|
ஞாநி
அறிந்தும் அறியாமலும் - 13
இந்தியாவில் இன்று சிறுமிகள் பூப்பெய்தும் வயது குறைந்துகொண்டே வருகிறது. இதற்குப் பல மருத்துவ, சமூகவியல் காரணங்கள் சொல்லப்படுகின்றன. உணவு முதல் மீடியா வரை இதற்குப் பொறுப்பு என்கிறார்கள்.
டெலிவிஷனிலும், சினிமாவிலும், பத்திரிகைகளிலும் தொடர்ந்து பார்க்கக்கூடிய ஆண் & பெண் உறவு தொடர்பான பிம்பங்கள் மூளையின் பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டி, செக்ஸ் ஹார்மோன்களை முன்கூட்டிச் சுரக்கச் செய்வதாகக் கருதப்படுகிறது. மீடியாவின் பொறுப்பு, தரம் எல்லாம் ஒருபுறம் நமது கவலைக்கும், அக்கறைக்கும், தலையீட்டுக்கும் உரியவை. என்றாலும், தங்கள் மனதுக்கும் உடலுக்கும் என்ன நிகழ்கிறது என்பதை அறிவுபூர்வமாக நமது சிறுவர்களை உணரச் செய்வதே உடனடியாகத் தேவைப்படும் தீர்வு.
ஒரு சிறுமியின் உடலில், சுமார் 10 வயது முதல் சினைமுட்டை தயாரிப்பு தொடங்கிவிடுகிறது. ஒரு சிறுவனின் உடலில் சுமார் 12 வயது முதல் உயிரணுக்கள் அடங்கிய விந்து தயாரிப்பு தொடங்கிவிடுகிறது. இருவரும் இந்த வயதில் செக்ஸ் தொடர்பான ஜோக்குகளை அரை குறையாகவேனும் புரிந்துகொள்ளும் ஆற்றலுடன் இருக்கிறார்கள். சுமார் 13 வயதில், உடலின் இனப்பெருக்க உறுப்புகள் எல்லாமே முழுமையான வளர்ச்சியடைந்துவிட்ட நிலையில் இருக்கும்.
பெண்ணுக்கு 40 முதல் 50 வயதுக்குள் உடலின் சினை முட்டைத் தயாரிப்பு பணி ஓய்ந்துவிடுகிறது. ஆணுக்கு சுமார் 70 வயதில்தான் விந்து உற்பத்தி குறைகிறது. விதிவிலக்குகளாக ஒரு சிலருக்கு 80, 90 வயதிலும் ஒரு பெண்ணைக் கருத்தரிக்க வைக்கும் ஆற்றலுடன் உள்ள உயிரணு உற்பத்தி நிகழலாம்.
சராசரி ஆயுட்காலம் இன்று 70 வயது என்று வைத்துக் கொண்டாலும், பெண்ணின் வாழ்க்கையில் சுமார் 40 வருடங்களும், ஆணின் வாழ்க்கையில் சுமார் 60 வருடங்களும் இடைவிடாமல் தொடரும் இந்தச் சினைமுட்டை/விந்து தயாரிப்பு உடலுக்குள் நடப்பதைப் பற்றி ஒவ்வொருவரும் அறிந்து வைத்துக்கொண்டு உடல் ஆரோக்கியத்தைக் காப்பது அவசியம்.
ஒரு சிறுமியின் உடலில் சினைமுட்டை தயாரிப்பு என்பது, 28 நாட்களுக்கொரு முறை நடக்கும் நிகழ்ச்சி! முதல் 7 நாட்களில் சினைப்பையில் முட்டை முதிர்ச்சி அடைகிறது. இதே சமயம் கருப்பையின் உட்சுவர் மெள்ள மெள்ளத் தடிமனாகிறது. அடுத்த மூன்று நாட்கள் சினைமுட்டை வெளிப்படுகிறது. அடுத்த 13 நாட்களில் சினைமுட்டை கருப்பைக்குச் சென்று, ஆணின் உயிரணுவைச் சந்திக்கத் தயாராகக் காத்திருக்கிறது. இந்த 13 நாட்களில் உயிரணுவை அது சந்திக்காத நிலையில், மெள்ளக் கரைகிறது. அடுத்த 5 நாட்கள் கரைந்த சினைமுட்டையும் கருப்பையின் உட்சுவர் பூச்சும் ரத்தப் போக்குடன் வெளியேறுகின்றன. இந்த 5 நாட்கள்தான் ‘அந்தக் கஷ்டமான நாட்கள்!’
