தந்தை பெரியார் அவர்கள் ஈரோட்டில் தனிமனிதராக பொதுவாழ்க்கையைத் துவக்கியவர். ஈரோடு நகரமன்றத் தலைவராக அவர் செயலாற்றி வந்த காலத்தில் 1920ல் காந்தியாரால் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டது. அதில் இருந்த தீண்டாமை விலக்கு, மது விலக்கு ஆகியவை பெரியாரை மிகவும் கவர்ந்தன. முக்கியமாக தீண்டாமை விலக்கு மூலம், சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் ஜாதி வேற்றுமையை ஒழிக்க ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைப்பதாக எண்ணி காங்கிரஸில் இணைந்தார். காந்தியை முழுமையாக நம்பிய பெரியார் மதுவிலக்குப் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது தனக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். கோர்ட்டுகளை விலக்கும் காரியத்தில் தம் குடும்பத்திற்கு கோர்ட்டு மூலம் வரவேண்டிய 50,000 ரூபாயை அந்தக் காலத்திலேயே இழந்தார்.

periyar 2211915ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி மாயவரம் (மயிலாடுதுறை) வருகை தந்த காந்தியாருக்கு விக்டோரியா நகர மண்டபத்தில் (TOWN HALL) வரவேற்பு அளிக்கப்பட்டது. மயிலாடுதுறை நகரின் முக்கிய பிரமுகர்கள் பலரும் இந்த வரவேற்பில் கலந்துகொண்டனர். நகரசபைத் தலைவரான நடேசஅய்யர் வரவேற்புரையாற்றினார்.

ஆதிக்க சாதியினர் நிரம்பியிருந்த சபையில் காந்தியார் தனது பேச்சை தொடங்கினார். "நீங்கள் வருந்தக்கூடிய சில சொற்களை நான் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. தீண்டத்தகாதவர்கள் என ஒரு வகுப்பார் உருவாகக் காரணமாக இருந்தவர்கள் யார்? எங்கெங்கே பிராமணர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் உயர்ந்தவர்கள் என்கிற மரியாதையை அவர்களே பெறுகிறார்கள். இந்தப் பாவம் அவர்களையே சாரும்.

பகவத்கீதை சொல்வதை நினைவில் கொள்ளுங்கள். பண்டிதனுக்கும், பாமரனுக்கும் எவன் வேறுபாடு பாராட்டுவதில்லையோ அவனே உண்மையான பிராமணன் என்று கீதை கூறுகிறது. மாயவரத்தில் பிராமணர்கள் பஞ்சம சகோதரர்களிடம் சமமாகப் பழகினால், மற்ற வகுப்பினர் அவர்களைப் பின்பற்றமாட்டோம் என்று சொல்லுவார்களா? தங்களது தற்கால நிலைமை பூர்வீக தவபலத்தால் கிடைத்தது என்று பிராமணர்கள் சொல்வார்களேயானால் அவர்களே தேசத்தை நாசமாக்கும் பாவிகளாவார்கள். மாயவரம் மக்களின் காலடியில் நின்று நான் கேட்கிறேன். வீடு,வாசல் இல்லாதவர்களை உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் கதறுபவர்களை விரட்டியடிப்பதுதானா தேசியம்?" என்று பேசினார்.

அடுத்து 1927ம் ஆண்டு செப்டம்பர் 12ம் நாள் மயிலாடுதுறை ராஜன் தோட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காந்தி தேவதாசிகள் நிலை பற்றி உரையாற்றினார். அந்தக் கூட்டம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் இசைவேளாளர்கள் வகுப்பைச் சேர்ந்தவர்கள் காந்தியை சந்தித்து, கோவிலுக்கு தங்கள் வீட்டு கன்னிப்பெண்கள் தேவதாசிப் பட்டம் கட்டி விடப்படுவதைவும், அவர்கள் வாழநேரும் கேவலமான வாழ்கையைப் பற்றியும் காந்தியிடம் கூறியிருந்தார்கள்.எனவே தேவதாசிகள் பற்றி அந்தக் கூட்டத்தில் காந்தி விரிவாகவே பேசினார்.

"அவர்களைத் தேவதாசிகள் என்று அழைப்பதன் மூலம் கடவுளையே நாம் அவதூறு செய்கிறோம். நமது காம இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காகக் கடவுள் பெயரை இழுக்கிறோம். ஒழுக்கமில்லாத வாழ்க்கை வாழ்வதற்காக இம்முறை நீடிக்க வேண்டுமென்று சிலர் எண்ணுவதைப் பார்க்கும்போது வாழ்க்கையே கசந்துபோகிறது. நான் அந்தப் பெண்களைச் சந்தித்தபோது அவர்கள் கண்களில் களங்கம் எதுவும் தென்படவில்லை. உலகில் உள்ள மற்றப் பெண்களைப் போல அவர்களும் ஒழுக்கமான வாழ்க்கை வாழ முடியும் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். இந்தச் சகோதரிகளில் பெரும்பாலோர், சொல்லப்போனால் எல்லோருமே தங்களுடைய வாழ்கையை மாற்றிக்கொள்ள விரும்புவதாக என்னிடம் தெரிவித்தனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடியாவிட்டால் நான், அவர்களைக் குறைகூற மாட்டேன். அவர்கள் கதி எந்தச் சமூகத்தில் பின்னிப் பிணைந்து கிடக்கிறதோ அந்தச் சமூகத்தையே குறை சொல்வேன்." என்றார்.

தமிழ்நாட்டில் சேரன்மாதேவியில் காங்கிரஸ் மற்றும் பார்ப்பனரல்லதார் தலைவர்களின் நிதி உதவியுடன், வ.வே.சுப்ரமணிய அய்யரால் ஒரு தேசிய நிலையம் ஏற்படுத்தப்பட்டது. அதற்குப் பெயர் குருகுலம். அங்கு பார்ப்பனப் பிள்ளைகளுக்கு தனி உணவு, தனி இடம், தனி பிரார்த்தனை; பார்ப்பனரல்லாதாருக்கு தனி உணவு, தனி இடம், தனி பிரார்த்தனை என வேறுபாடு காட்டப்பட்டது. அதை எதிர்த்துப் போராடினார் பெரியார்.

கதர் போர்டு நிர்வாகத்தில் பெரியார் தலைவராக இருந்த போதிலும் காரியதரிசியாக அப்போது இருந்த சந்தானம் என்கிற பார்ப்பனரின் ஆதிக்கத்தால் கதர்போர்டு நிர்வாகம் முழுவதும் பார்ப்பனர் மயமாகி இருந்தது. சகல வசதிகளையும் பார்ப்பனர்களே அனுபவித்து வந்ததை எதிர்த்து குரல் கொடுத்தார் பெரியார். அந்தப் போராட்டங்களில் காந்தியாரின் தலையீடு இருந்ததால் பெரியாரால் வெற்றிபெற முடியவில்லை.

1920லிருந்தே காங்கிரஸில் இருந்தபடி வகுப்புவாரி உரிமைக்காகப் போராடியவர் பெரியார். 1920,1921,1922,1923,1924 ல் நடைபெற்ற திருநெல்வேலி, தஞ்சாவூர், திருப்பூர், சேலம், திருவண்ணாமலை மாநாடுகளைத் தொடர்ந்து 1925 காஞ்சிபுரம் மாநாட்டிலும் பெரியாரின் வகுப்புவாரி உரிமைத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டதால் காங்கிரஸிலிருந்து வெளியேறினார் பெரியார். காந்தியார் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையும் நீடிக்கவில்லை.

