|
வெ. வசந்தி தேவி
பெண்மையின் மறுவார்ப்புகள்
தீம்தரிகிட பிப்ரவரி, 2006 இதழில் எஸ். சக்குபாய் அவர்கள் எழுதிய ‘மன்மதராசா' பின்வருமாறு தொடங்குகிறது: “மன்மதராசன் இந்த இளம் பெண்களைப் படுத்தும் பாட்டுக்கு மனம் வருந்திய காளிதாசரின் காவியம் தான் சாகுந்தலம்.'' சாகுந்தலம் பற்றிய மற்றொரு, பெண்ணியப் பார்வையில் எழுதப்பட்ட விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.
இன்றைய தலைசிறந்த வரலாற்று அறிஞரில் ஒருவரான பேராசிரியர் ரொமீளா தாபரின் ஆழ்ந்த ஆய்வில் பிறந்த ‘சகுந்தலா' என்ற நூல் (Sakuntala : Texts, Readings, Histories) 1999ஆம் ஆண்டு வெளிவந்தது. காளிதாசனின் சாகுந்தலா உருவானதன் சமுதாயப் பின்னணியை, தன் சமகால மேல் தட்டு விழுமியங்களை வரித்த கதாநாயகியை காளிதாசன் படைத்த கதையை ரொமீளா தாபர் விளக்கியிருக்கிறார். இந்நூல் சிறந்ததொரு இலக்கிய வரலாற்று விளக்க நூலென்பதுடன் ஒரு முக்கிய பெண்ணியப் படைப்புமாகும். இங்கு நான் அளிப்பது முழுவதும் அவரது கருத்துக்களே அன்றி, எனது ஆய்வு இதில் ஏதும் இல்லை.
பெண் காலம் தோறும் மறுவார்ப்பு செய்யப்படுகிறாள்; மீண்டும் மீண்டும் மறுவார்ப்பு செய்யப்படுகிறாள். இன்றும் அவளது மறுவார்ப்புகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. பெண்ணுக்கு இலக்கணம் எழுதப்படுகிறது. இலக்கணம் மாற்றப்படுகிறது. இந்த மாற்றங்களுக்குப் பின்னால் ஒரு பெரிய சமுதாய கலாச்சார வரலாறே மறைந்திருக்கிறது. யாரால் பெண் மறுவார்ப்பு செய்யப்படுகிறாள்? எந்தத் தேவைக்காக மறுவார்ப்பு செய்யப்படுகிறாள்? இதனால் பயனடைவது யார்? மறுவார்ப்பின் மூலம் வலியுறுத்தப்படுகின்ற விழுமியங்கள் எவை? சகுந்தலை என்ற காவிய நாயகி பலமுறை, 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, மறு வார்ப்பு செய்யப்பட்ட கதையைத்தான் ரொமீளா தாபர் விளக்குகிறார்.
மகாபாரதக் காலத்தில் பிறந்த சகுந்தலா அதற்கும் முந்தைய காலத்தின், வாய்வழி வழக்கில் வந்த நாட்டார் வழக்காற்றுக் கதைகளின் தொகுப்பு. இந்த இதிகாசக் கால சகுந்தலா காளிதாசனின் சகுந்தலாவாக மறு படைப்பு செய்யப்படுகிறாள். பல நூற்றாண்டுகளுக்குப் பின் காலனீயக் காலத்தில், கீழ்த்திசையியலும் (Orientalism), ஜெர்மானிய ரொமான்டிசிசமும் (Romanticism) தங்கள் கால விழுமங்களை அவர் மேல் சாத்தின. இறுதியில் இந்திய தேசியம் உருவாக்கிய இந்து மரபில் அவள் ஒரு ஆதர்ச இந்து மனைவி என்ற முத்திரை குத்தப்பட்டாள். மகாபாரத சகுந்தலா மறைக்கப்பட்டு, காளிதாச சகுந்தலா அமரத்துவம் கொண்டதையும், ஒரு சிறிதளவு மாற்றத்துடன் காலனியக் கருத்தியலும், இந்து தேசியமும் காளிதாச சகுந்தலாவை ஆர்வமுடன் ஏற்று, இலட்சியப் பெண்ணாகச் சித்தரித்து மகிழ்ந்ததையும் ரொமீளா தாப்பர் வரலாற்று இலக்கிய ஆதாரங்களுடன் அருமையாக எடுத்துக் கூறுகிறார்.
