Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida


ஞாநி கட்டுரைகள்

1. சில நேரங்களில் சில புதிர்கள்!

2. ரௌத்ரம் பழகு!

3. எனக்கான தகவல் எங்கே?

4. கனவு காணுங்கள்!

5. அறிந்தும் அறியாமலும் - 13

6. அறிந்தும் அறியாமலும் - 14

7. அறிந்தும் அறியாமலும் - 15

8. அறிந்தும் அறியாமலும் - 16

***********

நிலமென்னும் நல்லாள்: பாஸ்கர் சக்தி

ஏப்ரல் 06 இதழ்

மே 06 இதழ்

ஜூன் 06 இதழ்

ஜூலை 06 இதழ்

செப்டம்பர் 06 இதழ்

நவம்பர் 06 இதழ்

ஜனவரி 07 இதழ்

ஜூன் 07 இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: dheemtharikida@
hotmail.com




கட்டுரை
ஞாநி

ரௌத்ரம் பழகு!

ஆங்கிலத்தில் கோபக்கார இளைஞன் (Angry Young Man) என்று ஒரு சொற்றொடர் இருக்கிறது. அநீதிகளுக்கு எதிராகக் குமுறும் மனம்தான் இதில் குறிப்பிடப்படும் கோபம்; பாரதி சொல்லும் ரௌத்ரம். இது நம்மிடம் இல்லையென்பதால்தான் ‘பழகு’ என்றான் பாரதி. பயம் எப்போதும் நம்முடனே இருப்பதால்தான், ‘அச்சம் தவிர்’ என்று அவன் ஆத்திசூடியை ஆரம்பிக்க வேண்டி வந்தது.

இந்திய மசாலா சினிமா, இன்னும்கூட இந்தப் பாத்திரத்தை நம்பித்தான் பிழைத்துக்கொண்டு இருக்கிறது. 70 களின் அமிதாப் பச்சன் முதல் இன்றைய விஜய் வரை அதே பாத்திரம்தான். ஒரே ஒரு வித்தியாசம், 70களின் கோபக்கார ஹீரோவைவிட இன்றைய ஹீரோ பாத்திரம், பெரிய பொறுக்கியாக இருக்கிறது.

நிஜ வாழ்க்கையில் கோபக்கார இளைஞர்கள் எங்கே? நகரங்களில் இன்று கோபக்கார இளைஞர்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. இளைஞர்களிடம் கோபத்தைவிட தாபமே அதிகரித்து வருகிறது.

பஸ் முதல் ஆட்டோ வரை அன்றாடம் நிகழும் அநீதிகளுக்காக பீக் ஹவரிலும் நின்று சண்டை போடுபவர்களில் பெரும்பாலும் நடுவயதினரும் முதியவர்களும்தான் இருக்கிறார்கள். ‘ணீஸீரீக்ஷீஹ் ஷீறீபீ னீமீஸீ’கள் மட்டுமே நிறைந்த சமூகமாக நாம் மாறிவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது.

நான் நேரில் பார்த்த முதல் ‘ணீஸீரீக்ஷீஹ் ஷீறீபீ னீணீஸீ’, மறைந்த இலக்கியவாதி க.நா.சுப்பிரமணியம். 24 வருடங்களுக்கு முன்னால் ஒரு நள்ளிரவில் அவருடன் மைசூரிலிருந்து பெங்களூருவுக்கு வந்து இறங்கி, நண்பர் வீடு தேடி ஆட்டோவில் சென்றபோது, முதலில் ஒப்புக்கொண்டதை விட அதிகம் கேட்டுச் சண்டையிட்ட டிரைவருடன் தன் கைத்தடியை வீசி சண்டை போட்டார்.

