KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: [email protected]
hotmail.com
யாருக்கு ஓட்டுப் போடுவது?: ஞாநி

திசைகளின் வாசல்:
அ. ராமசாமி


ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்!:
ச. தமிழ்ச்செல்வன்

பெண்மையின் மறுவார்ப்புகள்: வெ.வசந்தி தேவி

மனிதன் கேள்வி - பதில்கள் 1

மனிதன் கேள்வி - பதில்கள் 2

மனிதன் கேள்வி - பதில்கள் 3

மனிதன் கேள்வி - பதில்கள் 4

மகிழ்ச்சியானதா மணவாழ்க்கை?: எம். சுரேந்திரன்

செக்ஸ்: தி.மு? தி.பி? - என் கருத்து - ஞாநி

காவி நிலம்: வசுமித்ர

நிராதரவானவன்: தா. சந்திரன்

மக்கள் மன்றம்

புலம்பெயர்கிறோம்

அலமாரி

Tamilselvan
ச. தமிழ்ச்செல்வன்

ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்!
தொழிற்சங்க அனுபவங்கள் - 26

மனைவியை அடிப்பது குடும்ப விஷயம் மட்டுமா?

முதல் வேலை நிறுத்தம் எங்களை முடுக்கிவிட்ட பின்னணியில் ஒரு முப்பது தோழர்கள் எங்கள் வகுப்புகளுக்கு வந்து கொண்டிருந்தனர். முழுநாள் வகுப்பு என்பதும் அப்பகுதிக்கு அறிமுகமில்லாத புது விஷயமாகவே இருந்தது. ஒருமுறை வகுப்பு எடுப்பதில் மன்னரான ஒரு தோழரை வெளியிலிருந்து வரவழைத்திருந்தோம். அஞ்சல் பகுதியில் இப்படி ஒரு வளர்ச்சி இப்படி ஒரு ஏற்பாடா என்று பூரித்துப்போன அவர் காலை 10 மணிக்கு துவங்கிய வகுப்பை மதியம் 2.30 மணி ஆனபிறகும் முடிக்க மனமின்றி ஆவேசத்துடன் தொடர்ந்து கொண்டிருந்தார். இடையில் ஒரு மடக்கு தண்ணி கூடக் குடிக்கவில்லை. அந்த ஒரு வகுப்பிலேயே தோழர்களை புரட்சிக்குத் தயார்படுத்திவிடும் உத்தேசத்துடன் வகுப்பு, காடு, மலை, கடல் வனாந்திரம் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது. மலையேற மறுக்கும் சாமியாடி போல ஆகிவிட்ட அவரை சாந்தப்படுத்த விபூதி போடுவது போல துண்டுச்சீட்டுகளை கொடுத்துக் கொண்டே இருந்தோம். புதிதாக வகுப்புக்கு வந்த தோழர்கள் பாவம் பசி மயக்கத்தில் அவரை வெறித்துப் பார்த்தபடி சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு உட்கார்ந்திருந்தனர். ஒருவழியாக 3 மணிக்கு அவர் யதார்த்த உலகுக்குத் திரும்பினார். "கொஞ்சம் அதிக நேரம் ஆயிடுச்சோ'' என்று. மதிய உணவுக்கு 10 நிமிடம்தான். அடுத்த ஆசிரியர் தயாராக இருந்ததால் 3.15க்கு அடுத்த வகுப்பைத் துவக்கி விட்டோம்.

விக்கிரமசிங்கபுரத்திலிருந்து துரைராஜ் என்று ஒரு போஸ்ட்மேன் அவருடைய வாழ்வில் முதல் முறையாக இப்படியான ஒரு வகுப்புக்கு வந்திருந்தார்.

வகுப்புக்கு மறுநாள் அவர் வேலைக்கு வரவில்லை. சாதாரணமாக நினைத்தோம். அடுத்து மேலும் ஒருவாரம் லீவு போட்டார். ‘என்னான்னு பாத்துட்டு வாங்கய்யா' என்று தோழர்களை அனுப்பியபோது அவர் வீட்டில் இல்லை. தினசரி திருநெல்வேலிக்குப் போய்க் கொண்டிருப்பதாக தகவல் வந்தது. இரவு அவரைப் பார்க்க வீட்டுக்குப் போனோம். இரண்டு காதுகளிலும் பஞ்சு வைத்து அடைத்திருந்தார்.

