|
ஞாநி
சில தவறுகள்... சில பாடங்கள்!
சென்ற இதழின் ‘ஓ’ பக்கங்களில், நான் கண்ணகி சிலையை கரடி பொம்மையுடன் ஒப்பிட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
‘சில குழந்தைகள், பெரியவர்களான பிறகும்கூட தூங்கும்போது ஒரு பழைய ‘டெடி பேர்’ கரடி பொம்மையைப் பக்கத்திலேயே வைத்திருப்பார்கள். இன்று ஆள்பவர்களுக்கு கண்ணகி அப்படித்தான்.’
வளர்ந்த பின்னும் மாறாமல் இருக்கும் சிலரது ஒட்டுதல் மனநிலையைக் குறிப்பிடவே மேற்கண்ட ஒப்பீட்டைப் பயன்படுத்தி இருந்தேன். நான் ஒப்பிட்டது கண்ணகி சிலையையும், கரடி பொம்மையையும் அல்ல! கண்ணகி மூலம் உணர்த்தப்படும் பண்பாடு ஆண்-பெண் சமத்துவத்துக்கு எதிரானது என்று நான் வைத்துள்ள வாதங்களுக்கு மாற்றுக் கருத்துக்களை வரவேற்கிறேன்.
அண்மையில் அடுத்தடுத்து பெரும் அடிகளைச் சந்தித்தது பாரதிய ஜனதா கட்சி. வாஜ்பாய், அத்வானி ஆகியோரைவிட, அடுத்த தலைமுறைத் தலைவரான பிரமோத் மகாஜனுக்கு அனைத்துக் கட்சிகளிலும் மீடியாவிலும் பத்திரிகைகளிலும் தொழில் வர்த்தகத் துறையிலும் நண்பர்கள் அதிகமாக இருந்தார்கள். கருத்து வேறுபாடு உள்ளவர்களுடனும் நல்ல நட்புடன் இருந்த பிரமோத்தை அவர் தம்பியே சுட்டுக் கொன்றது பாரதிய ஜனதாவுக்கு அடி மேல் அடி!
கட்சிக்கு வலுவும் புதிய முகமும் தரக்கூடிய இளைய தலைவரை இழந்தது என்பது முதல் அடி! இந்திய மரபின் சம்பிரதாயமான குடும்ப அமைப்பு, பாசம் முதலிய மதிப்பீடுகளை வலியுறுத்தக்கூடிய கட்சியிலிருந்தே ஓர் உறுப்பினரின் குடும்ப அமைப்புக்குள் குழப்பங்கள் தாழம்பூக் கொண்டை போல அம்பலமானது அடுத்த அடி!
பிரமோத் மகாஜன் இடத்துக்கு அவர் குடும்ப வாரிசைக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் கட்சிக்கு இருந்தது. காரணம், பிரமோத் மகாஜன்தான் கட்சியின் வசூல் சக்ரவர்த்தியாக விளங்கியவர் (ஒவ்வொரு கட்சியும் இதுபோன்ற வசூல்ராஜாக்களைக் கொண்டு இயங்குகிறது). அந்தத் தொடர்புகளைத் தக்கவைக்க மகாஜனின் மகன் ராகுலையே பயன்படுத்தத் திட்டமிட்டிருந்த வேளையில், போதைப் பொருள் விவகாரத்தில் ராகுல் சிக்கியது பாரதிய ஜனதாவுக்கு மூன்றாவது பெரிய அடி.
ராகுலைக் கொல்லச் சதி என்று முதலில் பாரதிய ஜனதா தலைவர்கள் சித்திரிக்க முயற்சித்தபோதும், போகப் போக மருத்துவ அறிக்கைகளும் அவர் நண்பர் வட்டாரத் தகவல்களும் வெளியாக வெளியாக, கட்சித் தலைமை இதிலிருந்து தன்னைக் கழற்றிக் கொள்ள ஆரம்பித்துவிட்டது.
பொது வாழ்க்கையில் ஒழுக்கம் பற்றி வாய் கிழியப் பேசும் கட்சிகளில் மேல்மட்டத் தலைவர்களின் குடும்பங்களில் மட்டுமல்ல, நிறைய மாவட்ட, வட்ட, நகரத் தலைவர்களின் குடும்பங்களிலும் வாரிசுகளின் ஆதிக்க மும் சீரழிவும் காணப்படுகிறது. அரசியல்வாதிகளின் குடும்பங்கள் என்று இதில் தனிப்படுத்திச் சொல்வதும் தவறு. மருத்துவம், சட்டம், தொழில், என்று எல்லா துறைகளிலும், அப்பா, அம்மா பணம் சேர்ப்பதும் வாரிசுகள் அவற்றை ஊதாரித்தனமாக அழிப்பதும் அதிகரித்து வருகிறது.
இதற்கு என்ன காரணம்? அதிகாரம், பண பலம் இரண்டுமே எந்த உழைப்புமில்லாமல் வாரிசுகளுக்குக் கிடைத்துவிடுவதால் தடுமாறி, தடம் மாறிப் போகிறார்கள். என்ன செய்ய விரும்பினாலும் அதற்கான பணத்துக்குத் தட்டுப்பாடு இல்லை. என்ன தவறு செய்தாலும் சட்டத்தில் சிக்காமல் தப்பிக்க எப்போதும் அதிகாரம் அல்லது பணத்தின் துணை இருக்கிறது. இதைவிட ஓர் இளைஞரைச் சீரழிக்க சிறந்த சூழல் வேறென்ன இருக்க முடியும்?
ஒரு குழந்தையின் முதல் ரோல் மாடல் பெற்றோர்தான். பொது வாழ்க்கையில் இருக்கும் பெற்றோருக்கு குழந்தையுடன் அதிக நேரம் செலவிட முடிவதில்லை. செலவிடும் குறைந்த நேரத்தையும் தரமானதாக செலவிடும் பக்குவமும் இல்லை. அம்மாக்கள் மகன்களைச் செல்லம் கொஞ்சிக் கெடுப்பதை மரபாக வைத்திருக்கும் தேசம் நம்முடையது.
பணம் சேர்ப்பதில் குறியாக இருக்கும் பெற்றோர்கள் பலருக்கு குழந்தைகளுடன் சரியான உறவு இல்லை. குழந்தைகளுக்குத் தாராளமாகப் பணத்தை அள்ளி வழங்குவது அல்லது கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பது என்று இரு எதிரெதிர் நிலைகளில் இந்தப் பெற்றோர்கள் செயல்படுகிறார்கள். வாழ்க்கை பற்றிய எந்த ஒழுக்க விதியும் இல்லாமலோ உலகமே தெரியாத அளவுக்கு கடுமையாக ஒடுக்கப்பட்டோ வளரும் குழந்தைகள் பின்னாளில் தங்களையும் அழித்துக் கொண்டு சமூகத்தையும் அழிப்பவர்களாகத் தான் இருப்பார்கள்.
குழந்தையை நாம் கவனிக்காவிட்டாலும் அது எப்போதும் நம்மையும் தன்னைச் சுற்றி நடப்பதையும் கவனித்துக்கொண்டேதான் இருக்கிறது. அரசியல்வாதியின் வீட்டுக் குழந்தை தன்னைச் சுற்றி நடப்பதை உள் வாங்கிக்கொண்டே இருக்கிறது. சூழ்ச்சிகள், அராஜகங்கள், ஊழல்கள், ஜால்ராக்கள் நிரம்பிய சூழலில் ஒரு அரசியல்வாதி புழங்கினால், அவரது குழந்தை வேறெப்படி வளர முடியும்?
தான் பின்பற்றாத எந்த ஒழுக்கத்தையும் தம் குழந்தைகள் மீது எந்தப் பெற்றோராலும் வலியுறுத்த முடியாது. அப்படி வலியுறுத்தும்போது அது துளியும் மதிக்கப்படாது. கடைசியில் ‘நான் வோட்கா குடிப்பேன். அத்துடன் சரி. ஆனால், என் மகன் கொக் கேய்ன் புகைக்கிறானே!’ என்று தன் ஒழுக்கக் கேடு பட்டியலில் இல்லாததையெல்லாம் தன் வாரிசு எங்கே கற்றது என்று புலம்புவதில் முடிகிறது.
