பூநாரைக்கும் மின் வாகனங்களில் மின்கலங்கள் தயாரிக்க உதவும் லித்தியத்திற்கும் இடையில் என்ன தொடர்பு என்று நீங்கள் நினைக்கலாம். தொடர்பு இருக்கிறது. சிலி ஆண்டர்ஸ் மலைப்பகுதியில் இது பற்றி ராயல் சொசைட்டி (Journal proceedings of the Royal society) ஆய்விதழில் வெளிவந்த கட்டுரை நிரூபித்துள்ளது. இப்பகுதியில் உள்ள உப்புநீர் ஏரிகளில் நடக்கும் லித்தியம் சுரங்கம் தோண்டி எடுக்கும் செயல்களும், காலநிலை மாற்றமும் பூநாரைகளுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றி இந்த ஆய்வுக்கட்டுரை விரிவாகக் கூறுகிறது.
இப்பகுதியில் வாழும் இரண்டு வகை பூநாரைகளின் எண்ணிக்கையில் கடந்த 11 ஆண்டுகளில் 10 முதல் 12% வரை குறைவு ஏற்பட்டுள்ளதை இந்த ஆய்வு கண்டுபிடித்தது. லித்தியம் தோண்டப்பட்ட ஏரிகளில் மட்டுமே இந்த இரண்டு இனப் பூநாரைகள் இனப்பெருக்கம் செய்து வாழ்ந்து வந்தன. லித்தியம் என்ற தனிமத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தோண்டி எடுக்கப்படும் இடங்களில் ஏற்படும் உயிர்ப் பன்மயத்தன்மை பாதிப்புகள் பற்றி தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்று ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியரும், தெற்கு கரோலினா பல்கலைக்கழக மக்கட்தொகை உயிரியலாளருமான நாதன் சென்னர் கூறுகிறார்.காலநிலை மாற்றத்தினால் உப்புநீர் ஏரிகளில் நீர்மட்டம் குறைவது இப்பறவைகளுக்கு ஏற்பட்டுள்ள மற்றொரு அச்சுறுத்தல். இதன் மூலம் அவற்றிற்குக் கிடைக்கும் உணவின் அளவு குறைகிறது. இது இனப்பெருக்கத்தையும் பாதிக்கிறது. சிலியில் 3000 கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள மிகப் பெரிய அட்டகாமா சால்ட் ப்ளாட்ஸ் என்ற உப்பு ஏரியில் இனப்பெருக்கம் குறைந்ததால் அங்கு இவற்றின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. பொலிவியா பொட்டோசி மாகாணத்தில் உள்ள யுனியுனி உப்பு ஏரியிலேயே உலகின் மிகப்பெரிய லித்தியம் சேகரம் உள்ளது.
இப்பறவைகளை சார்ந்து நடைபெறும் சூழல் சுற்றுலா இப்பகுதியில் சாதாரண மக்களின் முக்கிய வயிற்றுப் பிழைப்பு.
பூநாரைகளின் வாழ்வு கேள்விக்குறியானால் இந்த மக்களே முதலில் பாதிக்கப்படுவர். இப்போது உலகில் உற்பத்தி செய்யப்படும் மொத்த லித்தியத்தில் 29% சிலி நாடே உற்பத்தி செய்கிறது. 2025ல் இதை இரு மடங்காக உயர்த்த அந்நாடு திட்டமிட்டுள்ளது.
இயற்கைப் பாதுகாப்பும் வளர்ச்சித் திட்டங்களும் ஒன்றுக்கு ஒன்று எதிராக செல்வதே பிரச்சனை. உலகில் இன்று வரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய அளவு இந்த தனிமத்தின் சேகரம் உள்ள இடம் பொலிவியா, அர்ஜெண்டினா, சிலி ஆகிய மூன்று நாடுகள் சேர்ந்து உள்ள லித்தியம் முக்கோணப் பகுதியே (Lithium triangle).