மகாபாரதத்தின் ஆதி பர்வத்தில் முதன்முதலில் அறிமுகமாகும் சகுந்தலா, அதில் கம்பீரமும், சுதந்திர உணர்வும், அறிவுச் செழுமையும், தன்னிறைவும் கொண்டு தனக்கு நீதி கேட்டு அரசவையில் வாதாடும் சகுந்தலா, காளிதாசனின் நாடகக் காவியத்தில் ஆதிக்க சாதிக் கலாச்சாரத்தின் சின்னமாக, நாணமும், அச்சமும் போர்த்த, பொறுமையின் அவதாரமான காவிய நாயகியாக மறுவார்ப்பு செய்யப்படுகிறாள்.
சகுந்தலா முதலில் தோன்றிய காலம், மகாபாரத அல்லது அதற்கும் முந்திய பண்டைக் காலம், அரசும், மன்னராட்சியும், நிலவுடமைகளும், சாதிய - ஆண் ஆதிக்க சமுதாயமும் இன்னும் நிலை பெறாத காலம்.
மகாபாரத சகுந்தலா துஷ்யந்தனிடம் தனது பிறப்பைப்பற்றி, தனது தாய் மேனகா தந்தை விசுவாமித்திரரின் தவம் கலைவதற்காக, அவரைக் கவர்ச்சித்து, தன்னை ஈன்றதாக, எந்தவித கூச்சமோ, தயக்கமோ இன்றி விவரிக்கிறாள். துஷ்யந்தனை காந்தர்வ மணம் செய்ய சம்மதிப்பதற்கு முன்பே நிபந்தனை விதிக்கிறாள். “எனக்குப் பிறக்கும் மகன் உனக்குப் பின் அரியணை ஏற வேண்டும். இந்த வாக்குறுதி அளித்தால்தான் உன்னை மணப்பேன்'' என்று கூறுகிறாள். மன்மதராசனின் மோக அஸ்திரத்தால் “மதியழிந்து'' போன பெண்ணின் வார்த்தைகள் அல்ல இவை. தன்னையும், தன் உரிமைகளையும், தன் சந்ததியின் உரிமைகளையும், தன் கண்ணியத்தையும் மதித்துக் காக்கத் தெரிந்த ஆளுமை அவள்.
சகுந்தலா துஷ்யந்தன் அவைக்குப் போவதே மகன் பரதன் பிறந்து, வளர்ந்து, பட்டத்து இளவரசன் என்று அறிவிக்கப்பட வேண்டிய கட்டத்தில் கண்வரின் அறிவுரையின் பேரில் தான். தனக்குக் கணவன் வேண்டுமென்பதற்காகவோ, மனைவி என்ற தனது அந்தஸ்து நிரூபிக்கப்பட வேண்டுமென்பதற்காகவோ அல்ல. தனது மகனின் அரசாளும் உரிமையை நிலைநிறுத்துவதற்காகத்தான் மகாபாரதத்தில் சகுந்தலையின் அரசவைப் பிரவேசம் நிகழ்கிறது.
பின், துஷ்யந்தன் அவையில் அவளை ஏற்க மறுக்கும்போது, சகுந்தலா பொங்கி எழுகிறாள். அரசவை என்ற அச்சமோ, தயக்கமோ இன்றி கம்பீரத்துடன் நீண்ட நெடியதொரு உரை நிகழ்த்துகிறாள். மானுட தர்மம், அரசனின், கணவனின், தந்தையின் கடமைகள் என்பவை பற்றியெல்லாம், சாத்திரங்களை மேற்கோள் காட்டி, நீண்ட உரை நிகழ்த்துகிறாள். இதிலும் பின்னால் புகுத்தப்பட்ட சில இடைச்செருகல்கள் இருக்கலாம் என்று ரொமீளா தாபர் கருதுகிறார். இறுதியில், துஷ்யந்தன் உண்மையை ஒப்புக் கொள்ளத் தொடர்ந்து மறுத்தபோது, சீறி வெடிக்கிறாள். “உன்னைத் தேடி உன் அரசவைக்கு வந்த என்னை நீ அவமதிக்கிறாய். பொய் சொல்கிறாய். பொய் சொல்பவரின் தலை நூறு துண்டுகளாகச் சிதறிவிடும்... என் பிறப்பு உன்னைவிட உயர்ந்தது. என் தாய் மேனகா முப்பது தேவர்களில் ஒருத்தி. நீ வெறும் மானிடன்... பொய் கூறி ஏமாற்றும் உன்னுடன் நான் வாழமாட்டேன். நீ இல்லாமலே என் மகன் நாலுலகமும் ஆள்வான்.''
