்லை. அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் தமிழகத்தில் “பிராமணாள் ஓட்டல்” என்கிற சாதிப் பெயரில் உணவு விடுதிகள் இயங்கின. ‘பிராமணாள் ஓட்டல்’ என்கிற பெயர்ப் பலகை வைத்திருப்பதைப் பெரியார் எதிர்த்தார். தெருக்களில் ‘பார்ப்பன ஜாதியம்’ தலைவிரித்தாடுகிறது. நம்மவர்களுக்கு இது கண்டு ஆத்திரம் வரவில்லையே... என்று பெரியார் வருத்தப்பட்டார். பெயர்தானே... இதில் என்ன இருக்கிறது... இப்படி விட்டுவிடத் தயாரில்லை பெரியார்.

அரசாங்கத்திற்கும் ஆளுநருக்கும் பெரியார் கடிதம் எழுதினார். ஓட்டல் நடத்த அரசு அனுமதி வழங்குகிற போது “சாதிப் பெயர் ஓட்டல் பெயர்ப் பலகையில் எழுதக்கூடாது” என்று நிபந்தனை விதிக்க வேண்டினார். அரசாங்கம் செவி சாய்க்க வில்லை. பெரியாரும் சும்மா இருக்கவில்லை. உணவகங்களில் பெயர்ப் பலகையில் உள்ள ‘பிராமணாள்’ எழுத்தழிப்புப் போராட்டத்திற்கு நாள் குறித்தார். போராட்டத்தில் கலந்துகொள்ள திராவிட கழகத் தோழர்களுக்கு அழைப்பு விடுத்தார். போராட்டத்தை ஒட்டிப் பெரியார் விடுதலை இதழில் எழுதிய அறிக்கையில்...

“அழிப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் அருள்கூர்ந்து எந்தவிதமான கலவரத்திற்கும் இடமில்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பது எனது பணிவான வேண்டு கோள். அது போலவே ஓட்டல் உரிமையாளர்களோடு வாக்குவாதத்திற்கும் கைகலப்பிற்கும் கண்டிப்பாக

இடம் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதை வணக்கத் துடன் தெரிவித்துக் கொள்கிறேன். போலீசு அதிகாரிகள் கைது செய்ய வந்தால் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் கைதாக இணங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்” என்று கேட்டுக் கொண்டார்.

பெரியாரின் இந்த நியாயமான போராட்டத்தை மறுக்க இயலாத வைதீகர்கள் வித்யாசமான விளக்கம் சொன்னார்கள். “பிராமணாள்” என்கிற வார்த்தை சாதியைக் குறிக்க எழுதவில்லை எனவும்... மரக்கறி உணவு அதாவது சைவ உணவு மட்டுமே இங்கே உண்டு என்பதைத் தெரிவிக்கப் போடப்பட்டது... என்றார்கள்.

பெரியார் இதனைக் கண்டித்து மறுப்பு அறிக்கை விடுத்தார்.

“அவர்கள் சொல்வது உண்மையாய் இருக்கும் பட்சத்தில் மரக்கறி பதார்த்தங்கள் ஓட்டல்” என்று போட்டுக் கொள்ளட்டும்” என்றார்.

இந்த விசயத்தில் ஒரு விசித்திரமான சங்கதி என்னவென்றால்... “பிராமணாள்” அழிப்பு வேண்டு கோளை ராஜாஜி எதிர்த்திருக்கின்றார். அதாவது அவரது எதிர்ப்புக்குரலும் மரக்கறி உணவு பற்றிய மையக் கருத்தாக இருந்திருக்கிறது. இதனை மீண்டும் எடுத்துக் காட்டிய பெரியார், “பிராமணாள் என்றால் மரக்கறி உணவை நன்றாகச் சமைக்கிறவன், நல்ல ருசியாக தயாரிப்பவன் என்று அர்த்தம் என்பதாக நொண்டிச் சமாதானம் சொல்கிறார் நமது ஆச்சாரியார். சரி நன்றாகச் சமைக்கிறான் சைவ உணவு இங்குக் கிடைக்கும் என்று போட்டுக் கொள். சாதிப் பெயரை சாக்குப் போக்குச் சொல்லிப் போடாதே. அது தவறு.” என்று பெரியார் விடுதலையில் எழுதினார்.

இந்திய நாட்டின் கவர்னர் ஜெனரல் பதவி வகித்தவர்... சென்னை மாநில பிரதமராக இருந்தவர்... சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்... காந்திஜியின் சம்பந்தி... இவ்வளவு சிறப்பிற்குரியவரின் மனோநிலை இந்த விசயத்தில் பிற்போக்குத்தனமாகவே இருந்திருக் கிறது.

தமிழ்நாடு முழுவதும் இந்தப் போராட்ட விளக்கக் கூட்டம் நடத்த முடிவானது. பெரியார் சேலத்தில் பேசு வதற்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. அதனைப் பெரியார் விடுதலையில் இப்படி எழுதினார்...

“இரண்டு நாட்களுக்கு முன்பு நான் ஏற்காட்டு மலையில் இருந்தபோது சேலத்து ஓட்டல் உரிமையாளர் சங்கத்தினர் கடிதம் ஒன்றைத் தந்தார்கள். அதைப் படித்துப் பார்த்தேன். என்னுடைய வேண்டுகோளைப் பத்திரிகைகளில் பார்த்தவுடன் உடனடியாக அவசரக் கூட்டம்போட்டு சேலத்தில் இருக்கிற எல்லா ஓட்டல் காரர்களும் ‘பிராமணாள்’ வார்த்தையை அழிப்பதற்கு முனைந்து விட்டார்கள். எனவே சேலத்தில் ஓட்டலில் அழிப்புபற்றிப் பேச வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விட்டது.”

பெரியாரின் முயற்சிக்குக் கைமேல் பலன் கிடைத்தது. ஆனால் சென்னை ஓட்டல்காரர்கள் அழிக்க முன்வராமல் முரண்டு பிடித்தார்கள். பெரியார் மீண்டும் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தார். இந்த விசயத்தை அவர் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வில்லை. இந்தப் போராட்டத்திற்காகத் தஞ்சையில் இருந்து “சாதி ஒழிப்புப் பிரச்சாரப் படை” என்று உருவாகி சென்னை நோக்கி வந்தது. பெரியார் இந்தப் படையைத் திண்டிவனத்தில் வரவேற்றுப் பேசினார்.

சென்னையில் ‘பிராமணாள்’ பெயர்ப் பலகைகள் உள்ள ஓட்டல்களில் மறியல் நடைபெற்றது. எல்லா ஓட்டல் உரிமையாளர்களும் ‘பிராமணாளை’ அழித் தார்கள். திருவல்லிக்கேணி முரளி பிராமணாள் கபே உரிமையாளர் மட்டும் வீம்போடு மறுத்தார். பெரி யாரின் தொண்டர்கள் இந்தக் கடையை இடைவிடாது மறியல் நடத்திக் கைதானார்கள். ஒரு கட்டத்தில் ஓட்டல் உரிமையாளர் ஓட்டல் பெயரை ஓசையின்றி மாற்றிவிட்டார். முரளி பிராமணாள் கபே என்பது முரளீஸ் அய்டியல் காபி சாப்பாடு ஓட்டல் என்றானது.

இன்று தமிழகத்தில் எங்கும் ஓட்டல் பெயர்ப் பலகைகளில் பிராமணாள் பெயர் இல்லை. ஆனால் ஊர் ஊருக்கு “அய்யங்கார் பேக்கரி” என்கிற பெயரில் பேக்கரி கடை சத்தமில்லாமல் நுழைந்திருப்பதைக் காணலாம்.

அதுமட்டுமல்ல... சாதிப் பெயரை ஒட்ட வைத்துக் கொள்ளாதவர்கள் பெண்கள் என்கிற பெருமை இருந்தது. இன்றைய தினம் தமிழ்த் திரையுலகில் சாதிப் பெயரைச் சேர்த்துக் கொள்ளும் பெண்களைப் பரவலாகப் பார்க்க முடிகிறது. நவ்யா நாயர், மேகா நாயர், லட்சுமி மேனன், பார்வதி ஓமன குட்டன், ஜனனி அய்யர், அபர்ணா பிள்ளை, மேக்னா நாயுடு, ஸ்வேதா மேனன், ஸ்வாதிசர்மா, இப்படிப் பட்டியல் நீள்கிறது.

நல்ல வேளை... இவர்களில் யாரும் தமிழ் நாட்டவர் இல்லை என்று திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்...!

(உங்கள் நூலகம் ‍ - ஜனவரி 2014 இதழில் வெளியானது)

Pin It

இரண்டாம் உலகப் போர், உலகை உலுக்கிக் கொண்டிருந்த நேரம்....
 
