|
ப்ரியா தம்பி
மதத்தலங்கள் - பெண்ணுரிமைகளின் சமாதிகள்?
இது கடவுள்கள் செய்தியில் அடிபடும் சீசன் போலும். அமர்நாத் பனிலிங்கம் செயற்கையானது என்ற சர்ச்சை அடங்குவதற்குள் சபரிமலை, கண்ணூர் கோவில்களில் நடிகைகள் நுழைந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலையில் பிரசன்னம் பார்த்த ஜோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர் கோவிலுக்குள் பெண்கள் நுழைந்ததால் தீட்டு ஏற்பட்டதாக கூறினார். மறுதினமே மன்னிப்பு கேட்டு நடிகை ஜெயமாலா கடிதம் எழுதினார். இதை ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக பத்திரிகைகள் எழுதுகின்றன...
சபரிமலை கோவிலில் பிரசன்னம் பார்ப்பது என்பது குறைந்தது மூன்று வருடத்திற்கு ஒருமுறையாவது நடைபெறும் விஷயம். ஜெயமாலா சென்றதாகக் கூறுவது 87 ம் வருடத்தில்....... இந்த இடைப்பட்ட காலத்தில் கோவிலுக்கு தீட்டு வராதது ஏன்? நடுவில் இத்தனை ஆண்டுகள் பார்த்த பிரசன்னம் உண்மையை சொல்லவில்லையா? (அல்லது பிரசன்னம் பார்க்கப்படவில்லையா?) இத்தனை ஆண்டுகள் உண்மையை விளம்பாத பிரசன்னம் இப்போது சொல்வதை எப்படி உண்மை எனக் கருத முடியும்?. சபரிமலை கோவிலின் கருவறை அவ்வளவு சீக்கிரம் நுழைந்து விடக்கூடிய ஒரு இடமல்ல.... எப்போதும் பக்தர்கள் அதிகம் காணப்படும் ஒரு கோவிலில் சிலையைத் தொட்டு வணங்கினேன் என்பதில் யாருக்கு எவ்வளவு பிரபலம் என்பது ஒருபுறம் இருக்க, இந்த விஷயத்தில் மீடியா உட்பட அனைவரும் நடந்து கொள்ளும் விதம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
சபரிமலை விஷயத்தை பொறுத்தவரை குற்றம் என்பது ஒரு பெண் உள்ளே நுழைந்து விட்டது தான்... உண்மையிலேயே பெண்கள் நுழைந்திருந்தாலும் அதனால் தான் தீட்டு ஏற்பட்டு விட்டதாக கூறுவதை எப்படி அனுமதிக்க முடியும்? கடவுள் இல்லை என்ற கோஷத்தோடோ, கடவுளை இழிவுபடுத்தும் நோக்கத்தோடோ அவர்கள் செல்லவில்லை, ஆழ்ந்த நம்பிக்கையும், பக்தியும் தான் காரணம்.... அதை எப்படி தவறு என்று சொல்ல முடியும்? இது பெண்களை அவமானப்படுத்துகிற ஒரு விஷயமில்லையா?
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பெண்களுக்கு எல்லா உரிமைகளையும் வழங்கியிருக்கிறது. ஆனால் எல்லா மதங்களும் பெண்களை இன்னமும் கீழான நிலையின் தான் வைத்திருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. இஸ்லாமியத்தில் மசூதிக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி இல்லை.. கிறிஸ்துவத்தில் பாதிரியார்களாகவோ, தேவாலய பொறுப்பு வகிக்கவோ பெண்களுக்கு அனுமதி இல்லை... தொன்மையான மதமான இந்துமதம் தோன்றிய காலத்தில் இருந்து இன்னும் ஒரு அடி கூட வளரவேயில்லை. தமிழக அரசும் அனைத்து தரப்பினரும் அர்ச்சகராகலாம் என்று சொல்லியிருக்கிறது, கூடுதலாக பெண்களும் அர்ச்சகராகலாம் என்ற கருத்தையும் சொல்லலாமே?
