Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida


ஞாநி கட்டுரைகள்

1. பின் தொடரும் நிழலின் குரல்!

2. கலைஞருக்கு சவால் விடும் கண்டதேவி!

3. எரிபொருள் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

4. சில தவறுகள்... சில பாடங்கள்!

5. கலைஞர் கருணாநிதியின் விஷமக் கவிதையும் கொஞ்சம் வரலாறும்

6.அசுத்தமானவளா பெண்?!

***********

பெரியாரே! பெரியாரே!!:
அ. ராமசாமி


மனிதன் கேள்வி - பதில்கள்

மதத்தலங்கள் - பெண்ணுரிமை சமாதிகள்?:
ப்ரியா தம்பி


சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்:
கு.சித்ரா


ஏப்ரல் இதழ்

மே இதழ்

ஜூன் இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: dheemtharikida@
hotmail.com




கட்டுரை
ஞாநி

பின் தொடரும் நிழலின் குரல்!

நடுத்தர வகுப்பு மனிதர்களின் இன்றைய முக்கியக் கனவுகளில் ஒன்று, சொந்த வீடு! வீடு கட்டுவது, கட்டிய வீட்டை வாங்குவது, வீட்டை விற்பது... இதில் எது கடினமானது என்று பட்டிமன்றங்களுக்கு ஒரு புதிய சப்ஜெக்டைப் பரிந்துரைக்க விரும்புகிறேன். காரணம், சென்ற வாரம் என் வாழ்க்கையில் முதல்முறையாக வீடு விற்றேன். என் வீட்டைத்தான்!

வீட்டை விற்கத் தேவைப்பட்டது 48 மணி நேரம்தான். ஆனால், அந்த 48 மணி நேர அனுபவங்கள், பல சமூக, அரசியல், பொருளாதார, தத்துவச் சிக்கல்களை உள்ளடக்கியிருந்தன.

சென்னையில் இன்று வீட்டை விற்க 48 மணி நேரம் அல்ல, 48 நிமிடங்கள் கூடப் போதும் என்று தோன்றியது. புரோக்கர்கள் தேவையில்லை. வீட்டு புரோக்கர்கள் வரமா, சாபமா என்றுகூடப் பட்டிமன்றம் நடத்தலாம்.

வீட்டின் விலை 40 லட்சம் ரூபாய் என்று விளம்பரத்திலேயே குறிப்பிட்டுவிட்டதால், அதற்குத் தயாரானவர்கள் மட்டுமே வருவார்கள், பொருத்தமற்ற கூட்டத்தால் நேரமும் சக்தியும் வீணாவது தவிர்க்கப்படும் என்று கருதினேன். ஆனால், சனிக்கிழமை காலையில் ஆங்கிலப் பத்திரிகையில் வரி விளம்பரம் வெளியானதைக் கண்டதும், அடுத்த அரை மணிக்குள் தொலைபேசி அழைப்புகள் குவிந்தன. சுமார் நூறு பேர் வாங்க விருப்பம் தெரிவித்தனர். அதில் 60 பேர் நேரில் வந்தனர்.

அத்தனை பேருக்கும் வீடு மிகவும் பிடித்திருந்தது. வீட்டின் சிறப்புகளைப் பலர் என் முன்னாலேயே உரக்கப் பேசிக்கொண்டார்கள். விளம்பரத்திலேயே விலை குறிக்கப்பட்டு விட்டதால், இப்போது சிறப்புகளைப் பேசினால் நான் விலையை உயர்த்திவிடுவேன் என்ற கவலைகள் அவர்களுக்கு இருக்க வில்லை. இத்தனை சிறப்புகள் உடைய வீட்டை நான் ஏன் விற்கிறேன் என்று ஒருவரும் என்னிடம் கேட்கவில்லை.

சிலர் என் வீட்டின் சிறப்புகளை என்னிடமே சொல்லினர். அப்படிச் சொன்னது, இவ்வளவு நல்ல வீட்டை விற்கத்தான் வேண்டுமா என்று என் மனதை சில நொடிகள் அலைபாயச் செய்ததை அவர்கள் உணரவில்லை.

நடுத்தர வகுப்பினருக்கு விலை சற்று கூடுதலாகத் தோன்றுமோ என்ற என் சந்தேகம் அர்த்தமற்றதாகிவிட்டது. மொத்தப் பணமும், தான் வாசலில் நிறுத்தி இருக்கும் காரிலேயே இருப்பதாகவும், நான் சம்மதித்தால் உடனே எடுத்து வந்து கேஷாகவே தந்துவிடலாம் என்றும் சிலர் முன்வந்தார்கள்.