 புதுக்கோட்டை மன்னரின் தர்பார் அதாவது அரசவை அவசர அவசரமாய் கூடியது. பெருந்திரளாய் பார்ப்பனர்களின் கூட்டம். நகரின் அத்தனை உயர் சாதியினரும் திரண்டிருந்தனர். மன்னரிடம் கொடுக்க கோரிக்கை மனுவோடு...

 இந்த திடீர் திரள்வுக்கும், அரசவையின் அவசர கூட்டத்திற்கும் அரசாங்க திவானின் ஒரு உத்திரவுதான் காரணம். 1738 முதல் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் நடைபெற்று வந்த தசரா (நவராத்திரி ) கொண்டாட்டத்தின்போது நகரின் நான்கு முக்கிய இடங்களில் பத்து நாட்களுக்கு பார்ப்பனர்களுக்கு இலவசமாய் நல்ல உணவும், ஒருபடி அரிசியும், அரசாங்க செலாவணியான நான்கு அம்மன் காசுகளும் வழங்கப்பட்டு வந்தது. அம்மன் காசு ஆங்கிலேயர் அச்சிட்ட காசுக்கு இணையாய் அங்கீகாரம் பெற்றிருந்தது. பார்ப்பன குழந்தைகளுக்கும் கூட அம்மன் காசும் படியரிசியும் இலவசமாய் வழங்கப்பட்டது. ஆனால், ஒருபோதும் இந்த இலவசங்கள் பார்ப்பனரல்லாதாருக்கு வழங்கப்படவில்லை.

 ஒவ்வொரு ஆண்டும் இப்படி கொடுக்கப்படும் அம்மன் காசாலும், இலவச படியரிசியாலும் கஜானா காலியாகிக்கொண்டே இருந்தது. இந்த தசரா கொண்டாட்ட இலவசங்களைத்தான் நிறுத்தியிருந்தார் திவான். (அதாவது முதலமைச்சர் ) இதை எதிர்த்துதான் மன்னரை முற்றுகையிட்டது பார்ப்பனர் கூட்டம். இந்த உத்திரவை மன்னர் திரும்பப் பெற வேண்டும் என கூட்டம் வலியுறுத்தியது. அப்பொழுதெல்லாம் மன்னரின் எல்லா உத்திரவுகளும் திவான் பெயரிலேயே வெளியாகும். எனவேதான், திவான் வெளியிட்ட உத்திரவை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை. திரும்பப் பெற இயலுமா? என்றார் மன்னர் திவானைப் பார்த்து.

 திவானோ அம்மன் காசும், படியரிசியும் இலவசமாய் வழங்கிட இனி கஜானாவில் பணமில்லை. அதற்கு பதிலாக சாதி பேதமின்றி மக்கள் அனைவருக்கும் இலவச உணவு நவராத்திரி பத்து நாட்களுக்கும் நகர்மன்றத்தில் வைத்து வழங்கலாம் என்றார். உத்திரவு உடனே அமுலானது. கோபத்துடன் கலைந்துசென்றனர் உயர் சாதியினர். ஏனைய பிற சாதி மக்களோ மன்னரையும், திவானையும் மனதார, வாயார பாராட்டிச் சென்றனர். திவானுக்கு முழு சுதந்திரம் கொடுத்த அந்த மன்னர் ராஜா ராஜ கோபால தொண்டைமான்- துணிச்சலாய் முடிவெடுத்த அந்த திவானின் பெயர் கான்பகதூர் கலிபுல்லா சாகிப்.

 கலிபுல்லா சாகிப் 1888ம் ஆண்டு இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தின் இலுப்பூரில் ஒரு செல்வந்தர் வீட்டு சீமானாய் பிறந்தார். தந்தை பிச்சை ராவுத்தர்- தாய் அமீரம்மாள். உடன் பிறந்தோர் ஆண்கள் ஐவர்- பெண்கள் இருவர். இவருடைய சகோதரர் சர்புதீன் சாகிப் பிற்காலத்தில் திருச்சி, சேலம் மாவட்டங்களில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றினார்.

 தந்தை மிகப் பெரிய அரிசி வணிகர். இவர்களின் மூதாதையர் இஸ்லாத்தை தழுவிய கதை இன்றைக்கும் அப்பகுதியில் சுவராய்மாய் பேசப்படுகிறது. கலிபுல்லா சாகிப் அவர்களின் மூதாதையர் ஒருவர் வியாபார நிமித்தமாக தூத்துக்குடி செல்லும் வழியில் கடும் வயிற்று வலியால் அவதிப்பட நேர்ந்தபோது அங்கிருந்த பள்ளிவாசல் ஒன்றில் தங்கியிருந்த சூபி ஒருவரால் உடனடியாக குணமாக்கப்பட்டதாகவும், அன்றே அதனால் ஈர்க்கப்பட்ட அவர் இஸ்லாத்திற்கு மாறியதாகவும் சொல்லப்படுகிறது.

 திருச்சியில் ஆரம்பக் கல்வி பயின்ற கலிபுல்லா சாகிப் 1913ம் ஆண்டு முதுகலை பட்டத்தை சென்னை பல்கலைக் கழகத்தில் பெற்றார். சென்னை மாகாணத்திலேயே எம்.ஏ., பட்டம் பெற்ற முதல் இஸ்லாமியர் கலிபுல்லா சாகிப்தான். பட்டம் பெற்ற முதல் இஸ்லாமியர் என்பதால் இவர் தந்தை இவருடைய நண்பர்களுக்கு ஒரு விருந்தளித்தார். 247 பேருக்கு கொடுக்கப்பட்ட விருந்திற்கு ரூபாய் 27 செலவானதாக இவரது தந்தையாரின் குறிப்பின் மூலம் அறிய முடிகிறது. பின்னர் அதே ஆண்டு லண்டனில் பார் அட்லா படிப்பதற்காக திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வராய் இருந்த ஆங்கிலப் பாதிரியார் ஒருவரின் கடும் முயற்சியால் நன்னம்பிக்கை முனை வழியாக லண்டனுக்கு கப்பலில் பயணம் சென்றார். லண்டண் சென்று சரியாக முப்பது நாளில் கலிபுல்லா சாகிப் அவர்களின் தந்தையார் பிச்சை ராவுத்தர் காலமானார். இதனால் கலிபுல்லா சாகிப் நாடு திரும்பினார். பின்னர் முதலாம் உலகப்போர் தொடங்கிவிட்டபடியால் அவரால் திரும்ப லண்டன் செல்ல இயலவில்லை. எனவே, சென்னையில் 1929ம் ஆண்டு தனது வழக்கறிஞர் படிப்பை முடித்தார்.

 1920களில் இருந்தே நீதிக்கட்சியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் கலிபுல்லா சாகிப். தந்தை பெரியார், கி.ஆ.பெ.விஸ்வநாதம், பி.டி.ராஜன், சர்.ஏ.பி.டி.பன்னீர்செல்வம் ஆகியோர் கலிபுல்லா சாகிபின் நட்பு வட்டத்திற்குள் இருந்தனர். திருச்சியில் அவர் இருந்தபோது திருச்சி நகர்மன்றத் தலைவராக இருமுறை பணியாற்றினார். திருச்சி நகர்மன்றத் தலைவராக இருந்த முதல் இஸ்லாமியரும் அவரே. மிகத் திறம்பட பணியாற்றிய அவர் 1930-ம் ஆண்டு முஸ்லிம் லீக் சார்பில் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937ம் ஆண்டு மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 இத்தேர்தலில் நீதிக்கட்சியும் ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் கட்சியும் சமபலத்தில் இருந்ததால் ஆங்கிலேயே கவர்னர் நீதிகட்சியை சேர்ந்த குமாரவெங்கட ரெட்டியை அரசு அமைக்க அழைத்தனர். அதில் எம்.ஏ.முத்தையா செட்டியார், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் மயிலை சின்னத்தம்பி ராஜா, ஆர்.எம். பாலக் இவர்களோடு பொதுப்பணித்துறை அமைச்சராக கலிபுல்லா சாகிப் அவர்களும் பதவியேற்றார். சென்னை மாகாணத்தின் முதலாவது இஸ்லாமிய அமைச்சர் என்ற பெருமையும் கலிபுல்லா சாகிப் அவர்களுக்கு கிட்டியது. ஏற்கனவே, ஆங்கில அரசு அவருக்கு கான்பகதூர் என்கிற சிறப்பு பட்டத்தை அளித்து கவுரவித்திருந்தது. குறைந்த காலமே இருந்த இந்த அமைச்சரவை பின்னர் பதவி விலகியது.

