'சமையலறையே கதி - கணவனே கண் கண்ட தெய்வம் - குடும்பமே உலகம் - குழந்தை பெற்றுக் கொடுப்பதே வாழ்க்கை' என்று பெண்கள் வீட்டிற்குள்ளே அடிமைப்பட்டுக் கிடந்த காலம் அது! வீட்டிற்கு வெளியே உள்ள உலகத்தைப் பெண்களுக்குத் தன் எழுத்து மூலமும், பத்திரிக்கைகள் வழியாகவும் காட்டிய பெருமைக்குரியவர் நாவலாசிரியை வை.மு.கோதைநாயகி! தமிழ் நாவல், இலக்கியத்தில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்! இயல், இசை, நாடகம், பத்திரிக்கை, தேச விடுதலை, சமூக சேவை என்று பலதுறைகளில் பங்கேற்று முத்திரை பதித்தவர்.

 இந்திய தேச விடுதலைக்கு முற்பட்ட காலத்திலேயே, 'எழுத்துலக நாயகி' என்று போற்றப்பட்டவர்! அவர்தான் வை.மு. கோதைநாயகி!

 சென்னை திருவெல்லிக்கேணியில் 01.12.1901 ஆம் நாள் என்.எஸ். வெங்கடாச்சாரியார் - பட்டம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது பெண் மகவாகப் பிறந்தார். ஐந்தரை வயதானபோது 1907 ஆம் ஆண்டு மு. பார்த்தசாரதி என்பவருக்கு அப்போதைய "பால்ய விவாகம்" என்ற பெயரில் திருமணம் செய்து வைக்கப்பட்டார். அதனாலேயே முறையாகக் கல்வி பயிலும் வாய்ப்பும் மறுக்கப்பட்டது.

 ஆனாலும், கதை சொல்வதில் மிகுந்த ஆர்வமுயைவராகவும், திறமை மிக்கவராகவும் திகழ்ந்தார். அவரது கணவர், பல நாடகங்களுக்கு அவரை அழைத்துப் போவார். எழுதவோ, படிக்கவோ தெரியாவிட்டாலும் நாடகங்களைப் பார்த்த வை.மு.கோதைநாயகிக்கு, தானும் நாடகம் எழுத வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் அடிமனதில் முளைவிட்டது. விளைவு? வாய்மொழியாய்ச் சொல்லச் சொல்ல அவரது தோழி டி.சி.பட்டம்மாள் கையால் எழுதினார். இப்படித்தான் அவரின் முதற்படைப்பு "இந்திர மோகனா" - என்ற பெயரில் 1924 ஆம் ஆண்டு நாடகமாக வெளிவந்தது.

 வை.மு.கோதைநாயகியின் அந்நாடகத்தை சிறந்த நாடக ஆசிரியரான பம்மல் சம்பந்த முதலியார், புகழ்பெற்ற நாவல் ஆசிரியர் வடுவூர் துரைசாமி அய்யங்கார் ஆகியோர் பாராட்டினார்கள். தொடர்ந்து எழுதும்படி ஊக்கமளித்தனர். பத்திரிக்கைகளும் மிகவும் பாராட்டி எழுதின.

 நாடகம் எழுதிய வை.மு.கோதைநாயகியின் அடுத்த முயற்சி, நாவலாக மலர்ந்தது. தேவதாசிகளின் வாழ்வையும், அவர்களுக்கு ஏற்பட்ட மனக்காயங்களையும் மையக் கருத்தாகக் கொண்டு "வைதேகி" என்ற நாவலை எழுதி முடித்தார்.

 "ஜகன்மோகினி" என்ற தமிழ் மாத இதழை 1925 ஆம் ஆண்டு விலைக்கு வாங்கி நடத்தினார். அதில் தனது வைதேகியை தொடர் நாவலாக ஓராண்டு வெளியிட்டார். அப்பத்திரிக்கையை முப்பத்து ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து நடத்திப் பெரும் சாதனை புரிந்துள்ளார். பள்ளி சென்று படிக்காதவர்தான்! ஆனாலும், நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதிக் குவித்துள்ளார்.

 தான் எழுதும் கட்டுரையோ, சிறு கதையோ, நாவலோ, நாடாகமோ அதில் சமூகத்துக்கான கருத்துக்கள் இடம் பெற்று இருக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருந்தார்.

 "ஜகன் மோகினி" பத்திரிக்கையைப் பெண்களைப் பெருமைப்படுத்தவும், பெண்களுக்கு வாய்ப்புத் தரவும், மாதர் முன்னேற்றத்துக்காகவுமே நடத்தலானார்.

தமது இதழில் அரசியல், சமயம், குடும்பம், வாழ்க்கை வரலாறு, மருத்துவம் குறித்து எல்லாம் எழுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டினார். சிறுகதை, இசைப்பகுதி, விமர்சனப் பகுதி, பாலர் பகுதி, நாடகப் பகுதி எனப் பன்முகப் பத்திரிக்கையாக அதை நடத்தினார்.

"ஜகன் மோகினி" பத்திரிக்கையின் முகப்பில் பொலிவு இப்படி எடுப்பாயிருக்கும்;- "பயனுள்ள பொழுதுபோக்கு - சமூக சீர்திருத்தம் - மற்றும் மறுமலர்ச்சி" என்ற சொற்றொடரை மேற்கோளாகச் செதுக்கியிருந்தார்.

