|
(மனிதன் பதில்கள் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமையன்று தளமேற்றப்படுகிறது. மனிதனின் மின்னஞ்சல் முகவரி: [email protected])
இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் நியாயமானதா ?
வி. எல்.சந்தோஷ், ஈரோடு. மின்னஞ்சல்
நியாயமானது அல்ல. வட இந்தியாவில் சமுக நீதிக்கான போராட்டங்கள் தமிழகத்தைப் போல எழுபது ஆண்டுகள் முன்பே நடந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. குறைந்தபட்சம் 1950களில் இந்திய அரசியல் சட்டப்படி பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தமிழகத்தில் உறுதி செய்யப்பட்டபோதேனும் அனைத்திந்திய அளவிலும் மத்திய அரசில் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், இப்போதைய நிலைமைகள் ஏற்பட்டிராது.
இன்பத்தமிழன் தி.மு.கவில் இணைந்துவிட்டாரே ?
இளவரசு.கா. கடலூர்
கருணாநிதி, ஜெயலலிதா இருவரையும் பயன்படுத்திக் கொண்டு கொள்ளையடிக்கும் குட்டித் திருடர்கள் சில ஆயிரம் பேர் இரு கட்சிகளிலும் இருக்கின்றனர். ஒரு இடத்தில் தங்கள் செல்வாக்கு குறைந்துவிட்டால் இன்னொரு இடத்துக்குத் தாவித் தங்கள் பிழைப்பைத் தொடருவது இவர்கள் வழக்கம். தேர்தல் நேரங்களில் இத்தகைய தாவல்கள் இரு புறமும் நடைபெறும். மற்ற்படி இதில் கொள்கைப் பிரச்சினைகள் எதுவும் கிடையாது. கொள்ளைப் பிரச்சினைகள் மட்டுமே உண்டு.
தாலிக்குத் தங்கம், திருமணத்துக்கு 15 ஆயிரம் திட்டங்கள் எப்படி ?
பிரியா.கே. மந்தைவெளி.
பெண்ணடிமைத் தனத்தைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் திட்டங்கள். கல்விக்கான உதவிகள் தவிர வேறு எதுவும் மக்கள் நிலையையும் மகளிர் நிலையையும் மேம்படுத்த உதவாது.
இந்தத் தேர்தலில் தி.மு.க மீண்டும் பார்ப்பன எதிர்ப்பை அடி நாதமாக கையில் எடுத்திருப்பது போலத் தோன்றுகிறதே ?
கமலக்கண்ணன், பொள்ளாச்சி
அப்படி நம்பித்தான் சில பகுத்தறிவாளர்களும் தமிழ் தேசியர்களும் தி.மு.க அணியை ஆதரிக்க முனைந்திருக்கிறார்கள். ஆனால் தி.மு.கவின் இன்றைய சித்தாந்தமே புதுப் பார்ப்பனீயம்தான். தி.மு.க, அ.இ.அ.தி.மு.க இரண்டுமே பார்ப்பனீயக் கூறுகளைக் கொண்டிருக்கும், வளர்க்கும் அமைப்புகள்தான். தினமலர் அ.இ.அ.தி.மு.க சார்பாக பிராமணர் சங்கம் இருப்பதாகக் காட்ட முயற்சித்தது. தி.மு.கவின் தினகரன் சில பிராமணர் சங்க நிர்வாகிகளின் பேட்டிகளை தினசரி வெளியிட்டு அவர்கள் தி.மு.கவுக்கு ஆதரவாக இருப்பதாகக் காட்ட முயற்சித்து வருகிறது. அது மட்டுமல்ல. காஞ்சி சங்கர மடத்தை ஜெயலலிதா கஞ்சா மடம் என்று இழிவு படுத்தினார் என்று தினகரனே கருத்து தெரிவிக்கிறது. சங்கராச்சாரியை இழிவு படுத்திய ஜெயலலிதாவுக்கு பிராமணர் ஓட்டு கிடைக்காது என்று தினகரன் பிரசாரம் செய்கிறது. ஊழல், அராஜகத்தில் மட்டுமல்ல, பார்ப்பனீயத்திலும், இரு கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.
அரசியலில் டி.ராஜேந்தர், சேடப்பட்டி முத்தையா, பாக்யராஜ், விசு, சிம்ரன், கோவை சரளா போன்றோரின் பங்கு என்ன ?
கோபால்.எம், மின்னஞ்சல்
காமெடி டிராக். அவ்வளவுதான். இதில் சூப்பர் காமெடியன் சேடப்பட்டி முத்தையா. அம்மா ஆட்சியில் அவருடன் இவர் இருந்தபோது, தினமணி கதிரில் மனிதன் பதில்கள் பகுதியில் ஒரு வாசகர் கேட்டிருந்தார். அம்மா சொன்னால் உயிரை விடவும் தயார் என்று சேடப்பட்டி முத்தையா சொல்லியிருக்கிறாரே என்று. அப்போது என் பதில்: சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே.
