Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida


ஞாநி கட்டுரைகள்

1. பின் தொடரும் நிழலின் குரல்!

2. கலைஞருக்கு சவால் விடும் கண்டதேவி!

3. எரிபொருள் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

4. சில தவறுகள்... சில பாடங்கள்!

5. கலைஞர் கருணாநிதியின் விஷமக் கவிதையும் கொஞ்சம் வரலாறும்

6.அசுத்தமானவளா பெண்?!

***********

பெரியாரே! பெரியாரே!!:
அ. ராமசாமி


மனிதன் கேள்வி - பதில்கள்

மதத்தலங்கள் - பெண்ணுரிமை சமாதிகள்?:
ப்ரியா தம்பி


சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்:
கு.சித்ரா


ஏப்ரல் இதழ்

மே இதழ்

ஜூன் இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: dheemtharikida@
hotmail.com




கட்டுரை
ஞாநி

கலைஞர் கருணாநிதியின் விஷமக் கவிதையும் கொஞ்சம் வரலாறும்

மறுபடியும் ஜூலை 3 முரசொலியிலும் தினகரனிலும் கலைஞர் கருணாநிதி கரடி பொம்மை அவதூறை எழுப்பியிருக்கிறார். அவர் தீட்டியிருக்கும் கவிதையில் கண்ணகியை கரடி பொம்மை என்று சொல்வது விமர்சனமல்ல, விஷமத்தனம். அதை வேறு விதமாக எதிர்கொள்ளவேண்டும் என்று மெல்லிய மிரட்டல் வேறு.

திரும்பத் திரும்பச் சொல்கிறேன். நான் கண்ணகியை கரடி பொம்மையுடன் ஒப்பிடவில்லை. அதைத் தொடர்ந்து செய்வது கலைஞர் கருணநிதிதான். அந்த ஒப்பீடு விஷமத்தனமானது என்றால் அந்த விஷமத்தை செய்வது அவரேதான். நான் ஒப்பிட்டது குழந்தை வயதைக் கடந்த பிறகும் டெட்டி பேர் பொம்மையை விடாமல் கொஞ்சுபவரின் மன நிலையையும், கண்ணகி சிலையைக் கைவிடாத ஆட்சியாளர் மன நிலையையும்தான். இதைத் திரித்து விஷமம் செய்துகொன்டிருப்பது கலைஞர் கருணாநிதி அவர்கள்தான். நான் எழுப்பிய அசல் பிரச்சினைக்கு - கண்ணகி எப்படி தமிழ்ப்பெண்களுக்கு ரோல் மாடல் ஆவாள் என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாததால் இந்த திரிபு வேலை நடக்கிறது. .

எதிர்பார்த்தது போலவே ஆட்சியாளரை அண்டிப் பிழக்கும் புலவர் மரபில் வந்த கூட்டம் என் மீது பார்ப்பான் என்ற அவதூறை வீசிக் கொண்டிருக்கிறது. இவை எதுவும் எனக்கு புதிதல்ல.

கண்ணகி சிலை பிரச்சினை பற்றி நான் 2001லேயே எழுதினேன். அதே கருத்துக்களைத்தான் இப்போதும் எழுதியிருக்கிறேன். 2001க்கும் முன்பாக, வாஜ்பாய் ஆட்சியில் கண்ணகி விருது என்று ஒரு விருதுக்கு பெயர் சூட்டப்பட்டபோதும் இதே கருத்துக்களை எழுதியிருக்கிறேன். அந்தக் கட்டுரைகள் ஜூனியர் விகடனிலும் திண்ணை இணைய இதழிலும் வெளியாகின. அப்போது கலைஞர் கருணாநிதியும் சரி, அவரை ஆதரித்து என்னை அவதூறு செய்யும் கூட்டமும் சரி இப்போது போல பத்திரிகை எரிப்பு, கொடும்பாவி எரிப்பு வேலைகளில் ஈடுபடவில்லை. நந்தன் வழி என்ற பத்திரிகையை அப்போது நடத்திக் கொண்டிருந்த அருணாசலம் தன் இதழில் அவதூறு செய்தார். அதற்கு அவருக்கு அப்போது அனுப்பிய பதிலைக் கூட அவர் வெளியிடவில்லை. அது வீரமணி ஆசிரியராக உள்ள விடுதலை இதழில் வெளியிடப்பட்டது. இப்போதும் அருணாசலம் தன் இணைய தள இதழில் பழைய அவதூறை திரும்பச் செய்திருக்கிறார். பழைய பதிலே அத்தகைய அவதூறுகளுக்கு என்றைக்கும் போதுமானது.

பிறப்பின் அடிப்படையில் ஒருவரைப் பற்றி முடிவு கட்டுவதுதான் பார்ப்பனீயம். எனவே என்னை பிறப்பின் அடிப்படையில் பார்ப்பான் என்று அவதூறு செய்பவர்கள் எல்லாருமே புதுப் பார்ப்பான்கள்தான். செயல்களின் அடிப்படையில் மட்டுமே மனிதர்களை மதிப்பிடுவதே அறிவுப்பூர்வமான சமத்துவம். அதுவே என் வாழ்க்கை முறை.

வாசகர்கள் கவனத்துக்காக 2001, 2002ல் வெளியான அந்தக் கட்டுரைகள் இங்கே தரப்படுகின்றன. இதற்கு மேல் இந்த விவகாரத்தில் மேலும் சொல்ல எனக்கு ஏதும் இல்லை.


கண்ணகியும் திருவனந்தபுரம் மெயிலில் வந்த சேர நாட்டு இளம் பெண்ணும்.

ஞாநி

கண்ணகி சிலை அகற்றப்பட்டது தொடர்பான சர்ச்சை தமிழகத்தில் எழுந்த வேளையில் நான் திருவனந்தபுரத்தில் நண்பருடன் அங்கே கண்ணகி ஆற்றுக்கால் அம்மனாக அவதாரம் கொண்டிருக்கும் கோவிலின் வரலாறு பற்றி பேசிக்கொண்டிருக்க நேர்ந்தது. மதுரையை எரித்த ஆவேசம் தணிய கண்ணகி இளைப்பாறக் கால் பதித்த இடத்தில் அந்தக் கோவில் இருப்பதாக நம்பிக்கை.

அன்று இரவு திருவனந்தபுரம் மெயிலில் சென்னை திரும்புகையில், விடியற்காலை சுமார் இரண்டு மணிக்கு பெட்டிக்குள் இருந்த எதிர் வரிசை பெண்ணின் உரத்த குரல் என்னையும் பல சக பயணிகளயும் எழுப்பியது. அந்தப் பெண் பக்கத்து இருக்கையில் படுத்து இருந்த ஆணைக் கடுமையாக சாடிக் கொண்டிருந்தாள். அவன் தன்னை நோக்கிக் கையை நீட்டி சீண்டித் தொல்லை செய்ததை அவள் கண்டித்துக் கொண்டிருந்தாள். சக பயணிகளை தன் உதவிக்கு வரும்படி அந்தப் பெண் அழைக்கக் கூட இல்லை. வந்த உதவியை நிராகரிக்கவும் இல்லை.

