Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida


ஞாநி கட்டுரைகள்

1. சில நேரங்களில் சில புதிர்கள்!

2. ரௌத்ரம் பழகு!

3. எனக்கான தகவல் எங்கே?

4. கனவு காணுங்கள்!

5. அறிந்தும் அறியாமலும் - 13

6. அறிந்தும் அறியாமலும் - 14

7. அறிந்தும் அறியாமலும் - 15

8. அறிந்தும் அறியாமலும் - 16

***********

நிலமென்னும் நல்லாள்: பாஸ்கர் சக்தி

ஏப்ரல் 06 இதழ்

மே 06 இதழ்

ஜூன் 06 இதழ்

ஜூலை 06 இதழ்

செப்டம்பர் 06 இதழ்

நவம்பர் 06 இதழ்

ஜனவரி 07 இதழ்

ஜூன் 07 இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: dheemtharikida@
hotmail.com




கட்டுரை
ஞாநி

எனக்கான தகவல் எங்கே?

‘இது தகவல் யுகம்; தகவல்தான் இனி அதிகாரம்’ என்ற இரு வாக்கியங்கள் ஓயாமல் நம்மைச் சுற்றி ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. உண்மைதான்.

ஓயாமல் நம்மிடம் தகவல்கள் குவிக்கப்படுகின்றன என்பதும் உண்மைதான். ஆனால், உடனுக்குடன் நிகழும் பல விஷயங்களில் நமக்கு நிஜமாகவே தேவைப்படும் தகவல்கள் கிடைக்கின்றனவா? பெரும்பாலும் இல்லை!

எடுத்துக்காட்டாக, அண்மைக் காலத்தின் சில நிகழ்ச்சிகளில் நான் அறிய விரும்பி, ஆனால் கிடைக்காத சில தகவல்களை இங்கே வரிசைப் படுத்துகிறேன்.

1. கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் தில்லுமுல்லுகள், அராஜகங்கள் நடந் ததையடுத்து, அவற்றை முதலமைச்சர் கருணாநிதி ரத்து செய்வதாக அறிவித்தார். கூட்டணிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பே இதற்குக் காரணம். சரி, தேர்தல்கள் ரத்தாகிவிட்டன. மறுபடியும் ஒரு தேதி குறிக்கப்பட்டு நடத்தப்படும். அப்போது இப்படிப்பட்ட அராஜகங்கள் நடக்காது என்பதும் ஒரு நல்ல நம்பிக்கைதான்.

ஆனால், இப்போது நடந்த அராஜகங்கள் என்னென்ன? வேட்பு மனுவை ஏற்க மறுப்பது, வேட்புமனுவைத் தாக்கல் செய்யவிடாமல் கேட்டைப் பூட்டித் தடுப்பது, வேட்பு மனுப் படிவங்களையே தராமல் இருப்பது, வேட்பு மனு தாக்கல் செய்யாதே என்று மிரட்டுவது, மீறி தாக்கலான வேட்பு மனுக்களைச் செல்லாது என்று அறிவிப்பது... இப்படிப் பட்டியலிடலாம்.

இவற்றைச் செய்தவர்கள் யார், யார்? உள்ளூர் தி.மு.க. பிரமுகர்களும், ஒரு சில கூட்டுறவுச் சங்க அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும்தானே? அவர்கள் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது பற்றி ஒரு தகவலும் இல்லையே! மறுபடி தேர்தல் நடக்கும்போதும் இவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?!

2. பொதுத் துறை டெலிபோன் நிறுவனமான பி.எஸ்.என்.எல். நவீன தொழில்நுட்பக் கருவிகளுக்கு டெண்டர் விட்டால் நல்லதா, விடாமல் இருந்தால் நல்லதா என்று ஒரு பட்டிமன்றம் நடந்து கொண்டு இருக்கிறது. டெண்டர் விட்டால் நஷ்டம் என்று புது மந்திரி ராசாவும், விடாவிட்டால் நஷ்டம் என்று பழைய மந்திரி தயாநிதிமாறனும் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கங்களும் சொல்கின்றனர். மாறி மாறி ஓர் அறிக்கை யுத்தமே நடக்கிறது.

இரு தரப்பும் ‘மறு தரப்பு சொல்வது பாதி உண்மை/முழுப் பொய்’ என்கிற தொனியில் பேசி வருகின்றன. பிரதமரும் மத்திய அரசும் இது குறித்து ஏன் விசாரணை நடத்தவோ, எல்லா விவரங்களையும் தெரிவிக்கும் வெள்ளை அறிக்கையோ வெளியிட முன்வரவில்லை? தொழில்நுட்ப விஞ்ஞானிகள் இந்தப் பிரச்னையில் பாரபட்சமின்றி ஏன் கருத்து தெரிவிக்கவில்லை? அசல் உண்மைதான் என்ன? அதை மக்கள் தெரிந்துகொள்ள என்ன வழி?

