Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: dheemtharikida@
hotmail.com




யாருக்கு ஓட்டுப் போடுவது?: ஞாநி

திசைகளின் வாசல்:
அ. ராமசாமி


ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்!:
ச. தமிழ்ச்செல்வன்

பெண்மையின் மறுவார்ப்புகள்: வெ.வசந்தி தேவி

மனிதன் கேள்வி - பதில்கள் 1

மனிதன் கேள்வி - பதில்கள் 2

மனிதன் கேள்வி - பதில்கள் 3

மனிதன் கேள்வி - பதில்கள் 4

மகிழ்ச்சியானதா மணவாழ்க்கை?: எம். சுரேந்திரன்

செக்ஸ்: தி.மு? தி.பி? - என் கருத்து - ஞாநி

காவி நிலம்: வசுமித்ர

நிராதரவானவன்: தா. சந்திரன்

மக்கள் மன்றம்

புலம்பெயர்கிறோம்

அலமாரி

Reader's forum
மக்கள் மன்றம்

ஏன் திருமணத்திற்கு முன் செக்ஸ் தேவை?

திருமணத்திற்கு முன்பு செக்ஸ் என்ற கோட்பாடு என்பது வரைமுறையற்ற செக்ஸ் உறவுகளுக்கு வழி வகுத்து விடும் என்று அஞ்சப்பட்டாலும் அது தேவைதான் என்பதற்கு வலுவான காரணங்கள் உள்ளன.

1. ஆணும் பெண்ணும் கிட்டத்தட்ட 15 வயதில், உடல் ரீதியாக செக்ஸ் உறவுக்கு தயாராகி விடுகிறார்கள். வயது ஏற ஏற, Biological ஆகவே, உடலிலும் மனத்திலும் செக்ஸ் தேவை அதிகரிக்கும். நடைமுறை வாழ்க்கையில் கல்யாணத்துக்குப் பின்னரே செக்ஸ் என்ற சமூக கட்டாயத்தில் மனிதன் தன்னை வருத்திக் கொண்டு வாழ நேரிடுகிறது. அதுவும் கல்யாண காலமும் வயதும் தள்ளிப் போகும் ஒரு சமூக சூழலில் 30, 35 வயது வரை ஆணும் பெண்ணும் செக்ஸ் உணர்வு தரும் துன்பத்தை அனுபவிக்க நேரிடுகிறது. தைரியமும் பணமும் உள்ள சிலரைத் தவிர, பலர் இதற்கு ஆளாக நேரிடுகிறது. செக்ஸ் உணர்வு தீராத காரணத்தினால் ஆண் பெண் இருபாலரும், சிந்திக்கவும் செயல்படவும் சாதிக்கவும் வாய்ப்புள்ள பலர், கவனமின்றியும் சிரத்தையின்றியும் அவர்களிடம் உள்ள திறமையை வெளி கொணரமுடியாமலேயே போய் விடுகிறது.

2. கல்யாணத்துக்கு முந்தைய செக்ஸ்க்கு வாய்ப்பிருக்கும் தருணத்தில், பருவ வயதில் உள்ள ஆணும் பெண்ணும், செக்ஸ் இல்லா துன்பத்தில் இருந்து விடுபட்டு, தங்களுடைய உழைப்பு சக்தி அனைத்தையும் ஒரு முகப்படுத்தி தான் விரும்பும் துறையில் முன்னேறவும், சாதனைகள் படைக்கவும் முடியும். தீராத செக்ஸ் உணர்வு, மனிதனை துன்பப்படுத்தும். தீர்ந்து விட்டாலோ, ஒரு மனிதனை ஆக்க சக்தியாக செயல்பட வைக்கும். மணவாழ்க்கையிலேயே, மனைவியை நீண்ட நாட்கள் பிரிந்திருக்கும் கணவர்கள்/மனைவிகள் செக்ஸ் உணர்வு உந்தப்பட்ட நிலையில், தங்கள் செயல்களில் உற்சாகம் குன்றி கவனமின்றி இருப்பதை ஒத்துக் கொள்வர்.

3. மணவயது அதீதமாக 30, 35 என்று திருமணம் தள்ளிப் போகும். பொருளாதார சூழல், TV யில் எந்நேரமும் செக்ஸ் உணர்வை தூண்டும் சினிமா/பாடல் காட்சிகள் ஆகியவை கல்யாணத்துக்கு முந்தைய செக்ஸின் தேவைக்கு நியாயங்கள் ஆகும். சிலப்பதிகாரப்படி கோவலனுக்கு 14 வயதிலும் கண்ணகிக்கு 12 வயதிலும் கல்யாணம் ஆனது. இது இயற்கையின் விதிக்கு கட்டுப்பட்டது. 30, 35 வயது என்பது இயற்கைக்கு முரணானது. கல்யாணம் வரை, செக்ஸ் உணர்வை அடக்கி வைப்பதும் இயற்கைக்கு முரணானது. இயற்கையோடு இயைந்து பருவம் வந்ததும் துணையை தேடி சோர்ந்து இருக்கலும் அல்லது பொருளாதார சிக்கலால் 30, 35 ல் கல்யாணம் என்றால் கல்யாணத்துக்கு முன் செக்ஸ் கிடைக்கலும். ஏதாவது ஒன்றுதான் தீர்வாக முடியும்.

