KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: [email protected]
hotmail.com
யாருக்கு ஓட்டுப் போடுவது?: ஞாநி

திசைகளின் வாசல்:
அ. ராமசாமி


ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்!:
ச. தமிழ்ச்செல்வன்

பெண்மையின் மறுவார்ப்புகள்: வெ.வசந்தி தேவி

மனிதன் கேள்வி - பதில்கள் 1

மனிதன் கேள்வி - பதில்கள் 2

மனிதன் கேள்வி - பதில்கள் 3

மனிதன் கேள்வி - பதில்கள் 4

மகிழ்ச்சியானதா மணவாழ்க்கை?: எம். சுரேந்திரன்

செக்ஸ்: தி.மு? தி.பி? - என் கருத்து - ஞாநி

காவி நிலம்: வசுமித்ர

நிராதரவானவன்: தா. சந்திரன்

மக்கள் மன்றம்

புலம்பெயர்கிறோம்

அலமாரி

sex
ஞாநி

செக்ஸ் : தி.மு? தி.பி? - என் கருத்து

திருமணத்துக்கு முன்பே உடலுறவு வைத்துக் கொள்ளலாமா, திருமணத்துக்குப் பின்புதான் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டுமா என்ற இந்த விவாதத்தை (இப்போதைக்கு) முடித்து வைக்கும் முயற்சியே இந்தக் கட்டுரை. மற்றபடி இந்த விவாதம் நமது சமூகச் சூழலில் மீண்டும் மீண்டும் தொடரக் கூடியதேயாகும். தொடர வேண்டியதும் ஆகும். கடந்த நான்காண்டுகளில் தீம்தரிகிட இதழில் வெளியான வேறு எந்த அரசியல், சமூகக் கருத்து பற்றிய விவாதமும் இந்த அளவுக்கு உணர்ச்சி X அறிவு முரண்பாட்டை வெளிப்படுத்தவில்லை.

நமது சமூகத்தில் செக்ஸ் பற்றி காலம் காலமாக இருந்து வரும் பயம், ஆர்வம், போலித்தனம், ஒழுக்கம் சார்ந்த கவலை எல்லாமாகச் சேர்ந்து இந்த முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்துகின்றன.

திருமணத்துக்கு முன்பா, பின்பா என்பதில் முதலில் ஆராயப் படவேண்டியது திருமணம் என்ற கருத்துதான். மனிதர்கள் சமுதாயமாகச் சேர்ந்து வாழத் தொடங்கிய பிறகு பொது நலனுக்காக என்று நம்பி உருவாக்கிக் கொண்ட பல ஏற்பாடுகளில் திருமணமும் ஒன்று. குடும்பம் என்ற அமைப்பைக் கட்டிக் காப்பாற்ற தேவைப்படும் இன்னொரு அமைப்பே திருமணம்.

திருமணம் என்ற வடிவம் இல்லாமல் குடும்பம் என்ற அமைப்பு இருக்க முடியுமா என்ற கேள்வி தொடர்ந்து சமூக சிந்தனையாளர்களை தொல்லை செய்து வருகிறது. திருமணம் என்ற சடங்கு இல்லாமல் குடும்பமாக இருவரோ, பலரோ வாழ முடியுமா? நவீன உலகத்தில் எல்லா நாட்டின் சட்ட திட்டங்களும் இதற்கு உடன்பாடாக இல்லை. இருவரைக் குடும்பமாகக் கருத வேன்டுமென்றால், அவர்களுக்கிடையே திருமணம் நடந்திருக்க வேண்டும் என்றே எல்லா தேசச் சட்டங்களும் சொல்லுகின்றன. அதனால்தான் தன்பால் விழைவு அடிப்படையிலான ஹோமோசெக்ஸுவல், லெஸ்பியன் ஜோடிகள் கூட வெளிநாடுகளில் சட்டப்படி திருமணம் செய்வதை உரிமையாகக் கோருகிறார்கள்.

எனவே திருமணம் என்பது சட்டப்படியான பாதுகாப்புக்கான வடிவம். யாரிடமிருந்து யாருக்கு பாதுகாப்பு? ஒன்றாக சேர்ந்து வாழ முடிவு செய்திருப்பவர்களை ஒருத்தருக்கொருத்தரிடமிருந்து பாதுகாக்க வேண்டியிருப்பது எவ்வளவு அபத்தமானது! ஆனால் அதைத்தான் திருமண சடங்கின் மூலம் அதற்கு அளித்திருக்கும் சட்ட வடிவத்தின் மூலம் நாம் நீண்ட காலமாக செய்ய முயற்சித்து வருகிறோம். பரஸ்பரம் மெய்யான அன்பு இருப்பவர்களுக்கு இந்தப் பாதுகாப்பு ஏற்பாடு தேவை யில்லை.