திசை மாறிப்போகும் வாரிசுகளில் சிலர் கொஞ்ச காலத்துக்குப் பிறகு திருந்தி, தாங்களும் பெற்றோரின் தொழிலுக்கே அரசியல், மருத்துவம், சட்டம், வியாபாரம் என வந்துவிடுகிறார்கள். டிஸ்கோ நடத்தியவர் பண்பாட்டுத் துறை அமைச்சராகிவிடலாம். போதை மருந்து பயன்படுத்தியவர் மருத்துவர் ஆகிவிடலாம். ஓவர் ஸ்பீடில் காரை ஆள் மீது ஏற்றிக் கொன்று நீதிபதியின் மகன் என்பதால் வழக்கு பதிவாகாமல் தப்பித்தவர், பின்னால் வக்கீலாகிவிடலாம். அப்படித் திருந்தி அரசியலுக்குள் நுழையும் வேளையில்தான் ராகுல் மகாஜன் சதிவலைக்குள் சிக்கிக் கொண்டதாகவும் அல்லது சிக்கவைக்கப்பட்டதாகச் செய்திகள் சொல்கின்றன.
அதேசமயம், இதற்கெல்லாம் விதி விலக்காக உள்ள அரசியல்வாதிகளின் - மருத்துவர்களின் - வக்கீல்களின் - நீதிபதிகளின் குடும்பங்களையும் உதாரணம் காட்ட முடியும். பணக்காரரான நடிகர் சிவகுமாரின் மகன் நடிகர் சூர்யா கல்லூரிக்குப் படிக்கச் சென்ற காலத்தில் இதர வசதியற்ற சக மாணவர்களுக்கு நிகராகவே தன்னை நடுத்தர குடும்ப மதிப்பீடுகளுடன் தன் பெற்றோர் வளர்த்த அனுபவங்களைச் சொல்லியிருப்பது இங்கே நினைவுகூரத்தக்கது.
வாரிசுகளைச் சீரழிக்கும், பொறுப்பற்ற பொது வாழ்க்கைப் பெற்றோரின் இந்த சமூக தனி மனிதச் சிக்கலுக்குத் தீர்வு இல்லையா? பெற்றோர் திருந்தாமல் வாரிசுகளைத் திருத்த முடியாது. வழிப்படுத்த முடியாது. எனவே, மூத்த அரசியல்வாதிகள்தான் முன்னுதாரணமாக இருந்து வழி காட்ட வேண்டும்.
காந்தி - பெரியார் - நேரு - காமராஜர் - அண்ணா காலத்து அரசியலிலிருந்து இன்றைய அரசியல் தடம் மாறி தரம் மாறி விட்டதை மறுபடியும் சரிசெய்ய வேண்டும்.
அதிகாரமும் பணமும் அரசியலுக்குத் தேவை. ஆனால், அவை கருவிகளாக இருக்க வேண்டுமே தவிர, எஜமானர்களாகிவிடக் கூடாது.
அன்றைய அரசியலின் எளிமை, பணிவு இரண்டும் மறுபடியும் தேவைப்படுகிறது. ஏழை எளிமையாக இருப்பதும், வாய்ப்புகள் கிடைக்காதவன் தவறுகள் செய்யாமல் இருப்பதும் அவர்கள் மீது கட்டாயப்படுத்தப்பட்ட சூழல். ஆனால், பணம் உள்ளவர் எளிமையாக வாழ முற்படுவதும், வாய்ப்பு கிடைத்தாலும் வழுக்காமல் இருப்பதும் தான் தானே விரும்பி ஏற்கக்கூடிய சாய்ஸ். அதைத்தான் காந்தியும் பெரியாரும் செய்தார்கள்.
அதிகாரம் இல்லாத சாதாரண மனிதன் பயத்தால் பணிகிறான். ஆனால், அதிகாரம் வைத்திருப்பவன் அதைப் பிரயோகிக்காமல் பணிவுடன் நடந்துகொள்வது சாய்ஸ். அதுதான் ஒழுக்க நெறி. அதைத்தான் காமராஜரும் அண்ணாவும் செய்தார்கள்.
ஆனால், இன்றைய அரசியல் எதிர் திசையில் இருக்கிறது. அதை மீட்கா விட்டால், ஒவ்வொரு கட்சியிலிருந்தும் ராகுல்களின் கதைகள் அம்பலமாகிக் கொண்டேதான் இருக்கும். ஒழுக்க நெறியில்லாத அரசியலினால்... சமூகம் மட்டுமல்ல, அந்த அரசியலைப் பின்பற்றும் அரசியல்வாதிகளின் குடும்பங்களும் சேர்ந்தே சீரழியும்.
ஆனந்தவிகடன் 18-6-2006
|