Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: [email protected]
hotmail.com
யாருக்கு ஓட்டுப் போடுவது?: ஞாநி

திசைகளின் வாசல்:
அ. ராமசாமி


ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்!:
ச. தமிழ்ச்செல்வன்

பெண்மையின் மறுவார்ப்புகள்: வெ.வசந்தி தேவி

மனிதன் கேள்வி - பதில்கள் 1

மனிதன் கேள்வி - பதில்கள் 2

மனிதன் கேள்வி - பதில்கள் 3

மனிதன் கேள்வி - பதில்கள் 4

மகிழ்ச்சியானதா மணவாழ்க்கை?: எம். சுரேந்திரன்

செக்ஸ்: தி.மு? தி.பி? - என் கருத்து - ஞாநி

காவி நிலம்: வசுமித்ர

நிராதரவானவன்: தா. சந்திரன்

மக்கள் மன்றம்

புலம்பெயர்கிறோம்

அலமாரி

Ramasamy
திசைகளின் வாசல் - 18
அ. ராமசாமி

மரத்தில் மறைந்த மாமத யானை
மதத்தில் மறையும் மாமத யானை

நாடகக்காரரும் நாடகம் பற்றிய பதிவுகளைப் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து செய்து வருபவருமான சி.அண்ணாமலை எழுதி காவ்யா வெளியிட்டுள்ள நாடகம் வெங்காயம். வெங்காயம் - பெரியார் பற்றிய நாடகம் என்ற குறிப்புடன் வந்துள்ள இந்த நாடகப்பிரதியைப் பற்றிப் பேசத் தொடங்கும் போது மிகுந்த எச்சரிக்கையோடு பேச வேண்டியுள்ளது. ஏனென்றால் தமிழ்நாட்டில் நவீன நாடகத்தளத்தில் செயல்படுகிறவர்களாகக் கருதிக் கொள்ளும் பலரும் நாடகத்தைப் பற்றிய விமரிசனங்களையும், நாடகப் பிரதிகளைப் பற்றிய விமரிசனங்களையும் , விமரிசனங்களாகக் கருதி விவாதிப்பதில்லை என்பது எனது சொந்த அனுபவம். விதிவிலக்குகள் உண்டு என்றாலும் பெரும்பாலானவர்கள் அவர்களது நாடகங்களைப் பற்றிய எழுத்துக்களுக்குப் பின்னால் பேச்சை நிறுத்திக் கொண்டு எதிரிகளாக மாறிப்போனார்கள் என்பதுதான் உண்மை.

எல்லாவற்றையும் நபர் சார்ந்த ஒன்றாகக் குறுக்கிக் காட்டுதல் தமிழ் அறிவுலகின் செயல்பாடாக ஆகி வருகிறது. விமரிசனங்களும் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள வில்லை. தனது படைப்பின் மீது அல்லது தான் நம்பும் கருத்தியல் மீது வைக்கப்படும் விமரிசனங்களைக் கூடத் தனது தனிநபர் ஆளுமை மீது வைக்கப்படும் விமரிசனமாக மாற்றிக் காட்டுவதில் இரண்டு வித லாபங்கள் உண்டு. முதல் லாபம் அவர்களின் படைப்பின் மேல் வைக்கப்பட்ட விமரிசனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தப்பித்துக் கொள்ளலாம். இரண்டாவது லாபம் நபர் சார்ந்த விமரிசனமாக ஆக்கும் நிலையில் தான் அவர்களின் ஆதரவாளர்களும் அல்லது தொண்டர்களும் நபர்களுக்காக யுத்தங்களை நடத்துவது சுலபமாக இருக்கிறது. இப்படியான குறுக்குத்தனச் சிந்தனையெல்லாம் ஈ.வெ.ராமசாமிக்கு இல்லை என்பது தான் ஓரே ஆறுதல். அனைவரும் கருத்துக்களின் அடிப்படையில் விவாதிக்க வேண்டும் என்று விரும்பிய பெரியார் “திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருந்தவன்" என்று தன்னைப் பற்றிச் சொன்னவர்; நம்பியவர். ஆனால் அவரது பின்னோடிகள் தான் இப்படி குறுக்குத்தனமாகச் சிந்திக்கிறார்கள்; மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போக்கை சுவையான முரண் என்று மட்டும் தான் சொல்ல முடியும்.