ஆனால் திருமணம் என்பது பரஸ்பர அன்பின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்படுவது இல்லை. ஒன்றாகச் சேர்ந்து வாழ்வதில் இருவருக்கும் கிடைக்கும் சில வசதிகளுக்காக மட்டுமே அந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆணுக்கு சமைத்துப் போடவும் துணி துவைக்கவும் கவனித்துக் கொள்ளவும் ஒரு நிரந்தர வேலைக்காரி. பெண்ணுக்கு பொருள் சம்பாதித்து வந்து தர ஒரு வேலையாள். இருவருக்கும் உடல் பசிக்கு உத்தரவாதமான பாதுகாப்பான தீனி. பிறக்கும் குழந்தைகளுக்கு உத்தரவாதமான பராமரிப்பு. இந்த எளிய அடிப்படைகள் மட்டுமே திருமண ஏற்பாட்டின் ஆதாரங்களாக ரொம்ப காலமாக இருந்து வருகின்றன. பரஸ்பர அன்பு என்பது மேற்படி வசதிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, திருமணத்துக்குப் பிறகு வளர்த்துக் கொள்ளவேண்டிய அம்சமாகவே சொல்லப்பட்டு வந்திருக்கிறது. திருமணத்துக்கு முன்பு பரஸ்பர அன்பு இருந்திருந்தால் அது காதல் என்று பெயர் சூட்ட்ப்பட்டு தகாத ஒழுக்கமாக ஆக்கப்பட்டுவிட்டது. காதலை திருமணத்துக்கு முன்பு இருக்க வேண்டிய அடிப்படைத் தேவையாகக் கருதிய சமூகங்கள் நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ சமூக அமைப்புகளுக்கும் முந்தைய சமூகங்கள் மட்டும்தான்.

தமிழ்ச் சூழலில் பெரியார் ஒருவர் மட்டுமே திருமணம், குடும்ப முறை, காதல், கற்பு அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கியவர். திருமணம் என்ற ஏற்பாடே இல்லாமல் போய் விடும் காலம் வரும் என்றும், ஆண் - பெண் உறவு என்பது இன்பத்துக்காகவே என்றும் தன் காலத்துக்கு மிஞ்சிய கருத்துக்களை முன்வைத்த அவரை சில பெரியாரிஸ்ட்டுகள் கற்புக்கு காவலராக ஆக்கப் பார்ப்பது புதிய பார்ப்பனியமேயன்றி வேறல்ல.

திருமணத்துக்கு முன்பு செக்ஸ் என்பதில், அடுத்து ஆராயப்பட வேண்டியது செக்ஸ். பாலுறவின் நோக்கம் என்ன? குழந்தை பெறுவது, அதன் மூலம் மனித இனம் அழியாமல் பாதுகாப்பது என்பவை மட்டுமே செக்சின் நோக்கங்களாக இருக்க வேண்டும் என்று ஒரு கருத்து எப்போதும் இருந்து வருகிறது. இதை எல்லா மதங்களும் ஆதரிக்கின்றன. இந்த வாதத்தின்படி மனிதர்கள் உணவு உண்ணுவதன் நோக்கமும் உயிர் வாழ்வதற்காக மட்டுமே என்று இருக்க வேண்டும். உண்ணுவதில் இன்பம் காணவும் உணவில் ருசி என்பதற்கும் இடம் இருக்க முடியாது. ஆனால் நடைமுறையில் எப்படி உணவின் ருசி முக்கியமான அம்சமாக இருக்கிறதோ, அதே போல பாலுறவின் இன்பமும் முக்கியமான அம்சமாகவே உள்ளது. குழந்தை பெறுவது மட்டுமே நோக்கமென்றால், பல திருமணங்கள் செக்ஸ் இயைபின்மையால் முறிந்திருக்கவே முடியாது.

செக்சின் நோக்கங்களில் இன்பம் என்பது(ம்) முக்கியமானது என்பதை யாராலும் நிராகரிக்க முடியாது.

அப்படியானால், இந்த இன்பத்தை அனுபவிப்பதற்கான உரிமையை திருமணம் செய்த பிறகுதான் அடைய முடியும் என்று ஏன் நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது?

