தமிழ்ச் சாதிகளிடம், சைவ, வைணவம் இணைந்த இன்றைய பார்ப்பனிய இந்து மதம் ஆழப்பதிந்து போய் இருக்கிறது. தமிழ்நாட்டில் நீண்ட காலம் புத்தம் செழிப்புடன் இருந்திருந்த போதும் அது பற்றிய விழிப்புணர்வு தமிழரிடம் இல்லை. கி.மு. 500க்கு முன்பே கவுதம புத்தர் தோன்றிருந்த போதும் அது பற்றிய அறிவு தமிழ் மக்களிடம் சென்று சேரவில்லை.

ஈழத் தமிழரிடம் புத்தம் பற்றிய உரையாடலைத் துவக்கக்கூட முடிவதில்லை, காரணம் சிங்களத்தால் அவர்கள் பெற்ற நேரடி அனுபவம். இன்று ஈழத் தமிழர்கள் பேரினவாதத்தால் அடிமைப்படுத்தப் பட்டுள்ளார்கள். ஆனால் சிங்களவர்களிடம் பவுத்தம் பரவுவதற்கு முன்பே ஈழத்தில் நிலைகொண்டு இருந்த சமயமே பவுத்தம்.

buddha 272உண்மையில் தமிழ் பவுத்த வரலாற்றை மறைத்த இடத்திலேயே தான் ஈழத்தமிழன் வரலாறு புதைக்கப்பட்டது எனலாம்.

இந்தியாவில் புத்த சமயம் அழிக்கப்பட காரணமாக இருந்தது எது? உண்மையில் மனு என்ற சுமதி பார்கவா என்ற பார்ப்பனரே! இந்தியாவில் ஆரியர் அல்லாத, மகத அரசை கிமு-642-இல் பீகாரில் நிறுவியவர் சிசு நாக்-நாகர் தான். ஆரியர் வருகைக்கு முன்பு இந்தியாவில் நாகர்களே இருந்தனர். அந்நாகர்கள் வழிவந்தவர்கள் தமிழர்கள் என்று அண்ணல் அம்பேத்கரைத் தவிர வேறு எவரும் வரலாற்றில் பதிவு செய்துள்ளனரா என்பது ஆய்வுக்குரியது.

மாமன்னர் அசோகர் காலத்தில் உயிர்ப்பலி யாகங்கள் தடை செய்யப்பட்டன. பார்ப்பனர் அரசின் ஆதரவை இழந்தனர், சுமார் 140 ஆண்டுகள் பார்ப்பனர் தாழ்வுற்றிருந்தனர். எனவே தான் புஷ்யமித்திர சுங்கன் புத்த மத அரசை அழிக்க பார்ப்பனியத்தின் மீட்சிக்கான புரட்சி செய்தான். அப்புரட்சியில் மவுரிய அரசனைக் கொலை செய்தான். புத்தத்தை அழிக்க புஷ்யமித்திர சுங்கன் ஒரு புத்த பிக்குவின் தலைக்கு 100 பொற்காசுகள் விலையாகத் தந்தான். கி.மு. 185இல் புஷ்யமித்திரன் அரசு அதிகாரம் பெற்றான். அதனைத் தொடர்ந்து புத்தத்தை அழிக்கும் பணியை பார்ப்பனியம் துவக்கியது. (அம்பேத்கரின் “பார்ப்பனியத்தின் வெற்றி" கட்டுரைப் பகுதிகளில் இருந்து திரட்டிய தகவல்)

கி.மு. 500 அளவில் 'கவுதம புத்தர்' சங்கத்தை நிறுவினார். 'சங்கம்' என்ற சொல் 'புத்த சங்கத்தை' மட்டுமே குறிக்கும். மாமன்னர் அசோகரின் காலத்தில் தமிழ்நாட்டில் கி.மு. 250 வாக்கில் புத்தநெறி பரப்பப்பட்டது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் புத்த நெறி அரசுகள் தமிழ் நாட்டில் இருந்துள்ளன. மதுரைக் காஞ்சி பாடல் 361-362 மதுரையில் பவுத்தப் பள்ளி இருந்ததை சிறப்பித்துள்ளது. சோழ நாட்டை ஆண்ட குமாரகுப்தன் அச்சுத விக்கந்தன், அசோகவர்மன் ஆகியோர் புத்தநெறி ஏற்ற அரசர்களே!

