கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
சில குழந்தைகள் பிறக்கும்போதே இதயவால்வுகளில் குறைபாடுகளுடன் பிறக்கிறார்கள். அறுவை சிகிச்சைகளினால் இந்த வால்வுகளை சீரமைக்க முடியாதபோது, உறுப்புதானங்கள், செயற்கை வால்வுகள் என்ற மாற்றுவழிகளை தேடிப்போக வேண்டியுள்ளது. ஆனால் பொருத்தமான மாற்று வால்வுகள் கிடைப்பதில்தான் சிரமம் இருக்கிறது. பிராணிகளின் திசுக்களில் இருந்துகூட மாற்று வால்வுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த மாற்று வால்வுகள் குழந்தைகளின் வளர்ச்சியோடு இணைந்து செயல்படுவது இல்லை. இதனால் குழந்தை தன்னுடைய ஆயுட்காலத்தில் பல அறுவை சிகிச்சைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
மேலும் பிராணிகளில் இருந்து பெறப்படும் இதய வால்வுகளில் விறைப்புத்தன்மை காணப்படுகிறதாம். இதனால் குழந்தைக்கு அடிக்கடி இரத்தத்தை நீர்த்துப் போகச்செய்யும் சிகிச்சையும் அளிக்க வேண்டியுள்ளதாம். அமெரிக்க வல்லுநர்கள் இந்த பிரச்சினைக்கு ஒரு மாற்றுவழியாக தொப்புள் கொடியில் இருந்து எடுக்கப்பட்ட இரத்தம் பயன்படுகிறது என்கிறார்கள். குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியில் இருந்து இரத்தம் சேகரிக்கப்படுகிறது. இதிலிருந்து ஸ்டெம் செல்களைப்பிரித்தெடுத்து இதய வால்வுகள் உருவாக்கப்படுகின்றன. தேவைப்படும்போது இந்த வால்வை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தொப்புள் கொடியின் இரத்தத்தில் இருந்து CD133+ cells என்னும் ஸ்டெம் செல்கள் பிரித்தெடுக்கப்பட்டு உறைநிலையில் பாதுகாக்கப்பட்டன. 12 வாரங்கள் கழித்து, இந்த செல்கள் சிதையக்கூடிய ஒரு தளத்தில் பதியமிடப்பட்டன. இந்த பதியன்கள் ஆய்வுக்கூடத்தில் வளர்த்தெடுக்கப்பட்டு எலெக்ட்ரான் நுண்ணோக்கியால் ஆராயப்பட்டன. தளத்தின் நுண்துளைகளில்கூட் செல்வளர்ச்சி காணப்பட்டது. திசுக்களின் கட்டமைப்புக்கு தேவையான extracellular matrix இவற்றில் காணப்பட்டது. மனிதர்களின் இதயவால்வு திசுக்களோடு, இவ்வாறு வளர்த்தெடுக்கப்பட்ட திசுக்கள் பெரும்பாலும் ஒத்துப்போயின. மேலும் desmin, laminin, alpha-actin ஆகிய புரதங்களும், CD31, VWF and VE-cadherin என்னும் இரத்தக் குழாய்த்திசு படலங்களும் வளர்த்தெடுக்கப்பட்ட செல்களில் காணப்பட்டன.
வெற்றிகரமான திசையில் இந்த ஆய்வு போய்க் கொண்டிருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ரத்த திசுக்கள் மட்டுமல்லாது எலும்பு மஜ்ஜை, பனிக்குட நீர் இவற்றின் திசுக்களில் இருந்தும் இதய வால்வுகளை உருவாக்க முடியுமா என்று ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. திசுமாற்ற தொழில் நுட்பத்தின் மூலம் நோயாளின் வாழ்நாள் முழுவதும் சிக்கல் இல்லாமல் பயன்படக்கூடிய இதய வால்வுகளை உருவாக்குவது சாத்தியம் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
தொற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர். டயாலிசிஸ் கருவியைப் போன்றது இது. மெல்லிய இழைகளின் துணைகொண்டு இரத்தத்தில் உள்ள வைரஸ்களை இந்த கருவி வடிகட்டிவிடுகிறது. இரத்தக்குழாயில் இருந்து குழாய்வழியாக இரத்தம் இந்தக் கருவிக்குள் செல்கிறது. சுத்தம் செய்யப்பட்ட இரத்தம் மீண்டும் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. எண்ணற்ற நோய்கள் இந்தக் கருவியினால் குணப்படுத்தப்படுகின்றன.
