Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida


ஞாநி கட்டுரைகள்

1. பின் தொடரும் நிழலின் குரல்!

2. கலைஞருக்கு சவால் விடும் கண்டதேவி!

3. எரிபொருள் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

4. சில தவறுகள்... சில பாடங்கள்!

5. கலைஞர் கருணாநிதியின் விஷமக் கவிதையும் கொஞ்சம் வரலாறும்

6.அசுத்தமானவளா பெண்?!

***********

பெரியாரே! பெரியாரே!!:
அ. ராமசாமி


மனிதன் கேள்வி - பதில்கள்

மதத்தலங்கள் - பெண்ணுரிமை சமாதிகள்?:
ப்ரியா தம்பி


சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்:
கு.சித்ரா


ஏப்ரல் இதழ்

மே இதழ்

ஜூன் இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: dheemtharikida@
hotmail.com




கட்டுரை
ஞாநி

எரிபொருள் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அதில் ஒன்று, எதிர்க் கட்சியாக இருக்கும்போது, ஆட்சி மீது ஒரே மாதிரி விமர்சனம் வைப்பது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும், அதேபோல தானும் நடந்துகொள்வது. இதற்குச் சிறந்த அண்மைக் கால எடுத்துக்காட்டு பெட்ரோல் விற்பனை வரி குறைப்புப் பிரச்னை.

ஜெ. ஆட்சியின்போது, மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தியதும், ‘மாநில அரசு விற்பனை வரியைக் குறைக்கலாம்’ என்றார் கருணாநிதி. ‘அப்படிச் செய்தால் பஸ் கட்டணம் உயரும்; எங்கள் ஆட்சியில்தான் பெட்ரோல் விலை உயரும் போதெல்லாம் பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை’என்று வாதிட்டார் ஜெ. இப்போது இருவரும் ஒருவர் மற்றவர் வசனத்தைப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

பெட்ரோல், மின்சாரம், தண்ணீர் போன்ற அடிப்படைப் பிரச்னைகளில், கட்சி விரோதங்களுக்கு அப்பாற்பட்டு சிந்திக்கக்கூடிய தலைவர்கள் எப்போது உருவாகப் போகிறார்களோ, தெரியவில்லை.

பெட்ரோல் விலையில் கணிசமான பங்கு, அரசாங்க வரிகள்தான். ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 47 ரூபாய் என்றால், அதில் மத்திய அரசின் தீர்வை வரிகள் 15 ரூபாய். மாநில அரசின் விற்பனை வரி 10 ரூபாய். டீலர் கமிஷன் போன்றவை 2 ரூபாய். எண்ணெய் கம்பெனிக்குக் கிடைப்பது 20 ரூபாய்தான். ஒரு லிட்டர் பெட்ரோல் தயாரிக்கத் தேவையான குரூட் ஆயிலின் விலையே 20 ரூபாய் ஆகிவிடும். குரூடை பெட்ரோலாக மாற்றும் செலவெல்லாம் கம்பெனிக்கு நஷ்டம். வரிகளைக் குறைக்காமல் பெட்ரோல் விலையைக் குறைக்க முடியாது. எந்த அரசும் தன் வரிகளைக் குறைத்துக் கொள்ள முன் வராது. காரணம், வரி வருமானத்திலிருந்து தான் ஏழைகளுக்கான கெரசின் விலைக்கு மான்யம் தர முடியும்.

எனவே, பெட்ரோல் விலைப் பிரச்னைக்கு தொலைநோக்குத் தீர்வுகளைத்தான் நாம் சிந்தித்தாக வேண்டும். மாற்று எரிபொருள் என்று கருத்தரங்குகளில் பேசிக்கொண்டு இருக்கிறார்களே தவிர, அரசுத் தரப்பிலிருந்து பெரிய அளவில் இதற்கான நடவடிக்கைகள் இல்லை.

ஆனால், குறைந்த விலையில் மாற்று எரிபொருள் சாத்தியம் என்பதை இரண்டு தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. ஒன்று, எத்தனால் பற்றியது.

எத்தனால் உற்பத்தியைப் பெருக்கினால் பெட்ரோலியப் பொருட்கைைளப் பயன்படுத்துவதைக் குறைக்க முடியும். கெரசினுக்குச் சிறந்த மாற்று எத்தனால் என்பது ‘நிம்ப்கர் அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச் இன்ஸ்ட்டி டியூட்’டின் கருத்து. எத்தனாலுக்கு அரசு தீர்வை வரி விதிக்காமல் இருந்தால், அதை லிட்டர் 10 ரூபாய் விலையில் விற்க முடியும்.

எத்தனால் தயாரிக்கக் கரும்புதான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், கரும்பைவிட குறைவான பாசனத் தண்ணீர் தேவைப்படும் சோள வகையை ‘நாரி’ அறிமுகப்படுத்திச் சுமார் 40 வருடம் ஆகி விட்டது. இந்தச் சோளக் கதிரிலிருந்து ரொட்டி தயாரிக்கலாம். சோளத் தண்டிலிருந்து எத்தனால் வடிக்கலாம். சக்கை மாட்டுக்குத் தீவனமாகும். நான்கு மாதப் பயிர் என்பதால், வருடத்துக்கு இருமுறை சாகுபடி செய்யலாம். விவசாயிகளுக்கும் இது லாபகரமானது.

பெட்ரோலில் தண்ணீர் கலந்து எரிக்க முடியாது. எத்தனாலில் தண்ணீர் கலக்கலாம். சரிபாதி எத்தனால் தண்ணீர் கலந்து எரிக்கக்கூடிய ஸ்டவ்வும் உருவாக்கப்பட்டிருக்கிறது. எல்.பி.ஜி. எரிவாயுவுக்கு நிகராக இதன் எரிசக்தி இருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். எத்தனாலைக்கொண்டு நூறு வாட் பல்புக்குச் சமமான வெளிச்சம் தரக்கூடிய லாந்தர் விளக்கையும் வடிவமைத்திருக்கிறார்கள்.

எத்தனாலைக்கொண்டு மின்சாரமும் தயாரிக்கலாம். டூ வீலர் இன்ஜினில் சிறிய மாற்றங்கள் செய்தபின், அதை எத்தனால் கொண்டு இயக்கி, பேட்டரியைச் சார்ஜ் செய்து மின்சாரம் தயாரிக்கலாம். ஓடும்போது டூ வீலர். ஓடாதபோது ஜெனரேட்டர்.

இன்றே, இப்போதே மாற்று எரி பொருள் வேண்டும் என்று அவசரப்படு பவர்களுக்கு, இரண்டாவது தகவல் இனிப்பானது. மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் நாகபுரியில், பொறியியல் கல்லூரியில் நடைமுறை வேதியியல் பேராசிரியையாக இருக்கும் அல்கா ஸடகாவ்ங்கர் என்பவர் பிளாஸ்டிக்கிலிருந்து எரிபொருள் தயாரிக்கிறார். இது ஏதோ ராமர்பிள்ளை சமாசாரம் அல்ல. நாகபுரியில் நூற்றுக்கணக்கான வண்டிகள் இந்த எரிபொருளில் ஓடிக்கொண்டு இருக்கின்றன.

இந்த எரிபொருள் தயாரிக்கும் தொழிற்சாலையை மூன்று ஆண்டுகளாக நடத்திவருகிறார் அல்கா. ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவிலிருந்து சுமார் 800 மில்லி லிட்டர் எரிபொருள் தயாரிக்க முடிகிறது. இந்தியன் ஆயில் கம்பெனி இவருடைய ஆலைக்குச் சுமார் 60 லட்ச ரூபாய் உதவி அளித்திருக்கிறது. தன் கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை பெற்றுள்ள அல்காவுக்கு அமெரிக்க, ஜப்பான் தனியார் கம்பெனிகளிடமிருந்தும் அழைப்பு வந்திருக்கிறது. இந்தியாவின் பல பாகங்களில் இப்படிப்பட்ட தயாரிப்பு ஆலைகளை நிறுவ, அல்கா திட்டமிட்டிருக்கிறார்.

இந்தியாவில் தினமும் சுமார் 8 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்தவண்ணம் உள்ளன. அதில் பாதியை பெட்ரோல் எரிபொருளாக மாற்றினாலே, தினம் 20 லட்சம் லிட்டர் எண்ணெய் கிடைக்கும். ‘இப்படியெல்லாம் நடக்குமானால்...’ என்று கற்பனை செய்வதே பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

பெட்ரோல் மட்டுமல்ல, மின்சாரத் தயாரிப்புக்கும் மாற்று வழிகள் தேவைப்படுகின்றன. அனல், புனல், அணுமின்சாரம் அனைத்திலும் நமக்குச் சிக்கல்கள் உள்ளன.

தமிழகக் கிராமப் பகுதிகளில் செழிப்பாக வளர்ந்து கிடக்கும் கருவேல மரங்களைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும். இவற்றை பாய்லரில் வாயுவாக்கி டர்பைன்களை இயக்கி மின்சாரம் தயாரிக்கும் பயோபவர் தொழில் நுட்பம் சூழலை மாசுபடுத்தாதது. இதெல்லாம் சாத்தியமா என்றால், ஏற்கெனவே தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் பல்லடம் தாலுகாவில் சுல்தான் பேட்டை கிராமத்தில் இப்படிப்பட்ட ஓர் ஆலையை, இளம் தொழிலதிபர் வி.எஸ்.பிரகாஷ் சில ஆண்டுகளாக நடத்தி வருகிறார். தமிழ்நாடு முழுவதும் அரசு உதவியுடன் இப்படி நூற்றுக்கணக்கான மின் தயாரிப்பு ஆலைகளை நிறுவும் யோசனையையும், இந்தத் தனியார் நிறுவனம் அரசுக்கு அளித்திருக்கிறது.

பாதுகாப்புத் துறைக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கும் அரசு, மாற்று எரிசக்தி முயற்சிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய்கூட ஒதுக்குவதில்லை. அதனால் தான் அல்காவின் கண்டுபிடிப்பு முதல் பிரகாஷின் முயற்சி வரை நாம் எதிர்பார்க்கும் வேகத்தில் நிகழ முடிவதில்லை.

பிளாஸ்டிக்கிலிருந்து எரிபொருள், சோளத்திலிருந்து எத்தனால், மரத்திலிருந்து மின்சாரம் எல்லாம் நாம் விரும்பும் வேகத்தில் நடக்க என்ன வழி?

நடக்காமல் இருப்பதற்கான காரணங்களை ஒழித்தாலே போதும்! முதல் காரணம், அரசாங்கங்கள் டெல்லியிலும் சரி, சென்னையிலும் சரி... பிரமாண்டமான திட்டங்களையே விரும்புவதுதான் (அதில் கமிஷன் நிறையக் கிடைக்கும்!). இரண்டாவது காரணம், அதிகாரத்தைக் குவித்து வைத்துக் கொள்ள விரும்புவதாகும்.

ஒரு பெரிய அணை கட்டி லட்சக்கணக்கானவர்களை வீடு காலி செய்வதைவிட, யாரையும் காலி பண்ணாமல் நூறு சிறு அணைகள் கட்டலாம் என விஞ்ஞானிகள் அடித்துச் சொல்கிறார்கள். அதே போல எத்தனால், பிளாஸ்டிக் பெட்ரோல், பயோ பவர் எல்லாமே இருபது கிராமங்களுக்கு ஓர் ஆலை வீதம் சிறிய அளவில் ஏராளமாக உருவாக்கக் கூடியவை.

ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்து யூனியனும் தனக்குத் தேவையான மின்சாரம், எரிபொருள் தயாரித்து தன்னிறைவுடன் இருக்க முடியும். மின்சாரத்தை நேஷனல் கிரிட்டில் சேர்க்க வேண்டுமென்ற கட்டாயம் தான் பெரிய ஆலைகளை உருவாக்குகிறது. கிரிட்டில் இணைக்காமல், கிராமத்துக்கு ஒரு மின்சப்ளை என்று லோக்கல் மின்சார விநியோகம் செய்ய, சிறு ஆலைகளைப் பயன்படுத்தலாம். இதெல்லாம் சாத்தியமா என்று அவநம்பிக்கை கொள்ளத் தேவையில்லை. ஆந்திர மாநிலத்தில் அம்ராபாத் கிராமத்தில் இருக்கும் சுமார் 90 குடும்பங்களுக்கு, விவசாயத்துக்கும் வீட்டு உபயோகத்துக்கும் தேவைப்படும் மின்சாரத்தைத் தயாரித்துத் தர, தமிழகத் தொழிலதிபர் பிரகாஷுக்கு அந்த அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த 25 கிலோவாட் ஆலை இன்னும் சில மாதங்களில் இயங்கத் தொடங்கும். அதற்குத் தேவையான கச்சாப் பொருளான மரத் துண்டுகள் முதல் உழைப்பு வரை எல்லாமே உள்ளூரிலேயே கிடைப்பவை.

உள்ளாட்சி அமைப்புகளிடம் கல்வி முதல் தொழில், மின்சாரம் வரை ஒப்படைத்தால், பெரும் மாற்றம் வரும். இப்படியெல்லாம் செய்ய வேண்டுமானால், டெல்லி தன் அதிகாரத்தை சென்னைக்கும், சென்னை தன் அதிகாரத்தை குப்பனாம்பட்டிக்கும் பிரித்துத் தர வேண்டும். அது நடக்காதவரை நம் கனவுகளும், முயற்சிகளும் ஏ.சி. கருத்தரங்க அறைகளுக்குள் முடக்கப்பட்டுத்தான் கிடக்கும்.

ஆனந்தவிகடன் 25-6-2006





Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com