சி. அண்ணாமலையின் நாடகப் பிரதியைப் பற்றிப் பேசத் தொடங்கும்போது வேறொரு அச்சமும் மனதில் தோன்றுகிறது. 35 நிகழ்வுகள், 39 பத்திரிகை விமரிசனங்கள், 35000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள், நாடக வரலாற்றில் ஒரு மைல் கல்லாக நின்றுள்ள ‘கலகக்காரர் தோழர் பெரியார்’ நாடகத்தைப் பற்றிப் பேசாமல் தவிர்க்க முடியுமா? என்ற அச்சம்தான் அது. தவிர்க்க வேண்டும் எனச் சொல்லும் அதே நேரத்தில் அது முடியாது என்றும் மனம் சொல்கிறது. காரணம் அந்நாடகப் பிரதியை முதன் முதலில் அச்சிட்ட வல்லினம் இதழ், மு.ராமசுவாமியுடன் சி.அண்ணாமலையும் சேர்ந்துதான் அந்நாடகப் பிரதியை எழுதியதாகக் குறிப்பிட்டிருந்தது தான். இருவரும் சேர்ந்து எழுதிய அந்நாடகப் பிரதியைப் பற்றி எழுதப்பட்ட நீண்ட விமரிசனத்திற்குக் கிடைத்த பதில் ஒதுக்குதலும் அவதூறு மட்டும் தான். கலகக்காரர் தோழர் நாடகம் ஓராண்டு முழுக்க 35 நிகழ்வுகளைக் கண்ட பின் நூலாக அச்சேற்றும்போது பாராட்டப்பட்ட எல்லா விமரிசனங்களும் கவனிக்கப்பட்டன. மாற்று நிலைபாட்டை முன்மொழிந்த ஒரு சில விமரிசனங்கள் ஒதுக்கித் தள்ளப்பட்டன. இதுதான் தமிழின் பொது மனோபாவம் என்றால் அவரை எதிர்த்த மதவாதிகளோடு வாதம் செய்ய மட்டும் அல்ல, அவரை ஏற்றுக் கொண்டுள்ளதாகச் சொல்லும் தமிழர்களோடு வாதம் செய்யவும் பெரியார் திரும்பவும் வந்து தான் ஆக வேண்டும்.

ஈ.வெ.ராமசாமி என்னும் மனிதர், பெரியாராக மறைந்தார் என்பது மட்டுமல்ல; கலகக்காரராகவும், தோழராகவும் வாழ்ந்தார் எனச் சொல்ல முயன்றது மு.ராமசுவாமியின் நாடகம். தமிழ்நாட்டைப் பிடித்திருந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், சமூக இழிவுகளுக்கு எதிராகவும் கலகங்கள் செய்த ஈ.வெ.ராமசாமியை வெறும் பகுத்தறிவாளர் என்று குறுக்க வேண்டியதில்லை. இந்தத் தமிழ் சமுதாயத்தைச் சமத்துவத்தில் நம்பிக்கை கொண்ட சமுதாயமாக மாற்றுவதில் உறுதியும் கொண்டிருந்தார் என்றொரு முன்மொழிதலையும் செய்தது அந்நாடகப்பிரதி. அத்தகைய மனிதரின் வாழ்க்கையைத் தனது இருபத்தைந்தாவது ஆண்டில் மேடையேற்றுவதில் பெருமை கொள்கிறது நிஜ நாடக இயக்கம் என்றது மேடையேற்றப் பிரதி. வல்லினத்தில் வந்த கலகக்காரர் தோழர் பெரியார் பிரதியை வாசித்துவிட்டு அந்நாடகத்தின் மேடையேற்றத்தைப் பார்த்தவர்களுக்கு இந்த கட்டமைப்பு வேறுபாடு புரிந்திருக்கலாம்.

கலகக்காரர் தோழர் பெரியாரிலிருந்து, சி.அண்ணாமலையின் வெங்காயம் பெரிய அளவு விலகலைக் கொண்டிருக்கிறது. பெரியாரைப் பற்றிய நாடகத்தை எழுதுவது என்ற முடிவுக்குப் பின்னால், அவரை என்னவாகப் பார்வையாளனுக்குத் தருவது என்பதிலும், என்னவிதமான எடுத்துரைப்பில் நாடகத்தை எழுதுவது என்பதிலும் அண்ணாமலைக்கு வேறு பார்வைகள் இருந்துள்ளன. கலகக்காரர் தோழர் பெரியார் நாடகம் பெரியார் என்னும் ஆளுமையை பார்வையாளர்கள் முன்னால் வைக்க, இந்நாடகமோ பெரியாரியம் என்று அறியப்பட்ட கருத்தியல் இன்று என்னவாக ஆகிக் கொண்டிருக்கிறது என்பதைப் பார்வையாளர்களுக்குச் சொல்ல முயல்கிறது. அப்படிச் சொல்லும் நோக்கத்தின் ஊடாக பெரியாரியம் என்ற கருத்தியலை உருவாக்கிய ஈ.வெ.ராமசாமியின் ஆளுமையின் உன்னதத்தையும் விதந்து பாராட்டுகிறது. அந்த வகையில் அண்ணாமலைக்கு முதன்மையானது பெரியாரியம் தான்; பெரியார் என்ற மாமனிதர் அல்ல.

