கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் இணைத்துப் பார்க்கும் எவருக்கும் – தலைக்கனம் வராது; தளர்ச்சியும் வராது. வரலாற்றுப் படிப்பினைகள் வாழ்க்கைக்கு வழிகாட்ட வல்லவை.

கனவுத் தோரணங்களால் அரண்மனை எழுப்பி அரசனும், அரசியும் உலா வருவது மட்டுமே வரலாறு என்ற எண்ணம் இப்போது மாறி வருகிறது.

வரலாற்றின் ஆணிவேர் – மக்கள் வாழ்வில் தான் ஊடுருவி நிற்கிறது. 

நமது வாழ்வின் வேர்கள் எத்தனையோ திசைகளில் ஓடுகின்றன. அரசியல், புவியியல் திசைகளை மட்டுமே காட்டியே நம் வரலாறு – மண்ணையும், மக்கள் வாழ்வையும் காட்ட வேண்டும். 

அந்த ஆணிவேரை அடையாளம் காட்டும் முயற்சியாய் அரும்பியதே – சூலூர் வரலாறு என்னும் இந்த நூல்.

ஓர் ஊருக்கு வரலாறு எழுதி என்ன பயன்? என்று கேட்கத் தோன்றும். 

ஊர்களின் வரலாற்றை ஒருங்கிணைத்தால் போதும்! நாட்டு வரலாறு முழுமை பெற்றுவிடும். 

பத்துப் பேரிடம் பத்துப் பத்துக் காசாக வாங்கினால் உறுதியாக ஓர் உரூபா கிடைக்குமே! 

உங்களை நோக்கி ஓடிவரும் சிறிய நாணயம் – சூலூர் வரலாறு. நாணயத்தைச் சேமித்தால், பணமாக்கிப் பார்ப்பது எளிது. 

மண்ணையும் மக்களையும் அறிந்து கொள்ளும் விழிப்புணர்ச்சி இப்போது மிகுந்து வருகிறது. 

நம்மைச் சுமக்கும் ஊரும், ஊர் சுமக்கும் பேரும் – எந்த அடிப்படையில் எழுந்தன என அறிய விரும்புவோர் பெருகி வருகின்றனர்.

வெளியே நிறுத்தும் கொசுவலை எது? வெளியேறாமல் தடுக்கும் மீன்வலை எது? வலைகளைக் கூட இப்போது இனம் பிரித்து அலசுகின்றனர்.

வழிகாட்டியவை எவை? வழியடைத்தவை எவை? – வாழ்வின் வேர்களைக் கூர்ந்து பார்க்கின்றனர். 

மன்னர்கள் வரலாறு எழுதப்பட்டு விட்டது. மக்கள் வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. 

மக்களின் கலை, பண்பாடு, சமுதாய வரலாறுகள் இல்லையே என்ற ஏக்கம் பலருக்கும் உள்ளது. 

சூலூர் பாவேந்தர் பேரவையினராகிய எங்களுக்கும் இந்த ஏக்கம் இருந்தது. ஊர் வரலாற்றை உருவாக்கும் முயற்சியை 1989 இல் தொடங்கினோம். ஆறாண்டு கால உழைப்பு, சூலூர் வரலாறாக உருவெடுத்துள்ளது.

மக்கள் வாழ்வியல் வரலாற்றை – சூலூர் என்ற புள்ளியில் இருந்து தொடங்கியுள்ளோம். 

எந்த ஓவியமும், புள்ளியிலிருந்து தானே புறப்பட வேண்டும். எந்த பாதையும் ஒரு காலடியில் இருந்துதானே தொடங்க வேண்டும். நாங்கள் சூலூரிலிருந்து தொடங்கியுள்ளோம். 

                                                                                ------------                -----------------

தமிழ்நாட்டு வாழ்வியல் வரலாறு – சூலூரிலிருந்து தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் முதல் வாழ்வியல் வரலாற்று நூல் – சூலூர் வரலாறு. 

மக்களின் வாழ்வும் வளர்ச்சியும் எங்கெல்லாம் வேரோடியுள்ளனவோ, அங்கெல்லாம் தேடி அலைந்தோம்; வேரோடும் திசையெல்லாம் சேர்ந்தோடினோம்.

மனிதரை மனிதருக்கு அடையாளம் காட்ட சூலூர் வரலாறு துணை செய்யும் என நம்புகிறோம்.

சமுதாய மேம்பாட்டு முயற்சிகளும் இயக்கங்களும் தொடக்க நாளிலிருந்தே சூல் கொண்டுள்ள ஊர் சூலூர். அதனால், எங்கள் உழைப்பும் முயற்சியும் இங்கே மதிப்படைந்தன. வெளியீட்டுப் பணிகளில் துணை நிற்கவும் தோள் கொடுக்கவும் – சூலூர் பெருமக்கள் மகிழ்வோடு முன் வந்தனர். 

