மு. அருணாசலம் அவர்களின் தமிழ் இசை இலக்கண வரலாறு எனும் நூல் 16 அத்தியாயங்களை உடையது. இந்நூல் இசை இலக்கண நூல்களை, தமிழ் இசை இலக்கண நூல்கள், வடமொழி இசை இலக்கண நூல்கள், பரதம் கூறும் நூல்கள், தாளம் கூறும் நூல்கள் என நான்காகப் பிரித்து ஆய்வு செய்கிறது. வேத இசையாகிய சாமகானம் தவிர வேறு எந்த இசையும் வடமொழியில் உருவாகவில்லை. ஆதலால் தமிழ் சாகித்தியத்தை அடிப்படையாகக் கொண்டுதான் வடமொழி இசை இலக்கண நூல்கள் உருவாகின. பல தமிழ்ப்பண் பெயர்கள் வடமொழி இசை இலக்கண நூல்களில் சொல்லப் பட்டிருப்பது இதனை விளக்கும். மேலும் இசை இலக்கண வரலாறு சொன்ன இவர்கள் இசை இலக்கிய வரலாறு குறித்து எதுவும் சொல்லவில்லை. இசை இலக்கியம் இன்றி இசை இலக்கணம் இல்லை. இசை இலக்கியங்கள் அதாவது சாகித்தியங்கள் எல்லாம் தமிழில்தான் இருந்தன. அதனைச் சொல்ல அவர்களுக்கு மனம் வரவில்லை. தங்களின் இசை இலக்கண நூல்களிலும் தமிழ் சாகித்தியங்களைக் கூறுவதையோ, தமிழ் இசை இலக்கண நூல்களைக் கூறுவதையோ திட்டமிட்டு மறைத்தார்கள். வடமொழிதான் அனைத்துக்கும் மூலம் என்ற கருத்தை நிலை நிறுத்திட விரும்பினார்கள். ஆதலால் தமிழ் சாகித்தியங்களையோ, தமிழ் இசை இலக்கண நூல்களையோ சொல்ல விரும்பவில்லை. மதங்க முனிவருடைய இலட்சணக்கிரந்த நூலாகிய பிருகத்தேசி முதல் பிற சிறப்பான வடமொழி இலக்கணநூல்கள் எல்லாம் கி.பி. 8ஆம் 9ஆம் நூற்றாண்டுக்கு பிற்பட்டவையே ஆகும்-(1).

பரத சாத்திரம்:

          mu arunasalam book  “நாடகத்தமிழ் நூலாகிய பரதம் முதலான தொன்னூல்களும் இறந்தன” என்கிற அடியார்க்கு நல்லார் அவர்களின் கூற்று பரதர் என்பவரால் செய்யப்பட்ட பரதம் என்கிற நாடகத் தமிழ்நூல் இருந்துள்ளது என்பதையும் அது மிகவும் தொன்மையான நூல் என்பதையும் உறுதி செய்கிறது. அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிற பரதம் என்கிற நாடகத்தமிழ் நூல் எழுதிய பரதர், இலக்கிய வரலாற்று செய்திகளின்படி கி.மு. வுக்குச் சில நூற்றாண்டுகள் முந்தையவர் ஆவார். இந்தப் பரதம் என்கிற நாடகத் தமிழ்நூல்தான் பரத நாட்டிய சாத்திரம் என்ற பெயரில் வடமொழியில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. மேலும் அந்த வடமொழிநூலில் “இது தட்சிணாத்தியமாகிய தென்னாட்டு நெறி” என்பது சொல்லப்பட்டுள்ளது-(2). ஆதலால் பரதாசாரியாரின் ‘பரத நாட்டிய சாத்திரம்’ தமிழ் மரபை அடிப்படையாகக் கொண்டு தமிழில் தோன்றிய நூலாகும். அதன் காலத்தை, கி.மு. 3ஆம், 4ஆம் நூற்றாண்டு எனலாம். அது பின்னாளில் கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்குப்பின் வடமொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. வடமொழிக்கான கிரந்த எழுத்து கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே தோன்றுகிறது. அதன் பின்னரே பல நூல்கள் வடமொழியில் தோன்றுகின்றன. ஆகவே சிலப்பதிகாரத்திற்கு பிற்பட்டே ‘பரத நாட்டிய சாத்திரம்’ மொழி பெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். பரதம் என்கிற மூலத் தமிழ் நாட்டிய நூல் அழிந்துவிட்டது. ஆனால் அதன் வழிநூலான வடமொழியில் மொழிபெயர்க்கப் பட்ட ‘பரத நாட்டிய சாத்திரம்’ இன்றும் இருக்கிறது. இந்த வடமொழி நூலுக்கு அபிநவகுப்தர் எனும் காசுமீர்க்காரர் உரை எழுதியுள்ளார்-(3).

