KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida


ஞாநி கட்டுரைகள்

1. பின் தொடரும் நிழலின் குரல்!

2. கலைஞருக்கு சவால் விடும் கண்டதேவி!

3. எரிபொருள் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

4. சில தவறுகள்... சில பாடங்கள்!

5. கலைஞர் கருணாநிதியின் விஷமக் கவிதையும் கொஞ்சம் வரலாறும்

6.அசுத்தமானவளா பெண்?!

***********

பெரியாரே! பெரியாரே!!:
அ. ராமசாமி


மனிதன் கேள்வி - பதில்கள்

மதத்தலங்கள் - பெண்ணுரிமை சமாதிகள்?:
ப்ரியா தம்பி


சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்:
கு.சித்ரா


ஏப்ரல் இதழ்

மே இதழ்

ஜூன் இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: [email protected]
hotmail.com
கட்டுரை
அ.ராமசாமி

பெரியாரே! பெரியாரே!! அப்பாவிகள் இவர்கள். அறியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியுங்கள் பெரியாரே!

தமிழ்நாட்டின் பொதுமனிதர்கள் ஞான .ராஜசேகரனை எவ்வாறு அறிந்திருப்பார்கள் என்பதற்குத் துல்லியமான புள்ளி விவர ஆதாரங்கள் எதுவும் இல்லை. இந்திய ஆட்சியியல் அதிகாரியாகப் பணி செய்யும் அவரின் தொடக்க அறிமுகம் நவீன நாடகங்கள். இன்று நவீன நாடகங்களில் செயல்படும் பலரும் கூட அவரை நாடக்காரராக அறிவார்களா என்பது சந்தேகம்தான். நவீனத்துவ மனநிலை என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டவராக எழுபதுகளின் இறுதியிலேயே வெளிப்பட்டவர் ராஜசேகரன். நவீன நாடகப் பிரதிகளை உருவாக்கிய ந.முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி ஆகியோருடன் சமகாலத்தில் வைத்து நினைக்கப்பட வேண்டியவர் அவர். ‘வயிறு-1978, மரபு-1979, பாடலிபுத்திரம்-1980’ என அடுத்தடுத்த ஆண்டுகளில் தனது மூன்று நாடகங்களை எழுதியவர். இம்மூன்று நாடகப் பிரதிளும் வயிறு என்ற தொகுப்பாக 1980-இல் அகரம் வெளியீடாக வந்தது. இம்மூன்றில் வயிறு மட்டும் பம்பாய் [1978, இயக்கம்: கே. ஆர் . பரமேஷ்வரராவ்], கோவை [1979, இயக்கம்: புவியரசு] மதுரை [1988, இயக்கம்: அ.ராமசாமி] எனச் சில மேடையேற்றங்களைக் கண்டிருக்கிறது. ஆனால் மற்ற நாடகங்கள் மேடையேறியதாகவோ, விவாதிக்கப்பட்டதாகவோ, பாடமாகப் படிக்கப்பட்டதாகவோ கூடத் தெரியவில்லை.

நவீன நாடகங்களைத் தான் தமிழ் கூறும் நல்லுலகம் கண்டு கொள்ளாது என்றால், அவர் இயக்கிய திரைப்படங்களைக் கூட அவ்வளவாகக் கண்டு கொண்டதில்லை. தனது இயக்கத்திற்கு முதல் கதையாக அவர் தேர்வு செய்தது தி.ஜானகிராமனின் மோகமுள்ளை. தமிழின் குறிப்பிடத்தக்க நாவலாசிரியரான தி.ஜானகிராமனின் குறிப்பிடத்தக்க எழுத்து மோகமுள். ஓர் இளைஞனின் காம இச்சை சார்ந்த உணர்வூக்கம என்னும் மைய உணர்வின் உந்துதலில் கர்நாடக இசையின் மீதான தேடல், சதுராடிய தேவதாசிக் குடும்பத்து இளம்பெண்ணோடு சந்திப்பு, அதனால் ஏற்படும் அகமுரண்களும் வெளிமுரண்களும் என விரியும் நாவல் திரைப்படமாகும் போது தஞ்சை மாவட்ட வேளாண் வாழ்க்கை அடையாளங்களின் பின்னணியில் தமிழ் வாழ்வின் ஒரு கீற்றாக அமையத்தக்கது. நாவல் தந்த உணர்வை அதிகம் சிதைக்காமல் ஞான. ராஜசேகரன் இயக்கிய அப்படம் தேசிய விருதைக் கூடத் தமிழுக்குப் பெற்றுத் தந்தது. ஒளி ஓவியர் தங்கர்பச்சான், இசைஞானி இளையராஜா ஆகியோரின் பங்களிப்புடன் வந்த மோகமுள் வெகுமக்கள் மனம் விரும்பிப் பார்த்த படமாக இருக்கவில்லை.