கி.மு. 2 முதல் 14 ஆம் நூற்றாண்டு வரை தமிழ் நாட்டில் புத்தம் செழிப்புடன் இருந்தது. மேலும் அசோகரின் உறவினர் மகிந்தர் தான் காவிரிப்பூம்பட்டினத்தில் ஏழு விகாரைகளைக் கட்டினார் என்றும் அவை இந்திர விகாரை என அழைக்கப்பட்டது என்றும் ஆதாரங்கள் இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. மேலும் சோழ நாட்டிலும் தொண்டை நாட்டிலும், சைவ, வைணவக் கோயில்களில் முழுதும் மறைக்கப்படாமல் உள்ள புத்தர் சிலைகளை இன்றுங்கூட பெருமாள் என நாமஞ்சாத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இங்கு 'நாமஞ்சாத்து' என்ற சொல் 'மறை' என்று பொருளாகும். பெயரை மாற்று என்பதாகவே இதனைப் பார்க்க வேண்டும். புத்த அடையாளங்களை மறைக்கவே 'நாமஞ்சாத்தும்' வழக்கம் தோன்றியதா என ஆராய வேண்டும். மேலும் திங்கநாகர் என்பவர் காஞ்சி புத்த பல்கலையில் தலைவராக இருந்தார். இவர் காஞ்சியில் பிறந்தவர், இவருடைய மாணவர் தர்மபாலர். கி.பி 6 ஆம் நூற்றாண்டில் சீனாவுக்குச் சென்று பவுத்த நெறி பரப்பிய போதிதர்மரும் தமிழ் பவுத்தரே!

புத்த தத்தர், புத்தகோசர் ஆகிய இருவரும் சோழ நாட்டில் தங்கியும், ஈழ நாட்டுக்குச் சென்றும் புத்தம் தொடர்பில் ஆய்வுகள் செய்து மீண்டும் தமிழ் நாட்டுக்குத் திரும்பியவர்கள் என புத்த சமய ஆய்வறிஞர் டி.என். ராமச்சந்திரனும், கே.கே. பிள்ளை மற்றும் மயிலை சீனி வேங்கடசாமி நாட்டார் ஆகியோரும் நம்புகின்றனர். இதன் மூலம் ‘புத்த சங்கம்’ சோழ நாட்டின் வழியாகவே ஈழத்திற்கும், பின் தென்னிலங்கைக்கும் சென்றது என நம்ப இடமுண்டு.

11 ஆம் நூற்றாண்டில் வீர்ராஜசோழன் அவையில் அரங்கேற்றப்பட்ட “வீர சோழியம்” என்ற இலக்கண ஆய்வு நூலை எழுதியவர் புத்தமித்திரர் எனவும் நம்பப் படுகிறது. இவர் சோழ நாட்டின் தஞ்சைக்கு அருகில் உள்ள 'பொன்பற்றி' என்ற ஊரைச் சார்ந்தவர் எனத் தெரிகிறது. (பொன்பற்றி – பொன்பரப்பியா)? என்பதை ஆராய வேண்டும்.

 “வீரசோழியம்: தக்கவன் பாதந் தலைமேற் புனைந்து தமிழரைக்கப் புக்கவன் பைம்பொழில் பொன்பற்றி மன்புத்தமித்ரனே!”

இனி இலங்கையைப் பார்ப்போம். இலங்கை – ஈழம் என்றே தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன. இலங்கையில் இனப்பகையா அல்லது மதப் பகையா? எது முதலில் தோன்றி இருக்கக் கூடும். மதப்பகை தான் முதலில் உருவாகியிருக்க வேண்டும்.

எல்லாளன் – துட்டகைமுனு போர்கள் அரசியல் போர்கள் தான், ஆட்சிப் பரப்பு விரிவாக்கத்திற்காக நடந்த போர்களே.

பழங்காலத்தில் ஈழ நாடு, நாகநாடு (நாகதீவு) என்றே அழைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்து அரசர்களாக இருந்த முடிநாகனாரும், இளநாகனாரும் புத்தநெறி ஏற்ற அரசர்களே. சோழ அரசன் வடிவேற்கிள்ளி மணந்த பீலிவளையின் தந்தை வளைவாணன் நாக அரசருள் ஒருவர்தான்.