28 நாட்களுக்கொரு முறை இந்த சுழற்சி, சிறுமியின் வாழ்க்கையில் அவள் கிழவியாகும் வரை நடக்கிறது. ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்தச் சுழற்சி நாட்களின் எண்ணிக்கை வேறுபடும். பத்துப் பன்னிரண்டு வயதில் பூப்படைந்ததும், உடனே சுழற்சியின் கால அளவு துல்லியமாக நிர்ணயமாகி விடுவதில்லை. பல வருடங்களுக்குப் பின்னர்தான் இந்த சுழற்சிக் காலம் ஒரு பெண்ணுக்கு நிச்சயமாகும்.
ஒவ்வொரு முறை மாதாந்திரப் போக்கு ஏற்படும் முன்னால், சிறுமியின் உடலுக்குள் நிகழும் மாற்றங்களின் விளைவாக, அவள் ‘மூட்’ மாறுகிறது. எரிச்சல், அசதி இரண்டும் ஏற்படுகின்றன.
ரத்தப்போக்கு ஏற்படும் நாட்களில் உடலுக்குள் தசைகள் சுருங்கி விரிவதால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான விளைவுகள் ஏற்படுகின்றன. பிசைந்து எடுக்கும் வலி முதல், தலைவலி வரை வெவ்வேறுவிதமான உபாதைகள் ஏற்படுகின்றன. மிக அபூர்வமாக சிலருக்கே வலி எதுவும் இல்லாத நிலை இருக்கிறது.
சிறுமி இந்தச் சமயத்தில் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டும். குறிப்பாக, உணவில் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் உப்பு, உடலின் திரவங்களை அதிகமாக உறிஞ்சி வெளியேற்றும் தன்மையுடையது. எண்ணெயில் சமைக்கப்பட்ட பலகாரங்களையோ, செயற்கைக் குளிர்பானங்களையோ இந்தச் சமயத்தில் தவிர்ப்பது அவசியம்.
காரணம், அவை வயிற்றில் வாய்வுத் தொல்லையைக் கிளறிவிடக்கூடியவை. மாதாந்திர ரத்தப்போக்கு சமயத்தில் ஜீரணக் கோளாறுகளையும் சேர்த்துக்கொள்வது சிறுமிக்குச் சித்ரவதையாக இருக்கும்.
உடைகளில் ரத்தப்போக்கு படாமல் ஒற்றி நீக்க, இன்று வகை வகையான சானிட்டரி டவல்கள்/நாப்கின்கள் கிடைக்கின்றன. சானிட்டரி டவல்கள்/நாப்கின்கள் வாங்கும் பொருளாதாரச் சக்தி அற்ற ஏழைச் சிறுமிகள் நிறைந்திருக்கும் நாடு நம்முடையது. நம் பாட்டி காலத்தில் அவை இருக்கவும் இல்லை. நல்ல தூய்மையான துணித் துண்டுகளையே அவர்கள் பயன்படுத்தினார்கள்.
இன்று தமிழ்நாட்டில் பல மகளிர் சுய உதவிக் குழுக்கள் பஞ்சாலான நவீன சானிட்டரி நாப்கின்களை மலிவு விலையில் தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கின்றன என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.
இவற்றையெல்லாம் எப்படிப் பயன்படுத்துவது என்பதை விமானத்தில் ஸீட் பெல்ட், ஆக்ஸிஜன் மாஸ்க் அணிவது பற்றியெல்லாம் ஏர்ஹோஸ்டஸ்கள் சொல்லித்தருவது போல, ஐந்தாம் வகுப்பிலேயே சிறுமிகளுக்குப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியைகள் சொல்லித் தர முடியும்.
பயன்படுத்திய நாப்கின்களை சுற்றுச்சூழலுக்கு சிக்கல் இல்லாமல் அழிக்கும் விதத்தையும் கற்பிக்க வேண்டும்.
சிறுமிகள் இப்படி மாதந்தோறும் உடல் அவதிகளுக்கு உள்ளாகிறார்கள் என்பது அதே வயதுச் சிறுவர்களுக்கு இன்று அரைகுறையாகத் தெரியும். தலைவலி, கால்வலி போன்ற உடல் உபாதைகளைப் போல இதையும் கருதும் மனப்பக்குவத்தை நம் வீட்டுச் சிறுவனுக்கு ஏற்படுத்த வேண்டும்.