திண்ணை இணைய இதழில் அண்மைக் காலமாகத் தொடர்ந்து எழுதிவரும் மலர்மன்னன் ஓர் அறிமுகமான பெயராக எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் எழுதுவதைப் படித்தால் பல்வேறு தொடர்புகள் உள்ள இதழாளர்போலத் தெரிந்தது. எனவேதான் நீண்ட நாள் இதழாளரான நீங்கள் அவரை அறிவீர்களா எனக் கேட்டு அதன் மூலம் அவரது நம்பகத் தன்னமையினைச் சரிபார்த்துக் கொள்ள நானும் நண்பர்களும் விழைந்தோம். உங்கள் பதிலில் நீங்கள் அவரைத் தெரியும் எனக் குறிப்பிட்ட போதிலும், அவரது இந்துத்துவா சார்பு பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளீர்கள். அவரோ, தமது கட்டுரைகள் மூலமாகத் தொடக்கத்திலிருந்தே தமது சார்பை வெளிப்படுத்துபவராகக் காட்டிக்கொண்டு வந்துள்ளார். அவரது திண்ணைக் கட்டுரைகளின் வாசகர்கள் என்ற முறையில் நாங்கள் அவ்வப்போது அவருடன் மின்னஞ்சல் மூலமாகவும் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு வருகிறோம். அந்த அடிப்படையில் நீங்கள் அவரைப் பற்றி வெளியிட்ட கருத்தை அவரிடம் தெரிவித்து, அவரது கருத்தைத் தொலைபேசி மூலம் கேட்டோம். அதற்கு அவர் சொன்னதாவது:
மண்டைக்காடு சம்பவத்தின் போதுதான் ஞாநி தீம்தரிகிட பத்திரிகையை ஆரம்பித்திருந்தார். பிரபஞ்சனும் அதில் பணியாற்றினார். மண்டைக்காடு பற்றி அவரது இதழில் கட்டுரை வந்ததையொட்டி, சம்பவத்தின் மறு பக்கமும் வாசகர்கள் அறிந்துகொள்ள வாய்ப்புக் கிட்ட வேண்டும் என்பதற்காக, அச்சமயம் இந்துக்கள் சார்பில் இயங்கிய தாணுலிங்க நாடாரிடம் நான் எடுத்த பேட்டியின் ஆடியோ கேசட்டை ஞாநிக்குப் போட்டுக் காட்டினேன். ஆனால் அதை வெளியிடுவதில் அவர் எவ்வித ஆர்வமும் காட்டவில்லை. ஆகவே அவர் ஒரு சார்பான கருத்தை வெளியிடுவதற்காகவே பத்திரிகையைத் தொடங்கியுள்ளார் என்பதைப் புரிந்துகொண்டேன். மிகவும் புத்திசாலியான ஞாநி நான் தாணுலிங்க நாடாரின் கருத்தைத் தெரிவிக்கும் பேட்டியைக் கொடுத்தபோதிலும் எனது நிலைபாட்டை யூகிக்காமல் போனது ஆச்சரியந்தான்.
தாணுலிங்க நாடார் பழைய காங்கிரஸ்காரர். காமராஜரின் ஆதரவாளர். நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். நடப்பு நிலையை உணர்ந்து இந்துத்துவக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவர். அவருக்கு ஆர். எஸ். எஸ். சார்பு ஏதும் இருந்ததில்லை. மண்டைக் காடு சம்பவம்தான் அவரைத் தீவிர இந்துத்துவவாதியாக மாற்றியது. இப்பொழுது அவர் இல்லை. காலமாகிவிட்டார்.
நான் ஞாநியின் தகப்பனார் வேம்புசாமி காலத்துப் பத்திரிகையாளன். அவரும் நானும் தினமும் கோட்டையில் நிருபர்கள் அறையில் ஒன்றாக இருந்து பணியாற்றியவர்கள். எனவே ஞாநியுடன் கொள்கை கோட்பாடுகள் பற்றியெல்லாம் தீவிரமாகக் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளும் எண்ணம் எனக்குத் தோன்றியதே இல்லை. மேலும் கணையாழி அலுவலகத்தில் தினமும் சந்தித்துக் கொள்கையில் இலக்கியம், அவரது நாடக இயக்கம் ஆகியவை பற்றி விவாதிக்கவே நேரம் சரியாக இருக்கும்.