‘வீட்டை எனக்கே கொடுத்தாக வேண்டும்’ என்று அடம்பிடித்தவர்களில் மூன்று வகையினர் இருந்தார்கள். ஒரு பிரிவு மொத்தப் பணத்தையும் கறுப்பாகத் தரத் தயாராக இருந்தது. இன்னொரு பிரிவு (நான் வற்புறுத்தியபடி) மொத்தமும் வெள்ளைக்கு ஆயத்தமாக இருந்தது. மூன்றாவது பிரிவு கறுப்பு வெள்ளை இரண்டுக்கும் இட ஒதுக்கீடு தந்தேயாக வேன்டும் என்று வற்புறுத்தியது.

வீடு, நில விற்பனைகளில் கறுப்புப் பணம் உற்பத்தியாவதும், தொடர்ந்து தழைப்பதும் எப்படி என்பதில் ஒரு துளியைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பாக இந்த உரையாடல்கள் இருந்தன. வியாபாரிகளும், தொழிலதிபர்களும்தான் கறுப்புப் பண பேரங்கள் செய்வார்கள் என்ற என் அனுமானம் தவறு என்று பல நடுத்தர வகுப்பு குமாஸ்தாக்கள், மாதச் சம்பளக்காரர்கள் நிரூபித்தார்கள். ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாக, அவரவர் நிலைக்கேற்ப கறுப்பின் அளவுகள் மட்டுமே மாறுகின்றன.

வீட்டு விற்பனையில் கறுப்புப் பணத்தை ஊக்குவிக்கும் அம்சமாக அரசாங்கத்தின் விதிமுறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு பகுதிக்கும் வழிகாட்டி மதிப்பு என்று ஒரு கைடுலைன் வேல்யூவை அரசு நிர்ணயித்திருக்கிறது. விற்பனைப் பத்திரம் பதிவு செய்யும்போது, இந்த வேல்யூவில் 9 சதவிகிதத்துக்கு, முத்திரைத் தாள் கட்டணம் நிச்சயம் செலுத்தியாக வேண்டும்.

இங்கேதான் கறுப்பு நுழைகிறது. கைடுலைன் வேல்யூ சுமார் 24 லட்சம். ஆனால், நான் வீட்டை மார்க்கெட் ரேட்டான 40 லட்சத்துக்கு விற்கிறேன். வாங்க விரும்புபவர் சொல்கிறார்... ‘‘24 லட்சத்துக்கே பதிவு செய்வோம். மீதி 16 லட்சத்தை கறுப்பாகத் தருகிறேன். எனக்கு 16 லட்சத்துக்கான முத்திரைத் தாள் கட்டணம் (சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய்) மிச்சம். உங்களுக்கு கேபிட்டல் கெயின்வரி (சுமார் ஒன்றரை லட்ச ரூபாய்) மிச்சம்!’’

இதற்கு ஒப்புக்கொண்டால், அடுத்தபடியாக நான் 16 லட்ச ரூபாய் கறுப்புப் பணத்தை மறைக்க வழிகள் தேட வேண்டும். அடுத்து நான் உத்தேசித்துள்ளபடி ஒரு ப்ளாட் வாங்கச் செல்லும்போது, எனக்கு ப்ளாட் விற்பவரிடம் பாதி கறுப்பாகத்தான் தருவேன் என்று பேச வேண்டும். இப்படித் தொடர்ந்து வாழ்க்கை முழுவதும், பின்தொடரும் நிழலின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். அரசு மார்க்கெட் விலைக்கும் கைடுலைன் விலைக்கும் இருக்கும் அபத்தமான வித்தியாசத்தை நீக்கினால், கறுப்பு மட்டுப்படும்.