ஆனாலும் ராஜசேகரனின் சோதனை முயற்சிகள் தொடர்ந்தன. அடுத்து நடிகர் நாசரைக் கதாநாயகனாக்கி முகம் என்ற படத்தை இயக்கினார். மோகமுள்ளுக்குக் கிடைத்த வரவேற்பு கூட முகத்துக்குக் கிடைக்கவில்லை. ஆனால் கவி பாரதியின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டு அவர் இயக்கிய பாரதி ஓரளவு கவனிக்கப்பட்ட படம் என்றுதான் சொல்ல வேண்டும். சொந்த வாழ்க்கைக்கான கோட்பாட்டுக்கும் படைப்புக்கான கோட்பாட்டிற்கும் அதிக அளவு வித்தியாசங்கள் இல்லாமல் வாழ முடிந்த பாரதியின் சொந்த வாழ்க்கை தோல்வி அடைந்த வாழ்க்கை தான்; ஆனால் அவன் மகாகவியாக உயர்ந்ததே அந்த வேறுபாடின்மையின் காரணமாகத்தான் என்பதை வெகுநுட்பமாகவும் தெளிவாகவும் சொன்ன படம் பாரதி.
இந்த மூன்று சோதனை முயற்சிகளுக்குப் பின்னால் ராஜசேகரன் இயக்கத் திட்டமிட்ட படம் பெரியார் ஈ.வே.ரா.

கவி பாரதியின் வாழ்க்கைக் கதையை இயக்கிய ஒருவருக்குப் பெரியார் ஈ.வே.ராமசாமியின் வாழ்க்கைக் கதையைத் திரைப்படமாக எடுக்க வேண்டும் எனத் தோன்றுவது இயல்பான ஒன்று தான். இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் வாழ்வில் அதிகம் தாக்கம் உண்டாக்கியவர்களாகக் கருதப்படும் இவ்விருவரும் வேறு வேறு நபர்களாக அறியப்பட்டாலும் மன அளவில் ஒருவர் தான். இருவரும் இயங்கிய துறைகள் வேறாக இருக்கலாம். ஆனால் அவர்களின் கருத்துலகமும் அவற்றைப் பயன்படுத்த எடுத்த முயற்சிகளும் நோக்கங்களும், எதிர்கொள்ளத் தயங்கிய தமிழர்கள் மீது கொண்ட கோபமும் வேறுபட்டன அல்ல. இருவருக்கும் கிடைத்த வரவேற்பும் ஏற்பும் கூட ஒத்த தன்மையானவை தான். நடுத்தர வர்க்கத்துத் தமிழர்களால் அதிகம் உச்சரிக்கப்பட்ட இப்பெயர்கள் கொண்டாடப்படும் பெயர்களாக மட்டுமே தமிழ் நாட்டில் உலாவருகின்றன; மனங்கொள்ளப்பட்ட பெயர்களாக அல்ல என்பது யதார்த்தம். கவி பாரதியின் வரிகளாவது தமிழக மாணவர்களின் பாட நூல்களிலும் வெகுமக்களுக்கான மேடைகளிலும் திரும்பத் திரும்ப உச்சரிக்கப் படுகின்றன. ஆனால் பெரியாரின் வார்த்தைகளும் அவை உண்டாக்கிய அர்த்தங்களும் தமிழ் மனங்களுக்குள் நுழையாமலேயே வெளித்தள்ளப்பட்டு விட்டன. இத்தனைக்கும் 40 ஆண்டுக் காலமாக அவர் பெயரை முன்னோடித் தலைவர் என்று சொல்லும் இயக்கங்கள் தான் ஆட்சியில் இருக்கின்றன.