"ஜகன் மோகினி" பத்திரிக்கையை தமிழக இராணுவ வீரர்கள், தமிழக சிறைக் கைதிகள் ஆகியோரின் பொழுது போக்கிற்காக அரசாங்கமே விலை கொடுத்து வாங்கி வழங்கியது.

"ஜகன் மோகினி" - தன் பெயருக்கு ஏற்ப கோலாலம்பூர், சிங்கப்பூர், பினாங்கு, இரங்கூன், ஆப்பிரிக்கா, மொரிஷியஸ் தீவு என தமிழர்கள் வசிக்கும் உலக நாடுகளுக்கு எல்லாம் கூட அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு விற்பனையானது.

ஆணாதிக்க சமூகத்தின் நடுவே தனி ஒரு பெண்ணாக இருந்து, பல பெண் எழுத்தாளர்களை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளார் வை.மு.கோதைநாயகி.

 பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்பதை வலியுறுத்தி பல கட்டுரைகள் வரைந்துள்ளார். தனது பத்திரிக்கையில் வெளியான கட்டுரைகள் மூலம் பெண்களுக்கு இலக்கிய அறிமுகத்தையும், உலக அறிவையும் ஊட்டினார். தமிழகத்தில் நடுத்தர மக்களிடையே பத்திரிக்கை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார்.
 
வை.மு.கோதைநாயகி தனது நாவல்களில், விதவை மறுமணம், வரதட்சணைக் கொடுமை, தேவதாசி முறை ஒழிப்பு, கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் துயரம், கைம்பெண்களின் அவலம் போன்ற பெண்களின் வாழ்வியல் துன்பங்களைக் கூறி, அவற்றிலிருந்து விடுபடுவதற்கான முயற்சிகளையும் பதிவு செய்துள்ளார்.

மது, விபச்சாரம், சூதாட்டம், குதிரைப் பந்தையம் போன்றவற்றால் வரும் சீர்கேடுகளையும், ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம், தேர்தல் தில்லு முல்லுகள், திரைப்படங்களால் ஏற்படும் சமூக சீரழிவுகளையும் தம் நாவல்களில் சாடியுள்ளார்.

தேச விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டார் வை.மு.கோதைநாயகி. கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிப் புறக்கணிப்பு, தீண்டாமை ஒழிப்பு, சுதேசிப் பொருட்கள் ஊக்குவிப்பு போன்ற காந்தீயக் கொள்கைகளையும் தம் நாவல்கள் மூலம் பரப்பியுள்ளார்.

"பெண்கள் முன்னேற கல்வியே அவர்களின் கண்கள்" - என்றார். கற்பு என்பது இருபாலருக்கும் பொது என்பதையும் வலியுறுத்தினார்.

தாழ்த்தப்பட்டவர்களை கேவலமாக ஒதுக்கி, இழிவாக நடத்தும் உயர் சாதியினரைப் பார்த்து, உரத்த குரலில் சாடினார்! "தாழ்த்தப்பட்டவர்களின் இரத்தத்தாலும், அவர்கள் சிந்திய வியர்வைத் துளிகளாலும் விளைவித்த தானியங்களை உண்டு வாழ்வது மட்டும் எப்படி சரி? " - என்று கேட்டார். உழைப்பை உறிஞ்சியும் அவர்களை அடக்கியும், ஒடுக்கியும் இழிவுபடுத்துவது மட்டும் அடுக்குமா? என்று பொங்கிச் சினந்தார். தனது "மகிழ்ச்சி உதயம்" நாவலில், சாதிக் கொடுமையை தோலுரித்துக் காட்டியுள்ளார்.

சென்னை மைலாப்பூருக்கு 1925 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வருகை தந்தபோது, வை.மு.கோதைநாயகியும், அவரது தோழிகளும் காந்தியை சந்தித்தனர். பளபளக்கும் பட்டுப் புடவையுடனும், மினு மினுக்கும் நகைகளுடனும், அலங்காரப் பதுமைகளாக காட்சியளித்தனர். இவர்களைப் பார்த்த காந்தி, "நம் தாய்நாடு அடிமை விலங்கை பூண்டிருக்கும்போது, நீங்களும் ஆபரண விலங்கை அணிந்திருக்கிறீர்களே?" - என்று கேட்டார். கதரின் மகத்துவத்தை உணரும்படி அவர்களுக்கு எடுத்துரைத்தார் அண்ணல்! அது முதல், பட்டாடை வெறுத்துக் கதர் ஆடையைத் தனது இறுதி நாள் வரை அணிந்தார் வை.மு.கோதைநாயகி. கதர் பிரச்சாரத்திலும், விற்பனையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ஊர்வலங்களில் தேசியக் கொடியை ஏந்திச் சென்றார். பாரதியார் பாடல்களைப் பாடிப் போனார் ; தாமே எழுதிய தேச பக்த பாடல்களையும் பாடி முழங்கினார்.

காந்தி 1931 ஆம் ஆண்டு கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் பெண்கள் கலந்து கொள்ள வேண்டுமென அறிவித்தார். திருவெல்லிக்கேணியில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போராட்டத்திற்கு தாமே தலைமையேற்று நடத்தினார் வை.மு.கோதைநாயகி.

