நூறு ஆண்டுகளுக்கு முன், சித்தீக் ஹுசைன் என்ற வியாபாரி பம்பையிலிருந்து தனது துனி வியாபாரத்தை முடித்துக் கொண்டு, சொந்த ஊரான மேல்விஷாரம் (வேலூர்) திரும்பிக் கொண்டு இருந்தார்.

abdul hakeemநள்ளிரவில் ரயில் சென்னை சென்ட்ரலை வந்தடைந்தது. மறுநாள் மாலை தான் மேல்விஷாரம் செல்லும் அடுத்த ரயில் என்பதால், ஏதாவது விடுதியில் தங்கலாம் என முடிவெடுத்தார்.

அந்தக் காலத்தில் சென்னை சென்ட்ரல் அருகே "இராமசாமி முதலியார் தங்கும் விடுதி" என்ற ஒரே ஒரு லாட்ஜ் மட்டுமே இருந்தது.

ஆனால் அங்கு சென்ற சித்தீக் ஹுசைன்'க்கு அதிர்ச்சி காத்துக் கொண்டு இருந்தது. விடுதியின் வாசலில் "முஸ்லீம்களுக்கு அனுமதி இல்லை" என்ற அறிவிப்புப் பலகை தொங்கிக் கொண்டு இருப்பது கண்டு அதிர்ந்து போனார்.

வியாபாரத்தில் நஷ்டம், உடல் நலக்குறைவு என மனத்துயரிலிருந்த அவருக்கு இந்த காட்சி மேலும் சோர்வை ஏற்படுத்தியது.

ஊர் திரும்பிய பின்பு கூட இந்த அவமானம் அவர் மனதில் மாறாத வடுவாகவே நிலைத்திருந்தது. பின் அவரது உடல் நிலை மோசமான போது, தனது 18 வயது மகனை அழைத்து "சென்னையில் முஸ்லீம்களுக்கான தங்கும் விடுதியைக் கட்ட வேண்டும்" என்ற தனது ஆசையை வசீயத்தாக (வாக்குறுதியாக) தனது மகனிடம் பெற்றுக் கொண்டார்.

தந்தையின் மனத்தீயை தன் மனதில் ஏந்திய அந்த இளைஞன், தனது வியாபாரத்தில் கடுமையாக உழைத்தார். 35 ஆண்டுகளுக்குப் பிறகு எந்த விடுதி தனது தந்தையை முஸ்லிம் என்பதற்காக அவமானப்படுத்தியதோ, அதே விடுதிக்கு அருகில், சிலரின் கடுமையான இடையூறுகளுக்குப் பின் 50,000 ரூபாய்க்கு ஒரு நிலத்தை வாங்கி,1921 ஆம் ஆண்டு 43 தங்கும் அறைகளுடன், இஸ்லாமியக் கட்டிடக் கலை அமைப்பில், தனது தந்தையின் நினைவில் "ஸித்திக் ஷராய்" என்ற பெயரில் விடுதியைத் திறந்தார்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி பள்ளிவாசல், தங்கும் முஸ்லிம் பயணிகளுக்கு முதல் மூன்று நாட்களுக்கு இலவசம், பின் மூன்று மாதங்களுக்குக் குறைந்த கட்டணம் எனப் பரிவோடு எழுந்து நின்றது - 'ஸித்திக் ஷராய்'.

இதன் மூலம் அந்த இளைஞனுக்கு இருந்தது வெறும் பலி வாங்கும் வெறி அல்ல; அதையும் தாண்டிய சுயமரியாதை உணர்வு என்பதை இந்தத் தமிழகம் உணர்ந்து கொண்டது. அந்த சிறப்புமிக்க இளைஞனின் பெயர் 'சி.அப்துல் ஹக்கீம் சாஹீப்'.

சி. அப்துல் ஹக்கீம் சாஹீப் அவர்கள் 1863'ல் ஆற்காடு மாவட்டத்தில் பிறந்தார். இவரது பூர்வீகம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டையாகும். மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த சாஹீப் முஸ்லீம்களின் கல்வி வளர்ச்சியில் பெரும் அக்கறை காட்டினார்.

1965'ல் மேல் விஷாரத்தில் ஒரு கல்லூரியைத் தொடங்கினார். அதை அப்போது திறந்து வைத்தவர் அன்றைய சென்னை மாகாண முதல்வர் பக்தவச்சலம்.

இது தவிர தமிழகத்தின் பல பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஏராளமான நிதி உதவிகளை வழங்கியுள்ளார்.

