KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida


ஞாநி கட்டுரைகள்

1. பின் தொடரும் நிழலின் குரல்!

2. கலைஞருக்கு சவால் விடும் கண்டதேவி!

3. எரிபொருள் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

4. சில தவறுகள்... சில பாடங்கள்!

5. கலைஞர் கருணாநிதியின் விஷமக் கவிதையும் கொஞ்சம் வரலாறும்

6.அசுத்தமானவளா பெண்?!

***********

பெரியாரே! பெரியாரே!!:
அ. ராமசாமி


மனிதன் கேள்வி - பதில்கள்

மதத்தலங்கள் - பெண்ணுரிமை சமாதிகள்?:
ப்ரியா தம்பி


சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்:
கு.சித்ரா


ஏப்ரல் இதழ்

மே இதழ்

ஜூன் இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: [email protected]
hotmail.com
கட்டுரை
ஞாநி

கலைஞருக்கு சவால் விடும் கண்டதேவி!

எல்லாச் சாதியினரும் கோயில் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற கோரிக்கையை, நாத்திகர்கள் ஏன் எழுப்புகிறார்கள்? கடவுள், கோயில் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு யார் அர்ச்சகராக இருந்தால் என்ன?

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக நடவடிக்கை எடுக்கப்போவதாக முதலமைச்சர் கருணாநிதி செய்த அறிவிப்பை வீரமணி, கொளத்தூர் மணி, விடுதலை ராஜேந்திரன், இடதுசாரித் தலைவர்கள் போன்றோர் வரவேற்க... இதற்கு எதிராக மேற்கண்ட கேள்விகள் சிலரால் எழுப்பப்படுகின்றன.

சாதி அடிப்படையில் இன்னார்தான் இன்ன வேலைகளைச் செய்யலாம், இன்னார் செய்யக்கூடாது என்று விதிப்பது மனித உரிமை மீறலாகும். யாரும் எந்த வேலையையும் செய்யத் தடை இருக்கக் கூடாது என்பதே மனித சமத்துவம். சாதி அடிப்படையில் ஒருவர் வீட்டுக்குள்ளோ, தெருவிலோ, அலுவலகத்திலோ, கோயிலிலோ, எந்த இடத்திலுமோ பாரபட்சமாக நடத்தப்பட்டால், அந்த மனித உரிமை மீறலுக்கு எதிராகக் குரல் எழுப்பப்பட்டே ஆக வேண்டும்.

சாதி அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வைச் சமன் செய்வதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் பயன்படுத்தும் வாதம் ‘தகுதி உள்ளவர்களுக்கே முன்னுரிமை’ என்பதாகும். அப்படி, அர்ச்சகர் ஆவதற்கு உரிய தகுதிகள் என்னென்ன என்பது அந்தப் பணியின் தன்மைக்கேற்ப வரையறுக்கப்பட்டு, அவற்றை முறையாகப் பயின்று தேர்பவர்களுக்கு ‘மெரிட்’ அடிப்படையில் வாய்ப்பு அளித்தால்... அதை யார்தான் எதிர்க்க முடியும்?

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களில் ஒரு சாரார், ‘தேசத்தை, சமுதாயத்தை... சாதி அடிப்படையில் பிளவுபடுத்த வேண்டாம்’ என்று உணர்ச்சிபூர்வமாகக் குரல் எழுப்புகிறார்கள். ஆனால், அன்றாட வாழ்க்கையில் சாதி அடிப்படை இல்லாமல் திருமணம் செய்வது என்பது எத்தனைக் குடும்பங்களில் நடக்கிறது?.

பிரபல ஆங்கில தினசரிகளில் வாரந்தோறும் பக்கம் பக்கமாக வெளிவரும் மேட்ரிமோனியல் விளம்பரங்கள் அத்தனையும் சாதி வாரியாக வெளியிடப்பட்டு தேசம் பிளவுபடுத்தப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இவர்கள் ஏன் குரல் எழுப்புவதில்லை? சாதிக்குள் திருமணம் செய்வதை எல்லாச் சாதிகளும் நிறுத்திவிடுகிற காலத்தில்தான், இட ஒதுக்கீட்டுக்கு அவசியமில்லாத சூழலும் உருவாக முடியும்.

சாதி அடிப்படையில் யார் சட்டை போடலாம், யார் போடக் கூடாது, யார் ரவிக்கை அணியலாம், யார் அணியக் கூடாது என்று கடும் விதிகளைப் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றி வந்த நாடு ‘பாருக்குள்ளே நல்ல’ நம் நாடு. ஊர் கூடித் தேர் இழுப்பது நம் மரபு என்கிறோம். ஆனால், அந்த ‘ஊர்’ என்ற வரையறைக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை என்பதைத்தான் இன்னமும் ஊருக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும் ‘காலனி’கள் உணர்த்துகின்றன.