புறநானூறு முதல் பாடலைப் பாடிய முரஞ்சியூர் முடிநாகனாரும், இளநாகனாரும், பெருஞ்சோற்று உதியன் சேரலாதனின் போர்த் திறத்தைப் பாடிய போது,

“உடல் உள்பட அனைத்தும் வேதநெறியைப் போலத் திரியும் பாலைத் திரிவதுபோல ஐம்பூதம் மட்டுமே மாறாதது" எனப் பாடுவது பவுத்தத்தின் ஐம்பூதக் கோட்பாட்டை முன் வைத்தே என்பதை அறியலாம். (இப்பாடல் போர் மறுத்தல் குறித்த பாடல்)

நாக நாட்டு அரசர்க்கு இடையே ஏற்பட்ட போரை புத்தர் தடுத்து நிறுத்திதாக மகாவம்சம் கூறுகிறது. (மகாவம்சம் 1:44. 70)

ஈழத்தில் பிறந்து தற்போது இலண்டனில் வாழும் திரு. இலங்கநாதன் – குகநாதன் முகநூலில் எழுதியதைப் பார்ப்போம்!

“கீழ்நிலை மருங்கில் நாக நாடாளும் இருவர் மன்னர் ஒருவர் வழித்தோன்றி” (மணி: 8:54 – 63) இங்கு புத்தருக்குப் பதில் துறவி (பெருந்தவ முனிவன்) எனக் கூறப்பட்ட போதும் இரு நாக அரசர்கள் சண்டையிட்ட செய்தி பொதுவாக உள்ளது. மேழும் மணிமேகலை குறிப்பிடும் இடங்கள், நயினாத் தீவு (மணிபல்லவ தீவு), கந்தரோனட (தீப தீபிகை) மூலம் அந்த அரசர்கள் ஆண்ட பகுதி யாழே என்பது புலனாகும். மேலும் சிலப்பதிகாரமானது சேரனை விடச் சிறப்பாக நாக அரசர்கள் (நாக நாட்டினை) அரசாண்டதாக கூறுகிறது. (நாக நீன் நகரொடு நாக நாடு சிலப்பதிகாரம்) (குகநாதன் வி. இ)

நாக அரசர்கள் தமிழர்களே என்பதற்கு அம்பேத்கரின் சிந்தனைத் தொகுதி-7/2010 இல் ஆதாரங்கள் உண்டு. ஈழத்துக் கவிஞரும், ஈழத்துக்காக தொடக்க முதலே போராடியவருமான கவிஞர் காசி ஆனந்தன் பல மேடைகளில் தமிழர்கள் நாகர்களின் வழிவந்தவர்கள் எனப் பேசியதை நான் கேட்டுள்ளேன். அவர் ஒரு இடத்தில் கூட நாக அரசர்கள் புத்தர்கள் எனப் பேசியதில்லையே, ஏன்!?

மேலும் சோழ மன்னர்களே புத்தம் செழித்தோங்கியிருந்த அமராவதி நகரிலிருந்து வந்தவர்கள் தாம் என சிலப்பதிகாரம் வழியாக அறிய முடிகிறது. இந்த அமராவதி நகரத்தை சதாவாகனர்கள் ஆட்சி செய்தனர்.

சதாவாகனர்கள் மூவேந்தர்களின் சமகாலத்தவர்கள். எனினும் மாமன்னர் அசோகரே “புத்த நெறியை” அரச மதமாக ஆக்கியவர். அவர் தமது பிராமி கல்வெட்டில் புத்த நெறி பரப்பும் பணியை “தம்ம விஜயம்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

புத்தப் பிக்குகள் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்கிருந்த உள்ளூர் மக்கள் பேசிய மொழியைக் கற்று அதன் மூலமே புத்த நெறிக் கருத்துகளை போதித்தனர். அவர்கள் முதலில் விகாரைகளை அமைப்பதில்லை. திடல்களில் அரச மரங்களை நட்டு வளர்த்து அதன் நிழலில் மேடைகளை அமைத்து அங்கிருந்தபடியே போதனைகளைச் செய்தனர். அவர்கள் தங்கி போதித்த இடங்கள் 'அம்பலங்கள்' எனப்பட்டன. அவர்கள் மக்களுக்கு எழுதவும், படிக்கவும், கற்றுத் தந்தனர். அதனால் தான் புத்த நிலையங்கள் பள்ளி எனவும் அழைக்கப்பட்டன. புத்தம் தமிழ்நாட்டில் செழித்திருந்த காலத்தில் நிறைய இலக்கியங்கள் தோன்றின.

'புத்த நெறி' இலக்கியங்களை எழுதியவர்கள் தான் 'கணக்கர்' என அழைக்கப்பட்டனரா என்பதை ஆராய வேண்டும். கணக்கர் என்ற சொல் நிறைய அறிந்தவர் எனவும் பொருள் தரும் அல்லவா?