பத்திரப் பதிவு தொடர்பாக என் அறிவை மேம்படுத்த முயற்சித்தபோது இன்னொரு திடுக்கிடும் தகவல் கிடைத்தது. வீட்டையோ நிலத்தையோ விற்பதைப் பதிவு செய்யும்போது, விற்பவர் கையெழுத்துதான் பதிவு செய்யப்படுகிறதே தவிர, வாங்குபவருடையது அல்லவாம்! அதனால் ஒருவருக்குத் தெரியாமலே, அவர் பெயரில் ஒரு சொத்தை விற்பனைப் பதிவு செய்துவிட முடியும். அவர் பெயரில் இன்ன சொத்து இருக்கிறது என்று அவருக்கே தெரியாமல் இருக்கும். அரசியலில் ஒரு நல்லவரை வீழ்த்த விரும்பினால், அவர் பெயரில் சொத்தைப் பதிவு செய்துவிட்டு, அவர் மீது ஊழல் குற்றச்சாட்டை எழுப்பிவிடலாம். இந்த அபத்தமான விதிமுறை, அண்மைக்காலம் வரை இருந்து வந்திருப்பதாக வீடு, நிலம் விற்பனைப் பதிவுகள் செய்த நண்பர்கள் சொல்கிறார்கள். இன்னும் இந்த வழிமுறை நீடிக்குமானால், உடனே நீக்கப்பட வேண்டும். நீக்கப்பட்டிருந்தால், சபாஷ்!

விளம்பரம் கண்ட, முதல் 48 நிமிடத்துக்குள்ளேயே காரில் கேஷுடன் என் வீட்டை வாங்கும் விருப்பத்துடன் ஆட்கள் வந்துவிட்டபோதும், நான் சனி, ஞாயிறு இரு தினங்களும் வந்து வீட்டைப் பார்க்க விரும்புவோரை அனுமதித்து, அவர்கள் எல்லாரையும் சந்தித்த பின்னரே யாருக்கு விற்பது என்று முடிவெடுக்கப் போவதாக வந்தவர்களிடம் தெரிவித்தேன். சிலர் மனசுக்குள் ‘முட்டாள்’என்று முணுமுணுத்தது எனக்கு உரக்கவே கேட்டது.

எந்த அடிப்படையில் வாங்குபவரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று ஒருவர் கேட்டார். 40 லட்சம் தரத் தயாராக இருக்கும் பலரில் ஒருவரைத் தேர்வு செய்ய, வேறு என்ன அடிப்படை வைத்துக் கொள்ள முடியும்? ‘ஐவரைத் தேர்ந்தெடுத்துவிட்டு, அடுத்து 40க்கு மேல் ஒவ்வொருவரும் எவ்வளவு வரை தரத் தயாராக இருக்கிறீர்கள் என்று கேட்டு, ஹையஸ்ட் ஃபிட்டருக்குத் தரப் போகிறீர்களா?’ என்று கேட்டார் ஒருவர். உடனே, இன்னொருவர் தான் மேலும் 2 லட்சம் வரை தரத் தயார் என்று அறிவித்தார்.

40க்கு மேலும் இல்லை, கீழும் இல்லை என்று நான் நிர்ணயித்து விட்டேன். எனவே, வாங்குபவருக்கு வேறு தகுதி என்னதான் இருக்க முடியும்?

அடிக்கடி விலை ஏறக்கூடிய நிலம், வீடுகளை வாங்கி, விற்று லாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் வந்திருந்தவர்களை நிராகரித்து விட்டேன். முதல்முறையாக வீடு வாங்குபவர்கள், சொந்த உபயோகத்துக்காக வீடு வாங்குபவர்கள் மட்டுமே முன்னுரிமை உடையவர்கள். அடுத்தபடியாக சாதி அடிப்படையில் முன்னுரிமை தரலாமா என்று யோசித்தேன். அப்படித் தந்தால், அது ஒன்றும் தவறல்ல என்றே தோன்றியது. ஏனெனில் இன்னமும் தலித்துகளுக்கும், முஸ்லிம்களுக்கும் பல இடங்களில் வாடகைக்கு வீடு கொடுக்கப்படுவதே சிக்கலாக உள்ள சமூகம் இது. தற்காலிகமாக நான் குடியிருக்கும் மும்பையில் பகுதிவாரியாக வெவ்வேறு சாதியினர், இனத்தினர் அதிகமாகக் குடியமர்த்தப்படுவது அண்மைக் காலமாக நடக்கிறது. மற்றவர்கள் அங்கே சிறுபான்மையாகிவிடுகிறார்கள். நான் குடியிருக்கும் பகுதியில் சைவ குஜராத்திகள் மெஜாரிட்டி என்பதால், கடைகளில் முட்டைகூட விற்கப்படுவதில்லை. 300 கடைகள் இருந்தும் மூன்றே கடைகள் மட்டுமே, அதுவும் கடத்தல் சரக்கு போல முட்டையை விற்கின்றன.