            தாய்லாந்தில் பேராசிரியராகவுள்ள இந்துசேகர் என்பவருடைய வடமொழி நாடகம் பற்றிய ஒரு நூல் நெதர்லாந்து தேசத்தில் ‘இளேன்’ நகரில் ‘பிரில்’ என்பவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்ட ‘பரத நாட்டிய சாத்திரம்’ குறித்தச் சில கருத்துக்களைக் காண்போம்.

            ‘பரதர் என்பவர் ஆரியர் அல்லாத ஒர் இசைக்கலைஞர் குடும்பத்தில் தோன்றியவர். அவர் தனது நாடகக் குழுவின் உறுப்பினரைத் தம்முடைய பிள்ளைகள் என்றே கூறிக்கொள்கிறார். பரதநாட்டியம் என்ற கலைக்கு மிகவும் புகழடைந்த ஒரு மரபு இருப்பது இது தமிழ் நாட்டுக்கேயுரியது என்பதைக்காட்டுகிறது. அந்த நாட்டியத்தை நாம் ஊன்றிப் பார்க்கும்பொழுது அது புராதனமான பரதசாத்திரத்தில் உரைக்கப்பட்ட பொருளே என்று தெரிகிறது. இது தென்னாட்டில்தான் தோன்றி வளர்ந்திருக்கிறது......ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பு இந்த நூலைக் குறிப்பிட்டவர் இல்லை. தந்திர சாத்திரங்கள், முத்திரை குறித்துச் சொல்லும் கருத்துக்களைக்கொண்ட பரத சாத்திரம் ஆரிய நாகரிகத்துக்குப் புறம்பானது என்று தெரிகிறது. தந்திர சாத்திரம் திராவிட நாடுகளில்தான் பழமையாக விளங்கிற்று. வங்காளத்திலும் அசாமிலும் அதன் ஆட்சி மிகவும் பிற்காலத்தில்தான்.......தந்திர சாத்திரம் ஆட்சி பெற்றிருந்தது தென்னாட்டில். ஆகவே இதுவே பரத நாட்டியத்திற்கு தாயகம். கேரளத்தில் வழக்கிலுள்ள கதகளி ஆட்டமும் முத்திரையை அடிப்படையாகக் கொண்டது. இலக்கியத்தால் இந்த அரிய கலைகள் தமிழ் நாட்டில் காணப்பட்டிருந்தன என்று அறிகிறோம். சங்க இலக்கியத்திலும் இதைக்காண்கிறோம்”-(4). பிரில் என்பவரின் இக்கருத்து ‘பரத நாட்டிய சாத்திரம்’ தமிழில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது என்பதையும், பரத நாட்டிய சாத்திரத்தின் காலம் கி.பி. 4ஆம் நூற்றாண்டுக்குப்பின் என்கிற கருத்தையும் உறுதிப்படுத்துகிறது.

            தமிழில்தான் இயல், இசை, நாடகம்(நாட்டியம்) ஆகியவைகளைச் சேர்த்து முத்தமிழ் என்கிற கருத்து ஆதிகாலத்திலேயே உருவாகி வளர்ந்து வந்துள்ளது. தமிழில் இருந்த இசை, நாட்டிய நூல்கள் அழிந்து போய், இயல் நூல்கள் மட்டுமே இன்று கிடைத்துள்ளன. இசை, நாட்டிய நூல்கள் தமிழில் இருந்துள்ளன என்பதைச் சங்க இலக்கியங்கள் உறுதிப்படுத்துகின்றன. சைவ ஆகம வரிசையில் உள்ள புரோக்கீதம் என்ற 21 ஆவது மூலாகமத்தில் 16 உப ஆகமங்கள் உள்ளன. அதில் ஒன்று பரதம் ஆகும். இந்த ‘பரதம்’ பரத சாத்திரம் பற்றிய ஆகமமாகும்-(5). ஆகமங்கள் தமிழ் நெறி சார்ந்தவை என்பதால் பரத சாத்திரமும் தமிழ்நெறி சார்ந்தது ஆகும். இத்தரவுகள் வடமொழியில் உள்ள ‘பரத நாட்டிய சாத்திரம்’ என்கிற நூல், பரதம் என்கிற நாடகத்தமிழ் நூலின் மொழிபெயர்ப்புதான் என்பதை உறுதி செய்கின்றன.