சினிமாவில் அநீதிக்கு எதிராக விஜய், அஜீத், விக்ரம் வகையறாக்கள் செய்வதில் அரை சதவிகிதத்தைக்கூடத் தெருவில் செய்ய முடியாது. இதனால்தான் தார்மிக எதிர்ப்பு, தர்மாவேசம் எல்லாவற்றையும் சினிமாவுக்கு மொத்தக் குத்தகையாக மக்கள் விட்டுவிட்டார்கள் போலும்! இதை மீறி நிஜ வாழ்க்கையில் வன்முறையான எதிர்ப்பைக் காட்டுவோர் ரவுடி, நக்சல்பாரி, தீவிரவாதி என்றெல்லாம் முத்திரை குத்தப்பட்டு ‘என்கவுன்ட்ட-ரில்’ கொல்லப்படுவார்கள். வன்முறை செய்யாமல் அமைதியான வழிகளில் எதிர்ப்பவர்கள், ‘பிழைக்கத் தெரியாதவர்கள்’, ‘மென்ட்டல்’ என்று கேலிக்கு ஆளாவார்கள்.

ஆனால், நம்மைச் சுற்றிலும் கோபப்பட ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தைவிட வேகமாக அவை பெருகிக்கொண்டும் இருக்கின்றன.

தினசரி படிக்கும் செய்திகளில் 90 சதவிகிதம் என் கோபத்தைத் தூண்டிக் கொண்டே இருக்கின்றன. இந்த வாரம் அப்படிப்பட்ட செய்திகளில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து, உங்கள் கோபத்தைத் தூண்ட விரும்புகிறேன்.

கோபம் 1

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் விதிகளுக்குப் புறம்பாக இரு தொகுதிகளுக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்த ஜெயலலிதா மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் இப்போது முன்வந்துள்ளது. தானாக முன்வரவில்லை. உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் மனு தாக்கல் செய்து, நீதிபதி அதை ஏற்று உத்தரவிட்ட பிறகுதான், தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.

ஜெயலலிதா தவறு செய்தது 2001 தேர்தலில். ஏன் நடவடிக்கை எடுக்க இத்தனை தாமதம்? அவர் முதலமைச்சராக இருந்ததாலா? இப்போது அவர் முதல்வராக இல்லாததால்தான் இந்த நடவடிக்கை நிகழ்கிறது; முதல்வராக இருந்தால் இப்போதும் நடக்காது என்று சாதாரண மனிதன் நினைப்பதை எப்படி, யார் தடுக்க முடியும்? இப்போதும் நீதிமன்றம் உத்தரவிடாவிட்டால் இது நடக்காது அல்லவா?

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சங்கராச்சாரியார் குற்றம்சாட்டப்பட்ட கொலை வழக்கு இப்போது என்ன ஆயிற்று? வழக்கு விசாரணை அப்போது வேகமாக நடந்தது போலவும், இப்போது மெத்தனமாகிவிட்டது போலவும் சாதாரண மனிதனுக்குத் தோன்றுவதை யார், எப்படித் தடுக்க முடியும்?

தேர்தல் ஆணையம், நீதித்துறை போன்று மக்கள் அதிகம் நம்பிக்கை வைத்திருக்கும் அமைப்புகள்கூட, அரசியல் காற்று வீசும் திசைக்கு ஏற்ப இயங்குவதாக மக்களுக்குப் படுவதை எப்படி அவர்கள் மாற்றி அமைக்கப் போகிறார்கள்?

நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தது மிகமிக வெளிப்படையாகத் தெரியும் குற்றம். அதில் முதல்கட்ட நடவடிக்கை எடுக்கவே ஐந்தாண்டுகளானால், இறுதித் தீர்ப்பு வர இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்?

இப்படிப்பட்ட அத்துமீறல்களுக்கும் கோளாறுகளுக்கும் அடிப்படைக் காரணமே, ஒருவர் ஒரு தொகுதிக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்ய சட்டத்தில் அனுமதித்திருப்பதுதானே? ஏன் இரு தொகுதிகள் வரை அனுமதிக்க வேண்டும்? ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிடக் கூடாது என்பதுதானே நியாயம்? அதைச் செய்யத் தயங்குவது ஏன்?