4. செக்ஸ்க்காகத்தான் திமணம் என்பது கொச்சையாக இருக்கும். செக்ஸ்தான் திருமணத்தின் பிரதான அம்சம் என்பதே நிதர்சனம். செக்ஸ்க்காக மட்டுமே திருமணம் என்பது எவ்வளவு அபத்தமோ, அதே அளவு அபத்தம் திருமணம் இல்லாட்டி செக்ஸ் கிடையாது என்பதும்.

5. செக்ஸ் புதிரும் இல்லை. புனிதமும் இல்லை என்ற நிலை வரணும். Indians should come out of secrecy of sex என்று யாரோ சொன்னதாக சொல்வார்கள். 15 வயது பையனில் இருந்து 80 வயது கிழடு வரை செக்ஸ் ஒரு பெரிய மர்மம்தான். இது (இந்த கருத்து விகாரம்) உடையலும், பசி, தூக்கம், கோபம் போன்ற ஓர் உணர்வே செக்ஸ் என்ற "மன விடுதலை' ஏற்பட்டு, ஆரோக்கிய சமூகம் உண்டாக திருமணத்திற்கு முன் செக்ஸ் என்பது ஒரு சாதாரண விஷயமாக வேண்டும்.

6. திருட்டு, கொலை, கொள்ளை ஆகியவை குற்றங்கள்(Crime). பருவ வயதில் ஆண் பெண் செக்ஸ் கொள்வது பசி தூக்கம் போன்ற ஒரு செயல். ஆனால் அது Crime ஆக பார்க்கப்படுவது தவறு. சமூக ஒழுக்கத்தையும் செக்ஸ் விஷயத்தையும் முடிச்சு போடும் மனோபாவம் மாற, திருமணத்துக்கு முன் செக்ஸ் என்ற மனநிலை கொண்ட சமூகத்தால்தான் முடியும். (இங்கு Rape என்பதை போட்டு குழப்பிக் கொள்ள கூடாது. அது Crime).

7. திருமணத்துக்கு முன் செக்ஸ் என்பதில் கல்யாணமாகாத (கன்னிப்) பெண், (கன்னி) ஆணை புணர்தல் என்று மட்டும் பொருள் கொள்ளக் கூடாது. திருமணத்துக்கு முன் ஆணும் பெண்ணும், எங்கு செக்ஸ் கிடைக்கிறதோ அங்கு பெறுதல் என்ற அளவில் புரிந்து கொள்ள வேண்டும். (Example : Brothal House).

8. திருமணத்திற்கு முன் செக்ஸ் என்ற கருத்து மனரீதியாக ஏற்கப்பட்டு, அதில் உள்ள "புனிதம்' உடைக்கப்பட்டு விட்டால், அனேகமாக சமூகத்தில் "கற்பழிப்பு' என்ற நிகழ்வே இல்லாமல் போய் விடும். கற்பழிப்பு என்ற பலாத்காரம் செக்ஸ் என்ற உணர்வுக்கு உணவு போடாததால் உண்டாகும் பின் விளைவு ஆகும்.

9. காமம் தீர்ந்த மனித குலமே நிம்மதியாக வாழும். மறைக்க மறைக்க, எட்டாக் கனியா இருக்க இருக்க, மர்மம் கூட கூட, துன்பமே விளையும்.

10. மேலே நாடுகளின் முன்னேற்றத்துக்கு, Sex Secrecy இல்லாத/ செக்ஸ் உடன் Sanctity (புனிதம்) சேர்க்காத அந்த சமூக அமைப்பு கூட காரணமாக இருக்கலாம். இதற்கு தி.மு.செ. உதவக்கூடும்.

M. சுரேந்திரன்
பெரம்பூர், சென்னை.


திருமணத்திற்கு முன் செக்ஸா? பின்பு செக்ஸா?

ஆரோக்கியமான நல்ல விவாதப் பொருள் இது. இன்று வளரும் இளம் தலைமுறையினர் மிகுந்த அறிவுத்திறனும்; தொலைநோக்கு சிந்தனையும்; தனக்கென சமுதாயத்தில் உள்ள மதிப்பையும் நன்கு அறிந்தவர்களாக இருக்கின்றனர். அப்படிப்பட்ட இளைஞர்களுக்க பெற்றோராகிய நாம்; ஆசிரியர்கள்; குடும்பப் பெரியோர்கள்; சமுதாயத் தலைவர்கள்; அரசியல்வாதிகள் ஆகயோர்களாகிய நாம் கற்றுக் கொடுக்கக் கூடிய செய்திகள் எவ்வளவோ இரக்கின்றது. அதில் ஒன்றுதான் "செக்ஸ்'. ஆனால் துரதிஷ்டவசமாக செக்ஸ் பற்றிய கருத்துக் கிளம்பும்போதெல்லாம் நாம் அனைவரும் மௌனமாகிவிடுகிறோம் அல்லது எதிர்ப்பு தெரிவித்து விடுகிறோம். காரணம், அது தெரிய வேண்டிய நேரத்தில் அவர்களுக்கு தானாகவே தெரிந்து விடும்; அவர்களை ஏன் நாம் குழப்ப வேண்டும் என்ற சாக்கை சொல்லி தப்பித்து விடுகிறோம். விளைவு இளைஞர்களுக்கு அதுபற்றிய ஆவல் இன்னும் அதிகமாகி தவறான செய்தியை படித்து; தவறான காட்சியை பார்த்து அவர்களுடைய இளமை சீரழிவதற்கு வாய்ப்பாக அமைந்து விடுகிறது. எனவே "செக்ஸ் என்று வாழ்வில் நடக்கக்கூடிய ஓர் உன்னத உணர்வு என்பதை அவர்களிடம் எடுத்துக்கூற வேண்டும்; பெற்றோர் தன் மகனை நன்றாக படிக்கச் சொல்கிறார், தவறான நண்பர்களுடன் சேரக்கூடாது என்கிறார். அதுபோல செக்ஸ் பற்றியும் "தேவை'யான நேரத்தில் வெளிப்படையாக பேச வேண்டும். செக்ஸ் என்பது மனிதர்களின் மற்ற தேவையைபோல், மற்ற உணர்வைபோல் ஓர் உணர்வே என்பதை எடுத்துக்கூற வேண்டும். மற்றபடி திருமணத்திற்கு முன் "செக்ஸ்'சா அல்லது பின்பு செக்ஸா என்பது என்பதை அந்தந்த தனிப்பட்ட மனிதன் விருப்பு வெறுப்பை சார்ந்ததே!