1934ல் மீண்டும் காந்தி மயிலாடுதுறை வந்போது 1927ல் கலந்துகொண்ட பலர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கூட்டம் குறைவாக இருப்பதைக் கண்ட காந்தி "சென்ற முறை நான் இந் நகருக்கு வந்திருந்தபோது என் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் பலர் இப்போது வரவில்லை. அரிஜனங்களின் முன்னேற்றத்தில் அவர்களுக்கு மனப்பூர்வமான விருப்பம் இல்லை என்று தான் கருத வேண்டியிருக்கிறது." என்று கூறினார்.

இந்தத் தகவல்கள் "தமிழ்நாட்டில் காந்தி" என்ற நூலில் இடம் பெற்றதுதான். ஆனால் சுயமரியாதை இயக்க வீராங்கனையும், தேவதாசி ஒழிப்புப் போராட்டத்தில் பெரும்பங்கு வகித்தவருமான மூவலூர் மூதாட்டி இராமாமிர்தத்தம்மையார் நடத்திய ஒரு மகளிர் மாநாட்டில் கலந்துகொண்டு காந்தி உரையாற்றியதாக இராமாமிர்தத்தம்மையார் வாழ்க்கை வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக்கூட்டம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் இராமாமிர்த்தத்ம்மாள் தலைமையில் இசைவேளாளர்கள் காந்தியை சந்தித்திருக்கின்றனர். ஆனால் இராமாமிர்தத்தம்மையார் பெயரை விடுத்து சில இசைவேளாளர் பெண்கள் காந்தியை சந்தித்ததாக அந்த நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மூவலூர் மூதாட்டியார் இருட்டடிக்கப்பட்தைப் போன்றே வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாரின் அளப்பற்கரிய தொண்டை காந்தியாரே மூடி மறைக்கவில்லையா?. "நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்" நிறுவனம், ஐ.ஏ.எஸ் அதிகாரியான வெ.இறையன்பு அவர்கள் எழுதிய "துரோகச் சுவடுகள்" என்கிற நூலை அண்மையில் வெளியிட்டிருக்கிறது. அதில் இது தொடர்பான ஒரு கட்டுரையை "அமுக்கப்படும் அங்கீகாரம்" எனும் தலைப்பில் எழுதியிருக்கிறார் இறையன்பு. .

"முதுகில் குத்துவது ஒருவகையான துரோகம் என்றால் ஒருவரின் முகவரியை மறைத்து அதில் தன் முத்திரையை குத்துவது இன்னொரு வகையான துரோகம். உழைத்தவர்களுக்குப் போய்ச் சேரவேண்டிய அடையாளத்தை மறைத்துவிட்டு தொடர்பில்லாத நபருக்குப் பெருமைகளை அள்ளி வீசுவது வியர்வையை சிந்தியவர்களுக்கு அயர்வைத் தருகிற அற்பச்செயல்" எனத் துவங்குகிறது அக்கட்டுரை.

Gandhi 321"கேரள மாநிலம் வைக்கத்தில் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்க அனுமதிக்கப் படாததைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். சரியான தலைமையில்லாததால் போராட்டம் முடக்கப்பட்டது. போராட்டத்தை வலுப்படுத்தும் சக்தி ஈரோட்டைச் சேர்ந்த ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கே உண்டு எனக்கணித்த போராட்டக்காரர்கள், ராமசாமி நாயக்கருக்கு அழைப்புவிடுக்க உடனடியாக அவர் வைக்கம் சென்று போராட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது திருவிதாங்கூர் மன்னர் மரணமடைய, அவரது மறைவையொட்டி கைது செய்யப்பட்டிருந்த போராட்டக்காரர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். ராமசாமி நாயக்கரின் தலைமையில் போராட்டம் விஸ்வரூபம் எடுத்து விபரீதம் ஏதும் நிகழுமோ என்று பயந்த திருவிதாங்கூர் மகாராணி காந்திக்கு கடிதம் எழுதினார். பின்னர் அந்தத் தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடக்க அனுமதிக்கப்பட்டனர். இப்போராட்டத்தின் காரணமாக "வைக்கம் வீரர்" என்று அழைக்கப்படும் அளவிற்கு வாகையைச் சூடிய அந்தத் தலைவர் தான் பின்னால் பெண்கள் மாநாட்டில் "பெரியார்" என்று பெயர் சூட்டப்பட்ட ஈ.வெ.இராமசாமி. உண்மை இப்படி இருக்க மகாத்மா காந்தியே மகத்தான தவறு ஒன்றைச் செய்தார். வைக்கம்போராட்டம் பற்றி, காந்தி பத்திரிக்கை ஒன்றில் எழுதிய கடிதத்தில் பெரியாரைப் பற்றி ஒரு வரி கூட எழுத வில்லை. ஆனால் தந்தை பெரியார் அவர்களோ அதுபற்றி எதுவும் அலட்டிகொள்ளவில்லை." என்கிற செய்தியை இறையன்பு அக்கட்டுரையில் பதியவைத்திருக்கிறார்.

மயிலாடுதுறை முன்னனாள் சட்டமன்ற உறுப்பினரும் சுதந்திரப் போராட்ட வீரருமான தியாகி நாராயணசாமி நாயுடு அவர்கள் தன் வாழ்நாள் அனுபவங்களைப் பற்றிச் சொல்கையில் 1930களில் மயிலாடுதுறையில் சுயமரியாதைக்காரர்ககளின் கை ஓங்கியிருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். மயிலாடுதுறையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.சீனிவாசஅய்யங்கார் கூட்டத்தில் கலாட்டா. வரதராஜிலு நாயுடு கூட்டத்தில் அடிதடி. சத்தியமூர்த்தி கூட்டமே நடத்த முடியாத நிலை. காந்திக்கு கறுப்புகொடி. நேருவுக்கு கறுப்புகொடி. பட்டமங்கலத்தெரு, மணிக்கூண்டு தாண்டினால் கதர் கட்டியவர்கள் சென்றால் அடிவிழும் நிலை என்று குறிப்பிட்டுள்ளார்.

தியாகி நாராயணசாமி கூறியதையும், 1934ல் காந்தி வருகைக்கு மக்கள் ஆதரவு குறைந்திருந்ததையும் ஒப்பிடுகையில் தந்தை பெரியார் காங்கிரஸில் இருந்தபோது, தமிழ்நாட்டில் காந்திக்கு இருந்த ஆதரவு, பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறிய பின் காந்திக்கு இல்லை என்பதும், காந்தி தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் பெரியாரின் கொள்கை நிலைப்பாட்டை ஒட்டியே பேச முடிந்திருக்கிறது என்பதும் நம்மால் உணர முடிகிறது.

மேலும் காந்தி 1925க்கு முன்னர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த போதெல்லாம் பார்ப்பனர்கள் வீட்டு திண்ணையில் அமர்ந்தே சென்றிருக்கிறார். 1925ல் பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்த பின்னரே காந்தியாரால் கூட பார்ப்பனர்கள் வீட்டு அடுப்பங்கரை வரை செல்ல முடிந்திருக்கிறது. இதை காந்தியே தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்.

தந்தை பெரியார் அவர்கள் எச்சரித்ததைப் போலவே 1948ல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்த நாதுராம் கோட்சே என்கிற பார்ப்பனரால் காந்தி கொல்லப்பட்டார். நாடே கொந்தளித்திருந்த சூழலில் இந்திய நாட்டிற்கு "காந்தி நாடு" என பெயர் சூட்டப்பட வேண்டும் என்று அரசுக்கு பெரியார் வேண்டுகோள் விடுத்தார். அவர்தாம் பெரியார்!