3. தொழிற்கல்வி நிறுவனங்களில் கொள்ளை அடிக்கிறார்கள்; அளவு கடந்த நன்கொடை வசூலிக்கிறார்கள் என்று டாக்டர் ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுக்குத் தன்னிடம் அப்படி எதுவும் புகார் வரவில்லை என்று அமைச்சர் பொன்முடி சொல்ல... இரு தரப்பும் அறிக்கைப் போர் நடத்தினார்கள். இப்போது இரு தரப்பினரும் மௌனமாகி விட்டார்கள். அசல் நிலைமை என்ன? எந்தெந்தக் கல்லூரி எவ்வளவு கட்டாய நன்கொடை வசூலிக்கிறது என்று அரசு கண்டுபிடித்து வெளியிட முடியாதா? அல்லது, ராமதாஸே பெற்றோர்களைத் திரட்டி தகவல் சேகரித்து வெளியிட முடியாதா? ஏன், எல்லாத் தரப்பினரும் ஒரு கட்டத்தில் கப்சிப் ஆகிவிடுகிறார்கள்? திரை மறைவில் என்னதான் நடக்கிறது?

4. ஒவ்வொரு கல்வியாண்டு தொடங்கும்போதும் மருத்துவ, பொறியியல் சீட்டுகளுக்கான கிராக்கியை ஒட்டி, இடஒதுக்கீடு முதல் நன்கொடை வரை எல்லா அம்சங்களும் ஒரு மேலெழுந்த வாரியான விவாதத்துக்கும் அலசலுக்கும் உள்ளாகின்றன. இந்தச் சீட்டுகளின் எண்ணிக்கை மொத்தமாகச் சில ஆயிரங்கள்தான். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கூடங்களில் முதல் வகுப்பில் சேர்கிறார்கள். இந்தக் கல்வியின் நிலை எந்த கதியில் இருக்கிறது, எத்தனை அரசுப் பள்ளிகளில் வருடத்தில் எத்தனை நாள் வகுப்பு நடக்கிறது, பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, ஐந்தாம் வகுப்புக்கு வரும்போது எத்தனை குழந்தைகள் பள்ளிப் படிப்பைத் தொடராமல் போய் விடுகிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் ஏன் நமக்குத் தகவல்கள் சொல்லப்படுவதில்லை? ஏன், எந்த அரசியல் கட்சியும் மெடிக்கல் சீட்டுக்குப் போடும் சத்தத்தில் பாதி சத்தம்கூட இதைப் பற்றிப் போடுவதில்லை?

5. இந்தியாவில் மொத்த ஹெச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 51 லட்சம். இதில் தமிழ்நாட்டில் சுமார் நான்கு லட்சம். போன வாரம் வரை சொல்லப்பட்ட கணக்கு இது. புதுக் கணக்கு வந்திருக்கிறது. இப்போது இந்தியாவில் சுமார் 30 லட்சம் பேருக்குக் கீழேதானாம்!

தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம்தானாம்! மத்திய அமைச்சர் அன்புமணியின் நல்வாழ்வுத்துறை அதிகாரபூர்வமாக இந்தத் தகவல்களை அறிவித்திருக்கிறது.

இதில் நான் அறிய விரும்பும் தகவல் எப்படி சரிபாதியாக எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தது? மருத்துவ சிகிச்சை மூலம் மட்டுமே முழு குணமாக்கி எண்ணிக்கையைக் குறைத்திருக்க வாய்ப்பில்லை. சரி பாதி பேர் செத்துப் போய்விட்டதால் குறைந்ததாகக் கருதவும் வாய்ப்பில்லை. ஒரே காரணம்தான் இருக்க முடியும். இதற்கு முன்பு எடுத்த, சொன்ன கணக்கு தப்பு. இப்போது எடுத்ததுதான் சரி! அப்படியானால் இத்தனை காலமாக ஒரு தப்புக் கணக்கின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை செலவு செய்து வந்ததற்கு யார் பொறுப்பு?