72 வருடங்களுக்கு முன்னால் தமிழ்நாட்டுக்கு, இன்றைய சிவகங்கை மாவட்டத்து தேவகோட்டைக்கு, ஒரு சமரசப் பேச்சுவார்த்தைக்காக வந்தார் காந்தி. எதைப் பற்றி சமரசம் தெரியுமா? தாழ்த்தப்பட்ட சாதியினரான தலித்துகள் சட்டை போடும் உரிமை பற்றிப் பேசித் தீர்ப்பதற்காக. அதே தேவகோட்டை தாலூகாவில் இன்றும் கோயில் தேரின் கயிற்றைத் தலித்துகள் தொட்டு இழுக்க விடலாமா, கூடாதா என்ற சர்ச்சை நீடிக்கிறது.

கண்டதேவி ஸ்வர்ணமூர்த்தி ஈஸ்வரர் கோயில் தேர் வடத்தைத் தொட்டு இழுப்பதற்குத் தொடர்ந்து தலித்துகள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு எட்டாண்டுகளாகியும், இன்னமும் தேர் வடத்தை எல்லா தலித்துகளும் தீண்ட முடியவில்லை. இதில் தகுதிப் பிரச்னைகள் ஏதும் இல்லை. தேர் இழுக்கத் தகுதிகள் தனியே எதுவும் தேவையில்லை. விரும்பும் எவரும் கை கொடுக்கலாம்.

ஜூலை 7, 1998 அன்று தேரோட்ட தினம். சரியாக ஒரு நாள் முன்னால், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு எல்லா மக்களுக்கும் தேர் இழுக்க உரிமை உண்டு; அதற்கு ஏற்பாடு செய்வது அரசின் பொறுப்பு என்றது நீதிமன்றம். ஆனால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் இருப்பதாகச் சொல்லி, அரசு நிர்வாகம் தேரோட்டத்தையே ரத்து செய்துவிட்டது. அதன் பிறகு தொடர்ந்து 1999, 2000, 2001 என்று எந்த ஆண்டிலும் தேரோட்டம் நடைபெற முடியவில்லை.

ஒவ்வோர் ஆண்டும், தேர் இழுப்பதற்கு முன்பு கோயில் மரியாதைகளை, பரிவட்டங்களை பரம்பரை உரிமையாகப் பெற்று வரும் மேல் சாதி அம்பலக்காரர்கள், பரிவட்ட மரியாதை முடிந்ததும், தேரோட்டத்தையே ரத்து செய்துவிட்டுப் போய்விட்டார்கள்.

அந்த வருடங்களிலெல்லாம் முதலமைச்சராக இருந்த கருணாநிதி தான் இப்போது மீண்டும் முதலமைச்சர். அர்ச்சகராக எல்லாச் சாதியினரும் பணிபுரியலாம் என்கிற முற்போக்கான உத்தரவைக் கொண்டுவந்துள்ள அவருக்கு இந்த ஆண்டு கண்டதேவி, உண்மையிலேயே ஒரு சவால்தான். ஏற்கெனவே, தமிழகமெங்கும் கோயில் பரிவட்ட மரியாதைகளை வேறு ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

கண்டதேவி தேர் தொடர்ந்து சவாலாக இருப்பதன் அடையாளங்கள் ஜெயலலிதாவின் ஆட்சியில் காணப்பட்டன. நீதிமன்ற உத்தரவின்படி தேர் இழுக்க விரும்பும் எவருக்கும் பாதுகாப்பு தர வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை ஜெயலலிதா அரசு விநோதமாக நிறைவேற்றியது. தொடர்ந்து இந்த உரிமைக்காகப் போராடி வரும் புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய தலித் அமைப்புகள் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து திரட்டி வந்த தலித்துகளையெல்லாம் கண்ட தேவிக்குள் நுழையவே விடாமல் தடுத்து, அவர்களைப் பாதுகாப்பாக தேரோட்டம் முடியும் வரை போலீஸ் பாதுகாப்பில் வைத்தது. போலீஸ் தேர்ந்தெடுத்த பத்துப் பதினைந்து தலித்துகளை தேர் வடத்தைத் தொட்டு இழுப்பது போல நிற்க வைத்துப் படம் எடுத்துக்கொண்டு அனுப்பி விட்டது.

இப்போது விடுதலைச் சிறுத்தைகள் ஜெயலலிதாவுடன் இருக்கிறார்கள். நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, கண்டதேவி தேரோட்டத்தில் தலித்துகளும், எல்லாச் சாதியினரும் தடையின்றிப் பங்கேற்க எளிதான ஒரு தீர்வு இருக்கிறது. கருணாநிதி, ஜெயலலிதா, திருமா எல்லாரும் சென்று தேர் இழுக்க வேண்டும். அதற்குத் தலைமை தாங்கி, குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முதல் ஆளாக வடம் பிடிக்க வேண்டும்.