நாளொன்றுக்கு 14,000 பேர் எச்.ஐ.வி. வைரஸ்களால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தக் கருவியினால் எய்ட்ஸ் நோயாளிகளின் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, நீடித்த ஆயுளுக்கு வழிபிறந்துள்ளது. சாண்டிகோவின் யேத்லான் மருத்துவமனை தலைவர் ஜிம் ஜோய்ஸ் கூறும்போது இந்த கருவி ஒரு டயாலிசிஸ் கருவியைப்போல் செயல்படுவதாக கூறியுள்ளார்.
உடலில் உள்ள அனைத்து இரத்தமும் இந்தக் கருவியில் உள்ள பெட்டகத்தின் வழியாக எட்டு நிமிடத்திற்கொருமுறை செலுத்தப்படுகிறது. இரத்தத்தில் உள்ள அனைத்து வைரஸ்களும் சிலமணி நேரங்களுக்குள் நீக்கப்படுகின்றன. எச் ஐ வி, ஹெபடிடிஸ்-சி, தட்டம்மை, ஃப்ளூ ஆகிய வைரஸ்கள் எளிதில் நீக்கப்பட்டுவிடுகின்றன. பெரிய அளவிலான இந்தக் கருவியை மருத்துவமனையிலும், சிறிய அளவிலான கருவியை அவசரகால ஊர்திகளிலும் பயன்படுத்த முடியுமாம். தீவிரவாதிகளினால் ஏவப்படும் வைரஸ்களில் இருந்து உயிர்காக்கவும் கூட இந்தக் கருவி பயன்படுகிறது.
சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்கு டயாலிசிஸ் செய்யப்படுகிறது. உடலில் உள்ள இரத்தம் அனைத்தும் செயற்கை சிறுநீரகம் வழியாக செலுத்தப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. டயாலிசிஸ் என்பது உயிரை தக்கவைப்பதற்கான சிகிச்சை மட்டும்தான். நோயில் இருந்து விடுதலை அளிப்பதற்கான சிகிச்சையல்ல. வலிநிறைந்ததும் செலவு பிடிப்பதுமான டயாலிசிஸ் சிகிச்சை இப்போது நிறைய பேருக்குத் தேவைப்படுகிறது. இரத்தம் சுத்தப்படுத்தும் கருவியும் டயாலிசிஸ் கருவியைப் போன்றது தான்.
அதிக செலவு பிடிப்பது. இனிமேல் பணக்காரர்களுக்கு வைரஸ்களிடமிருந்து விடுதலை.
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
ஜெருசெலேம் ஹிப்ரூ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பூக்களில் வாசனையை கூட்ட, குறைக்க, புதிதாக உண்டாக்க, இல்லாமல் செய்ய மரபியல் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய வழிவகைகளை கண்டுபிடித்துள்ளனர்.
உயிரினங்களின் வாழ்க்கையில் வாசனைக்கு ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது. வாசனையைப் பார்த்துத்தான் நாம் பழங்கள், காய்கறிகள், வாசனை திரவியங்கள் இவற்றையெல்லாம் தேர்ந்தெடுக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் வாழ்க்கைத் துணையைக்கூட வாசனையைப் பார்த்துத்தான் உயிரினங்கள் தேர்ந்தெடுக்கின்றன. மூக்கினால் அறிவது மட்டும் வாசனை அல்ல. நாவினால் அறிவதும் வாசனைதான் என்கிறார் பேராசிரியர் அலெக்ஸாண்டர் வெயின்ஸ்டீன். உணவை தரப்படுத்துவதில் வாசனைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
தாவரங்களிலும், பூக்களிலும் உள்ள வாசனைதான் மகரந்தச் சேர்க்கையை ஊக்கப்படுத்துகிறது. பூக்களின் வாசனை பல காரணிகளைச் சார்ந்தது. குறிப்பிட்ட நாளின் நேரம், காலநிலை, பூவின் வயது, பூவின் இனம் இவற்றையெல்லாம் சார்ந்ததுதான் வாசனை. ஒரு பூவின் வாசனையை பத்துமடங்கு அதிகரித்து இரவு பகல் எல்லா நேரமும் வாசனை வீசுமாறு செய்யமுடியும் என்று பேராசிரியர் வெயின்ஸ்டீன் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக தொடர்ந்து பயிரிடப்பட்ட பூச்செடிகளில் வாசனை குறைந்து விடுகிறதாம். புதிய தொழில் நுட்பம் மூலம் வாசனையின் பகுதிகளுக்கு புத்துணர்வு ஊட்டமுடியும் என்கிறார் விஞ்ஞானிகள். உலகிலேயே பேராசிரியர் வெய்ன்ஸ்டீனின் ஆராய்ச்சிக்கூடம் மட்டுமே பூக்களின் வாசனையையும் நிறத்தையும் மாற்றியமைக்கும் ஆய்வுகளைச் செய்து வருகிறது. பூக்களில் மரபியல் மாற்றங்களை ஏற்படுத்தி வடிவம், நிறம், வாசனை இவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் இந்த ஆய்வுக்கூடம் ஈடுபட்டுவருகிறது.
