|
ஞாநி
அறிந்தும் அறியாமலும் - 14
ஒரு சிறுமி, தன் உடலிலிருந்து யோனி வழியே ரத்தம் வருவதை முதல் முறை கண்டதும் பயப்படுவது போலவே, ஒரு சிறுவனும் தன் ஆணுறுப்பிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒரு திரவம் வெளிவருவதை முதல் முறை காணும்போது மிரட்சி அடையத்தான் செய்வான்.
இந்த மிரட்சியைத்தான் பல போலி மருத்துவர்கள் தங்களுக்கு மூலதனமாக்கிக்கொள்கிறார்கள். சிறுமியும் சிறுவனும் தங்களுக்கு நிகழ்வது என்ன என்பதை அறிவியல்பூர்வமாக உணர்ந்துவிட்டால், பல தவறான கருத்துக்கள் தங்கள் தலையை ஆக்கிரமிக்காமல் தப்பிக்கலாம்.
இனப்பெருக்கத்துக்கான அடிப்படைத் தேவைகள் ஆணின் விந்துவும், பெண்ணின் சினைமுட்டையும் என்பதால், இவை அரைகுறையாகவோ முழுமையாகவோ ஆதி காலம் முதல் இலக்கியங்கள், புராணங்கள், இதிகாசங்கள், கர்ண பரம்பரைக் கதைகள் எனப்படும் வாய்மொழி இலக்கியம் என எல்லாவற்றிலும் பூடகமாகக் குறிப்பிடப்பட்டு வருகின்றன. சிவலிங்கம் என்ற கருத்தாக்கமே ஆண் & பெண் உறுப்புகளின் வடிவ அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்று என மானிடவியல் ஆய்வாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். ஆண் விதை, பெண் நிலம் என்பன போன்ற கவிதைக் குறியீடுகள் எல்லாமே விந்து முட்டையின் வெவ்வேறு வர்ணனைகள்தான்.
ஆணின் விந்துவை அதன் வெண்ணிற திரவத் தோற்றத்தால், பனித் துளியுடன் ஒப்பிடுவது மிகப் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது. மழை தவிர, வானிலிருந்து பொழியும் பனிதான் நிலத்தை (மண்ணை) வளப்படுத்துவதாக ஓர் ஆதி நம்பிக்கை உண்டு. பைபிளில், எந்த அரசன் இளமையின் ‘பனி’ நிரம்பிய ஆண்மையுடன் இருக்கிறானோ, அவனையே மக்கள் பின்பற்ற வேண்டும் என்று ஒரு சங்கீதத்தில் வருகிறது. சம காலத் திரைப்படப் பாடல், ‘பனித் துளி ஒன்று சிப்பியில் விழுந்து வந்தது முத்து என் மன்னவன் சொத்து’ என்று சொல்வதெல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவும் இலக்கிய உருவகத்தின் தொடர்ச்சிதான்.
இலக்கியம் என்பது சுவையான கற்பனை. சமயத்தில் அதில் அறிவியலும் நிஜமும் கலந்திருக்கும். ஆனால், காலம் காலமாக நிலவும் எல்லா கற்பனைகளும் அறிவியல் பூர்வமானவை அல்ல.
அப்படிப்பட்ட ஒரு முழுக் கற்பனைதான்... ரத்தம்தான் விந்துவாக மாறுகிறது என்பதும்! ரத்தம் போன்று உடலுக்கு முக்கியமான இன்னொரு திரவம் விந்து என்பதற்கு மேல் இரண்டுக்கும் பொருத்தமில்லை. உடலில் இருக்கும் சிறுநீரும் முக்கியமான திரவம்தான். ஒழுங்காக சிறுநீர் உற்பத்தியாகி வராவிட்டால், ஜீரண உறுப்புகளும் சிறுநீரகமும் சரியாக வேலை செய்யவில்லை என்று பொருள். சிறுநீரும் விந்துவும் ரத்தமும் முக்கியமானவை. ஆனால், ஒன்றிலிருந்து இன்னொன்று உருவானவை அல்ல.
எனவே, விந்து என்பது ரத்தமும் அல்ல; பல சொட்டு ரத்தம் சேர்ந்து உருவானதும் அல்ல! அது உயிரணுக்கள் அடங்கிய ஒரு திரவம். அதில் இருப்பவை அமினோ ஆசிட்கள், சிட்ரேட், என்சைம்கள், சர்க்கரைப் பொருளான ஃபிரக்டோஸ், புரதங்கள், விட்டமின் சி, சிட்ரிக் ஆசிட், பாஸ்பேட்டுகள், துத்தநாகச் சத்து போன்றவை தான்.