முறைகேடாக நடந்து கொண்ட பயணிய நடுவழியில் இறக்கி விட்டுவிடலாம் என்று பெட்டியின் நடத்துநர் சொன்னதை அவள் ஏற்கவில்லை. அவனை உடனே போலீசிடம் ஒப்படைக்க வேண்டுமென்று வலியுறுத்தினாள். அப்போது சேலம் ரயிலடியில் வண்டி நின்றது. நடத்துநர் ஓடிச் சென்று ஒரு காவல் துறை துணை ஆய்வாளரை அழைத்து வந்தார். அந்தக் காவலரோ புகாரைப் பதிவு செய்ய வேண்டுமென்றால், இருவரும் அந்த ரயில் நிலைலயத்தில் இறங்க வேண்டும் என்றார். தன் முகவரி, முழு விவரங்களுடன் தான் எழுத்துப் பூர்வமாகப் புகார் கடிதம் தரும்போது, தானும் ஏன் பயணத்தை பாதியில் முறிக்கவேண்டும் என்று அந்தப் பெண் கேட்டதற்கு சரியான பதில் இல்லை. காவலர் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இறங்கிப் போய்விட்டார்.

அந்தப் பெண் நடத்துநரிடமிருந்து தவறு செய்த பயணியின் பெயர் விவரத்தைப் பெற்று புகார் கடிதம் எழுதி நடத்துநரிடம் அளித்தாள். குற்றவாளி 18 வருட சர்வீஸ் உள்ள ராணுவ 'வீரர்'. (ரயிலில் ராணுவ சிப்பாய்கள் பெண்களிடம் அத்து மீறி இப்படி நடப்பது தனக்குத் தெரிந்தே நான்காவது முறை என்று அந்தப் பெண் தெரிவித்தாள்.) ரயில்வே நிர்வாகத்தின் மூலம் புகாரை ராணுவத் தலைமையகத்துக்கு அனுப்புவதாக நடத்துனர் உறுதியளித்தார். இதுவரை வாய் திறக்காமல் மௌனமாக இருந்த குற்றவாளி, வேறு சில பயணிகளின் யோசனையின்பேரில், சட்டென்று அந்தப் பெண்ணின் காலைத் தொட்டு வணங்கி தன்னை எதுவும் செய்துவிடவேண்டாம் என்றான். கோபமடந்த பெண், அருகிலிருந்த ஒரு செருப்பை எடுத்து அவன் தலையில் அடித்தாள். அவனிடம் எந்த சலனமும் இல்லை. கடைசி வர அந்தப் பெண் தன் புகாரைத் திரும்பப் பெறவில்லை.

சென்னைக்கு ரயில் வந்து சேருகையில் சில சக தமிழ்ப் பயணிகள், அந்தப் பெண் மலையாளியாக இருக்கவேதான் இத்தனைத் துணிச்சலுடன் செயல்பட்டதாகத் தமக்குள் பேசிக் கொண்டார்கள். " நம்ம பொண்ணுங்க சகிச்சுட்டு மௌனமா இருந்துடுவாங்க. இதெல்லாம் வெளியில சொன்னா நமக்குதான் அவமானம்னு நெனப்பாங்க. நம்ம கல்ச்சரே வேறங்க" என்றார் ஒருவர்.

ரயிலடியில் தமிழ் செய்தித்தாட்களை வாங்கிப் பிரித்தேன். அனல் பறந்தது. கண்ணகி சிலை அகற்றப்பட்டது "தமிழருக்கு அவமானம்.... தமிழரின் தன்மானத்துக்கு இழுக்கு.... தமிழ் பண்பாட்டின் அடையாளத்தை அழிப்பதா?... எங்குற்றான் என் தமிழன் இங்குற்ற இழிவுதனை எதிர்ப்பதற்குத் துணிவின்றி ?..." என்று உணர்ச்சி பொங்கும் அறிக்கைகள்.

உண்மையில் கண்ணகி தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமா? தமிழரின் தன்மானத்தின் வெளிப்பாடா ? நிச்சயமாக இல்லை.

கண்ணகி என்பவள் யார் ? கணவன் கோவலன் தன்னைப் புறக்கணித்துவிட்டு மாதவியிடம் சென்றபோது எதிர்ப்பு காட்டாமல் மௌனமாக இருந்தவள். பொருளை இழந்துத் திரும்பி வந்தவனுக்குத் தன் காற் சிலம்பை கணவனுக்கு எடுத்துக் கொடுத்தவள். சாதாரணமாக ஒரு வணிகருக்கு இருக்கவேண்டிய அடிப்படை புத்திசாலித்தனம் கூட இல்லாமல் கோவலன் ஏமாந்து , திருடன் என்று பழிக்குள்ளாகிக் கொல்லப்பட்டபோது, தனக்காக கணவனிடம் நீதி கேட்டுப் போராடாத கண்ணகி, தன்னை வஞ்சித்த கணவனுக்காக நீதி கேட்டு மன்னனிடம் போராடினாள். தன் அசட்டுக் கோபத்தில், ஒரு தவறும் செய்யாத அப்பாவி மதுரை மக்களின் வீடுகளையும் ஊரையும் தன் 'கற்புக் கனலால்' எரித்தாள். ( முதல் பயங்கரவாதி. முதல் பெண் மனித வெடிகுண்டு என்று வேண்டுமானால் சிலர் அவளை கொண்டாடிக் கொள்ளலாம்.).

இவள் எப்படி மற்ற - தமிழ்ப் பெண்களுக்கான முன் உதாரணமாக இருக்க முடியும் ?

ஆனால் தமிழ்நாட்டில் கண்ணகியைக் காட்டிக் காட்டி நமது பெண்களை மூளைச் சலவை செய்து வந்ததன் விளைவாகத்தான், ரயில்களில், பஸ்களில், பொது இடங்களில் ஏன் வீட்டுக்குள்ளும்தான், எல்லா அவமானங்களையும் சீண்டல்களையும் மௌனமாக சகித்துக் கொள்கிற 'கல்ச்சர்' ஏற்பட்டிருக்றது. தனக்கு இழக்கப்படும் அநீதிகளைப் பொறுத்துக் கொண்டு மௌனமாக இருக்க வேண்டும். தன் வீட்டு ஆண்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு மட்டும் தெருவில் வந்து போராடவேண்டும் என்று பெண்ணுக்கு போதிக்கிற கலாசாரம்தானே கண்ணகி கலாசாரம் ?