பகிரங்கமாக ஒரு குழந்தைக்குக்கூடப் புரியும் தவற்றைச் செய்திருக்கும் ஜெயலலிதாவை, அதை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்கவிடாமல் எது தடுக்கிறது? ‘நான் என்ன செய்தாலும் அது தவறாகாது. நான் என்ன செய்கிறேனோ அதுதான் சரி!’ என்கிற, வழக்கமான அவருடைய ஈகோ மனப்பான்மைதானே?

கோபம் 2

எதிர்த் தரப்பினரை வேட்பு மனுகூட தாக்கல் செய்யவிடாமல், தி.மு.க. அரசால் நடத்தப்பட்டு வரும் கூட்டுறவு சங்கத் தேர்தல்களைப் போல மோசடியான தேர்தல் இதுவரை நடந்ததே இல்லை. பேசாமல், கூட்டுறவுச் சங்கங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமிக்கும் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி, எல்லா கூட்டுறவுகளுக்கும் தி.மு.க. பிரமுகர்களையே தலைவர்களாக நியமித்து அவசரச் சட்டம் போட்டுவிடலாம்.

தமிழ்நாட்டில் கூட்டுறவு இயக்கத்தைக் குழி தோண்டிப் புதைப்பதை ஆரம்பித்தது கருணாநிதியின் முதல் ஆட்சிக் காலம். அதை முழுமையாக்கியவர் எம்.ஜி.ஆர். அதனால்தான் இங்கே குஜராத்தின் ‘அமுல்’ போன்ற ஒரு வெற்றிகரமான கூட்டுறவு இயக்கம், விவசாயத்தின் இதர துறைகளில் வரவே முடியாமல் போயிற்று.

அரசியல்வாதிகள், கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் சுரண்டியது தவிர, சிறப்பு அதிகாரிகள் ஒவ்வொரு-வரிடமும் 40, 50 சங்கப் பொறுப்புகளைக் கொடுத்து நாசமாக்கியதில், பல சங்கங்கள் திவால் நிலைக்கு அருகே வந்திருக்கின்றன. மிகவும் சக்திவாய்ந்தவர்கள் என்று கருதப்படும் பத்திரிகையாளர்களின் வீட்டு வசதிச் சங்கமே இந்தச் சிக்கலில் சிக்கி, ஊரில் மற்றவர்கள் எல்லாம் 9 சதவிகித வீட்டுக் கடன் வட்டி செலுத்திய சமயத்திலும் இவர்கள் மட்டும் 14 சதவிகிதம் (இன்னமும்) செலுத்தி வரும் முட்டாள்களாக்கப்பட்டார்கள். (நான் என் வீட்டை விற்றுவிட்டு ஓடியதில் இந்த வட்டி விகிதமும் ஒரு காரணம்).

கூட்டுறவு இயக்கத்தை அரசு அதிகாரத்திலிருந்து பிரித்து, சுயாட்சி-யான அமைப்பாக மாற்றினால் ஒழிய, அதற்கு விடிவே இல்லை.

கோபம் 3

குஜராத் ராஜ்காட் நகரில் 22 வயது பூஜா சௌஹான், வெறும் உள்ளாடைகளுடன் பிரதான சாலையில் சுமார் ஒரு மணி நேரம் நடந்து சென்று போலீஸ் மீதான தன் கோபத்தைக் காட்டினாள். தற்காப்புக்காக ஒரு கையில் பந்தடிக்கும் மட்டை. மற்றொரு கையில் (ஏனோ) வளையல் கொத்து!

பூஜாவின் பிரச்னை வரதட்சணை. அவள் காதலித்துத் திருமணம் செய்துகொண்டபோதும், கணவனும் மாமியாரும் பணம் கேட்டுச் செய்த தொல்லைகளால், ஏற்கெனவே தன் குழந்தை அஞ்சலியுடன் தனியாக வசித்து வருகிறாள். தொடர்ந்து தன்னைத் துன்புறுத்தும் புகுந்த வீட்டினர் மீது கொடுத்த புகாரை போலீஸ் அலட்சியம் செய்ததால், பூஜா இந்த விசித்திர எதிர்ப்பைக் காட்டினாள்.