தமிழில் இசை இலக்கண நூல்கள்:

            சங்ககாலத்திலும், பின் 7ஆம், 8ஆம், 9ஆம் நூற்றாண்டுகளிலும் தோன்றிய தமிழ் இசை இலக்கண நூல்கள் அழிந்து போயின. 9ஆம் நூற்றாண்டிலும் அதன் பின்னரும் வந்த வடமொழியாளர்கள் தமிழ் நாட்டிலிருந்த மேளக்காரரிடம் இசையையும் நாட்டியங்களையும் நன்கு கற்று, இவைபற்றி வடமொழியில் இலக்கணம் எழுதினார்கள். நாளடைவில் வடமொழிதான் இவற்றைச் சொல்வதற்கு ஏற்ற மொழி என்ற கருத்து உருவாகியது. தமிழ் நாட்டில் இருந்தவர்களும் நாளடைவில் வடமொழியில் எழுதுவதே சிறப்பு எனக் கருதி வடமொழியில் அனைத்தையும் எழுதினார்கள். அன்று தமிழைத்தவிர பிற மொழிகளில் சாகித்தியங்கள் இல்லை என்பதால் தமிழ் சாகித்தியங்களைக்கொண்டுதான் இந்த வடமொழி இசை இலக்கண நூல்கள் அனைத்தும் உருவாகின. கி.பி. 9ஆம் நூற்றாண்டுக்குப்பின் தமிழில் இசை இலக்கண நூல்கள் அதிகம் உருவாகவில்லை. பழைய நூல்கள் பல அழிந்துபோயின. பண்டைய இசைத்தமிழ் நூல்கள் குறித்து, இறையனார் களவியல் உரையாசிரியரும், சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரும் சில செய்திகளைத் தந்துள்ளார்கள்.

            பரிபாடல், பெருநாரை, பெருங்குருகு, முதுநாரை, முதுகுருகு, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல், சிற்றிசை, பேரிசை முதலியன இசை நூல்கள் ஆகும். அகத்தியம், இசை நுணுக்கம் ஆகியன இசை இலக்கண நூல்கள் ஆகும். கூத்துவரி என்பது நாடகத்தமிழ்(நாட்டியம்) நூல் ஆகும். இவை சங்ககால நூல்கள் என இறையனார் களவியல் உரையாசிரியர் கூறுகிறார்(முச்சங்கம் வாரியாக இவைகளை அவர் கூறுகிறார்). இவ்வாசிரியர் காலம் கி.பி. 7ஆம் நூற்றாண்டு ஆகும்.

            அடியார்க்கு நல்லார்(கி.பி. 9ஆம் நூற்றாண்டு), குறிப்பிடும் பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை, பெருநாரை, பெருங்குருகு ஆகியன இசை நூல்கள், பரதம் நாடகத்தமிழ் நூல், அகத்தியம் என்பது இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழும் தழுவிய இலக்கண நூல். நாரதர் எழுதியதாக பஞ்ச பாரதீயம் என்ற ஒரு நூலையும் குறிப்பிடுகிறார். இவைகளை இவர் முச்சங்க நூல்களாகக் குறிப்பிட்டுள்ளார். இவைபோக சயந்தம், குணநூல், செயிற்றியம் ஆகியன நாடகத் தமிழ் நூல்கள் ஆகும். முறுவல் என்ற நூல் குறித்து அறிய இயலவில்லை. இவைபோக பிற்காலத்துக்குரிய இசை நுணுக்கம், மதிவாணர் செய்த நாடகத்தமிழ் நூல், இந்திர காளியம், பஞ்சமரபு, பரத சேனாபதியம் ஆகிய ஐந்து நூல்களைக் குறிப்பிட்டு இவை சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதத் தகுதி அற்றவை எனவும் வேறுநூல் இல்லாததால் இவைகளைக் கொண்டு உரை எழுதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பிற அன்றே அழிந்து போயின. கடைசி ஐந்துநூல்கள் மட்டுமே அவர்காலத்தில் இருந்துள்ளன. அந்த ஐந்துநூல்களிலும் இன்று ‘பஞ்சமரபு’ மட்டுமே கிடைத்துள்ளது.

