மற்ற வகை மாசுகள் போல செயற்கையாக ஒளியூட்டுதலையும் கருத வேண்டும். மனிதன் உருவாக்கும் செயற்கை வெளிச்சத்தின் தாக்கம் இயற்கை உலகை அழிக்கும் மாசாக மாறியுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காலநிலை மாற்றத்துடன் ஒப்பிடக்கூடிய பிரச்சனையாக இந்த ஒளியூட்டுதலின் (lighting) அளவும் அதன் தீவிரத் தன்மையும் ஆண்டிற்கு 2% என்ற அளவில் அதிகரிக்கிறது என்று எக்ஸிடர் (Exeter) பல்கலைக்கழக உயிரியலாளர்கள் நடத்திய ஆய்வு கூறுகிறது.stadium lightingவிடியும் முன்பே இரை தேடும் பறவைகள்

பல்வேறு உயிரினங்களில் பரவலாக ஹார்மோன்களின் அளவு, இனப்பெருக்கச் சுழற்சிகள், செயல் புரியும் பாணிகள் மற்றும் எதிரிகளுக்கு இரையாகும் பலவீனத் தன்மை ஆகியவை இந்த மாசால் பாதிக்கப்படுகின்றன என்று இது பற்றி நேச்சர் சூழலியல் பரிணாமம் (Nature Ecology and Evolution) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரையில் ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர்.

பூச்சிகளின் மகரந்த சேர்க்கையில் குறைவு, வசந்த காலத்தில் முன்கூட்டியே மரங்களில் மொட்டுகள் தோன்றுவது, கடற்பறவைகள் கலங்கரை விளக்கங்களை நோக்கி பறந்து வருவது, கடல் ஆமைகள் விடியும் சூரியனின் ஒளியைத் தேடி கரை உள்பகுதிகளில் பிரகாசிக்கும் ஹோட்டல்களை நோக்கி வருவது உள்ளிட்ட பல சீர்கேடுகள் ஏற்படுவதை விஞ்ஞானிகள் முந்தைய 126 ஆய்வுகளை ஆய்வு செய்து செயற்கை ஒளியால் ஏற்படும் தாக்கத்தை மதிப்பிட்டனர்.

பரிசோதிக்கப்பட்ட அனைத்து வகை விலங்குகளிலும் இரவு நேர செயற்கை ஒளியால் மெலட்டானின் (melatonin) என்னும் உறக்கச் சுழற்சியை (sleep cycles) ஒழுங்குபடுத்தும் ஹார்மோனின் அளவு குறைவாகக் காணப்பட்டது. இரவு மற்றும் பகல் நேர உயிரினங்களின் (nocturnal and diurnal creatures) நடத்தை பாணிகள் மாறுகின்றன. பெரும்பாலும் இரவில் இரை தேடும் கொறிக்கும் வகை பிராணிகள் குறைந்த கால அளவிற்கே செயல்திறனுடன் செயல்படுகின்றன.

பறவைகள் நாளின் தொடக்கத்திலேயே பாடத் தொடங்குகின்றன. இரையாக உண்ண புழுக்களைத் தேடுகின்றன. ஒளி மாசு கண்ணுக்குத் தெரியாத பூச்சிகளை படையெடுத்து வரச் செய்கிறது. என்றாலும் ஆய்வு முடிவுகள் அனைத்தும் எதிர்மறையானவை அல்ல. சில பிரதேசங்களில் காணப்படும் சில இனத் தாவரங்கள் இரவு நேர ஒளியால் நன்மை அடைகின்றன. சில தாவரங்கள் வேகமாக வளர்கின்றன. சில வகை வௌவால்கள் செழித்து வாழ்கின்றன.

“ஆனால் சுட்டுப் பொசுக்கும் ஒளியுடன் எரியும் பல்புகள் அல்லது வேகமாகச் செல்லும் காரின் விளக்கொளியால் பூச்சிகள் போன்ற சில குறிப்பிட்ட உயிரினங்கள் ஒட்டுமொத்த அழிவை சந்திக்கின்றன. நுண்ணுயிரிகள், முதுகெலும்பற்றவை, தாவரங்கள், விலங்குகள் என்று எல்லா உயிரினங்களிலும் இதன் தாக்கம் பரவலாக காணப்படுகிறது.