உயிரணுவில் இருக்கும் டி.என்.ஏ வைப் பத்திரமாக வைத்திருப்பது, உயிரணு உறைந்துவிடாமல் அதைப் பெண்ணின் யோனிப் பாதை வழியே கருப்பை வரை எடுத்துச் செல்லும் ஒரு வாகனமாகப் பயன்படுவது, அப்படிச் செல்லும்போது அதைப் பெண் உடலில் உள்ள எதிர்ப்பு அணுக்கள் கொன்றுவிடாமல் காப்பாற்ற உதவுவது என விந்துவில் இருக்கும் பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நோக்கமும் பயனும் உடைய, நுட்பமான பல அம்சங்கள் உள்ளன.
ஒரு சிறுவனின் விதைப் பைகள் தினமும் உயிரணுக்களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கின்றன. எத்தனை உயிரணுக்கள் தெரியுமா? பல கோடி உயிரணுக்கள்! தினசரி!
அவற்றுடன் இதர சுரப்புகளும் சேர்ந்து, அவை முதிர்ச்சியடைய சில வாரங்கள் பிடிக்கும். முதிர்ந்த நிலையில், இதர இனப்பெருக்க உறுப்புகள் சுரக்கும் திரவங்கள் சேர்ந்து, விந்து சேகரப்பைக்குச் செல்லும் திரவத்தைதான் ‘செமென்’ எனப்படும் விந்து என்கிறோம்.
ஒரு சிறுவனின் உடலில் தினசரி தயாராகும் உயிரணுக்களும் விந்துவும் என்ன ஆகின்றன? சுய இன்பத்தின் மூலம் விந்து வெளியேறலாம். இரவு படுக்கையில் சுகமான கனவுகளின் விளைவாக வெளியேறலாம். இவை இரண்டுமே இல்லாமல், ஒரு சிறுமியின் உடலில் தயாராகும் சினைமுட்டையும், கருப்பையின் உட்புறப் பூச்சும் மாதாமாதம் வெளியேற்றப்படுவது போல, சிறுவனுக்கு இவை இயல்பாக வெளியேற வழிதான் என்ன?
அப்படி எதுவும் இல்லை. விந்துவில் இருக்கும் வெவ்வேறு பொருட்கள் உடலுக்குள்ளேயே கரைந்து கலந்துவிடு-கின்றன. புதிது புதிதாக உயிரணுக்களை சிறுவனின் விதைப் பைகள் தயாரித்து அனுப்ப அனுப்ப... புதிய விந்துவும் தயாராகிக்கொண்டே இருக்கிறது.
உடலுறவிலோ, சுய இன்பத்திலோ, இரவுக் கனவிலோ வெளியேற்றப்படும் விந்துவில் வெறும் ஒரு சதவிகிதம்தான் உயிரணுக்கள் எனப்படும் ‘ஸ்பெர்ம்’ இருக்கிறது. மீதி திரவம் எல்லாம், துணை செய்ய வந்த சுரப்புகள்தான்.
அதிகபட்சம் ஆறு வயது வரைதான் படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கும் தவறு நிகழும். அதற்குள் ‘டாய்லெட் ஹேபிட்’ எனப்படும், குறித்த நேரத்தில் கழிவறையைப் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டு இருக்கும்; பெற்றோரால் ஏற்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். எனவே, அந்த வயதுக்குப் பிறகு படுக்கையை நனைப்பது என்பது, இரவில் விந்து வெளியேற்றத்தால் நிகழ்வதுதான்.
ஆங்கிலத்தில் நாக்டர்னல் எமிஷன்ஸ், வெட் ட்ரீம்ஸ் என்று குறிக்கப்படும் இந்த நிகழ்வு சகஜமானது.
10 வயது முதல் டீன் ஏஜ் தொடர்ச்சி-யாக, எதிரெதிர் பாலினர் இடையே இருக்கும் ஈர்ப்பு என்பது இயற்கையானது. இதே சமயத்தில், சிறுவர்கள் அன்றாட வாழ்க்கையில் தங்களைச் சுற்றிலும் பார்க்கும் விஷயங்களில் காதல், காமம் தொடர்பான ஏராளமான பிம்பங்கள் இருக்கின்றன. வீட்டுக்குள்ளேயே அப்பா & அம்மா, இதர பெரியவர்கள் ஒருவரோடொருவர் நடந்துகொள்ளும் விதத்தில் தொடங்கி, டி.வி., சினிமா, பத்திரிகைகள் போன்றவற்றில் காணும் பிம்பங்கள் வரை எல்லாவற்றிலும் ஆண் & பெண் உறவு பற்றிய ஈர்ப்பை சிறுவர் மனதில் தூண்டும் அம்சங்கள் இருக்கின்றன.