            சிலப்பதிகார அரும்பத உரைகாரர்(கி.பி.11ஆம் நூற்றாண்டு), ‘இசைத்தமிழ் பதினாறு படலம்’ என்ற நூலைக் குறிப்பிடுகிறார். இது இசைத்தமிழுக்கே உரிய 16 பகுதிகளைக்கொண்டதாகும். இது குறித்து எதுவும் அறிய இயலவில்லை. தொல்காப்பியர் கூறிய புறப்பொருள் ஏழு திணைகளையும் 12ஆக ஆக்கி பன்னிரு படலம் என்ற ஒரு இயல் இலக்கண நூல் தோன்றியது. இதன்வழி தோன்றிய ‘புறப்பொருள் வெண்பாமாலை’ என்ற நூலின் காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு ஆகும். ஆதலால் ‘பன்னிரு படலம்’ நூலின் காலம் சுமார் கி.பி. எட்டாம் நூற்றாண்டு எனலாம். படலம் என்பதுபோல ஓத்து என்பது ஒரு பெருநூலின் ஒரு பகுதி ஆகும். ஆதலால் ‘தாளவோத்தினுள் காணலாம்” என சிலப்பதிகார அரும்பத உரைகாரர் குறிப்பது ‘இசைத்தமிழ் 16 படலம்’ என்ற நூலின் தாள இலக்கணம் குறித்த ஒரு பகுதி ஆகும். தாளம் பற்றி மிகவும் பிற்காலத்தில்தான் தமிழில் தாள இலக்கண நூல்கள் தோன்றின. அவைகளுக்கு முன் தாளம் குறித்துத் தனிப்பகுதி ஒதுக்கி இசைத்தமிழ் 16 படலம் என்ற நூலில் தாளம் குறித்த இலக்கணம் செய்யப்பட்டுள்ளது-(6).

பஞ்ச மரபு:

            தொலைந்து போன நூல்களில் ஒன்றாகக் கருதப்பட்ட பஞ்ச மரபு என்ற நூல், ஈரோடு வேலம்பாளையம் வித்துவான் திரு. வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டரிடம் ஏடு கிடைத்து, குடந்தை பண்ணாராய்ச்சி வித்தகர் ப. சுந்தரேசனாரால் நன்கு பரிசோதித்து முதல் பகுதி 1973 அக்டோபரிலும், இரண்டாம் பகுதி 1975 அக்டோபரிலும் வெளியிடப் பட்டுள்ளன. பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் இதன் வெளியீட்டுக்கு உதவி செய்துள்ளார். இந்நூல் உரையோடு அச்சிடப்பட்டுள்ளது. இந்நூல் குறித்து, திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், பாப்பினி பச்சோட்டு ஆவுடையார் கோயிலில் நடராசர் பாதத்தில் ஏடு கிடைத்தது. ஏட்டுச்சுவடி கோயில் பணிப்பெண்(மாணிக்கத்தி) வெள்ளச்சி மகன் தம்பான் எழுதியது எனக் கூறுகிறார் புலவர் இராசு அவர்கள். உரையாசிரியர் 240 வெண்பாக்களை இது உடையது என்கிறார். நரம்பு, குழல், கண்டம், தோல், கூத்து ஆகிய ஐந்து மரபு உறுப்புகளையும், இசை, முழவு, கூத்து, தாளம், அபிநயம் ஆகிய ஐந்தையும் உடையதால் பஞ்ச மரபு எனப்பெயராயிற்று.

            இந்நூல் ஆசிரியர் பெயர் அறிவனார் ஆகும். ஐந்தியலும் உணர்ந்த அறிவனாரால் இந்நூல் செய்யப்பட்டது என உரைகாரர் கூறுகிறார். முந்தையோர் கருத்தை எடுத்து மொழிவதாகவே ஆசிரியர் கூறுகிறார். முந்தையவர்களை முத்தமிழோர், முற்றுணர்ந்த மெய்த்தமிழோர் என்கிறார். இசைக்கலை மரபு என்பது ‘இசை, வாச்சியம், நிருத்தம், அவிநயம், தாளம்’ ஆகிய ஐந்து மரபுகளைக் கொண்டது.