ஆட்சிக்கு வந்தவுடன் பாரதீய ஜனதா கட்சி தான் நம்பும் கருத்துக்களைப் பாடத்திட்டங்களில் சேர்க்க எடுத்துக் கொண்ட முயற்சிகளைத் திராவிட இயக்கங்கள் மேற்கொள்ளாமல் விட்டு விட்டதன் பின்னணிகள் என்னவாக இருக்கும் என்று யோசிக்க வேண்டியுள்ளது. அடிப்படை மாற்றங்களைப் பற்றிச் சிந்திக்காமல் மேற்பரப்புப் பேச்சுக்கள் மட்டும் போதும் என்று கருதிய மனோபாவம் ஒரு வெளிப்பாடு என்று தோன்றுகிறது. கலை, இலக்கியம் என்பதில் கூட பெரியாரியம் உள்ளீடாக அமையாமல் சங்க காலப் பெருமைகளும் அக்காலத்திய அரசர்களின் பிம்பங்களும் கண்ணகி போன்ற குறியீடுகளும் தான் முன்னிறுத்தப்பட்டன;படுகின்றன. கலை இலக்கியத்தின் இயல்பு, நோக்கங்கள், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியெல்லாம் திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வந்த பின்பு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

சங்கப் பாடல்களுக்கும் , தொல்காப்பியத்திற்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டே கருத்து சொல்லி வருகின்றன. அதற்குப் பின் வந்த ஆய்வுகள் பற்றிய கவலைகளோ அக்கறைகளோ இருப்பதாகத் தெரியவில்லை. இவையெல்லாம் திராவிட இயக்க அரசியல்வாதிகளின் எண்ண ஓட்டம் பற்றிய மதிப்பீடுகள் என்று நினைக்க வேண்டியதில்லை. கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்களின் எண்ண ஓட்டங்களும் அதுதான். இவையெல்லாம் அக்கறை எடுத்து விவாதிக்க வேண்டிய பிரச்சினைகள். பிறிதொரு நேரத்தில் விவாதிக்கலாம். இப்பொழுது ராஜசேகரன் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு வருவோம்.

தான் இயக்கிய மோகமுள், முகம், பாரதி ஆகிய மூன்று படங்களையும் தமிழ்நாட்டின் பார்வையாளர்கள் உரிய கவனத்துடன் பார்க்கவில்லை என்ற வருத்தம் ராஜசேகரனுக்கு இருந்தது என்றால் அந்த வருத்தம் நியாயமான வருத்தம் தான். ஆனால் பெரியார் படத்தை இயக்குவதற்குத் திட்டமிட்டுப் பணியைத் தொடங்கிய உடனேயே கிளம்பியுள்ள சர்ச்சைகளும் கண்டனங்களும் ஏற்படுத்தப் போகும் வருத்தம் கலைஞனின் சிந்தனை வெளிக்குள் நுழைந்து அவனது ஆத்மாவைக் காயப்படுத்தும் வருத்தம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏன் தமிழ் நாட்டில் இப்படி நடக்கிறது? என்ற ஆழமான கேள்வியை எழப்பக்கூடிய நிகழ்வாக அவர் கருதலாம். அவர் மட்டும் அல்ல; ஜனநாயகத்திலும் சுதந்திரமான கருத்துக் கூறலிலும் நம்பிக்கை கொண்ட பலரும் அப்படித்தான் நினைக்க வேண்டும்.