அகில இந்திய காங்கிரஸ் இயக்கம் 1932 ஆம் ஆண்டு லோதியன் குழுவை எதிர்த்து ஊர்வலம் நடத்தும்படி அறிவித்தது. சென்னையில் ஆங்கிலேய அரசின் தடை உத்தரவை மீறி நடைபெற்ற ஊர்வலத்தில் வை.மு.கோதைநாயகி கலந்து கொண்டார். கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் ஆறு மாதம் அடைக்கப்பட்டார்.

"மகாத்மாஜி சேவா சங்கம்" - என்ற தொண்டு நிறுவனத்தை அமைத்து, அதன்மூலம் ஏழை, எளிய மக்கள் கண் அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை பெற வழி வகுத்தார். ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவி செய்தார். ஏழைப் பிள்ளைகளுக்கு நோட்டு புத்தகங்களை வாங்கிக் கொடுத்து படிக்க உதவினார்.

திரைப்படத் தணிக்கை குழுவில் உறுப்பினராகப் பத்தாண்டுகள் பணியாற்றியுள்ளார். தணிக்கை செய்யப்பட்ட திரைப்படக் காட்சிகள், திரையரங்குகளில் மீண்டும் காட்டப்படுகின்றனவா? என்பதை மாறுவேடத்தில் சென்று பார்த்து வருவார். தணிக்கை செய்யப்பட்ட காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருந்தால், அத்திரைப்படத்தை மீண்டும் தணிக்கை குழுவுக்கு அனுப்பச் செய்வார்.

வை.மு.கோதைநாயகி இயல், இசை, நாடகம் என்ற முத்தமிலிலும் ஈடுபாடு கொண்டு "முத்தமிழ் வித்தகி"யாகத் திகழ்ந்தார். நாடு நமக்கு என்ன செய்யுமென்று அவர் எதிர்பார்த்ததில்லை. ஆனால், நாட்டுக்கு அவர் செய்த தொண்டு வரலாற்றில் என்றும் நிலைபெற்று விளங்கும்.

வை.மு.கோதைநாயகிக்கு கவியோகி சுத்தானந்த பாரதியார் "கலையரசி", "நாவல் ராணி" ஆகிய பட்டங்களை வழங்கிப் பாராட்டினார். மகாத்மாஜி சேவா சங்கம் "கலா சேவகி" என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தது.

வை.மு.கோதைநாயகி அம்மாள் தேச விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றதையும், சமூக சேவையையும் பாராட்டி அரசாங்கம் அவருக்கு பத்து ஏக்கர் நிலத்தை வழங்கியது. அம்மையார் அந்த நிலத்தை பூமிதான இயக்கத்துக்காக வினோபாபாவிடம் கொடுத்து விட்டார்.

வை.மு.கோதைநாயகி அம்மாள் காசநோயால் பாதிக்கப்பட்டு, தாம்பரம் காசநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி 20.02.1960 ஆம் நாள் காலமானார்.

வை.மு.கோதைநாயகி அம்மாள் தம் வாழ்வை எழுத்துப் பணிக்காகவும், சமூகப் பணிக்காகவும், நாட்டு விடுதலைக்காகவும் ஈந்தவர்! "பெண்ணிற் பெருந்தக்கயாவுள" - என்னும் குறள் மொழிக்கு ஏற்ப, பெண்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பெருந்தகையாளர்!

Pin It

 தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியம், ஜி.கல்லுப்பட்டியில் 1901 ஆம் ஆண்டு கரிக்கேத்தப்பன்-மல்லக்காள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் கே.வீராச்சாமி. தொடக்கப்பள்ளியை ஜி.கல்லுப்பட்டியில் படித்து விட்டு அதன் பின்பு துணி வியாபாரத்தில் ஈடுபட்டார்.

 இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டு வந்த ஆங்கிலேய அரசுக்கு ராணுவ உதவியோ, பொருள் உதவியோ இந்தியர்கள் வழங்கவோ, மறைமுக ஆதரவோ தரக்கூடாது என்ற கருத்தினை மையமாகக் கொண்டு தனிநபர் சத்தியாகிரகப் போராட்டத்தில் காந்தியடிகளின் அனுமதி பெற்று கொடி பிடித்து நடைபயணமாக சென்னை சென்றவர் தியாகி கே.வீராச்சாமி.

 பாரதியார் பாடல்வரிகளான "அச்சமில்லை.. அச்சமில்லை.. அச்சமென்பதில்லையே உச்சிமீது வானிடிந்து வீழ்கின்ற போதிலும், அச்சமில்லை.. அச்சமில்லை.. அச்சமென்பதில்லையே.." பாடியவர்கள் மீது ஆங்கிலேய காவல்துறையினர் தாக்கியதை கண்டு இவரது சுதந்திரப் போராட்டம் வீறு கொண்டது.

 அதன் விளைவாக 1927 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டு 1929 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்நியத்துணி பகிஷ்கரிப்புக்காக தான் செய்து வந்த துணி வியாபாரத்திலிருந்து அந்நியத் துணிகளை எரித்து அத்துடன் துணி வியாபாரத்திற்கு முழுக்கு போட்டார். 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற கள்ளுக்கடை மறியலுக்காக பெரியகுளம் நகருக்கு தொண்டர்களை ஒன்று திரட்டிக் கொண்டு சென்று தலைமறைவு வாழ்க்கையில் ஈடுபட்டார்.