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கோவிலில் நுழையும் உரிமை வேண்டும் என்று போராடியதை போல் பெண்களும் தங்கள் உரிமைக்காக அடுத்த போராட்டத்தை நடத்தியாக வேண்டுமா? இந்த விஷயத்தில் கடவுள் மீதுள்ள நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மை என்பது இரண்டாவது விஷயம். இது பெண்களின் உரிமை சார்ந்த பிரச்சனை. தங்களின் பாலினத்தை காரணம் காட்டி ஒரு இடத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டால் அது தவறில்லையா? ஒரு மிக மோசமான இடமாகக் கூட இருக்கட்டும்....அந்த இடத்தில் ‘நீ ஒரு பெண் எனவே உள்ளே நுழையக்கூடாது’, என்று சொல்வதற்கு இங்கு யாருக்கும் உரிமை இல்லை.
சபரிமலையில் ஐந்து முதல் ஐம்பது வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதி கிடையாது.. ஆண் மனோபாவம் பிடித்த, கடவுளைக் கூட தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் துடிக்கும், உடலின் ஒவ்வொரு அணுவிலும் ஆதிக்க வெறி கொண்ட திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் எப்போதோ எழுதப்பட்ட சட்டமிது.. சமஸ்தானங்களையே தூக்கிப் போட்டாயிற்று.. இன்னமும் எதற்காக இந்தச் சட்டங்கள்...? கோவிலுக்குள் பெண்கள் கண்டிப்பாக நுழையக்கூடாது எனில் அதற்கு நியாயமான காரணங்களையாவது சொல்ல வேண்டும்... அதுவும் இல்லை. மாதவிலக்கின் போது பெண்கள் கோவிலுக்கு வந்தால் கோவிலின் புனிதம் கெட்டு விடுமாம்.... மாதவிலக்கு என்பது அறிவியல் ரீதியாக உடலில் ஏற்படும் ஒரு மாற்றம். இதற்கும் பக்திக்கும் என்ன சம்பந்தம்? அடுத்த காரணம் பெண்கள் கோவிலுக்குள் வந்தால் ஆண்களின் மனது கெட்டு விடுமாம்... சரி தூய (?) ஐயப்ப பக்தர்களின் மனதை கெடுக்க வேண்டாம். பெண்களை தனியாக அனுப்பலாமே? கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் என்பது உண்மையெனில் பெண்களின் பக்திக்கும் மதிப்பளிக்க வேண்டும்....
கார்த்திகை மாதம் ஆண் பக்தர்கள் போனால், தை மாதம் பெண் பக்தர்கள் மட்டும் கோவிலுக்கு வரலாம் என்று சொல்லலாமே? அப்போதும் கேரள தேவசம் போர்டு ஏதாவது புதிதாக காரணத்தை கண்டுபிடிப்பார்கள்... பெண்கள் தனியாக வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பில்லை, ஏராளமான இளம்பெண்கள் வருவதால் பூஜை செய்யும் தந்திரிகளின் மனம் கெட்டு தந்திரிகள் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார்கள் என்று கூட செய்திகள் வரலாம்.. அதனால் பெண்களை அனுமதிக்க முடியாது என்று கூட காரணம் சொல்வார்கள்.....ஆக, இங்கு பிரச்சனை பெண்கள் மட்டுமல்ல என்பது தெளிவாகப் புரிகிறது.
சபரிமலைக்கு ஒருமுறை சென்றவர்களுக்கு கூட அங்குள்ள நிலை தெரிந்திருக்கும்... காடு, மலை தாண்டி படியேறிச் சென்று ஐயப்பனை தரிசித்த காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது..... ஒரே நாளில் அவரை தரிசித்து திரும்பும் அளவுக்கு வசதிகள் பெருகிவிட்டது... கோவிலுக்கு மிக அருகில் வந்துவிட்ட நவீன பார் வசதியுடன் கூடிய நவீன ஹோட்டல்கள், குப்பையும், பாட்டில்களும் மிதக்கும் புனித பம்பை நதி, மலையை சுற்றிலும் காணும் சிகரெட், மது பாட்டில்கள், இறங்கியவுடன் தொடங்கும் பணப்பிடுங்கல்கள், ஏமாற்று, திருட்டு, கடவுளை தரிசித்த ஆனந்தத்துடன் வெளியேறும் பக்தர்களை ரிலாக்ஸ்க்கு அழைத்துச் செல்லும் ‘பிம்ப்'கள் என எல்லாம் கண்டுவிட்ட ஐயப்பனின் மீதியிருக்கும் எந்தப் புனிதம் பெண்களால் கெட்டு விடப் போகிறது?
