Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: dheemtharikida@
hotmail.com




யாருக்கு ஓட்டுப் போடுவது?: ஞாநி

திசைகளின் வாசல்:
அ. ராமசாமி


ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்!:
ச. தமிழ்ச்செல்வன்

பெண்மையின் மறுவார்ப்புகள்: வெ.வசந்தி தேவி

மனிதன் கேள்வி - பதில்கள் 1

மனிதன் கேள்வி - பதில்கள் 2

மனிதன் கேள்வி - பதில்கள் 3

மனிதன் கேள்வி - பதில்கள் 4

மகிழ்ச்சியானதா மணவாழ்க்கை?: எம். சுரேந்திரன்

செக்ஸ்: தி.மு? தி.பி? - என் கருத்து - ஞாநி

காவி நிலம்: வசுமித்ர

நிராதரவானவன்: தா. சந்திரன்

மக்கள் மன்றம்

புலம்பெயர்கிறோம்

அலமாரி

Dheemtharikida
தீம்தரிகிட ஒவ்வொரு மாதமும் 5ம் தேதி அன்றும், மனிதன் பதில்கள் ஒவ்வொரு வாரமும் திங்கட் கிழமை அன்றும் தளமேற்றப்படுகிறது.
யாருக்கு ஓட்டு போடுவது?

ஞாநி

Karunanidhi தமிழ்நாட்டில் மே 8ந்தேதி நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நாம் யாருக்கு ஓட்டு போடுவது?

தி.மு.கவுக்கும் அ.இஅதி.மு.கவுக்கும் இடையே தான் எப்போதும் போல போட்டி. இதர கட்சிகள் இந்த இரு பெரிய கட்சிகளுடன் மாறி மாறிக் கூட்டு சேரும் வழக்கத்துக்கேற்பவே இந்த முறையும் கூட்டு சேர்ந்திருக்கிறார்கள். அந்தக் கூட்டணி நியாயங்கள் அவரவர் நலனைச் சார்ந்தவை. மக்கள் நலனுக்கு அதில் ஏதுமில்லை.

இந்தத் தேர்தலில் முக்கியமான மாற்றம் ஏதாவது உண்டா? இல்லை. ஊழல், அராஜகம் என்ற ஒரே குட்டையில் ஊறிய இரண்டு மட்டைகளில் எந்த மட்டை பரவாயில்லை என்று ஆராய்வதற்கே அலுப்பாகவும் அபத்தமாகவும் இருக்கிறது.

இரண்டு அம்சங்கள் மட்டும் நம் கவனத்துக்கு உரியவையாக இருக்கின்றன.

தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியின் குடும்பப்பாசம், சுயநலம் கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு முன்பு எப்போதையும் விட பரவலாக அம்பலமாகி விட்டது. அரசியலுக்கு சம்பந்தமே இல்லாத தயாநிதி மாறனை மத்திய அமைச்சராக்கி குடும்ப வியாபாரமான சன் டிவியின் போட்டியாளர்களை ஒடுக்குவது தொடங்கி, சன் சாம்ராஜ்யத்தை விரிவாக்க மட்டுமே கருணாநிதி அரசியல் செய்கிறார் என்பது இன்று தமிழ்நாட்டில் பச்சைக் குழந்தைக்குக் கூடத் தெரியும். தினகரன் & தமிழ் முரசு இதழ்கள் மூலம் பத்திரிகைத் துறையை சீரழிப்பதை பல விதங்களிலும் கருணாநிதியின் அரசியல் செல்வாக்கையே மூலதனமாகக் கொண்டுள்ள குடும்பத்தினர் செய்து வருகின்றனர். நாடு முழுவதும் தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த அடுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பண்பலை வானொலி நிலையங்களுக்கு அண்மையில் அனுமதி அளிக்கப்பட்டபோது சன் குழுமம் மட்டும் மொத்தம் 69ல் 45க்கு உரிமை பெற்றிருக்கிறது. அரசியல் பலம், பண பலம் இரண்டையும் கொன்டு மீடியா பலத்தைப் பெருக்குவதும், பிறகு அதைக் கொண்டு முதலிரண்டையும் பராமரிப்பதுமான நடவடிக்கையிலேயே கருணாநிதியின் சக்தி முழுவதும் செலுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டு மக்களின் அசல் பிரச்சினைகளுக்காக அறிக்கை விடுவது தவிர வேறு எதுவும் செய்யாத கலைஞர், குடும்பத்தின் கேபிள் தொழில் பாதிக்கப்படும் போது ஆளுநரைப் பார்க்க ஓடுகிறார்.