 1941 ஆம் ஆண்டில் நடைபெற்ற 'தனிநபர் சத்தியாகிரக போராட்டத்தில்' கலந்து கொள்ள பெரியகுளம் பகுதியிலுள்ள பத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களைத் தன்னுடன் இணைத்துக்கொண்டு வத்தலக்குண்டு, திண்டுக்கல், திருச்சி வழியாக சென்னையில் உள்ள எழும்பூர் சென்றார்.

 அங்கே சென்றவுடன் ஆங்கிலேயருக்கு எதிராக 'சேராதே..சேராதே..பிரிட்டீஷ் ராணுவத்தில் சேராதே.. கொடுக்காதே.. கொடுக்காதே.. யுத்தத்திற்கு நிதி கொடுக்காதே' என்ற கோஷங்கள் எழுப்பியவாறு கொடி பிடித்து ஊர்வலம் சென்றபோது ஆங்கிலேய காவல்துறையினரால் தடியடிபட்டதோடு கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 1 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

 சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் 1942 ஆம் ஆண்டு 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் தொண்டர்களை ஈடுபடுத்தி தொண்டர்களுக்கு வேண்டிய உதவிகளை தலைமறைவாக இருந்து செய்து வந்தார்.

 நாடு சுதந்திரம் அடைந்த பின்ப சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அரசின் சார்பில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அரசு வழங்கிய நிலத்தினை நிலமில்லாத ஏழைகளுக்கு தானமாக வழங்கினார். அதன்பின்னர் பூமிதான இயக்கத்தின் தலைவர் வினோபா பெரியகுளம் வந்தபோது நிலப்பிரபுகளை சந்தித்து நூற்றுக்கணக்கான நிலங்களை பெற்றுக் கொடுத்தார். நாட்டிற்காக தன்னை அர்ப்பணித்த தியாகி 1987 ஆம் ஆண்டு இவ்வுலகிலிருந்தே விடுதலை பெற்றுவிட்டார்.

- வைகை அனிஷ் (தொலைபேசி:9715-795795)

Pin It

கம்பதாசனின் தாத்தா பெயர் சீனுவாசன் தந்தை பெயர் சுப்பராயன் இவர்கள் புதுச்சேரியை அடுத்துள்ள வில்லியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் குடும்பம் கொலுபொம்மைகள் செய்யும் கைவினைத் தொழிலில் தேர்ச்சிபெற்ற குடும்பமாகும். கம்பதாசனின் தாயார் பெயர் பாப்பம்மாள். இவர் புதுச்சேரியை அடுத்துள்ள உலகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். சுப்பராயன் பாப்பம்மாள் தம்பதியரின் ஒரே மகனாக அப்பாவு 1916ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் பிறந்தார். அப்பாவு என்பதே கம்பதாசனின் இயற்பெயர். அப்பாவுவோடு உடன் பிறந்தவர்கள் ஐவர். ஐவரும் பெண்கள். பேற்றோர்கள் அப்பாவுவைச் செல்லமாக ராஜப்பா என்று அழைத்தனர். கம்பதாசனின் குடும்பம் அவரின் இளம்வயதிலேயே புதுச்சேரியைவிட்டுச் சென்னையிலுள்ள புரசைவாக்கத்திற்குக் குடிபெயர்ந்தது. பின்னாளில் அப்பாவு நாடகங்களில் நடிக்கும் காலங்களில் சி.எஸ்.ராஜப்பா என்றும் பாவலனாகப் புகழ்பெற்ற காலங்களில் கம்பதாசன் என்றும் கலையுலகிற்கு அறிமுகம் ஆனார்.

நாடக நடிகராகத் தமது கலைப்பயணத்தைத் தொடங்கிய கம்பதாசன் தொடர்ந்து   தம்முடைய இனிமையான குரல்வளத்தால் பின்பாட்டுக்காரராகவும் ஆர்மோனிக்கும் வாசிக்கும் பக்கவாத்தியக் காரராகவும் நாடகங்களுக்குப் பாட்டெழுதும் கவிஞராகவும் தமது கலை உலகப் பயணத்தைத் தொடர்ந்தார். திரௌபதி வஸ்திராபரணம் சீனிவாச கல்யாணம் போன்ற படங்களில் நடிகராகத் திரயுலகில் நுழைந்த கம்பதாசன் பின்னர் 1940 ஆம் ஆண்டில் வெளிவந்த வாமன அவதாரம் என்ற படத்திற்கு முதன் முதலாகப் பாடல்கள் எழுதினார். அதனைத் தொடர்ந்து வேணு கானம், மகாமாயா, பூம்பாவை, மங்கையர்க்கரசி, ஞானசௌந்தரி, அக்பர், அவன், வானரதம் போன்ற பல திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியும், சில திரைப்படங்களுக்குக் கதை வசனம் எழுதியும் மிகுந்த புகழ்பெற்றார். அவற்றில் அவன், வானரதம், அக்பர் போன்ற திரைப் படங்களில் இவர் எழுதிய பாடல்கள் காலத்தால் அழியாத பாடல்களாக இன்றும் போற்றப்படுகின்றன.

கம்பதாசன் பாவேந்தர் பாரதிதாசன் மீது அளவுகடந்த மதிப்பு வைத்திருந்தார். பாவேந்தரும் கம்பதாசனை மதித்துப் போற்றியிருக்கிறார்.