கண்ணகியை யார் போற்றுவது நியாயம் ? பிறன் மனை விழையும் பிரமுகர்கள், பல தார மணம் செய்யும் சான்றோர்கள் ஆகிய சில தமிழ் ஆண்களுக்குத்தான் கண்ணகி தேவை. அதாவது அவர்களுடைய பல திருமணங்களையும், சின்ன வீடுகளையும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் மௌனமாக சகித்துக் கொள்ளக்கூடிய கண்ணகிகளாக இருக்கக்கூடிய முதல் மனைவி தேவைப் படும் ஆண்கள். அவர்கள்தான் கண்ணகியை தமிழ்ப் பெண்களுக்கு முன்மாதிரியாகக் காட்டுவார்கள்.

பாண்டிய மன்னனிடம் நீதி கேட்க வந்த போது கூட தன்னை இன்னாரின் மகள் என்று அறிமுகம் செய்து கொள்ளாமல், தன் புகுந்த வீட்டுப் பெருமையைச் சொல்லி இன்னாரின் மருமகள் என்று " தமிழச்சிக்கேயுரிய பண்பாடு மாறாமல்" கண்ணகி தன்னை அறிமுகம் செய்துகொண்டதைத் தன் அறிக்கையில் பாராட்டிப் புல்லரித்துப் போறார் கலைஞர் கருணாநிதி. இது எப்படி தமிழச்சி பண்பாடு ? இதுதானே மற்றபடி கலைஞர் எதிர்ப்பதாகச் சொல்லிக் கொள்ளுகிற மனு நீதி? ஒரு பெண் திருமணத்துக்கு முன் தந்தையை சார்ந்தும், திருமணத்துக்குப் பின் கணவனைச் சார்ந்தும், பிறகு மகனைச் சார்ந்தும்தான் இருக்க வேண்டும் என்று விதித்த மனு நீதிப் படிதானே கண்ணகி புகுந்த வீட்டு அடையாளம் பேசுகிறாள் ? கண்ணகி மனு நீதி வழுவாத தமிழச்சி என்பதால்தானே அவள் மீது பிஜேபி தலைவர் இல. கணேசனுக்கு பக்தி பொங்கி, கடற்கரையில் இனி சிலைக்குப் பதிலாகக் கோயிலே கட்ட வேண்டுமென்று சொல்கிறார் ?

கண்ணகி தமிழ்ச் சமூகத்தின் ஆண் ஆதிக்கப் பண்பாட்டின் பிரதிநிதி. பெண்ணடிமைத்தனத்தின் முழு அடையாளம். அதனால்தான் திராவிடர் இயக்கம், பகுத்தறிவு இயக்கம், சுயமரியாதை இயக்கம் அனைத்துக்கும் தாயும் தந்தையுமாக விளங்கிய பெரியார் ஒருபோதும் கண்ணகியை பெண்களுக்கான முன்மாதிரியாக ஏற்றுக் கொள்ளவே இல்லை. அவளை ஒரு முட்டாள் பொம்பளை என்றார் பெரியார். காரணம் கண்ணகியின் கொள்கைதான். கல்லானாலும் கணவன், புல்லானாலும் பொறுக்கியானாலும் புருஷன் என்று பெண்கள் அடிமைப்பட்டிருப்பதை பெரியார் கண்டித்தார்.

எனவே கண்ணகியை தமிழ் பண்பாட்டின் அடையாளம் என்று சொல்லுவதுதான் தமிழரை , குறிப்பாக தமிழ்ப் பெண்களை அவமானப்படுத்துகிற, தொடர்ந்து அடிமைப்படுத்துகிற வேலை. காப்பியங்களின் இலக்கியச் சுவையை நுகர்வது வேறு. அவை புகட்டும் பிற்போக்குக் கருத்துக்களை சேர்த்து ஏற்றுக் கொள்வது ஆகாது.

கண்ணகி சிலையை அகற்றினவர்கள் மூட நம்பிக்கையாளர்கள், வேள்வி, யாகப் பிரியர்கள், அராஜக அரசியலில் நம்பிக்கையுள்ளவர்கள் என்பதனாலே, கண்ணகி சிலை என்பது ஒரு முற்போக்கான விஷயமாக மாறி விடாது.

உண்மையில் கண்ணகிக்கு சிலை வைத்ததே தவறான செயல். அந்தக் காரணத்துக்காக அதை அகற்றாமல், வேறு காரணங்களுக்காக அகற்றுவது இன்னொரு தவறான செயல். இந்தத் தவறுகள் பற்றிய விழிப்புணர்வு தமிழ்ச் சமூகத்துக்கு வரும்வரை, திருவனந்தபுரம் ரயிலில் சேர நாட்டு இளம்பெண்களின் துணிச்சலைப் பாராட்டிவிட்டு சோழ, பாண்டிய, தொண்டை மண்டலப் பெண்களின் மௌனக் குரல் எப்போது ஒலிக்கும் என்று ஏங்கிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.



சிலை அகற்றிய வரலாறு

ஒரு ஆட்சியில் சிலை வைப்பதும் இனொரு ஆட்சியில் அதை அகற்றுவதும் வரலாற்றில் சகஜமானவை. சோவியத் யூனியன் சிதறியதும் லெனின் , மார்க்ஸ் சிலைகள் அகற்றப்பட்டது அண்மைக்கால வரலாறு.

சென்னையில் சிலை அகற்றப்பட்ட வரலாறு முக்கியமானது. தற்போது அண்ணா சாலையில் காயிதே மில்லத் கலைக்ல்லூரி இருக்கும் இடத்துக்கு வெளியே கன்னிமாரா ஓட்டல் எதிரே ராணுவ தளபதி நீல் சிலை இருந்தது. இதை அகற்ற வேண்டுமென்று நடந்த போராட்டத்தின் விளைவாக சிலை வைத்து 76 வருடங்கள் கழித்து அந்த சிலை அகற்றப்பட்டது.

இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்று சொல்லப்பட்ட சிப்பாய் கிளர்ச்சி 1857ல் நடந்தபோது அதை ஒடுக்குவதற்காக சென்னையிலிருந்து அனுப்ப்ப்பட்டவன் கர்னல் ஜேம்ஸ் ஜார்ஜ் ஸ்மித் நீல். காசி, அலகாபாத், கான்பூர் மூன்று இடங்களிலும் கிளர்ச்சியை நீல் ஒடுக்கியிருக்கவில்லை என்றால் இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யமே நிலை பெற்றிருக்க முடியாது. ஜாலியன் வாலாபாக்கை விடப் பெரும் கொடுமைகளை நீல் அப்போது செய்தான். போகிற வழியில் எல்லாம் அப்பாவி கிராம மக்களை நெடுஞ்சாலை ஓரம் இருந்த மரங்களிலேயே வரிசையாக தூக்கிலிட்டான். காசி அருகே சுமார் 20 கிராமங்களை முழுக்க தீ வைத்துக் கொளுத்தினான். விசாரணையே இல்லாமல், பெண்கள், குழந்தைகள் என்று மொத்தமாக ஆறாயிரம் பேரை நீல் ராணுவம் கொன்றது.

