கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: தொழில்நுட்பம்
ஆப்பிரிக்காவின் கலஹாரி பாலைவனத்தில் பிசாசு நகம் (Devil Claws) என்றொரு செடி உண்டு. இதன் வேரில் காணப்படும் (iridoid glycosides, harpagoside and harpagide) இரிடாய்டு கிளைக்கோசைடு, ஹார்ப்பபோசைடு மற்றும் ஹெர்ப்பகைடு போன்ற மருந்துப் பொருட்கள் ரூமட்டாய்டு ஆர்த்திரிட்டிஸ் என்ற முடக்குவாதம், மூட்டிவலி போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது. உலகில் 25 விழுக்காடு மக்கள் முடக்கு வாத நோயால் அவதிப்படுகிறார்கள். இவர்களுக்கு நல்ல மருந்து இன்னமும் கிடைத்தபாடில்லை. இந்த நிலையில் பிசாசு நகம் செடியின் வேர்களுக்கான டிமான்ட் பல மடங்காகிக்கொண்டிருக்கிறது. ஆனால் மோசமான வானிலையினாலும், பொய்த்துக்கொண்டிருக்கும் மழையினாலும் இந்தச் செடி அழிந்து மறைந்து போகும் நிலையில் இருக்கிறது.
மிலன் கியார்கிவ் என்பவர் இதற்கு ஐடியா வழங்கியிருக்கிறார். இந்த செடியின் வேர்களை செயற்கையாக கண்ணாடிக் குடுவைகளில் வளர்க்கும் முறையைக் கண்டுபிடித்திருக்கிறார். ஹேரி ரூட் வளர்ப்பு முறை ஒரு நூதன முறை. அக்ரோ பேக்டிரியம் ரைசோஜென்ஸ் என்றொரு பேக்டிரிய கிருமி, வேர்களில் வளரக்கூடியது. இது வளரும் வேர்கள் மெல்லிய முடி போல ஆகிவிடும்; ஆனால் வேகமாக மளமளவென்று வளர்ந்துவிடும்.
என்ன ஆச்சரியம்! பிசாசு நகச் செடியின் கூந்தல் வேர்கள் குடுவைகளில் வேகமாக வளருவதுடன் மருந்து கெமிக்கல்களையும் குறைவில்லாமல் சுரந்தனவாம். இதை பயோஃபேக்டரி என்று அழைக்கிறார்கள். எதிர்காலத்தில் கூந்தல் வேர் வளர்ப்பு முறை மூலிகைகளை பாதுகாக்கவும், இயற்கையில் அவற்றைத் துன்புறுத்தாமல் இருக்கவும் இந்த பயோஃபேக்டரிகள் உதவுமல்லவா.
- முனைவர் க. மணி, பயிரியல்துறை, பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: தொழில்நுட்பம்
எத்தனையோ மைக்ராஸ்கோப்புகளைப் பார்த்திருக்கிறீர்கள். நீங்கள் ஒருவேளை எலெக்ட்ரான் மைக்ராஸ்கோப்பைக்கூட பார்த்திருக்கலாம். உங்களில் ஒருசிலர் அதை உபயோகித்துமிருக்கலாம். மூலக்கூறுகளை வருடிப்பார்த்து அதன் உருவத்தை படம்பிடிக்கும் மைக்ராஸ்கோப்பை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். ஐ பி எம் (IBM) கம்பெனி அப்படி ஒரு மைக்ராஸ்கோப்பைத் தயாரித்திருக்கிறது. அதை அட்டாமிக் ஃபோர்ஸ் மைக்ராஸ்கோப் என்கிறார்கள்.
இது அதீத வெற்றிடத்தில் வேலைசெய்யும். இதில் லென்ஸ் எதுவும கிடையாது. ஒரு ஊசிதான் இதன் வருடும் பகுதி. இந்த ஊசியின் முனை ஒரே ஒரு கார்பன் மோனாக்ஸைடு மூலக்கூறு கொண்டது. இந்த முனை கவனிக்க வேண்டிய பொருளுக்கு ஒரு சில நேனோமீட்டர் தூரத்தில் இருந்து கவனிக்கும். இதனால் ஒரு தனி மூலக்கூறினைக்கூட கவனிக்க முடியும். மூலக்கூறுகளின் அணுக்களிலிருந்து வெளிப்படும் மின்புலத்தை இது நெருங்கும்போது பாதிப்படையும். அந்த பாதிப்பு வரைபடமாக வெளிப்படுத்தப்படுகிறது.