கம்பதாசனின் படைப்புகள்

1.    கவிதைத் தொகுப்புகள்:

கனவு   
விதியின் விழிப்பு
முதல் முத்தம்
அருணோதயம்
அவளும் நானும்
பாட்டு முடியுமுன்னே
புதுக்குரல்
தொழிலாளி
கல்லாத கலை
புதிய பாதை
குழந்தைச் செல்வம்
மொழி முத்தம்
இந்து இதயம்
கம்பதாசனின் கவிதைத் திரட்டு

2.    சிறுகதைத் தொகுதி:

முத்துச் சிமிக்கி

3.    நாடகங்கள்:

ஆதிகவி
சிற்பி
அருணகிரிநாதர் (இசை நாடகம்)

4.    கம்பதாசன் திரையிசைப் பாடல்கள்

5.    கம்பதாசன் காவியங்கள்

கம்பதாசன் ஓர் உண்மையான சோசலிசவாதி. ஊழகை;கும் மக்களின் துயர்தீர்க்கும் புரட்சிப் படைப்புகளாக அவரின் கவிதைகள் விளங்கின.

நலமுறவே உழைப்பவர்க்கே உணவு வேண்டும்
நியாயமிது நியாயமிது நியாயமிஃதே
அலவெனவே மறுப்பவர்கள் கடவு ளேனும்
அடுத்தகணம் அவர்தலை எம்காலில் வீழும்!

என்று புரட்சி முழக்கமிட்டவர் கம்பதாசன். கம்பதாசனின் பின்வரும் கவிதைத் தலைப்புகளே சொல்லும் அவரின் சமதர்மச் சிந்தனைகளை, 1. தொழிலாளி 2. செம்படவன் 3. கொல்லன் 4. ரிக்~hக்காரன் 5. மாடு மேய்க்கும் பையன், 6. கூடை முடைபவள், 7. ஒட்டன் 8. பிச்சைக்காரன் 9. பாணன் 10. குலாலன் 11. கையேந்திகள். 12. பஞ்சாலைத் தொழிலாளி

தம்மை ஒரு சோசலிசக் கவிஞராக அடையாளப்படுத்திக் கொண்டதோடு அதையே தமது வாழ்வின் இலட்சியமாகவும் கொண்டு வாழ்ந்தவர் கம்பதாசன். வறுமையின் பிடியில் நொந்து துயருற்ற கடைசிக் காலங்களிலும் அவர் கொண்ட கொள்கையில் பிறழ்ந்தாரில்லை.

பாவலரின் கடைசிக்காலம் வேதனை மிகுந்தது வறுமை, காதல் தோல்வி, காசநோய் மூன்றும் வாட்டிவதைக்க சமூகத்தின் புறக்கணிப்பால் தனித்துவிடப்பட்ட கம்பதாசன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 1973-ஆம் ஆண்டு மே மாதம் 23-ஆம் நாள் ஓர் அனாதையைப்போல் மரணத்தைத் தழுவினார்.

கம்பதாசனின் மரணத்திற்குப் பின்னர் சிலோன் விஜயேந்திரன் என்ற கவிஞர் கம்பதாசனின் கவிதைகள் மீது கொண்ட ஈடுபாட்டால் இலங்கையிலிருந்து தமிழகம் வந்து அவரின் வாழ்க்கையையும் படைப்புகளையும் ஒருசேரத் தொகுத்து பல தொகுதிகளாக வெளியிட்டார். கம்பதாசனைப் போற்றும் அதே தருணத்தில் மறைந்த கவிஞர் சிலேன் விஜயேந்திரனையும் நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும். கவிஞர் தமிழ்ஒளிக்கு ஒரு சஞ்சீவி போல். பாவலர் கம்பதாசனுக்கு ஒரு விஜயேந்திரன்.

Pin It

பெரியகுளம் வெள்ளைராவுத்தர்-ஷேகம்மாள் தம்பதியினருக்கு 1906 ஆம் ஆண்டு எஸ்.வி.எம்.சாஹிப் பெரியகுளத்தில் பிறந்தார். 6 ஆம் வகுப்பு வரை படித்து அதன் பின் விவசாயத்திற்கு மாறினார். விவசாய பணிகளை முடித்து விட்டு மாலைவேலையில் சேர்மனாக இருந்த ராமசாமி, சி.சங்கையா போன்றோருடன் நட்பு ஏற்பட்டு அவர்களின் பேச்சால் சுதந்திரப் போராட்ட தியாகியாக தன்னை இணைத்துக் கொண்டார். அதன் பின்னர் 20 வயதில் 1926 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து ~டாம் டாம்~ மூலம் கொட்டு அடித்து சுதந்திர தாகத்தை மக்களிடம் எடுத்துக் கூறினார். 1930 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்குகொள்ள முயன்றபோது ஆங்கிலேய அரசால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

 அதன் பின்னர் காந்தி தேனி மாவட்ட சுற்றுப் பயணத்தின்போது பெரியகுளம் நகருக்கு வந்தபோது நகர்மன்ற தலைவர் ராமசாமி வீட்டில் காந்திஜியுடன் நெருங்கிப் பழகி அரிஜன நிதியினை கொடுத்தார்.

 1942ஆம் ஆண்டு 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கலந்து கொண்டு வெள்ளையனுக்கு எதிராக பெரியகுளம் தபால் தந்தி அலுவலக கம்பிகளை அடித்து நொறுக்கியும் தந்தி கம்பங்களை சேதப்படுத்தியுள்ளார். அப்போது காவலர்களால் அடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். கேரளாவில் உள்ள கண்ணனூர் சிறைச்சாலை, வேலூர், தஞ்சாவூர் ஆகிய சிறைச்சாலையில் பாதுகாப்பு கைதியாக வைக்கப்பட்டார்.