            இசை மரபானது யாழ், வங்கியம், கண்டம், நிருத்தம், வகையொழிமரபு ஆகிய ஐந்து உட்பிரிவுகளை உடையது. இதில் 87 வெண்பாக்கள் உள்ளன. இரண்டாவதாகிய வாச்சிய மரபு என்பது முழவு, பிண்டம், எழுத்து ஆகிய மூன்று பிரிவுகளை உடையது. இதில் 30 வெண்பாக்கள் உள்ளன. மூன்றாவதாக உள்ள நிருத்த மரபு என்பதும் 30 வெண்பாக்களை உடையது. நான்காவதாக உள்ள அவிநய மரபு என்பது 21 வெண்பாக்களை உடையது. ஐந்தாவதாக உள்ள தாளமரபு என்பது 30 வெண்பாக்களைக்கொண்டு 108 தாளங்களையும் பிற செய்திகளையும் கூறுகிறது. நூலின் காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இறுதி எனலாம். சிறப்பான பல இசைச்செய்திகள் இந்நூலுள் உணர்த்தப்படுகின்றன. இந்நூலை முழுமையாகக் காணும்பொழுது நூலாசிரியருக்கு முற்பட்ட காலத்தில் யாழ், குழல், முழவு என்பன எவ்வளவு அருங்கலைகளாக விரிந்து வளர்ந்திருந்தன என்பது நன்கு விளங்கும். பஞ்ச மரபு முழுமையும் கிடைத்து அச்சில் வெளி வந்திருப்பது தமிழ் இசை உலகத்துக்குக் கிடைத்த பெரும்பேறு எனலாம்.

            புலவர் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் அன்பு நிறைந்த இதயம் கொண்டவர். இவர் தமிழ் வித்துவானே ஒழிய இசை அறிந்தவர் அல்லர். குடந்தை ப. சுந்தரேசனார் இசையும் தமிழும் அறிந்தவர். வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டரிடம் ஏடுகள் பெற்ற பலர் உரிய மதிப்பை அவருக்குத் தரவில்லை. ஆதலால் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டரின் வேலம்பாளையம் வீட்டிலேயே குடந்தை ப. சுந்தரேசனார் ஆறுமாதம் தங்கை பதிப்பில் உதவி செய்தார் என்கிறார் புலவர் இராசு அவர்கள். இருந்த போதிலும் நூல் பிழைகளோடு அச்சாகியுள்ளது. இதனை நாம் உள்வாங்கிக்கொள்வது அவசியம்-(7).

வடமொழி இசை இலக்கண நூல்கள்:

            பரதநாட்டிய சாத்திரம் தான் முதல் வட மொழி நாட்டிய, இசை இலக்கண நூல் எனலாம். இதற்கு முந்தைய வேறு நூல்கள் இல்லை. இது நாட்டிய நூல் எனினும் இசை இலக்கணம் குறித்தும் கூறுகிறது. இதன் காலம் கி.பி. 4ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் ஆகும். பரதம் என்ற நாடகத்தமிழ் நூலின் மொழிபெயர்ப்பே இந்நூலாகும். இவருடைய நூல் நாட்டியத்துக்கான அங்கமாக இசையைப்பார்த்தது. பிற நூல் ஆசிரியர்கள் இசையை முக்கியமானதாகக் கொண்டார்கள். சில முக்கிய வடமொழி இசை இலக்கண நூல்கள் வருமாறு, மதங்கரின் பிருகத்தேசி, நாரதரின் சங்கீத மகரந்தம், பூலோகமல்லன் சோமேசுவரனின் மானசோல்லாசம், சோமநாத கவியின் இராக விபோதம், இராமமாத்தியரின் சுரமேள கலாநிதி, கோவிந்த தீட்சதரின் சங்கீத சுதா, அவர் புதல்வர் வேங்கட மகியின் சதுர்தண்டிப் பிரகாசிகை ஆகியன அவையாகும்-(8). சான்றாக, இதில் இரு நூல்கள் குறித்து மட்டும் சுருக்கமாகக் காண்போம்.