குழந்தைக்கு பல் முளைத்ததும் திட உணவுகள் சாப்பிடும் தகுதி வந்துவிட்டது என்று கூறி சோறு, ரொட்டி என்று இதர உணவுகளை அறிமுகப்படுத்தும் வழக்கம் உடைய சமூகம் ஏன், அதே போல செக்ஸ் உறவு கொள்வதற்கான உடல் பக்குவம் வந்த பிறகும் செக்சைத் தவிர்க்கச் சொல்கிறது?

இரண்டு காரணங்கள் சொல்லப் படுகின்றன. சுமார் 12,13 வயதில் (இப்போது இது மெல்ல 10 ஆகி வருகிறது) உடலின் செக்ஸ் உறுப்புகள், சுரப்புகள் தயார் நிலைக்கு வந்து விட்டாலும், மனம், அறிவு, சிந்தனை பக்குவமடையவில்லை. மனப்பக்குவம் வராமல் பாலுறவு கொள்வது ஆபத்தானது என்ற கருத்து ஒரு காரணம்.

இரண்டாவது காரணம் திருமணமாகாமல் கொண்ட உறவில் குழந்தைகள் பிறந்து விட்டால், அந்தக் குழந்தைகளுக்கு யார் பொறுப்பேற்பது என்ற சிக்கலாகும்.

இரண்டாவது சிக்கல் அறிவியலின் உதவியால் எல்லா காலங்களிலும் தவிர்க்கப் படக்கூடிய சிக்கலாகவே இருந்திருக்கிறது. கருவுறாமல் தடுப்பதற்கான வழிகள் பழைய மருத்துவ முறைகள் முதல் நவீன மருத்துவம் வரை எல்லாவற்றிலும் விரிவாக உள்ளன.

எனவே முதல் காரணம் மட்டுமே நம் கவனத்துக்குரியது. மனப் பக்குவம் ஏற்படும் வயது எது? முதிர்ந்த கிழம் கட்டைகளுக்கெல்லாம் ஆன்மிக வழிகாட்டியாக பத்து வயது குட்டி சாமியார் இருக்க முடியுமென்பதை ஏற்கிறவர்கள், அதே வயதில் செக்ஸ் உறவுக்கான மனப்பக்குவம் வேறொரு பத்து வயது சிறுமிக்கு ஏற்பட்டுவிட முடியும் என்பதையும் ஏற்றுக் கொண்டுதான் தீர வேண்டும். அல்லது இரண்டையும் அறிவுப் பூர்வமாக நிராகரிக்க வேண்டும்.

பொதுவாக, சுயமாக சிந்தித்து செயல்படும் அறிவு 18வது வயதில் ஒருவருக்கு ஏற்பட்டுவிடுவதாக உலகத்தின் எல்லா நாடுகளின் நவீன சட்டங்களும் அங்கீகரிக்கின்றன. தேர்தல்களில் வாக்களிப்பதற்கான வயதாகவும், பாதுகாப்புக்குரிய மைனர் நிலை முடியும் வயதாகவும் அது கருதப்படுகிறது. எனவே மனப் பக்குவம் உடைய 18 வயதில் ஒருவர் பாலுறவு கொள்வதை தர்க்க ரீதியாக ஆட்சேபிக்கவே முடியாது.

உடல், மனப் பக்குவங்கள் வந்தபிறகும், திருமணம் செய்யாமல் பாலுறவு கூடாது என்பது இயற்கைக்கு விரோதமானது. செயற்கையானது. ஆனாலும் இது வலியுறுத்தப் படுவதற்கு ஒரு காரணம் முன்பே பார்த்தது போல குடும்ப அமைப்பு சிதைந்துவிடும் என்ற அச்சமாகும்.

அதை விட முக்கியமான இரன்டாவது காரணம், பெண்களைப் பற்றிய நமது சமூகத்தின் பார்வை தான். பெண் உடல் யாருக்கு சொந்தம் என்ற கேள்வியை முன்வைத்து பதிலைத் தேடினால் இந்த பார்வைக் கோளாறைப் புரிந்து கொள்ள முடியும்.

பெண்ணின் உடல் ஆணுக்கு சொந்தமானது என்பதே நமது சமூகப் பார்வை. அவளுடைய மனமும் மூளையும் கூட ஆணுக்கு உரியவை என்றே கருதினாலும், அந்த ஓனர் ஷிப்பை நடைமுறைப்படுத்துவது நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது. ஆனால், பெண் உடல் மீதான ஆணின் ஓனர்ஷிப்பை செயல்படுத்துவதில் அவ்வளவு சிரமமில்லை. நேரடி வன்முறையின் மூலம் இது சாதிக்கப்படுவதை பல சந்தர்ப்பங்களில் பார்க்கிறோம்.