எய்ட்ஸ் தொடர்பான துறையில் இதுவரை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு நேரடியாக ஆன செலவைவிட அதிக செலவு விழிப்பு உணர்வு/விளம்பரம்/தொண்டு என்ற பெயரில் அதிகாரிகளும், தொண்டு அமைப்புகளும் செய்ததுதான் என்பதை யாரும் ஊகிக்கலாம். இனி எந்த அடிப்படையில் எந்தெந்த விஷயங்களுக்கு எவ்வளவு செலவு செய்யப்போகிறார்கள் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வழி என்ன?

ஒருபக்கம், அவசியமான தகவல்கள் நமக்குத் தெரியப்படுத்தப்படுவதில்லை. மறுபக்கம், நமக்குத் தேவையற்ற தகவல்கள் நம்மிடம் கொட்டிக் குவிக்கப்படுகின்றன. இதற்கு எடுத்துக்காட்டுகள் தரத் தேவையில்லை. உண்மையில் இது நடப்பதே, தேவையான தகவல்களைத் தராமல் மறை(று)ப்பதிலிருந்து, நம் கவனத்தைத் திசை திருப்பத்தான்!

இன்று நடுத்தரவர்க்கத்தின் படித்தவர்களுக்கு எளிதாகத் தகவல் கிடைக்கும் இடம் ‘இன்டர்நெட்’ என்று கருதப்படுகிறது. ‘கூகுள்’ போன்ற ‘தகவல் தேடி’கள் நிறைய இருக்கின்றன. அவற்றில் ஒரு சொல்லைத் தட்டித் தேடச் சொன்னால், தகவல்கள் பக்கம் பக்கமாகக் குவிந்துவிடும். பள்ளிக்கூட ஹோம் வொர்க், காலேஜ் ப்ராஜெக்ட், செமினார் வொர்க் உட்பட எல்லாவற்றையும் இணையத்தைப் பார்த்தே முடித்துவிடலாம் என்ற அணுகுமுறை இன்று அதிகரித்து வருகிறது.

உண்மைதான். போதுமான தகவல்கள் கிடைக்கத்தான் செய்கின்றன. அதுதான் ‘நெட்’டின் வலிமை!

அதேசமயம், எந்தத் தகவலையும் மறு உறுதி செய்துகொள்வது கடினம். தகவல் சரியா, தவறா என்று தெரியாமலே பயன்படுத்தும் வாய்ப்பு மிக அதிகம்.

இதெல்லாம் போக, நெட்டில் நிலவும் நீதிக் கதைகள் சமயத்தில் என்னை எரிச்சலடைய வைக்கின்றன. இந்த வார எரிச்சல் இதோ...

‘ஒரு தம்பதிக்கு 11 வருடம் கழித்து ஆண் குழந்தை பிறந்தது. அன்பான தம்பதிதான். கண்ணின் மணியாக அந்தக் குழந்தை. அதற்கு இரண்டு வயதானபோது ஒருநாள், மூடி கழற்றிய ஒரு மருந்துப் புட்டியை கணவன் (தந்தை) பார்த்தான். அவனுக்கு ஆபீஸ் கிளம்ப லேட்டாகிவிட்டது. எனவே, மனைவியை அழைத்து மருந்துப் புட்டியை மூடி அலமாரியில் வைக்கச் சொல்லிவிட்டுச் சென்றான். சமையலறை வேலையில் ஆழ்ந்திருந்த அவன் மனைவி, இந்த விஷயத்தை அடியோடு மறந்துவிட்டாள். குழந்தை மருந்து புட்டியைப் பார்த்துவிட்டு, அந்த மருந்தின் நிறத்தால் கவரப்பட்டு, விளையாட்டாக மொத்த மருந்தையும் குடித்துவிட்டது. அந்த மருந்து பெரியவர்கள் மட்டும் டோஸ் டோஸாகத் தவணைகளில் குடிக்க வேண்டிய & நச்சுத்தன்மை கொண்ட மருந்து. மயங்கி விழுந்த குழந்தையை அம்மா பதறிப்போய் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல, அங்கே அது இறந்துவிட்டது!

அவள் அதிர்ச்சியடைந்தாள். தன் கணவன் முகத்தில் எப்படி விழிப்பது என்று கலக்கமடைந்தாள். தகவல் தெரிந்து துக்கத்தோடு வந்த தந்தை, இறந்த குழந்தையைப் பார்த்தான். தன் மனைவியிடம் ஐந்தே வார்த்தைதான் சொன்னான்.


இனி கேள்விகள்: 1. அந்த ஐந்து வார்த்தைகள் என்ன? 2. இந்தக் கதையின் நீதி என்ன?’ இதைச் சொல்லிவிட்டு, அடுத்து வருபவைதான் என்னை எரிச்சலடையச் செய்தன.