லித்தியம் தேடி அலையும் உலகம்
இப்பகுதி ஆங்கில எழுத்து எஸ் வடிவத்தில் கழுத்தும் பிங் நிறமும் உடைய ஆண்டியன், ஜேம்ஸ் மற்றும் சிலியன் என்னும் மூன்று பூநாரை இனங்கள் வாழும் இடம். 2035ல் பெட்ரோல் மற்றும் டீசலைக் கொண்டு இயங்கும் வாகனங்களின் விற்பனையைத் தடை செய்ய ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது. இனி வருங்காலம் மின்சார வாகனங்களின் காலம்.
மின்சார கார்களின் தேவையைப் பொறுத்து அதற்கு உள்ள மின்கலங்களைக் கூடுதலாகத் தயாரிக்க லித்தியத்தின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதனால் உலக நாடுகள் லித்தியத்தைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றன. இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு லித்தியத்தை எடுக்கும் சுரங்க நிறுவனங்கள் லித்தியம் சேகரம் உள்ள இடங்கள் எல்லாவற்றிலும் அதைத் தோண்டி எடுக்க அலைகின்றன.
இன்றுள்ள நிலையில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, சீனா, சிலி ஆகிய நாடுகளே இதை அதிகம் உற்பத்தி செய்கின்றன. ஐரோப்பிய நாடுகள் இதுவரை இதன் உற்பத்தியைத் தொடங்கவில்லை. இம்ரைஸ் என்ற பிரான்சின் சுரங்க நிறுவனம் அதற்கு சொந்தமான களிமண் சுரங்கத்தில் லித்தியத்தின் சேகரம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது.
அதனால் இதன் உற்பத்தி 2028ல் ஆரம்பிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்நிறுவனம் ஏழு லட்சம் வாகனங்களை இயக்கத் தேவையான 34,000 டன் லித்தியத்தை இங்கிருந்து உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. இதேபோன்ற ஒரு திட்டம் செர்பியாவில் தொடங்கப்பட்டபோது மக்கள் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டது.
இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில் 59 லட்சம் டன் அளவு லித்தியத்தின் சேகரம் இருப்பதாக இந்திய புவியியல் ஆய்வுக்கழகம் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளது. சுழிநிலைக் கார்பனைக் குறிக்கோளாகக் கொண்டுதான் லித்தியம் தோண்டி எடுக்கப்படுகிறது என்றாலும் அதனால் ஏற்படும் சூழல் பாதிப்புகளைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது என்று சூழல் ஆர்வலர்கள் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஜம்முவிற்கும் காஷ்மீருக்கும் இடையில் இருக்கும் இமாலய பூமி சூழல்ரீதியாக பலவீனமானது.
சுரங்கம் தோண்டுவதால் உயிர்ப் பன்மயத் தன்மை நாசமடையும். காஷ்மீரில் இருந்து 144 கிலோமீட்டர் தூரத்தில் கர்வால் பகுதியில் கடந்த 2022ல் மண் பூமிக்கடியில் புதையுண்டதால் பெருநாசம் நிகழ்ந்த ஜோஷிமட் உள்ளது. ஆய்வாளர்களின் இடைவிடாத முன்னெச்சரிக்கைகளுக்கு இடையிலும் தொடர்ந்து நடந்த விவேகமற்ற வளர்ச்சித் திட்டங்களே ஜோஷிமட் துயர பூமியாக மாறக் காரணம்.
ஒரு டன் லித்தியத்தை உற்பத்தி செய்ய ஏறக்குறைய 2.2 மில்லியன் நீர் தேவைப்படுகிறது. பூமியைத் தோண்டும் சுரங்கங்கள் அணைத்தும் உயிர்ப் பன்மயத் தன்மையை அழிக்கின்றன. நீர் மாசு, நீர்ப் பற்றாக்குறை, காற்று மாசு, நிலத்தடி நீர்மட்டத்தில் குறைவு போன்ற சூழல் நாசங்களை இது ஏற்படுத்துகிறது. சுரங்கம் தோண்டுவதற்கு முன்பும் பின்பும் உயிரினங்கள் மற்றும் சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதே இப்பிரச்சனைகளுக்கு உள்ள ஒரே தீர்வு.