 முஸ்லிம் லீக் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது திருச்சியில் இருந்து 01.08.1938ம் ஆண்டு அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தலைமையில் நூறு பேருடன் இந்தி எதிர்ப்பு படை சென்னை நோக்கி புறப்பட்டது. இப்படையை தந்தை பெரியார் தலைமையில் கலிபுல்லா சாகிப் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். இப்படையில் திருப்பூர் தளபதி மொய்தீன் முன்னனி வீரராக வந்தார். இந்தி திணிப்பை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தந்தை பெரியாரோடு இணைந்து கான்பகதுர் கலிபுல்லா சாகிப் சென்னை மாகாணம் முழுவதும் பொதுக் கூட்டங்களில் பேசினார். அதேபோல் சென்னை மாகாண சட்டசபையில் பேசிய கலிபுல்லா சாகிபின் பேச்சு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைவருக்கும் பேராதரவாய் அமைந்தது. நான் ஒரு ராவுத்தர் எனது தாய்மொழி தமிழ். உருது அல்ல. இந்தி எதற்காக இந்தியாவின் பொதுமொழி என்று எங்களுக்கு சொல்லப்படவில்லை. இந்தி கட்டாயமாக புகுத்தப்படுவதை மாகாணத்தின் ஒவ்வொரு கிராமமும் எதிர்க்கிறது. நாங்களும் எதிர்க்கிறோம் என்றார். அப்போதைய முஸ்லிம் லீக் உறுப்பினராய் இருந்த கலிபுல்லா சாகிப்.

 அப்போதைய காலக்கட்டத்தில் முஸ்லிம் லீக்கில் அவர் இருந்தாலும் அனைத்து சுயமரியாதை இயக்க மாநாடுகளிலும் கலந்துகொண்டார். வட ஆற்காடு மாவட்ட சுயமரியாதை மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். அந்த மாநாட்டில் தந்தை பெரியார் சிறப்புரையாற்றினார். பார்ப்பன எதிர்ப்பிலும் தந்தை பெரியாரோடு கரம் கோர்த்தார் கான் பகதூர் கலிபுல்லா சாகிப்.

 சுயமரியாதை இயக்கத்துடன் தம்மை இணைத்துக்கொள்வதன் மூலம் தென் இந்தியாவில் மொழி அடிப்படையிலான தமிழ் முஸ்லிம் தனித்துவத்தை கலிபுல்லா சாகிப் வலியுறுத்தினார். திராவிட இயக்க தலைவர்களுடனான முஸ்லிம்களின் பிணைப்பிற்கு அடிகோலியவர் அவர்தான். அவரை பின்பற்றியே முஸ்லிம் லீக் தலைவர்கள் திராவிட இயக்கத்துடன் தங்கள் நட்பை வலுப்படுத்தினர்.

 மொழிப் பிரச்சனையில் முஸ்லிம் லீக் தலைவர்கள் சிலருடன் ஏற்பட்ட அரசியல் நெருடல் காரணமாக அவர் தீவிர முஸ்லிம் அரசியலில் இருந்து ஒதுங்கிட நினைத்த நேரத்தில் புதுக்கோட்டை திவானாக வேண்டும் என்கிற ஆங்கில அரசின் அழைப்பு வந்தது. இந்த அரசியல் நெருடலே அவரை திவான் பதவியை நோக்கி தள்ளியது.

 ஆங்கில அரசின் வேண்டுகோளுக்கிணங்க புதுக்கோட்டை சமஸ்தானத்தின் துணை திவானாக 1941 ஜனவரி 1ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அப்பொழுது திவானாக டாட்டன்ஹாம் இருந்தார். 1944ல் டாட்டன்ஹாம் மறைந்தவுடன் கலிபுல்லா சாகிப் திவானாக பொறுப்பேற்றார். அப்பொழுது முதல் சமஸ்தானத்தில் ஏராளமான சீர்திருத்தங்களை செய்தார்.

 கோவையை அடுத்து பஞ்சாலைகளின் நகரம் என சொல்லத்தக்க வகையில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் தாவுத்மில், கனகவேல்மில், காவிரிமில், புதுகை டெக்ஸ்டைல் மில் என நான்கு பஞ்சு மில்களை நிறுவினார். சிவகாசிக்கும் முன்னோடியாக 7 ஏக்கரில் தீப்பெட்டி தொழிற்சாலையை உருவாக்கினார். ஆங்கிலேயரின் வார விடுமுறையாக ஞாயிற்றுக் கிழமை இருந்தாலும் சமஸ்தானத்தில் வெள்ளிக் கிழமையை வார விடுமுறை நாளாக அறிவித்தார். அன்று மக்கள் கூடும் சந்தையும் நடந்தது. 1945ம் ஆண்டு முஸ்லிம்கள் தொழுகை நடத்த 1 ஏக்கர் 88 சென்ட் இடத்தில் ஈத்கா மைதானம் அமைத்துக் கொடுத்தார். புதுக்கோட்டை சமஸ்தானத்தில் தேவதாஸி முறையை ஒழித்துக் கட்டினார்.

 புதுக்கோட்டையின் புகழ்பெற்ற குளமான பல்லவன்குளத்தில் ஆடு, மாடுகள் குளிக்கலாம், ஆனால் முஸ்லிம்களும், தாழ்த்தப்பட்டவர்களும் குளிக்கக் கூடாது என்கிற நீண்டகால தடையை நீக்கினார். புதுக்கோட்டையில் இன்று விருந்தினர் மாளிகையாக திகழும் ரோசா இல்லத்தை உருவாக்கினார். இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற கால கட்டத்தில் சென்னை மாகாணத்தில் முதன் முதலாக ரேசன் முறையை கொண்டுவந்தார். இந்தியா முழுவதும் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோதும் சமஸ்தானத்தில் அது வராதவாறு அரிசி, பெட்ரோல், உள்ளிட்டவைகளை ரேசனில் வழங்க ஏற்பாடு செய்தார். அவசர போர் காலத்திற்காக அன்றைக்கு உருவாக்கப்பட்ட ரேசன் முறையோ இன்றைக்கு அரசியல் வாதிகளால் இலவசப் பிச்சைபோட பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.

 திவான் கலிபுல்லா சாகிப் தான் இந்தியாவிலேயே முதன் முறையாக பள்ளிக் கூடத்தில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதுவே பின்னாளில் நெ.து.சுந்தரவடிவேலு மூலமாக தமிழக அரசின் மதிய உணவுத் திட்டமாக கர்மவீரர் காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

 திவான் கலிபுல்லா சாகிப் பொறுப்பேற்றபோது சமஸ்தான பள்ளிகளில் வெறும்1 3% சதவிகித பார்ப்பனரல்லாத மாணவர்களே கல்வி பயின்று வந்தனர். கலிபுல்லா சாகிபின் மதிய உணவு திட்டத்தின் பயனாக அது 78 சதவிகிதமாக உயர்ந்தது. புதுக்கோட்டை சமஸ்தானத்தில் அரசு உயர்நிலைப் பதவிகளுக்கு அவர் பார்ப்பனராய் இருந்தால் இளங்கலை அதாவது பி.ஏ., படித்திருக்க வேண்டும் என்றும், அதுவே பார்ப்பனல்லாதவராக இருந்தால் மூன்றாம் பாரம் (இன்றைய பத்தாம் வகுப்பு) படித்திருந்தால் போதுமானது என ஆணை பிறப்பித்தார்.

 இதனால் கோபமுற்ற உயர் வகுப்பினர் இவருடைய மகன்கள் முகமது இஸ்மாயில், முகமது அலி ஆகியோர் டைபாய்டு காய்ச்சல் வந்து இறந்தபோது பால்பாயாசம் வைத்து இலவசமாக கொடுத்து எங்களுக்கு கெடுதல் செய்ததால்தான் திவான் பிள்ளைகள் இறந்தனர் என கொண்டாடினர்.

 இரண்டாம் உலகப்போர் நடந்தபோது பத்திரிக்கை காகிதம் தட்டுப்பாடு ஏற்பட்டு இந்தியா முழுவதும் பல நகரங்களில் பத்திரிக்கைகள் நிறுத்தப்பட்டன. ஆனால், திவானின் முயற்சியால் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் மட்டும் எவ்வித கோட்டாவும் இல்லாமல் எல்லா பத்திரிக்கைகளும் வெளிவந்தன.