ஃபெயின்மேன 1959 இல் "ஒரு காலம் வரும், அன்று விஞ்ஞானிகள் அணுக்களையும் மூலக்கூறுகளையும் எடுத்து அடுக்கி உருவங்களை செய்வார்கள். அது நேனோநுட்பம் என்று அழைக்கப்படும்' என்றார். அவர் சொல் பலித்துவிட்டது.
படம்: பென்ட்டாசீன் மூலக்கூறு 3டி படமாக உள்ளது. மேலே காண்பது அதன் நிஜமான மூலக்கூறு வடிவம். அதற்கும் மேலெ தொங்குவது மூலக்கூறுகளைத் தொடாமலே வருடிப் பார்க்கும் அணுவிசை மைக்ராஸ்கோப்பின் நுனி.
- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
ஒருவருடைய கையெழுத்தில் இருந்து என்னவெல்லாம் தெரிந்து கொள்ள முடியும்? ஒரு நபரின் குணாதிசயங்கள், ஆளுமை இவற்றையெல்லாம் வெளிப்படுத்தும் தன்மை கையெழுத்திற்கு இருப்பதாக காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய கையெழுத்தின் உள்ளடக்கம் உண்மையானதா அல்லது பொய்யானதா என்பதைக்கூட இப்போது கண்டறிய முடியும்.
தற்போது நடைமுறையில் உள்ள உண்மை கண்டறியும் சோதனைகள் வாய்மொழியாக நடத்தப்பட்டு ஆழ்மனம் ஆராயப்படுகிறது. இந்த சோதனைகளின்போது சம்பந்தப்பட்ட நபரின் மீது மனித உரிமை மீறல்கள் திணிக்கப்படுவதாக புகார்கள் எழ வாய்ப்புண்டு. இந்த சிக்கலுக்கு தீர்வுகாண உதவும் ஆய்வு ஒன்று அண்மைக் காலத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது. ஒரு நபரின் கையெழுத்தில் இருந்து அவர் உண்மையைக் கூறுகிறாரா இல்லையா என்பதை தீர்மானிக்க இயலும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைக் கண்டறியும் முயற்சிக்கு இந்த ஆய்வு துணை செய்வதாக உள்ளது.
ஹைஃபா பல்கலைக்கழக அறிஞர்கள் கில் லூரியாவும், சாரா ரோஸன்ப்லம் என்பவரும் இணைந்து இந்த ஆய்வில் வெற்றி பெற்றுள்ளதாக Applied Cognitive Psychology இதழ் தெரிவிக்கிறது. எழுதுபவரின் கையெழுத்தின் புறப்பண்புகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள அட்டவணையின் துணை கொண்டு கணினியால் ஆராயப்படுகிறது. பேப்பரின் மீது பேனா இருந்த நேரம், பேப்பருக்கு வெளியில் பேனா இருந்த நேரம், ஒவ்வொரு எழுத்தின் உயர அகலம், எழுதும்போது கொடுக்கப்பட்ட அழுத்தம் இவற்றையெல்லாம்கூட இந்த அட்டவணையின் உதவியால் கணினி கண்டுபிடித்து விடுகிறது. பொய்யான செய்திகளை எழுதும் நபர் தயங்கித் தயங்கி எழுதுவது இயல்புதானே!