ஞான ஒளி, ஆரப்பள்ளம்


களியாட்டுக்கு என்ன விலை?

கோவை பாலக்காடு சாலையில் மார்ச் 7ம் தேதி அதிகாலை நான்கு இளைஞர்களையும் ஓர் பெண்ணையும் சுமந்து சென்ற மகிழுந்து ஒன்று தன்னை இயக்கியவர்கள் கட்டுப்பாட்டை இழந்ததால் தனக்கு முன்பு சென்று கொண்டிருந்த சரக்குந்தில் மோதி தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டது. இரண்டு இளைஞர்களும் அந்தப் பெண்ணும் முடிவெய்தினர்.

இந்நேர்வில் இறையான மூவரில் ஒருவர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஒருவரின் மகன். அப்பெண் முன்னாள் கடற்படை அதிகாரியின் மகள். மேல்தட்டு வகுப்பைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் அறிவியல் பயின்று கொண்டிருந்த மாணாக்கர்கள். அறிவியல் பயிலும் எவரையும் அறிவியல் ரீதியாக சிந்திக்க நம் கல்வி முறை பயிற்று விக்கவில்லை.

ஊர்த்திகளை இயக்குபவர்களிடம் ஊர்திகளின் இயக்கம், அது சாலையில் செல்லும் போது அதன் மீது செயல்படுகிற புறநில இயற்பியல் விதிகள் ஆகியவை குறித்த அறிவு இருப்பதில்லை. எடுத்துக்காட்டாக ஒரு ஊர்தி நூறு மைல் வேகத்தில் சென்று வேறு தடை ஒன்றின் மீது மோதினால் உள்ளிருபவர்கள் அதே 100 மைல் வேகத்தில் வெளியே தூக்கி எறியப்படுவர். நேர் கோட்டில் செல்லும் ஊர்தி திடீரென தன் திசையை மாற்றும் போது அதன் மீது ஆற்றல் மற்றும் வேகம் சம்பந்தப்பட்ட இயற்பியல் கோட்பாடுகள் செயல்படும் என்பது படித்த நம் இளைஞர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?

இந்திய சாலைகளின் தன்மை, சாலைகளை பயன்படுத்துவோரின் போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு இவை குறித்து எவரும் சிந்திப்பதில்லை.

பொதுச் சாலைகளில் ஊர்திகளை விரைவாக இயக்குவது நம் இளைஞர்களின் களியாட்டங்களில் ஒன்று. துணிவுச் செயல் (சாகசம்) புரிய நினைப்பவர்கள் அதற்குரிய பாதுகாப்புடன் பந்தைய சாலைகளைப் பயன்படுத்த வேண்டும்.

மனிதனின் தேவைகளையொட்டி எழும் நெருக்கடிகள் இவன் கொண்டுள்ள சமூக உறவுகளில் எதிர் கொள்ள வேண்டிய கருத்து முரண்பாடுகள், வேலைப்பளு ஆகியவை மனிதனை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. இந்த மன இறுக்கத்தை தளர்த்தி உள்ளக் கிளர்ச்சி (உற்சாகம்) அடையச் செய்வது களியாட்டங்கள். இவை மனிதனுக்கு மகிழ்ச்சியைத் தரும் கலைகளின் வெளிப்பாடாக, இசையாக, கூத்தாக அல்லது அரட்டையாக இருக்கலாம். ஆனால் அது அடுத்தவரை புன்படுத்தாத அடுத்தவரின் உரிமையை மீராத நிகழ்வாக அமைதல் அவசியம். இங்கு நாம் எதை களியாட்டம் என்று கருதுகிறோம் என்பதில் தான் சிக்கல் நீடிக்கிறது.

அயிரம் பேர் கூடியுள்ள திடலில் போதையூட்டப்பட்ட, கலவரப்பட்ட காளை மாடுகளை ஓடவிட்டு அதை எதிர் கொள்வதை வீர விளையாட்டு என காலம் காலமாக தொடர்வதை எப்படி மதிப்பீடு செய்வது? காலை மாட்டுடன் மனிதனை ஒப்பிட்டால் இவனுடைய திறன் குறைவு தான். பரிணாமத்தில் மனித இனம் அறிவுத் திறனில்தான் வளர்ந்துள்ளது. விலங்குகளுடன் போட்டியிடுமளவிற்கு உடல் திறனை பெறவில்லை. வீரத்தின் வெளிப்பாடாகவும் களியாட்டமாகவும் கருதப்படும் இந்நிகழ்வு ஆண்டு தோறும் பல இளைஞர்களை முடமாக்குகிறது.