பெரியவர்கள், சிறுவர்கள் முன்னால் கட்டி அணைப்பது, முத்தமிடுவது, உடைகள் விலகிய நிலையில் ஒன்றாக இருப்பது போன்ற தோற்றங்களை மட்டும் இங்கே நாம் குறிப்பிடவில்லை. அத்தகைய நிலையை பெரும்பாலான பெரியவர்கள் தவிர்க்கத்தான் செய்வார்கள். வயது வந்தவர்களுக்கிடையே சகஜமாக நிகழும் பரிமாற்றங்கள்கூட, அந்த வயதை நோக்கி வந்துகொண்டு இருப்பவர்களுக்கு உதவும் எதிர்காலத் தயாரிப்புப் பாடங்கள்தான்.
இயற்கையான ஈர்ப்பும், சுற்றிலும் காணும் விதவிதமான ஆண் &பெண் உறவு பற்றிய பிம்பங்களும் சிறுவனையும் சிறுமியையும் தம்மையறியாமலே காமக் கனவுகள் காணவும், நனவில் சுய இன்பம் பெற முற்படவும் தூண்டுகின்றன. கனவுக் கன்னி, ட்ரீம் கேர்ள் என்ற சொற் பிரயோகங்கள் குறிப்பதெல்லாம் பையன்களின் ‘நாக்டர்னல் எமிஷன்ஸ§’க்கு ஆதாரமாக இருக்கக்கூடிய பிம்பங்களைத்தான்.
சுய இன்பத்தில் ஈடுபடாத சிறுவர்களையோ ஆண்களையோ விரல் விட்டு எண்ணிவிடலாம் என்பது, பலருக்கு அதிர்ச்சி தரக்கூடிய உண்மை. சிறுவர்களில் 90 சதவிகிதம் பேர் சுய இன்பம் அனுபவிக்கிறார்கள்.
சுய இன்பம் பற்றி நம் சமூகத்தில் இருக்கும் சில கருத்துக்களைப் பார்ப்போம்.
அது ஆபத்தானது; தவறானது; சுய இன்பத்தில் ஈடுபட்டால், கண் பார்வை போய்விடும்; சுய இன்பத்தில் ஈடுபடுவோருக்குக் கேன்சர் வரும்; உடல் நலிவு ஏற்படும்; பின்னாளில் திருமணத்துக்குப் பின் மனைவியுடன் மகிழ்ச்சியான உடல் உறவில் ஈடுபடும் சக்தி இல்லாமல் போய்விடும்; சுய இன்பத்தில் விந்துவை விரயம் செய்வதால், விந்து உற்பத்தி குறைந்துவிடும்; சுய இன்பம் செய்தோருக்கு குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு குறைந்துவிடும்; பெண் துணை கிடைக்காதவர்கள், திருமணமாகாதவர்கள்தான் சுய இன்பத்தில் ஈடுபடுவார்கள்; பையன்கள்தான் சுய இன்பத்தில் ஈடுபடுவார்கள்; சிறுமிகள் ஈடுபடுவதில்லை...
இவைதான் சுய இன்பம் பற்றி நம் சமூகத்தில் நிலவும் முக்கியமான கருத்துக்கள். இவை எந்த அளவுக்கு உண்மை? எந்த அளவுக்குப் பொய்?
இந்த வார ஹோம் வொர்க்:
1. உங்களுடைய ட்ரீம் கேர்ள்/ட்ரீம் பாய் யார்? ஏன்?
2. இரவுப் படுக்கை ‘வெட் ட்ரீம்’ஸில் நனைந்தது தெரியவந்ததும், உங்கள் உணர்ச்சி என்ன? வீட்டில் மற்றவர்களின் உணர்ச்சி என்ன?
3. முதன்முதலில் விந்துவைப் பார்த்தபோது, என்ன உணர்ச்சி ஏற்பட்டது?
4. விந்துவில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்று உங்களுக்கு எப்போது முதலில் தெரிய வந்தது?
5. சுய இன்பம் பற்றி முதலில் உங்களுக்கு எப்போது தெரியும்?
பதில்கள் மற்றவர்களுக்காக அல்ல. உங்களுக்கானவை... உங்களுடையவை!
(அறிவோம்)
நன்றி: ஆனந்த விகடன்
|