நேரடி வன்முறை இல்லாமல் பெண்ணின் உடலை ஆணின் உரிமைப் பொருளாக ஆக்க உதவும் சடங்கே திருமணம். திருமணத் துக்குப் பிறகு பெண்ணின் உடல் ஆணுக்கு சொந்தமானது போல அந்த ஆணின் உடல் அந்தப் பெண்ணுக்கு உரிமையானது என்ற ‘சமத்துவ’ உரிமைக் கோட்பாடு கூட நடைமுறையில் இல்லை.

பெண் உடலை தன்னுடைய தாக சொந்தம் கொண்டாடும் ஆணிய மனோபாவம்தான், திருமணத்துக்கு முன்பு பாலுறவைக் கண்டு பயப்படுகிறது. அருவெறுப்படைகிறது. கலவரப்படுகிறது.

ஆணின் உடல் ஆணுக்கே சொந்தமானது என்பதைப் போல பெண்ணின் உடல் அவளுக்கே உரிமையுடையது என்ற சமத்துவம் இருக்குமானால், அந்த உடலை தான் எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தீர்மானித்துக் கொள்ளும் உரிமையும் அவளுடையதாகவே இருக்கும். அந்த உரிமை அவளுக்கு தரப்பட்டுவிட்டால், உடனே அவள் எல்லாரோடும் போய் படுத்துக் கொன்டு விடுவாள் என்ற ஆணியத்தின் பயம், பெண்ணை இழிவுபடுத்தும் பார்வையுமாகும்.

ஆண் - பெண் சமத்துவம் குடும்பத்துக்குள் இல்லை என்பது நடைமுறை உண்மை. சில குடும்பங்களில் ஆண்கள் பெண்களிடம் தங்கள் உரிமையை இழந்தவர்களாக இருப்பது என்பது விதிவிலக்கேயன்றி பொது விதியோ, குடும்ப அமைப்பின் அடிப்படையோ அல்ல.

ஆண் சம்பாதிப்பவன்; பெண் வீட்டை பராமரிப்பவள் என்ற பழைய அடிப்படை இன்று பெண் கல்வியாலும், பெண் வெளி வேலைக்கு அதிகமாகச் செல்வதாலும் தகர்ந்து வருகிறது. இது குடும்பம் என்ற அமைப்பையே தகர்த்துவிடுமோ என்ற பயத்தின் இன்னொரு வெளிப்பாடாகவே, செக்ஸ் உறவுகள் பற்றிய பார்வைகளும் அமைகின்றன. குடும்ப அமைப்பை தகர்க்கக்கூடிய பெண் கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றை சமாளிக்கும் வழிகளை ஆணியம் கண்டுபிடித்து செயல்படுத்தி வருகிறது. என்ன படித்தாலும், கமாண்டோ வேலைக்கே போனாலும், வீட்டுப் பராமரிப்பும் குழந்தைப் பராமரிப்பும் பெண்ணுடைய வேலை என்று அது பலமாக நிறுவி வைத்திருக்கிறது. இதை கலாசாரத்தின் பெயரால் அது செய்து வருகிறது.

குடும்பத்தைத் தகர்க்கக்கூடிய இன்னொரு அம்சம் பெண்ணின் பாலுறவுத் தேர்வு. அதாவது தன் உடல் மீது தனக்கே முழு உரிமையும் உடையவளாக பெண் தன்னை நிறுவிக் கொள்ளும் நிலைமை. இதையும் கலாசாரத்தின் பெயரால் தடுக்கவே ஆணியம் தொடர்ந்து முயற்சிக்கும்.

குடும்ப அமைப்புக்குள் ஆண் - பெண் சமத்துவமின்மை நீடிக்கும் வரை, பெண்ணுக்கு தன் உடல் மீதான உரிமை கிட்டப் போவதில்லை. குடும்பத்துக்குள் ஆண் - பெண் சமத்துவம் ஏற்பட்டுவிட்டால், அந்தக் குடும்பம் , இப்போது நாம் காணும் குடும்பமாக இராது. அது வேறு வடிவமாகிவிடும். அந்த சமத்துவத்தை பரஸ்பர அன்பு மட்டுமே ஏற்படுத்த இயலும். இப்போதைக்கு அது நம்முடைய லட்சியக் கனவுகளில் ஒன்றாக இருக்கலாம்.