நம்மூரில் கொண்டாட்டங்களின் பெயரில் நடைபெறும் ஆர்பாட்டங்களும், தெருக்களில் அடுத்தவரை சீண்டுவதும், கள்ளுண்டு தள்ளாடுவதும் நமது முதன்மையான களியாட்டங்கள். மோசமான நடத்தையாக முன்பு கருதப்பட்ட குடிப்பழக்கம் இன்று நாகரீகத்தின் அளவுகோளாக மாறியுள்ளது. நாகரீகத்தின் குறியீடாக ஒரு சங்கதி பொதுமைப்படுத்தப்பட்டால் அது அசுர வேகத்தில் சமூகத்தின் நடவடிக்கைகளில் ஒன்றிவிடும்.

மேல்தட்டு மக்களின் வாழ்க்கை மீதுள்ள பெரு வேட்கையும், மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கமும் நம் இளைஞர்களை சீரழிக்கிறது. இதற்கு அவர்கள் தரும் விலைதான் மிகப்பெரியது.

தி.கருப்புசாமி, பொள்ளாச்சி.

தமிழ் இலக்கியத் துறை ஆய்வுகள்

மனிதன் எப்பொழுதுமே உண்மையான விமர்சனத்தையோ புதியதொரு வரவையோ ஏற்றுக்கொள்ள வேண்டும். மாறாக பழைய நிலைத் தொடர்வதையே விரும்புவானாகில் மாற்றத்தினைக் காண இயலாது. ஆய்வுகளும் இது போலத்தான்., அந்த வகையில் மானிடவியலின் சாரமும் மாற்று வரலாற்றின் சங்கமமாக விளங்கும். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் தனிப்பெரும் தன்மையோடு என்றுமே தொடர்ந்து வருகிறது. இப்படியிருக்க இதனை ஒரு துணைப்பாடத் தகுதியினைக் கூடப்பெறாது என்று கூறுபவர்கள் முதலில் சமூக அறிவியலில் இதன் அங்கத்தைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் குறுகிப்போய் கீழ்த்தரமான மட்டமான நிலையிலுள்ளது என்று சொல்லித் தனது பாதையையும் தான் சார்ந்த புலத்தின் ஆய்வுகளையும் நியாயப்படுத்தக் கூடாது.

இன்றைய தமிழ் இலக்கியத்துறை ஆய்வுகளை சற்று புரட்டிப் பார்த்தால் யாரோ ஒருவர் தினசரி பத்திரிகைகளிலோ, வாரப்புத்தகங்களிலோ எழுதப்படும் கதையினை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு ஆய்வுப் பட்டத்தினை பெறுவது சர்வ சாதாரணமாக உள்ளது. அந்த ஆய்விலே உளவியல், சமூக எதார்த்தம், அமைப்பியல், செயல்பாட்டியல் என்று அனைத்துக் கோட்பாடுகளையும் அதில் பயன்படுத்துவதாய் சொல்கிறார்கள். இது யாருக்குப் பலனைத் தரக்கூடியதாய் இருக்க முடியும்?... இப்படிப்பட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்குப் பதில் எவ்வளவோ பழந்தமிழ் இலக்கியங்கள் மறுவாசிப்பு வேண்டி காத்துக் கொண்டிருக்கின்றன, அதற்காக செலவிடலாம். உண்மையான மொழியம்சத்தை பிரதிபலிக்க வேண்டிய இவர்கள் இப்படித்தரம் குறைந்த ஆய்வுகளைத் தருவதற்காகத்தான் இலக்கியத்தை சுற்றி வருகிறார்களேத்தவிர உள்ளே இறங்கி ஆய்வு செய்வதாய் இல்லை என்பதையே அப்பட்டாமாய் காட்டுகிறது.

இரண்டாவதாக சமூக அறிவியல் ஆய்வுகளை அகவய அணுகுதல், புறவய அணுகுதல் என இரண்டு தளங்களின் வழியே ஆய்வாளர்கள் மேற்கொள்ள முடியும். இதுதான் அடிப்படையும் கூட. இன்றைய தமிழ் மற்றும் இதர இலக்கியம் படிப்பவர்களும் நாட்டார் வழக்காற்றியல் என்கிற சமூக தலைப்பில் ஆய்வினை மேற்கொள்ளுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் தங்களது மொழி எல்லைக்குள்ளும், பண்பாட்டுத் தளத்திற்குள்ளும் தங்களது படிப்பு இருப்பதாலும் நாட்டார் வழக்காற்றியல் பகுதி அவர்கள் பாடத்தில் இருப்பதாலும் அவர்களுக்கு அது சாத்தியமாகிறது. அதற்காக அவர்கள் நாடும் நாட்டார் வழக்காற்றியல் துறை ஆய்வுகளையோ அல்லது அந்தப்புலத்தையோ சாடுவதில் எந்தவித அர்த்தமுமில்லை. மேலும் ஒவ்வொரு புலத்தின் தனித்தன்மையையும் உள்வாங்கிக்கொண்டு, எல்லாத்துறைகளையும் ஏற்றுக்கொண்டு. பண்பாட்டுத்தளத்தில் செயல்படும் தனிப்பெரும்துறையாக வளர்ந்த இந்தப்புலத்தை (Folklore) துணைப்பாடமாகக் கூடக்கொள்வதற்கு தகுதியில்லை என்பது எப்படி உண்மையான வாதமாக இருக்க முடியும்? இதற்குப் பதில் அ. ராமசாமி ஆய்வுகளை இப்படிச் செய்யலாம், இது முறையானது இது வரைமுறைக்குட்பட்டது என்ற எண்ணத்தைத் தெரிவித்திருக்கலாம் அதிக பட்சமாக நாடகத்தைப் பற்றிய ஆய்வுகளை குறைவு; ஆய்வாளர்கள் நாடகங்களைப் பற்றிய ஆய்வினைத் தொடருங்கள் என்றாவது அறிவுறுத்தியிருக்கலாம். தன் மேல் குற்றத்தை வைத்துக்கொண்டு அடுத்தவரைச் சாடுவது எந்தவிதத்திலும் தன்னை நியாயப்படுத்திக்கொள்ளும் செயலாக இருக்க முடியாது. பேராசிரியர் பணியாற்றும் அ. ராமசாமி, நாட்டார் வழக்காற்றியல் புலத்தினை மதிப்புக்குறையப் பேசியிருப்பது வருந்தத்தக்கச் செயல். இவரது இத்தகைய அவசரமான அலங்கோலம் உண்மையான பல ஆய்வுகள் வர இருப்பதையும் பின்னடைவு செய்யவே செய்யும். இதற்கு அ. ராமசாமி கண்டிப்பாக மனதளவில் தான் எழுதியதை தானே சற்று சிந்தித்துப் பார்ப்பது அவசியம்.