டெல்லியில் மட்டுமன்றி தமிழ்நாட்டிலும் ஆட்சியில் அமர்ந்தால், கருணாநிதி குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழகம் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு மீளவே முடியாது. எனவே தி.மு.க அணிக்கு ஓட்டு போட நான் விரும்பவில்லை.

Jayalalitha அதற்காக ஜெயலலிதாவின் அ.இ.அ.தி.மு.கவுக்கு ஓட்டு போட்டு விடமுடியுமா?

'அம்மா'வின் முதல் ஆட்சிக் காலத்தோடு ஒப்பிடும்போது, இந்த ஆட்சிக் காலம் பரவாயில்லை என்று ஒரு கருத்து நிலவுகிறது. வெளிப்படையான அராஜகங்கள் இல்லாததால் இப்படி பேசப்படுகிறது. அசல் காரணம், டெல்லியில் இப்போது ‘அம்மா‘வுக்கு சாதகமான ஆட்சி இல்லாததுதான். எதிரான ஆட்சி இருப்பதால்தான், அம்மா இங்கே அடக்கி வாசிக்க வேண்டியிருக்கிறது. எனவே ஒரு காலத்தில் டெல்லியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்தால் மாநிலத்துக்கு நன்மை கிடைக்கும் என்ற பார்வைக்கு பதிலாக, இப்போது இங்கேயும் அங்கேயும் ஒருத்தருக்கொருத்தர் செக் வைத்தால்தான் மக்களுக்கு கொஞ்சம் தலைவலி குறையும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது.

முதல் நான்கு ஆண்டுகள் அரசு ஊழியர் தொடங்கி சமூகத்தின் சகல பிரிவுகளையும் பாதிக்கக்கூடிய கெடுபிடி நடவடிக்கைகளை எடுத்துவிட்டு கடைசி ஓராண்டில் அத்தனையையும் ஜெயலலிதா திரும்பப் பெற்றுவிட்டதால் அவருக்கு மக்களிடையே ஆதரவு பெருகி விட்டதாக கருத்து பரப்பப்படுகிறது. அதுதான் சிக்கலே. ஜெயலலிதாவிடம் உள்ள பிரச்சினையே அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று யூகிக்க முடியாமல் இருப்பதுதான். கருணாநிதி அடுத்து என்ன செய்வார் என்பதை அது அவர் குடும்ப நலனுக்கு உகந்ததா இல்லையா என்ற அடிப்படையில் சோதித்து யூகித்துவிடமுடியும். ஜெவிடம் அதுவும் முடியாது. எனவே இப்போது வாபஸ் பெற்ற நடவடிக்கைகளை எல்லாம் மறுபடியும் அவர் கொன்டு வர மாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. அவருடைய ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் நம்முடைய பாராட்டுக்குரிய ஒரே நடவடிக்கை சங்கராச்சாரிகளையும் தமிழக போலீஸ் கைது செய்ய முடியும் என்று காட்டியது தான்.

இப்படி தமிழகம் ஒரு புறம் புத்திசாலி சுயநலவாதியையும் அதற்கு மாற்றாக தான் கொண்டதே கொள்கை என்ற முரட்டுப் பிடிவாதக்காரரையும் மாறி மாறி தேர்ந்தெடுக்க வேண்டிய சிக்கலில், இந்த இருவரில் யாருக்கு ஓட்டளிப்பது? இருவருக்கு மாற்றாக யாரும் இல்லை. எந்த அணியும் இல்லை.