நீல் செய்த 'சேவையை'ப் பாராட்டி அவனுக்கு சிலை வைப்பதற்காக லண்டனில் நிதி திரட்டினார்கள். அந்தப் பணத்தைக் கொண்டு சிலை தயாரிக்கப்பட்டு கப்பலில் எடுத்து வந்து சென்னையில் அதை 1861ல் நிறுவினார்கள்.

நீலின் அக்ரமங்களைப் பற்றி வீர சாவர்க்கர் 1909ல் ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதினார். அதை பிரிட்டிஷ் அரசு தடை செய்தது. ஆனால் பாண்டிச்சேரியில் இருந்த வ.வே.சு அய்யரிடமிருந்து ரகசியமாக ஒரு பிரதியை மதுரை சிதமபர பாரதி எடுத்துச் சென்றார். அதைப் படித்துவிட்டு ஆவேசமடந்த மதுரை தொண்டர்கள் சீனிவாச வரதன், அவர் மனைவி பாத்மாசனி, சோமயாஜுலு ஆகியோர் நீல் சிலையை அகற்றக் கோரி 1927ல் (சிலை வைக்கப்பட்டு 66 வருடங்கள் கழித்து) போராட்டத்தைத் தொடங்கினார்கள். சென்னைக்கு தொண்டர்கள் செல்வதற்கு பணச் செலவுக்காக பத்மாசனி அம்மாள் தன் நகைகளை அடகு வைத்தார். பின்னாளில் காந்திகிராமத்தை தொடங்கிய சௌந்தர்மணி அம்மாள் வீர சாவர்க்கரின் புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்தார். சென்னையில் 1927ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் இந்த நூல் எல்லாருக்கும் விநியோகிக்கப்பட்டது. இந்த நூலும் தடை செய்யப்பட்டது.

சிலை எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் இரண்டு இரண்டு பேராக வந்து சிலை அருகே முழக்கம் இட்டுவிட்டு, ஒரு சிறிய சுத்தியால் அதை உடைக்கும் பாவனை செய்தார்கள். (இப்போது சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள அந்தச் சிலையைப் பார்த்தாலே அதை கடப்பாரையால் கூட உடைக்க முடியாது என்பது தெரியும்.)

அடையாள எதிர்ப்பு செய்தவர்கள் எல்லாரும் கைது செய்யப்பட்டார்கள். முகமது சாலியா, சுப்பராயலு, திருமலைசாமி நாயுடு, வேணுகோபால் நாயுடு, ரகுநாதராவ்,, சோமயாஜுலு, அருணாசலராவ், திருவேங்கட நாயக்கார், அங்கச்சி அம்மாள், முருகபடையாச்சி, கடலூர் அஞ்சலை அம்மாள் ( இவர் சுதந்திர இந்தியாவில் எம்.எல்.ஏ ஆனவர்.) என்று பலர் தண்டனை பெற்றார்கள். சிலருக்கு மூன்று வாரம் சிறை. சிலருக்கு நான்கு வருடம். காந்திமதிநாதன், அம்மாக்கண்ணு என்ற சிறுவர்களுக்கு நான்கு வருடம் சிறைத்தண்டனை. தண்டனை விதித்தவர் அப்போது மாஜிஸ்ட்ரேட்டாக இருந்த 'நாடகத் தந்தை' பம்மல் சம்பந்த முதலியார் ! அவருடைய நாடக உலக நண்பரான காங்கிரஸ் தலைவர் தீரர் சத்தியமூர்த்தி இந்த சிலை எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போராட்டத்துக்கு நிதி திரட்டுவதற்காக நாடகக் கலைஞர் மதுரை விஸ்வநாததாஸ் நாடகங்கள் நடத்திக் கொடுத்தார். நீலனின் கொடுங்கோன்மையை விவரிக்கும் பாடல்களைப் பாடினார்.

கடைசியில் நீலன் சில 1937ல் சென்னை மாகாண ஆட்சியில் காங்கிரஸ் அமர்ந்தபோது, அகற்றப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. இந்த சம்பவங்களை தொலைக்காட்சித் தொடரில் காட்டும் வாய்ப்பு எனக்கு 1997ல் சென்னை தொலைக்காட்சிக்காக விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெண்களின் பங்கு பற்றி 'வேர்கள்' என்ற தொடர் தயாரிக்கும்போது கிட்டியது.




Sunday January 27, 2002
'நந்தன் வழி ' பத்திரிக்கையில் வந்த கண்ணகி கட்டுரைக்கு பதில்
ஞாநி

குறிப்பு:

கண்ணகி சிலை விவகாரம் தொடர்பான என் கட்டுரையை திண்ணையில் வெளியிட்டிருந்தீர்கள். அதே கட்டுரை சற்றே சுருக்கப்பட்டு, ஜூனியர் விகடன் இதழிலும் வெளியிடப்பட்டது. அதைக் கண்டித்து 'நந்தன் வழி ' இதழில் அதன் நிறுவனர் ஆசிரியர் நா. அருணாசலம் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள் இதோ:

பார்ப்பன வெறியர்கள் எல்லாரும் இப்போது பகுத்தறிவு பேசுகிறார்கள்.....

ரயிலில் தன்னை அவமதித்த ஒரு பட்டாளத்தானைச் செருப்பால் அடித்துப் பெண்ணின் பெருமையை நிலை நாட்டினாள் ஒரு கேரளத்துப் பெண். கண்ணகியோ ஆணாதிக்கத்துக்கு அடிமையாகிப் போன ஒரு கோழை. அவளை எப்படித் தமிழ்ப் பெண்ணிற்கு எடுத்துக் காட்டாகப் புது யுகம் ஏற்கும் ' என்று விகடனில் வினவுகிறார் 'ஞாநி 'யார்.

கண்ணகி கோவலனைச் செருப்பால் அடித்திருக்க வேண்டும். சீதை ராமனைச் செருப்பால் அடித்திருக்க வேண்டும்.செருப்பால் அடிப்பவளே சிறந்த பெண்மணி. ஆடிட்டர் ராஜசேகரனைச் செருப்பால் அடித்த ஜெயலலிதாவே மாதர் குல மாணிக்கம் என்பது 'ஞாநி 'யார் வாதம்.

தனது மதிப்பு மரியாதைக்காக கேரளத்துப் பெண் போராடிக் கொண்டிருந்த போது, பெண்ணுரிமை பேசும் ஞாநியார், தன் கண் எதிரே கேவலமாக நடந்துகொண்டவனைத் தட்டிக் கேட்க முடியாதது ஏன் ? அந்தப் பெண்ணின் சார்பாகப் போராடதது ஏன் ? ஒரு பெண் கண் எதிரே இழிவு செய்யப்படும் போது இவர் ஒரு பார்வையாளர். கை கால் விளங்காத பாரிச நோயாளி. கண்ணகி சிலை விவகாரத்திலோ இவர் ஒரு பெண்ணுரிமைப் போராளி. பகுத்தறிவுப் புரட்சியாளர்.