 சிறையில் இருந்தபோது முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன், ஆர்.வி.சுவாமிநாதன், முன்னாள் தமிழக முதல்வர் ஏ.எஸ்.பிரகாசம் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. சுதந்திரத்திற்கு பின்னர் பேருந்து இயக்குவதற்கு அனுமதி வாங்கி பேருந்துகளை இயக்கினார். அவருடைய பெயரில் எஸ்.வி.எம்.ரோடுவேஸ் என்ற பெயரில் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டத்தில் இயக்கினார். அதன் பின்னர் பெரியகுளம் நகர்மன்ற தேர்தலில் போட்டியிட்டு நகர்மன்ற தலைவராக இருந்தார். பெரியகுளத்தில் திருச்சிக்கு அடுத்தபடியாக பாதாளச் சாக்கடை நிறுவ வேண்டும் என்று நகராட்சியில் தீர்மானத்தை இயற்றினார்.

விவசாய கமிட்டி தலைவராக இருந்தமையால் விவசாயிகளின் தேவைகளை அறிந்து 'சோத்துப்பாறை அணை' கட்டவேண்டும் என்று தீர்மானத்தை இடம் பெறச்செய்தார். அதன் பின்னர் 1957 ஆம் ஆண்டு காந்திஜியின் சிலையை நிறுவ வேண்டும் என முயற்சி செய்து மூன்றாந்தலில் காந்தி சிலையை நிறுவியவர்களில் இவரும் ஒருவர். இறுதியாக 1968 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். இவருடைய கல்லறை தென்கரை பள்ளிவாசலில் உள்ளது.

- வைகை அனிஷ் (தொலைபேசி-9715-795795)

Pin It

“ஐந்தடிக்கு உட்பட்ட குறள் வடிவம், பளபளக்கும் வழுக்கைத்தலை, வெண்மை படர்ந்த புருவங்களை எடுத்துக் காட்டும் அகன்ற நெற்றி, கனவு காணும் எடுப்பான மூக்கு, படபடவெனப் பேசத்துடிக்கும் மெல்லுதடுகள், கணுக்கால் தெரியக் கட்டியிருக்கும் நான்கு முழ வெள்ளை வேட்டி, காலர் இல்லாத முழுக்கைச் சட்டை, சட்டைப்பையில் மூக்குக் கண்ணாடி, பவுண்டன் பேனா, கழுத்தைச் சுற்றி மார்பின் இருபுறமும் தொங்கும் மேல் உத்திரீயம், இடது கரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் புத்தகப் பை, இப்படியான தோற்றத்துடன் சென்னைக் கன்னிமரா நூலகத்தை விட்டு வேகமாக நடந்து வெளியே வருகிறாரே, அவர்தான் மயிலை சீனி. வேங்கடசாமி” - என்று எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணன் அவர்களால் போற்றப்படும் மயிலை சீனி.வேங்கடசாமி 16.12.1900ல் பிறந்தார்.

Mayilai-Srinivenkadasamy_40 தந்தை சீனிவாச நாயக்கர் ஒரு சித்த மருத்துவர். அவரின் இல்லத்தில் ஓலைச்சுவடிகள் மற்றும் நூல்களைச் சேகரித்து வாசிக்கும் பண்பு இருந்தது. வேங்கடசாமியின் தமையன் சீனி.கோவிந்தராசனிடம் தமிழ்ப்பயிற்சி பெற்றார். தமிழ்ப்பற்று இவருக்கு முன்னோர்கள் வழி கிடைத்த சீதனம் ஆகும். மயிலை புனித சாந்தோம் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பை நிறைவு செய்தார். இருபதாவது வயதில் சென்னைக் கலைக் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டார். பின்பு ஆசிரியப் பயிற்சி முடித்து நகராட்சித் தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.

 வேங்கடசாமி சுயமரியாதை இயக்கச் சார்பாளராக வாழ்வைத் தொடங்கினார். நீதி கட்சியால் நடத்தப்பட்ட ‘திராவிடன்’ என்ற நாளேட்டின் ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பணிபுரிந்தார். பின்னாளில் ‘குடியரசு’, ‘ஊழியன்’ போன்ற இதழ்களில் செய்திக்கட்டுரைகள் எழுதினார். ‘வேதம், புராணம், கடவுள், கோயில், விதி, வினை என்று சொல்லிக்கொண்டு நாளுக்கு நாள் முட்டாள்களாகப் போகிற வழக்கத்தைவிட்டு எந்த விசயத்தையும் பகுத்தறிவு கொண்டு ஆராயும்படி கேட்டுக்கொள்கிறேன்’. (குடியரசு).

 ‘கௌதம புத்தர்’ என்ற நூலை எழுதினார். புத்தர் வரலாறு பள்ளி வரலாற்றுப் பாடத்தில் கற்கும் கதையாக எழுதப்பட்டுள்ளது. ‘புத்தர் ஜாதகக் கதைகள்’ என்ற நூலைத் தமிழில் முதன் முதலாக எழுதினார். இக்கதைகளில் புத்தமதக் கோட்பாடுகள் எளிமையாகக் கூறப்பட்டுள்ளன.