நடிகை மீரா ஜாஸ்மின் கண்ணூர் கோவிலில் நுழைந்ததால் கோவிலுக்கு தோஷம் ஏற்பட்டு விட்டதாக வந்த புகார்கள்.... இதே போல் பாடகர் ஜேசுதாஸ் குருவாயூர் கோவிலுக்குள் நுழைய முயன்றபோது கிறிஸ்தவர் என்ற காரணத்தால் தடுத்து நிறுத்தப்பட்டார்.... பிரபலங்களாக இருப்பதால் இதுபோன்ற நிகழ்வுகள் நமக்குத் தெரிகிறது.. ஆனால் தினம் தினம் சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் கேரளாவில் இதுபோன்ற அநியாயங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. சோற்றானிக்கரை தேவியையும், குருவாயூர் கிருஷ்ணனையும் புகழும் ஜேசுதாஸின் குரல் இல்லாமல் எந்த மலையாளியின் பொழுதும் விடியாது. ஆனால் அந்தக் கடவுளை காண்பதற்கு அவருக்கு அனுமதி கிடையாது.. ‘மதம் எதுவானால் என்ன மனிதன் நனறாயிருந்தால் போதும்'என்று சொன்ன நாராயணகுரு பிறந்த கேரளத்தில் அவரின் பெயரை துதிபாடிக் கொண்டே அவரின் சிந்தனைகளை குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.. இடதுசாரி சிந்தனையில் ஊறித்திளைத்த மலையாளிகள்.
நாம் நாகரிக சமுதாயத்தில் வாழ்வதாய் சொல்லிக் கொண்டிருக்கிறோம்... ஆனால் மனதளவில் கற்கால மனிதனை விட கீழான நிலையில் இருக்கிறோம்.. மனிதகுல நிம்மதிக்காய் கடவுளை உருவாக்கி விட்டு அந்தக் கடவுளின் பெயரால் மனிதர்களில் பிளவுகள் தினம் தினம் ஏற்பட்டுக் கொண்டே வருகிறது.. இன்னமும் கேரளாவின் பெரும்பாலான கோவில்களில் பிற மதத்தினர் உள்ளே வர அனுமதியில்லை என்ற வாசகம் தொங்கிக் கொண்டிருக்கிறது.. அதிகமாக சில கோவில்களில் பெண்களுக்கும் அனுமதியில்லை.. சாதி, மத ரீதியான பாகுபாடே உச்சக்கட்ட கொடுமை எனில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு என்பது மறுபடியும் ஆலயப் பிரவேசம் நடத்த வேண்டிய அளவுக்கு தீவிரமானது.
கோவிலுக்குள் நீங்கள் செல்வது என்பது உங்கள் குறைகளை அவர் களைவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இருக்கலாம்.. எனக்கு எல்லாக் குறைகளுக்கும் அவர்தான் காரணம் என்பதால் அவரை வசைபாடுவதற்காய் கூட இருக்கலாம்.. ஆனால் உள்ளே நுழையும் உரிமை இருவருக்கும் உண்டு... பெண்களின் உரிமைகளின் மீது கட்டப்பட்ட சமாதிகள் தான் மதத்தலங்களா? சபரிமலை அல்ல இந்தியாவில் உலகில் எங்கே இந்த அநீதி நடந்தாலும் அது உடனடியாக களையப்பட வேண்டும்... கடவுளின் புண்ணிய பூமியான - காம்ரேட்டுகளின் கோட்டையான கேரளாவுக்கே இந்த நிலையென்றால் மற்ற மாநிலங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
|