விஜய்காந்த்தின் தேசிய திராவிடக் கட்சி மேற்சொன்ன இருகட்சிகளுடனும் கூட்டு சேராமல் தனித்து போட்டியிடுகிறது. அதற்கு ஓட்டு போடலாமா?

தெரியாத தேவதையை விடத் தெரிந்த பிசாசு மேல் என்பது ஓர் ஆங்கில பழமொழி. தெரிந்தவர்கள் தேவதைகள் அல்ல என்பது உறுதி. விஜய்காந்த் தேவதையா, பிசாசா என்று தீர்மானிக்கத் தேவையான அளவுக்கு அவர் எந்த அரசியல் பார்வையையும் இன்னமும் முன்வைக்கவில்லை.

தற்போதைய தேர்தல் முறை நீடிக்கிற வரைக்கும், இதே போன்ற நிலைமைதான் நீடிக்கும். நூறு ஓட்டுகளுக்கு நான்கு பேர் போட்டியிடும்போது முப்பது ஓட்டு வாங்கியவர் சீட்டை வெல்வதும் மீதி 70 ஓட்டுகள் அர்த்தமில்லாமல் போவதும்தான் தற்போதைய தேர்தல் முறையின் கொடுமை.

விகிதாசாரப் பிரதிநிதித்துவம் வந்தால் மட்டுமே ஒவ்வொருவரின் அசல் பலத்துக்கேற்ப சீட் கிடைக்கும். அசல் கொள்கைகளை முன் வைத்து வரும் கட்சிகளுக்கு ஓட்டு போட்டால் தன் ஓட்டு வீணாகாது என்ற நம்பிக்கை மக்களுக்கு வரும்.

அபப்டி ஒரு தேர்தல் முறை மாற்றம் வருவதற்கு, இப்போதைய தேர்தலில் நம் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி ‘ஓ‘ போடுவதுதான். 49 ஓ !

Vijaykanth The conduct of election rules 1961: 49 ‘O‘: Elector not deciding to vote :If an elector after his electoral number has been duly entered in the register of voters Form-17 A and has put his signature or thumb impression thereon as required under sub-rule (1) of rule 49 L decided not to record his vote , a remark to this effect shall be made against the said entry in Form 17 A, by the presiding officer and the signature or thumb impression of the elector shall be obtained against such remark.

தேர்தல் நடைமுறை விதிகள் 1961 : விதி49 ஓ : வாக்களிப்பதில்லை என வாக்காளர் முடிவு செய்வது: ஒரு வாக்காளர், படிவம் 17 ஏவில் உள்ள வாக்காளர் பட்டியலில் அவரது வாக்காளர் எண் முறையாக பதிவு செய்யப்பட்டு அவரும் தமது கையெழுத்தையோ பெருவிரல் ரேகையையோ விதி 49 எல்& 1 ன்படி வைத்தபிறகு, வாக்களிப்பதில்லை என்று முடிவு செய்தால், அந்த முடிவுக்கு ஏற்ப படிவம் 17 ஏவில் வாக்குச்சாவடி தலைமை அதிகாரி ஒரு குறிப்பைச் செய்து வாக்காளரின் கையெழுத்து அல்லது பெருவிரல் ரேகையையும் அந்தக் குறிப்புக்கு எதிரே பெற வேண்டும்.

ஒவ்வொரு தொகுதியிலும் 49 ஓவின் கீழ் எதிர்ப்பை பதிவு செய்யும் வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்தால், தேர்தல் முறை மாற்றியமைக்கப்படும் வாய்ப்பு சிக்கிரமே உருவாகும்.

எனவே மே 8 அன்று மாற்றம் வர, தவறாமல் வாக்குச்சாவடிக்கு செல்வோம். இல்லாவிட்டால் நம் ஓட்டை வேற யாராவது போட்டு விடலாம். நமக்கு ஓட்டு உள்ளது என்று கையெழுத்து வாங்கிக் கொண்டு, விரலில் மை வைக்கப்பட்ட பிறகு - 49 ஓ கீழ் பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லுவோம் ‘ஓ‘ போடுவோம்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com