- கி.தளபதிராஜ்

Pin It

ஆங்கிலேயர் ஆட்சி இந்திய மக்கள் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பையும் விட்டு வைக்கவில்லை. உப்புக்கும் வரி விதித்தது. அதனால் உப்பு விலை ஏறியது. இங்கிலாந்து நாட்டிலிருந்து வணிகக் கப்பல்கள் மூலம் உப்பு மூட்டை ஏற்றி வந்து இந்தியாவில் இறக்கியது. மலிவு விலையில் உப்பு விற்கப்படும் என அறிவித்தது.

ஏழை எளிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உப்பிலேயே கைவைத்தனர் வெள்ளையர். இந்த அநியாயத்திற்கு முடிவு கட்ட வேண்டும் எனப் பொங்கி எழுந்து, போர்க்கொடி தூக்கினார் மகாத்மா காந்தியடிகள். வரி கொடுக்காமல் உப்பினை அள்ளும் போராட்டத்தை அறிவித்து, 1930 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 12-ஆம் நாள் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தொண்டர்களுடன் தண்டி யாத்திரை தொடங்கினார்; இருபத்து ஏழு நாட்கள் நடந்து தண்டியில் சட்டத்தை மீறி உப்பு எடுத்து மாபெரும் எழுச்சியை உருவாக்கினார்.

தமிழ் நாடு காங்கிரஸ் தலைவராக விளங்கிய மூதறிஞர் இராஜாஜி, தமிழகத்தில் உப்பு எடுக்கும் போராட்டத்தை அறிவித்தார். அப்போராட்டத்திற்கு தளபதியாக அ.வேதரத்தினத்தை நியமித்தார்.

உப்பு எடுக்கும் யாத்திரை திருச்சியிலிருந்து 13.04.1930 ஆம் நாள் புறப்பட்டது. `வந்தே மாதரம்’ முழக்கத்துடன், தேசியக்கவி பாரதியின் பாடல்களுடன் வீறுநடை போட்டது தொண்டர்படை.

உப்பு யாத்திரையை தடுத்து நிறுத்திட வெள்ளையர் ஆட்சி கடுமையான ஒடுக்குமுறைகளை மேற்கொண்டது. காவல்துறை மூலம் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டது. `இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம்’ என்ற கொடுமை கோலோச்சியது. யாத்திரையில் கலந்து கொண்டுள்ள தொண்டர்களுக்கு சாப்பிட உணவு வழங்கக் கூடாது; குடிக்கத் தண்ணீர் கொடுக்கக் கூடாது; மீறினால் கடும் தண்டனை அளிக்கப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தின் அப்போதைய வெள்ளைக்கார ஆட்சித் தலைவர் ஜே. ஏ தாரன் என்பவர், சத்தியாகிரகிகளைக் குண்டாந்தடி கொண்டு தாக்கிட உத்தரவிட்டார். உப்புப் போராட்டத் தொண்டர்களை வரவேற்று உணவளித்து, உபசரித்து தங்க வைத்ததற்காக தென்பாதி நாயுடு கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார்.

ஆனால், வெள்ளையர்களின் அடக்குமுறைகளையும், மிரட்டல்களையும் மீறி, மக்கள் மறைமுகமாக சத்தியாகிரகிகளுக்கு உணவு அளித்தனர். இதற்கெல்லாம் ஊர் ஊராகச் சென்று ஏற்பாடு செய்தவர் வேதரத்தினம்!

நூற்றைம்பது மைல் நடந்து 28.04.1930 ஆம் நாள் திருமறைக்காட்டினைச் (வேதாரண்யம்) சென்றடைந்தனர் சத்தியாகிரகிகள். அங்கு போராட்டத் தளபதியாக விளங்கிய வேதரத்தினம் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்பொதுக் கூட்டத்தில் இராஜாஜி உப்பு எடுக்கும் போராட்டம் குறித்து உரையாற்றினார்.

வெள்ளைக்காரக் காவல்துறையினரின் அடக்குமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு முதல் சத்தியாகிரகியாக இராஜாஜி 30.04.1930 அன்று விடியற்காலை மூன்று மணிக்கு வெள்ளை உப்பை வெள்ளையருக்கு எதிராக அள்ளினார். கைது செய்தது காவல்துறை. அடுத்து க.சந்தானம் தலைமையேற்று உப்பை அள்ளினார். அவரும் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார். அடுத்த நாள் மட்டப்பாறை வெங்கட்ராம ஐயர் தலைமையேற்று உப்பை அள்ளினார். அவரும் கைது செய்யப்பட்டார்.

ஆத்திரம் கொண்ட வெள்ளையர்களின் காவல்படை சத்தியாகிரகிகள் தங்கியிருந்த முகாம் மீது தாக்குதல் தொடுத்து, தொண்டர்களை அடித்தது, மண்டையைப் பிளந்தது; முகாமை பிய்த்து எறிந்தது. மேலும், வேதரத்தினத்தின் உப்பளங்களைப் பறிமுதல் செய்தது. அதோடு அவரது உடைமைகளை ஏலம்விட்டது.

'மன்னிப்பு எழுதிக் கொடுத்தால் விடுவிப்பதாக’ காவல் துறை ஆசை காட்டியது. வேதரத்தினத்தின் தந்தை அப்பாகுட்டி பிள்ளையிடமும் காவல் துறை ஆசை வார்த்தை கூறியது. அதற்கு, "என் மகன் மன்னிப்புக் கேட்டு, அவமானப்பட்டு சிறையிலிருந்து வெளியே வருவதைவிடச் சிறையிலிருப்பதே மேல்" என்றார். ஆறு மாதம் சிறைத் தண்டனையை அனுபவித்து விடுதலையானார்.

திருநெல்வேலியில் 19.12.1931 ஆம் நாள் நடைபெற்ற முதலாவது விவசாயிகள் – தொழிலாளர்கள் மாநாட்டில், உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தை வழிநடத்தி வெற்றிகரமாக்கியதைப் பாராட்டி, தீரர் வேதரத்தினத்திற்கு, 'சர்தார்’ என்றும் பட்டம் அளித்துப் பெருமைபடுத்தினர்.

தமது இருபதாவது வயதில் காந்தியடிகளால் அரசியலில் ஈர்க்கப்பட்டு நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் தீவிரமாகப் பாடுபட்டார் வேதரத்தினம்.

"சர்தார் ஓர் உண்மையான காந்தியவாதி. அதைத் தம் வாழ்க்கையில் கடைபிடித்து வாழ்ந்தவர். தூய்மையான தேசபக்தராக விளங்கியவர்"-என பொள்ளாச்சி நா.மகாலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

தேசவிடுதலையே தமது இலட்சியமாகக் கொண்டு தொண்டாற்றிய சர்தார் வேதரத்தினத்தின் பெயர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்!

Pin It

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆட்சியாளர் சுப்பையாபிள்ளை, பொருளையும், புகழையும் துச்சமாக மதித்து ஒரு குக்கிராமத்தில் உழுதுண்டு வாழ்ந்த பொ.வே. சோமசுந்தரனாரை தமிழுலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள மேலைப் பெருமழை என்றும் சிறிய கிராமத்தில், வேலுத்தேவர் - சிவகாமியம்மாள் தம்பதிக்கு 1909-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ஆம் நாள் பிறந்தார்.

திண்ணைப் பள்ளியில் சேர்ந்து அரிச்சுவடி, ஆத்திச்சூடி, வெற்றிவேற்கை, நிகண்டுகள், நைடதம், கிருட்டிணன் துதூ, அருணாசலப் புராணம் முதலிய நூல்களைக் கற்றார். இவருடைய தந்தையார், தொடர்ந்து மகன் படிப்பதற்கு இடம் தராமல் உழவுத் தொழிலில் ஈடுபடுத்தினார். இருப்பினும் தந்தையாருக்குத் தெரியாமல் கோவில், மடம் முதலிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள நூல்களைப் பெற்று படித்து வந்தார்.