கலகக்காரர் தோழர் பெரியார் நாடகத்தைப் பார்த்தவர்கள் அதில் நேரடி எடுத்துரைப்பு முறை பின்பற்றியிருந்ததை உணர்ந்திருக்கக் கூடும். நேரடி எடுத்துரைப்பு, நாடகப் பாத்திரங்களைத் தவிர்த்துவிட்டு பார்வையாளர்களுடன் உரையாடுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டது. கருத்துக்களை முன்மொழிவதை மட்டுமே முக்கியமாகக் கருதும் இயக்குநர்கள்/ஆசிரியர்கள் பின் பற்றும் எடுத்துரைப்பு முறை. அம்முறையைப் பின்பற்றியதால் தான் அந்நாடகம் மேடையைத் தவிர்த்து விட்டுப் பார்வையாளர்களுக்குள் பெரியாராக நடித்தவரை இறக்கி உரையாடலை நடத்திய உத்தியைப் பின்பற்றியிருந்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அண்ணாமலை அந்த உத்தியை முக்கியமானதாகக் கருதியதாகத் தெரியவில்லை. தவிர்த்துவிட்டு பாத்திரங்களுக்கு இடையே நடக்கும் விவாதத்தையே எடுத்துரைப்பு முறையாக்கிக் கொண்டிருக்கிறார். இந்த நாடகத்தில் வரும் ஈ.வெ.ராமசாமி எல்லாவிதக் கேள்விகளுக்கும் பதில்களைச் சொல்லிவிடும் பெரியார் தான் என்றாலும் தன் கருத்துக்களும், சிந்தனைகளும் பெரும் நெருக்கடிகளுக்குள் இருக்கின்றன என்பதை உணர்ந்த பெரியாராக வெளிப்பட்டிருக்கிறார். இப்படி வெளிப்பட வைத்ததில் அண்ணாமலையின் மொழிநடையும் அவர் பின்பற்றிய எடுத்துரைப்பு முறையும் பங்காற்றியிருக்கின்றன. எதிரிகளையும் மதித்து அவர்களோடு வாதம் செய்வதில் விருப்பம் உடையவர் பெரியார் என்ற அடையாளத்தைப் பெரியாரின் முக்கியமான அடையாளமாகக் கருதிய அண்ணாமலை அதையே நாடகத்தின் எடுத்துரைப்பு உத்தியாக்கிக் கொண்டிருக்கிறார்.

பெரியாரை - பெரியாரின் கருத்துக்களை - எதிர்க்கத் தயாராகும் மதவாத சக்திகளை மேடையில் நிரப்பி, அவர்களின் உரையாடல்களின் வழியாகவே நாடக நிகழ்வை நகர்த்தும் இந்நாடகம், ஒரு நாடகப் பிரதிக்குத் தேவையான அடிப்படைகள் சிலவற்றைத் தவற விட்டுள்ளது. அறிமுகம், உச்சம், முடிவு என்ற மிகச் சிறிய அடிப்படைக் கட்டுமானத்தைக் கூடக் கொண்டிருக்கவில்லை. பெரியார் அல்லது பெரியாரியம் தமிழ்நாட்டின் சிந்தனைப் போக்காக இருக்கிறது. அதனை எதிர்ப்பவர்களாக மதம் மற்றும் சாதிவேறுபாடுகளில் நம்பிக்கை கொண்ட மனிதர்கள் அல்லது இயக்கப் பிரதிநிதிகள் இருக்கிறார்கள் என்பதாக அடையாளப்படுத்திக் கொண்டு தொடங்கும் நாடகம் மேலே வளர்ச்சி அடையாமல் அங்கேயே நிற்கிறது. ஆனால் நாடகம் முடியும் நிலையில் மேடையில் பரவும் காவிக்கொடிகளும் சாதிக்கொடிகளும் பெரியாரின் உருவத்தையும், பேச்சையும் மறைக்கின்றன எனக் காட்டுவதின் மூலம் நிகழ்கால நிலைமையை ஓரளவு சுட்டிக் காட்ட முயன்றுள்ளார் நாடக ஆசிரியர்.