பனித்துளிக்குள் மலைமுகட்டைப் பார்ப்பதுபோல், கோவை வரலாற்றையும் கொங்கு நாட்டு வாழ்வினையும் – சூலூர் வரலாற்றில் பார்க்க முடியும். 

வாருங்கள்! நூலுக்குள் நுழைவோம்.

சாதனைகளை அறிந்து நம்பிக்கை பெறுவோம்!

தவறுகளை அறிந்து எச்சரிக்கை பெறுவோம்!

ஊருக்கு ஒரு வரலாற்றை உருவாக்கி, மக்கள் வரலாற்றை மலரச் செய்வோம்.

***

சூலூர் வரலா(று) ஊரும் வாழ்வும்
         தோன்றி வளர்ந்த நிலைகாட்டும்!
மேலும் மேலும் வளரும் வாழ்வின்
         வேர்கள் செல்லும் திசைகாட்டும்!
காலும் சுவடும் ஓடும் திசையின்
         காலம் உணர்த்தும் கண்ணாடி!
வாழும் வாழ்வின் மூலம் காட்டும்
         வரலாற் றிற்கிது முன்னோடி!

***

சூலூர்

இருகுளமும் ஒருமூக்காய் நிமிர்கின்ற சூலூர்
எழும்கல்வி கண்ணாகி முகம்காட்டும் சூலூர்
இருபுரத்துக் கோவில்களும் விரலான சூலூர்
எண்ணத்தில் வளமானோர் உடலான சூலூர்

நெடுங்காலச் சந்தையினார் திசைகாக்கும் சூலூர்
நினைவோடு வெள்ளிதொரும் ஊர்கூடும் சூலூர்
கொடுஞ்சாதி மதம் என்ற வெறியற்ற சூலூர்
குறிக்கோளில் வாழ்வோர்க்கே புகழ்சேர்க்கும் சூலூர்

பயிர்மாற்றம் நிகழ்ந்தாலும் துயர்மாற்றும் சூலூர்
பணிவாழ்வில் புகழ்பெற்றோர் அணிசேர்க்கும் சூலூர்
உயிர்காக்கும் சிறுவாணி சுவை ஏற்றும் சூலூர்
உறவாகி வந்தோரின் நலம்காக்கும் சூலூர்

காற்றோடு பஞ்சேற்றி நூலாக்கும் சூலூர்
களிப்பாக்கும் வெற்றிலையால் புகழ்பூத்த சூலூர்
ஏற்ற தொழில் வணிகவகை விரிவாகும் சூலூர்
இருமூன்று பெயர்கொண்ட வரலாற்றுச் சூலூர்

நாவுலவும் மொழிபலவும் நடமாடும் சூலூர்
நாடேறும் வானூர்தி நலம் கேட்கும் சூலூர்
தூவுகுளிர் மேனிதொடும் இதமான சூலூர்
சுயமரியா தைநெறியில் நடைபோடும் சூலூர்

ஊர்காக்க நெஞ்சொன்றிக் கைகோர்க்கும் சூலூர்
உயர் பெரியார் – அண்ணாவும் புகழ்ந்திட்ட சூலூர்
ஈராயிரம் ஆண்டாக நிலைபெற்ற சூலூர்
எழில்காக்க நமைநோக்கி அழைக்கின்ற சூலூர்

***

சூலூர் – பாவேந்தர் பேரவை 

13.4.1988 இல் தொடங்கப்பெற்ற கலை, இலக்கிய பண்பாடு அமைப்பு, (பதிவு எண்:1344/93)

- சமுதாய வளர்ச்சிச் சிந்தனைகளை மேம்படுத்துதல்

- ஊர் நலப் பணிகளை ஊக்குவித்தல்

- மக்கள் நலச் சிந்தனையாளர்களைச் சிறப்பித்தல் 

- வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாத்தல் 

- வரலாற்று ஆவணங்களைத் தொகுத்துப் பராமரித்தல்

- அறிவு நெறி நூல்களைச் சேகரித்தல் 

- மொழி வளர்ச்சிக்கு வளம் சேர்த்தல் 

இப்படிப் பாவேந்தர் பேரவையின் செயல் எல்லைகள் தெளிவு படுத்தப்பட்டுள்ளன.

சூலூர் பாவேந்தர் பேரவையின் ஆறாண்டுகால உழைப்பில் உருவான சூலூர் வரலாறு தமிழ்நாட்டின் முதல் வாழ்வியல் வரலாற்று நூல்

- புலவர் செந்தலை ந.கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை