 |
கு.சித்ரா
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்
எனது நெருங்கிய உறவினர்கள் சிலருக்கு 80/60 வயதுகள் நெருங்கிக் கொண்டிருந்தது. இதை ஒரு விழாவாக நாகை மாவட்டத்திலுள்ள திருக்கடையூர் (அபிராமி புகழ்) கோவிலில் கொண்டாட முடிவெடுக்கப்பட்டது. நாள் தோறும் இத்தகைய திருமணங்கள் குறைந்த பட்சம் 20வதாவது இக்கோவிலில் நிகழ்த்தப்படுகிறது. மார்கண்டேயனுக்கு என்றும் 16 வயதை இங்குள்ள சிவன் அருளியதால், 80/60 வயதை அடைந்தவர்கள் இங்கு மற்றொரு முறை திருமணம் செய்தால் (மனைவி மட்டும் அதேதான்) அவர்கள் ஆயுள் நீண்டு வளரும் என்று ஒரு (மூட) நம்பிக்கை.
இதற்கான ஏற்பாட்டை முன்கூட்டியே செய்ய வேண்டி திருக்கடையூர் செல்வதற்காக என் உறவினர் என்னை அழைத்தார். அவர் எனக்கு நெருங்கிய உறவினர் என்பதால் தவிர்க்க இயலவில்லை. செல்லும் வழியில், ஒரு குறிப்பிட்ட புரோகிதரின் அருமை பெருமைகளையெல்லாம் என்னிடம் எடுத்து சொல்லிக் கொண்டே வந்தார். அவர் வேதங்களையும், ஆகமங்களையும் கரைத்து குடித்தவர் என்றும், இது போன்ற மணிவிழாக்கள் பல நூறு முடித்தவர் என்றும், மஹா ஞானி என்றும், மஹா பண்டிதர் என்றும், ஆதி சங்கரரின் மறு அவதாரம் என்றும் என்னென்னவோ சொல்லிக்கொண்டே வந்தார். எனக்கு தூக்கம் கண்ணைச் சுழற்றியது. இந்த பயணத்தின்போது என் கண்ணில்பட்ட கடற்கரையும், மகாபலிபுரமும், உப்பளங்களும், டூப்ளே சிலையும் என்னை இறங்கு, இறங்கு என்றது. உடலோ பயணப்பட்டுக் கொண்டே இருந்தது.
கடையூரை அடைந்ததும், 10/20 பேர்கள் எங்களை சூழ்ந்து கொண்டனர். “என்ன சார், 60தா 80தா, நாங்க எல்லாத்தையும் குறைந்த செலவில் முடிச்சுத்தரோம் சார்” என்று ஒவ்வொருவரும் கூறினர் (கூவினர்) இதில் சில பூசாரிகளும் அடக்கம்.
ஒரு வழியாக அவர்களிடமிருந்து தப்பி, என் உறவினரின் தேர்வான “ம்ஹா ஞானியின்” வீட்டை அடைந்தோம். ஒரு தேர்ந்த அலுவலகம் போல் அவர் வீட்டின் முன் பகுதி மாற்றப்பட்டிருந்தது. வீட்டின் உள்ளே பெண்களின் நடமாட்டம் தெரிந்தது. எனக்கு மிகவும் தாகமாக இருந்ததால், ஒரு பெண்மணியைப் பார்த்து, தண்ணீர் கிடைக்குமா? என்றேன். உள்ளிருந்தபடியே, வெளியேயிருந்த ஒரு தூணைக் காட்டினார் அங்கே ஒரு பிளாஸ்டிக் குடமும், பிளாஸ்டிக் டம்பளரும் வைக்கப்பட்டுருந்தது. “என்னே ஒரு கருணை” எடுத்து குடித்துவிட்டு அமர்ந்தேன்.என் கணவர் ஏனோ என்னைப் பார்த்து சிரித்து வைத்தார்.
சிறிது நேர காத்திருப்பிற்க்கு பின் ஒரு நடுத்தர வயது குருக்கள் வெளிப்பட்டார். திருவிளையாடல் படத்தில் தருமி நாகேஷ் சிவன் சிவாஜியை முதன் முதலாக பார்ப்பாரே ஞாபகமிருக்கிறதா? நான் அதைப் போல் அவரைப் பார்த்தேன். “வாங்கோ, உட்காருங்கோ, 60தா 80தா” என்றார். என் உறவினர் 60 என்றார். பட்டென்று தன் பக்கத்திலிருந்த அச்சடித்த பேப்பரை நீட்டினார். மஹா மஹா ஸ்ரீ ஸ்ரீ என்று எதேதோ பட்டங்களுடன், அவர்களால் செய்துவிக்கப்படும் யாகத்திற்கு உண்டான பொருட்களின் பட்டியல் அது. எவ்வளவு செலவாகும்? என வினவினார் இவர். இதில் பலவித யாகங்கள் இருப்பதாகவும், அவற்றுக்கு முறையே 5000, 8000, 12000 பிறகு 21000 வரை செலவு பிடிக்கும் என்றார் அவர்.
புத்தரின் “Golden Middle Path” மாதிரி நடுத்தரமாக 12000த்தை தேர்வு செய்தார் என் உறவினர். சிறிது முன் பணமும் தந்தார். ஜாகையெல்லாம் பார்த்தாச்சா, சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணிட்டேளா, வீடியோ, போட்டோ இதுக்கெல்லாம் என்ன பண்ணப் போறேள்? என்று அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டார் குருக்கள். என் உறவினர் விழித்தார். கவலையை விடுங்கோ எல்லாத்துக்கும் நானாச்சு என்றவர், அருகிலுருந்த 2/3 பேரை அழைத்து, இவர் வீடியோ, இவர் ஜாகை, அவர் சாப்பாடு எல்லாத்தையும் பார்த்துப்பா, கவலையை விடுங்கோ. செலவை பத்தி யோசிக்காதீங்கோ, நன்னா பண்ணிடலாம் என்று ஆசீர்வதித்தார். Multi level Marketing போலும். என் உறவினர் மெல்ல, அவர் தந்தையை பற்றி விசாரித்து, அவரே வந்து தன் மணி விழாவை நடத்தி வைத்தால், தனக்கு மிகப் பெரிய பேறாகுமென்று கண்ணீர் மல்க கூறினார். “அதிலே பாருங்கோ, அப்பா கனடா போயிருக்கார். அங்கே ஒரு வேதபாடசாலை தொறக்க வேண்டி, வெள்ளைக்காரா ரொம்ப நாளா கூப்டுண்டே இருந்தா அதான்” நீங்க கவலையே படாதீங்கோ, அவர் பிள்ளை, நான் இருக்கேனோல்லியோ உங்க கல்யாணம் சீரும் சிறப்புமாய் நடக்கும் என்று ஆசிர்வதித்தார். அவர் 30 இவர் 60. என் உறவினர் எதோ இவரே கனடா போவது போல் பெருமை பொங்க “பார்த்தியா அவரது பெருமையை” என்பது போல் என்னைப் பார்த்தார்.
போனால் போகிறது என்று என்னையும் ஆசிர்வதித்து, தன் உதவியாளரை நோக்கி, “டேய், இந்த மாமிக்கு பிரசாதம் கொடுடா” என்று பணித்தார். அரசாங்க சான்றிதழ் இல்லாமலேயே, என்னை உடனடியாக, ஜாதி மாற்றம் செய்து, மாமியாக அங்கீகரித்து, அசீர்வதித்தார்.
மெல்ல காருக்கருகில் வந்தோம். மறுபடி கூட்டம் சூழ்ந்து கொண்டது. “எல்லாம் முடிஞ்சாச்சுப்பா விடுங்க” என்றேன் நான். யாருகிட்டே? என்றார் ஒரு குருக்கள். நான் பெயரைச் சொல்லி, ஆனால் அவரைத்தான் பார்க்க முடியவில்லை என்றேன். “எப்படி பார்க்க முடியும் அவர் ஆத்திலேதான் 4 நாளைக்கு முன்னே இன்கம்டாக்ஸ் ரெய்டு நடந்ததோல்லியோ அதிலே சில பத்திரங்களும், பல லட்சங்களும் மாட்டிண்டுடுத்து, அது விஷயமாகத்தான் பெரிய மனுஷாளை பார்க்க மதராஸ் போயிருக்கார்” என்றாரே பார்க்கலாம். என் உறவினரை பார்க்க எனக்கே சங்கடமாக இருந்ததால் கோபுரத்து பொம்மைகளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு அவரே தொடர்ந்து, அதனால் என்ன இந்த காண்டிராக்டில் நானும் உண்டு எனக்கு கிடைத்தால் அவர் வருவார், அவருக்கு கிடைத்தால் நான் வருவேன். எனவே திருமணத்தன்று பார்ப்போம் என்று விடை பெற்றார்.
குறிப்பிட்ட நாளும் வந்தது. சுமார் 50 நபர்கள் திரண்டிருந்தோம். சொந்தமாக பேருந்து புக் செய்யப்பட்டிருந்தது (2 நாளைக்குத்தான்) அவ்வளவு பெரிய பஸ் சிறிய எலுமிச்சையை நசுக்கி புறப்பட்டது. ECR வழியாக போனால், பாண்டிச்சேரி போய் அன்னையை பார்த்துவிட்டு போகலாமே என்று சிலர் ஆரம்பித்தனர். 50ல் 48 பேர் அன்னை பக்தர்கள்தாம். ஆயினும், போவது திருமணத்திற்காக என்பதால், சமாதியை தரிசிக்க கூடாது என்று சிலர் ஆட்சேபித்தனர். அடுத்த சாய்ஸ் வடலூர் “நோ, நோ அவர் வெள்ளை வேட்டி சந்நியாசி வாழ்க்கைக்கு உதவ மாட்டார்” எனவே அவருடைய மனுவும் தள்ளுபடியானது. பிறகு, ஏதேனும் பிள்ளையாரோ, ஆஞ்சநேயரோ தேர்வு செய்யப்பட்டார் (இவர்களின் கதைப்படியே கூட இந்த இருவரும் சம்சாரிகள் அல்லர்) ஆயினும் ஏதோ கோட்டா முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கடைசியாக மேல்மருவத்தூர் முடிவு செய்யப்பட்டது. என் கணவர் பஸ்ஸிலேயே உறங்க, நான் காலாற் நடந்து, சுற்றுப்புறத்தை அளந்தேன். செவ்வாடை பக்தர்கள் சாரிசாரியாக வலம் வந்து கொண்டிருந்தனர். “ஆதிபராசக்தி சித்தர்பீடம் காலணி பாதுகாக்கும் இடம்” தொடங்கி, மருத்துவ கல்லூரி, தொழிற்கல்வி நிலையங்கள் வரை அவர்கள் வளர்ச்சி தெரிந்தது.
8 ரூபாய்க்கு தேங்காய் வாங்கி, வலமாக 3 முறையும், இடமாக 3 முறையும், மேலும் கீழுமாக 3 முறையும், தலையை சுற்றி 3 முறையும் சுற்றி “நீர் தெளிக்க” உடைத்தால், இயற்கை சீற்றங்கள் (புயல், வெள்ளம், வரட்சி உட்பட), கண்திருஷ்டி, நோய், வறுமை யாவும் நீங்கும் என ஒரு பெரிய அறிவுப்பு பலகை காணப்பட்டது. அதன் கீழ், தன் இரு குண்டு மகன்களுடனும், மனைவியுடனும் “நீர் தெளிக்க” தேங்காய் உடைத்துக் கொண்டுருந்தார் “SKODA” காரிலிருந்து வந்திறங்கிய ஒரு NRI.
மதிய உணவு சிதம்பரத்தில். பிறகு நேராக திருக்கடையூர். சிறிது நேர இளைப்பாறலுக்குப் பின் கோவில் வாசலை வந்தடைந்தோம். அங்கே அவருக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. மாலை அணிவிக்கப்பட்டது. கோவில் யானை பதாகையுடன் முன் செல்ல, அலங்கரிக்கப்பட்ட குடையின் கீழ் தம்பதிகள் அழைத்து செல்லப்பட்டனர். யானை 50 அடி தூரத்திற்கு பிறகு, திரும்ப வாசலுக்கே அழைத்தது செல்லப்பட்டு, அடுத்தது யாரடா? என்ற தோரணையுடன் தன் காலையும், வாலையும், தலையையும், தும்பிக்கையையும் ஆட்டிக் கொண்டே நடுவில் விட்டுச் சென்ற தன் பரம்பரைத் தொழிலான பிச்சையெடுத்தலை தொடர்ந்தது.
யானை விட்ட இடத்தை இப்போது கோவில் பசு பிடித்துக்கொண்டது. ஆனால், பூஜை மட்டும் பசுவுக்குத்தான். இரண்டு வாழைப் பழங்களுக்குப் பிறகு விட்டால் போதும் என்று பசு பிடித்தது ஒட்டம். ஒரு நாளைக்கு எத்தனை பழம் தான் சாப்பிடும் அது? இப்போது பசுவின் இடத்தை புரோகிதர்கள் பிடித்துக் கொண்டனர். இவர்கள் அனைவரின் பின்னாடியும் ஒரு கருத்த கிழவன் தன் இரு கரங்களிலும் இரு பெட்ரோமாக்ஸ் விளக்கை சுமந்தபடியே திரிந்து கொண்டிருந்தான். மின் விளக்கோ பிரகாசமாக எரிகிறது. கோவிலில் பெரிய ஜெனரேட்டரும் இருக்கிறது. இவன் எதற்காக இதை சுமந்து கொண்டே திரிகிறான்? நான் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் நிறமும் இருள். வாழ்வும் இருள்.சுமப்பது வெளிச்சத்தை. At the foot of the lamp, it is always dark அல்லவா?
தலையில் பரிவட்டமும், கழுத்தில் மாலையும், பக்கத்தில் ராணியும், மேளமும், தாளமும், நாதஸ்வரமும், யானையும், பசுவும், வெண்கொற்ற குடையும், பெட்ரோமாக்ஸ் வெளிச்சமும், என் உறவினரை ஒரு சோழனாகவோ, சேரனாகவோ, உணர வைத்திருக்கும் போல, ஒரு மிதப்பான புன்னகையும், கை தூக்கலும், தலையசைப்புமாக, ஆளே மாறிப் போயிருந்தார். இந்த 5 நிமிட உணர்வுக்கான விலை 12000 ஆயிற்றே, இருக்காதா பின்னே.
கோவிலின் உள் மண்டபத்தை அடைந்தேன், திகைத்தேன். மண்ணெல்லாம் சிவலிங்கம், வாவியெல்லாம் தீர்த்தம் என்பதுபோல கோவிலைச் சுற்றிலும் இண்டு இடுக்கு விடாமல் 60களும் 80களுமாக திருமணங்கள் நடந்து கொண்டிருந்தன, ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு பார்வதி பரமசிவன் சிலை நிறுத்தப்பட்டு, மார்கண்டேய புராணம் சொல்லப்பட்டுக்கொண்டிருந்தது. காசுக்கேற்ற கதைதான், அவரவர் தேர்ந்தெடுத்த குரூப்பிற்கு ஏற்ப கூட்டியோ, குறைத்தோ சடங்குகள் நடந்து கொண்டுருந்தன. பிரகாரத்தில் நல்ல வெளிச்சம். ஆனால் மூலவரான அமிர்தகடேஸ்வரர்தான் இருளில் மூழ்கியிருந்தார்..
புகை நெடியும், வியர்வையும், கூட்டமும், 16 முறை ஒவ்வொருவரும் விழுந்து வணங்க வேண்டும் என்ற குருக்களின் கட்டளையும், என்னை கோவிலை விட்டு வெளியே விரட்டியது. மெல்ல வெளியே வந்து, வெளிப்பிராகரத்தின் இருளில், அமைதியை ரசித்தவாறே அமர்ந்திருந்தேன். ஒரு ஏழைத் தம்பதியர். கயிறு போட்டு கட்டிய கண்ணாடியுடன், தடியை ஊன்றியபடி 80 வயது கிழவர். கழுத்தில் வெறும் புதிய மஞ்சள் கயிருடன், பழைய நைந்து, அழுக்கேறிய தாலிக்கயிறு, காதில் பித்தளைக்கம்மல்கள், மஞ்சளில் நனைத்தெடுத்த சாதாரண உடையுடன் மனைவி 75/78 வயது இருக்கலாம். தட்டில் சில வாழைப்பழங்கள், உலர்ந்துபோன சாத்துக்குடி பழங்கள் 4/5 கழுத்தில் வெறும் மல்லிச்சரம். 2/3 உற்வினர்கள் புடைசூழ வந்து கொண்டிருந்தனர். யானை என்ன பூனையை கூட அருகில் காணவில்லை.
என் கண்களில் நீர் கசிந்தது. அவர்களது தள்ளாமையை நினைத்தா? வறுமையை நினைத்தா? அறியாமையை நினைத்தா? பெரியார் கூறுவார் “உண்டு கொழுத்தவன் நோன்பெல்லாம், உழைத்து களைத்த உனக்கெதற்கு என்று. எத்தனை பெரியார், எத்தனை புத்தன், எத்தனை வள்ளலார், எத்தனை ஏசு வந்தாலும் இவர்கள் மாறவே மாட்டார்களோ என்ற ஏக்கமா? எதுவோ ஒன்று என் கண்ணில் நீராய் மாறிப் பெருகியது.
சிறிது நேரம் சென்றபின், ஒரு இளம் வயது குருக்கள் என் அருகே வந்தமர்ந்து புன்னகைத்தார். பொது விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தார், இத்தனை திருமணங்கள் நித்தம் நடக்கின்றனவே, இதில் உங்களுக்கும் வருமானம் அதிகம் வருமில்லையா எனக் கேட்டேன். தன்னைப் போன்ற பெரும் பிண்ணனி இல்லாதவர்களுக்கு, 100 அல்லது 150 கிடைப்பதே அதிகம் எனவும், எல்லா நாட்களிலும் தன்னை அழைக்க மாட்டார்கள் எனவும். சரியான வருமானம் இல்லாத காரணத்தால் தான், அவர் இன்னும் திருமணமே செய்து கொள்ளவில்லை எனவும் கூறினார். மேலும், இதிலே பாருங்கோ மாமி, இந்த கருணாநிதி வேற, எல்லாரும் அர்ச்சகராகலாம் என்று சொல்லிட்டார். என்னைப் போல புரோகித பிராமணர்கள், அதிகம் படிக்காமல், கிராமத்தை விட்டுத் தாண்டாமல் இருக்கோம். எங்களுடைய இந்த தொழிலுக்கும் போட்டிவந்துட்டா, நாங்க என்ன பண்ணறது சொல்லுங்கோ என்றார். எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. Every coin has got 2 sides
இரவு ஒருவழியாக 10 மணியளவில், எல்லாம் முடிந்து, மறுநாள் காலை 8 மணியளவில் ஆரம்பித்தது. இதுவும் பல பாகங்களாக இழு இழு என்று இழுக்கப்பட்டது. தம்பதிகளை அபிஷகம் செய்து வைக்க உறவினர்களிடையே போட்டா போட்டி, தள்ளுமுள்ளல், Q வரிசை என எல்லா காமெடியும் நடந்தேறி, ஒரு வழியாக தாலியைக் கட்டினார். அடுத்த அரை மணி நேரங்களுக்கு அவர்கள் தெய்வீகப் பிறவிகளாக மாறி, வந்தவர் போனவர்களுக்கெல்லாம், இலவச ஆசிர்வாதங்களும், அருள்வாக்குகளும் வாரி வழங்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் உண்மையான தாம்பத்திய வாழ்க்கையைப் பற்றி நானறிவேன் ஆயின், இது வேறு மேடை. வேறுவிதமான பாத்திரம்.