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
வாழ்வின் நிறைவு மரணம் எனப்படுகிறது. மரணம் ஏற்பட்டவுடன் இதயத்துடிப்பு நின்று, மூச்சடைத்து, மூளை செயலிழந்து விடுகிறது. இதுவே உடல் ரீதியான மரணம் எனப்படுகிறது.
மூன்று அல்லது நான்கு மணிநேரம் கழிந்த பின்னர்தான் மூலக்கூறு ரீதியான மரணம் ஏற்படுகிறது. இறந்தவரின் உடலை அடக்கம் செய்யவோ தகனம் செய்யவோ பல சந்தர்ப்பங்களில் காலம் தாழ்ந்துவிடுகிறது. இதுபோன்ற சமயங்களில் மனித உடலின் மாண்பைப் பாதுகாக்க Mortuary Box என்னும் குளிர்சாதனப்பெட்டி பயன்படுகிறது.
இறந்தவரின் உடலை வீட்டிலேயே 2 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் வைத்து பாதுகாக்க முடியும். இதற்கு Mobile Mortuary Box என்னும் சாதனம் பயன்படுகிறது.
இறந்தவர் உடலை பலநாட்கள் பாதுகாக்க வேண்டியிருந்தால் மருத்துவமனையில் உள்ள Fixed Mortuary Boxல் வைத்து பாதுகாக்கலாம். 0 டிகிரி செல்சியஸ் முதல் 8 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலை இந்த பெட்டிகளில் பராமரிக்கப்படும்.
இறந்தவரின் உடலை விமானம் அல்லது கப்பல் மூலமாக எடுத்துச் செல்லவேண்டுமானால் tinfoil பயன்படுத்தி 'சீல்' செய்துதான் அனுப்ப முடியும். இந்த நடை முறைக்கு embalming என்று பெயர்.
Embalming வசதிகள் பெரிய மருத்துவமனைகளிலும், பெருநகரங்களிலும் கிடைக்கின்றன.
நன்றி: கலைக்கதிர்
தகவல்:மு.குருமூர்த்தி
- வெடிகுண்டுகளை முகர்ந்து பார்க்கும் எலக்ட்ரானிக் மூக்கு
- பாலத்தின் உறுதியை அறிவது எப்படி?
- மாதவிலக்கு இரத்தத்தின் மருத்துவ குணம்
- அழுத்தமும் ஓட்டமும் தடையும்
- உயிர்
- உடலுக்கு எரிபொருள் எது?
- காற்றாடி விமானம்
- எச்சரிக்கை! செல்பேசி
- இன்பம் தரும் மின் அதிர்ச்சி
- புற்றுநோய் அறியும் எண்ணியல் (Digital) முறை
- மசாலா பூச்சிக்கொல்லிகள்
- சோப்பு வேண்டாம் தண்ணீரில் முக்கி எடுத்தால் போதும்!
- கூந்தல் வேர்களும் அதிசய மருந்துகளும்
- மூலக்கூறுகளை வருடும் மைக்ராஸ்கோப்
- தன்கையே தனக்கு எதிரி
- மரத்திலிருந்து பிளாஸ்டிக்
- பார்வையற்றவர்கள் ஓட்டுவதற்கு கார்
- வளையும் ஒலிபெருக்கி
- மூளை வளருகிறது - நாம் தான் அதை தடை செய்கிறோம்
- நேனோ ரேடியோ - தூசி தட்டினால் பாட்டு நின்று விடும்