            பரதநாட்டிய சாத்திரத்துக்கு அடுத்த நிலையில் இருப்பது பிருகத்தேசி ஆகும். பிருகத்தேசி(கி.பி. 9ஆம் நூற்றாண்டு) செய்ததெல்லாம் பழந்தமிழ் மதுவை(இசையை) புதிய வடமொழிக்கிண்ணத்தில் வார்த்துத்தந்ததுதான் ஆகும். இவர் காலத்தில் வடமொழியில் இசை இல்லை. தமிழில் தான் இருந்தது. இவர் தனது நூலில் தக்கராகம், நாட்டராகம், காந்தார பஞ்சமம், சாதாரி ஆகிய தேவாரப்பண்களை இராகங்களாகக் குறிப்பிடுவதும் தேவார வர்த்தினி என்ற தொடரில் தேவாரத்தையே குறிப்பிடுவதும் இவர் தமிழ் சாகித்தியத்தைகொண்டுதான் தனது இசை இலக்கணத்தை எழுதினார் என்பதை உறுதிப்படுத்துகிறது-(9). தமிழை வைத்தே மதங்கர் பிருகத்தேசி செய்தார் என இரங்க இராமானுஜ ஐயங்கார் கூறியுள்ளார்-(10). இதே தன்மையை சாரங்கதேவரின் (கி.பி. 1210-1247)சங்கீத இரத்நாகரம் என்ற நூலிலும் காணமுடிகிறது.

            பூலோகமல்லன் சோமேசுவரன்(கி.பி. 1126-1138) என்பவன் கல்யாணியைத் தலைநகராகக் கொண்ட மேலைச் சாளுக்கிய மன்னன். இவன் மானசோல்லாசம் என்ற பெருநூல் செய்துள்ளான். இப்பெருநூலில் கூறப்படும் பொருள்கள் அரசகுலத்தார் அறிவதற்கென்றே ஆக்கப்பட்டன. அதில் பல நதிகளைக்குறிப்பிடும் இவன் வேண்டுமென்றே காவிரிநதியைக் குறிப்பிடவில்லை. காவிரி பாயும் சோழ நாடு, பகை நாடு என்பதே காரணமாகும். இவன்தான் இசைத்தமிழுக்குக் கர்நாடக சங்கீதம் எனப்பெயர் வைத்தவன் ஆவான். தெரிந்தோ, தெரியாமலோ, வேண்டுமென்றோ இவன் வைத்தபெயர் நிலைத்துவிட்டது. இசை இலக்கணத்தில் இவன் நூல் சொல்லாத பொருள் இல்லை எனலாம். இதில் மொத்தம் 8022 சுலோகங்கள் உள்ளன. ஐந்து பெரும்பாகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 20 அத்தியாயங்கள் என மொத்தம் 100 பொருள்கள் பற்றிக்கூறும் 100 அத்தியாயங்கள் உள்ளன. இந்நூல் பேசாத பொருளே இல்லை எனலாம். ஒரு அரசன் அறியவேண்டிய அனைத்தும் இதில் சொல்லப்பட்டுள்ளன. இந்நூல் முதல் எல்லா வடமொழி இசைஇலக்கண நூல்களும் தமிழ் சாகித்தியங்களைக்கொண்டு உருவானவை களேயாகும். தமிழ் இசையே இவைகளுக்கு அடிப்படை. ஆனால் தமிழிசை இலக்கிய, இலக்கண நூல்கள் குறித்து இவை எதுவும் பேசுவதில்லை.

தாள இலக்கண நூல்கள்:

            இசை வரலாற்றில் தாளம் ஒரு விரிந்த பொருளுடையது; தாளத்தின் இலக்கணம் அளந்தறிய இயலாதது; அதிக அளவு நுட்பமும் விரிவும் பொருந்தியது; என ஒரு பழைய தமிழ்ப்பாட்டு கூறுகிறது. இசையில் காலப் பரிமாணம் மிக முக்கியமானது. இசையில் ஒலியை அளவு படுத்துவது ஸ்தாயி ஆகும். காலத்தை அளவு படுத்துவது தாளம் ஆகும். பலர் சேர்ந்து இசைக்கும்போது மத்தளம், குழல், நாகசுரம், வீணை, வயலின் ஆகிய கருவிகள் சேர்ந்து இசை எழுப்புவதற்கான ஒலிக்கணக்கே தாளம் ஆகும். முதல் முதலாகத் தாளத்தைக்கூறும் நூல் சிலப்பதிகாரமே ஆகும். வடமொழி நூல்களுக்கு எவ்வளவுதான் பழமை கற்பித்தாலும் இதற்குமுன் தாளம் கூறும் நூல்கள் வடமொழியில் இல்லை. சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் தாளவகையோத்து என்ற ஒரு நூற்பிரிவைச் சொல்கிறார். இந்த நூற்பிரிவு அரும்பதவுரைகாரர் கூறும் இசைத்தமிழ் 16 படலத்தில் ஒரு படலமாக இருக்கலாம். சில முக்கிய தாள நூல்கள், தத்திலம்(வடமொழி), பரத சித்தாந்தம்(வடமொழியும், தமிழும்), தாளசமுத்திரம், சச்சபுட வெண்பா(பண்டைய நூல்கள்), தாள தருப்பணம், தாளக் கலிவெண்பா(இக்கால நூல்கள்), கோமதி சங்கரையர் எழுதிய தாளக்கடல்(4 பாகம்) ஆகியன ஆகும். முதல் இரண்டு தவிர மீதி அனைத்தும் தமிழ் நூல்களே-(11).