பெண்மைக்குப் பிற்காலத்தில் விதிக்கப்பட்ட அனைத்து இலக்கணங்களையும் மீறிய சுதந்திர மாது மகாபாரத சகுந்தலா. மன்னனின் அதிகாரத்தை ஏற்ற பிரஜையும் அல்ல அவள். அவள் ஒரு மாற்று வகைப்பட்ட வனவாசி பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்தவளாக இருக்கலாம் என்று ரொமீளா தாபர் கருதுகிறார். துஷ்யந்தன் அவளை மணக்குமுன் அவளுக்கு அளித்த நகைகளும், பொருட்களும் மணமகள் விலை வழங்கிய சமுதாயத்தை சார்ந்தது போல் உள்ளதேயன்றி கன்யாதானம் மேற்கொண்ட சமுதாயத்தைச் சார்ந்தது அல்ல. ஆணுக்கு இணையாகப் பெண்ணை மதித்த பழங்குடி சமுதாயத்தவளானதால் தான் நம்பிக்கையுடன் தனக்கு முழு உரிமையான உலகத்திற்குத் திரும்ப முனைகிறாள். திரௌபதி, குந்தி போன்ற மகாபாரதத்தின் மற்ற சக்திமிக்க நாயகிகளை ஒத்தவள் இந்த சகுந்தலா.
இந்த சகுந்தலா பல நூற்றாண்டுகளுக்குப் பின் காளிதாசனின் ‘அபிஞான சாகுந்தலம்' என்ற நாடகத்தில் மறு பதிப்பு செய்யப்படுகிறாள். காளிதாசனின் சகுந்தலா மன்னரவையில் பிறந்தவள். ‘பொற்காலம்' என்று அழைக்கப்பட்ட குப்தர் காலத்தின் வார்ப்பு. காளிதாசனின் நாடகக் காவியம் பிராமணீய ஆதிக்க சாதிக் கலாச்சாரத்தில் மிதக்கிறது. இதில் உருவாக்கப்பட்ட சகுந்தலா மகாபாரதக் கால சகுந்தலாவிற்கு முற்றிலும் மாறுபட்டவள். இவள் நாணும், அச்சமும், கீழ்கொண்ட பார்வையும் தரித்த மெல்லியள். பேசா மடந்தை; அவளது தோழியர் தான் துஷ்யந்தனிடம் பேசுகின்றார்களேயொழிய சகுந்தலா நேரடியாக அவனுடன் பேசுவது கூடக் கிடையாது. மகாபாரத சகுந்தலாவைப் போல் இவள் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. மகாபாரதக் கதையில் இல்லாத துர்வாச முனிவரின் சாபமும், மன்னனின் தொலைந்து போன ராஜ முத்திரை கொண்ட மோதிரமும், துஷ்யந்தனின் துரோகத்தை மறைத்து, நியாயப்படுத்த இதில் தோன்றுகின்றன. இக்கட்டத்திற்குப் பின் இவ்விரு யுத்திகளும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.