பூமியின் நண்பர்கள் (Friends of Earth) அமைப்பின் ஆய்வுகள் சுரங்க நோக்கங்களுக்காக பூமியைத் தோண்டுதல் சமூகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறுகிறது. சிலியில் பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை, விவசாய முறை மற்றும் சூழல் வளம் மிக்க பூமியை சுரங்கங்கள் அழித்து விட்டன. இது பற்றிய முதல் ஆய்வு 2022ல் புவியின் எதிர்காலம் (Journal Earth’s future) என்ற ஆய்விதழில் வெளிவந்தது.
அலாஸ்கா ஆங்கரேஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்களுடன் இணைந்து மாசிசூசெட்ஸ் ஆர்ம்ஹெஸ்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சிலியில் லித்தியம் சுரங்கங்கள் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டனர். இவை பயன்படுத்திய நன்னீரின் அளவு 10% என்றாலும் இது நீரின் மறு உற்பத்தியை (water resupply) விட அதிகம்.
லித்தியம் வேண்டுமா, இல்லை அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு தாவரம் காப்பாற்றப்பட வேண்டுமா? அமெரிக்கா நவாடா மாகாணம் இந்த இரண்டு கேள்விகளுக்கு இடையில் சிக்கித் தவிக்கிறது. இங்கு மட்டுமே எஞ்சியிருக்கும் டியம்ஸ் பக்வீட் என்ற ஒரு காட்டுப்பூ முற்றிலும் அழியும் நிலையில் உள்ளது.
அமெரிக்காவில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரே இடம் இதுதான். லித்தியம் தோண்டி எடுக்கப்பட்டால் இந்த அபூர்வ தாவரமே முதலில் அழிந்து போகும். இச்செடியை பூமியில் இருந்தே முற்றிலும் இல்லாமல் செய்ய ஒரு புல்டோசரும் அரை மணி நேரமும் போதும்! உண்மையில் லித்தியத்தை விட அபூர்வமானதே இந்தத் தாவரம். பூமியில் இது தென்மேற்கு நவாடாவில் ரியோலைட் ரிட்ஜ் என்ற இடத்தில் வெறும் பத்து ஏக்கரில் மட்டுமே மிஞ்சியிருக்கிறது!
அதனால் லித்தியத்தை விட இதுவே விலைமதிப்பு மிக்கது என்று உயிரியல் பன்மயத்தன்மை மையத்தின் (Centre for Biological Diversity) கிரேட் பேசின் இயக்குனர் டாக்டர் பாட்ரிக் டோன்னலி கூறுகிறார். இதனால் இப்பகுதி ஒரே நேரத்தில் இரண்டு சூழல் சவால்களை எதிர்கொள்கிறது. ஒரு பக்கம் புவி வெப்ப உயர்வு. மற்றொரு பக்கம் உயிர் உலகின் ஒரு கன்னியின் இன அழிவு.
இதே நிலையில்தான் இன்று உலகம் உழன்று கொண்டிருக்கிறது. சுய லாபத்திற்காக வளர்ச்சி என்ற பெயரில் நடத்தப்படும் அழிவு வேலைகளா? இல்லை நம்மையும் வருங்காலத் தலைமுறைகளையும் இன்றும் என்றும் அழியாமல் காக்க உதவும் சூழல் வளமா? எது தேவை? யார் முடிவு செய்வது? மக்களாகிய நாம்தான்! கண்ணெதிரே நடக்கும் அழிவு வேலைகளை கைகட்டி வேடிக்கைப் பார்க்காமல் தெருவில் இறங்கிப் போராடத் தயாராவோம்!
** ** **
மேற்கோள்கள்: https://www.mathrubhumi.com/environment/columns/nature-future-column-on-climate-change-and-lithium-mining-influence-in-flamingo-birds-life-span-1.8338741
&
https://www.vox.com/22965660/electric-vehicles-lithium-ion-batteries-flamingos
- சிதம்பரம் இரவிச்சந்திரன்