 ஒருமுறை திவானின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட உயர்சாதியினர் திவான் இல்லம் முன் கூட்டமாய் கூடி தாடி ஒழிக, தாடி ஒழிக என (திவான் கலிபுல்லா சாகிப் எப்பொழுதும் தாடி வைத்திருப்பார்) பெருங்கூச்சலிட்டனர். வெளியே வந்து பார்த்த திவான் தாடியை ஒழிக்க காலனா பிளேடு போதுமே! அதற்கு ஏன் வீண் கூட்டம் என்றாராம்.(அப்பொழுதுதான் சவரக் கத்திக்கு பதிலாக பிளேடு அறிமுகமாகி இருந்தது)

 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்த நேரத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் சிமெண்ட் தொழிற்சாலை அமைப்பதற்காக அரசு கஜானாவில் ரூபாய் 63 இலட்சம் சேர்த்து வைத்தார். பின்னாளில் 1948 மார்ச் 8ம் தேதி சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்தபோது அதில் 48 இலட்சம் பணம் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தியா சுதந்திரமடைந்தபோது சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைய அன்றைய இந்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் நடவடிக்கை எடுத்தார். அதற்காக திவானிடம் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. திவான் கலிபுல்லா சாகிப் சில நிபந்தனைகளை அரசர் சார்பில் விதித்தார். இந்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இணைப்பிற்கு இவர் தடையாய் இருக்கிறார் என சில தேசாபிமானிகள் இவர்மீது குற்றம் சாட்டினர். இதனால் வேதனையுற்ற திவான் கலிபுல்லா சாகிப் 1947ம் ஆண்டு நவம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

 இவர் இஸ்லாமியர் என்பதால் துணிச்சலாக எதைப்பற்றியும் கவலைப்படாமல் அனைத்து சீர்திருத்தங்களையும் செய்தார். இன்னொறுபுறம் இவர் இஸ்லாமியர் என்பதாலேயே ஒவ்வொரு முறையும் விமர்சிக்கப்பட்டார். தூற்றப்பட்டார்.

 திவான் கலிபுல்லா அவர்களுக்கு நான்கு பெண் - ஆறு ஆண் குழந்தைகள் பிறந்தன. அவை முறையே ஆயிஷா, சபியா, பிச்சை மைதீன், ஜமால் முகம்மது(இவருடைய மகன் ராஜா கலிபுல்லா அரசு வழக்கறிஞராக சமீபகாலம் வரை பணியாற்றி வந்தார்), முகமது இஸ்மாயில், ரமீஸாபேகம், முகமது அலி, ஜெய்புனிஸா (இவருடைய மகன்தான் தற்போதைய காஷ்மீர் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா) சலாகுதீன், குத்புதீன் ஆகியோர். கான்பகதூர் கலிபுல்லா சாகிப் அவர்களின் மனைவி பெயர் வரிசையம்மாள்.

கலிபுல்லா அவர்கள் திவான் பதவியை ராஜினாமா செய்தபின்னர் தனது இறுதி நாட்களில் திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள எண்.4, ராயல் ரோட்டில் வசித்துவந்தார். 1950ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பத்தாம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார். 1913-ல் அவரது தந்தை இறந்தபோது அன்றைக்கு அவர் கலிபுல்லா சாகிபிற்கு வைத்துவிட்டுபோன பணத்தின் அன்றைய மதிப்பு பதிமூன்று இலட்சம் ரூபாய்.

 முதல் இஸ்லாமிய அமைச்சர், முதல் இஸ்லாமிய பட்டதாரி- முதல் இஸ்லாமிய திவான்- முதல் இஸ்லாமிய நகர்மன்ற தலைவர்- இப்படியெல்லாம் புகழ்பெற்ற கான்பகதூர் கலிபுல்லா சாகிப் காலமான நேரத்தில் வாடகை வீட்டில் தான் குடியிடிருந்தார்.

 இதுதான் இன்றைய தலைவர்களுக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம்.

 கடுங்கோபம் வரும்போது கான்பகதூர் கலிபுல்லா சாகிப் உபயோகிக்கும் வார்த்தையோ முட்டாள் என்பது. ஆனால் அவர்தன் வாழ்நாளில் ஒருபோதும் இந்த சமூகத்தை இன்றைய தலைவர்களைப்போல் முட்டாளாக்கியது கிடையாது.

- கே.எம்.சரீப்

Pin It

தமிழ் வேதம் எனப் போற்றப்படும் திருக்குறளை இலத்தீன் மொழியில் பெயர்த்தவர்; தமிழ் அகராதித் துறைக்கு மூலவர்; தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம் கொண்டு வந்தவர்; தமிழின் மரபினையொட்டி `தேம்பாவணி' என்ற சிறந்த காப்பியம் படைத்தவர்; தமிழ் இலக்கண மரபுப்படி கவிதைகள் புனைந்தவர்; தமிழ் மொழியில் பிரபந்தம், கலம்பகம், அம்மானை, கலிப்பா எனப் பதிகம் தொடங்கி, 'பா' வகைகள் பலவற்றில், செய்யுள் இயற்றியவர்; தமிழில் உரைநடை படைத்தவர்; தமிழ் இலக்கியங்களை மேலை நாட்டு மொழிகளில் மொழிபெயர்த்தவர்; “தாமே தமிழானார்; தமிழே தாமானார்!” என்று தமிழ் இலக்கியவாணர்கள் போற்றும் வண்ணம், தமிழுக்காக வாழ்ந்தவர். அவர்தான் இத்தாலி நாட்டில் பிறந்து, தமிழகம் வந்து தமிழ்த் தொண்டாற்றிய `கான்ஸ்டண்டைன் ஜோசப் பெசுகி' `வீரமாமுனிவர்'!

இத்தாலி நாட்டில் வெனிஸ் மாநிலத்தில் மாந்துவா என்னும் மாவட்டத்திலுள்ள காஸ்திகிளியோனே என்ற சிற்றூரில் 08.11.1680 ஆம் நாள் பிறந்தார். தந்தையார் கொண்டோல்போ பெசுகி. தமிழகத்திற்குக் கிறித்துவ மதத்தைப் பரப்பிட, 1711 ஆம் ஆண்டு வருகை புரிந்தார். தமிழகத்தில் கோவை, தூத்துக்குடி, மணப்பாடு முதலிய ஊர்களில் வாழ்ந்து தமிழ் பயின்றதுடன், தெலுங்கு, கன்னடம், வடமொழி முதலியவைகளையும் கற்றுத் தேர்ந்தார்.

இத்தாலி நாட்டில் தமது இளமைப் பருவத்திலேயே இத்தாலி, இலத்தீன், பிரெஞ்சு, கிரேக்கம் முதலிய மொழிகளில் தேர்ச்சி பெற்று விளங்கினார். தத்துவமும், இறையியலும் பயின்றார்.

திருக்குறள், கம்ப இராமாயணம், சீவக சிந்தாமணி முதலிய தமிழிலக்கிய நூல்களைக் கற்றார். தமிழ் மொழியை நன்கு பயின்று கவிதை இயற்றும் ஆற்றலும் பெற்றார்.

'ஜைன' மத நூலான 'சீவக சிந்தாமணி'யைப் போன்ற, கிறித்துவ மதத்துக்காகவே சிறந்த காவியம் ஒன்றைப் படைக்க விருப்பம் கொண்டார். 'தேம்பாவணி' என்னும் காப்பியத்தை எழுதினார். இக்காப்பியம் தமிழில் தோன்றிய முதல் கிறித்துவக் காப்பியம் என்று போற்றப்படுகிறது. வேற்று நாட்டைச் சேர்ந்த ஒருவர், தமிழகம் வந்து, தமிழ் பயின்று, சிறந்த காப்பியம் ஒன்றைத் தமிழில் படைத்த பெருமைக்குரியர் வீரமாமுனிவர்!

தமிழ் இலக்கணத்தை விரிவாக ஆராய்ந்து 'தொன்னூல் இலக்கணம்' என்ற இலக்கண நூல் இயற்றியுள்ளார். அந்நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து கூறுகளையும் அழகிய முறையில் விளக்கியுள்ளார்.

பல பெயர்களைக் கண்ட பொருட்களின் பெயர்ச் சொற்களைத் தொகுத்துப் 'பெயரகராதி' எனவும், பொருள்களின் பெயர்களைத் தொகுத்து 'பொருளகராதி' எனவும் சொற்கள் பலவாகக் கூடிநின்று ஒரு சொல்லாக வழங்குவதைத் தொகுத்துத் 'தொகையராதி' எனவும், எதுகை மற்றும் ஓசை ஒன்றாக வரும் சொற்களை வரிசைப்படுத்தித் 'தொடையகராதி' எனவும் அமைத்துத் தமிழுக்குச் செழுமை சேர்த்தவர்! 'சதுரகராதி' கண்ட பெருமையும் வீரமாமுனிவரையே சாரும். தமிழ் மொழியில் தோன்றிய நிகண்டுகளில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது இந்தச் 'சதுரகராதி'.