ஆனால் இன்றைய யதார்த்தம் என்பது என்ன? குடும்பத்துக்குள் ஆண் - பெண் சமத்துவம் இல்லை. பெண்ணுக்கு தன் உடல் மீது உரிமையும் இல்லை. பெண்ணின் உடல் தனக்குச் சொந்தமானது என்ற பார்வையிலேயே ஒவ்வொரு சிறுவனும் வளர்த்து ஆணாக்கப்படுகிறான். இயற்கை இரு பாலாரையும் சுமார் 16 வயதிலேயே வேட்கை கொள்ள வைக்கிறது. யாருடன் எப்படிப்பட்ட உறவு என்பதைத் தீர்மானித்துக் கொள்ளும் மன முதிர்ச்சியைத் தரும் குடும்பச் சூழலும் இல்லை; கல்வி முறையும் இல்லை. மீடியா சூழலும் இல்லை.

இப்படிப்பட்ட சூழலில் இரண்டு விதமான இளைஞர்களே இங்கே உருவாக்கப்படுகிறார்கள். தனக்கு என்ன வேண்டும், தனக்கும் தன் தோழமைக்கும் வலி தராத உறவு என்பது எப்படி இருக்க வேன்டும் என்று அறிவுப் பூர்வமாக சிந்தித்து செயல்படும் ஆற்றல் உடைய இளைஞர்கள் ஒரு வகை. இவர்கள் மிக மிகச் சிறுபான்மையினர். பெரும்பான்மையினருக்கு ரோல் மாடலாக இருக்கும் தகுதி உடைய சிறு கூட்டம் இது. குடும்பத்தாலும், மீடியாவாலும், கல்வி முறையாலும் வார்க்கப்பட்டு மன முதிர்ச்சி ஏற்படாமல் உடல் முதிர்ச்சி மட்டும் ஏற்பட்டு அதன் தேவைகளால் அலைக்கழிக்கப்படும் இளைஞர்கள் இன்னொரு வகை. இதுவே மிகப் பெரும்பான்மையாகும்.

இரு சாராரும் தங்கள் உடல் தேவைகளை சந்திக்க முற்படுவது இயற்கையின் விதி. அதை பாதுகாப்பாகச் செய்யுங்கள் என்று சொல்லுவதே சமூக அறம். மன முதிர்ச்சி வரும்வரை உடலைக் கட்டுப்படுத்துங்கள் என்று உபதேசிப்பது அர்த்தமற்றது. ஏனெனில் உடல் கட்டுப்பாட்டுக்கும் மன முதிர்ச்சி தேவை.

ஆண் பெண் உறவை சமத்துவத்தோடும் ஆரோக்கியமாகவும் பார்ப்பதற்கான மன முதிர்ச்சியைத் தரக்கூடிய சூழலை வீட்டுக்குள்ளும் பாடப் புத்தகங்களிலும் ஏற்படுத்தும் வேலைகளை முடுக்கி விடுவதை ஒரு புறமும், உடனடியான தேவைகளை பாதுகாப்பாக சந்திப்பதற்கான அறிவுரையையும் வசதிகளையும் தருவதை மறுபுறமும் மேற்கொள்வதே அடுத்த தலைமுறையின் எதிர்கால ஆரோக்கியத்துக்கு தேவைப்படுகிறது. ‘அய்யோ. என் குழந்தை பள்ளிக்குப் போகும்போது காண்டோம் எடுத்துச் செல்ல மறக்காதே என்று சொல்லி அனுப்பவா?’ என்று கலாச்சார சாமியாடிகளாக புலம்புவது அபத்தமானது. சொல்லி அனுப்பினால் ஒன்றும் பாவமில்லை. குழந்தைக்கு குண்டி கழுவக் கற்றுக் கொடுத்ததைப் போலத்தான் இதுவும். எத்தனை வயதானாலும் என் குழந்தைக்கு நான்தான் குண்டி கழுவிவிடுவேன் என்பது போன்ற அபத்தமே, (இளைஞர்களாகிவிட்ட தங்கள்) ‘குழந்தைகளின்‘ யோனிக்கும் லிங்கத்துக்கும் கவசமாகக் காலத்துக்கும் இருக்கப் பார்ப்பதுமாகும்.

மற்றபடி திருமண சடங்கின் வடிவம், குடும்ப அமைப்பின் வடிவம் எல்லாம் மாறக்கூடியவை. மாறிக் கொண்டு வருபவை. எனவே மாறிவரும் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு தி.மு., தி.பி என்று இந்தப் பிரச்சினையைப் பார்க்கும் அடிப்படையே தவறானது.

மன முதிர்ச்சிக்கான கல்வி, உடல் தேவையை சந்திப்பதில் பாதுகாப்பு. இந்த இரண்டுமே இன்றைய உடனடி தேவைகள்.