பூஜா இப்படி அரை நிர்வாண எதிர்ப்பைக் காட்டிய பிறகுதான் போலீஸ் அவளுடைய கணவரையும், மாமியாரையும், பூஜாவுக்குத் தொல்லை தந்த இரு அண்டை வீட்டாரையும் கைது செய்தது. நீதிமன்றம் பூஜாவுக்குப் பாதுகாப்பு தர உத்தரவிட்டு இருக்கிறது.

பெண்கள் தங்களை நிர்வாணப்படுத்திக் கொண்டுதான் நீதிக்குப் போராட வேண்டும் என்ற நிலையை அரசு நிர்வாகங்கள் ஏற்படுத்துவது பெரும் அவலம். மணிப்பூரில் கொடூர ராணுவச் சட்டத்துக்கு எதிராக சில வருடங்கள் முன்பு பெண்கள் முழு நிர்வாண எதிர்ப்பு காட்டிய பிறகும் இன்னமும் அந்தக் கொடூர சட்டத்தை திரும்பப் பெற மன்மோகன் சிங் அரசு மறுத்து வருகிறது.

ஒரு பெண் அரை நிர்வாண ஓட்டம் போகும் அளவுக்கு வெறுப்படையவைக்கும் நிலையில் இருக்கும் காவல் துறையின் நிலைக்கு யார் பொறுப்பு? அவர்கள் மீது நம் கோபம் திரும்ப வேண்டாமா?

பூஜாவின் எதிர்ப்பைச் சில பத்திரிகைகள், ‘அன்று காலை ஒரு மணிநேரத்துக்கு சாலையில் சென்றவர்களின் கண்களுக்கு எதிர்பாராத விருந்து’ என்று வர்ணித்தன. சே!
கோபம் 4

சென்னை நகரில், காலை நெரிசல் நேரத்தில் அசோக்பில்லர் அருகே ஒரு பஸ்ஸின் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தவர்களை மற்றொரு பஸ் வந்து நசுக்கியதில் இரு மாணவர்-கள் இறந்தார்கள். இது ஒரு கொடூரம் என்றால், அடுத்த நாள் இன்னொரு கொடூரம் நடந்தது.

அன்று நகரின் பல பகுதிகளில் பஸ்களில் படிக்கட்டில் பயணம் செய்தவர்களை போலீஸார் கழிகளால் அடித்து உள்ளேயோ வெளியேவோ துரத்தினார்கள்.

பஸ் பயணம் செய்யும் எல்லாருக்கும் ஓர் உண்மை தெரியும். ஸ்டைலுக்காக, பந்தாவுக்காகப் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் பயணிகள் மொத்தமாக 5 சதவிகிதம்கூடக் கிடையாது. வேறு வழியில்லாமல் படிக்கட்டில் செல்வோர்தான் 95 சதவிகிதம்.

நெரிசல் நேரத்தில் போதுமான பஸ்கள் இல்லை. இருக்கும் பஸ்களை சொகுசுப் பேருந்துகள், பாயின்ட் டு பாயின்ட் பஸ்கள் என்றெல்லாம் பிரித்து, கட்டணங்களைக் கடுமையாக உயர்த்தி வருகிறது போக்குவரத்துக் கழகம். சாதாரண பயணிகள் படிக்கட்டில் தொங்கியாவது செல்லாவிட்டால், ஒருபோதும் குறித்த நேரத்தில் வேலைக்குப் போய்ச் சேர முடியாது என்பதுதான் நடைமுறை நிலைமை.

சென்னையில் அளவுக்கதிகமாக டூ வீலர்கள் பெருகுவதற்கும், ஆட்டோக்களின் அக்கிரமங்களைத் தட்டிக் கேட்க முடியாமல் சகித்துக்கொள்வதற்கும் ஒரே காரணம், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அலட்சியம்தான்! பஸ்களை இன்னும்கூட அதிகரித்தால் டூ வீலர்கள் கணிசமாகக் குறையும். ஆட்டோக்கள் ஒழுங்குபடும். அரசோ இலவச டி.வி. கொடுப்பது, மேம்பாலம் கட்டுவது என்று லாபகரமான விஷயங்களை மட்டுமே கவனிக்கிறது.