சில சொற்பொருள்கள்:

            மேளம் என்பது தமிழ்ச் சொல். இது தொடர்பான பல பொருள்கள் தமிழில் உள்ளன. மேளக்காரர் என்றால் நாகசுரம் வாசிக்கும் குலத்தார் ஆவார். மேளம் என்றால் நாகசுர இசை ஆகும். மேளமாகிய வாத்தியத்தை அடிப்பவர், தவில் வாசிக்கிறவர் ஆவார். நாகசுர இசையானது நால்வரைக்கொண்டதாகும். நாகசுரம் வாசிக்கிறவர், மேளம் அடிக்கிறவர், சுதி கூட்டுவதற்காக ஒத்து ஊதுபவர், தாளம்போடுகிறவர் ஆகிய நால்வரும் சேர்ந்தே மேளம் எனப்பெயர் பெறுகிறார்கள். மேளம் என்பது சின்னமேளம், பெரிய மேளம் என இருவகைப்படும். சின்னமேளம் என்பது நாட்டியத்தைக் குறிக்கும். நாட்டியம் ஆடுகிற கணிகை, கையில் தாளம் ஏந்தி அவளை ஆட்டுவிக்கிற நட்டுவனார், தம்பூரா ஏந்தி நாட்டியத்துக்கான சாங்கியத்தைப்பாடுகிற பாடகி ஆகிய மூவரும் சேர்ந்தது நாட்டியமாகும். பெரிய மேளம் இசைத்தமிழையும், சின்னமேளம் நாடகத் தமிழையும் குறிக்கும். ஆகவே மேளம் என்பதற்கு இசை, நாட்டியம் எனவும் பொருள் உண்டு. ‘மேளம் கட்டுதல்’ என்பது நன்கு அமைந்துள்ள கச்சேரி நடக்கும் இடம் ஆகும். நன்கு இசை அமைதிபெற்ற அரங்கு ‘மேளம் கட்டிய அரங்கு’ ஆகும். வாத்தியங்களுக்குச் சுருதி சேர்த்தல் என்பது மேளம் கட்டுதல் ஆகும். மேளம் என்ற சொல் பழங்காலம் முதல் தமிழில் பல பொருள்களில் ஆட்சி பெற்று விளங்கியுள்ளது. எனவே மேளம் என்பது தமிழ்ச் சொல் ஆகும்-(12).

            இராகம் என்ற சொல்லும் தமிழ் சொல்லே. வடமொழியில் இராகம் என்ற சொல் வருவதற்கு முன்பே தமிழில் இராகம் வழக்கிலிருந்தது. நட்டராகம், தக்கராகம், பழந்தக்கராகம், மேகராகக் குறிஞ்சி போன்ற பல பண்கள் தேவாரப் பண்ணாக இருந்தன. இதன் காலம் ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதி. இதற்கு முன்பிருந்தே இவை தமிழ்ப் பண்களாக இருந்துள்ளன. அக்காலத்தில் வடமொழியில் இராகம் என்பது இல்லை. இராகம் என்ற சொல்லுக்கு வடமொழியில் முதலில் ஆசை என்ற பொருள்தான் இருந்தது. அதற்கு இசை, இன்னபிற பொருள்கள் எல்லாம் பிற்காலத்தில் வந்தவையே. பழங்காலத்திலேயே தமிழ்ப் பண்களின் ஒரு பகுதியாக ‘இராகம்’ என்ற சொல் இருந்துள்ளது. அதைக்கொண்டுதான் வடமொழியில் இராகம் என்ற சொல் உருவாகி அதற்கு இசை என்ற பொருளும் உருவாகியுள்ளது. தமிழ் சாகித்தியங்களைக் கொண்டு வடமொழி இசை இலக்கண நூல்களை உருவாக்கியவர்கள் நட்டராகம், தக்கராகம், பழந்தக்கராகம், மேகராகக் குறிஞ்சி போன்ற தேவாரப்பண்களை மொழி பெயர்த்தபோது அதில் உள்ள இராகம் என்ற சொல்லை வடமொழிக்கு கொண்டுசென்று அதற்கு இசை என்ற பொருளைத்தந்துள்ளனர். இராகத்திற்கு இசை என்ற பொருளும் தமிழில் இருந்துள்ளது. ஆகவே இராகம் என்ற சொல்லும் தமிழ்ச் சொல்லே. அது தமிழில் இருந்துதான் வட மொழிக்குச் சென்றுள்ளது-(13).