‘தேர்த் திருவிழாவுக்கெல்லாம் குடியரசுத் தலைவரை வரவழைப்பதா?’ என்று பதற வேண்டாம். தமிழகத்தில், முடிதிருத்தும் நிலையத்தைக்கூட ஒரு ஆளுநர் திறந்து வைத்திருக்கிறார் (பிரபுதாஸ் பட்வாரி).

அண்மையில்தான் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், சுகாய் போர் விமானத்தில் பறந்த முதல் ஜனாதிபதி என்ற சாதனை படைத்தார். நீர்மூழ்கிக் கப்பலில் சென்ற முதல் ஜனாதிபதியும் அவர்தான். முதிர்ந்த வயதில் அவர் இப்படியெல்லாம் செய்தது ஏதோ கின்னஸ் ரெக்கார்டில் இடம் பெறுவதற்காக அல்ல. ராணுவத்தை உற்சாகப்படுத்தவும், நீர்மூழ்கிக் கப்பல்கள், மிக் விமானங்கள் எல்லாவற்றின் தரத்தையும் பாதுகாப்பையும் இன்னமும் அதிகரிக்க உந்துதலாக இருக்கவும்தான். தேசத்தின் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள நமது ஜனாதிபதியின் இத்தகைய செயல்பாடுகள் மிக நல்ல நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை!

ஆனால், ஒரு தேசத்தின் பாதுகாப்பு என்பது அதன் ராணுவத்திடம் மட்டுமே இல்லை. உள்ளிருந்தே கொல்லும் புற்றுநோய்களான சாதி, மத வெறிப் பிரச்னைகளை அடியோடு களைந்தால்தான், தேசம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

எனவே, சாதி விரோதத்தால் பிளவுபட்டுக் கிடக்கும் இந்தியச் சமூகத்தை ஒன்றுபடுத்த, கண்டதேவி தேரோட்டத்தில் ஜனாதிபதியே முன்வந்து பங்கேற்கலாம். அது மட்டுமல்ல, ஒவ்வொரு நகரத்திலும் இருக்கும் குடிசைப் பகுதிகளுக்குச் சென்று, அங்கே ஒரு பால்வாடியில் குழந்தைகளுடன் உரையாடலாம். ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்பு, ஒருவர் சேரிகளுக்கு வந்தார்(வி.வி.கிரி). ஜனாதிபதியாக இருக்கும்போதே வந்தால், சேரிகள் அதிகாரிகளின் கவனத்தைப் பெறும் அல்லவா?

தேர்கள் மட்டுமல்ல, தேர்தல்களும் ஜனாதிபதியின் கடைக்கண் பார்வைக்காகக் காத்துக்கொண்டு இருக்கின்றன. பாப்பாபட்டி, கீரிப்பட்டி போன்று தேசத்தின் அடிப்படை அமைப்புகளான பஞ்சாயத்துகளிலேயே தலித்துகள் இன்னமும் தேர்தலில் நிற்க முடியவில்லை என்றால், அவர்கள் வையத் தலைமை கொள்வது எப்போது? இந்திய ஜனநாயகத்துக்கே இன்னும் அழிக்க முடியாத களங்கமாக அல்லவா இந்தக் கிராமங்கள் இருக்கின்றன!

முதல் குடிமகன் மட்டுமல்ல, தான் ஒரு முதல் அரசு ஊழியர் என்ற விதத்தில், பாப்பாபட்டியில் ஓட்டுச் சாவடியில் தேர்தல் அதிகாரியாகப் பணி புரியத் தயார் என்று குடியரசுத் தலைவர் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிப்பாரேயானால்... பத்தாண்டுகளுக்கும் மேலாக தேர்தலே நடத்த முடியாமல் இருக்கும் நிலை ஒரே நொடியில் மாறிவிடாதா?

‘குடியரசுத் தலைவர் இதையெல்லாம் செய்ய வேண்டுமா? அசட்டுத்தனமாக இருக்கிறதே’ என்று முதல் பார்வையில் தோன்றலாம். போலியோ சொட்டு மருந்து தரும் நாளில் முதலமைச்சர் ஒரு குழந்தைக்குச் சொட்டு மருந்து ஊட்டி போஸ் தருவதன் நோக்கம் என்னவோ, அதே நோக்கம்தான் இதுவும் என்று புரிந்துகொண்டால், இப்படிப்பட்ட வித்தியாசமான யோசனைகளும் அர்த்தபூர்வமானவைதான் என்பது விளங்கி விடும்.

ஆனந்தவிகடன் 2-7-2006