சி. ஜஸ்டின் செல்வராஜ்,
முதுகலை நாட்டார்
வழக்காற்றியல் மாணவன்

சுடிதாரில் பாக்கெட் தைப்பது அவசியம்

தற்போது பெரும்பாலான பள்ளி, கல்லூரி மாணவிகள் சுடிதார் அணிந்து செல்கின்றனர். சுடிதார் பெண்களுக்கு சவுகரியமான மேலும் பொதுவாழ்வில் அவர்கள் கலக்கவும் முன்னேறவும் உதவக்கூடிய உடை சுடிதார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

ஆனால் பெரும்பாலான பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு போகும் பெண்கள் தங்களது சுடிதாரில் பாக்கெட் (பை) வைத்திருக்கவில்லை. அவ்வாறு அவர்கள் பை வைத்து சுடிதார் அணிவது அவர்களின் முன்னேற்றத்திற்கு மேலும் ஒரு படி உதவும் என்பதே எமது விருப்பம்.

பள்ளி, கல்லூரி மாணவிகள் பேனா, சில்லரை மணிபர்ஸ், கைக்குட்டை முதலியவற்றை கையிலே வைத்துக் கொண்டு, சைக்கிள் ஓட்டுகின்றனர். மற்றும் பேருந்தில் பயணிக்கின்றனர். இவ்வாறு ஒரு கையில் வைத்துக் கொண்டு சைக்கிள் ஓட்டும்போது பல விபத்துக்களை பார்த்துள்ளேன். பேருந்தில் ஏறும்போதும், நிற்கும்போதும் தடுமாறுகின்றனர். ஏனென்றால் ஏற்கனவே புத்தக மூட்டை சுமை வேறு உள்ளது. ஒரு சிலர் பையில் வைத்தாலும் பேருந்திலும் கூட்ட நெரிசலில் பணத்தை பையில் இருந்து எடுக்க மிகுந்த சிரமப்படுகின்றனர். மேலும் இதன் மூலம் விபத்துகளம் பொருளிழப்புகளும் ஏற்படுகின்றனர்.

சிலர் சிறு வயதில் சுடிதாரில் பை வைத்து தைத்து போடுகின்றனர். (ஆரம்பபள்ளி மாணவர்கள்) பின்னர் வயது ஏற, ஏற, அவுட் ஆஃப் பேஷன் என்ற பெயரில் சுடிதாரில் பை வைத்து தைப்பதை விட்டு விடுகின்றனர்.

பெரியார் சொன்னது போல மாணவிகளும், மாணவர்களைப்போல உடை, தலைமுடி வெட்டுதல் அளவிற்கு எட்டாவிட்டாலும். ஜிப்பாவில் உள்ளது போல் ஒரு பை வைத்து தைத்தால், சில அசௌகரியங்களை தவிர்க்கவும், சில விபத்துக்களை தவிர்க்கவும், அவர்களுடைய உடமைகளை அவர்கள் உடலை ஒட்டி வைத்து பாதுகாக்கவும் உதவும்.

கே. சுரேஷ்குமார், சிதம்பரம்.

சேரனும் சோரனும்

தமிழ் சினிமாவில் கடுமையான வறட்சி இருந்த காலத்தில் கூட "ஆட்டோகிராப்' சக்கைபோடு போட்டது. நல்ல கதை, நேர்த்தியான திரைக்கதை, வசனம் கொண்ட "தவமாய் தவமிருந்து' திரைப்படத்தை பாராட்டாத இதழ்களே கிடையாது. நம் இளம் இயக்குனர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது திறமையைத்தான். குறுக்கு வழி முயற்சியை அல்ல.

சாதாரணர்களின் உணர்ச்சிகளை கௌரவப்படுத்தும் படியாக இன்றைய திரைப்படங்கள் இருக்க வேண்டும் என்பதைத்தான் ரசிகர்களும், பார்வையாளர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

"ஆணுக்கு மீசை மூஞ்சியில, பெண்ணுக்கும் மீசை இருக்கு' என்று தொடையை தட்டி காண்பிப்பதும், "குட்டி ரேவதியா, அவ மூஞ்சியும், அவ ஆளும்...! என்றெல்லாம் கேவலமான வசனங்களை சேர்ப்பதால் படத்திற்கு பணம் செலவு செய்யாமலே விளம்பரம் கிடைக்குமென்ற பிற்போக்கு தனங்களை கைவிட்டு இன்றைய இயக்குனர்கள் ஈகோகளை விடுத்து சேரனை ஒரு முறை திரும்பி பார்க்க வேண்டும்.