            கருமண் உடையதால் தக்காணப்பகுதி கருநாடக நாடாக ஆகியது. கருநாடகத்திலிருந்து வந்த இசை என்பதால் கருநாடக சங்கீதம் எனப் பெயர் ஏற்பட்டது. கருநாடக சங்கீதம் என்பது தென்னாட்டுச்சங்கீதம் எனவும் பொருள்படும். கருநாடகம் என்பது வடமொழிச்சொல் அன்று. கருநாடகம் என்பது பழமையான என்ற பொருளில் தமிழ் மக்களிடத்தில் புழக்கத்தில் உள்ளது. ஆகவே பழமையான இசை என்ற பொருளில் கருநாடக சங்கீதம் என்ற பெயர் வந்துள்ளது எனவும் கொள்ளலாம். இன்றைய தக்காணப்பகுதி மக்களை, அதாவது கருநாடகப் பகுதி மக்களை சிலப்பதிகாரம் ‘கொடுங்கருநாடர்’ என்றே குறிப்பிடுகிறது. களப்பிரர்கள் தமிழகத்தைக்கைப்பற்றியதை கல்லாடம் மதுரை வவ்விய கருநட வேந்தன் என்கிறது. ஆகவே கருநாடம் என்ற சொல் சங்கம் மருவிய காலம் முதல் இன்றைய கன்னடப்பகுதியை குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆதலால் ‘கருநாடம்’ என்பது தமிழ் மூலம்கொண்ட சொல்லே ஆகும்-(14). அது வடசொல் அல்ல. இசைத்தமிழ் கருநாடகத்தில் இருந்து வந்ததாகக் கருதிய மேலைச் சாளுக்கிய மன்னன் பூலோகமல்லன் சோமேசுவரன்(கி.பி.1126-1138) அவ்விசைக்கு கர்நாடக சங்கீதம் என்ற பெயரை வைத்தான். அவனது காலத்தில் இசைத்தமிழ் மட்டுமே இருந்தது. அவன் இசைத்தமிழ் என்ற பெயரை வைக்க விரும்பாது இப்பெயரை வைத்தான் எனவும் கொள்ளலாம். ஆதலால் மேளம், இராகம், கர்நாடகம் ஆகிய பெயர்கள் அனைத்தும் தமிழ்ப்பெயர்கள் அல்லது தமிழை மூலமாகக்கொண்ட பெயர்கள் என உறுதிபடக் கூறலாம்.

பார்வை:

1.தமிழ் இசை இலக்கண வரலாறு, மு. அருணாசலம், பதிப்பாசிரியர் உல.பாலசுப்ரமணியன், கடவு பதிப்பகம், அக்டோபர்-2009, முன்னுரை-பக்:2.

2.  “  “  பதிப்புரை-பக்:vi.

3.  “  “  பக்:120-122.

4.   “    “     பக்:121.

5.  “  “  பக்:120.

6.  “  “  பக்:13-17.   

7.  “  “  பக்:22-27.

8.  “  “  பக்:37-47.

9.  “  “  பக்:41 & பிருகத்தேசி, 1928, பாசாலட்சணம், பக்:133.    

10.தமிழ் இசை இலக்கண வரலாறு, மு. அருணாசலம், பதிப்பாசிரியர் உல.பாலசுப்ரமணியன், கடவு பதிப்பகம், அக்டோபர்-2009, பக்:38.

11.  “     “   பக்:79-82.

12, 13. “     “   பக்:446-450.

14.  “     “   பக்:443,444.

- கணியன் பாலன், ஈரோடு

Pin It