இவருடைய தாயார் இவரது பத்தாவது வயதில் காலமாகிவிட்டார். தந்தையார் மறுமணம் செய்து கொண்டார். பின்னர், சோமசுந்தரனார் தமது தாய்மாமன் இல்லத்தில் தங்கினார். இவரது கிராமத்துக்கு அருகில் உள்ள ஆலங்காடு என்னும் ஊரில் ‘சர்க்கரைப் புலவர்’ வாழ்ந்து வந்தார். அவரைக் கண்டு, தமது கல்வி ஆர்வத்தை வெளிப்படுத்தினார். சர்க்கரைப் புலவர், சோமசுந்தரனாரை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்குச் சென்று பயிலுமாறு ஆர்வமூட்டி, அப்பல்கலைக் கழகத்தில் தமிழாசிரியராகப் பணியாற்றிய பூவராகம்பிள்ளை என்பவருக்கு அறிமுகக் கடிதம் கொடுத்து அனுப்பினார்.

சோமசுந்தரனார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ்க் கல்வி கற்றார். ஆவர் அங்கு அவர் பயின்ற காலத்தில், சோழவந்தான் கந்தசாமியார், பண்டிதமணி கதிரேசச் செட்டியார், விபுலானந்த அடிகள் முதலிய தமிழ் அறிஞர்கள் ஆசிரியர்களாக பணிபுரிந்தனர். இவரது தமிழறிவு வளர்ச்சிக்கு அது நல்வாய்ப்பாக அமைந்தது.

‘புலவர்’ படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். இருப்பினும், தமிழ்மொழி அறியாத ஆங்கிலேயே ஆளுநர் எர்ஸ்கின்பிரபு இவரை கைகலக்கி வழங்கிய சான்றிதழை கிழித்தெறிந்துவிட்டு தனது ஊர்போய்ச் சேர்ந்தார்.

தமது ஊரில் தங்கி உழவுத் தொழிலில் ஈடுபட்டார். தமக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களை படிப்பதற்கும், எழுதுவதற்கும் தமது பல்கலைக் கழக ஆசிரியரான பண்டிதமணி கதிரேசச் செட்டியாரை சென்று சந்தித்து தமது விருப்பத்தை வெளிப்படுத்தினார். தாம் எழுதிக் கொண்டிருந்த திருவாசக உரையை, சோமசுந்தரனாரிடம் அளித்து எதும்படி வேண்டினார். சோமசுந்தரனாரும் இந்தப் பணியை மேற்கொண்டு ‘திருவாசகத்துக்கு’ உரை எழுதி முடித்தார். இதுவே, இவர் பின்னாளில் உரையாசிரியர் ஆவதற்குப் பயிற்சியாக அமைந்தது.

திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் எழுதிக் கொண்டிருந்த கருப்பக்கிளர் இராமசாமிப் புலவரின் தொடர்பால், சென்னை சென்று கழகத்துக்காக சங்க இலக்கியங்களுக்கு உரைகள் எழுதி வந்தார்.

சங்க இலக்கியங்களான ‘நற்றினை’, ‘குறுந்தொகை’, ‘அகநானூறு’, ‘ஐங்குறுநூறு’, ‘கலித்தொகை’, ‘பெருங்காப்பியங்களான ‘சிலப்பதிகாரம்’, ‘மணிமேகலை’, ‘சீவகசிந்தாமணி’, ‘வளையாபதி’, ‘குண்டலகேசி’, சிறுகாப்பியங்களான ‘உதயணகுமார காவியம்’, ‘நீலகேசி மற்றும் பெருங்கதை’, ‘புறப்பொருள் வெண்பாமாலை’, ‘கல்லாடம்’, ‘பரிபாடல்’, ‘ஐந்திணை எழுபது’, ‘ஐந்திணை ஐம்பது’, ‘திருக்கோவையார்’, ‘பட்டினத்தார் பாடல்’, முதலிய நூல்களுக்கு சோமசுந்தரனார் உரையெழுதி அளித்துள்ளார்.

மேலும், ‘செங்கோல்’, ‘மானனீசை’ முதலிய நாடக நூல்களும், பெருங்கதை உரைநடையும், பண்டிதமணி வரலாறு முதலிய உரைநடை நூல்களையும் எழுதி அளித்துள்ளார்.

இவரது உரை விளக்கங்கள் யாவும் தமிழறிஞர்களையே வியக்க வைக்கும். பழைய உரையாசிரியர்களை மறுத்து எழுதும் புலமை பெற்றிருந்தார்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் 1008-வது நூல் வெளியீட்டு பொன்விழாவில், சோமசுந்தரனார் கேடயம் அளித்து போற்றிச் சிறப்பிக்கப்பட்டார்.

அவர் வாழ்ந்த மேலப் பெருமழை ஊராட்சியில் உள்ள நூலகத்துக்கு ‘பெருமழைப்புலவர் சோமசுந்தரனார் நூலகம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தன்னலமற்ற தமிழ்ப்பணி புரிந்த சோமசுந்தரனார் 03.01.1972-ஆம் நாள் காலமானார். அவர் மறைந்தாலும், சங்க இலக்கியங்களுக்கு அவர் எழுதிய உரைகள் தமிழர்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்.

Pin It

“ஒருவர் அரசியல் வாழ்க்கையில் நுழையும் போது அதனால் கிடைக்கக் கூடிய அதிகாரத்தினால், மயங்கிடாமலும் நெறிபிறழாமலும் வாழ்வதற்கு, மனித நிலை கடந்து தன்னைத்தானே ஆளுகின்ற திறம் வேண்டும். அரசியல் வாழ்க்கை, சமயம் சார்ந்ததாக இருக்குமாயின், மனிதர்களிடையே நிலவும் சமநிலை வளர்ச்சிக்கு அதுவே தீங்காகும்.” – என்னும் கருத்துடையவர்! அதுபோலவே, தன் அரசியல் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதை வாழ்ந்தும் காட்டியவர்! அவர்தான் ‘தத்துவமேதை’ டாக்டர். எஸ்.இராதாகிருஷ்ணன்!

sarvepalli radhakrishnanஅன்றைய சென்னை மாநிலத்தின் திருத்தணி என்னும் சிறு கிராமம் இவரது ஊர்! அங்கு, 1888ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 5ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் சர்வபள்ளி வீராசாமி.

தனது ஆரம்பக் கல்வியைத் திருத்தணி, மாவட்டக்கழகப் பள்ளியில் பயின்றார். பின்பு உயர்நிலைப் பள்ளிக் கல்வியை ஹெர்மன்ஸ் பர்க் சுவிசேஷ லுத்துரன் மிஷன் பள்ளியில் பயின்றார். வேலூர் ‘ஊரிஸ் கல்லூரி’யில் புகுமுக வகுப்பை முடித்தார். கல்லூரி மாணவராக இருக்கும்போதே சிவகாமு என்பவரைத் தனது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார்.

சென்னை கிறித்துவக் கல்லூரியில் தனது இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்புகளை நிறைவுசெய்தார். புகுமுகு வகுப்புமுதல் முதுகலை வரை உதவித் தொகை பெற்று கல்வியை முடித்தார்! முதுகலைத் தேர்வின் போது “வேதாந்தங்கள் கூறும் அறமும் அதன் மெய் விளக்க மேற்கோளும்” என்ற ஆய்வுக் கட்டுரையை வரைந்தார்.

கல்லூரிப் படிப்பை முடித்தபின்பு, கல்வித் துறையில் அரசு ஊழியராகச் சிறிது காலம் பணியாற்றினார். பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் 1909 ஆம் ஆண்டு தத்துவ இயல் துறையில் பணிக்குச் சேர்ந்தார். கல்வி கற்பித்தலில் பட்டம் பெறுவதற்கு சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரியில் பயிற்சி பெற்றார். பயிற்சி முடிந்ததும் சென்னை மாநிலக் கல்லூரியே மறுபடியும் இவரை ஏற்றுக்கொண்டது.

டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன், மாணவர்களால் சிறந்த ஆசிரியர் என்று அழைக்கப்பட்டார். மாணவர்களின் நலனிலும், முன்னேற்றத்திலும், தனி அக்கறை காட்டினார். ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியராக விளங்கினார்.

‘பன்னாட்டு அறிவியல்’, ‘ஆசியவியல் மறுசீராய்வு’ போன்ற பன்னாட்டு இதழ்களுக்கு ஆய்வுக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினார்.

மைசூர் பல்கலைக்கழகத்தில் தத்துவ இயல் பேராசிரியராக 1918 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். பின்பு கல்கத்தா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணிக்குச் சென்றார். மகாகவி இரவீந்தரநாத் தாகூருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றார். அங்கு தத்துவ இயல் பேரவையைத் தோற்றுவித்தார். அந்தப் பேராவையில் நிகழ்ந்த முதல் சொற்பொழிவை ஆற்றிட இரவீந்திரநாத் தாகூரை அழைத்தார்.

இலண்டனில் நடைபெற்ற பிரிட்டிஷ் பேரரசுப் பல்கலைக் கழகங்களின் பேரவைக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு, கல்கத்தா பல்கலைக் கழகத்தின் சார்பாக கலந்து கொண்டார். அங்கு, ‘ஆக்ஸ்ஃபோர்டைச்’ சேர்ந்த ‘மான்செஸ்டர்’ கல்லூரியில் சொற்பொழிவாற்றினார். அவரது அறிவார்ந்த சொற்பொழிவுகள் அங்கு கூடியிருந்த அறிஞர் பெருமக்களிடையே ஆர்வத்துடிப்பை ஊட்டியதுடன், மிகுந்த பாராட்டையும் பெற்றது.

சிகாகோ நகரில் ஹாஸ்கெல் சொற்பொழிவுகளை ஆற்றினார். ஹார்வார்டில் நடைபெற்ற பன்னாட்டுத் தத்துவப் பேரவையில் கலந்து கொண்டு, ‘உலக நாகரிகங்களை வளர்ப்பதில் தத்துவத்தின் பங்கு’ – என்ற தலைப்பில் செறிவுமிக்கதோர் சொற்பொழிவை நிகழ்த்தினார்.

கல்கத்தா பல்கலைக் கழகத்தின் முதுகலைக் கல்விக் கழகத்தின் தலைவராகவும், பல்கலைக் கழக ஆட்சிக்குழு உறுப்பினராகவும், பல்கலைக் கழக அமைப்பாண்மைக் குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புகழ் பெற்ற பனராஸ் இந்து பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நியமனம் பெற்றர். அப்போது, நாட்டின் விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தது. அடக்குமுறையை எதிர்த்து மாணவர்கள் கிளர்ந்தெழுந்தனர்; பிரிட்டிஷ் அரசு பல்கலைக் கழக வளாகத்திற்குள் இராணுவத்தை அனுப்பி, மாணவர்களை ஒடுக்க முயன்றது. ஆனால் துணைவேந்தராயிருந்த டாக்டர். எஸ்.இராதாகிருஷ்ணன், நாட்டுப்பற்றுமிக்க நல்லறிஞர் என்பதால், மாணவர்கள் சார்பாக நின்றார். இராணுவம் பல்கலைக் கழகத்திற்குள் நுழைவதைத் தடுத்து நிறுத்தினார்.

வால்டேரில் உள்ள ஆந்திரப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகப் பணியாற்றியபோது, அப்பல்கலைக் கழகத்தினைத் தனித் தகுதி பெற்ற கல்வி நிறுவனமாக உயர்த்தினார். அப்பல்கலைக் கழகத்தில் சிறந்த நூலகத்தையும் உருவாக்கினார்.

கீழ்த்திசைச் சமயங்களுக்கான ஸ்பால்டிங் பேராசிரியராக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். பிரிட்டிஷ் கழகத்தில், 1937 ஆம் ஆண்டு புத்தரைப் பற்றி ‘தலைமை ஞானி’ என்ற பொருளில் சிறந்த உரை நிகழ்ந்தினார்.

இந்தியா விடுதலை பெற்றவுடன் டாக்டர். எஸ். இராதாகிருஷ்ணன் தலைமையில் கல்வி நலஞ்சார்ந்த பத்து உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழுவை இந்தியாவிலுள்ள இருபத்தைந்து பல்கலைக் கழகங்களுக்கு அழைத்துச் சென்றும், நேரில் ஆய்வு செய்தும், சிற்ப்பான அறிக்கையை அரசுக்கு அளித்தார். அந்த அறிக்கை தற்கால இந்தியக் கல்வி முறைக்கு நல்வழிகாட்டும் தோன்றாத் துணையாக நின்று விளங்குகிறது!

உயர்கல்வி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் களைவதற்கும், கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கும் அக்குழுவின் பரிந்துரைகள் துணை நிற்பனவாகும். ஆனால், இக்குழுவின் பெரும்பாலான பரிந்துரைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவை செயல்படுத்தப்படாததால், உரிய பலனைத் தராமல் தூசு படிந்து கிடப்பது வேதனைக்குரியதாகும்.

இரஷ்யாவிற்கான இந்தியத் தூதராக டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் 1949 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். “இந்த மனிதர் பிற வழக்கமான தூதுவர்களைப் போல இல்லை. இவர் தனது இதயத்தில் மனித நேயமும், அன்பும் கொண்டவர்” என்று இரஷ்ய நாட்டுத் தலைவர் ஸ்டாலின் இவரைப் புகழ்ந்துரைத்துள்ளார்.

இந்தியக் குடியரசின் துணைத் தலைவராக டாக்டர். எஸ் இராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு 1954 ஆம் ஆண்டு ‘பாரத் ரத்னா’ விருது வழங்கப்பட்டது. இந்தியக் குடியரசுத் தலைவராக 1962 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவரின் பிறந்த தினமான செப்டம்பர் 5 ஆம் நாள் ஆசிரியர் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இவரது பெயரில் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

பாரதிய வித்யாபவன் தலைவர் கே.எம் முன்ஷி, டாக்டர். எஸ்.இராதாகிருஷ்ணனுக்கு ‘பிரம்ம வித்யா பாஸ்கரர்’ என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்.

சாகித்திய அகாதெமி, பென் - (PEN) அனைத்திந்திய மையம் போன்ற உயர் நிறுவனங்களைத் தமது அறிவாண்மையால் நடத்திச் சென்றார், சாகித்திய அகாதெமியின் ஆட்சிக்குழு உறுப்பினராக 1968ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். தத்துவ இயல் ஆய்வில் அவர் ஆற்றிய பணிக்காக டெம்ப்லீடன் பரிசு (Templeton Prize) வழங்கப்பட்டது. தத்துவமேதை டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன், 1975 ஆம் ஆண்டு எப்ரம் 14 ஆம் நாள் காலமானார்.

டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணனின் கல்விச் சிந்தனைகள் :

• அந்தந்தப் பகுதிகளின் தாய் மொழியிலேயே பல்கலைக்கழகக் கல்வியை வழங்குவது தான் சிறந்தது.

• ஆசிரியர்கள், தம்முடைய துறையில் நிகழும் அண்மைக்கால வளர்ச்சிகளையும், கண்டுபிடிப்புகளையும் அறிந்து கொண்டிருக்க வேண்டும். அறிவுத் தாகம் கொண்ட மாணவர்களை முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும் திறன் படைத்தவர்களாகவும் விளங்க வேண்டும்.