 வேங்கடசாமி 1950களின் இறுதிக் காலங்களில் கி.பி.3ஆம் நூற்றாண்டுத் தொடங்கி கி.பி. 9ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் ஆட்சிப்புரிந்த மன்னர்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றவற்றை ஆய்வு செய்து மன்னர்களைப் பற்றிய நூல்களை உருவாக்கினார். ‘மகேந்திரவர்மன்’ என்ற நூலை முதன்முதலாக வெளியிட்டார்.

 மகேந்திரவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்ட குகைக் கோயில்கள் பற்றிய விரிவான விவரங்களைத் தந்துள்ளார். மகேந்திரவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவற்றின் தன்மைகள் பற்றி எடுத்துரைக்கின்றார். மகேந்திரவர்மன் எழுதிய ‘மத்தவிலாசம்’ நாடகத்தை ஆங்கிலமொழி வாயிலாக மொழி பெயர்த்துள்ளார்.

 ‘வாதாபிகொண்ட நரசிம்மவர்மன்’ என்ற நூலில் நரசிம்மவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்ட பாறைக் கோயில்கள் குறித்தும், இம்மன்னன் காலத்தில் உருவாக்கப்பட்ட சிற்ப வடிவங்கள் பற்றியும் விரிவான தகவல்களைக் கொடுத்துள்ளார். இந்த நூல் தமிழக சிற்ப வரலாற்றை தெரிந்துகொள்ள பெரிதும் உதவுகின்றன.

 சேரன் செங்குட்டுவன் ஆய்வில் தொடங்கி, சங்க காலம் குறித்த ஆய்வுகளை நிகழ்த்தி உள்ளார். அக்காலத்தில் தமிழகம் சோழநாடு ,பாண்டியநாடு, சேரநாடு, துளுநாடு (கொங்கணநாடு), கொங்குநாடு, தொண்டைநாடு என்று ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததாகத் தெளிவுப்படுத்துகிறார். இப்பிரிவிற்கான வரைபடத்தையும் இவர் உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு நாடு தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொண்டு துளுநாட்டு வரலாறு, கொங்குநாட்டு வரலாறு ஆகிய நூல்கள் எழுதியுள்ளார். தமது அனைத்து ஆய்வுகளிலும் இலங்கை தொடர்பான குறிப்புகளைக் கொடுப்பதை மரபாகக் கொண்டுள்ளார். “தமிழ்நாட்டு வரலாறு” என்ற நூலில் “இலங்கையில் தமிழர்” என்ற ஆய்வை மேற்கொண்டுள்ளார். தமிழக வரலாற்றை கட்டமைத்து ஒழுங்குபடுத்தியதில் வேங்கடசாமி அவர்களுக்குத் தனித்த இடமுண்டு.

 மகாபலிபுரத்துச் சிற்பங்கள் தொடங்கி பல்லவ மன்னர்கள் காலத்து பல்வேறு கட்டடம் மற்றும் சிற்பக்கலை தொடர்பான ஆய்வையும் மேற்கொண்டுள்ளார். இசைக் கூத்து குறித்தும் ஆய்வு செய்துள்ளார். “தமிழ் வளர்த்த அழகுக் கலைகள்” என்ற நூலில் தமிழர்களின் பழங்கால அழகுக் கலைகள் குறித்து விரிவாக எழுதியுள்ளார்.

 19ஆம் நூற்றாண்டின் தமிழ் சமூக வரலாற்றை அறிவதற்கான தொகுப்பாக “19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்” என்ற நூலை எழுதியுள்ளார்.

 வேங்கடசாமி கன்னடம், மலையாளம், பாலி, சமசுகிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பயிற்சியுடையவராக இருந்தார். மலையாளத்திலிருந்து சில நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

 ஓவியங்கள் குறித்து ஆய்வு செய்த வேங்கடசாமி பல்லவர் காலத்து ஓவியங்கள், பிற்காலச் சோழர்கால ஓவியங்கள், பிற்கால ஓவியங்கள் எனப் பல்வேறு ஓவியங்கள் குறித்தும் ஆய்வு செய்துள்ளார். குறிப்பாக, கைலாசநாதர் கோவில் ஓவியம், சித்தன்னவாசல் ஓவியம், தஞ்சை பெரிய கோயில் ஓவியம், மதுரை நாயக்கர்கால ஓவியம் ஆகிய ஓவியங்கள் குறித்தும் ஆய்வு செய்துள்ளார்.

 இசை நுணுக்கம், இந்திரகாளியம், குலோத்துங்கன் இசைநூல், பஞ்சமரபுஇசை, சிலப்பதிகாரத்தில் இசை, தமிழ் இராகங்கள், தமிழ் இசைக்கருவிகளின் வகைகள், அவைகள் செயல்படும் முறைமை ஆகியவை குறித்தும் ஆய்வு செய்துள்ளார்.

 1962ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சார்பில் அறக்கட்டளை சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். இவற்றை ‘சங்ககால தமிழக வரலாற்றில் சில செய்திகள்’ என்னும் பெயரில் பின்னர் அப்பல்கலைக் கழகம் நூலாக வெளியிட்டது.

 சென்னைப் பல்கலைக்கழகச் சொர்ணம்மாள் அறக்கட்டளை சொற்பொழிவை 1966ஆம் ஆண்டு வேங்கடசாமி நிகழ்த்தினார். இச்சொற்பொழிவு சென்னைப் பல்கலைக் கழக கீழ் திசையியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.