சுட்டிக் காட்டினாலே போதும்; நாடக ஆசிரியரின் பணி அதோடு முடிந்து போகிறது. அதற்குப் பின் பெரியாரியம் அல்லது பெரியார் காணாமல் போகும் சூழல் தமிழ்நாட்டில் உருவாகி வரும் நிலைமையை நாடக இயக்குநர் தன் போக்கில் காட்டிக் கொள்ளலாம். அதற்கு இப்பிரதி இடமளித்துள்ளது எனப் பாராட்டிச் சொல்ல வாய்ப்புண்டு. அப்படியொரு பின்புலம் இந்நாடகப் பிரதி உருவாக்கத்தில் உண்டு என்பதையும் மறந்து விடவில்லை. அதே நேரத்தில் ஒரு நாடக இயக்குநரை மட்டுமே மனதில் கொண்டு எழுதப்படும் நாடகங்கள் பிரதியாக வாசிக்கப்படும் நிலையில் வாசகனுக்கு எந்த அனுபவத்தையும் தருவதில்லை என்ற உண்மையையும் மறந்து விடக் கூடாது. இந்தக் கூற்று வ. ஆறுமுகம் போன்ற நாடக இயக்குநர்கள் தங்கள் மேடையேற்றத்திற்காகத் தயாரித்த கருஞ்சுழி, ஊசி போன்ற மேடையேற்றப் பிரதிகளுக்கும் பொருந்தும். சங்கீத நாடக அகாடமியின் இளம் இயக்குநர்கள் திட்டத்தில் பங்கேற்ற பல நாடகப் பிரதிகள் இத்தகையனதான். ஒற்றை இயக்குநரின் மேடையேற்றத்திற்கெனத் தயாரிக்கப்பட்ட பிரதிகள் வேறொரு இயக்குநருக்கு மேடையேற்றும் வாய்ப்பைத் தர மறுக்கின்றன என்பது கூட உண்மைதான்.

சி.அண்ணாமலையின் இப்பிரதிக்கு அப்படியானதொரு நோக்கம் இல்லை என்ற நிலையில் சில விசயங்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பெரியார் அல்லது பெரியாரியம் இன்று பின்னுக்குத் தள்ளப்பட்டுக் காவிக் கொடிகளும் சாதிக் கொடிகளும் மேடைப் பரப்பில் அல்லது தமிழர்களின் வாழ்வுப் பரப்பில் பரவிக் கொண்டிருக்கின்றன என்ற உண்மையை உணர்ந்த நிலையில், அதற்கான காரணங்களைத் தேடத் தொடங்கியிருக்கலாம். தேடுதலின் ஒரு கண்ணியாக அவரது மரபான எதிரிகளை மட்டுமே - பிராமணியத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துத்துவ சக்திகளை மட்டுமே அடையாளப்படுத்தியுள்ளது. இப்படி அடையாளப்படுத்துவது தமிழ்நாட்டில் நிலவும் பொதுப்போக்கு. பெரியார் என்னும் மதயானையை மதம் மட்டுமே மறைத்தது என்றில்லை. இளைப்பாறுதல் தரும் என்று அவர் நம்பிய சொந்த இயக்கம் என்னும் மரங்களும் கூடத்தான் மறைத்தன.

எனவே பெரியார் பற்றிய ஒரு நாடகம் அல்லது படைப்பு இந்துத்துவ சக்திகளைக் கவனப்படுத்துவதோடு நின்று விடுவதில் முழுமையடையாது என்றே தோன்றுகிறது. அதைவிடவும் முக்கியமாகக் குவிக்க வேண்டிய கவனம் இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக இருப்பதாகக் காட்டிக் கொண்டே இந்துத்துவத்தைப் பின்பற்றும் சக்திகள் பற்றியதாகவும் இருக்கவேண்டும் என்று கூறத் தோன்றுகிறது. அந்தப் பின்னணியில் சி.அண்ணாமலையின் நாடகம், பெரியாரின் சிந்தனைகளோடு உடன்படுவதாகக் நம்பிக் கொண்டே ஜனநாயகத்தை மதிக்காமல், சாதியத்தை உள்வாங்கிக் கொண்டு பாசிச சக்திகளாக வலம் வரும் இயக்கங்களையும் தனிமனித மனங்களையும் வெங்காயக் குறியீடாக நிறுத்தியிருக்கலாம்.

இப்படிச் சொல்வது குறை சொல்வதல்ல; ஆசை தான். அப்படியானதொரு நாடகப்பிரதியாக ஆகியிருக்கும் வாய்ப்பு அண்ணாமலை உருவாக்கிக் கொண்டுள்ள எடுத்துரைப்பு முறையிலும் கட்டமைப்பு வடிவிலும் இருக்கிறது என்று தான் தோன்றுகிறது. திரும்ப எழுத நேர்ந்தால் இதை யோசித்துப் பார்க்கலாம்.

சி.அண்ணாமலை,
வெங்காயம்
[பெரியார் பற்றிய நாடகம்]
காவ்யா, சென்னை, 2005


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com