மதிய உணவுக்குப்பின், ஒரு வழியாக மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு தலைமை குருக்களுக்கு நன்றி சொல்லப் புறப்பட்டோம். என் உறவினர் அவரை அது வரை பார்த்ததில்லை ஆயினும், அவருடைய புகழ் “பரந்துபட்ட” ஒன்றாதலால், அவருடைய ஆசிர்வாதத்தை பெற விரும்பினார். இவர் செய்த பூஜாபலன், அவர் “கனடா” விலிருந்து திரும்பியிருந்தார். என் உற்வினரை, வாயில் நுழையாத (என் காதிலும் நுழையவில்லை) வார்த்தைகளால் வாழ்த்தி, பெரிய பிரசாத பொட்டலங்களைத் தந்தார். அவர் காலில் நாங்கள் விழுவோம் என்று காத்திருப்பதுபோல் பட்டது. எனக்கும், என் கணவருக்கும் அது ஒத்துவராத ஒன்று. ஆயின் என் உறவினரோ என்னையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தார். அவர் ஆசியை நாடி ஒடி வந்த இவரை, காலில் விழாமல் தடுப்பது எது? என யோசித்ததில் எனக்கு துல்லியமாக கண்ணில் பட்டது, அந்த குருக்களின் சரும வியாதிதான். துண்டால் மறைத்துக் கொண்டிருந்தாலும் அவர் மேனியெங்கும் வெண்குஷ்டம் (லூகோடர்மா) பெருமளவில் விளையாடிக்கொண்டிருந்தது. தலைமுதல் கால்வரை வெளிப்படையாக தெரிந்த அந்த சரும வியாதி இவரைத் தயங்க வைத்ததில் வியப்பில்லை.
ஒரு வழியாக பஸ்ஸை அடைந்தோம். அனைவரும் பிராசதத்தைப் பெற்றுக் கொள்ள துடித்தனர். பொட்டலத்தைப் பிரித்தவுடன் பரவிய அதன் “மணம்” அதன் தரத்தை உணர்த்தியது. வயிற்றையும், வாயையும் பகைத்துக் கொண்டாலும், கடவுளையும் அவர் ஏஜெண்டையும் பகைத்துக் கொள்ள யாரும் தயாராயில்லை. அந்த ஊசிப்போன புளிசாதத்தை எப்படியோ உள்ளே தள்ளி, சொர்க்கத்தில் ஒரு டிக்கெட் ரிசர்வ் செய்தனர்.
அவர் கொடுத்த மற்றொரு கவரில் அபிராமி அந்தாதி கையடக்கப்பதிவு சில இருந்தது. அது “சர்வரோக நிவாரணி” யாம் பக்கத்திலிருந்த ஒருவர் கூறினார். எனக்கு அடக்கமுடியாமல் சிரிப்பு வந்தது. என் கணவர் என்னை முறைத்தார்.
சென்றவர்களெல்லாம் உற்வினர்கள் என்பதால், ஏற்கனவே கோபப் பேச்சுக்களாலும், ஜாடை பேச்சுக்களாலும், குத்தல் பேச்சுக்களாலும் உள் நாட்டு குழப்பம் நிலவி வந்த வேளையில் இந்த “சர்வரோகநிவாரணி” வேறு கலகத்தை அதிகரித்தது. டிரைவர், கிளினர், நான், என் கணவர் தவிர்த்த மற்றனைவரும் அந்த புத்தகப் பிரதி வேண்டும் என உறுதிபட கூறினர். நபர்களோ 45 புத்தகமோ 22.. உடனடியாக கோபி அன்னாக மாறிய நான், ஒரு குடும்பத்திற்கு ஒரு புத்தகம் மட்டுமே வழங்கப்படும். மனைவி இல்லாமல் தனியாக வந்திருக்கும் பட்சத்தில் ஆணுக்கும் வழங்கப்படும் என சமாதான ஒப்பந்தத்தில் சந்தோஷமாக கையெழுத்திட்டேன். போர் ஓய்ந்தது.
இந்த திருமணத்திற்காக செய்யப்பட்ட செலவுத்தொகை ஒரு லட்சம் வரை இருக்கலாம். விமானத்தில் வந்து போனவர்களின் செலவு தனி. சென்னை திரும்பும் வழியில், அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். நான், கையில் எடுத்துச் சென்றிருந்த சிவவாக்கியரை படித்துக்கொண்டே வந்தேன்.
ஓசையுள்ள கல்லை நீர் உடைத்திரண்டு செய்துமே
வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்துவீர்
ஈசனுக்கு உகந்த கல் எந்த கல் சொல்லுமே
என்று கேட்டார். சற்றேறக்குறைய சித்தர்களின் காலம் 1000 வருடங்களுக்கு முன். கேள்வி 1000 ஆண்டுகள் பழமையானது. பதில்தான் கேள்வியாகவே நிற்கிறது.
சென்னை மண்ணை மிதித்தபோது நேரம் இரவு 1.30
- கு.சித்ரா ([email protected])
|