திருக்காவலூர்த் திருத்தலத்தையும், ஏலாக்குறிச்சியில் உள்ள அடைக்கலமாதாவையும் போற்றும் வண்ணம் 'திருக்காவலூர் கலம்பகம்' பாடியுள்ளார்.

ஒரு மொழி அகராதி சதுரகராதி, இரு மொழி அகராதி-தமிழ்-இலத்தீன்-அகராதி. மூன்று மொழி அகராதி போர்த்துக்கீஸ்-இலத்தீன்-தமிழ்-அகராதி உருவாக்கியதால், 'தமிழ் அகராதியின் தந்தை' எனப் போற்றப்பட்டார்.

'பரமார்த்த குரு கதை'யைத் தமிழில் எழுதி உரைநடை வளர்ச்சிக்கு வித்திட்டார். அந்நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்தார். அந்நூல் 'எள்ளல் சுவை' மிகுந்த இலக்கிய உரைநடை என்பதால், இவர், 'உரைநடைச் செம்மல்' எனவும் அழைக்கப்பட்டார்.

தமிழில் வரலாற்று நூல்கள் வருவதற்கு அடித்தளமிட்டவர் வீரமாமுனிவர்! அவர் எழுதிய 'வாமன் சரித்திரம்' அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!

'தொன்னூல் இலக்கணம்', `செந்தமிழ் இலக்கணம்' , `கொடுந்தமிழ் இலக்கணம்', 'இலக்கணத் திறவுகோல்' ஆகிய இலக்கண நூல்களையும், 'திருக்காவலூர் கலம்பகம், 'கித்தேரியம்மாள் அம்மானை', 'அடைக்கல மாலை', 'அடைக்கலநாயகி மேல் வெண் கலிப்பா' முதலிய சிற்றிலக்கியச் செய்யுள்களையும், `வேதவிளக்கம்', `வேதியர் ஒழுக்கம்', `பேதகம் மறுத்தல்' போன்ற உரைநடை நூல்களையும் படைத்துள்ளார்!

`தேம்பாவணி'க் காப்பியத்தில், காலப்போக்கில் இடைச்செருகல் அமைந்துவிடாமல் இருக்க எச்சரிக்கையாக, பாடல்கள், படலங்களின் எண்ணிக்கைகள் குறிப்பாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, பாடல்களில் சில மேல் நாட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட சிறப்புப் பெற்றது. தமிழில் முதன் முதல், முழுமையாக அச்சில் வந்த சிறப்புடையது. கீர்த்தனை, சிந்து, வசன காவியம், விருத்தியுரை, உரைநடை, சுருக்கம் ஆகிய பல்வேறு வடிவங்களைக் கொண்ட பெருமையுடையது. `அன்பை விதைப் போருக்கு அன்பே கிட்டும்' என்ற உயர்ந்த சிந்தனையை ஊட்டுவது. 'தேம்பாவணி'க் காப்பியம், தமிழ்நாட்டு மரபோடு ஒன்றிய, தீந்தமிழ்க் காப்பியம் எனக் கிறித்துவ மக்களால் போற்றப்படும் புனித நூலாகும்!

'தேம்பாவணி' காப்பியத்தை இயற்றியதற்காக வீரமாமுனிவருக்கு, `செந்தமிழ்த் தேசிகர்' என்னும் பட்டம் வழங்கப்பட்டது.

திருக்காவலூரில் ஒரு கல்லூரியை ஆரம்பித்து அதில் தாமே தமிழாசிரியராக இருந்து இலக்கணம் கற்பித்தார்.

தமிழகத்தில் வாழ்ந்த புலவர்களுள் பல்துறை வித்தகராகத் திகழ்ந்தவர் வீரமாமுனிவரே! இலக்கண அறிவு, இலக்கியப் புலமை, மொழியியல் உணர்வு, பக்தி இலக்கிய ஆற்றல், ஆய்வியற் சிந்தனை, பண்பாட்டில் தோய்வு எனப் பல்வகையிலும் சிறந்தவர்! அவர்தம் திறமையைப் பயன்படுத்தித் தமிழுக்கு வீரமாமுனிவர் ஆற்றியுள்ள பணிகள் தமிழக வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும். தமிழுக்காகவே வாழ்ந்து தொண்டு செய்து புகழ் எய்திய வீரமாமுனிவர் 04.02.1747ஆம் நாள் அம்பலக்காட்டு குருமடத்தில் இயற்கை எய்தினார்.

- பி.தயாளன்

Pin It

                தமிழை உயர்தனிச் செம்மொழி எனச்சுட்டிய ஆராச்சியாளர்! தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு இயல், இசை, நாடக அணிகளைச் சூட்டி அழகு பார்த்தவர்! தன்னால் தமிழ் வாழ வேண்டும் என்ற உணர்வாளர்! தாய்மொழித் தமிழிலேயே கல்வி கற்க வலியுறுத்தியவர்! இம்மண்ணில் முப்பத்தி மூன்று ஆண்டுகளே வாழ்ந்தாலும், தமிழ்-தமிழர் முன்னேற்றத்திற்காகத் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்! ‘சூரிய நாராயண சாஸ்திரி’ என்னும் தமது வடமொழிப் பெயரை முதன் முதலில் 'பரிதிமாற் கலைஞன்' எனத் தனித் தமிழ்ப் பெயராக்கிக் கொண்டவர். நாடகத் தமிழுக்கு நயத்தகு இலக்கணம் வகுத்தவர். நவீனத் தமிழிலக்கிய வரலாற்றாராய்ச்சிக்கு வித்திட்டவர். 'சூரிய நாராயணர்'‍,'பரிதிமாற்கலைஞர்’ எனப் பெயர்கொண்ட பின்னரும், `திராவிட சாஸ்திரி’ என விடாது புகழப்பட்டவர்!!

                மதுரைக்கு அருகில் உள்ள விளாச்சேரி என்னும் சிற்றூரில் கோவிந்த சாஸ்திரி-இலட்சுமி அம்மாள் வாழ்விணையருக்கு 06.07.1870 ஆம் நாள் மகனாகப் பிறந்தார் பரிதிமாற் கலைஞர்.

                தமிழ்ப் பள்ளியில் சேர்ந்து அன்னைத் தமிழும் ஆரம்பக் கணிதமும் கற்றார். தம் தந்தையாரிடம் வடமொழியையும் முறையாகப் பயின்றார். பின்னர் மதுரை, பசுமலைக் கல்லூரியில் சேர்ந்து (ஆரம்பக்கால அமெரிக்கன் கல்லூரி) கல்வியைத் தொடர்ந்தார். அக்கல்லூரித் தமிழாசிரியர் மூலம், தமிழ் இலக்கணம் நன்குக் கற்றார். மதுரை நகரிலிருந்த உயர்நிலை பள்ளியில் சேர்ந்து தமது கல்வியை மேலும் தொடர்ந்தார். மதுரைக் கலாசாலைத் தமிழாசிரியர் மகாவித்துவான் சு. சபாபதி முதலியாரிடம் தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களையும் மறுவறக் கற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் எஃப்.ஏ தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சியடைந்தார். இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி வழங்கிய உதவித் தொகையையும் பெற்றார். சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் சேர்ந்தார். பரிதிமாற் கலைஞர் கல்லூரியில் பயிலும் போதே “விவேக சிந்தாமணி” என்னும் இதழில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். தமிழிலும் வேதாந்த சாத்திரத்திலும் பல்கலைக் கழக அளவில் 1892ஆம் ஆண்டு நிகழ்ந்த பி.ஏ. தேர்வில் முதல் மாணவராகத் தேறினார். தமிழில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றதையொட்டி மன்னர் பாஸ்கர சேதுபதி பெயரால் நிறுவப்பட்ட பொற் பதக்கத்தையும் பரிசாகப் பெற்றார்.

                யாழ்ப்பாணத் தமிழறிஞர் சி.வை. தாமோதரம் பிள்ளை அக்காலத்தில் சென்னையில் வாழ்ந்து வந்தார். பல்கலைக் கழக அளவில் தமிழில் முதலிடம் பெற்ற பரிதிமாற் கலைஞரைத் தமது இல்லத்திற்கு அழைத்தார். ஒரு வினாத்தாள் கொடுத்து விடை எழுதித் தருமாறு கூறினார். பரிதிமாற் கலைஞர் அரைமணி நேரத்தில் விடை எழுதி அளித்தார். “உமது விடைகள் உயரிய செந்தமிழ் நடையில் புதுக்கருத்துக்களைக் கொண்டு விளங்குகின்றன. உம்மைத் `திராவிட சாஸ்திரி’ என்று அழைத்தலே சாலப் பொருந்தும்" என்று பாராட்டி, தாம் பதிப்பித்த இலக்கண, இலக்கிய நூல்களைத் தம் கையெழுத்திட்டு அன்பளிப்பாக வழங்கினார்.