ஞாநி அறிவுக் கூர்மையும், திறமையும், துணிவும் ஒருங்கே அமையப்பெற்ற ஜர்னலிஸ்ட் மட்டுமல்ல, எழுத்தாற்றல் மிக்க படைப்பாளியும்கூட. அவர் முதன் முதலில் எவருக்கும் தெரியாமல் ஒரு சிறுகதை எழுதி கல்கிக்கு அனுப்பியிருந்தார். அந்தச் சமயத்தில் எனக்குக் கல்கி ராஜேந்திரனுடன் எழுத்தாளன் என்ற முறையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. அவர் ஞாநியின் சிறுகதையை என்னிடம் படிக்கக் கொடுத்து, "நான் படித்துவிட்டேன், நன்றாக உள்ளது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்" என்று கேட்டார். நான் உடனே படித்துப் பார்த்து, மிகவும் அருமையான சிறுகதை. அடுத்த இதழிலேயே வெளியிடுங்கள். இவரை நான் அறிவேன், இவர் பெயர் சங்கரன். எக்ஸ்பிரஸில் நிருபராக இருக்கிறார். அங்கு பணியற்றிய வேம்புசாமியின் மகன்தான் என்று சொன்னேன். இது அவரது சிறுகதைக்கு என் சிபாரிசு அல்ல. நான் ஏதும் கூறியிருக்காவிட்டாலும் அந்தச் சிறுகதை தனது தகுதியின் அடிப்படையில் வெளியாகியிருக்கும். வேண்டுமானால் எனது கருத்து அச்சிறுகதை வெளிவருவதைத் துரிதப்படுத்தியிருக்கலாம். ராஜேந்திரன் அதனைத் தேர்வு செய்த பின்னர்தான் என்னிடம் படிக்கக் கொடுத்தார்.
ஞாநியைப் போன்ற தீவிர சிந்தனையும், துணிவும் மிக்க பத்திரிகையாளர்கள் நடப்பு நிலவரங்களை நன்கு புரிந்துகொள்ளும் வாய்ப்பிருந்தும், நம் தாயகம் இன்று எதிர்கொள்ள நேரிட்டுள்ள மிக அபாயகரமான முகமதிய மத அடிப்படையிலான சவாலைத் தீவிரமாகக் கண்டிக்காமல் இருப்பது வியப்பாக உள்ளது.
இவ்வாறு மலர்மன்னன் அவர்கள் தெரிவித்த கருத்து பற்றி உங்கள் எண்ணத்தை அறிய விரும்புகிறோம். தீம்தரிகிடவில் நீங்கள் எனது கேள்விக்கு அளித்த பதிலை அவர் படிக்கவில்லை என்றார். இதில் எல்லாம் ஆர்வமில்லை என்று சொன்னார். ஆனால் உங்களைப் பற்றி மிகவும் உயர்வாகவே பேசினார். எஸ்டாபிளிஷ்மென்டைத் தனியொருவனாக நின்று போராடத் தயங்காதவர் என்று பாராட்டினார்.
ஆர். செந்தில் குமார், சென்னை 600 078 .மின்னஞ்சல்.
மலர்மன்னன் தன் இந்துத்துவ சார்பை 1978 - 79வாக்கில் நான் அவரை கணையாழியில் அறிந்திருந்த வேளையில் என்னிடம் வெளிப்படுத்திக் கொண்டதில்லை என்ற என் பதிலில் எந்த மாற்றமும் இல்லை. தீம்தரிகிட இதழ் 1982ல் மண்டைக்காடு பற்றி கட்டுரை வெளியிட்டபோது எங்கள் நிருபர் அங்கேயே தாணுலிங்க நாடார் வகையறாக்கள் உள்ளிட்ட எல்லா தரப்பினரையும் சந்தித்துவிட்டுத்தான் தன் கட்டுரையை எழுதினார். மலர்மன்னன் இப்போது சொல்வது போல தாணுலிங்க நாடாரின் பேட்டி டேப் எதையும் அவர் என்னிடம் போட்டுக் காட்டியது இல்லை. கணையாழியுடனான என் அன்றாடத் தொடர்புகள் 1980 வாக்கில் முடிந்து விட்டன. தீம்தரிகிட 1982ல் வெளியிடப்பட்டது. அப்போதெல்லாம் மலர்மன்னனை நான் ஆண்டு தோறும் நடக்கும் இலக்கியச் சிந்தனை விழா போன்ற பொது இடங்களில் வருடத்தில் ஓரிரு முறைகள் சில நிமிடங்கள் சந்தித்துப் பேசியிருந்தாலே அதிகம்.
