தமிழ் மொழியைத் தாழ்வாக நினைப்பவரை, உரைப்பவரை, எழுதுபவரைத் தம் பகைவராகவே எண்ணும் இயல்பு கொண்டவர்.  எந்தக் கூட்டமாயினும், எவராக இருந்தாலும், தமிழைச் சற்றே தாழ்த்தி உரைத்துவிட்டால், எழுந்து நின்று கடுமையாக எதிர்ப்பை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவர் அறிஞர் வேங்கடாசலனார்.

                திருவையாறு அரசர் கல்லூரியில் ஆண்டு விழாக் கூட்டம் நடந்து கொண்டிருந்த பொழுது, செல்வாக்கும், புகழும் படைத்த பேச்சாளர் ஒருவர், தமது உரையில், “தமிழ் மொழியை இந்நாளில் ‘செந்தமிழ்’ எனக் கூறுகிறோம். செந்தமிழ் எனக் கூறுவதால், ஒரு காலத்தில் தமிழ் கொடுந்தமிழாகத்தான் இருந்திருக்க வேண்டும்“ என்று குறிப்பிட்டார்.

                அறிஞர்களும், ஆசிரியப் பெருமக்களும், பொது மக்களும் குழுமியிருந்த கூட்டத்தின் முன்வரிசையில் அமர்ந்திருந்த கவியரசு வேங்கடாசலனார் தடீரென எழுந்து, “கதிரவனை இந்நாளில் நாம் ‘செஞ்ஞாயிறு’ எனக் குறிப்பிடுவதால், ஒரு காலத்தில் அது கரு ஞாயிறாகத்தான் இருந்திருக்க வேண்டுமென இந்தப் பெரியாரின் பேச்சிலிருந்து புரிந்து கொள்கிறோம்!” எனக் கூறிவிட்டு அமர்ந்தார்.  அவையில்  பலமான கைத்தட்டலும், ஆரவாரமும் எழுந்தன.  சொற்பொழிவாளர் திகைத்து நின்றார்.

                பீட்டர் உயர்நிலைப் பள்ளியில் கவியரசு வேங்கடாசலனாரை, தமிழாசிரியராக நியமிக்க விரும்பினர்.  பள்ளி நிர்வாகிகள், தமிழாசிஅ ரியருக்குரிய கல்வித் தகுதியைக் கவியரசு பெற்றுள்ளாரா என்பதை அறிய, நேராக கவியரசுவிடம் சென்று, ‘அய்யாவிடம் ஒரு தகவல் அறிந்து கொள்ள வந்தோம்’ என்றனர்.  “எங்கள் பள்ளிக்கு ஒரு தமிழாசிரியர் தேவை.  தங்களைப் பணியமர்த்த விரும்புகிறோம்.  தமிழாசிரியருக்குரிய திறமும், உரமும் தங்களிடம் இருப்பதை அறிவோம், தாங்கள் பண்டிதர், வித்வான் முதலிய தேர்வுகள் எழுதித் தேர்ச்சி பெற்றுள்ளீர்களா?” எனக் கேட்டனர்.

                கவியரசு வாய்விட்டுச் சிரித்தார். பின்பு, “நான் தேர்வு ஒன்றும் எழுதித் தேர்ச்சி பெற்றதாக நினைவில்லை. நீங்கள் மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்கு எழுதித் தெரிந்து கொள்ளுங்கள்” என்றார்.

                பள்ளி நிர்வாகிகள் மதுரை தமிழ்ச் சங்கத்துக்கு எழுதிக் கேட்டனர்.  உடன் அங்கிருந்து பதில் வந்தது, “கரந்தை வேங்கடாசலனார் தமிழ்ச் சங்கத் தேர்வுகள் எதிலும் பங்கேற்கவில்லை. அவர் பெரும் புலவர்; பேரறிஞர்; தமிழ்ச் சங்கத்தில் நடத்தப் பெறும் தேர்வுகளையெல்லாம் அப்பெரும் புலவரின் வழிகாட்டலில்தான் நடத்திக் கொண்டிருக்கிறோம்.  சங்கத்தின் தேர்வாளர்களுக்குத் தலைவராக அப்பேரறிஞர் வீற்றிருந்து உதவி வருகின்றார்கள்.”அந்த கடிதத்தைப் படித்த பள்ளி நிர்வாகிகள், அப்பெருமகனாரை விரும்பி, வேண்டித் தங்கள் பள்ளியில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்கச் செய்தனர்.

                ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.க. கவியரசு வேங்கடாசலனார் சொற்பொழிவில் ஈடுபாடு கொண்டு தம் வரலாற்றில் அதைப் பற்றி இப்படி குறிப்பிட்டுள்ளார்.