ஒரு படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் எவை எவையென முடிவு செய்வதும் அக்கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கக் கூடிய நடிக, நடிகையர் யார்.. யார்.. என முடிவு செய்வதும் படத்தின் இயக்குநரின் முக்கியமான பொறுப்பு என்பது திரைப்படக் கலையின் அரிச்சுவடி. இந்த அரிச்சுவடி புனைவு சார்ந்த திரைப்படங்களின் விதிகள். பெரியார் போன்ற வரலாற்று மனிதர்களைப் பற்றிய படங்களுக்கு அவ்விதிகள் பொருந்தாது எனச் சிலர் வாதிடலாம். ஓரளவு ஏற்கத்தக்க இந்த வாதம் வரலாற்று மனிதர்களின் வாழ்க்கைக்குத் தொடர்பில்லாத பாத்திரங்களை படத்தில் இணைப்பதற்கும், அந்த நபரின் வரலாற்றைத் திரிப்பதற்கும் எதிராக இருக்கலாம். டாவின்சி கோடு படத்தில் இடம் பெற்றுள்ள மக்தலேனா பாத்திரச் சித்திரிப்புக்கு எழுந்துள்ள எதிர்ப்பு அத்தகையது. ஆனால் பெரியார் படம் தொடர்பாக ராஜசேகரன் எதிர் கொள்ளும் பிரச்சினை அப்படிப்பட்டதல்ல.

பெரியார் படத்தை இயக்கவுள்ள ராஜசேகரன் சில பாத்திரங்களுக்கான நடிக நடிகையர்களைத் தீர்மானம் செய்துள்ளார் என்பது அறிவிக்கப்படாத தகவல். அத்தகவலின் படி பெரியாரின் மனைவியான மணியம்மை பாத்திரத்திற்கு நடிகை குஷ்பு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் உறுதி செய்யப்படாத தகவல்தான். பெரியார் பற்றிப் படம் எடுக்கும் இயக்குநர் நான்; அதில் இந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகை குஷ்பு என்று முடிவு செய்திருக்கிறேன் என்று அவர் நம்பலாம்; பதிலும் சொல்லலாம். ஆனால் குஷ்பு என்ற பெயரைக் கேட்ட உடனே தமிழ்த் தேசியவாதிகளாகவும் பெரியாரின் தொண்டர்களாகவும் தங்களைக் கருதிக் கொள்ளும் பலருக்கும் கோபமும் ஆத்திரமும் தலைக்கேறி விட்டது. தந்தை பெரியாரின் மனைவியாக நடிக்க குஷ்புவா? என ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பி எதிர்க்கத் தயாராகி விட்டனர்.

குஷ்பு தமிழ்ப் பெண் அல்ல என்பது வெளிப்படையாகச் சொல்லப்படும் காரணம், என்றாலும் மறைமுகமான காரணங்களும் கூட இருக்கும் என்றே தோன்றுகிறது. அந்தக் காரணம் இந்தியாடுடே பத்திரிகையில் வெளிப்படையாகப் பேசிய பேச்சுக்கள் என்றால் மறுத்துவிட முடியாது.. பாதுகாப்பான உடலுறவு பற்றி - தவிர்க்கப்பட வேண்டிய உடலுறவான திருமணத்திற்கு முந்திய உடலுறவில் கவனிக்க வேண்டிய எச்சரிக்கைகள் பற்றி - குஷ்பு சொன்ன வெளிப்படையான கருத்துகள் ஏற்படுத்திய அதிர்வலைகள் தான் அந்தக் காரணங்கள். அந்தக் காரணங்கள் தான் உண்மையான காரணங்கள் என்றால், கற்பு பற்றிப் பெரியார் சொன்ன கருத்துக்களையும் இவர்கள் வாசித்துப் பார்த்தால் நல்லது. கற்பு பற்றிப் பெரியார் சொன்ன கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க கருத்து என்று கருதினால் குஷ்பு சொன்ன கருத்துக்கள் ஒன்றும் புதியதல்ல என்பதும் பழமைவாதக் கருத்துக்கள் அல்ல என்பதும் புலப்படும். நிகழ்கால யதார்த்தப் பார்வையுடன் முன்வைக்கப்பட்ட அந்தக் கருத்துக்கள் பெரியாரியக் கருத்துக்களுடன் ஒத்துப் போகும் கருத்துக்களும் கூட. அதற்காக குஷ்பு பாராட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடந்ததோ நேர்மாறானவைகளாக இருந்தன.