                அக்காலத்தில் பிற துறை ஆசிரியர்களைவிட தமிழாசிரியர்களுக்கு ஊதியம் குறைவு. பரிதிமாற் கலைஞர், தமிழ் மீது உள்ள ஆறாக்காதலால், ஊதியம் குறைவானாலும் தமிழாசிரியர் பணியையே, தாம் பயின்ற சென்னைத் கிறித்துவக் கல்லூரியில் ஏற்றார். அக்கல்லூரியின் முதல்வராக இருந்த டாக்டர் மில்லர், பரிதிமாற் கலைஞரின் தமிழார்வத்தைக் கண்டு வியந்து, பிற துறை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் உயர் ஊதியத்தை இவருக்கும் வழங்கினார். கல்லூரி அளவில் தமிழாசிரியர் பணியை விரும்பி ஏற்றுக் கொண்ட முதல் பட்டதாரி இவரேயாவார்.

                பரிதிமாற் கலைஞர் தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிப் புலமை படைத்தவர். மாணவர்களுக்கு இலக்கணத்தையும், இலக்கியத்தையும் சுவையுடன், மேலும் கற்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும்படியாகக் கற்பிப்பார். சமகாலக் கருத்துக்களைப் பண்டைய இலக்கியம் கொண்டும், தமிழர் பண்பாடு, நாகரிகம், மொழி வரலாறு முதலியவற்றை ஆராய்ச்சி நோக்கிலும், வரலாற்றுச் சான்றோடு விளக்குவார்.

                கல்லூரியில் பயிலும் மாணவர்களுள் இயல்பாகவே தமிழறிவும், தமிழார்வமும் உடைய மாணவர்களைத் தமது இல்லத்திற்கு அழைத்து அவர்களுக்கு, தொல்காப்பியம், நன்னூல், இறையனார் அகப்பொருள், நம்பியகப் பொருள், மாறனலங்காரம், தண்டியலங்காரம் முதலியவற்றையும், சைவ சமய சாத்திர நூல்களையும் கற்பித்தார். ஆண்டுக்கு ஒருமுறை தேர்வும் நடத்தினார். அம்மாணவர்கள் `இயற்றமிழ் மாணவர்கள்’ என்று அழைக்கப்பட்டனர்.

                பரிதிமாற் கலைஞர், `சென்னைச் செந்தமிழுரைச் சங்கம்’ என்ற சங்கத்தை நிறுவி, அதன் மூலம் கல்லூரித் தமிழ்ப் பாடங்களுக்கு உரை எழுதி அளித்தார்.

                கல்லூரிப் பாடத்திட்டத்திலிருந்து தமிழை வில‌க்குவதற்குச் சென்னைப் பல்கலைக் கழகம் 1902 ஆம் ஆண்டு முடிவெடுத்தது. அதை அறிந்த பரிதிமாற் கலைஞர், மு.சி.பூரணலிங்கம் பிள்ளையுடன் இணைந்து அம்முடிவை முறியடித்தார். கல்லூரிப் பாடத்திட்டத்தில் தமிழ் மொழியும் தொடர வழிவகுத்தார் என்பது வரலாற்றுப் பதிவு.

                மதுரையில் தமிழ்ச் சங்கம் 1901ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 15ஆம் நாள் தொடங்கப் பெற்றது. அத்தொடக்க விழாவில் பரிதிமாற் கலைஞர் கலந்து கொண்டு தமிழ்ச் சங்கம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விவரித்தார். தமிழ்ச்சங்கம் நடத்திய `செந்தமிழ்’ இதழில், தமிழின் சிறப்புக் குறித்து `உயர்தனிச் செம்மொழி’ என்னும் ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதினார். தமிழைச் செம்மொழி என்று முதன் முதலில் மெய்ப்பித்து நிறுவியவர் பரிதிமாற் கலைஞரேயாவார்.

                மேலும், “தமிழ், தென்னாட்டில் வழங்கும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் முதலியவற்றுக்கெல்லாம் தலைமையானது. எனவே, தமிழ் உயர் மொழியாகும். தான் வழங்கும் நாட்டில் பயிலும் ஏனைய மொழிகளின் உதவியின்றித் தனித்து இயங்கவல்ல ஆற்றல் சான்றதே தனிமொழி. தமிழ் தனித்து இயங்கவல்லதால் தனிமொழியாம்” என்று விளக்கினார். “திருந்திய பண்புஞ், சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூயமொழியே, செம்மொழியாம்” என்பது செம்மொழிக்கான இலக்கணம். தமிழ் மொழி, செம்மொழிக்கான இலக்கணத்தைக் கொண்டுள்ளது என்பதை நூறாண்டுகளுக்கு முன்பே எடுத்துரைத்தவர் பரிதிமாற் கலைஞர்!

                தமிழைக் கற்ற பிறகே ஆங்கிலம் கற்க வேண்டும் என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பாக நேரிதாய் விளக்கியவர். தாய்மொழியாம் தமிழ் வழிக் கல்வியை வலியுறுத்தி, “ஐந்து வயதாகுமுன்னர் ஆங்கிலம் கற்கத் தொடங்குகின்றவர், தமிழ் வாசமும் ஏற்காமல் ஆங்கிலக் கல்வி தொடங்கும் மாணவர் உடல் தேய்ந்து கண்பூத்து மனமிற்று நாளடைவில் யமனுக்குணவாகின்றனர்” என்று கூறுகிறார் பரிதிமாறு கலைஞர். குழந்தைகள் பன்னிரெண்டு வயது வரை தமிழ் மொழியிலேயே கல்வி கற்க வேண்டுமென்று ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே முழங்கியவர்.

                `மதிவாணன்’ என்ற நாவல், ரூபாவதி’ அல்லது `காணாமற் போன மகள்’, `கலாவதி’ முதலிய உரைநடை நாடகங்கள், `மானவிஜயம்’ என்ற செய்யுள் நாடகம், `தனிப்பாசுரத் தொகை’, `பாவலர் விருந்து’ `சித்திரகவி விளக்கம்’ முதலான கவிதை நூல்கள், `தமிழ் மொழியின் வரலாறு’ என்ற ஆய்வு நூல், `ஸ்ரீ மணிய சிவனார் சரித்திரம்’ என்ற வாழ்க்கை வரலாற்று நூல், `நாடகவியல்’ என்ற நாடக இலக்கண நூல் ஆகிய நூல்களை எழுதி உலகுக்கு அளித்துள்ளார் பரிதிமாற் கலைஞர்.

                `தமிழ்ப்புலவர் சரிதம்’ என்ற கட்டுரை நூலில், செயங்கொண்டார், புகழேந்திப் புலவர், வைத்தியநாத நாவலர், சுப்பிரமணிய தீட்சதர், மயிலேறும் பெருமாள் பிள்ளை, சுவாமிநாத தேசிகர், அருணாசலக் கவிராயர், கடிகை முத்துப் புலவர், சி.வை. தாமோதரம் பிள்ளை ஆகிய ஒன்பது புலவர்களுடன் தமிழறிஞர்கள் பலரின் வரலாற்றை எழுதியுள்ளார்.

                சபாபதி முதலியார் இயற்றியுள்ள `திருக்குளந்தை வடிவேலன் பிள்ளைத் தமிழ்’, `மதுரைமாலை’ ஆகிய நூல்களையும், `கலிங்கத்துப் பரணி’, `நளவெண்பா’ ஆகிய நூல்களையும், `திருவுத்திரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத் தமிழ்’, மழவை மகாலிங்க அய்யரின் `இலக்கணச் சுருக்கத்தை’யும், தாண்டவராய முதலியாரின், `பஞ்ச தந்திரத்தை’யும் பதிப்பித்தார். சுமார் 67 நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். இயற்றமிழ் மாணவர்களும் தாமும் இயற்றிய, `நாமகள் சிலம்பு’, `தமிழ் மகள் மேகலை’, `இன்பவல்லி’, `ஞான தரங்கினி’, `கலாநிதி’ ஆகிய தலைப்புகளில் அரும்பெரும் நூல்களை வெளியிட்டுள்ளார். பரிதிமாற் கலைஞர் எலும்புருக்கி நோயால் தாக்குண்டு 02-01-1903 ஆம் நாள், தமது முப்பத்து மூன்றாம் வயதில் மறைந்தார் என்பது முத்தமிழுக்கு நேர்ந்த பேரிழப்பாகும்.