                “தமிழ்ப் பெரும்புலவர் கரந்தை வேங்கடாசலத்தை 1935 ஆம் ஆண்டு திருவையாற்று அரசர் கல்லூரியில் கண்டேன்.  பின்னர் சென்னை சிந்தாரிப்பேட்டையில் அகநானூற்று மாநாட்டுத் தலைவராகப் பார்த்தேன்.  அம்மாநாட்டில் அவர் ஆற்றிய உரையை முதன் முதலாக முழுவதுமாகக் கேட்டேன். அவரது தலைமையுரை என்னை மயக்கியது. பெரும்புலமை வாய்ந்த ஒருவர் எங்கோ மூலையில் கிடக்கின்றாரே என்று எண்ணினேன். வேங்கடாசலத்தின் புலமை, சங்க இலக்கியங்களுக்கு விரிவுரை காண்பதற்குப் பயன்பட்டால், பிற்காலத் தமிழுலகம் பெரிதும் ஆக்கமுறும்”

                அப்போதைய தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கந்தர்வக் கோட்டைக்கு அருகில் மோகனூர் என்னும் சிறிய கிராமத்தில் அரங்கசாமிப் பிள்ளைக்கு 1888 ஆம் ஆண்டு பிறந்தார் கவியரசு வேங்கடாசலம்.

                கரந்தையிலிருந்த தூயபேதுரு பள்ளியில் கல்வி பயின்றார்.  தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் கரந்தையில் வாழ்ந்த புலவர் வேங்கடராம பிள்ளையிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களை முறையாகப் பயின்றார். தமது தந்தையார் எதிர்பாராது திடீரென்று காலமாகிவிட்டதால், குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலையில், ஊரின் ‘கணக்கப்பிள்ளை-மணியக்காரர்’ பணியிலமர்ந்தார்.  இருப்பினும் தமிழ் மீதான காதல் குறையவில்லை.  தமிழ் நூல்களைக் கற்றுக் கொள்வதில் தீராத வேட்கை கொண்டு, கரந்தைக்குச் சென்று, தூயபேதுரு கல்லூரியில் தமிழ்ப் புலவராயிருந்த சுப்பிரமணிய ஜயரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களை முறையாகக் கற்றார். பின்னர், ‘இலக்கணப்புலி’ எனப் போற்றப்பட்ட, கந்தர்வக்கோட்டை காவல் நிலையப் பொறுப்பாளராக இருந்த ம.நா.சோமசுந்தரம் பிள்ளையிடம் தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களை முறையாகப் பயின்றார்.

                தமிழ் மீது கொண்டிருந்த ஆர்வத்தால், தமது பணியை உதறித் தள்ளிவிட்டு, செட்டிநாட்டில், கோனாபட்டு என்னும் ஊரிலிருந்த கற்பக விநாயக  கலாசாலையில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார்.  செட்டிநாட்டின் பெரும் புலவர் ‘பண்டிதமணி’ கதிரேசன் செட்டியாரின் தொடர்பு கிட்டியது. பின்னர், ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சா, அரசஞ்சண்முகனார், மு.இராகவையங்கார் முதலிய சிறந்த தமிழறிஞர்களின் நெருங்கியத் தொடர்பும் ஏற்பட்டது. 

                கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கிய கல்வி நிலையத்தில் சிறிது காலம் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.  பின்னர் 1922 ஆம் ஆண்டு முதல் பீட்டர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து பணியாற்றினார்.

                தொல்காப்பியத்திற்கு தெய்வசிலையார் எழுதிய ஏட்டுச்சுவடி உரையை தமிழ்த்தாத்தா உ.வே.சா.விடம் பெற்று, பதிப்பித்து கரந்தைத் தமிழ்ச்சங்க வெளியீடாகக் கொண்டு வந்தார்.

                ‘ஆசானாற்றுப் படை’, ‘சிலப்பதிகார நாடகம்’, ‘மணிமேகலை நாடகம்’, ‘அகநானூறு உரை’ முதலிய நூல்களைப் படைத்து கவியரசு வேங்கடாசலம் தமிழுக்குத் தந்துள்ளார்.

                கரந்தைத் தமிழ்ச் சங்கம், கவியரசு வேங்கடாசலத்தின் தமிழ்த் தொண்டினைப் போற்றிப், பாராட்டி, ‘கரந்தைக் கவியரசு’ எனப் பட்டமளித்துச் சிறப்பித்தது.

                டாக்டர் மா.இராசமாணிக்கம், முத்தானந்த அடிகள் முதலிய புகழ்மிகு தமிழ் அறிஞர்களை உருவாக்கிய கரந்தைக் கவியரசு வேங்கடாசலம், தமது அறுபத்து ஏழாவது வயதில் 1955 ஆம் ஆண்டு மறைந்தார்.  அன்று அவர் மறைந்தாலும், அவரது தமிழ்த் தொண்டு என்றும் நிலைத்திருக்கும். 

- பி.தயாளன்

Pin It