தங்கள் வாதத்திறமை அனைத்தையும் அக்கிரகாரத்து அறிவுஜீவிகள் ஜெயலலிதாவை நியாயப்படுத்துவதற்காகவே பயன்படுத்துகிறார்கள். இப்போது அவர்களுக்குப் பகுத்தறிவு தேவைப்படுகிறது. பெரியார் தேவைப்படுகிறார். கண்ணகி தனது கணவனின் வேசித்தனத்தைக் கண்டிக்காதது ஏன் ? தனது சுயமரியாதைக்காகப் போராடாதது ஏன் ? என்று பெரியார் கேட்கலாம். ஞாநி கேட்கலாமா ? சோ கேட்கலாமா ? இந்து கேட்கலாமா ?

கண்ணகி போராடவில்லை என்பதால்தான் கண்ணகி சார்பாகப் பெரியார் போராடினார். பெரியாருக்குப் பின்னால் ஒளிய நினைக்கும் பார்ப்பனக் குஞ்சுகள் இப்போதாவது கண்ணகிக்காகப் போராடவேண்டாமா ?

பெண்ணுரிமை, பகுத்தறிவு, பெரியார் என்பதெல்லாம் இவர்களின் ஒப்பனைக்குத் தகுந்த வசனங்கள் என்பது நமக்குத் தெரியாததல்ல.

வைதீகப் பார்ப்பானை விட லெளகீகப் பர்ப்பான் ஆபத்தானவன் என்று சும்மா சொல்லிவிடவில்லை பெரியார். சூத்திர வேடமிடும் பார்ப்பனர்களிடமும், பார்ப்பன வேடமிடும் சூத்திரர்களிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதுதான் தந்தை பெரியார் எமக்குக் கற்றுத்தந்த பாடம்; பகுத்தறிவு; பயனுள்ள அரசியல் தத்துவம்.

வீரமணி, சோ, ஞாநி, பன்னீர் என்று பேராசிரியர்கள் பலர் புதிய புதிய விளக்கங்களால் தமிழகத்தை வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கையில், மானமும் அறிவும் பெற்ற தமிழர்கள் தங்கள் இனத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் ஓர் இழிவான தாக்குதலாகவே கண்ணகி சிலை விவகாரத்தைக் கருதுகிறார்கள்....

மேற்கண்ட நந்தன் கட்டுரைக்கு என் பதிலை அந்த இதழுக்கு அனுப்பினேன். அவர்கள் அதை வெளியிடவில்லை. தொடர்ந்து அடுத்த இதழிலும், மேற்கண்ட தொனியிலேயே என்னை இழிவுபடுத்தி எழுதி வருகிறார்கள். இந்தச் சூழலில், அவர்கள் வெளியிடாத என் பதிலை கீழே தருகிறேன்.

நந்தன்வழி நிறுவனர் ஆசிரியர் நா. அருணாசலத்துக்கு,

ஜூனியர் விகடன் இதழில் வெளியான ' கண்ணகியும் திருவனந்தபுரம் மெயிலில் வந்த சேர நாட்டு இளம்பெண்ணும் ' என்ற என் கட்டுரையைப் பற்றி நீங்கள் நந்தன் வழியில் எழுதியதைக் கண்டேன்.

கண்ணகி பற்றி என்னுடன் கருத்து மாறுபாடு கொள்ள உங்களுக்கும், தங்களுடன் கருத்து மாறுபாடு கொள்ள எனக்கும், நம்முடன் மாறுபாடு கொள்ள மக்களுக்கும் முழு உரிமை உண்டு. ஆனால் நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்கள் மாறுபாட்டை விவாதிக்கும் தொனியில் அமையவில்லை.

நீங்கள் சொல்லியிருப்பது போல பெரியார் எனக்கு புதிதாகத் தேவைப்படுபவர் அல்ல. நான் ஒன்றும் முதலாளிகள் வீசும் எலும்புத்துண்டுகளுக்கு ஏற்ப வேனிலாகவும் வெயிலாகவும், புயலாகவும் புழுதியாகவும் மாறி மாறி வாரி இறைக்கிற எழுத்துவேசி அல்ல. நீங்கள் வள்ளலாகவும் அய்யாவாகவும் நந்தன் வழி பத்திரிகை அதிபராகவும் புதிய அவதாரங்கள் எடுத்து பொது வாழ்க்கையில் ஈடுபடுவதற்குப் பல்லாண்டுகள் முன்பிலிருந்தே , நான் பத்திரிகையாளனாக பல முறை பெரியாரின் கருத்துக்களை ஆதரித்து வலியுறுத்தி எழுதி வந்திருப்பவன். வாழ்க்கையில் கடைப்பிடித்தும் வருபவன். நாத்திகனாக,சமய, சாதி சடங்குகளை நிராகரித்த சாதி மறுப்பாளனாக வாழ்ந்துவருபவன்.

1987ல் இந்திய அமைதிப்படை ஈழத்துக்குச் சென்றபோது நீங்கள் எங்கே என்னவாக இருந்தீர்களோ, எனக்குத் தெரியாது. அப்போது நான் மறைந்த அறிஞர்கள் சாலையார், சாலினியார், இயக்குநர் வி.சி.குகநாதன், கவிஞர் மு.மேத்தா ஆகியோரோடு ஈழத்தமிழர் உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினராக மனிதச் சங்கிலிப் போராட்ட ஏற்பாடுகளிலும் போராட்டத்திலும் ஈடுபட்டவன். 1981ல் 'எதிரொலி ' ஏட்டில் பணியாற்றிய போது என் நண்பர் சின்னக் குத்தூசியுடன் இணைந்து காஞ்சி சங்கர மடத் தலைவரின் பிற்போக்கான கருத்துக்களை அவருடைய நேர்காணலின் வாயிலாக அம்பலப்படுத்தியவன்.

