மன அழுத்தத்தை குறைக்க கொடுக்கப்படும் புரோசாக் (Prozac) போன்ற மருந்துப் பொருட்கள் நீர் நிலைகளை மாசுபடுத்துவதால் மீன்களின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு நடத்தை பாதிக்கப்படுகிறது; இது அவற்றின் வாழ்வை கேள்விக்குறியாக்குகிறது என்று புதிய ஆய்வு கூறுகிறது.

உலகளவிலான மருந்துப் பொருள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்பொருட்களின் எச்சங்கள் ஆறுகள், ஓடைகள் போன்ற நீர் நிலைகளில் கலந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. கழிவு நீர் பாதைகள் வழியாக நன்னீருடன் கலக்கும் இவை சூழல் மண்டலங்களையும் உயிரினங்களையும் பாதிக்கிறது. செரட்டோனினின் அளவை அதிகரித்து மனிதர்களின் மன அழுத்தத்தை குறைக்கஒ பயன்படும் குறைவான அடர்த்தி உடைய ஃப்யூயெக்செட்டின் (Fluoxetine) மற்றும் பொரோசாக் போன்ற மருந்துகள் மீன்களின் உடல்நிலையைப் பாதிக்கிறது.

இது ஆண் மீன்களின் விந்தணு வலிமையைக் குறைக்கிறது என்று விலங்குகளின் சூழலியல் (Animal Ecology) என்ற இதழில் வெளிவந்துள்ள இது பற்றிய ஆய்வுக்கட்டுரை கூறுகிறது. இந்த ஆய்வுகள் போசிலியா ரெட்டிகுலாட்டா என்ற அறிவியல் பெயருடைய ரைன் போ அல்லது மில்லியன் மீன் என்று அழைக்கப்படும் கப்பி (Guppy) மீன்களில் நடத்தப்பட்டது.

இவை வெப்ப மண்டலப் பகுதிகளில் பரவலாக வாழும் ஒரு மீனினம். இவை ஆஸ்திரேலியாவில் ஆக்ரமிப்பு மீனினமாகக் கருதப்படுகிறது. “இந்த மீனினத்தின் பல தலைமுறைகளை இது போன்ற மருந்துப்பொருள் மாசுகள் பாதிக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வேதிப்பொருட்கள் நீர் நிலைகளில் கலக்கிறது. ப்யூயெக்செட்டின் மருந்து பரவலாக எல்லா இடங்களிலும் மாசாக கலந்துள்ளது என்பதால் இம்மருந்து ஆய்விற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இத்தகைய மருந்துகளின் அளவு குறைவான அடர்த்தியில் இருந்தாலும் அது மாசடைந்த நீரில் இவ்வகை மீன்களின் வாழும் திறமைக்கு எச்சரிக்கை விடுக்கிறது” என்று ஆய்வுக்கட்டுரையின் துணை ஆசிரியரும் ஆஸ்டிரேலியா விக்டோரியா மெல்பெர்ன் மோனாஷ் (Monash)பொது ஆராய்ச்சிகளுக்கான பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானியுமான டாக்டர் யூப்பாமா எச் (Dr Upama Aich) கூறுகிறார்.

3,600 கப்பி மீன்களில் இந்த ஆய்வு நடந்தது. இந்த மீன்கள் சரளைக்கற்கள் மற்றும் நீர் வாழ் தாவரங்கள் உள்ள தொட்டிகளில் வைத்து ஆராயப்பட்டன. ஐந்தாண்டுகள் நடந்த இந்த ஆய்வுகளின்போது ஆய்வாளர்கள் ஒரு லிட்டர் நீரில் சுழியம், குறைந்த அளவு, 31.5 நானோகிராம்கள் மற்றும் உயர்ந்த அளவாக 316 மில்லிகிராம் என்ற வெவ்வேறு அடர்வுள்ள ப்யூயெக்செட்டின் மருந்தைக் கலந்து ஆராய்ந்தனர். இந்த அளவுகள் இயற்கையான சூழ்நிலையில் காணப்படுபவை.