மணிமேகலை (சீத்தலைச் சாத்தனார்), குண்டலகேசி (நாதகுந்தனார்), வீரசோழியம் (புத்தமித்தரர்), அபிதம்மாவதாரம் (புத்தநந்தர்) இப்படி நிறைய தமிழ் இலக்கியங்களாக உள்ளன. நிறைய புலவர்கள் புத்த அறநெறியை ஏற்று அறிந்து சங்கப் பாடல்களைப் பாடியுள்ளனர். அவர்களில் நன்னாகனார், இளநாகனார், வெள்ளைக்குடி நாகனார், சங்கவருணர், கணி நாகர், தேரையார் இளம்போதியார், சாத்தன், சாத்தி ஆகியோர் அடங்குவர்.

மேழும் “மாசாத்துவன்” என்ற சொல் பெருவணிகன் என்ற பொருளைக் குறிக்கின்றது என்று கருதுவோர் உள்ளனர். ஆனால் மாசாத்துவன் என்பது சாஸ்த்தா – சாஸ்த்திரி மகாபண்டிதன் என்பதைக் குறிக்கும் என மயிலை சீனி வேங்கடசாமி நாட்டார் குறிப்பிடுகிறார். புத்த மதம் கட்டமைப்புடன் வந்த மதம் என்பதால் அது வணிகர்களைப் பெரிதும் கவர்ந்து இருக்க வாய்ப்புகள் அதிகம். வணிக நிலையங்களைத் தொடர்பு கொள்ள புத்த மதம் அவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்திருக்க வேண்டும். சோழ நாட்டு விகாரைகளில் தமிழும், வடமொழியும் போதிக்கப்பட்டது (சமஸ்கிருதம் அல்ல) தமிழக ஊர்ப் பெயர்களில் புத்த அடையாளங்களை எளிதில் காண முடியும். சில (எ+டு) சங்ககிரி, அறந்தாங்கி, புத்தன்வினை, புத்தா நத்தம், அறச்சாலையூர் (அரச்சழூர்)

ஐயப்பன் கோயிலில் எழுப்பப்படும் சரண கோசம், 'சரணம்' என்பது புத்தம், தம்மம், சங்கம், சரணம் என்பதன் தொடர்ச்சியே! சாஸ்த்தா–புத்தனை அறிஞன் எனக் குறிப்பதாகும். சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் “அறவனை” எனப்படுகிறது.

மக்களிடையே உள்ள பேச்சு வழக்கிழும் கூட 'புத்த' அடையாளங்களைக் காண முடியும். 'சாங்கியம்', 'சங்கார்த்தம்' என்ற சொற்களும் நம் சமூகத்தில் புழக்கத்தில் இருக்கின்றனவே! இவ்விரு சொற்களுக்கும் வேர் 'சங்கம்' ஆகும்.

ஆரிய – பிராமணத்தில் மறைமுகமான (புனிதச் சடங்குகள்) உண்டு. ஆனால் புத்தத்தில் கிரியைகள் மட்டுமே. இக்கிரியைகளே சாங்கியம் எனப்பட்டது.

சேர நாடாக இருந்த 'வஞ்சி' இன்றைய கேரளாவில் தானே இருந்தது. மணிமேகலைக் காப்பியத்தின் நிகழ்வுகள் அங்கு தானே நடைபெற்றன. மதுரை, வஞ்சி, காஞ்சிவரம், புத்த நிலையங்களாக இருந்தவை என்பதை நினைவில் கொள்வோம்.

புத்த நெறியை சைவ / வைணவ மன்னர்கள் அழித்தபோது, புத்த சங்கங்களையும் அழித்தனர், பிக்குகளை விரட்டினர். இதன் தொடர்ச்சியால் புத்த சங்கங்களோடு தொடர்பு வைத்த மக்களை மன்னனின் பெயரால் மிரட்டி அடக்கி வைத்தனர். அதன் வெளிப்பாடுதான் 'உன் சங்கார்த்தமே ஆகாது' என்பது போன்ற பேச்சு வழக்கு எனலாம். சொற்கள் காலந்தோறும் மாறி நம்மை வந்து சேரும் போதும் சொல்லில் வரலாறு உறைந்து கிடப்பதை நாம் காண முடியும்.

- கிருஷ் மருது

துணை நூல் பட்டியல்

  1. “எந்தை” முனைவர். மு. ரமேஷ்(நந்தனம் அரசு கலைக் கல்லூரி
  1. பார்ப்பனியத்தின் வெற்றி (அம்பேத்கர் - தமிழில் விடியல் பதிப்பகம் கோவை!
  1. உலக நாகரீகத்தில் தமிழரின் பங்கு, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்.
Pin It