சென்னை அங்கப்பன் நாயக்கன் தெருவில் பள்ளி நடத்தி வந்த இந்துப் பெண் இவரிடம் உதவியை நாடி வந்த போது, அந்த பகுதியிலிருந்த தனது மகனின் வீட்டை காலி செய்யச் சொல்லி, அதை அவர்களுக்கு வழங்கினார். அங்கு அந்த பள்ளிக் கூடம் தொடர்ந்து நடக்க வழி செய்தார். அந்த பள்ளியே சி. அப்துல் ஹக்கீம் இந்து முஸ்லீம் பள்ளி என்ற பெயரில் பின் நாளில் அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டது.

இது மட்டுமல்லாது இஸ்லாமியப் பணியிலும் சாஹிப் அவர்கள் வாரி வழங்கினார்.

வேலூர் பாகியாதுஸ் ஸாலிஹாத் மார்க்கக் கல்லூரிக்கு ஒரு லட்ச ரூபாய்.

உம்ராபாத் மத்ரஸா தாருல் உலூமுக்கு 50,000 ரூபாய்.

வாணியம்பாடி முஸ்லிம் சங்க வருமானத்துக்குச் சென்னை பெரிய மேட்டில் ஆறு கிடங்குகள்.

மேல்விஷாரம் உயர் நிலைப்பள்ளிக்குக் கட்டிடம், மேலும் அதன் வருமானத்திற்காக சில கட்டிடங்கள்.

ஆம்பூர் மஸ்ஹருல் உலூம் உயர் நிலைப்பள்ளிக்காக ஒரு அங்காடி வாங்கி அப்துல் ஹகீம் அங்காடி என்ற பெயரில் வக்ஃபு செய்தார்.

திருவல்லிக்கேணி முஸ்லிம் உயர் நிலைப்பள்ளியின் கட்டிடம்.

கட்டாக்கில் உள்ள தேசியக் கல்லூரிக்கு 25000 ரூபாய்.

பெங்களூர் அநாதை விடுதிக்கும் உயர் நிலைப் பள்ளிக்கும் நிதி, அதன் சார்மினார் மஸ்ஜிதுக்கு நிதி.

பல சிற்றூர்களிலும் பள்ளிகள்.

சேலத்தில் ஒரு பள்ளிவாசல்.

குடியாத்தத்தில் ஒரு பெரிய பள்ளிவாசல்.

மைசூர் பெரிய பஜாரில் ஜாமிஆ மஸ்ஜித்.

ஆற்காடு அப்துல் ஹகீம் போர்டு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரைச் சம்பள உதவி என இவரது உதவி பட்டியல் மிக நீண்டது.

சாகிப் அவர்கள் அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்தார். காங்கிரஸ் கட்சியிலும் கிலாபத் இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டார். அதுமட்டுமின்றி முஸ்லிம் லீக்கிக்லும் முக்கிய பொறுப்புக்களில் உறுதியோடு செயல்பட்டார். இவரது அரசியல் வாழ்வில் 1936 இவர் தொடங்கிய "முஸ்லிம் முற்போக்கு கட்சி" இவர் மீது விமர்சனம் வரக் காரணமாகியது.

தமிழ் இலக்கியத்திலும் இவர் தடம் பதித்தார். காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்ற காலங்களில், அவர் சிறையிலிருந்து எழுதிய 'நேர்வழியின் விளக்கம்' மற்றும் 'நேர்வழி காட்டும் நூல்' ஆகிய இரு நூல்கள் தமிழில் சமூகத்தால் வெகுவாகப் பாராட்டப்பட்ட நூல்களாகும்.

1938 புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள சென்னை வந்திருந்த சாகிப் அவர்கள் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்தார்.

"இந்து முஸ்லீம் ஒற்றுமைக்குப் பாடுபட்ட ஒரு உன்னத மனிதரை நாடு இழந்து விட்டது. கல்விக்காகவும், சமூக நலனுக்காகவும் அயராது பாடுபட்ட ஒரு பெருமகனை நாடு இழந்துவிட்டது." என இந்து நாளிதழ் அவருக்கு இரங்கல் கட்டுரை வெளியிட்டது.(28.1.1938)

"தர்மம் குடை சாய்ந்தது" எனச் சுதேசமித்திரன் அவரது இறப்பையோட்டி தலையங்கம் தீட்டியது.

அதேபோல் இந்திய அரசின் அஞ்சல் துறை 2012 ஆம் ஆண்டு சிறப்பு அஞ்சல் உறை ஒன்றை இவருக்காக வெளியிட்டது.

ஈகை குணம், மார்க்கப் பற்று, மத நல்லிணக்கம், மனிதநேயம், சுயமரியாதை ஆகியவற்றில் இன்றைய இளைஞர்களுக்குத் தூரத்து விண்மீனாக வழிகாட்டுபவர் சி. அப்துல் ஹக்கீம் சாஹீப்.

- சே.ச.அனீஃப் முஸ்லிமின்

Pin It