இதன் பிறகு பல தலைமுறைகளில் மருந்துப் பொருளின் தாக்கத்தால் ஆண் மீன்களின் நடத்தை, உடல் நிலை, பெறப்பட்ட பண்புகள் போன்றவற்றில் ஏற்பட்ட பாதிப்புகள் ஆராயப்பட்டன. மருந்தின் குறைந்த அளவு மீனின் உடல் நிலையை வெகுவாகப் பாதிக்கிறது. இணை சேரும் போது மற்ற ஆண் மீன்களுடன் சண்டையிடும் ஆற்றல், இணைசேரும் திறன் போன்றவற்றை இந்த மாசு பாதிக்கிறது. நாளடைவில் இது மீனின் நிலை நிற்புக்கே ஆபத்தை ஏற்படுத்துகிறது.

இம்மாசு விந்தணுக்களின் வேகத்தைக் குறைக்கிறது. பெண் மீனை கருவுற வைக்க உதவும் செதில் போன்ற கானபோடியம் (gonopodium) என்ற உறுப்பின் நீளத்தை அதிகரிக்கிறது. மருந்துப்பொருள் மாசு மீனின் செயல்பாட்டில் இயல்பாக நிகழும் வேறுபாடுகளைக் குறைக்கிறது. மீனை ஆபத்தான முறையில் நடந்து கொள்ளச் செய்கிறது. இது சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப வாழும் அவற்றின் ஆற்றலைப் பாதிக்கிறது.

“பொதுவாக மருந்துகள் குறைவான அளவில் இருக்கும்போதே வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. இதனால் குறைவான அளவு மருந்துகள் கலந்திருந்தாலும் அவை தீவிரமாக வேலை செய்கின்றன” என்று விக்டோரியா சூழல் பாதுகாப்பு முகமையின் (EPA) சூழலியல் சார் ஆபத்துகள் மற்றும் அதிகரிக்கும் மாசுப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி ஆராயும் பிரிவின் முதண்மை விஞ்ஞானி டாக்டர் மின ஸாரிஸ்ட்டோ (Dr Minna Saaristo) கூறுகிறார்.

இந்த அமைப்பு விக்டோரியாவில் உள்ள நான்கு ஆறுகள், நீர் நிலைகள் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கலந்துள்ள பதினெட்டு பொது மருந்துகளை ஆராய்ந்தது. மன அழுத்தத்திற்கு எதிரான மருந்துகள், இரத்த அழுத்தம், இதய நோய்கள், எப்பிலெப்சி மருந்துகள், காஃபின், நுண்ணுயிர் எதிர் மருந்துகள் மற்றும் ஆல்கஹாலுடன் பழச்சாறு கலந்த பானங்கள் போன்றவை சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.

பிடிக்கப்படும் மீன்களில் பொதுவாக காணப்படும் மருந்துப் பொருட்களையும் சூழல் முகமை ஆராய்ந்தது. சிவப்பு பெர்ச் (Red Perch) மீனின் உடலில் மன அழுத்தத்தை குறைக்கப் பயன்படும் வென்லாஃபாக்சைன் (Venlafaxine) என்ற மருந்து ஒரு கிலோகிராமுக்கு 150 மைக்ரோ கிராம் என்ற அளவில் கலந்திருந்தது.

ஈல் (Eel) மீனின் உடலில் சத்துகளற்ற உணவினால் ஏற்படும் வைட்டமின் பற்றாக்குறையைப் போக்க, பெண்களின் கர்ப்பகாலத்தில் பயன்படும் செர்ட்ரலைன் (sertraline) என்ற மருந்து ஒரு கிலோகிராமுக்கு 100 ம்யூ (μg/kg) என்ற அளவில் கலந்திருப்பது இந்த ஆய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்டது. கழிப்பறைகளில் கழிவுடன் மருந்துகளையும் கலந்து அகற்றக்கூடாது. இதற்குப் பதில் மக்கள் தேவையற்ற, காலாவதியான மருந்துகளை விற்பனையாளரிடமே திரும்பி கொடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இது நம் நீர் நிலைகளில் நீந்தி வாழும் மீன்களை நீண்ட காலம் வாழ வைக்கும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். அவ்வாறு செய்தால் மட்டுமே பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த அற்புத உயிரினங்களை நாளைய தலைமுறையினரும் பயன்படுத்த முடியும்.

மேற்கோள்: https://www.theguardian.com/environment/article/2024/aug/27/australia-prozac-waterways-fish-behaviour?

- சிதம்பரம் இரவிச்சந்திரன்