காலனியக் காலத்தில் மானியர் வில்லியம்ஸ் மொழிபெயர்த்த நூலுக்கு அளிக்கப்பட்ட பெயரே ‘சகுந்தலா அல்லது தொலைந்த மோதிரம்' என்பதுதான். இந்த சகுந்தலா தனது உரிமைக்காகவும், நீதிக்காகவும் வாதாடவில்லை. துஷ்யந்தன் நிராகரித்தவுடன் கதியற்றவளாய், அழுது கொண்டே பூமி தேவியிடம் தன்னை மீண்டும் அழைத்துக் கொள்ள வேண்டுகிறாள். அப்பொழுதும் அவள் துஷ்யந்தனிடம் தவறொன்றும் காணவில்லை. தனது நிலைக்குக் காரணம் முற்பிறவியில் தான் செய்த ஏதோ தவறின் வினைப் பயன் என்று சொல்கிறாள். கண்வரின் ஆசிரமத்தை விட்டு சகுந்தலா செல்லும் போதும், பின் சகுந்தலாவுடன் துஷ்யந்தனின் சபைக்குச் சென்ற கணவரின் சீடர்கள் அவளை அங்கேயே விட்டுச் செல்லும் போதும் மனைவி கணவனுக்கு அடிமைப்பட்டவள் என்பது வலியுறுத்தப்படுகிறது. கணவன் வீட்டில் அடிமையாக, வேலைக்காரியாக இருப்பது, கணவனை விட்டு வாழ்வதிலும் மேல் என்று அந்த சீடர்கள் சொல்கின்றனர். இந்த பரிதாபத்திற்குரிய சகுந்தலாவுக்கும், மகாபாரதத்தின் கம்பீர சொரூபமான சகுந்தலாவுக்கும் எட்டாத தூரம். ஆண் ஆதிக்க, சாதிய சமுதாயத்தின் அழுத்தம் காளிதாசனில் தெளிவாகிறது. துஷ்யந்தன் சகுந்தலாவை மணக்குமுன் அவள் ஷத்திரிய வம்சம்தானா என்பதைக் கேட்டு, விசுவாமித்திரனின் மகள்தான் என்று அறிந்து தெளிவு பெறுகிறான்.
காளிதாசனின் சகுந்தலா ஆதிக்க சாதி, அரசவைக் கலாச்சாரத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மகாபாரத சகுந்தலா மறைக்கப்பட்டாள். ஆயினும், மற்ற சாதியினர், பழங்குடியினர் ஆகியோரின் கலை வடிவங்களில், குறிப்பாக அவர்களின் நாடகங்களில், மகாபாரத சகுந்தலா வெகு காலம் உயிர் துடிப்புடன் வாழ்ந்திருந்தாள்.
காலனியம் கருத்தியல் உலகில் பெரும் மாற்றங்களை உருவாக்கம் செய்தது. சகுந்தலா கதையும், நாடகமும் கீழ்த்திசையியல் மற்றும் ஐரோப்பிய இலக்கிய மரபுகள் ஆகியவற்றின் தாக்கத்திற்கு உள்ளாகின. புகழ் பெற்ற கீழ்த் திசையாளர் சர். வில்லியம் ஜோன்ஸ் காளிதாசனை “இந்திய ஷேக்ஸ்பியர்'' என்று அழைத்தார். 18ம் நூற்றாண்டின் இறுதியும், 19ம் நூற்றாண்டும் ஐரோப்பிய இலக்கிய உலகில் ரோமாண்டிசிஸம் கோலோச்சிய காலம். அதன் நோக்கில் சகுந்தலா பெண்மையின் அழகெல்லாம் திரண்ட ஆதர்ச இந்தியப் பெண்ணாகத் தோன்றினாள். சாகுந்தலம் பல ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, உலகப் புகழ் பெற்றது. கீழ்த்திசையியல் காலனிய ஆட்சிக்கு உட்பட்ட மக்களின் கலாச்சாரத்தைப் புரிந்து கொள்ளவும், தனது நோக்கில் அதற்கு இலக்கணம் வகுக்கவும் முனைந்தது. இந்தியாவின் கலாச்சாரச் செழுமையின் பால் பெரிதும் கவரப்பட்டது. அதன் விநோதத்தைக் கண்டு வியந்தது. ஆனால், அதற்கு அப்பால், குறிப்பாக 19ம் நூற்றாண்டு தொடங்கிய பின், காலனியத்தின் ஆதிக்கத் தேவைகளுக்காக, சாம்ராஜ்ய ராஜதந்திரத்தின் ஒரு யுக்தியாக, இந்தியர்களுக்கு அவர்களது வரலாற்றையும், கலாச்சாரத்தையும் கண்டு பிடித்துக் கற்பித்தது. அன்று உருவெடுக்கத் தொடங்கியிருந்த இந்திய மத்தியதர வர்க்கம் தனது பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை உணரச் செய்ய வேண்டும்.