எஸ். மைக்கேல் ஜீவநேசன், சென்னை.

தொலைந்த இடத்தில் தேடுங்கள்

"நாட்டுப்புற இலக்கியங்களைச் சுற்றி' என்ற இருமையான தலைப்பின் கீழ் காத்திரமான விமர்சனங்களை முன் வைக்கும் பேரா.அ.இராமசாமியின் கட்டுரையைப் புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல்களையொட்டி, சில முக்கியமான விசயங்களைப் பகிர்ந்து கொள்ள எண்ணுகின்றோம்.

தீம்தரிகிட இதழில் ஆறுபக்கங்கள் நீடிக்கின்ற அக்கட்டுரையை “நாட்டுப்புறவியல் (துறை) தமிழ்த்துறையை துடைத்து எறிந்துவிட்டதாக' வருத்தப்படுவதுடன் முடிக்கின்றார். இக்கட்டுரையை வாசிப்பவர்களுக்கு இது இரு துறைகளுக்கு இடையிலான பிரச்சினை என்ற மாயை தோன்றக் கூடும். ஆகவே, அதற்கு முன்னதாக, நாம் ஒரு சில தெளிவுகளைப் பெற்றுக் கொள்வது உண்மை நிலையினைத் தெற்றென விளங்க வைக்கும்.

தமிழ் இலக்கியம் என்கிற இளங்கலை, முதுகலைப் பாடத்திட்டத்தில் நாட்டுப்புறவியல் ஒரு பாடமாக (துணைப் பாடமாக) வைக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டைத் தூய சவேரியார் கல்லூரி, மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் ஆகிய இடங்களில் (மட்டும்) நாட்டார் வழக்காற்றியலுக்கென்று தனித்தத் துறைகள் இயங்கி வருகின்றன. இவை அனைவரும் அறிந்தவை. பேரா.அ.இராமசாமி, தமது கட்டுரையில், நாட்டுப்புறவியல் பாடத்தையும், துறையையும் வெவ்வேறாக விளங்கிக் கொள்ளாமல் குழப்பிக் கொள்கிறார். தமிழ்த் துறையில், தமிழ்த்துறைப் பேராசிரியர்களின் வழி நடத்துதலில், தமிழ்த்துறை மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான நாட்டுப்புறவியல் ஆய்வுகள், தமிழ்த் துறையே துடைத்தெறிந்துவிட்டதாகப் புரிந்து கொள்வதுதான் சரியாக இருக்கும். 1987 களுக்கு முனபு நாட்டார் வழக்காற்றியில் துறை இல்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்த்துறையில் மேற்கொள்ளப்பட்ட நாட்டுப்புறவியல் ஆய்வுகள் தரத்தில் மலிவடைந்ததற்கு பேரா.அ.இராமசாமி முன்வைக்கும் காரணங்கள் மிக முக்கியமானவை.

1. அத்தகைய நாட்டுப்புற ஆய்வுகளின் சாதாரணநிலை.
2. அத்தகைய ஆய்வுகளில் எடுத்துக்கொள்ளப்பட்ட எளிமையான, சிக்கல்கள் இல்லாத ஆய்வுப் பொருள்.
3. பட்டங்களை மட்டுமே மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் M.Phil.,/Phd., ஆய்வுகள்
4. "தமிழ் இலக்கியம் கற்கும் மாணவர்களிடம் ஒரு கவிதையை, ஒரு சிறுகதையை அல்லது புனைகதையை, நாடகத்தை இரசிக்கும்படியான நுட்பங்களைக் கற்றுத் தருவது கூடச் சிக்கலாக' மாறிய நிலை.
5. "நாட்டுப்புறவியல் என்னும் துறையே சமூக மாற்றக் கருவி எனக் கருதியதின் பின்விளைவுகளாக எல்லாவற்றிலும் சமூக மாற்றம் எனத் தொடங்கி எதையும் கற்றுக் கொள்ளாமல் தொலைந்துபோன' இலக்கியக் கல்வி.

தமிழ்த்துறையில் நேர்ந்துவிட்ட இந்த அவலத்தை தமிழ்த்துறைப் பேராசிரியர் ஒருவரே (அ.இராமசாமி) அம்பலப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.

இதனையொட்டி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தமிழ்த்துறைகளில் மேற்கொள்ளப்படும் நாட்டுப்புறவியல் ஆய்வுகள் தொடர்பாக ஒரு புது விதியினை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தமிழ்த்துறை பேராசிரியர்களின் மேற்பார்வையில், தமிழ்த்துறை மாணவர்கள் நாட்டுப்புறவியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் பட்சத்தில். அத்தகைய ஆய்வுகள், நாட்டார் வழக்காற்றியல் பேராசிரியர் ஒருவரை துணை மேற்பார்வையாளராகக் (Co-Guide) கொண்டுதான் மேற்கொள்ளப்பட வேண்டும். இத்தகைய ஒரு விதியை ம.சு. பல்கலைக்கழகம் ஏற்படுத்தியபோது, அப்பல்கலைக் கழக நிர்வாகத்தின் கீழ் வருகின்ற தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் கொதித்துக் கிளம்பிய நிகழ்வு அ. இராமசாமிக்கு நிச்சயம் தெரியும். நாட்டார் வழக்காற்றியல் தொடர்பான ஆய்வுகளை வழிநடத்த தங்களுக்குத் தகுதியில்லையா?' என்று தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் கேட்ட கேள்வி எவ்வளவு அபத்தமானது என்பதை அன்று பலரும் உணரவில்லை.