"வகுப்பு முடிஞ்சி நேத்து ராத்திரி வீடு திரும்பும்போதே காதுக்குள்ளே ஒரு இரைச்சல். நைட்டு நேரம் ஆக ஆக கொட கொடன்னு உள்ளே ஒரு குடைச்சல். சத்தம் அடங்கவே மாட்டேன்னுது. ரெண்டுநாளா காது மூக்கு டாக்டர் கிட்டே போய்க்கிட்டிருக்கேன். இன்னும் சரிவர மாட்டேன்னுது'' என்று பரிதாபமாக முழித்தார். எங்களுக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. சரி உடம்பைப் பாத்துக்கிடுங்க என்று ஆறுதல் சொல்லிவிட்டு வந்து விட்டோம். அவர் சரியாகி வேலைக்குத் திரும்ப மேலும் 15 நாள் ஆகிவிட்டது. அதற்காக நாங்கள் வகுப்பு நடத்துவதை நிறுத்தவுமில்லை. துரைராஜுவும் இயக்கத்தைவிட்டு ஓடிப் போகவும் இல்லை. எல்லா வேலைகளுக்கும் எப்போதும் போல வருவார். வகுப்புகளுக்கு மட்டும் வரமாட்டார். "உடம்புக்கு ஒத்துக்க மாட்டேங்கு விட்டிருங்க'' என்று சொல்லிவிடுவார். தாமிரபரணிக்கரையில் தீரவாசத்தில் அஞ்சலக ஊழியர்கள் வரலாற்றில் அவர்கள் கேட்காத பேச்சுகளையெல்லாம் கேட்க வைத்துக் கொண்டிருந்தோம். இறுகிய செவிகள் இளக்கம் பெற்று விரிந்து கொண்டிருந்தன.

தோழர் ஜெயலட்சுமி தன்னோடு சில பெண் தோழர்களை அழைத்துக் கொண்டு ஊர் ஊராகச் சென்று உழைக்கும் பெண்களை சந்தித்துக் கொண்டிருந்தார். அஞ்சலில் ராஜேஸ்வரி, ஸ்டேட் வங்கி லோகநாயகி, தமிழக அரசு ஊழியர்களான முத்துலட்சுமி, சகுந்தலா என்று ஒரு குழுவே அலைந்து கொண்டிருந்தது. அம்பை வட்டார அளவில் உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து பெரிய மாநாடு ஒன்று நடத்திடத் திட்டமிட்டோம். அப்போதெல்லாம் எங்கள் பொது நிகழ்ச்சிகளுக்கு இடம் தந்து உதவியது தாலுகா ஆபீஸ் பக்கமிருந்த ஒரு பள்ளிக் கூடம். தமுஎச கூட்டம், மகளிர் கூட்டம், அறிவியல் இயக்கக் கூட்டம் என்று மாதம் தவறாமல் அங்கு நிகழ்ச்சிகள் நடத்தத் துவங்கினோம்.

பழைய கம்யூனிஸ்ட்டுகள் நிரம்பிய வட்டாரம் அது. அவர்களில் பலர் எங்கள் கூட்டங்களுக்கு வந்து பார்த்து மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்தனர். அது எங்கள் வேலைகளுக்கு இன்னும் கூடுதல் அர்த்தம் தந்தது.

உழைக்கும் மகளிர் மாநாட்டில் 500க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பீடித் தொழிலாளர்கள் முதல் வங்கி ஊழியர் வரை அனைத்துத் தரப்புப் பெண் உழைப்பாளிகளும் அம்மாநாட்டில் கலந்து கொண்டனர். தோழர் வானமாமலைதான் மதிய உணவுக்குப் பொறுப்பு. மின்வாரிய சிஐடியு தலைவர் தியாகராஜன் முதுகெலும்பாக நின்று இம்மாநாட்டை வழி நடத்திக் கொடுத்தார். தோழர் ஜெயலட்சுமிக்கு உற்ற துணையாக நின்ற தோழர் முத்துலட்சுமிக்கும் என் அருமைத் தோழன் பாலுவுக்கும் திருமணம் செய்து வைக்கும் பூர்வாங்கப் பேச்சுகள் அம்மாநாட்டில் தான் துவங்கியது எனலாம். ரெண்டு மூணு திருமணங்கள் அம்மாநாட்டின் தொடர்ச்சியாக நிச்சயமாகின. அதன் தொடர்ச்சியாக பெண் தலைவர்கள் குழு ஒன்று உருவானது. 15 பேர் இருக்கும். அவர்களுக்கு தனியாக கல்லிடைக்குறிச்சியில் தோழர்கள் டி.வி. சுப்பிரமணியன் - கோமதி வீட்டில் வகுப்புகளும் கூட்டங்களும் நடத்தத் துவங்கினோம். அந்த வீடு எங்கள் இயக்கப்பணிகளுக்கெல்லாம் ஒரு பாசறைபோல மாறியது.

