|
புலம்பெயர்கிறோம்
வணக்கம்.
அடுத்த ஆண்டு தீம்தரிகிட இதழின் வெள்ளி விழா ஆண்டு. 1982ல் தொடங்கிய தீம்தரிகிட மூன்று இதழ்களுடன் நின்று போயிற்று. மறுபடியும் 1985ல் ஏழு இதழ்கள் வெளியீட்டுடன் முடங்கியது. இரு முறையும் சுமார் முப்பதாயிரம் பிரதிகளுக்கு மேல் விற்றும் சுழற்சி நிதி இன்மையாலும் சில முகவர்களின் ஏய்ப்பினாலும் இந்த முடக்கங்கள் நிகழ்ந்தன.
பதினேழு ஆண்டுகள் கழித்து 2002 ஏப்ரலில் தற்போதைய தீம்தரிகிட முயற்சி சிறிய அளவில் ஆரம்பமாயிற்று. சுமார் 2000 பிரதிகள் மட்டுமே அச்சிடப்பட்டு தொடர்ந்து கடந்த நான்காண்டுகளாக வெளிவரும் தீம்தரிகிடவின் 51வது இதழ் இது.
இப்போது தீம்தரிகிட இதழ் புலம் பெயர்கிறது. இது வரை அச்சு உலகத்தில் இருந்து வந்த இதழ் இனி இணைய உலகத்துக்கு இடம் பெயர்கிறது.
இந்த இடப் பெயர்ச்சிக்கு முதன்மையான காரணம் கடந்த ஓராண்டில் ஏற்பட்ட பெரும் பொருளாதார இழப்புதான். கடை விரித்தோம்; கொள்வாரில்லை என்ற வள்ளலார் நிலை நமக்கு மூன்று முயற்சிகளிலும் ஏற்படவில்லைதான். கடை விரித்தோம். சரக்கும் விற்றது. ஆனால் பொருள் கொண்டோரிடமிருந்து வசூலாக வில்லை என்பதே நமது சிக்கல்.
கடந்த ஓராண்டில் முகவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் வாங்கிய இதழுக்கு பணம் செலுத்தவில்லை. சந்தாதாரர்களில் சுமார் 500 பேர் இதழைப் பெற்று வந்தபோதும் கடந்த ஆண்டு சந்தாவைப் புதுப்பிக்கவில்லை. இப்படி சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை சந்தாதாரர்களிடமிருந்தும், சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரை முகவர்களிட மிருந்தும் பணம் வராமல் போயிற்று. கடந்த சில மாதங்களாக இதழில் இதற்காக அறிவிப்புகள் செய்தும் முகவர்களுக்குக் கடிதங்கள் எழுதியும் பயனில்லை. மிகச்சிலரே பதிலாவது அனுப்பினார்கள்.
இதனால் இதழை இனி தொடர்ந்து அச்சிடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிலுவைத் தொகையில் பாதி வந்திருந்தால் கூட, சிரமப்பட்டேனும் அச்சிதழாகத் தொடர்ந்திருப்போம்.
இந்த ஓராண்டில் தீம்தரிகிடவினால் என் தனி வாழ்க்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார சிக்கல், முதலில் என்னை (மும்பைக்குப்) புலம் பெயரச்செய்தது. அடுத்து இதழை (இணையத்துக்கு) புலம் பெயரச் செய்துள்ளது.
சந்தாதாரர்களுக்கு சந்தா முடிவடைந்துவிட்டது என்ற நினைவூட்டலை அனுப்ப இயலாத நிலையில் நாங்கள் இருந்ததால் அவர்களில் பலர் சந்தாவைப் புதுப்பிக்கவில்லை என்றே கருதுகிறேன். மற்றபடி பணம் கொடுக்காமல் ஏமாற்றும் நோக்கம் தீம்தரிகிடவை வரவழைத்துப் படிக்கும் வாசிக்கும் வாசகர்களுக்கு ஒருபோதும் இருக்கும் வாய்ப்பு இல்லை என்பதே என் கருத்து.
ஆனால் பணம் செலுத்தாத முகவர்களைப் பற்றி அப்படிச் சொல்ல முடியாது. ஏமாற்றும் நோக்கம் உள்ள சிலர், ஏய்க்கும் வழிகளில் ஒன்றாக சிறிய இதழ்களின் விநியோகத்தைப் பயன்படுத்துகிறார்கள். கடிதங்கள் அனுப்பியும் பதிலோ பணமோ அனுப்பாத அவர்களுடைய பட்டியல் தனியே வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தருணத்தில் எமக்கு ஆதரவு காட்டிய சென்னை நியூபுக்லேண்ட்ஸ், கீழைக்காற்று, திலீப்குமார், கோவை விஜயா பதிப்பகம், சிவகங்கை அரும்பு, நெல்லை அயோத்தி புத்தக நிலையம், கோவில்பட்டி கரிசல், நாகர்கோயில் சுதர்சன், திருப்பூர் மகேஸ்வரி புத்தக நிலையம், சேலம் பாலம்/பாரதி புத்தகாலயம், நண்பர்கள் சென்னை சிவ.செந்தில்நாதன், ஓசூர் பெரியசாமி, பீளமேடு ராமசாமி, ஈச்சனேரி ராமசாமி, சூலூர் கா.தேவராசு முதலானோருக்கு என் நன்றி.