பாலியல் கல்வித் துறையில் ஈடுபட்டு இருக்கும் என் சிநேகிதி பத்மா, தன் வாழ்க்கையின் மிகப் பெரிய மகிழ்ச்சிகளாக வகுப்புகளில் தெரிவிக்கும் இரு நிகழ்ச்சிகளை இங்கே குறிப்பிடுவது பொருத்தமானது. ஒன்று, தன் பிறந்த நாளன்று, 12 வயது மகன் அளித்த பரிசு. அம்மாவுக்கு என்ன பரிசு அளிப்பது என்று யோசித்த அந்தச் சிறுவன், கடைக்குப் போய் வாங்கி வந்து அளித்த பரிசு, சானிட்டரி நாப்கின் பொட்டலம். இன்னொன்று, அவனே தயாரித்து அம்மாவுக்கு அளித்த தேநீர். உலகத்தின் சிறந்த தேநீர் அது!
நம் குழந்தைகளுக்கு & குறிப்பாக, ஆண் குழந்தைகளுக்கு, ஒரு பெண்ணை சக மனுஷியாகக் கருதிச் சமமாக உறவாடப் பயிற்றுவிக்கும் முயற்சிகளில் இத்தகைய நிகழ்ச்சிகள் முக்கியமான மைல் கல்கள்.
அப்பாவுக்குக் கடையில் சிகரெட் வாங்கி வந்து தருவதில் சிறுவர் சிறுமிகளை ஈடுபடுத்துவதை தவறாகக் கருதாத சமூகம், அம்மாவுக்கோ, சகோதரிக்கோ வீட்டுச் சிறுவன் நாப்கின் வாங்கி வந்து தருவதை அருவருப்பாகக் கருதுவது நம் சீரழிந்த மனநிலையின் அடையாளம் அல்லவா?
இதற்கெல்லாம் காரணம், ஆணின் உடற்கூறு பற்றி பெண்ணுக்கும், பெண்ணின் உடற்கூறு பற்றி ஆணுக் கும், கவர்ச்சியும் போதையும் இருப் பதை ஊக்குவிக்கிறோமே தவிர, புரிதலும் அறிதலும் தேவை என்பதை நாம் ஊக்குவிக்கவில்லை.
இருவருக்கும் ஒருவரைப் பற்றி மற்றவருக்கு அரை-குறையாகவே தெரிந்திருக்கிறது. குறிப்பாக, சிறுமிக்கு மாதாந்திர உடல் சிக்கல் இருப்பது பற்றி ஒரு சிறுவனுக்குத் தெரிந்திருக்கக்கூடிய சொற்பமான தகவலைவிடவும் குறைவாகவே, ஒரு சிறுமிக்கு சிறுவனின் உடலில் என்னென்ன நிகழ்கிறது என்பது பற்றித் தெரியும்.
சிறுவனின் உடலில் இனப்பெருக்க உறுப்புகளில் தயாரிக்கப்படும் விந்து என்பது என்ன?
தொலைக்காட்சிகளில் தேச இளைஞர்களைக் காப்பாற்றக் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் வைத்தியர்களின் நிகழ்ச்சிகளைப் பார்த்தால், தமிழ்ச் சிறுமியும் சிறுவனும் பெரும் கலக்கம் அடைவார்கள்.
ரத்தம்தான் விந்துவாகிறது... ஒரு சொட்டு விந்து, இருபது ரத்தத் துளிகளுக்குச் சமம் என்பதில் தொடங்கி, விந்து பற்றி ஏராளமான வதந்திகள் நம் சமூகத்தில் நிலவுகின்றன.
உண்மையில், விந்து என்பது என்ன?
இந்த வார ஹோம் வொர்க்!
1. உங்கள் மனதில் செக்ஸ் உணர்வைத் தூண்டிய முதல் பிம்பம்/காட்சி எது? ஓவியமா? சினிமா ஸ்டில்லா? அசையும் படமா?
2. நேரில் நீங்கள் பார்த்து, உங்கள் மனதைச் சலனப்படுத்திய நிகழ்ச்சி எது?
3. சானிட்டரி நாப்கின்னை காகிதத்தில் சுற்றித்தான் தரவேண்டும் என்று கடைக்காரரிடம் வலியுறுத்தியதுண்டா?
4. ரத்தம்தான் விந்து என்ற ரீதியில் உங்களிடம் யாரும் சொன்னதுண்டா?
5. உங்களுக்கு ட்ரீம் கேர்ள்/ட்ரீம் பாய் என யாரேனும் உண்டா? யார்? ஏன்?
பதில்கள் மற்றவர்களுக்காக அல்ல. உங்களுக்கானவை... உங்களுடையவை!
நன்றி: ஆனந்த விகடன்
|