இருபது வருடங்களாகத் தமிழ் சினிமாவில் தமிழ்க் கிராமத்து மனிதர்களின் வாழ்வைச் சித்திரித்த 20 படங்களிலாவது அவர் நடித்திருப்பார். அவர் நாயகியாக நடித்த சின்னத்தம்பி இன்றும் தமிழ் வாழ்வின் அடையாளமாகக் கருதப்படும் படங்களில் ஒன்று. அண்ணன் - தங்கை பாசம்; தாலிக்குரிய மரியாதை என அப்படம் முன் வைத்த பழைமையான கருத்துக்களுக்குக் குஷ்பு எந்தவிதத்திலும் பொறுப்பல்ல என்றாலும் அத்தகைய படங்களில் நடித்த குஷ்புவுக்குக் கோயில் கட்டியவர்களின் மனோபாவத்திற்குள் அவர் தமிழ்ப் பெண்ணாக மட்டுமல்ல; தெய்வமாகவும் இருந்தார் என்பதை அவ்வளவு சுலபமாக மறந்து விட முடியாது. அது மட்டுமல்ல. இன்று சொந்த வாழ்க்கையில் ஒரு தமிழ் ஆணைத் திருமணம் செய்துகொண்டு - அதுவும் பெரியார் ஈ.வே.ராமசாமி பரிந்துரைத்த கலப்புத் திருமணத்தைச் செய்து கொண்டு இரண்டு தமிழ்க் குழந்தைகளின் அன்னையாக வாழும் அவரைத் தமிழ்ப் பெண் அல்ல என்று வாதிடுவது எந்த விதத்தில் சரியானது என்பதைத் திராவிட இயக்கத்தைப் பின்பற்றுபவர்களாகச் சொல்லிக் கொள்பவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

குஷ்பு தமிழ்ப் பெண் அல்ல; அதனால் எதிர்க்கிறோம் என்று சொல்பவர்களுக்கு வேறு சிலவற்றை நினைவு படுத்தலாம். தமிழ் சினிமாவில் நடிக்கும் கதாநாயக நடிகைகளில் எண்பது சதம் பேர் தமிழ்ப் பெண்கள் அல்லதான். இன்னும் சொல்லப்போனால் இதே ராஜசேகரனின் இயக்கத்தில் தஞ்சாவூர் பின்னணியைக் குறிப்பாகக் கொண்ட மோகமுள்ளில் நடித்தவர்களில் பெரும்பாலோர் தமிழ் நடிகர்கள் அல்ல. அதிலும் பெண் கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் மராட்டியப் பெண்கள். சரி மோகமுள் ஒரு புனைகதையை அடிப்படையாகக் கொண்ட புனைவுப் படம். அதில் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்ற வாதத்தை முன் வைத்தால் இன்னொரு படமான பாரதியில் நடித்தவர்களைப் பற்றி என்ன சொல்வது..? தமிழின் மகாகவியான பாரதி பாத்திரத்தை ஏற்றவர் ஷாயாஜி ஷிண்டே. அவர் ஒரு மராத்தி நாடக நடிகர். பாரதியின் மனைவி செல்லம்மாவாக நடித்தவர் தேவயானி; அவரும் கூடப் பிறப்பால் மலையாளி தான். அப்பொழுதெல்லாம் யாரும் எதிர்ப்புக் காட்டவில்லை. அந்தப் பாத்திரத்திற்கு அந்த நடிகை பொருத்தமற்றவர் என்றோ தமிழ்க் கவியாக நடிக்க ஒரு மராத்தியரா..? என்றோ ஆவேசம் கொள்ளவில்லை. ஷாயாஜி ஷிண்டே பாரதியாக சிறப்பாக நடித்துள்ளார் என்று தமிழ்ப் பத்திரிகைகளும் வெகுமக்களும் பாராட்டவே செய்தனர். ஆனால் மணியம்மையாகக் குஷ்பு என்றவுடன் கோபமும் ஆத்திரமும் கொள்வது ஏன்...?