‘ஐ வில் கில் யூ பிட்ச்! (உன்னைக் கொல்லப்போறேண்டி பெட்டை நாயே!)Õ என்றான் கணவன். அவன் கோபம் செயல்பூர்வமான நடத்தை. குழந்தை இறந்துவிட்டது. அதை உயிர்ப்பிக்க முடியாது. அம்மா மட்டும்தான் இருக்கிறாள். அலட்சியமான நடத்தைக்காக அவள் கொல்லப்பட வேண்டும். அவள் மட்டும் பாட்டிலை மூடிவைக்க நேரம் ஒதுக்கியிருந்தால், இந்த சம்பவம் நடந்திருக்காது. அவள் மீதுதான் குற்றம். தன் குழந்தையைத் தானே கொன்றுவிட்டாள்.

இந்தத் தருணத்தில் அவளுக்குக் கணவனிடமிருந்து வசவும் சித்ரவதையும் கிடைப்பதுதான் சரி.

அதைத்தான் அவன் கொடுத்தான். எல்லாரும் வாழ்க்கையை இந்தக் கோணத்தில் இருந்து பார்க்கத் தொடங்கி விட்டால், உலகத்தில் தீய சக்திகளே இருக்க மாட்டார்கள். சிந்தியுங்கள்.

இந்தக் கதை நாம் எல்லாரும் படிக்க வேண்டியது. சில நேரங்களில் நம் உறவுகளிலோ, வேலையிலோ, நமக்குத் தெரிந்தவர்களிடமோ, ஒரு தவறுக்கு யார் பொறுப்பு, யாரைப் பழி சொல்வது என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து நம் நேரத்தை வீணாக்குகிறோம். இழப்பைச் சரி செய்யச் சரியான வழி & உடனடியாக, அதற்குப் பொறுப்பானவர்களுக்கு நரகமே வெட்கப்படும்படியான அளவுக்குக் கடுமையான தண்டனை தருவதேயாகும்!’ என்கிறது அந்தக் கதை.

மிக மிக அபத்தமான, அதேசமயம் ஆபத்தான (அ)நீதிக் கதை இது.

ஆபீஸ் போக லேட்டாவதால், மருந்து புட்டியை மூடி வைக்காமல் கணவன் சென்றது தவறில்லை என்றால், சமையல் வேலையில் மூழ்கி இருந்ததால் மனைவி அதை மறந்தது மட்டும் எப்படி தவறாகும்? ஆணின் வேலைதான் முக்கியமானது; பெண்ணின் வேலை அல்ல என்ற சம்பிரதாயப் பார்வை இது.

அடுத்தது, தவறு நடந்துவிட்டால், அதற்கு யார் பொறுப்பு என்றெல்லாம் யோசிக்காமல், ‘யார் காரணம்’ என்று உடனடியாகத் தோன்றுகிறதோ அவரை உடனடியாகக் கடுமையாக தண்டித்துவிடு என்ற மிகமிக தவறான, மிகமிக ஆபத்தான கொள்கையை மனதில் விதைக்கிறது கதை. இதன்படி, அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் என்கவுன்ட்டர் கொலைகள் முதல், பயங்கரவாதிகள் செய்யக்கூடிய உடனடி நீதிக்கொலைகள் வரை அத்தனையும் நியாயமாகிவிடுமே?

‘இன்டர்நெட்’டானாலும் சரி, நம் ‘தலைவர்’களின் அறிக்கைகளானாலும் சரி, நம் தலைக்குள் ஏராளமான தகவல்களை அள்ளித் திணிக்கலாம். ஆனால், அவற்றை அலசி ஆராய்ந்து, தகவலின் தகுதிக்கேற்ப ஏற்கவும், நிராகரிக்கவுமான துல்லிய பார்வை நமக்கு வேண்டும். அந்தப் பார்வை வந்தால்தான், ‘எனக்கான தகவல் எங்கே?’ என்று கேட்பதும் தொடங்கும்.

அடுத்த வார முன்னோட்டம்: குடியரசுத் தலைவர் பதவிக்கு மகாஸ்வேத தேவியைப் பரிந்துரை செய்தேன். நடக்க வில்லை. இருந்தாலும் மனம் தளராமல், குடியரசு துணைத் தலைவருக்கு ஒருவரை முன்மொழியப் போகிறேன். அவர் ஒரு பச்சைத் தமிழர்!

\ (ஓ...போடுவோம்!)

நன்றி: ஆனந்த விகடன்



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com