                “பரிதிமாற் கலைஞரால் இயற்றப்பட்ட நூல்கள் யாவும், தமிழ் அன்னைக்கு ஏற்ற அணிகள். அவைகளுள் ஒன்று `தமிழ் மொழியின் வரலாறு; தமிழ் நாட்டில், தமிழ் மொழி வரலாற்றுக்கு வழிகாட்டியவர் பரிதிமாற் கலைஞரே. அவர் நீண்ட நாள் உலகில் வாழ்ந்திருந்தால் தமிழ் அன்னை இழந்த அரியாசனத்தில் ஏறி அமர்ந்திருப்பாள். முத்தமிழும் ஆக்கம் பெற்றிருக்கும்” என்று புகழ்ந்துரைத்துள்ளார் தமிழ்த் தென்றல் திரு.வி.க.

                “முத்தமிழ் வல்லவன் பரிதிமாற் கலைஞன்

நாடகத் தமிழ் இலக்கணம் மறைந்ததே

நாடகத் தமிழ் இலக்கியம் மறைந்ததே

ஈடுசெய் வேனோ என்று துடித்தான்

இயன்ற மட்டும் சிற்சில கொடுத்தான்”.

என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார்.

                சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் 1970 ஆம் ஆண்டு பரிதிமாற் கலைஞருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

                `தமிழைச் செம்மொழி’ என்று நடுவண் அரசு அதிகாரப் பூர்வமாய் அறிவித்து உள்ளது. பரிதிமாற் கலைஞரின் அன்றைய முயற்சிக்குக் கிடைத்த இன்றைய வெற்றியாகும் இது.

                கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது, பரிதிமாற் கலைஞரின் பிறந்த ஊரான விளாச்சேரியில் அவர் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக்கிப் புதுப்பிக்கச் செய்துள்ளார். அவரது நூல்கள் அனைத்தையும் நாட்டுடைமையாக்கி அறிவித்தும், பெருமை சேர்த்துள்ளார்.

                `பேசுந் தமிழ் கூடப் பைந்தமிழாக இருக்க வேண்டும். தமிழ், மேலும் உலகம் எல்லாம் நிலைபெற வேண்டும். தமிழர்கள் உயிர்த் தமிழ் மீது உயரிய நாட்டம் கொள்ள வேண்டும். தமிழ் அரியாசனம் ஏறிச் சரியாசனம் கொள்ள வேண்டும்" - என்றெல்லாம் விரும்பியவர்; தமிழே தன் இறுதி மூச்சாக வாழ்ந்தவர் பரிதிமாற் கலைஞர்! அவர் புகழ் `செம்மொழித் தமிழ்’ உள்ளவரை சீரோடும் சிறப்போடும் நிலைத்து நீடு நிற்கும்!

- பி.தயாளன்

Pin It

 பன்மொழிப் புலமையாளர், சொல்லாய்வில் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத அளவில் திகழ்ந்தவர். தமிழின் விடுதலைக்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர். மொழியியற் சிந்தனையாளர், உலகத் தமிழ்க் கழகம் கண்டவர். அவர்தான் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆவார்.

 தேவநேயன் என்ற இயற்பெயர் கொண்ட பாவாணர் சங்கரன்கோயில் அருகில் உள்ள பனைவடலி என்னும் சிற்றூரில் ஞானமுத்து, பரிபூரணம் தம்பதியருக்கு பத்தாவது குழந்தையாக 1902ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ம் நாள் பிறந்தார். பாவாணர் ஆம்பூரில் எட்டாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். பாளையங்கோட்டைத் திருச்சபை விடையூழியக் கழக உயர்நிலைப்பள்ளியில் இறுதி வகுப்பு வரை பயின்றார்.

 பள்ளியில் படிக்கும்போது படிப்பில் சிறந்த மாணவராக விளங்கினார். மேலும் பாளையங்கோட்டையில் மேல்வகுப்புக் கல்வி பெற்றார். இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முறம்பு என்னும் சியோன் மலையில் உயர்தரப்பள்ளியில் முதன் முதலாக ஆசிரியராக பணிபுரிந்தார். பின்பு ஆம்பூர் பள்ளியில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

 1924-ல் பண்டிதத் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதியவர்களில் பாவாணர் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 சென்னையில் பெரம்பூர் கலவல கண்ணனார் உயர்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி கெல்லற்று உயர்நிலைப்பள்ளி, தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரி உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் உதவித் தமிழாசிரியராகவும், தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

 “ஒப்பியன் மொழி நூல் முதன்மடலம் திராவிடம் முதற்பாகம்” என்ற நூலை 1940-ல் பாவாணர் படைத்தார். திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச்சங்கம் நடத்திய தனித்தமிழ் புலவர் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார். பின்பு சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் தேர்வும், பி.ஓ.எல் என்னும் கீழ்க்கலைத் தேர்வும் எழுதி வெற்றி பெற்றார்.

 மன்னார்குடி பின்லேக் கல்லூரி உயர்நிலைப்பள்ளியில் ஆறாண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். மன்னார்குடியில் பணிபுரிந்து கொண்டிருந்த போதுதான் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக தொடர்பும் பாவாணருக்கு ஏற்பட்டது. மொழியாராய்ச்சி என்ற கட்டுரை நூல் வெளியிடப்பட்டது. மன்னார்குடியிலிருக்கும்போது இசைத்தமிழ் மீது ஈடுபாடு ஏற்பட்டு இசைப்பா இயற்றுவதிலும் இசைக்கருவி இயக்குவதிலும் தேர்ச்சி பெற்றார்.

 மன்னார்குடியிலிருந்து வெளியேறிய பாவாணர் திருச்சிராப்பள்ளி பிசப்பு ஈபர் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினார். திருச்சியில் பாவாணர் பணியாற்றியபோதுதான் பன்மொழிகள் பயிலுவதற்கும், நூல்கள் எழுதவதற்கும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

 1937-ல் இந்தி கட்டாயப் பாடமாக புகுத்தப்பட்டபோது பாவாணர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பெரும்பங்கு கொண்டார்.

 மாணவர்களுக்குப் பயன்படும் கட்டுரை நூல்களும், இலக்கண நூல்களும் எழுதி வெளியிட்டார். வேர்ச்சொற் சுவடி என்ற நூலையும் எழுதி வெளியிட்டார்.

 பணியாற்றிக் கொண்டே திராவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே என்ற இடுநூலை (thesis) எழுதிப் பல்கலைக் கழகத்தில் எம்.ஓ.எல். பட்டத்திற்காக ஒப்படைத்தார். ஆனால், அந்நூல் பல்கலைக்கழகத்தால் தள்ளப்பட்டது. அப்போது பாவாணர் இனிமேல் இந்தியாவிற்குள் எனக்கு ஒரு தேர்வும் இல்லை ஆகையால் எனது நூல்களையெல்லாம் ஒவ்வொன்றாய் வெளியிடப் போகிறேன் என முடிவெடுத்து செயல்பட்டார்.

 பின்பு சேலம் நகராண்மைக் கல்லூரியில் பாவாணர் பணியில் சேர்ந்தார். சேலத்தில் பாவாணரிடம் பயின்ற மாணவர் தான் பின்னாளைய தென்மொழியாசிரியரும், உலகத் தமிழினக் கழக செயலாளருமான பெருஞ்சித்தரனார். சேலத்தில் பணி செய்த காலத்தில் பாவாணர் தாமே பயின்று தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

 அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் திராவிட மொழியாராய்ச்சித் துறையில் துணைப் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பாவாணர் பணிபுரியும்போது மொழி நூற் கல்வியும் ஆராய்ச்சியும் எனக்கு இன்பமான பாடத்துறைகள். அதனால் நான் இன்று பெறும் சம்பளம் கரும்பு தின்னக் கூலியாகும். ஆதலால் வேலை செய்யாது காலத்தைச் கழிக்கவோ வேற வேலை செய்யவோ இயலவே இயலாது என்று கூறினார்.

 பாவாணரின் சம காலத்தவர்கள் மாவட்ட ஆட்சியர்களாக, வங்கி அரிகாரிகளாக, அரசியல் கட்சித் தலைவர்களாக உயர்ந்தார்கள். ஆனால் பாவாணர் எப்படியும் வாழலாம் என்பதற்கு மாறாக இப்படித்தான் வாழவேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்ந்தவர். “எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு” என்ற கொள்கையுடன் வாழ்ந்தவர்.