எடுக்கப்படும் திரைப்படம் புனைவுக்கதையை அடிப்படையாகக் கொண்டதானாலும் சரி, வரலாற்றுக் கதையை அடிப்படையாகக் கொண்டதானாலும் சரி அதன் வெளிப்பாட்டில் இயக்குநரின் பார்வைக் கோணம் தவிர்க்க இயலாதது என்பது கலையின் பொது விதி. அதன் படி அப்படத்தில் இடம்பெறும் பாத்திரங்கள் இயக்குநரின் கோணத்தில் வெளிப்படும் பாத்திரங்கள் தானே தவிர உண்மைப் பாத்திரங்கள் அல்ல. திரைப்படமாகும் வரலாற்றின் மீது புனைவு படியும் விந்தை இதுதான். இதை எந்த ஒரு கலைஞனும் தவிர்த்து விட முடியாது. நூறு சதவீத உண்மையை அப்படம் வெளிப்படுத்தியுள்ளது என்று யாரால் சொல்ல முடியும். பழைய காவிய நாயகர்களைப் பாத்திரங்களாக்கி எடுத்த படங்களைக் கூட விட்டு விடலாம். சமீபத்திய நாயகர்களான காந்தி, பகத்சிங், அம்பேத்கர், நேரு பற்றிய படங்களையே எடுத்துக் கொள்ளுங்கள். மகாத்மாவில் வரும் காந்தி அட்டன்பரோவின் காந்தி மட்டும் அல்ல. பென் கிங்ஸி நடிகராக உள்வாங்கி வெளிப்படுத்திய காந்தியும் தான்.

ஞான ராஜசேகரன் எடுக்கப்போகும் பெரியார் படத்தில் இடம் பெறும் வரலாற்றுப் பாத்திரங்கள் அவரின் கோணத்தில் வெளிப்படும் பாத்திரங்கள் தான். பெரியாராக நடிக்கப் போகும் சத்யராஜின் உள்வாங்கலில் வெளிப்படும் பெரியாராகவும் அவர் இருக்கப் போகிறார். அதே போல் தான் மணியம்மை பாத்திரமும். ஞான ராஜசேகரனின் எண்ணப்படி உள்வாங்கப்பட்ட மணியம்மையை நடிகை குஷ்பு வெளிப்படுத்துவார். இந்தப் பார்வைதான் கலைசார்ந்த பார்வையாக இருக்க முடியும். இதற்கு மாறாக மணியம்மையாக நடிக்க ஒரு தமிழ்ப் பெண் கிடைக்கவில்லையா என்ற கேள்வியோ..? இசுலாமிய மதத்தைச் சேர்ந்த பெண் அப்பாத்திரத்தை ஏற்று நடிக்கலாமா என்ற கேள்வியோ அபத்தமான கேள்விகள் மட்டுமல்ல; ஆபத்தான கேள்விகளும் கூட.
அடிப்படைவாதிகளின் சிந்தனையாகப் பெரியாரியச் சிந்தனை மாற்றம் பெறுவதை பெரியாரைப் படித்தவர்கள் அனுமதிப்பது பெரியாருக்குச் செய்யும் துரோகம் தான். இந்த நேரத்தில் இயேசு தனது பிதாவிடம் கேட்டுக் கொண்டதைப் போல கேட்டுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

’மரியாதைக்குரிய பெரியார் அவர்களே
உங்களைப் பின்பற்றுவதாகச் சொல்லும் இந்தக் கூட்டம்
உங்களை அறியாமலேயே அறிக்கைகள் விடுகின்றன.
ஆதலினால் இவர்களை மன்னிப்பீராக.