அந்த விவகாரத்தில், நீங்கள் என்னை யாருடன் சேர்த்துப் பட்டியலிடப் பார்க்கிறீர்களோ, அந்த 'துக்ளக் 'ஆசிரியர் 'சோ 'வுடன் முரண்பட்டு நின்றவன். அண்ணாவின் ' சிவாஜிகண்ட் இந்து ராஜ்யம் அல்லது சந்திரமோகன் ' என்ற வரலாற்று முக்கியத்துவம் உள்ள நாடகத்தை தமிழ் நவீன நாடக இயக்கங்களிலேயே எங்கள் குழு ஒன்றுதான் சென்னை சபாவுக்குள்ளே சென்று அரங்கேற்றியது. அதிலே காக பட்டரை இன்றைய சங்கர மடத் தலைவராக உருவகித்து நடித்துக் காட்டியவன் நான். மண்டல் கமிஷனை ஆதரித்து, தோழர் வழக்கறிஞர் சந்துருவுடன் மேடைகளில் பேசியது தவிர, சிறு நூலொன்றும் எழுதியவன் நான். இதையெல்லாம் எப்போதும் விளம்பரம் செய்துகொள்ள நான் விரும்பியதில்லை. ஏனென்றால் இவையெல்லாம் எது சரி என்று நான் நம்புகின்றேனோ அதனால் செய்தவை. இப்போது கூட உங்கள் அறியாமையைத் தெளிவிக்கவே சொல்ல நேர்ந்தது.

என் போன்றோர் பிழைப்புக்காக பகுத்தறிவு, பெரியார் பக்கம் வந்தவர்கள் அல்ல. நாங்கள் பிறந்த சாதியின் கோளாறுகளையும், மொத்தமான சாதி அமைப்பின் கொடூரத்தையும் உணர்ந்து அதற்குக் காரணமான மதத்தையும் சேர்த்து நிராகரித்தவர்கள். அதற்கான ஞான வெளிச்சத்தை எனக்குத் தந்த பாரதியும் மார்க்சும் பெரியாரும் எல்லா சாதிகளிலும் உள்ள உங்களைப் போன்ற கொள்கை வியாபாரிகளை அடையாளம் கண்டு கொள்ளவும் கற்றுத் தந்திருக்கிறார்கள்.

நான் வைதீகப் பார்ப்பானும் அல்ல; லெளகீகப் பார்ப்பானும் அல்ல. உங்களைப் போல சூத்திர உடலில் வலம் வரும் புதிய பார்ப்பானும் அல்ல. பார்ப்பனப் பெண்ணை இரண்டாவது தாரமாக்கிக் கொண்டு,சங்கர மடத்தலைவரை வீட்டுக்கு வரவழைத்து பாத பூஜை செய்த ஓட்டல் அதிபரின் பலதார, பலகாரச் சுவையைப் போற்றியது உங்கள் இதழ். இன்று நீங்கள் எந்தக் கண்ணகிச் சிலைக்காகப் போராடுகிறீர்களோ, அந்த சிலைக்கு மாடலாக, தன் படத்தில் நடித்த 'தமிழ்ப் பெண் ' விஜயகுமாரியை நிராகரித்துவிட்டு, தன்னுடைய பார்ப்பன சிநேகிதி கல்பனாவை ஏன் கலைஞர் கருணாநிதி தேர்ந்தெடுத்தார் என்ற கேள்வியை எழுப்பும் துணிச்சல் இல்லாத கோழை நீங்கள். எனவே உங்களுக்குத்தான் பெரியார் பெயரைச் சொல்லும் அருகதை இல்லை. பெரியார் பெயரையும் கருத்துக்களையும் சொல்லவும் பரப்பவும் உங்களை விடவும் என் போன்றோர்க்கு அதிகமான உரிமை உண்டு. பெரியாரைக் கூட பிராண்ட் ஆக்கி நாங்கள் மட்டுமே பேசுவோம் என்று நீங்கள் சொல்லுவது வியாபார புத்தி.

கண்ணகி மட்டுமல்ல, சீதையும், நளாயினியும், கண்ணகியின் கற்பு, பண்பாடு பற்றி உருகுகிற இன்றைய அரசியல் தலைவர்கள், சமூகப் பிரமுகர்கள் பலரின் முதல் மனைவிகளும் என் தந்தையின் முதல் மனைவியும் கூட அவரவர் செருப்புகளை தம் கணவன்களுக்கெதிராகப் பயன்படுத்தியிருந்தால் அது ஒன்றும் குற்றமாகிவிடாது என்பதுதான் பெரியார் எனக்குக் கற்றுத் தந்த பார்வை.

ஆடிட்டரிடம் ஜெயலலிதா செருப்பைப் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆடிட்டர்களைப் பற்றி வியாபாரிகளே அறிவார்கள். சுய லாபத்துக்காக ஆடிட்டர்களை அடிக்கிற கையும் அணைக்கிற கையும் அவர்களுடையதுதான்.

ரயிலில் சேர நாட்டுப் பெண்ணிடம் பட்டாளத்தான் முறைகேடாக நடந்துகொண்ட போது, பெண்ணுரிமை பேசுகிற நான் என்ன செய்து கொண்டிருந்தேன், சும்மா இருந்தேனா, வேடிக்கை பார்த்தேனா என்று கிண்டலடிக்கிறீர்கள். கைகால் விளங்காத பாரிச நோயாளியாக நான் ஆகிவிட்டிருக்கக்கூடாதா என்ற உங்கள் ஆசை அபிலாஷைகளைச் சொல்லியிருக்கிறீர்கள். மூளையில் பாரிசம் ஏற்பட்டவர்களுக்கு அப்படித்தான் தோன்றும்.

'அந்தப் பெண் யாருடைய உதவியையும் கோரவும் இல்லை; வந்த உதவிகளை நிராகரிக்கவும் இல்லை ' என்று என் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். அவளுக்கு வந்த உதவிகளில் என்னுடையதும் அடங்கும். அவள் காவல் துறைக்கு எழுதிய புகார் மனுவில் இருக்கும் இரண்டு சாட்சிகளில் நானும் ஒருவன். என் கட்டுரை அந்தப் பெண்ணின் வீரம் பற்றியும், கண்ணகியின் கோழைத் தனம் பற்றியுமே தவிர, என்னைப் பற்றிய பிரதாபங்களை எழுதுவதற்கல்ல. உங்கள் பத்திரிகையில், உங்கள் படத்தையே போட்டுக் கொண்டு, உங்களை நீங்களே வள்ளல் என்றும் அய்யா என்றும் எழுதிக் கொள்ளும், எழுதவைத்துக் கொள்ளும் பழக்கம் உடையவராதலால் அதையே எல்லாரிடமும் எதிர்பார்க்கிறீர்கள் போலும்.

ஜூனியர் விகடனில் வெளியான என் கட்டுரையில் ' கண்ணகி சிலையை அகற்றியவர்கள் மூட நம்பிக்கையாளர்கள், வேள்வியாகப் பிரியர்கள், அராஜக அரசியல் செய்கிறவர்கள் என்பதனாலேயே கண்ணகி சிலை என்பது முற்போக்கான விஷயமாகிவிடாது ' என்று தெளிவாகக் குறிப்பிட்ட பின்னும், என்னை நீங்கள் ஜெயலலிதா ஆதரவாளனாக முத்திரை குத்தப் பார்ப்பது உங்களைத்தான் அடையாளம் காட்டுகிறது.