இருட்டைக் கண்டு இன்னும் அஞ்சும் மனிதன்

நினைக்கும் இடங்கள் எல்லாவற்றிலும் ஒளியூட்டுவதைப் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும். செயற்கை ஒளி மாசு என்பதும் காலநிலை மாற்றம் போல மிக மோசமான சூழல் சீரழிவே. செயற்கை ஒளியூட்டல் கடந்த ஐந்து முதல் பத்தாண்டுகளில் வேகமாக அதிகரித்து வருவதால் இது பற்றி தீவிரமாக ஆராயப்படுகிறது. இதற்கான சான்றுகள் ஆதாரப்பூர்வமானவை.

புவியியல் ரீதியாக இப்பிரச்சனை எந்த அளவு விரைவாக பரவி வருகிறது என்பதை இரவில் எடுக்கப்படும் பூமியின் செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. செலவு பிடிக்கும் மென்மையான ஆம்பர் பல்புகள் (soft amber bulbs) வெண்ணிற ஒளி தரும் மலிவு விலை ஒளி உமிழ் விளக்குகளால் (LEDs) மாற்றப்பட்டு விட்டன. இதனால் செயற்கை ஒளியின் தீவிரம் அதிகமாகி விட்டது.

மென்மையான ஆம்பர் பல்புகள் என்பவை மஞ்சள் அல்லது செம்பழுப்பு நிறமுடைய ஒரு பிசின். ஒளி ஊடுருவும் தன்மையுடைய இது மற்றொரு பொருளுடன் உராயும்போது மின்னேற்றம் பெறுகிறது. சூரிய ஒளியைப் போல விரிவான நிறமாலையைக் கொண்டிருப்பதால் ஒளி உமிழ் விளக்குகளின் வெண்ணிற ஒளி உயிரியல் ரீதியாக பிரச்சனைக்குரியது. இப்பிரச்சனையில் அரசுகள், நிறுவனங்கள், தனிநபர்கள் பாரபட்சம் காட்டுகின்றனர்.

ஒளி உமிழ்வை ஏற்படுத்திவிட்டு அது பற்றி நாம் சிந்திப்பதேயில்லை. செயற்கை ஒளியை எங்கு, எப்போது தேவை என்பதை முடிவு செய்த பிறகே பயன்படுத்த வேண்டும். காலநிலை மாற்றத்தைப் போல இல்லாமல் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கண்டால் அது ஒளியூட்டலுக்கு ஆகும் செலவைக் குறைக்கும். பொருளாதார பயன் தரும். ஒரு சில விளக்குகளை மட்டும் பயன்படுத்தினால் குறைவான அளவு மின்சாரம் மட்டுமே செலவாகும். உமிழ்வு குறையும். சூழல் பாதுகாக்கப்படும். ஆனால் இதற்கு மனிதர்களின் மனப்போக்கு மாற வேண்டும். இருட்டைப் பார்த்து நாம் இன்னும் அஞ்சுகிறோம். இதனால் வெளிச்சத்தை ஏற்படுத்தி பயத்தைப் போக்க நினைக்கிறோம். அவசியத்திற்கு அதிகமாக இரவை பகல் போல ஆக்க விரும்புகிறோம். இந்த போக்கு மாறினால் இவ்வகை ஒளி மாசினால் உண்டாகும் அழிவிலிருந்து உயிரினங்கள் பாதுகாக்கப்படும் என்று ஆய்வுக் கட்டுரையின் முன்னணி ஆசிரியரும் எக்ஸிட்டர் பல்கலைக்கழக சூழல் மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான கழகத்தின் பேராசிரியருமான கெவின் காஸ்ட்டன் (Kevin Gaston) கூறுகிறார். பூமியை வாழ விடுவதும் அழிப்பதும் மனிதர்களாகிய நம் கைகளில்தான் உள்ளது.

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2020/nov/02/treat-artificial-light-form-pollution-environment?CMP=Share_AndroidApp_Other

சிதம்பரம் இரவிச்சந்திரன்