• அனைவருக்கும் உயர்கல்வி அளிப்பது அரசின் கடமையாகும்.

• கல்வியானது மனிதனை நெறிமுறைப்படுத்துவதோடு சுதந்திரச் சிந்தனையாளனாக்க வேண்டும்.

• பல்கலைக் கழகங்கள், மனித நேயத்தையும் பொறையுடைமையையும், கருத்துப்புதுமையையும், உண்மைத் தேடலையும் நோக்கமாகக் கொண்டு கற்பிக்க வேண்டும்.

• ஆற்றல்மிகு எழுத்தாளர்கள் - அறிவியல் வல்லுநர்கள் - கவிஞர்கள் – கலைஞர்கள் – புதியன கண்டுபிடிப்பவர்கள் – மறைந்துள்ளவற்றைத் தேடி அறிபவர்கள் – ஆகியோரை நம்புதல் வேண்டும். அவர்களுக்குப் பல்கலைக் கழகங்களில் பயிற்சிகள் தருதல் வேண்டும்.

• பல்கலைக் கழகங்கள், ஆய்வுக்கும், ஞானத்துக்கும் வழிகாட்ட வேண்டும். ஒழுக்க உணர்வுக்கும், உள்ளத் தூய்மைக்கும் பயிற்சி அளித்திட வேண்டும்.

அவரின் சமூகச் சிந்தனைத் துளிகள் சில . . .

• சாதியம், சுய சிந்தனையின் வளர்ச்சியைத் தடைசெய்கிறது. ஊகத்தின் அடிப்படையிலான கருத்துக்கள் வளர்வதை ஊக்கப்படுத்துகிறது. இதனால் ஒழுக்கம் கெட்டுவிடுகிறது. ஒருவரை ஒருவர் அவமதிக்கும் செயல்கள் பெருகின. எனவே, எந்தச் சாதியும், சமயமும், தத்துவமும் மனிதகுல முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்தால் தூக்கியெறிந்திட வேண்டும்.

• கடமைகளையும் உரிமைகளையும் பிரித்துப் பார்த்துச் செயல்பட வேண்டும்.

• அணு ஆயுதங்களின் கொடுமையால் ஒட்டுமொத்த சமூகமும் அழிந்து பாழாகிறது. எனவே, அணு ஆயுதங்களை எந்த நாடும் போரில் பயன்படுத்தக்கூடாது.

தத்துவமேதையின் தனிப்பெரும் படைப்புகள் : ‍

1. உண்மையைத் தேடி
2. இரவீந்திரநாத் தாகூரின் தத்துவம்
3. இந்தியத் தத்துவம்
4. ஓர் இலட்சியவாதி நோக்கில் வாழ்க்கை
5. கல்வி – அரசியல் – போர்
6. சமயமும் சமுதாயமும்
7. மாறிவரும் உலகில் சமயம் ‍

இவை தவிர்த்து, இருபதுக்கும் மேற்பட்ட அரிதும் அரிதான மேலும் பல நூல்களை இந்திய மக்களுக்கு வழங்கியுள்ளார்.

தன் வாழ்நாள் முழுவதும் கல்வி உலகம் வளம் பெற அயராது பாடுபட்டவர்! சோதனைக் காலத்திலும் நிமிர்ந்து நின்று, நடுநிலையுடன் செயல்பட்டவர்! மக்களிடம் நம்பிக்கை விதையை நட்டவர்! பேசியவாறே செயல்பட்டவர்! எழுதியவாறே ஒழுகியவர்! இலட்சிய ஆசிரியர்! வளமான அறிவுத் திறம் படைத்தவர்! அவரைத் ‘தத்துவமேதை’ என்று உலகம் புகழ்வது மெத்தச் சரியானதாகும்!

- பி.தயாளன்

Pin It

“எந்தவொரு கால கட்டத்திலும் இலக்கிய ஆர்வத்தைத் தூண்டவும், வளர்க்கவும் சிறந்த படைப்பு மட்டும் போதுமானதல்ல. அரவணைத்துச் செல்லும் பண்பும் - ஊக்குவிக்கும் இயல்பும் - தயக்கமின்றித் தலைமை தாங்க முன்வரும் மன உறுதியும் - படைத்த ஒரு சில அறிஞர்கள் தேவைப்படுகின்றனர். இந்த நூற்றாண்டில் தமிழ் மொழிக்கு வாய்த்த அத்தகையோரில் நாரண. துரைக் கண்ணனும் ஒருவராவர். இளம் எழுத்தாளரிடையே இலக்கிய ஆர்வத்தைத் தூண்டிப் பிரகாசமடையச் செய்த அவருடைய பணி வெகுகாலம் போற்றப்படும்!” – இவ்வாறு, முதுபெரும் எழுத்தாளர் அசோகமித்திரன், நாவலாசிரியர் நாரண. துரைக்கண்ணனைப் பற்றிப் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

narana duraikannanசென்னை, மயிலாப்பூரில் ச.வே.நாராயணசாமி – அலர்மேல் மங்கை ஆகியோரின் தவப்புதல்வராக 24.08.1906 ஆம் நாள் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் நடராசன் என்பதாகும். பின்னர் நாரண. துரைக்கண்ணன் என்று அழைக்கப்பட்டார்.

திருவல்லிக்கேணி இந்து ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் படிவம்வரை படித்தார். இடையில் படிப்பு தடைப்பட்டது. திருவல்லிக் கேணியில் உள்ள கெல்லட் உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர் மைக்கேல் என்பவரிடம் ஆங்கில மொழிப் பயிற்சி பெற்றார். பின்னர் டி.என். சோசலம் என்பவரிடம் தமிழ் இலக்கியம் கற்றார்.

இசைக் கலையில் ஈடுபாடு கொண்டு நாதமுனி என்பவரிடம் நாதசுரக் கலையையும், ஆந்திர இசைக் கலைஞர் சாத்திரியிடம் பிடில் வாசிப்பதையும் விடாது பழகிப் பயின்றார்!

குப்புசாமி முதலியாரிடம் தமிழ் கற்று, பக்தி இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டார். பின்னர் நன்னூல் இலக்கணத்திலும் நாட்டம் கொண்டு தேர்ந்தார். மறைமலையடிகளார், திரு.வி.க, மணி.திருநாவுக்கரசு, கா.நமச்சிவாய முதலியார் ஆகியோரிடம் நட்பு பூண்டிருந்ததால் தமிழார்வம் தழைக்கப் பெற்றார்.

மேற்கொண்டு கல்வியைக் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் அச்சுத் தொழில் பயிற்சியோடு, மெய்ப்புத் திருத்தத்திலும் அய்க்கியமானார்! அப்பொழுது முதலே, தமிழ்ச் சமுதாயத்துக்கும் பயன்படும் வகையில், இதழாசிரியராகவும், எழுத்தாளராகவும் ஆகிவிட வேண்டுமென்னும் ஆவலை, இலட்சியமாக ஏற்றார்.

தமது இருபத்தைந்தாவது வயதில் மீனாம்பாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். மகாகவி பாரதியின் பாடல்களை நாட்டுடைமை ஆக்க வேண்டுமென்பதற்காகப் பாடுப்பட்டார்; ‘பாரதி விடுதலைக் கழகம்’ என்ற அமைப்பை அதற்காகவே ஏற்படுத்தி, அதன் துணைத் தலைவராக விளங்கினார். மகாகவி பாரதியின் பாடல்களை அரசுடைமையாக்கிட அன்றைய சென்னை மாநில முதலமைச்சர் ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் ஆவன செய்வதாகக் கூறினார். அதனைத் தொடர்ந்து தி.க.சன்முகம், வல்லிக்கண்ணன், அ.சீனிவாசராகவன், கேபி. கணபதி முதலிய நண்பர்களோடு திருநெல்வேலிக்குச் சென்று, பாரதியாரின், மனைவி செல்லம்மாள் பாரதியைச் சந்தித்து ஒப்புதல் பெற்றார். மேலும், மகாகவி பாரதிக்கு எட்டயபுரத்தில் மணிமண்டபம் எழுப்ப முயற்சி எடுத்தோருள் நாரண. துரைக்கண்ணனும் முக்கியமானவர் என்பது நாம் அறியப்பட வேண்டிய செய்தி.