மறுபடியும் அச்சில் தீம்தரிகிட எப்போது வரும்? வருமா? இன்றைய மதிப்பீட்டில் சுமார் 20 லட்சம் ரூபாய்களை நிபந்தனைகளற்ற முதலீடாக செய்ய எவரேனும் முன்வந்தாலன்றி, தீம்தரிகிட இதழை அச்சில் வெளியிடுவதில் எவருக்கும் எந்தப் பயனும் இராது.
இனி ஒவ்வொரு மாதமும் 5ம்தேதியன்று இணையத்தில் இதழ் வெளியிடப்படும். அதே சமயம் முகவரி பதிவு செய்துள்ள வாசகர்களுக்கு சிறு வடிவில் இதழ் பற்றிய செய்திக் கடிதம் அனுப்பப்படும். அதில் இணையத்தில் அந்த மாத இதழில் இடம் பெற்றுள்ள படைப்புகள் எவை என்ற விவரங்கள் தெரிவிக்கப்படும்.
இந்த வகைகளில் மாதம் தோறும் சுமார் 2 ஆயிரம் ரூபாய் வரை செலவாகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதை தற்போது சில நண்பர்கள் மாதம் தோறும் நன்கொடையாகத் திரட்டித் தர முன்வந்துள்ளனர். இணையப் பக்கங்களை வடிவமைத்து தளத்திலேற்றும் பணியை இலவசமாகச் செய்ய முன்வந்திருப்பவர் தீம்தரிகிட வாசகரும், மாற்றுக் கருத்தாக்கங்களுக்கான இடத்தை விரிவுபடுத்துவதைத் தன் நோக்கமாகவும் கொண்டுள்ள இளம் நண்பர் ரமேஷ், ஆசிரியர் கீற்று.காம்.
வரும் மே முதல் டிசம்பர் வரையில் எட்டு மாதங்களும் இணையத்தில் வெளியான இதழ்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வருகிற 2007 ஜனவரியில் சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளியிடப்படும். தற்போது சந்தா செலுத்தியிருக்கும் வாசகர்களுக்கு அந்த சந்தாத் தொகைக்கு அடையாள ஈடாக இந்தத் தொகுப்பு நூல் அளிக்கப்படும். மற்றவர்கள் தனியே நூலின் விலையை செலுத்தி வாங்கிக் கொள்ளலாம்.
அச்சிலிருந்து இணையத்துக்குப் புலம் பெயரும் இந்த நேரத்தில், ஒவ்வொரு முறையும் தீம்தரிகிட இதழை அச்சில் வெளியிட முற்படும்போதும் உடல் உழைப்பு, உடன் உழைப்பு, தார்மிக ஆதரவு, பொருள் உதவி, படைப்பு தானம் என்று பல விதங்களில் உதவிகள் செய்த எண்ணற்ற நண்பர்களுக்கு நன்றியைப் பதிவு செய்ய விரும்புகிறேன். அவர்கள் அனைவரும் தீம்தரிகிட முயற்சி மீது காட்டிய நம்பிக்கைக்கு தொடர்ந்து தகுதியுடையதாக தீம்தரிகிட இயங்கும்.
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம். உண்மைகள் சொல்வோம். பல வண்மைகள் செய்வோம்.
அன்புடன்
ஞாநி
ஏப்ரல் 1 முதல்.
www.dheemtharikida.com
www.dheem.com
www.keetru.com /dheemtharikida
பணம் பாக்கி வைத்திருக்கும் முகவர்கள்:
1. லட்சுமிகாந்தன் சிநேகா அச்சகம், 22 தீபம் காம்ப்ளெக்ஸ், சாத்தூர்
2. மல்லிகை புக் சென்ட்டர் 11 மேற்கு வெளி வீதி, மதுரை
3. மனோகரன் மீனாட்சி பேப்பர் ஸ்டோர்ஸ், 48 சன்னதி தெரு, மதுரை
4. பசுபதி, பதி ஏஜன்சி, 117 காமராஜர் சாலை, காஞ்சிபுரம்
5. ரெஹ்மத் ஷாப்பிங் சென்ட்டர், 34 சென்ட்ரல் பஸ் நிலையம், திருநெல்வேலி 1
6. அப்துல் முனாஃப் (சப்ஜான்) புஞ்சை புளியம்பட்டி, ஈரோடு மாவட்டம்
7. செந்தமிழ் இனியன் 53 3வது குறுக்குத்தெரு, பாண்டிச்சேரி
8. சி.சுப்பிரமணியம் ஜி 19 த.நா.வீ.வா குடியிருப்பு, தூத்துக்குடி
9. தாமரைநாயகம் அருணா புக் ஸ்டால், வள்ளியூர் பஸ் நிலையம்
10. வடுகநாதன் அன்பு பீடா ஸ்டால், சீர்காழி
11. விநாயக் புக் செண்ட்டர் 45 காந்தி ரோடு, பாண்டிச்சேரி - 1.
நண்பர்கள்:
1. அல்லிஉதயன், தேனி
2. யூமா வாசுகி, புதுக்கோட்டை
|