மேலும், இன்னொரு விசயத்தையும் நாம் யோசிக்க வேண்டும். இலக்கிய ஆய்வுகள் குறுகிய வட்டங்களுக்குள் சிக்குண்டு போனதை உணர்ந்து கொண்ட பலர் இலக்கியத் துறைகளை பண்பாட்டுத் துறைகளாக மாற்றும் முயற்சியில் "தமிழியல் துறை' என்கிற பெயரில் ஒரு துறையினை ஏற்படுத்தினர். இதன் பொருள் தமிழ்ப்பண்பாடு குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் தமிழ் ஆய்வுப்பரப்பை விரிவுபடுத்துவது. உலகளவில் இலக்கியம் பண்பாடு போன்றவற்றில் ஏற்பட்ட சிந்தனை மாற்றங்கள் இத்தகைய நிலைக்கு இட்டுச் சென்றதாக நாம் விளங்கிக் கொள்ளலாம்.

தமிழியல் தமிழ்ப்பண்பாட்டு ஆய்வுகள் என்று சொல்லும்போது, மானிடவியல், சமூகவியல், வரலாறு, மொழியியல், நாட்டார் வழக்காற்றியல் போன்ற துறைகளோடு ஊடாடுகின்ற பல்துறைப் புலமாக அது உருவெடுக்க வேண்டும் என்கிற பொருளில்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த இடத்தில் தமிழ்த்துறை ஆசிரியர்கள், ஆய்வாளர்களுக்கு நீண்ட நெடுங்காலமாக ஒரு நோய் இருந்து வருவதைச் சுட்டிக்காட்ட வேண்டும். அதாவது, தமிழ் இலக்கியம் கற்ற அவர்கள்தான், மானிடவியல், சமூகவியல், சமூக மானிடவியல், நாட்டார் வழக்காற்றியல் என்கிற எல்லாவிதமான ஆய்வுகளையும் மேற்கொள்ளக்கூடிய பொறுப்புடைய ஆய்வாளர்கள் என்று எண்ணி அக்கற்பனையில் ஊறிப்போயுள்ளனர். இந்த நோய் அ. இராமசாமி பணிபுரியும் ம.சு. பல்கலைக்கழகத் தமிழியல் துறையையும் விடவில்லை. தமிழ் இலக்கியம் பயின்றவர்கள்தான் நாட்டுப்புறவியல் பேராசிரியர்களாக, நாடகத்துறைப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். (அ. இராமசாமி உள்பட), நாடகத் துறையில் பயின்றவரைவிட, தமிழ் இலக்கியம் பயின்றவர்களே சரியான நாடகத்துறைப் பேராசிரியராக இருக்க முடியும் என்பது எந்த உலகத்து நியாயமோ தெரியவில்லை.

மானிடவியல், சமூகவியல் போன்ற துறைகளுக்கு இல்லாத "கவர்ச்சி' நாட்டார் வழக்காற்றியலுக்கு ஊட்டப்பட்டதால் அல்லது இருந்ததால் அது பரவலாக, தனக்கான தனி முத்திரையைப் பதிக்கத் துவங்கியது. ஒரு சில தமிழ்ப்பேராசிரியர்களின் இடைவிடாத முயற்சியினால், ஈடுபாட்டினால் நாட்டார் வழக்காற்றியல் துறை தனித்ததொரு கல்விப்புலமாக உருவெடுத்து, நிலைபெற்றுவிட்ட வேளையிலும், தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் அத்தனை பேரும் அதனை விட்டேனா பார் என்று கங்கணம் கட்டிச் செயல்படுவதாகவே எண்ணத் தோன்றுகிறது.

நாட்டுப்புறவியல் / நாட்டார் வழக்காற்றியல் துறையின் மீது தவறுதலாகக் குற்றச்சாட்டை வைக்கின்ற அ. இராமசாமி. அவர் சார்ந்த தமிழ்த்துறையை ("தமிழக அளவில்') கேள்வி கேட்பது மிகச் சரியாக இருக்கும். அவருக்காக நாம் சில கேள்விகளைக்கூட பரிந்துரை செய்யலாம்.

1. தமிழ் இலக்கியம் மட்டுமே பயின்ற பேராசிரியர்கள் தமிழ்ப்பண்பாடு சார்ந்த மானிடவியல், சமூகவியல், சமூக மானிடவியல், நாட்டார் வழக்காற்றியல் போன்ற பிற துறை ஆய்வுகளை மேற்கொள்வதற்கோ, வழிநடத்துவதற்கோ தாங்கள் தகுதியற்றவர்கள் என்பதை உணராதது ஏன்?

2. தமிழ் இலக்கியக் கல்வியை, தமிழியல் கல்வியாக பண்பாட்டுக் கல்வியாக வளர்த்தெடுக்கும் பட்சத்தில் தமிழ் இலக்கியம் மட்டுமே பயின்றவர்களை விடுத்து, மானிடவியல், சமூகவியல், வரலாறு, மொழியியல், நாடகம், இசை, நாட்டார் வழக்காற்றியல் போன்ற அந்தந்த துறை வல்லுநர்களை கல்விப்புலப் பணியாளர்களாக நியமிக்க முன்வராத மூத்த பேராசிரியர்களையும், அறிஞர்களையும் என்ன செய்யலாம்?