ஆனால், அது ஆங்கிலேயரின் கண் வழியே தரிசித்த இந்தியக் கலாச்சாரமாக இருக்க வேண்டும்; ஓரியண்டலிசத்தால் கண்டு பிடிக்கப்பட்ட, அர்த்தம் கற்பிக்கப்பட்ட இலக்கியமாக, கலாச்சாரமாக இருக்க வேண்டும்.
சாகுந்தலத்தை ஆங்கிலத்திலும், ஜெர்மானிய மொழியிலும் மொழி பெயர்த்த வில்லியம் ஜோன்ஸ், மானியர் வில்லியம்ஸ் போன்றவர்கள், தங்கள் சமகால சமுதாயத்தின் விழுமியங்கள் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் சமஸ்கிருத காவியத்தில் மாற்றங்களைச் செய்தனர். பாலுணர்வைத் தூண்டக் கூடியவை என்று அவர்கள் கருதியவற்றையெல்லாம் விட்டு விட்டனர்; அல்லது, மாற்றி, சொற்களைக் கழுவி சுத்தப்படுத்தினர். விக்டோரியக் காலத்து விழுமியங்கள் காவியத்தில் ஏற்றப்பட்டன. அதற்கு முன் இந்திய மத்தியதர வர்க்கம் சிருங்கார ரசம் ததும்பிய சாகுந்தல நாடகத்தைக் கூச்சமில்லாமல் கண்டு களித்தது. ஆனால், இப்பொழுது நாடகத்தின் பாலுணர்வு கொண்டதாகக் கருதப்பட்ட பகுதிகள் நாகரீகமற்றவை, கீழ்த்தரமானவை என்ற ஓரியண்டலிச கணிப்பை உடனே ஏற்றுக் கொண்டது. ஆதர்சப் பெண்மைக்கு நாணும், மடமையும், பயிர்ப்பும் போர்த்தப்பட்டன. ஆள்பவரின் கருத்தியல் தேவைகளும், ஆட்சியின் கருவியான வர்க்கத்தின் தேவைகளும் முரண்பாடின்றி சங்கமித்தன.
அதற்குப் பின், இந்திய தேசியத்தின் வளர்ச்சியின் போது இந்தியப் பெண்மைக்கு, தொன்மை இந்துக் கலாச்சாரத்தின் மகிமையெல்லாம் வடித்தெடுத்துச் சேர்த்த பெண்மைக்கு, இலக்கணம் வகுப்பது தேவையாயிற்று. அன்னியனின் ஆதிக்கக் கலாச்சாரத்திற்கு எழுச்சி பெற்ற தேசியத்தின் ‘ஆண்மை' மிக்க சவால் இந்தியப் பெண்; ஆரிய ஆன்மிகத்தின் வெண் மலர்; ஒழுக்கத்தின் சொரூபமான, கற்புக்கு இலக்கணமான பெண்; நாணம், அச்சம், பயிர்ப்பு, அடக்கம், தியாகம், பொறுமை, கணவனிடம் பக்தி, அசைக்கவியலாக் கற்பு இவற்றின் மொத்த உருவம். அன்று இந்திய கலாச்சாரத்திற்கு இலக்கணம் வகுத்து, வடிவமைத்துக் கொண்டிருந்த மேல் சாதி - மத்தியதர வர்க்கம் விக்டோரிய விழுமியங்களும், இந்தியாவின் பண்டை மரபு என்று அவர்களால் ஏற்கப்பட்ட மேல் சாதிக் கலாச்சாரமும் சேர்ந்த ஒரு கலவையை உருவாக்கிற்று. 1920ம் நூற்றாண்டுகளில் உதித்த இந்த ஆதர்ச பாரதக் கலாச்சாரத்தின், இந்து ஆன்மிகத்தின் இலட்சிய வடிவம் இந்துப் பெண்.