பஸ் பயணிகள் இறந்த மறுநாள், போலீஸார் கழிகளால் நியாயமாக அடித்திருக்க வேண்டியது போக்குவரத்து அமைச்சரையும், செயலாளரையும், போக்குவரத்துக் கழக அதிகாரிகளையும்தான்! துளியாவது மனசாட்சி மீதி இருந்தால், அவர்கள் தயவுசெய்து மஃப்டியில் காலை 8 மணிக்கு அசோக் பில்லர் அருகே பஸ் ஏறி கோட்டை வரை பயணம் செய்து பார்க்கட்டும் என்று சவால் விடுகிறேன்.

கோபம் 5

ஒரு பக்கம் இன்னும் 13 வருடங்களில் ‘வல்லரசாகிவிட’ இருக்கும் இந்தியாவில், விவசாயி-களின் தற்கொலை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் தகுதிக்கு வந்துவிட்டது.

பிரதமர் மன்மோகன் சிங், கடந்த ஜூலையில் மராட்டிய விதர்பா பகுதிக்குச் சென்று இறந்த விவசாயிகளின் குடும்பங்-களுக்கு ஆறுதல் சொல்லி, நிவாரணமாக 3,750 கோடி ரூபாய் தருவதாக அறிவித்தார். அடுத்த 12 மாதங்களில் 1,138 விவசாயிகள் கடன் பிரச்னைகளால் தற்கொலை செய்திருக்கிறார்கள்.

அரசு நிவாரணமாக குடும்பத்துக்கு 10,000 ரூபாய் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. இரு குழந்தைகளின் தாயும், 21 வயது விதவையுமான வந்தனா ஷிண்டேவுக்குக் கொடுத்த அரசு செக் பவுன்ஸ் ஆகி-விட்டது. அரசுக் கணக்கில் பணம் இல்லையாம். ஐயா, கலெக்டர் மகா ஜனங்களே, ஐ.ஏ.எஸ். படிப்பில் என்னதான் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள்?

கோபம் 6
இந்த முறையும் ஜூன் 12 மேட்டூர் அணை திறக்கப்படாமல், கர்நாடகத்தில் கொட்டும் மழையின் உபரித் தண்ணீர்தான் நமக்கு வந்து சேரும் என்ற நிலையில், முதலமைச்சர் கருணாநிதி பெங்களூரு செல்கிறார் என்ற செய்தி வந்தது. காவிரி நீருக்காகத்தான் குமாரசாமியிடம் பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் சகிதம் பேசப் போகிறாரோ என்று பார்த்தால், குடும்பப் பிரச்னையை பேசித் தீர்க்கத்தான் போனார் என்று அடுத்த செய்தி வந்திருக்கிறது. இதற்கு நாம் கோபப்பட்டால் பதிலுக்கு அவர்கள் கோபப்படுவார்கள் என்பதற்காக, நாம் கோபப்படாமல் இருக்க முடியுமா, என்ன?

கோபம் 7

‘உன் கோபங்களால் இதயத்-துக்கு என்ன ஆகியிருக்கிறது என்று ஈ.சி.ஜியால் மட்டும் கண்டுபிடிக்க முடியாது; டிரெட் மில் டெஸ்ட் எடுத்துவிடுவதுதான் நல்லது’ என்று நேற்று என்னிடம் சொன்ன டாக்டர் மீதும், ஓவராக அலட்டிக்கொள்ளாமல் இருக்கப் பழகிக்கொள்ள ‘ஆர்ட் ஆஃப் லிவிங்’குக்கோ, சகஜஸ்திதி யோகா வகுப்புக்கோ செல்லும்படி அறிவுரை வழங்கிய சிநேகிதி மீதும்... கடைசி கோபங்கள்!


(ஓ... போடுவோம்!)


நன்றி: ஆனந்த விகடன்




Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com