தமிழக அரசு பாரதியின் பாடல்களை நாட்டுடைமையாக்கி அறிவித்தது. முதல்வரிடம் வேண்டுகோள் வைத்து பாரதி குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஐந்தாயிரம் நிதி அளிக்க ஏற்பாடு செய்தார் நாரண. துரைக்கண்ணன்.

நாரண. துரைக்கண்ணன் ‘ஆனந்த போதினி’, ‘பிரசண்ட விகடன்’ முதலிய இதழ்களின் ஆசிரியரானார். அவரது எழுத்தால் இதழ்களின் செல்வாக்குக் கூடியது.

விடுதலைப் போராட்டம் உச்சத்திலிருந்த 1939 – 1945 கால கட்டத்தில் தாம் ஆசிரியராக இருந்த ‘பிரசண்ட விகடனில்’ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து தலையங்கம் மற்றும் கட்டுரைகள் எழுதினார். அதனால் ஆங்கிலேய அரசு அவரைக் கண்டித்ததோடு எச்சரிக்கையும் விடுத்தது. அப்பொழுது, “எங்கள் கொள்கையை விடமாட்டோம். இது எங்களது தேசியக் கடமை” எனத் துணிச்சலுடன் அறிவித்தார். ஆங்கிலேய அரசின் ஆதிக்கத்தை எதிர்த்து தொடர்ந்து தலையங்கங்கள் தீட்டினார்.

காந்தியடிகள் அரிசன இயக்கம் காண்பதற்கு முன்பே, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். “தீண்டத்தகாதவர் யார்”? என்ற சமூக சீர்திருத்த நாடகத்தை எழுதி அதனை 1927 ஆம் ஆண்டு பல இடங்களில் நடத்திக் காட்டினார்.

தென்னிந்திய எழுத்தாளர் சங்கக் கருத்தரங்கம் 1945 ஆம் ஆண்டு சென்னை, இந்தி பிரச்சாரச் சபையில் நடைபெற்றது. அக்கருத்தரங்கத்தைத் தொடங்கி வைக்க மகாத்மா காந்தியடிகள் வருகை புரிந்தார். அப்போது, நாட்டுக்குத் தொண்டாற்றிய புகழ்மிக்கத் தலைவர்களின் வாழ்க்கை வரலறுகளைத் தமிழில் எழுதி நூலாக வெளியிட்டமைக்காக அப்போது நாரண. துரைக்கண்ணனைப் பாராட்டிக் கைகுலுக்கினார் காந்தியடிகள் என்பது வரலாற்றுச் செய்தி!

திறமையும், உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் வாழ்வில் ஒளி வீசலாம் என்னும் சிந்தனைக்குச் செயல்வடிவம் கண்டார். அதனாலேயே நாரண. துரைக்கண்ணன், இதழாசிரியர் பணியைத் ‘தொழத்தக்க பணியாக’க் கருதி தேர்ந்தெடுத்தார்!

‘தமிழ்நாடு’, ‘கலா நிலையம்’, ‘செந்தமிழ்ச் செல்வி’ ‘தேசபந்து’, ‘சிந்தாமணி’ ‘திராவிடன்’ முதலிய இதழ்களில் சீரிய சிந்தனைமிக்கக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினார்.

தந்தை பெரியார் 1932 ஆம் ஆண்டு ருஷ்யா நாட்டிற்குச் சென்று தாயகம் திரும்பினார். அப்பொழுது, பல எதிர்ப்புகளையும் மீறி, பத்திரிக்கையாளர்கள் சார்பாக, சென்னை தியாகராயர் நினைவு மண்டபத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தார்.

இதழ்களில் தாம் பல படைப்புகளை எழுதி வந்ததோடு, எழுத்தாளர்கள் வல்லிக் கண்ணன், ஜீவானந்தம், தொ.மு.சி. ரகுநாதன், கு. அழகிரிசாமி, அகிலன், தீபம் பார்த்தசாரதி, லட்சுமி முதலிய படைப்பாளர்களையும், பாரதிதாசன், கம்பதாசன், வாணிதாசன், சுரதா, தமிழ்ஒளி, கா.மு.செரீப், கண்ணதாசன் முதலிய கவிஞர்களையும் தாம் ஆசிரியராக இருந்த இதழ்களில் எழுத வைத்தார். பின்னாளில் அவர்கள் சிறப்பதற்கு ஊக்கமும் ஆக்கமும் தந்து உறுதுணையாக இருந்தார்.

‘ஜீவா’என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கினார். இழப்பு ஏற்பட்டது. தனது வீட்டை விற்றுக் கடனை அடைத்தார்.

தாம் படைத்தளித்த கதைகளை ‘ஜீவா’ என்னும் புனைப் பெயரில் எழுதினார். ஜீவனுள்ள படைப்புகளை அளித்து வந்தமையால் ‘ஜீவா’ என்ற அப்பெயரே நின்று நிலைத்து விட்டது!

எழுத்தாளராகிய ‘ஜீவா’வையும், பொதுவுடைமை இயக்கத் தலைவராக விளங்கிய ஜீவாவையும் தமிழுலகம் நன்கு அறியும். இருவரும் தமிழ்மொழி மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்கள். பொது வாழ்க்கையிலும், முற்போக்குச் சிந்தனையிலும், கலை இலக்கியம் தொடர்பான இதழியல் பணிகளிலும் இடையறாது ஈடுபட்டு வாழ்நாள் முழுவதும் உழைத்தவர்கள். இருவரும் ஒரே ஆண்டில் பிறந்தவர்கள். காந்தியடிகளை நேரில் சந்தித்தவர்கள், மகாகவி பாரதியார் பாடல்களையும், கவிதைகளையும் ஈடுபாட்டுடன் தமிழ்ச் சமுதாயத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்தவர்கள்! இலக்கியத் தளத்தை, மக்களின் ‘இலக்கியக் களமாக’ உருவாக்கிட ஓயாது பாடுபட்டவர்கள்!

தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இரண்டாவது மாநாடு 1946 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு அறிஞர் அண்ணா தலைமை ஏற்றார். அப்பொழுதுதான் ‘கல்கி’ அண்ணாவை ‘தென்னாட்டின் பெர்னாட்ஷா’ என்று பாராட்டிப் பேசினார்!
தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரில் கலந்து கொண்டார். மேலும், 1948 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக செயல்பட்டார்.

‘தமிழ்ச் சிறுகதை மன்னன்’ எனப் புகழப்படும் புதுமைப்பித்தனோடு நாரண. துரைக்கண்ணன் தோழமை கொண்டவர். புதுமைப்பித்தன் இறந்துபோனபோது, நண்பர்களின் உதவியோடு நிதி திரட்டினார்; புதுமைப்பித்தனின் மனைவி கமலா அம்மையாரிடம் நிதியின் ஒரு பகுதியை வழங்கியும், மீதித் தொகையிலிருந்து சென்னை அண்ணாமலை புரத்தில் ஒரு வீடு வாங்கியும் கொடுத்தார்; தமிழ் எழுத்தாளர் உலகம் தன் மதிப்பை உயர்த்திக் கொள்ளத் தளராது பாடுபட்டார்!