என் தந்தை வேம்புசாமியுடன் சக பத்திரிகையாளாராகப் பணியாற்றியதாக மலர்மன்னன் குறிப்பிடுகிறார். என் தந்தை தன் 90 ம் வயதில் இறந்தார். இந்த ஆண்டு அவருடைய நூற்றாண்டு. 1973ல் அவர் இந்தியன் எக்ஸ்பிரசிலிருந்து ஓய்வு பெற்ற போது அவருக்கு வயது 68. அப்போது மலர்மன்னனுக்கு வயது சுமார் 35 அல்லது 37 இருக்கலாம். எனக்கு 19. இருபது வயது வித்யாசம் உள்ள என்னுடன் அரசியல் கோட்பாடுகளைப் பற்றி விவாதிக்காத மலர்மன்னன் தன்னை விட 31 வயது மூத்தவரான வேம்புசாமியுடனும் அரசியல் கோட்பாடுகளை விவாதித்திருப்பாரா என்பது சந்தேகம்தான். தன் பத்திரிகை உலக சகாக்கள் பலர் பெயர்களை வீட்டில் அடிக்கடி என் தந்தை எங்களுடனான பேச்சில் குறிப்பிடுவது உண்டு. மலர் மன்னனின் பெயரை நான் அதில் கேட்டதில்லை. எனவே வேம்புசாமியின் நெருங்கிய வட்டத்தில் மலர்மன்னன் இருந்திருக்க வாய்ப்பில்லை. தவிர என் தந்தை தீவிரமான காந்தி-நேரு-காமராஜர் ஆதரவாளர். ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ், ராஜாஜி மூவரையும் ஏற்காமல் கடுமையாக விமர்சித்து வந்தவர். அரசியல் ரீதியாக மலர்மன்னனுடன் உடன்பட அவருக்கு எதுவும் இருந்திருக்காது. கணையாழி காலத்தில் நானும் மலர்மன்னனும் பழகிய மாதிரி அவர்களும் பழகியிருக்கலாம். அவ்வளவே.
கல்கி ராஜேந்திரன் என் சிறுகதையை மலர் மன்னனிடம் படிக்கக் கொடுத்த தகவலும் இப்போதுதான் எனக்குத் தெரிய வருகிறது. அவர் இதுவரை என்னிடம் இது பற்றி எப்போதும் சொன்னதில்லை. அது எனக்கு ஒரு முக்கியமான விஷயமும் இல்லை. ஒரு பத்திரிகை ஆசிரியர் தனக்கு வரும் கதை, கட்டுரைகளை யாரிடம் கொடுத்து கருத்து கேட்கிறார் என்பது அவருடைய உரிமை. ஆனால் நான் யாருக்கும் தெரியாமல் ஒரு சிறுகதையை முதன்முதலாக எழுதி கல்கி இதழுக்கு அனுப்பியதாக மலர்மன்னன் சொல்லுவது வேடிக்கையாக இருக்கிறது. கல்கியில் வெளிவருவதற்குப் பல ஆண்டுகள் முன்னதாகவே ஆனந்த விகடனிலும் தினமணிக் கதிரிலும் என் சிறுகதைகள் வெளியாகிவிட்டன.
என் கதைகளும், என் வாழ்க்கை முறையும் துணிச்சலும் மலர் மன்னனால் மதிக்கப்படுவதாக உங்கள் மூலம் அறிய, மகிழ்ச்சி. என்னைப் பொறுத்தவரையில் எனக்கு அவருடைய இந்துத்துவக் கருத்துகளுடன் துளியும் உடன்பாடில்லை. மற்றபடி பழகுவதற்கு இனியவர் என்ற அளவில் நானும் அவரை மதிக்கிறேன்.
கடைசியாக இன்று நம் தாயகம் எதிர்கொள்ள நேரிட்டுள்ள மிக அபாயகரமான முகமதிய மத அடிப்படையிலான சவாலை நான் ஏன் தீவிரமாக கண்டிக்காமல் இருக்கிறேன் என்று மலர்மன்னன் வியப்பதாகக் கூறியிருக்கிறீர்கள். மதம் என்பதே ஒரு பயங்கரவாதம்தான் என்பது என் கருத்து. மெஜாரிட்டி மத பயங்கரவாதம்தான் மைனாரிட்டி மத பயங்கரவாதத்துக்கு விதையாக அமைகிறது. மெஜாரிட்டி மத பயங்கரவாதத்தின் கோட்பாடுதான் இந்துத்துவா. எனவே இந்துத்துவாவைக் கைவிடாமலும் முறியடிக்காமலும், இதர பயங்கரவாதங்களை இந்தியாவிலிருந்து அகற்றமுடியாது என்பதே என் நிலை.
தங்களது கேள்விகளை மனிதனுக்கு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
|