  பாவாணர் அவர்கள் எசுத்தர் என்ற பெண்மணியை மணந்தார். அவர்களுக்கு மணவாளதாசன் என்ற மகன் பிறந்தார். குழந்தைக்கு ஒரு வயதாகும் முன்னரே எசுத்தர் இயற்கை எய்திவிட்டார். பின்பு தமது அக்கா மகள் நேசமணி என்ற பெண்மணியை துணைவியராக ஏற்றார். பாவாணருக்கு நச்சனார்க்கினிய நம்பி, சிலுவையை வென்ற செல்வராயன், அருங்கலை வல்லான், அடியார்க்கு நல்லான், மடந்தவிர்த்த மங்கையர்கரசி, மணிமன்றவாணன் ஆகிய குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் படித்து பல நிலைகளில் பணியாற்றி வருகின்றனர். 27-10-1963-ல் நேசமணி அம்மையார் இயற்கை எய்தினார்.

 பாவாணர் தனித் தமிழ்க் கழகம், தென்மொழி, உலகத் தமிழ்க் கழகம், பாவாணர் நூல் வெளியீட்டுக் குழு, செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி முயற்சி – ஆகியவைகளைத் தோற்றுவித்தார்.

 தென்மொழி இதழின் சிறப்பாசிரியராகப் பணியாற்றினார். 1965-ல் இந்தி எதிர்ப்புப் போர் நடைபெற்ற போது தென்மொழி இதழில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் அரசினால் ஊன்றி கவனிக்கப்பட்டது. அதனால் அரசின் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இந்தியப் பாதுகாப்பு சட்டப்படி வழக்கு தொடரப்பட்டது. பாவாணர் மீதும் வழக்கு போடப்பட்டது. ஆனால் பெருஞ்சித்தனார் எழுதப்பட்ட கட்டுரைகளுக்கு பொறுப்பேற்றதால் பாவாணர் பெயர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது.

 பாவாணர் அவர்கள் அரசியல் கட்சித்தலைவர்கள் தமிழர்களிடம் ஏற்பட்ட தமிழ்ப்பற்றைத் தங்கள் கட்சியின் வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். உண்மையில் தமிழை வளர்க்கும் பணியில் அவர்கள் ஈடுபடவில்லை என்று கருதினார். உலகத் தமிழ்ச் கழகத்தினை உருவாக்கி செயல்படுத்தினார். தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்டார்.

 பாவாணர் அவர்கள்

 தமிழ் வரலாறு
 வடமொழி வரலாறு
 பண்டைத்தமிழ் நாகரிகமும் பண்பாடும்
 The  Primary Classical Language of the works என்ற ஆங்கில நூல்
 திருக்குறன் தமிழ் மரபுரை
 இந்தியாவில் தமிழ் எவ்வாறு கெடும்
 தமிழர் மதம்
 மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடமை
 தமிழ் வரலாறு

 ஆகிய நூல்களைப் படைத்துள்ளார். சுமார் 50-க்கும் மேற்பட்ட தமிழ் ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார் பாவாணர் அவர்கள். மேலும் பழமொழிகள் பதிமூன்றாயிரம் தொகுத்துள்ளார் பாவாணர். இலக்கணத்தில் இணை மொழிகள், கட்டுரை வரையல், தமிழ்நாட்டு விளையாட்டுகள் ஆகியவைகள் குறித்தும் நூல்கள் எழுதியுள்ளார்.

 அகரமுதலித்திட்டம் தொடங்கினார். அரசு பாவாணரைப் புரிந்துகொண்டு அவரது அறிவை பயன்படுத்திக்கொள்ள முன்வரவில்லை. இருப்பினும் தமிழ் அறிஞர் பெருமக்களின் முயற்சியினால் 8-5-74-ல் தமிழ்நாடு அரசால் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநராக பாவாணர் அமர்த்தப்பட்டார்.

 சேலம் தமிழ்ப் பேரவை பாவாணரின் தமிழ்த் தொண்டினைப் பாராட்டி “திராவிட மொழி நூல் ஞாயிறு” என்று பட்டமும் வெள்ளித்தட்டும் வழங்கிப் பாராட்டியது.

 மதுரை தமிழ் வளர்ச்சிக் கழகம் பாவாணருக்கு “தமிழ்ப் பெருங்காவலர்” என்னும் விருது வழங்கி சிறப்பித்து பறம்புமலைப் பாரதி விழாவில் பாவாணருக்கு “செந்தமிழ் ஞாயிறு” என்னும் சிறப்பு விருது வழங்கப்பெற்றது.

 தமிழக அரசு 1979-ம் ஆண்டு பாவாணருக்கு “செந்தமிழ்ச் செல்வர்” என்னும் பட்டம் அளித்து சிறப்பித்தது.

 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பாவாணர் அறக்கட்டளை, பெங்களூர் பாவாணர் பதிப்பகம், பாவாணர் ஆராய்ச்சி நூலகம் மதுரை, பாவாணர் பதிப்பகம், பாவாணர் மைய நூலகம் சென்னை முதலியவைகள் பாவாணர் கருத்துக்களையும், புகழையும் வெளிப்படுத்தும் மையங்களாக விளங்குகின்றன.

 ஆண்டில் ஒரு நாளைப் பெயர் மாற்றத் திருநாள் என்று ஆண்டுதோறும் கொண்டாடி, பிறமொழிப் பெற்றவரெல்லாம் அந்நாளில் தம் பெயரைத் தனித் தமிழ்ப் பெயராக மாற்றிக்கொள்ள வேண்டும். அதை இல்லத்தில் விழாவாகக் கொண்டாடிடவேண்டும் எனத் தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் பாவாணர் அவர்கள்.

 விளம்பரம் தேடி அலையும் இந்த உலகில், என்னைப் பற்றி விளம்பரம் ஒன்றும் வேண்டேன். இது எனக்கு மிக மிக வெறுப்பானது. மலர் வெளியிடுதல் வேண்டா, பிறந்த நாள் கொண்டாடும் வழக்கம் இல்லை என புகழும் வேண்டாப் புகழாளராக பாவாணர் விளங்கினார்.

    பரிசச் சீட்டின் தீமைகள்

1) உழைப்பின்றி ஒருவன் திடுமெனச் செல்வனாதல்
2) மக்கட்குப் பேராசை உண்டாதல்.
3) செல்வரும் பிற நாட்டாரும் பரிசு பெறல்
4) பரிசு பெற்றவன் மீது அக்கம் பக்கத்தார்க்கு பொறாமை ஏற்படுதல்.
5) பெரும்பாலும் ஏழை மக்கள் வாழ்நாள் முழுவதும் பரிசு பெறாமை.
6) ஒரு சிலர் சம்பளம் முழுவதையும் இழந்துவிடுகின்றனர்.
7) ஒருவர் பிறர் உழைப்பின் பலனை அவர் விருப்பத்திற்கு மாறாக நுகர்தல்
8) சீட்டுத் தொலைந்தால் பரிசு பெற வழியின்மை
9) வீணாக ஏக்கம் கொள்பாரின் வினை கெடுதல்
10) ஒழுக்கங்கெட்டவரையும் ஊக்குதல்.

“பரிசச் சீட்டு வருமானத்தைக் கொண்டு அறப்பணி செய்யப்பட்டதெனின் கொள்ளையடித்த பொருளைக் கொண்டும் அது செய்யலாம் என்க” என வலியுறுத்தினார்.

 மக்கள் தொகை பெருக்கத்தைப் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார்.

 சாதிப்பட்டம் நீக்கப்படவேண்டும், கலப்பு மணம் ஊக்குவிக்கப்படவேண்டும், வீண் சடங்குகளை விலக்க வேண்டும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு கட்டிக் கொடுக்கும் குடியிருப்புகளும் ஊரினின்று நீங்கியிராது ஏனைய வகுப்பார் குடியிருப்புகளோடு சேர்ந்தே இருத்தல் வேண்டும். வர்ண வேறுபாட்டை ஒழித்திடவேண்டும் ஆகிய கொள்கைகளை தமிழக மக்கள் பின்பற்றிட வேண்டுமென வலியுறுத்தினார்.

 வேலை இன்மையிலும், விளைவு இன்மையாலும் நேர்ந்த உணவின்மையே களவிற்கும், கொள்ளைக்கும் காரணமாகிறது என்றார்.

 சொல்பவரைப் பாராமல் சொல்லும் செய்தியைப் பார்த்து நடக்கும் நிலை உண்டானால் உலகம் எத்தனை எத்தனை நலங்களை எய்திருக்கும். தீமைகளை விட்டு ஒழித்திருக்கும் என்றார் பாவாணர்.

 15-1-1981 நள்ளிரவு பாவாணர் அவர்கள் இயற்கை எய்தினார்.

 பாவாணரின் அடிச்சுவட்டில் தமிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் பாடு படுவதே நாம் அவருக்கு செய்யும் மரியாதையாகும்.

Pin It