 சங்ககால தமிழரின் வணிகம், சங்ககால விளைபொருட்கள் போன்றவை குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டு “பழங்காலத் தமிழர் வாணிகம்” “சங்க காலத்து பிராமிக் கல்வெட்டு எழுத்துக்கள்” என நூல்களாக வெளியிட்டுள்ளார்.

 தமிழக அரசு உருவாக்கிய தமிழக வரலாறு எழுதும் தமிழ்நாட்டு வரலாற்றுக் குழுவிலும் இடம் பெற்று இருந்தார். “தமிழ்நாட்டு வரலாறு” சங்க காலம், அரசியல் என்ற இரண்டாம் தொகுதியில் சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மன்னர்களைப் பற்றிய விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

 நாட்டின் சரித்திரம் அந்நாட்டை அரசாண்ட அரசர்களுடைய வரலாறு மட்டுமன்று, அந்நாட்டில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை வரலாறும் சேர்ந்ததே சரித்திரமாகும் என்பதை தனது ஆய்வின் அடிப்படையாகக் கொண்ட வேங்கடசாமி சங்ககால மக்களின் வாழ்க்கை, குறிப்பாக பண்டமாற்று, போக்குவரத்து சாதனங்கள், தமிழ் மற்றும் பிறநாட்டு வணிகர்கள், துறைமுகப் பட்டினங்கள் ஆகியன குறித்தும் விரிவாக ஆய்வு செய்துள்ளார்.

 மேலும், இவ்வளவு ஆய்வுகளை மேற்கொண்ட ஆராய்ச்சிப் பேரறிஞரான வேங்கடசாமி தமிழ்நாட்டின் வரலாறு முழுமையாகவும், தெளிவாகவும், சரியாகவும் இன்னும் எழுதப்படாமல் இருப்பது பெருங்குறையாகும் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
  “அகல் வரலாறு அனைத்தும்
  மிஞ்சுதல் இன்றி கற்றோன்
  மேம்பாடு நூலாராய்ச்சி
  கெஞ்சிடும் தனைத் துலக்க
  கேண்மையோடு உயர்வு செய்வான் !”

- என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், வேங்கடசாமியின் ஆய்வைப் புகழ்ந்து பாடுகிறார்.

 திராவிடன், செந்தமிழ்ச்செல்வி, ஊழியன், ஆரம்பாசிரியன், செந்தமிழ், தமிழ்ப்பொழில் ஆராய்ச்சி, திருக்கோயில், நண்பன், கல்வி, லட்சுமி, ஆனந்தபோதினி, தமிழ்நாடு, சௌபாக்கியம், ஈழகேசரி, காலைக்கதிர் ஆகிய இதழ்களில் 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். தமிழில் 33 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

 நமது நாட்டுச் சிற்பக் கலைச்செல்வங்கள் மண்ணுள் மறைந்து கிடக்கின்றன. பல சிற்பக்கலைச் செல்வங்கள் பழைய கோவில்களைப் புதுப்பிக்கின்ற போது மண்ணில் போட்டு புதைக்கப்படுகின்றன. பல சிற்பக் கலைச்செல்வங்கள் ஐரோப்பியர்களால் கொள்ளையடிக்கப்பட்டன. சென்ற இருநூறு ஆண்டுக்கால ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் இந்திய சிற்பங்கள் அயல்நாடுகளுக்கு விற்கக் கூடாது என்னும் சட்டம் இல்லை. அதனால் நம் சிற்பக் கலைப்பொருட்கள் அமெரிக்கா, பிரான்சு, இங்கிலாந்து போன்ற மேல்நாடுகளுக்கு கள்ளத்தனமாகக் கடத்தப்பட்டன. இதை அறிந்து மிகுந்த வேதனையடைந்தார். நமது நாட்டுச் சிற்பங்களை, கலைப்பொருட்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

 1980ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் தமிழ்ச் செம்மல்கள் பேரவை, ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்னும் பட்டத்தை வழங்கிப் பாராட்டியது.

 2001ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் சார்பாக வேங்கடசாமிக்கு நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

 08.05.1981இல் வேங்கடசாமி இவ்வுலக வாழ்வை நீத்தார். வேங்கடசாமி இலக்கியக் கடல், வரலாற்றறிஞர், மொழிநூற்புலவர், சமயநூல் வித்தகர், நுண்கலைவாணர், வரிவடிவ வரலாற்று வல்லுநர், சொல்லாய்வுச் செம்மல், கல்வெட்டு, சாசனம், தொல்லியல் துறைகளில் தனிமுத்திரை பதித்தவர், பன்மொழிப்புலவர், மானிடவியல், சமூகவியல் அறிஞர் எனப் பல்வேறு பரிமாணங்களின் பெட்டகமாய்த் திகழ்ந்தவர்.

 வேங்கடசாமி அவர்களின் வழியில் தமிழகத்தின் வரலாற்றை முழுமையாக ஆய்வு செய்வதும், தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்வதும், அவரின் உயர்ந்த கருத்துக்களை உள்ளத்தில் ஏந்திச் செயல்படுவதும் அனைத்து தமிழர்களின் கடமையாகும்.

குறிப்பு : 16-12-2010 அன்று மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் 110 வது பிறந்த தினமாகும்.

Pin It