3. தமிழ் இலக்கியக் கல்வி என்பதன் கீழ் வருகின்ற "துணைப் பாடங்களான' நாட்டார் வழக்காற்றியல், மானிடவியல், சமூகவியல், தகவல் தொடர்பியல், நாடகம், இசை போன்றவற்றைக் கற்பிக்க அந்தந்தத் துறையில் கல்வியும் பயிற்சியும் பெற்றவர்களையே நியமிக்க முன்வராததற்கு என்ன காரணம்?

4. தமிழ் இலக்கியத் துறையின் கீழ் செய்யப்பட்டுள்ள பண்பாட்டு ஆய்வுகளையும் இலக்கிய ஆய்வுகளையும் மறுபரிசீலனை/மறுவாசிப்பு செய்ய அ. இராமசாமி போன்ற புரட்சியாளர்கள் ஏன் முயற்சிக்கக் கூடாது?
போன்ற விவாதத் தளங்களின் ஊடே யோசிப்பதுதான் தமிழ்த்துறையைக் காப்பாற்றும் முயற்சியாக அமையும். அது மட்டுமல்லாமல் மேற்கண்ட விவாதப்புள்ளிகளே தமிழ்த்துறையினரின் எதேச்சதிகாரத்தை வெளிப்படுத்தும் என்பதையும் அ. இராமசாமி புரிந்துகொள்ள முடியும்.

எனவே அவர் தனது குற்றச்சாட்டுகளைத் தனது துறையின் மீதும். அதில் கற்பிக்கப்படுகின்ற நாட்டுப்புறவியல் பாடத்தின் மீதும், தம் துறையில் (தமிழ்த்துறை) மேற்கொள்ளப்பட்டுவரும் நாட்டுப்புறவியல் ஆய்வுகள் மீதும் எழுப்புவதுதான் இத்தருணத்தில் ஏற்புடையதாக இருக்க முடியும். அதை விடுத்து, தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு கவிதை, சிறுகதையின் நுட்பங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் போனதற்கும், அதனைத் தம்மால், (அதாவது தமிழ்ப் பேராசிரியர்களால்) கற்றுக்கொடுக்க முடியாமைக்கும், தமிழ் இலக்கிய மாணவர்கள் எதையும் கற்றுக்கொள்ளாமல் சீரழிந்து போனதற்கும் நாட்டார் வழக்காற்றியல் துறை என்ன செய்ய முடியும்? ஒரு துறையில் முழுமையான கல்வியறிவும் முறையான பயிற்சியும் பெறாதவர்கள் எவ்வாறு அத்துறையில் கற்பிக்கவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும், வழிநடத்தவும் முடிகிறது?

கொ. மாடசாமி, மணக்கரை.

மின்வாரியத்திடம் கேபிள் டி.வி

"தீம்தரிகிட' பிப்ரவரி 2006 இதழ் தலையங்கம் "மின்வாரியத்திடம் கேபிள் டி.வி.யை கொடுங்கள்' படித்தேன். கேபிள் டி.வி. விநியோக அமைப்பு களை அரசுடைமையாக்கி சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. (Art.246,List I, Entry 31) மத்திய பட்டியலில் தான் இது உள்ளது. பிறகு ஏன் இச்சட்டம்? 2001 தமிழக சட்டமன்றத் தேர்தல் பதில் அளிக்கிறது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, இரண்டு தொகுதி களுக்கு மேல் வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தால், அனைத்தும் செல்லாததாகி விடும். இதனை அறிந்தும் தன்னுடைய மனுக்கள் நிராகரிக்கப் பட்டதற்கு தி.மு.க.தான் காரணம் என்று கூறியவர் ஜெயலலிதா. அதேபோல், இச்சட்டத்தை நீதிமன்றம் நிராகரித்து விடும். அப்பொழுது, தி.மு.க. தன்னுடைய குடும்பச் சொத்தைக் காப்பதற்காக, என்னுடைய நல்ல முயற்சியை சீர் குலைத்து விட்டது என்று, உண்மைக்குப் புறம்பான பிரசாரத்தை மேற்கொள்ள ஜெயலலிதா விரும்புகிறார். ஆகவே, இது முற்றிலும் அரசியல் கண்ணோட்டத்துடன் எடுக்கப் பட்ட நடவடிக்கையே. இதனைப் பற்றியும் தலையங்கம் கூறியிருக்க வேண்டும். தி.மு.க. எதிர்ப்பு என்ற கண்ணாடியை அணிந்துள்ள ஆசிரியரிடம் இதனை எதிர்பார்க்க இயலாது. அ.தி.மு.க. ஆதரவு கேபிள் டி.வி. விநியோக அமைப்புகள் விஷயத்தில் தமிழக அரசின் கவனம் திரும்பவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. மேலும், இச்சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்ட முறையும் சரியானதல்ல.ஆனால், மாநில அரசிற்கு இத்துறையில் சட்டம் இயற்ற சட்டத்திருத்தம் கொண்டு வர அனைத்துக் கட்சிகளும் முன்வர வேண்டும். முறையாக, நேர்மையாக சட்டம் அமைய வேண்டும்.

தலையங்கத்தில் கூறப்பட்டுள்ள மற்ற ஆலோசனைகள் வரவேற்கத்தக்கவை.

வ.லோ. சந்தோஷ், ஈரோடு 638 011.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com