தகவல்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
செல்லுலோஸ், ஸ்டார்ச் ஆகியவை தாவரங்களின் பகுதிப்பொருட்கள் ஆகும். செல்லுலோஸில் இருந்து HMF (5-hydroxymethylfurfural) எனப்படும் மூலப்பொருளை தயாரிக்க இயலும் என்றும், HMF ஐ அடிப்படையாகக் கொண்டு பிளாஸ்டிக்குகளையும் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காத எரிபொருளையும் உற்பத்திசெய்ய இயலும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் நம்பிக்கை பிறந்திருக்கிறது. வடமேற்கு பசிபிக் தேசீய ஆய்வுக்கூடத்தின் (Department of Energy's Pacific Northwest National Laboratory) ஆற்றல் துறையில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. HMF மூலம் தயாரிக்கப்படும் எரிபொருள் விலை குறைவாகவும் தடையின்றி கிடைக்கக்கூடியதாகவும் இருக்குமாம்.
இதே துறையில் இதற்கு முன்னாலும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. முன்னர் நடத்தப்பட்ட ஆய்வுகளில் செல்லுலோஸில் இருந்து முதலில் எளிய சர்க்கரை பெறப்பட்டது. பின்னர் எளிய சர்க்கரையில் இருந்து குரோமியம் குளோரைடு போன்ற உலோக குளோரைடுகளையும், அயானிக் திரவம் என்ற கரைப்பானையும் பயன்படுத்தி தூய்மையான HMF ஐ தயாரித்தனர். தற்போதைய புதிய கண்டுபிடிப்பில் செல்லுலோஸை சர்க்கரையாக மாற்றாமல் நேரடியாக HMF பெருமளவில் உருவாக்கப்பட்டுள்ளது. தேவையான மூலப்பொருளாகிய செல்லுலோஸ் மரம், தானியங்கள், புற்கள் இவற்றிலெல்லாம் அபரிமிதமாக காணக்கிடைக்கிறது.
புதிய கண்டுபிடிப்பில் குரோமியம் குளோரைடு-தாமிர குளோரைடு கரைசல் அயானிக் திரவத்துடன் இணைந்து 120 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் செல்லுலோஸை HMF ஆக மாற்றமடையச்செய்கிறது. இந்த புதிய முறையில் 90 சதவீத HMF உருவாக்கப்பட்டது. அத்துடன் உலோக குளோரைடுகளையும் அயானிக் திரவத்தையும் அவற்றின் வீரியம் குறையாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்த இயலும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மறுசுழற்சிமுறையால் HMF ன் விலை பெருமளவில் குறையும் என்பதுடன் குறைந்த செலவில் அதிகமான பிளாஸ்டிக் தயாரிக்கவும், படிம எரிபொருளுக்கு மாற்றுப்பொருளாக எரி எண்ணை தயாரிக்கவும் இயலும்.
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/05/090519134837.htm
தகவல்: மு.குருமூர்த்தி
- பார்வையற்றவர்கள் ஓட்டுவதற்கு கார்
- வளையும் ஒலிபெருக்கி
- மூளை வளருகிறது - நாம் தான் அதை தடை செய்கிறோம்
- நேனோ ரேடியோ - தூசி தட்டினால் பாட்டு நின்று விடும்
- மூளை சொல்படி நகரும் சக்கர நாற்காலி
- கெமிஸ்ட்டுகளின் பொறாமை
- பாதிப்பை ஏற்படுத்தும் பாதரசம்...
- கைடு வேலை பார்க்கும் ரோபோ
- மருந்துப் பொருள் மாசுகளால் நடத்தை மாறும் மீன்கள்
- இதயத்திற்காக மரங்கள்
- செயற்கை வெளிச்சமும் ஒரு மாசே
- காட்டுத் தீயும் செயற்கை நுண்ணறிவும்
- அல்சைமர்ஸ் நோயை அதிகரிக்கும் ஒளி மாசு
- பத்து டிரில்லியன் டாலர் பயன் தரும் உணவுமுறை மாற்றம்
- கடலுள் மூழ்கும் நிலப்பகுதிகள்: காவிரிப் படுகையின் நிலை என்ன?
- பூநாரையும் லித்தியமும்
- எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய ஓர் உச்சி மாநாடு
- உயிர்ப் பன்மயத் தன்மையைக் காக்க ஓர் உச்சி மாநாடு
- மீத்தேனை உண்ணும் பாக்டீரியாக்கள்
- ஒவ்வொரு நாளும் ஒரு மில்லியன் லாரி கடல் மணல்