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை இதழ்களில் எழுதினார். முல்லை முத்தையா மூலம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு புதுவையில் ஒரு வீடு வாங்கி வழங்கிடத் தூண்டு கோலாகவும், உறுதுணையாகவும் விளங்கினார்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ‘திருக்குறள் உரையைக்’ கையெழுத்துப் படியில் படித்ததுமே, அதனுடைய சிறப்பை உணர்ந்து ஆய்வுக் கட்டுரையாக எழுதி முரசொலி ‘யில் வெளியிட்டார். புரட்சிக் கவிஞரின் மறைவையொட்டி ‘பிரசண்ட விகடன்’ இதழில், ‘கவிக்குயில் பறந்தது’ என்ற தலைப்பில் இரங்கல் உரை எழுதினார்.

நாரண. துரைக்கண்ணனின் ‘உயிரோவியம்’ என்ற நாவல் நாடகமாக வெளிவந்தபோது அதற்கு மு.வ. அணிந்துரை அளித்து, ‘வாழ்க்கைக் கலைஞர்’ எனப் போற்றினார்.

பிரெஞ்சு நாட்டின் தலைநகரான பாரிசில், அரசும், பிரான்சு இலக்கியக் கழகமும் இணைந்து, நாடகக் கலைக்காக ஓர் இதழை வெளியிட்டு வந்தது. அந்த இதழில் உலகின் பல மொழி நாடகங்களில் தலை சிறந்தவற்றைத் தெரிவு செய்து வெளியிட்டு வந்தனர். அந்த இதழில், நாரண. துரைக்கண்ணனின் ‘உயிரோவியம்’ நாடகம் சிறந்த நாடகமாகத் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. மேலும், அந்நாடகத்தை தமிழகத்தின் முதல்வர்களாக விளங்கிய ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார், காமராசர், பக்தவசலம் முதலியோர் பாராட்டிப் புகழ்ந்தனர். ‘இந்து’ நாளிதழும் சிறப்பான விமர்சனம் வெளியிட்டது.

தமிழ்நாடு சங்கீத நாடகச் சங்கம் 1964 ஆம் ஆண்டு, நாரண துரைக்கண்ணனைச் சிறந்த நாடக ஆசிரியர் எனப்பாராட்டியும், ‘கலைமாமணி’ விருது வழங்கியும் சிறப்பித்தது.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்தனார் அறக்கட்டளைச் சொற்பொழிவுகளை 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 7,8,9 தேதிகளில் நிகழ்த்தினார். அச்சொற்பொழிவு, ‘தமிழில் நாடகம்’ என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளது.

நாரண. துரைக்கண்ணன் ‘கோனாட்சியின் வீழ்ச்சி’, ‘யான் ஏன் மணப்பெண்ணாய்ப் பிறந்தேன்?’, ‘உயிரோவியம்’, ‘தாசிரமணி’, ‘காதலனா? காதகனா? ‘சீமான் சுயநலம்’, ‘தியாகத் தழும்பு’, ‘தரங்கினி’, ‘புதுமைப் பெண்’, ‘நடுத்தெரு நாராயணன்’ முதலிய நாவல்களை எழுதித் தமிழுக்கு அளித்துள்ளார். இவரது, ‘சீமான் சுயநலம்’ – ஓர் “அரசியல் நாவல் என்ற பெயருக்கு முற்றிலும் பொருத்தமாய்த் தமிழில் எழுந்த முதல் நாவலாகும்” என ஆய்வாளர் மா.இராமலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

இவரது கதை மாந்தர்களில், பெண்களே நினைவில் நிற்கக் கூடியவர்கள். பெண்களின் பிரச்சனைகளான விதவைக் கோலம், மறுமணம், தேவதாசிகளின் அவலம், ஆணாதிக்க அடக்கு முறை, பெண்ணடிமைத்தனம், ஆகியவை, அவரது படைப்புகளில் மிகுதியாக உள்ளன. ‘பெண்களின் முன்னேற்றத்துக்கான எழுத்தாளர்’ என்றே இவரைக் கூறலாம்.

நாரண. துரைக்கண்ணன் இருபத்தொரு நாவல்களைப் படைத்து அளித்துள்ளார்.

‘முத்தம்படா அதரம்’, ‘சபலம்’, ‘அழகாம்பிகை’, ‘பார்வதி’, ‘தேவகி’, ‘மேனகா’ ‘ஹம்கா நந்தி’ மற்றும் ஜீவாவின் சிறுகதைகள் – முதலிய தம் சிறுகதை நூல்களை வெளியிட்டுள்ளார்.

இவரது சிறுகதைகள், சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களையும், சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களையும், பெண்களின் அவல வாழ்க்கையையும் அடிப்படைக் கருப்பொருளாகக் கொண்டவையாகும்.

‘தீண்டாதார் யார்?’, ‘உயிரோவியம்’, ‘குமரி முதல் காஷ்மீர் வரை’, ‘எழுதாத ஓவியம்’, ‘திருவருள் பிரகாச வள்ளலார்’ முதலிய நாடகங்களை எழுதி தமிழ் நாடக இலக்கியத்திற்கு வளம் சேர்த்துள்ளார்.

“திருமலைக் கவிராயர் கவிதைகள் ‘இதய கீதம்’, ‘அருட்கவி அமுதம்’, முதலிய கவிதை நூல்களையும் இயற்றியுள்ளார்.

‘வள்ளலார்’, ‘தந்தை பெரியார்’, ‘சங்கரர்’, ‘சுபாஷ் சந்திர போஸ்’, ‘விவேகானந்தர்’, ‘அரவிந்தர்’, ‘காந்தி’, ‘பாரதி’, ‘இராஜாஜி’, முதலியவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் செதுக்கியுள்ளார்.

‘தமிழர் யார்?’, ‘சிவகாமி சரித ஆராய்ச்சி’, ‘தமிழ்நாடகம்’ முதலிய ஆராய்ச்சி நூல்களைப் படைத்துள்ளார்.

‘அரசியல் சிந்தனைகள்’, ‘அறிவுக்கு விருந்து’, ‘எழுத்தாளர் சகோதரர்களுக்கு’, ‘இலக்கியக் குரல்’, ‘தன்மதிப்பு’, ‘தமிழகத்தின் தனித் தலைவர்கள்’, முதலிய கட்டுரை நூல்களையும் ஆக்கித் தந்துள்ளார்.

தமிழ் ஆட்சி மொழியாதல் வேண்டும்; கோயில்களில் தமிழ் மொழியில் வழிபாடு செய்தல் வேண்டும்; கல்வியைத் தாய்மொழி வழிக் கற்பிக்க வேண்டும்; பாடத்திட்டங்களில் தமிழ் இடம் பெற வேண்டும்; என்னும் உயரிய கருத்துக்களைத் தமது எழுத்துக்கள் மூலம் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

‘நற்கலை நம்பி’, ‘இலக்கியச் செம்மல்’ என்னும் பட்டங்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.

நாவல், சிறுகதை, நாடகம், கவிதை, கட்டுரை, கடிதம், மொழி பெயர்ப்பு, ஆராய்ச்சி, வாழ்க்கை வரலாறு, விமர்சனம், தலையங்கம் முதலிய பல தளங்களில் இயங்கி முத்திரைப் பதித்தவர் நாரண.துரைக்கண்ணன்.

நாரண.துரைக்கண்ணன் தமது தொண்ணூறாவது வயதில் 23.07.1996 ஆம் நாள் இயற்கை எய்தினார். தமிழிலக்கியம் உள்ளவரை அவரது தொண்டு நிலைத்திருக்கும்!

Pin It