‘வீடு விற்பனையில் சாதிவாரியான முன்னுரிமை அளித்து சமூக நீதியைப் பேணுவது டூ மச்’ என்றார் ஒரு நண்பர். எனக்கு அப்படித் தோன்றவில்லை. கடைசியில் எப்படித்தான் வாங்குபவரை முடிவு செய்தேன் என்பதைக் கடைசியில் பார்க்கவும்.

பத்தாண்டுகள் வாழ்ந்த வீடு. நீங்கள் முதன்முதலில் சொந்தமாகக் கட்டிய வீடு. அதை விற்பதில் எந்த சென்டிமென்டல் பிரச்னையும் இல்லவே இல்லையா என்று சில நண்பர்கள் கேட்கிறார்கள்.

வாழ்க்கையில் சென்டிமென்ட்டுகள் முக்கியம்தான். கல்லூரி மாணவனாக இருக்கையில் நான் வரைபடம் தயாரித்து, அஸ்திவாரத்துக்கு நானும் அம்மாவும் கட்டட வேலையாட்களுடன் சேர்ந்து வேலை செய்து தொடங்கிய கட்டடம் முடிக்கப் பட்டதை நாங்கள் இருவரும் பார்க்கவில்லை. பின்னர், அதை என் அப்பா விற்றுப் பத்தாண்டுகளுக்குப் பின்னர்தான், குடியிருந்தவரிடம் விவரம் சொல்லி உள்ளே சென்று சுற்றிப் பார்த்துவிட்டு வந்தேன்.

‘விற்பனைக்கு வீடு தயார்’ விளம்பரம் வெளியான காலை 7 மணிக்கு வருவோரை எதிர்பார்த்து தன்னந்தனியே உட்கார்ந்திருக்கையில், நான் வளர்த்த வேப்ப மரத்திலிருந்து குயில் கூவிக்கொண்டு இருந்ததைக் கேட்க இன்பமாகத்தான் இருந்தது.

இதைவிட அதிக இன்ப நினைவுகள், நான் வாழ்ந்த இன்னும் சில வீடுகளுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன. மாடிப் படிக்கட்டுக்கு என்றே தனியறை அமைக்கப்பட்டிருந்த ஒரு வீட்டில் தனியே அமர்ந்து கல்லூரி மாணவப் பருவத்தில் நான் நடத்திய கையெழுத்துப் பத்திரிகையை பல மாதங்கள் தயாரித்து வந்திருக்கிறேன். பல வருடம் கழித்து அந்த வீட்டைச் சென்று பார்த்தபோது அது மின் வாரிய கோடவுனாக மாறி, புதர்களும் பாம்புகளும் நிறைந்திருந்தன.

எந்த மனிதனின் வாழ்க்கையிலும் 23 முதல் 43 வயது வரை மிக முக்கியமான ஆண்டுகள். அவற்றை நான் கழித்த அரசாங்க வாடகை வீட்டை என்னுடையதாக எப்படி ஆக்கிக்கொள்ள முடியும்? சொந்த வீடு கட்டியபோது, அதைக் காலி செய்தேன். அதில் குடிவந்த சக பத்திரிகையாளரின் குடும்பமும் நானும் ஒரு கனவான் ஒப்பந்தம் செய்தோம். எப்போது நான் வந்தாலும் முழு வீட்டையும் (மொத்தம் இரண்டே அறைகள்தான்) நான் சுற்றிப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் இன்று வரை சீராக நடக்கிறது. நான் சென்றதும், ‘வாங்க, உங்க வீட்டை பத்திரமாக வைத்திருக்கிறோம்’ என்று சொல்லி வரவேற்கிறார்கள்.

இவற்றில் என் வீடென்று எதனைச் சொல்வேன்?

இன்பமான நினைவுகளுடன் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் நம்முடைய நிரந்தர உடைமை ஆக்கிக் கொள்ள முடியாது. வீடுகளுக்கும் அது பொருந்தும். நினைவின் இன்பம் நினைவில்தான் இருக்கிறது. பொருளில், இடத்தில் இல்லை.

சரி, என் வீட்டை யாருக்கு விற்றேன்? 48 மணி நேர அறிவுக் கொள்முதலுக்குப் பிறகு, வீடு கேட்டு வந்த என் 25 ஆண்டு கால நண்பர் சக எழுத்தாளரின் மகளுக்கு வீட்டை விற்றிருக்கிறேன். இது அவள் வாங்கும் முதல் வீடு. பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்து, வேற்று மதத்தில் கலப்பு மணம் செய்தவள் அவள் என்பது கூடுதல் சந்தோஷம்!

ஆனந்தவிகடன் 2-7-2006





Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com