காளிதாசனின் சகுந்தலையைக் கொஞ்சம் தட்டிக் கொட்டினால் இந்த வடிவம் வந்து விடும். ஆனால், மகாபாரத சகுந்தலை திமிறிக் கொண்டு நிற்கிறாளே! அவளை என்ன செய்வது? கொன்று விடுவதைத் தவிர வேறு வழியில்லை. மகாபாரத சகுந்தலை கொலை செய்யப்பட்டாள்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இன்னொரு பிரச்சினை எழுந்தது. இலட்சிய மாதான சகுந்தலா பாலுணர்வுக்கு இலக்காகி துஷ்யந்தனிடம் தன்னை இழந்ததை எவ்வாறு ஏற்பது? காந்தர்வ மணம் உகந்தது என்று ஏற்றுக் கொள்ளப் புதிய மத்தியதர வர்க்க கலாச்சாரமும், புது வடிவமேற்ற ஆணாதிக்கமும் தயாராக இல்லை. பாலுணர்வும், பாலுறவும் ‘பாவம்', கீழ்த்தரமானவை என்கின்ற விக்டோரிய விழுமியம் இதற்குள் இந்திய மேல் சாதியக் கலாச்சாரத்துடன் இரண்டறக் கலந்து விட்டது. ஆகவே, சகுந்தலை - துஷ்யந்தன் கூடல் சகுந்தலையின் வீழ்ச்சியாக, (துஷ்யந்தனின் வீழ்ச்சியாக அல்ல) இப்பொழுது பார்க்கப்பட்டது. சகுந்தலா ‘மன்மதராசாவின்' கணைகளில் வீழ்ந்ததற்குப் பிராயச்சித்தம் செய்தல் இப்பொழுது அவசியமாயிற்று. ஆகவே, அவள் துஷ்யந்தன் துறந்த பின், மாரீச ஆசிரமத்தில் பல காலம் தவமிருந்து, கணவனை மீண்டும் பெற நோன்புகள் நோற்று, பரதனின் இலட்சியத் தாயாக, ஆன்மீக ஜோதியாக மறு பிறவி எடுக்கிறாள். இந்த மறுவாசிப்பு மகாபாரதத்திலும், காளிதாசனிலும் இரண்டிலுமே இல்லாத புதிய வார்ப்பு. இரண்டிற்கும் முரணானது. ஆனால், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலவிய ஆதிக்க சாதிக் கவலைகளைப் பிரதிபலித்து உருவகிக்கப்பட்டது.
சகுந்தலையின் இந்த தபஸ்வினி, பாவத்தைக் கழுவி எழுந்த புனித மங்கை என்ற வடிவங்களுடன் இன்னொரு பரிமாணமும் இப்பொழுது கூட்டப்பட்டது. அதுதான் "ஆரியம்'. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் உருவான ‘இனம்' தொடர்பான சித்தாந்தங்களைத் தொடர்ந்து, மேல் சாதி இந்துக்கள் தாங்கள் ஆரிய இனத்தவர் என்று அடையாளம் காணத் தொடங்கினர். ஆரியப் பெண் மற்ற அனைத்துப் பெண்களினும் உயர்ந்தவள், இந்திய தேசத்தை ஆன்மீக வழியில் நடத்திச் செல்லக் கூடியவள். “சாகுந்தலத்தில் ஆரிய இந்தியாவின் தூய்மையான காற்றை சுவாசிக்கின்றோம்.'' என்று ஒரு சமஸ்கிருத மொழியியலாளர் கூறுகிறார். ஆகவே, சகுந்தலாவுக்கு இப் பொழுது ஆரியப் போர்வையும் போர்த்தப்பட்டது.
இவ்வாறு, சகுந்தலா பல வடிவம் எடுத்துவிட்டாள். காலத்திற்கேற்ற வண்ணம் மாறி, இன்று புதிய மத்தியதர வர்க்கத்தின் இலட்சியங்களுக்கு ஏற்ப உருவெடுத்துள்ளாள். மரபு என்பது சம காலத்தின் படைப்பு. சம காலத்திற்கும் இறந்த காலங்களுக்கும் இடையே ஒரு இடையறாத உரையாடல் நடந்து கொண்டேயிருக்கிறது. மரபுகள் காலந்தோறும் மறுபடைப்பு செய்யப்படுகின்றன. இந்த மறுபடைப்புகள் ஆதிக்க சக்திகளினால், அவர்கள் தேவைக்கேற்ற வண்ணம் செய்யப்படுகின்றன. சகுந்தலா இவ்வாறு பலமுறை வார்க்கப்பட்டவள். பெண்ணின் இத்தகைய வார்ப்புகள் இன்றும் தொடர்கின்றன.
|