ஆசிரியத் தோழர் இசக்கியம்மாள் தன் கணவரின் அடி பொறுக்க மாட்டாமல் உழைக்கும் மகளிர் குழுவில் வந்து சேர்ந்தார். நானும் தியாகராஜனும் அவருடைய கணவரைப் பார்த்து ரெண்டு மூணு முறை சமாதானமாகப் பேசிப் பார்த்தோம். அடிப்பதை நிறுத்தவில்லை. ஊர்க்கூட்டம் போட்டு அதில் நியாயம் கேட்டுப் பார்த்தோம். ஒன்றும் திருந்துகிற வழியைக் காணோம். இரண்டு குழந்தைகளோடு நிஜமாகவே நித்தம் நித்தம் செத்துப் பிழைத்துக் கொண்டிருந்தார் இசக்கியம்மாள். அவ்வப்போது நடுராத்திரி நேரங்களில் கூட அவர் பிள்ளைகளோடு ஓடிவந்து ஜெயலட்சுமி வீட்டையோ தோழர் கோமதி வீட்டையோ தட்டி அடைக்கலம் கேட்பது அடிக்கடி நடக்கத் துவங்கியது. கணவரைப் பற்றிப் பேச்சை எடுத்தாலே அவருடைய உடம்பே நடுங்கும். மன வியாதியின் ஆரம்பக் கூறுகளோடு வைத்தியம் பார்க்கும் நிலையில் தான் இசக்கியம்மாளை நாங்கள் சந்தித்தோம்.

ஒரு நாள் நானும் தியாகராஜனும் சைக்கிளில் கல்லிடைக் குறிச்சியிலிருந்து அம்பாசமுத்திரம் போய்க் கொண்டிருந்தோம். அப்போது இசக்கியம்மாளின் கணவர் கையில் அருவாளோடு எங்களை நிறுத்தினார். "என் குடும்பம் விசயத்தில் தலையிட உங்களுக்கு என்னய்யா ரைட் இருக்கு'' என்று அரிவாளை ஆட்டி ஆட்டி ஆவேசமாகப் பேசத் துவங்கினார். நான் சமாதானமாக "எப்போ நீங்க அடிக்க ஆரம்பிச்சீங்களோ அப்பவே அது சமூகப் பிரச்னை ஆயிடுச்சு'' என்று பேச ஆரம்பித்தேன். ஆனால் அவர் மேலும் ஆவேசமடைந்து பேசலானார். என்னைப் பேச்சை நிறுத்தச் சொல்லிவிட்டு தியாகராஜன் வேட்டியை வேகமாக மடித்துக் கட்டியபடி "அப்படித்தாய்யா தலையிடுவோம் இப்ப என்ன செய்யணும்கிறே'' என்று அடிக்கப் போவது போல குரலை உயர்த்தியபடி பாய்ந்தார். எனக்குக் கொஞ்சம் பதட்டம்தான். "குண்டாந்தடிகள் தாக்கிய போதும் அஞ்சிடோம் அஞ்சிடோம்'' என்று ஊர்வலத்தில் ஆவேசமாகக் கோஷம் போட்டாலும் நேருக்கு நேராக அரிவாளைச் சந்திக்கும் போது நடுக்கம் வரத்தான் செய்தது. ஆனால் தியாகராஜன் அஞ்சாமல் இறங்கிவிட்டார். உடனே அந்த ஆள் பதுங்கிப் பின் வாங்கி விட்டார்.

நாங்கள் ரெண்டு பேர் அவர் தனிஆள் என்று கணக்குப் போட்டாரோ என்னவோ. இப்ப நான் என்ன சொல்லிட்டேன். எங்க ரெண்டு பேரையும் சேத்து வையுங்கன்னுதான் சொல்றேன். நீங்க படிச்ச ஆளுக ஒரு குடும்பத்தைப் பிரிக்க உதவலாமா. பெண்புத்தி பின் புத்தியில்லையா? அவளுக்கு நீங்க புத்திமதி சொல்ல வேண்டாமா? என்று ஏதோ பேசி விட்டு அந்த இடத்தை விட்டு அகன்றார். அந்த சம்பவம் என்னைப்பற்றி நானே அறிந்து கொள்ள உதவியது. என்ன தத்துவம் படித்தாலும் சவாலை களத்தில் நேரில் சந்திக்காமல் மன தைரியமும் உறுதியும் எந்தத் தோழருக்கும் வந்து சேராது என்கிற பாடம். மீண்டும் மீண்டும் மக்களிடம் வேலை செய்து பல்வேறு பிரச்னைகளை தகராறுகளை விதவிதமான மனிதர்களை மனநிலைகளை சந்திக்காமல் யாரும் புத்தகம் படித்தும் வகுப்புகள் கேட்டும் மட்டுமே ஒரு போராளியாக மாறிவிட முடியாது.

அப்புறம் இசக்கியம்மாள் சார்பில் டைவர்ஸ் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி ஊர்க்கூட்டம் போட்டு தாலியை கழட்டி டைவர்ஸ் வாங்கி விட்டோம். இப்போதும் தோழர் இசக்கியம்மாள் எங்கள் தோழமை வட்டத்தில் உறுதிமிக்க பெண்மணியாக தொடர்ந்து எங்களோடு வந்து கொண்டிருக்கிறார் என்பது தனிக்கதை.