தமிழுக்கும் தமிழருக்கும் நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. முடிந்தால் உங்கள் செல்வத்தையும் நேரத்தையும், உங்களுக்காக உழைக்கும் எழுத்தாளர்களையும் பகுத்தறிவு மலர் வெளியிடுவது, தமிழிசையைப் பரப்புவது, போன்ற உருப்படியான பணிகளுக்குச் செலவிடுங்கள். அது இயலாவிட்டால், நல்லது செய்தலாற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின். கண்ணகி போன்ற மனு தர்மத்தின் தமிழ் வடிவத்தைத் தொடர்ந்து பரப்பி தமிழ்ப் பெண்களை மேலும் நூறாண்டுகளுக்கு ஆண்களின் கொத்தடிமைகளாக வைக்க முயன்றால் வரலாறு உங்களை மன்னிக்காது.

இந்தக் கடிதத்தைத் துளியும் சிதைக்காமல் அப்படியே வெளியிடுமாறு கோருகிறேன்.

ஞாநி
5-1-2002

இன்றைய தமிழ்ச் சூழலில் மாறுபட்ட கருத்துக்களை தீவிரமாக,அதே சமயம் கண்ணியமாக விவாதிப்பதற்கான வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பது வருத்தத்துக்குரியது என்ற என் கவலையை எண்ணற்ற தமிழ் ஆர்வலர்கள் பகிர்ந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.

ஞாநி
26-1-2002



இரண்டு விதவைகள்

ஞாநி

பி.ஜே.பி ஆட்சி ஒரு விதவையின் பெயரை சிறந்த பெண்மை விருதுக்கு சூட்டியிருக்றது. பி.ஜே.பி கட்சியினர் இன்னொரு விதவை பற்றி திரைப்படம் எடுக்கக்கூடாது என்று ரகளையில் இறங்யிருக்றார்கள். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் ஏதோ முரண்பாடு போலத் தோன்றலாம். ஆனால் முரண்பாடு எதுவும் இல்லை.

கண்ணகி ஒரு விதவை. அவள் பெயரில் சிறந்த பெண்மைகளுக்கான விருதுகள் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்ததுமே அதை தமிழக முதல்வர் வரவேற்றார். முதல்வரின் ஞான குருவான பெரியார் ஒரு போதும் கண்ணகியை பெண்களுக்கான முன்மாதிரியாக ஏற்றுக் கொள்ளவே இல்லை. காரணம் கண்ணகியின் கொள்கைதான். கல்லானாலும் கணவன், புல்லானாலும் பொறுக்யானாலும் புருஷன் என்று பெண்கள் அடிமைப்பட்டிருப்பத பெரியார் கண்டித்தார்.

கண்ணகி ஒரு பெண் என்ற விதத்தில் எப்படிப்பட்டவளாக இருந்தாள் ? கணவன் கோவலன் தன்னைப் புறக்கத்துவிட்டு மாதவியிடம் சென்றபோது எதிர்ப்பு காட்டாமல் மௌனமாக இருந்தாள். திரும்பி வந்து, பொருள் இழந்த வேலையில், புது வணிகம் தொடங்க தன் காற் சிலம்ப கணவனுக்கு எடுத்துக் கொடுத்தாள்.சாதாரண வணிகனுக்கு இருக்க வேண்டிய எந்த புத்திசாலித்தனமும் இல்லாத அவன் ஏமாற்றப்பட்டு, திருடன் என்று பழிக்குள்ளாகி கொல்லப்பட்டான். விதவைக் கண்ணகி அவனுக்காக நீதி கேட்டு மன்னனிடம் போராடினாள். தன்அசட்டுக் கோபத்தில், ஒரு தவறும் செய்யாத அப்பாவி மக்களின் வீடுகளையும் ஊரையும் தன் கற்புக் கனலால் எரித்தாள். இவள் எப்படி மற்ற பெண்களுக்கான முன் உதாரணமாக இருக்க முடியும் ?

கண்ணகியை விடவும் சிலப்பதிகாரம் காட்டுற மாதவியும், அவள் மகள் மணிமேகலையும் சமூகப் பார்வையும், சமத்துவ நோக்கும் உடைய மேலான பெண்களாக இருக்கிறார்கள்.

தமிழ் நாட்டுப் பெண்களில் ஒருவர் பெயரை அனைத்திந்திய பெண்கள் விருதுக்குச் சூட்ட பி.ஜே.பியும் தி.மு.கவும் விரும்பினால், குறந்தபட்சம் இரண்டு பெயர்கள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. நம் காலத்து மூவாலூர் ராமாமிருதம் அம்மயார், மருத்துவர் முத்துலட்சுமி .இருவரும் சம்பிரதாயங்கள் பெண்களுக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளைத் தூக்கி எறிந்துவிட்டு மற்ற பெண்கள் முன்னேற வழி வகுத்தவர்கள். தேவதாசிகள் திருமணம் செய்யக் கூடாது என்ற விதியை உடைத்து குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டு பகுத்தறிவு பிரசாரத்தில் ஈடுபட்ட்வர் ராமாமிருதம். பெண்கள் படிப்பதே பாவம் என்றிருந்த காலத்தில், ஒற்றைத்தனிப் பெண்னாக பள்ளிக்கூடம் சென்று தமிழகத்தின் முதல் பெண் மருத்துவராகவும், முதல் சட்டமன்ற பெண் உறுப்பினராகவும் சாதனைகள் செய்தவர் முத்துலட்சுமி. அவர்கள் இருவரும் கண்ணகியைப் பின்பற்றியிருந்தால், தேவதாசி முறை ஒழிந்திருக்காது. பெண் கல்வி தழைத்திருக்காது.

ஆனால் பி.ஜே.பியும், தி.மு.கவும் பெண்களை மறுபடியும் வீட்டுக்குள் பூட்டிவைக்க விரும்புன்றனவா என்ற கேள்வியை கண்ணகி பெயரில் விருது வைப்பது எழுப்புகிறது.

குறிப்பாக காந்தி நினைவு நாளன்று பி.ஜே.பி கட்சியினர் உத்தரப்பிரதேசத்தில் திரைப்பட இயக்குநர் தீபா மேத்தாவின் படப்பிடிப்பை நடத்தவிடாமல் வன்முறையில் ஈடுபட்டிருப்பது ஆபத்தான முன்னுதாரணமாகும்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் எதிர்ப்புக்கு அடிப்படை என்ன ? தீபாவின் படம் 1930களில் விதவைகளின் நிலை பற்றியது. ஒரு இளம் விதவை மறுபடியும் மணம் செய்துகொள்ள விரும்புவது பற்றியது. இந்தப் படத்தில் சில விதவைகள் விபசாரத்தில் ஈடுபடுத்தப் பட்டது பற்றி வருகிறது.

எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் விதவைகள் நிலை மோசமாக இருந்தது என்பதும், அவர்கள் விபசாரம் உட்பட பல்வேறு விதங்களில் கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்பதும் தவறு. இப்படி சித்திரிக்கும் படத்தை அனுமதிக்க மாட்டோம் என்று பி.ஜே.பி. ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆவேசப்படுகிறார்கள். தற்போது பி.ஜே.பியை ஆதரிக்கும் கருணாதி கூட 1952ல் பராசக்தி திரைப்படத்தில் விதவைகளின் நிலை பற்றி தீட்டிய வசனங்கள அவரே மறந்திருக்க மாட்டார்.

உண்மையில் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் விதவைகளின் நிலை என்னவாக இருந்தது ? இதை விவரிக்கப் போனால் ஒராண்டுக்கு தொடர்கட்டுரை எழுத வேண்டி வரும். இந்தியாவில் எந்த மொழியில் முதலில் வெளியான நாவல்கள எடுத்துப் பார்த்தாலும், அவற்றில் அன்றைய விதவையின் நிலை பற்றி இருக்கிறது.

ஈஸ்வரசந்திர வித்யாசாகர் முதல், வீரேசலிங்கம் பந்துலு,காந்தி, ஜோதிபாய் பூலே,வேதநாயகம் பிள்ளை, பாரதி,வ.ரா, மாதவய்யா என்று பலரும் இது பற்றி கவலைப்பட்டிருக்கிறார்கள். மாற்றத்துக்காக அவரவர் வழியில் உழைத்திருக்கிறார்கள். மிக முக்கியமானவர் பண்டித ரமாபாய்.

விதவைகள் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டது பற்றி முக்கியமாக கவலைப்பட்டவர் ஒரு வங்காளக் கவிஞர். மக்கேல் மதுசூதன் தத்தாவுக்கு இது பற்றித் தெரிவித்தது அமிர்த பசார் பத்திரிகா 1869ல் நடத்திய ஆய்வு. கல்கத்தா விபசார விடுதிகளில் உள்ள பெண்களில் நூற்றுக்கு 90 பேர் மேல்ஜாதி விதவைப் பெண்கள் என்று அந்த ஆய்வு தெரிவித்தது. மதுசூதன் உடனே அவர்கள மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். அதுவர பெண்கள் வங்காள நாடக மேடையில் நடிக்கும் வழக்கம் இல்லை. மதுசூதன் விபசார விடுதிகளில் சிக்கியிருந்த இளம் விதவைகள் பலர் நுண்கலைகளிலும், இசையிலும் நடனத்திலும் ஆர்வமும் திறைமையும் உள்ளவர்களாக இருப்பதைக் கண்டார். அவர்களில் பலரை நாடகக் கலைஞர்களாக்கினார்.

ஏன் இந்த இளம் விதவைகள் விபசார விடுதிகளுக்குச் சென்றார்கள்?

காரணம் வீட்டில் விதவையின் நிலை மிகக் கேவலமானதாகவும் கொடூரமானதாகவும் இருந்ததுதான். எப்படிப்பட்ட கொடுமை என்று இன்று கற்பன செய்துகூடப் பார்க்கமுடியாது.

மும்பையில் ஒரு பிரார்த்தனை சமாஜக் கூட்டத்தில் 1881ல் ஒரு விதவை தன் அவல நிலை பற்றிப் பேசினார். பிறகு 1889ல் ஒரு விதவை ஒரு மராத்திப் பத்திரிகையில் கட்டுரை எழுதினார். இந்த இரண்டிலிருந்தும் கிடைக்கும் தகவல்களே நெஞ்சைப் பிளப்பவை. வேலைக்காரியை விடக் கீழாகவும், வீட்டு எஜமானர்களின் உடல் ஆசைக்கு இரையாகவும் பயன்படுத்தப்பட்டது சகஜம். ஆதரவாகப் பேசி ஏமாற்றுகிற ஆடவரிடம் சிக்கிக் கருவுற்று, அந்த ஆணின் உத்தரவுப்படி கருவைக் கலைத்த குற்றத்துக்காக, விஜயலட்சுமி என்ற விதவை தூக்கிலிடப்பட்டாள்.

கல்வி ஒன்றுதான் பெண்களுக்கு விடுதலைக்கான கருவி என்று உணர்ந்து விதவைப் பெண்கள் கல்விக்காகவே முதல் இல்லம் தொடங்கியவர் பண்டித ரமாபாய். அவரே ஒரு விதவைதான். பெண்கள் படிக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டை மீறி ரமாபாயின் அப்பா, தன் மனைவிக்கு வேதம் சொல்லிக் கொடுத்தார். அதற்காக அவரை ஊரை விட்டுத் துரத்தினார்கள். கட்டில் போய் வசித்தார். அங்கேதான் ரமா பிறந்தாள். பன்னிரெண்டு வயதுக்குள்ளாக இருபதாயிரம் சுலோகங்களைக் கற்ற ரமாபாய்க்கு வங்காளப் பண்டிதர்கள் சரஸ்வதி பட்டம் தர வேண்டி வந்தது. அப்பாவும் அம்மாவும் இறந்ததும் ரமா தன் அண்ணனுடன் நாடு முழுவதும் நடந்தே இரண்டாயிரம் மைல்கள் ஆறு ஆண்டுகள் சுற்றினார்கள். அப்போது விதவைகள் படும் கொடுமையைக் கண்டார் ரமா. அண்ணன் இறந்தார். அவருடைய நண்பரை ரமா மணந்தார். அவரும் இறந்தார். ரமா கலங்காமல் பூனே வந்து விதவைகள் குழந்தைகளோடு தங்கிப் படிக்க விடுதி தொடங்கினார். ரமாபாய் எடுத்த முயற்சியினால்தான், விக்டோரியா ராணி பெண்களும் மருத்துவப் படிப்பும் ஆசிரியர் படிப்பும் படிக்கலாம் என்ற ஏற்பாட்டுக்கு சம்மதித்தார்.

சென்னை ராஜதானியிலே 1931ல் குழந்தைகள் கூட விதவையாக இருந்தன. காரணம் குழந்தைத் திருமணம்தான். மகாராஷ்டிரத்தில், ருக்மாபாய் என்ற பெண் தான் குழந்தையாக இருந்தபோது செய்யப்பட்ட திருமணத்தை ஏற்க மறுத்து நீதி மன்றம் சென்றாள். தண்டணையை ஏற்றுக் கொண்டு திருமணத்தை உதறினாள். படித்து மருத்துவரானார்.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் கடைசியில் எழும் கேள்வி இதுதான். சிறந்த பெண்மைகள் யார் ? கண்ணகிகளா? ரமாபாய்களா? ராமாமிருதம்களா ? ருக்மாபாய்களா ?

கண்ணகியை ஆதரிப்பவர்கள் தீபா மேத்தாவை எதிர்ப்பதில் ஆச்சரியமில்லை.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com